Published:Updated:

தடை மற்றும் தணிக்கை எனும் கருத்தாக்கம்

தடை மற்றும் தணிக்கை எனும் கருத்தாக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தடை மற்றும் தணிக்கை எனும் கருத்தாக்கம்

ஜமாலன் , படங்கள் : ஸ்ரீதர் பாலசுப்ரமணியம்

னிதகுலம், நாகரிகம் எனும் `ஏதேன்’ தோட்டத்தில் வாழ சபிக்கப்பட்டுள்ளது.  `நாகரிகம்’ என்ற கருத்தாக்கத்தை அகழ்ந்தால், தடை மற்றும் தணிக்கை என்கிற இரண்டு கருத்தாக்கங்களைப் பெறலாம். காரணம், தடை மற்றும் தணிக்கைகள் வழியாகக் கட்டப்பட்டதே நாகரிகம். தடை செய்யப்பட்டதும், தணிக்கை செய்யப்பட்டதும், விலக்கப்பட்டதுமான சமூக அமைப்பால் அனுமதிக்கப்பட்ட ஒன்றில்தான் நமது வாழ்க்கை இருத்தப்பட்டுள்ளது. இதை வேறுவிதமாகக் கூறினால், சமூகம் தடைகள் மூலமே ஓர் அனுமதிக்கப்பட்ட வாழ்வெளியாக உள்ளது. சமூகம் என்ற நமது புழங்குவெளியே, தடை செய்யப்பட்ட, தணிக்கை செய்யப்பட்ட ஓர் ஒழுங்குமுறைக்கு உட்பட்டதே. தடை மற்றும் தணிக்கை என்ற செயல்பாடுகளைக் கட்டுடைத்தால், உள்ளிருப்பது சமூக ஒழுங்கு என்கிற விதிமுறைகளே.

இவ்வுலகு, தடைகளால் நாகரிக சமூகமாக மாறிய கதை, மனிதகுலத் தோற்றத்துடன் உறவுகொண்ட இரண்டு எடுத்துரைப்புகளால் (Narration) அறியப்படுகிறது. ஒன்று, மதங்களின் எடுத்துரைப்பான மனிதத் தோற்றம். இது `செமட்டி’-க் மதங்கள் எனப்படும் யூத-கிறித்துவ-இஸ்லாமிய மதங்களான ஆபிராகமின் வழிவந்த மதங்கள். இவை முன்வைப்பது நாம் வழக்கமாக அறிந்த இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதர்களான ஆதாம், ஏவாள் கதை.   ஏதேன் தோட்டத்தில் இறைவன் ஒரு குறிப்பிட்ட கனியை உண்ண தடை விதிக்கிறான். ஆனால், சாத்தானின் தூண்டுதலால் ஏவாள் தடை செய்யப்பட்ட அக்கனியை உண்கிறாள். இறைவன் அவர்களைச் சபிக்கிறான். அவர்கள் இப்புவியில் அறிவைப் பெற்று, உழைத்தும் களைத்தும் சந்ததிகளைப் பெருக்கியும் வாழ்வதற்காகச் சபிக்கப்படுகிறார்கள்.

தடை மற்றும் தணிக்கை எனும் கருத்தாக்கம்

எல்லோரும் அறிந்த இக்கதையில், தடை என்பதற்கான அடிப்படையான சமூகவியல் ஒளிந்துகொண்டுள்ளது. அது, இன்றைய மனித வாழ்வையும் அறிவையும் பெற தடையை மீற வேண்டும் என்பதே.   அறியாமை மிக்கவர்களே கடவுளின் படைப்பு, அறிவுள்ளவர்கள் சாத்தானின் படைப்பு என்பதே இதில் மறைந்துள்ள பொருள். மரணமற்ற வாழ்விலிருந்து, மரணம் உள்ள வாழ்வுக்கு சபிக்கப்பட்ட மனிதகுலம், இன்றைக்கான உயிர் வாழ்தலை பெற்றது அந்தத் தடையின் வழியாகவே.   இத்தொன்மம் கூறுவது இதைத்தான்.  தடைகள்தான் இச்சமூகத்தினை உருவாக்கியது. இவ்வாழ்வைத் தந்தது என்பதே.

கீழ்திசைவியல் மதங்களான இந்துமதம், ஜொராஸ்டீரியம் மற்றும் இந்திய சமயங்களான பௌத்தம், சமணம் அனைத்தும் அடிப்படையில் தடைகளின் வழியாகவே தங்களது மத, சமய அமைப்புகளைக் கட்டியுள்ளன. ஆக, மதங்கள் அனுமதித்துள்ள இன்றைய வாழ்வு, அடிப்படையில் பல தடைகள் வழியாகவே கட்டப்பட்டது.  இந்து மதமாக அறியப்படும் வேத-பிராமண மதத்தில், மனுதர்மம் இவ்வாறான பல தடைகளை விதிக்கிறது. இத்தடைகளின் வழியாகவே இந்தியா என்ற மொத்த நிலப்பரப்பையும் ஆளுகை செய்யும் ஒரு சமூக விதிமுறையாக மாறியுள்ளது. ஆபிராகிய மதங்களில் மெசையா (மோசஸ் – மூசா), இறைவனிடம் பெற்ற பத்து கட்டளைகளும் தடையையே குறிக்கின்றன. இறைவன் நான்தான் என்றும், மற்ற இறைவனைத் தடை செய்வதில் தொடங்கி அனைத்து கட்டளைகளுமே தடை குறித்தவையே. அடிப்படையான தடை களவு, கொலை, கூடா ஒழுக்கம், பெற்றோரை மதித்தல், பொய்சாட்சி சொல்லாமை உள்ளிட்டவையே.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தடை மற்றும் தணிக்கை எனும் கருத்தாக்கம்

உலகின் முதல் அரசியல் விதிமுறைகள் `ஹம்முராபி கோட்’ (Hammurabi Code). கி.மு. 1754-ல் இருந்த பாபிலோனிய மன்னன் ஹம்முராபியால் உருவாக்கப்பட்டு, கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது.  மோசஸ் சினாய் மலையில் 45 நாள்கள் தங்கி இறைவனிடம் பெற்ற பத்துக் கட்டளைகளும் கல்வெட்டில் பதியப்பட்டவையே.  இங்கு மொழி எழுத்தாக மாறாமல், அது ஒரு பொதுவிதியாக வரலாற்றில் தொடர முடியாது என்பதே. அதனால்தான் அனைத்துத் தர்ம, அற, அரசு விதிகளும் வாய்மொழி மரபைவிட்டு வரிமொழி மரபாக தொன்றுதொட்டு காக்கப்படுகின்றன. ஆக, எழுத்தே மொழிக்கும், சமூக ஒழுங்கமைப்புக்கும் முதன்மையானது. அதனால்தான் எழுத்துகள் தடை செய்யப்படுகின்றன.

இன்று இஸ்லாமிய `ஷரியா’-வில் மற்றும் பண்டைய ஆட்சி முறைகளில் இருந்த `கண்ணுக்கு கண்’ என்ற தண்டனை முறை முதன்முதலாக ஹம்முராபி சட்டத்தில்தான் விதிமுறையாக்கப்பட்டுள்ளது. ஓர் அரசு, மக்களிடம் தனது ஆளுகையை உறுதிப்படுத்திக்கொள்ள உருவாக்கும் அரசியல் சட்டவிதிகள், தடை செய்யப்படாதவற்றை அனுமதிப்பதே. மதங்கள் அதைத் தர்மவிதிகளாக, அறவிதிகளாக அறிவிக்க, அரசியல் அமைப்பு அதை அரசியல் சட்டமாக (constitution) நாகரிக சமூகத்தில் நடைமுறைப்படுத்துகிறது. எனவே, தடைகளை வாசிக்க நாம் மதப் பிரதிகளையும் அரசியல் சட்டங்களையும் கட்டுடைத்து வாசிக்க வேண்டும். ஏனென்றால், அவை வாழ்வின் அனுமதிக்கான விதிகள் வழியாக, உள்ளிருத்தி வைக்கப்பட்டிருப்பது தடைகளே.

புனித மறைகள், வேதங்கள் ஆகியவை அனைத்தும் விதிமுறைகளாக முன்வைப்பது தடைகளையே. இதன் பொருள், உலகின் அனைத்துமே தடை செய்யப்படுகிறது, அனுமதிக்கப்பட்டவை தவிர. மதங்கள், இத்தடைகளின் வழியே தனக்கான ஒரு சமூக ஒழுங்கை உருவாக்க முயல்கிறது. ஒவ்வொரு மதமும் முதலில் தடை செய்வது பிற மதங்களின் இறைவனை. ஆக, விதிமுறைகள் தடைகளின்மேல், அதனை உள்முரணாகக்கொண்டு கட்டப்பட்டதே.  சுருக்கமாகக் கூறினால், விதிகள் அனுமதியாகவும் விலக்குகள் தடையாகவும் உள்ளன. இதைத் தவிர, சில மக்களிடம் நிலவும் பழக்கவழக்கங்கள் மரபுகளையும் அவை உருவான இயற்கைச் சூழல், உருவாக்க எண்ணும் கற்பித சமூக அமைப்புக்கான ஆசைகள், வேட்கைகள் ஆகியவற்றுக்கான விதிமுறைகைளாக அமைப்பதற்கு, அவை சிலவற்றைத் தடையாக அறிவிக்கின்றன.

தடை மற்றும் தணிக்கை எனும் கருத்தாக்கம்

இம்மதங்களின் தடைகளைப் பட்டியலிட்டால் அது கணக்கிலடங்காது. புரிதலுக்கான சில தடைகளாக உள்ளவை 1.மாட்டிறைச்சித் தடை 2.புலால் உண்ண தடை 3.மாதவிடாய் வந்தால் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல தடை 4.பெண்கள் முகம் காட்டத் தடை 5.பன்றி இறைச்சித் தடை இப்படி நிறைய. இப்படியாக, தடைகள் மதங்களின் புனிதத்தோடு இணைந்த ஒன்றாகவும் உள்ளது. மதங்களின் பார்வையில் தடை, சமூகத்தை ஒழுங்குறுத்துவதற்கான ஓர் அமைப்பு சார்ந்த செயலாகவும் உள்ளது.

நாகரிகம் குறித்த இரண்டாவது எடுத்துரைப்பு, பகுத்தறிவை அடிப்படையாகக்கொண்ட சமூக-மானுடவியல் சார்ந்தது. இது சமூகத் தடைகளை மனிதகுல வளர்ச்சிக்காவும் நாகரிகத்துக்கானதாகவும் எடுத்துரைத்தது.  சான்றாக, மனிதகுலம் விலங்கு நிலையிலிருந்து பிரிந்து, ஒன்றிணைந்து வாழ்வதற்கான, தன்னை வளர்ந்த ஒரு சமூகமாக மாற்றிக்கொள்ள சில தடைகளை உருவாக்கியது. அத்தடைகள், மதங்களின் வழியாக விலக்காக (Taboo) அமைக்கப்பட்ட தடைகள். அது ஒரு குடும்ப அமைப்பு உருவாக தாய், தந்தை, மகன், மகள் என்கிற உறவுகளை உருவாக்குவதற்கான அடிப்படையாக உருவானவை. அதைப் பாலியல்-தடைகள் (Incest) என்பார்கள்.

புராதன சமூகங்களில் தாயுடன் மகனும், தந்தையுடன் மகளும், சகோதரனுடன் சகோதரியும் உறவுக்கொள்வது தடைசெய்யப்பட்டது. ஆக, தடையே இன்றைய குடும்ப அமைப்புக்கான மூலக்கல்லாக இருப்பது. இதுவே, பிராமணர்களிடையே ஒரு கோத்திரத்தில் அதாவது, சக-கோத்திரத்தில் திருமணத்துக்கான தடையாக உள்ளது. ஆரியக் குடும்பம் கோத்திரம் என்கிற பெருங்குடும்ப வடிவைக்கொண்டது. அதனால்தான், அண்ணன்-தங்கை உறவு சகோதரத்துவம் என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. இச்சமூகத் தடைகள் குறித்து எண்ணற்ற தொன்மங்கள் உருவாக்கப்பட்டு மக்களிடம் பரவலான நம்பிக்கையாக, ஓர்அடிப்படை உளவியல் கட்டப்பட்டுள்ளது. சான்றாக, கிரேக்க புராணங்களான ‘இடிபஸ்’,  ‘எலக்ட்ரா’ மற்றும் இந்திய புராணங்களான  ‘விநாயகர்’, ‘பரசுராமன்’ போன்றவை. இவை சமூகத்தைக் கட்டமைப்பதற்கான அடிப்படை அலகாகக் குடும்பங்களை ஒழுங்கமைக்க உருவாக்கப்பட்டத் தடைகள்.

இத்தடைகளே பண்பாட்டு உருவாக்கத்துக்கான அடிப்படையாகவும் அமைகின்றது. அதாவது, தன்பால் புணர்ச்சி தடை செய்யப்படுவதன் வழியாக, எதிர்பாலின உறவு (ஆண்-பெண் புணர்ச்சி) சமூகவிதியாக மாறுகிறது. பாலியல் வேட்கையும் இன்பமும் தடைசெய்து முறைப்படுத்தப்படுவதன் வழியாக, சமூகத்திற்கான இன உற்பத்தி காக்கப்படுகிறது. தமிழின் அக இலக்கியத்தின் களவு, கற்பு என்கிற காதல் சார்ந்த உணர்வுகள், இத்தகைய தடைவழி உருவான எதிர்பாலின ஈர்ப்பை அடிப்படையாகக் கொண்டவையே.

தடை மற்றும் தணிக்கை எனும் கருத்தாக்கம்

மனித உளவியலில் தடை, அனுமதிக்கப்பட்டதைவிடவும் அதிக ஆற்றல்கொண்டது என்பதால், இந்த ஆற்றல்கள் ஆழ்தள உளவியலாக செறிவடைகிறது என்கிறது ஃபிராய்டியம்.  இது சமூகத்தின் விலக்காகத் தடை செய்யப்பட்ட ஆசைகள், வேட்கைகள் பொதிந்துள்ள ஓர் உள அமைப்பு என்கிறது. அதை நனவிலி என்றும், இந்நனவிலியின் பல்வேறு பதிலீடாக உருவானதே சமூகச் செயல்பாடுகள் என்கிறது. தடை சமூகவிதியாக இருப்பதால், அதன் விலக்கப்பட்டவை, உள்மன ஆற்றலாக ஆழ்மனதில் சேகரிக்கப்படுகிறது.  இவ்வாற்றல் வெளிப்படும்போது, அதை உள்ளடக்கும் சுயத்தணிக்கையாக மேல்மனது செயல்படுகிறது.

இச்சுயத்தணிக்கையைச் செய்யும் மேல்மன உளவியலால், சமூகத்தில் உடல்கள் ஒழுங்குறுத்தப்படுகிறது (Disciplined). இவ்வாறு ஒழுங்குறுத்தப்பட்ட உடல்களில்தான், இந்திய நால் வருணமுறை தீண்டத்தகாத உடல்களை கட்டமைக்கின்றது. தீண்டாமை இத்தகைய சமூகத் தடையின் ஒரு விளைவே. இது புனிதம், சுத்தம், பாவம், அசிங்கம், அழுக்கு என்கிற பல காரணிகளால் உருவாக்கப்பட்ட தடை.  நாகரிகம் என்கிற கருத்தாக்கத்தின் வழியாக, தடைகளே ஓர் உடலை ஒழுங்கமைப்பதாக (structured), ஒழுங்குறுத்துவதாக அமைகிறது. இன்றைய உடல்களும், அதன் மையமாகக் கருதப்படும் மனமும் தடைகளின் வழியாக எஞ்சியிருப்பவையே என்றால் மிகையாகாது.

பொதுவாகச் சொன்னால்,  இயற்கையைக் காக்க, சமூகத்தைக் காக்க, பண்பாட்டைக் காக்க, அரசியல் காரணங்களுக்காக எனத் தடைகள் உருவாக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சூழலில், குறிப்பிட்ட வாழ்நிலையில் இயற்கையைக் காக்கும் பொருட்டு இவை கடைப்பிடிக்கப்படுகிறது.  இது சுற்றுச்சூழலுடன் இணைந்த ஒன்றாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகம், குறிப்பிட்ட விலங்கை, பறவையைத் தடை செய்திருக்கும்.  சான்றாக மாடு ஆரிய வேத-மதத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்று.  அதற்கான சமூகக் காரணம், அது அந்தச் சமூக பொருள் உற்பத்தியில் பங்களிக்கும் ஒன்றாக இருப்பதே. உழவுக்கும், பால் உள்ளிட்ட உணவுப் பொருளுக்கும் அது பயன்படுவதால், அதைக் கொல்வது தடை செய்யப்படுவது அடிப்படையில் அச்சமூகத்தின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடையதாக இருக்கும். ஆனால், கார்ப்பரேட்டுகளாக வளர்ந்துவிட்ட ஒரு சமூகத்திலும், அதைத் தடையாகக் கோருவது, மதங்கள் தங்கள் புனிதத்தை மீட்டெடுக்கும் அரசியல் நடவடிக்கையே.

சமூகமாக மாறிவிட்ட பல இனக்குழுக்கள், தங்கள் இனக்குழு சார்ந்த நடைமுறைகளை, வாழ்வியலைக் காப்பாற்ற உருவாக்கிக் கொள்ளும் சில தடைகளை நடைமுறைப் படுத்துகின்றன. உதாரணமாக, இந்தியாவில் இனக்குழுத் தன்மையுடன் விளங்கும் ‘சாதி’ என்கிற அமைப்பைக் காக்க, கலப்பு மணத்தை ஒரு தடையாக அக்குழுக்கள் பாதுகாப்பதைச் சொல்லலாம். அதற்காக அவை ஆணவக்கொலை, கௌவரவக் கொலை போன்றவற்றைச் செய்வதும், அவற்றை தங்களது சாதிய புனித அறமாகக் கருதி, தண்டனையாக நிறைவேற்றும் உளவியலையும் பெற்றுள்ளன.

கி.மு.5-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ரோமானிய சட்டமான பன்னிரண்டு அட்டவணைகளின்படி, தடை செய்யப்பட்ட குற்றங்களைப் புரிந்த மனிதனை, அரசானது குடியரிமையைப் பறித்து, அவனை பலிமனிதனாக (Homo Sacer) அறிவித்துவிடும். அவனை யார் வேண்டுமானாலும் கொல்லலாம். அவனைக் கொள்வது புனிதமானதாகவும், இறை ஆலயங்களின் புனிதச் சடங்கில் கொல்ல முடியாத சபிக்கப்பட்டவனாகவும் அவன் கருதப்படுவான். இன்றைய இந்திய ஒடுக்கப்பட்ட தலித்களின் நிலை, இத்தகைய பலி-மனித நிலைக்கு ஆளாக்கப் பட்டிருப்பதையே ஆணவக்கொலைகள் வெளிப்படுத்துகின்றன. இந்திய மனுதர்மத்தைப்போல, எஜமானன் தனது அடிமையின் உடல்மீதான அனைத்து ஆதிக்கமும் கொண்டவன் என்கிறது ரோமானிய சட்டமும். ஆக, உலகில் உருவான அனைத்துத் தடைகளும், விதிமுறைகளும் அதிகாரம் ஒரு குறிப்பிட்ட உடல்களை அடிமைப்படுத்துபவை யாகயே இருந்துவந்துள்ளன. தடை என்ற கருத்தாக்கத்துக்குப் பின் அடிமைப் படுத்தப்பட்ட உடல்கள் உள்ளன. ஓர் இயற்கையான மனித உடல், அரசின் இறையாண்மை வழியாகக் குடிமகனாதல் என்பதுகூட, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் தடைபடுத்தும் ஒரு செயல்பாடே.

மதங்கள் தங்கள் உணவுப் பழக்கங்களில் இத்தடைகளைப் பின்பற்றுகின்றன. இந்து, புத்த, சமண மதங்களில் சைவ உணவுப் பழக்கம் என்பது புலாலை தடைசெய்வதால் வருவது. அதேபோன்று, இஸ்லாமில் ஹலால், ஹராம் என உணவுப் பழக்கம் ஹராமானவை எனச் சிலவற்றைத் தடை செய்யுதுள்ளது. சில நாடுகளில் அரசியல் அடிப்படையில் சில நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டிருக்கும். தீவிரவாத அமைப்புகள், பயங்கரவாத அமைப்புகள் என்று அன்றைய அரசும், ஆளும் கருத்தியலும் தீர்மானித்தவற்றைத் தடைசெய்கின்றன. ஒரு அரசின் இறையாண்மை, பிற தேச குடிமக்கள் தனது தேச எல்லைக்குள் அனுமதியின்றி நுழைவதைத் தடைசெய்கிறது. இப்படித் தடைகள் எல்லாத் தளங்களிலும் தடையின்றி நிறைந்துள்ளது. அடிப்படையில் ஒரு சமூகத்தின் எழுதப்பட்ட, எழுதப்படாத விதிமுறைகளுக்கு உட்பட்டே ஒவ்வொரு தனிமனிதரும் வாழவேண்டும் என்பதே அடிப்படை விதியாக உள்ளது. இவ்விதியைக் கண்காணிப்பதும், கட்டுப்படுத்துவதுமே ஓர் அரசின் அன்றாடப் பணியாக உள்ளது. 

பொதுவாக புனிதமானது; மீறக் கூடாதது; தடுக்கப்பட்டது; தூய்மையற்றது; சபிக்கப்பட்டது; சட்டவிரோதமானது; இறையாண்மைக்கு எதிரானது; தெய்வ நிந்தனைக்குரியது; ஆளும் அரசியலுக்கு எதிரானது; அதிகாரத்தை ஏற்காதது; சமூகத்தைச் சீர்குலைப்பது உள்ளிட்டவையே தடை என்ற கருத்தாக்கத்துக்கான வரையறையாகக் கொள்ளலாம். தடை, சமூக உடல்களை ஒழுங்குறுத்துவதும், அதாவது அதிகாரக் கருத்தியலுக்கு ஏற்ப வடிவமைப்பதும், மீறுபவர்களைத் தண்டிப்பதற்கான உடல்மீதான அதிகாரத்தைப் பெறுவதுமே. தடைகளை வாசிப்பது அடிப்படையில் தர்மாவையும், சமூக அறத்தையும் வாசிப்பதே. தடை என்பதில் இயற்கை, சமூகம், பண்பாடு சார்ந்த தடைகள் ஒரு வழக்கமாக, மரபாக, பழக்கமாக மாறி, சமூகத்தின் நிரந்தர விதிகளாக அமைந்திருப்பது ஒரு வகை. சில அரசுகளின் அரசியல் காரணங்களுக்காக தற்காலிகமாகத் தடை செய்யப்படுபவை மற்றொரு வகை.

அரசியல்ரீதியான தடைகளில் முக்கியமானது நூல்களை, சிந்தனைகளைத் தடைசெய்வது. இந்திய எழுத்தாளரான சல்மான் ருஷ்டியின் `சாத்தானின் கவிதைகள்’ (The Satanic Verses) என்ற புதினம், ஈரானிய இஸ்லாமியத் தலைவரான ஆயத்துல்லா கொமெய்னியால் தடை செய்யப்பட்டதோடு, ருஷ்டியின் மீது மரண தண்டனை பத்வா (fatwa) தரப்பட்டது.  பத்வா என்பது இஸ்லாமில் ஜனநாயக நாடுகளில் நீதிமன்றம் வழங்கும் `ராயல் டிகிரி’ அல்லது தண்டனைக்கான ஆர்டர் போன்றது. அதையொட்டி, இஸ்லாமிய நாடுகள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளிலும் தடைசெய்யப்பட்டது. இந்தியாவில் அப்போதைய காங்கிரஸ் அரசு தடைவிதித்தது. இப்புதினம் மத துவேஷத்தைப் பரப்புவதாகக் கூறப்பட்டது. மற்றொருபுறம், உலகில் இஸ்லாமியத் தலைமைத்துவத்தில் நிகழும் சியா-சுன்னா அதிகாரப் போட்டியில், தன்னை உலகமய இஸ்லாமியத் தலைவராக்குவதற்காகவே கொமெய்னி தடைசெய்ததாக விமர்சனங்கள் வந்தன. அதாவது, தடை மற்றொருவகையில் அதிகாரத்தை மீளுருவாக்கம் செய்து உறுதிப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கையாகவும் உள்ளது.

`இந்துக்கள் - ஒரு மாற்று வரலாறு’ என்ற வெண்டி டோனிகரின் நூல் தடை செய்யப்பட வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகளால் பிரச்னைக்கு உள்ளாக்கப்பட்டபோது, அந்நூலை இந்தியாவில் வெளியிடுவதிலிருந்து  ‘பெங்குயின்’ நிறுவனம் பின்வாங்கியது, இது மற்றொரு தடைக்கான உதாரணம்.  இந்நூல் வழக்கமான பிராமண ஆதிக்கக் கருத்தியலின் வரலாற்றுப் பார்வையை மறுத்து, விளம்புநிலையாளர்கள், தலித்துகள், பெண்கள் ஆகியோரின் பார்வையில் இந்திய வரலாற்றை முன்வைக்கும் ஒன்று.  இத்தகையப் பார்வைகள் தற்போதைய ஆளும் அரசின் கருத்தியலுக்கு எதிரானவை என்பதால், அதைத் தடைசெய்யும் குரல்களாக வெளிப்படுகிறது. இத்தகைய தடைசார்ந்த மிரட்டல்களால், நிறுவனமே முன்வந்து சுயமாகத் தடைசெய்துகொள்ளும் நிலையை உருவாக்கக்கூடியதான அச்சத்தை உருவாக்குபவையாக உள்ளன.

பங்களாதேஷைச் சேர்ந்த தஸ்லிமா நஸ்ரின் என்பவரின் புதினமான `லஜ்ஜா’ வெளியானபோது, பங்களாதேஷில் அதைத் தடை கோரியும், அவர்மீதான தாக்குதலும், கொலை மிரட்டலும் அதிகரித்த நிலையில், அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.  அதேபோல், கல்வித் திட்டத்தில் இருந்த ஏ.கே. ராமானுஜத்தின் `300 இராமாயணங்கள்’ என்ற கட்டுரை இந்துத்துவ அமைப்புகளால் பெரும் போராட்டங்களுக்குப் பின் நீக்கப்பட்டது.

தடை மற்றும் தணிக்கை எனும் கருத்தாக்கம்

இதுபோன்ற எண்ணற்ற நூல்கள், சிந்தனையார்களின் சிந்தனைகள் தடை செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக கம்யூனிஸ அமைப்புகள், கட்சிகள், நூல்கள் ஆகியவை சவுதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான நாடுகளில் பாலியல் சார்ந்த நூல்கள், படங்கள் வெளிப்படையாகப் பார்க்கத் தடைசெய்யப்பட்டுள்ளன.  ஆனால், சவுதி அரேபியா தொடங்கி, இந்தியா போன்ற நாடுகளில் பாலியல் சார்ந்த நூல்கள், படங்கள் மிக அதிகமாக ரகசியமாகப் புழக்கத்தில் இருக்கின்றன என்பதே யதார்த்தம். தற்போது இணையத்தில் இந்தத் தடைகளைமீறிய அதிக வருமானம் ஈட்டப்படும் ஒரு துறை, `போர்ன் இண்டஸ்ட்ரி’ (Porn Industry) எனப்படும் பாலியல் கதைகள், படங்கள் சார்ந்த தொழில் துறையே. தடையும் விலக்கமும் சமூகத்தின் ஆழ்தள உளவியலில், மீறலுக்கான பேராற்றலைக் கொண்டிருப்பதையே காட்டுகிறது. அரசே இத்தகையத் தடைகளைத் தனது அதிகாரத்தை அனைவரும் உணர்வதற்கான ஒரு செயல்பாடாகவே நடைமுறையில் செயல்படுத்துகிறது.

இந்தியாவில் தேவதாசி முறை, சதி, பால்ய விவாகம் போன்ற பெண்கள்மீதான மதவாத, ஆணாதிக்கக் கொடுமைகளைத் தடைசெய்வதற்காக நடந்த போராட்டங்கள் நாமறிந்தவையே. நவீனத்துவச் சிந்தனையில் இதுபோன்ற பழைமைவாதச் சிந்தனைகள், நடைமுறைகள் தடைப்படுத்துப்படுவதன் வழியாகச் சமூகத்தின் நேர்மறையான, முற்போக்கான ஆற்றல்கள் திறந்துவிடப்படுகின்றன. தடையின் நேர்மறையான விளைவுகள் இவை. ஆக, தடை என்ற கருத்தாக்கம் நவீனத்துவ அரசியல் தளத்தில் முற்றிலுமாக எதிர்மறையானதாகப் பார்க்க முடியாது. தடை என்பதே சமூக உடல்கள் மீதான ஓர் அதிகாரத்துவ அரசியல் நடவடிக்கை என்கிறது உடலரசியல் கோட்பாடுகள்.

புராதன காலம் தொடங்கி, மதங்களின் காலம் வரை, தடை ஓர் அடிப்படை சமூக இயக்க விதியாக உள்ளது. 17-ம் நூற்றாண்டுக்குப் பிந்தைய நவீனஅரசுகள், பிரெஞ்சுப் புரட்சியில் முதலாளித்துவம் முன்வைத்த சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் என்கிற முழக்கத்தின் அடிப்படையில் கண்டடைந்த ஜனநாயக அரசுகள், தடை என்ற பண்டைய நடவடிக்கையோடு இணைந்து கண்டடைந்த மற்றொரு தொழில்நுட்பமே தணிக்கை. மேலோட்டமாகத் தனிமனித உரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை இவற்றோடு தடை என்பதன் ஒரு நவீன வடிவமே தணிக்கை. இது பகுதியளவு தடையும், பகுதியளவு அனுமதியையும்கொண்ட ஒரு கருத்தாக்கம். முற்றிலுமான தடை என்பதற்குப் பதிலாக, அரசின் கண்காணிப்பில் அதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும் ஒன்றே தணிக்கை. இது அரசின் கொள்கை சார்ந்த ஒன்றாக ஒவ்வோர் அரசிலும் மாறிக்கொண்டிருப்பது.

தணிக்கை நவீன அரசின் ஒரு கட்டுப்படுத்தும் நிறுவன ஒழுங்கமைப்பு. அது மூன்று தளங்களில் நிகழ்வதாக வகைப்படுத்திப் பார்க்கலாம். 1.சுய தணிக்கை, 2. அரசியல் தணிக்கை, 3. சமூகத் தணிக்கை. சுயத்தணிக்கை, ஒவ்வொரு உடலிலும் மனசாட்சி மற்றும் உளவியல் அமைப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. சமூகத் தணிக்கை, சாதி, மதம், இனம், பாலினம் உள்ளிட்ட கருத்தியல் அடையாளங்களால், சமூகத்தின் ஆதிக்க குழுக்களால் கட்டுப்படுத்தப்படுவதாக உள்ளது. அரசியல் தணிக்கை, அரசின், நாட்டின் இறையாண்மை சார்ந்த ஆதிக்கக் கருத்தியலால் கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தும் ஒன்றாக உள்ளது. ஆக, நாகரிகம், நவீனத்துவம் என்கிற இன்றைய இறையாண்மைகொண்ட சமூகத்தில் தடைகள், தணிக்கைகள் வழியாகக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதுமான ஆளுகைத் தொழில்நுட்பங்களாக உள்ளன.

தொகுப்பு  : வெய்யில், விஷ்ணுபுரம் சரவணன், ச.அழகுசுப்பையா