Published:Updated:

நான் ஏன் எழுதுகிறேன்?

நான் ஏன் எழுதுகிறேன்?
பிரீமியம் ஸ்டோரி
நான் ஏன் எழுதுகிறேன்?

நான் ஏன் எழுதுகிறேன்?

நான் ஏன் எழுதுகிறேன்?

நான் ஏன் எழுதுகிறேன்?

Published:Updated:
நான் ஏன் எழுதுகிறேன்?
பிரீமியம் ஸ்டோரி
நான் ஏன் எழுதுகிறேன்?

தனசக்தி,  படம்  : எம்.விஜயகுமார்

ழுத்து என் தவம் என்றெல்லாம்  சொல்லமுடியவில்லை. எல்லாப் பெண் பிள்ளைகளுக்கும் நேர்வதுபோலவே, பருவ வயதுக்குப் பிறகு அடிப்படைக் கல்வி மறுக்கப்பட்டவள்தான் நானும். பத்தாம் வகுப்பிற்குமேல் படிக்க முடியவில்லை. ஆனாலும்,  அடிமனதில்  கல்வியின் மீதான ஏக்கம் அப்படியே தங்கிவிட்டது. பதினைந்தில் திருமணமாகி, பதினாறில் கையில் பிள்ளையுடன் வாழ்வு முடிந்துபோகிற  ‘இனவிருத்திக்குத்தான் பெண்’ என்கிற அஃறிணை வாழ்வுதான் எனக்கும் வாய்த்தது.

பெண்கள் பத்திரிகைகள் வாசிப்பதே ஒழுக்கக் கேடு என்கிற குடும்பத்தில் பிறந்தவள். வீட்டுவேலைக்குச் செல்லும்போதெல்லாம் நூலகத்திற்குத் திருட்டுத்தனமாகச் சென்றுவருவதை வாடிக்கையாக வைத்திருந்தேன். சிறுவாட்டுக் காசில்தான் பத்திரிகைகள் வாங்கி, தலையணைக்குள் ஒழித்து வைத்துப் படித்துவந்தேன். வீட்டுவேலைக்குச் செல்லும் இடங்களில், உதவியாளராக வேலை பார்த்த மருத்துவமனைகளில், தேநீர்க் கடைகளில் என்று எங்கெங்கெல்லாம் புத்தகங்கள் தட்டுப்படுகிறதோ அங்கெல்லாம் வாசித்துக்கொண்டே இருந்தேன்.

நான் ஏன் எழுதுகிறேன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கிடையில்தான் விபத்தாகி, எழுந்து நடக்கமுடியாமல் போனது. அந்தத் தனிமைக் காலங்களை, நோய்மையின் வலிகளை, பொருளாதாரத்திற்கும்  சாப்பாட்டுக்கும் நசிவுறும் வாழ்வில்  மனதின் இரைச்சல்களை எழுதித் தீர்த்துக்கொள்ள ஆரம்பித்தேன். அதற்கான வடிவமாகக் கவிதையை எடுத்துக் கொண்டேன். சமூக ஊடகத்திலும் நிறைய எழுத ஆரம்பித்தேன்.

அழகில்லை என்கிற காரணம், 42 வயதான என் வேணி அக்காவை 60 வயதுக் கிழவனார் ‘இரக்கப்பட்டு’ திருமணம் செய்துகொண்டார். ஒருநாள் அவள் அக்கிழவனால் பிறந்தைக்கே துரத்தி விடப்பட்ட செய்தி கேட்ட நாளில், நான் பட்ட துன்பத்துக்கு அளவேயில்லை.  ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்று வெண்தாடிக் கிழவன் யோசித்ததைப் போலவே ‘பெண் ஏன் அழகா இருக்கனும்?’ என்று நானும் யோசிக்க ஆரம்பித்தேன். பாரதியும் பாரதிதாசனும்  சமூகத்தைச் சாட எடுத்துக்கொண்ட கவிதையை என் ஆயுதமாக மாற்றி, எனைச் சுற்றியிருக்கும் பெண் பாடுகளை எழுதித் தீர்க்க முயன்றதன் விளைவுதான் நான் எழுதிய முதல் கவிதைத் தொகுப்பு, “வாளிப்பற்ற உடல்காரி”. என் இந்த முதல் தொகுப்புக்கு ‘தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற விருது’ கிடைத்துள்ளது.

கெளரி லங்கேஷ் அவர்கள் கொலையுண்ட போதுதான், இந்த எழுத்து அணுகுண்டையும்விட வீரியமான ஒன்று. அது எத்தனை பெரிய அரசனையும்  அச்சுறுத்தும் என்று தெரிந்துகொண்டேன். அதுவரை ஒரு வேகத்தில் எழுதிக் கொண்டிருந்த நான், மிக நிதானமாக மிகச் சிரத்தையோடு எதைப் பற்றி எழுத வேண்டும் என்பதில் கவனத்தோடு இயங்க ஆரம்பித்திருக்கிறேன். பெண் எழுதவேண்டும் பெண்ணிலிருந்துதான் மாற்றங்கள் வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

அப்படி என் அறிவுக்கு எட்டிய அரசியலை, சமூக அவலத்தை  எழுத்தாக்கிடவே முயன்றுவருகிறேன். அனைத்துச் சாதி மதத்திலும் பெண் தலித்தாகவே இருக்கிறாள். பெண்ணுக்குச் சமூகநீதி சாத்தியப்படும்போதுதான், இவ்வுலகமும்  முழுமையாக விடுதலை பெறும். பெண்கள், மற்ற துறைகளைக் காட்டிலும் எழுத்துத் துறைக்கு அதிகமாக வரவேண்டும். பெண்கள், பகுத்தறிவோடு சிந்திக்கத் தொடங்கிவிட்டால், கேள்வி கேட்கத் துணிந்துவிட்டால், இங்கே சாதி, மத ஆணவக்கொலைகள் நிகழ வாய்ப்பே இருக்காது. பால்சமத்துவக் கல்வியும் அனுபவமும் ஒரு குழந்தைக்கு வீட்டிலிருந்து கிடைக்கும் நிலை உருவாக வேண்டும். அதற்குப் பெண்கள் வாசிக்கவும் எழுதவும் திரண்டு வரவேண்டும். இதோ இந்த வருடத்திலேயே என் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘பியூலா’ வருகிறது.

அனாமிகா

ன் பால்யத்தில், தத்தம்மாவின் மடியில் கிடந்தபடி, கோடி நட்சத்திரங்களின் சிமிட்டல்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு, ஒருபாடு பாவப்பட்ட மனிதர்களின் வாழ்வை, நிறைய இரவுகளில் கதைகளாகக் கேட்டிருக்கிறேன்.

மரங்கள், பசுக்கள், பட்சிகள், மூணு காலு மிருகங்கள் பலதரப்பட்ட விநோதமான ஜீவிகள் பேசியதை நான் கேட்டிருக்கிறேன். என் செவி அறைகளுள், இப்போதுவரை அவ்வொலி அதிர்வுகள்... ஒன்பது பனைமரம் உயரம் நிரம்புகிற மழை பெய்த சப்தத்தை மீச்சிறு டெசிபல் அளவிற்குக் குறுக்கி அலைவுருகின்றன.பெரும்பாலும் கனவுகளில் நிகழ்த்திப்போகும் அதன் பயங்கரங்கள், என் ஈரக்குழையை நடுங்கவைத்திருக்கின்றன.

நான் ஏன் எழுதுகிறேன்?

என் முப்பது சில்லறை வயதைத் தாண்டி, ஆக்கிரமித்த மகாதுயரத்தை ஆற்ற என் பால்யகால வாசிப்புகளான  ‘இரும்புக் கை மாயாவி’, ‘சிந்துபாத்’ படக்கதைகள் பெரிதும் உதவி யிருக்கின்றன. வாசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில், சாணக்கியர் சொல்லை அவ்வளவு விரும்பிப் படித்திருக்கிறேன். எதையும் விட்டுவைக்கவில்லை, கிடைத்த சின்னச் சின்ன கதைப் பக்கங்களை வாசித்து, அதேபோல் சட்டம் வரைந்து ஏதாவது பொம்மை உருவங்களைச் செய்து, நோட்டுப் புத்தகங்களில் ஒட்டித் திரிந்த நால்கள்தான் நான் உண்மையாய் வாழ்ந்திருக்கிறேன். என் நினைவடுக்கங்களில் நொதிக்கும் மனிதச்சூடு, ஓர்மையை மீண்டும் மீட்சித்து களிக்கச் செய்கிறது.

எனக்குள் இப்போது எழுதும் காட்சி ரீதியான கற்பனைக் கதாபாத்திரங்களை, நேரில் கண்டு அனுபவித்த துயரத்தின் கெட்டிப்பட்ட முகங்களை, என் கவிதைகளில் பெரும்பாலும் எழுதமுடிந்திருக்கின்றன எனத் தீர்க்கமாக நம்புகிறேன். அது வலியிலிருந்துதான் வந்திருக்க வேண்டும்.

நான் ஏன் எழுதுகிறேன்?

தத்தம்மாவின் நாட்டார் வாய்மொழிப் பாடல்களை, அவள் குரலில் கேட்ட பல பழங்கதைகளை, வாழ்நில மண்ணை நினைவுகூரும் வடிவமாக நான் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ஓர் ஆழ்ந்த கதையை வெகு சீக்கிரத்தில் எழுதி முடித்துவிட ஆசைப்படுகிறேன். தூரதேசத்திலிருந்து 13 வயதில் ஊரைவிட்டு ஓடிவந்த அப்பாவை, ஒரு பட்டிவீட்டில் 11 வருட வாத நோய்மையில் கிடத்தி, நாற்றம் மிகுந்த உடலியைச் சகிக்கப் பழகத் தந்த கொடும் வறுமையை, அளவுக்கு அதிகமாகவே அனுபவித்ததை எப்படி எழுதாமல் விடும் அந்தக் கொடும்பசி?

இந்த வறுமையையும் நோய்மையையும் மரணங்களையும் என் சாம்பல் நிற மூளை வெகுவாக உள்வாங்கியிருக்கிறது. அது தந்த ஆழ்ந்த தனிமையைச் சுகிக்கப் பழகியதும், மனப்பிறழ்வைக் கொண்டாடியதும், எழுத்தைத் தந்த குறைந்த பள்ளிப்படிப்பை வைத்துக்கொண்டு பசி நிகழ்த்திய உளவியலைக் கவிதைகளாய் கதைகளாய் கொண்டுசேர்த்த எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் என் நன்றிகள்.

சின்னச் சின்னத் திருட்டுகள், அரிசி வாங்கியது போக போதைக்குச் சன்னமாய் அடிமையாக்கியதை உணர்கிறேன். ஒன்றை உடைத்துக்கொண்டு வெளியேறும்போழ்து, ஒழுக்கக் கேடுகள் உண்டாவது சாத்தியம்தான். நான் அந்தச் சீர்கேட்டில் சிக்கிச் சிதைந்து பிறழ்ந்து தப்பி ஓட, பெரும் நல்ல காரணமாய் இருப்பது புத்தகங்கள்தான். அப்படியான புத்தகங்களின் வரிசையில் என் வாழ்நாளில் நான் ஒன்றையாவது எழுதிவிட வேண்டும்.பார்க்கலாம், கால ஓட்டத்தில் எந்த வரிசையில் சரியாய் நிற்கிறேனோ அதில் கடைசி மனிதன் நான்தான்.

தொலைவில் போகப்போகிறேன்
அல்லது
தொலைந்தே போகப்போகிறேன்
என் கையில் ஏதுமில்லை
கறையேதுமில்லை
இப்பொழுதும் உங்கள் அதிகாரங்களுக்கெதிராக
என் தலையில்
முதுகெலும்புக் கொம்பு வளர்ந்துகொண்டேதான்
இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism