Published:Updated:

நாடகத்தின் மீதான தடைகள்

நாடகத்தின் மீதான தடைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
நாடகத்தின் மீதான தடைகள்

வெளி ரங்கராஜன், படம் உதவி: ஜெயபாபு

சைவுகளும் ஓசைகளும் காலம் காலமாக மனித மனத்தை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன. தன்னுடைய மனத்தின் நுண்ணிய சயனங்களையும் அழகுணர்வுகளையும் இவற்றின் மூலமாகவே மனிதன் அடையாளம்கண்டு வந்திருக்கிறான். தன்னுடைய சுதந்திரத்தின் எல்லைகளை விரிவுபடுத்தி வந்திருக்கிறான். ஒரு வளர்ச்சிப்போக்கில், ஆடல் பாடலுடன் கதையைச் சொல்வது என்கிற நிலையில்     நாடகம் தோன்றுகிறது. குழுச் சமூகங்கள் நிலவிவந்த ஒரு காலகட்டத்தில் குழுவின் அடையாளத்தைப் பேணவும் ஒரு கலாசாரப் பகிர்வுக்கான தளமாகவும் இவை பயன்பட்டிருக்கின்றன. நம்முடைய கிராமப்புறங்களில் மதச்சடங்குகளுடன் இணைந்த சில அதீத நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, ஒடுக்கப்பட்ட மனம் தளைகளிலிருந்து விடுதலை பெறவும் பங்கு பெறுபவர்களும் பார்வையாளர்களும் வெளி உலகைக் கடந்து செல்வதற்கான முகாந்திரத்தையும் சுதந்திரத்தையும் இங்கு பெறுவதையும் நாம் பார்க்க முடியும்.

நாடகத்தின் மீதான தடைகள்

நம்முடைய நாட்டுப்புறக் கூத்துகளில் செயல்படும் மனவியலை ஆராயும்போது, அது ஒரே சமயம் சமூகக் கட்டுக்கோப்பைப் பாதுகாக்கவும் மறுபுறம் தன்னுடைய இறுக்கமான கட்டுமானங்களிலிருந்து சமூகம் விடுபடுவதற்கான காரியங்களைச் செய்துகொண்டிருப்பதையும் பார்க்க முடியும். முக்கியமாக ஒரு சமூகத்தின் நினைவுகளுக்கு உயிரூட்டி அது செயலூக்கம் கொள்வதற்கான உந்துதலை இந்த அரங்கம் கொண்டிருக்கிறது. நடனம், பாடல், நாடகத்தன்மை, கதைசொல்லுதல், பாலியல்தன்மை, மதம் எல்லாவற்றையும் உள்ளடக்கி அவனுடைய அதிகபட்ச பங்கு கொள்ளலை அது உறுதிசெய்கிறது. சமூகக் கலாசாரக் கட்டுப்பாடுகளால் பலவிதங்களிலும் ஒடுக்கப்படும் மனிதன், இங்குதான் தன்னை ஒரு முழு மனிதனாகப் பார்க்கிறான். எங்கே அவனுக்கு விடுதலையும் பூரணத்துவமும் நிகழ்கிறதோ அது அவனுடைய நேரிடையான எல்லைகளைத் தாண்ட அவனுக்கு அனுமதி வழங்குகிறது. தன்னுடைய படைப்புப் பொறிகள் தூண்டப்படுவதை அவன் பார்க்கிறான். அதனால்தான் கூத்தில் வரும் கட்டியங்காரனும் விதூஷகனும் அவ்வப்போது நாட்டு நடப்புகளைக் கேலிக்கும், விமர்சனத்துக்கும் உட்படுத்துகிறார்கள். பண்ணையாரை முன்னால் வைத்துக்கொண்டு அவருடைய தகாத செயல்களை விமர்சிக்கும் சுதந்திரத்தை ஒரு தொழிலாளி பெறுகிறான். ஷேக்ஸ்பியர் நாடகங்களில் வரும் Clown பாத்திரம், அரசன் முன்னாலேயே அவனுடைய செயல்களைக் கேலியுடன் விமர்சிக்கிறது. சமூக ஒடுக்குமுறைக்கும் பாலியல் ஒடுக்குமுறைக்கும் எதிரான குரல்கள் கூர்மையான அங்கதத்துடனும் இயல்பான சுதந்திரத்துடனும் இங்கு வெளிப்பாடு கொள்கின்றன. இவ்வாறு நாடகத்தளம் என்பது கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட இடமாகவும் ஒரு நுட்பமான அளவில் அதிகாரத் தகர்ப்பிற்கான இடமாகவும் இருக்கிறது. நம்முடைய பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம் ஆகிய சிற்றிலக்கியங்களிலும் கோபால கிருஷ்ண பாரதியாரின் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யிலும் காப்பிய மரபுக்கு மாறாக, விளிம்புநிலை மனிதர்களின் வாழ்நிலைகளும் அநீதி எதிர்ப்புக் கருத்தாக்கங்களும் ஊடுருவி இருப்பதைப் பார்க்க முடியும். வெவ்வேறு காலகட்டங்களில் எளிய மக்கள் மூலம் வெளிப்படும் இக்கலக உணர்வுகள், அதிகாரத்தை அச்சுறுத்தும் சாத்தியங்கள் கொண்டதாகவே இருந்திருக்கின்றன.

நம்முடைய காலங்காலமான நாடக வடிவங்கள் உருவாக்கிச் சென்ற, இத்தகைய கொண்டாட்ட உணர்வையும் கலக உணர்வையும் எளிய மக்கள் திரளின் ஒரு தவிர்க்க இயலாத கலாசாரக் குரலாகவே அதிகார வர்க்கம் எதிர்கொண்டாலும், பிரிட்டிஷ் வருகைக்குப் பிறகுதான் நாடகத் தடைச்சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. 19-ம் நூற்றாண்டின் இறுதியில், அஸ்ஸாமின் தேயிலை மற்றும் காப்பித் தோட்டங்களில் பணியாற்றிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்டித்து, வங்காளம் முழுவதும் நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. இவை, பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டுவதாகக் கருதி பிரிட்டிஷ் அரசாங்கத்தால் 1876-ல் நாடகத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்குமுன்பே தேயிலை, காப்பித் தோட்டம் மற்றும் மலைவாழ் மக்கள் குறித்துப் பேசும் சில நாடகங்கள் வங்காளத்தில் தடைசெய்யப்பட்டிருந்தன. 1907-ல் மராட்டியத்தின் பல பகுதிகளில் நிகழ்த்தப்பட்டுவந்த கடேல்கரின் ‘கீசக வதம்’ நாடகம், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிரான வன்முறைகள் தூண்டப்படக் காரணமாக அமைவதாகக் கூறி, 1910-ல் ‘கீசக வதம்’ தடைசெய்யப்பட்டது. ஆங்கிலேயர்கள் உருவாக்கிய இச்சட்டம், தங்களுக்கு எதிரானவை என்று அவர்கள் கருதிய நாடகங்களைத் தடைசெய்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு வங்காளம், கேரளம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இச்சட்டம் ஒழிக்கப்பட்டது. ஆனால், சில காங்கிரஸ் அரசாங்கங்கள் கம்யூனிஸ்ட்டுகளை ஒடுக்க இச்சட்டத்தைப் பயன்படுத்தின. வங்காளப் பஞ்சத்தை மையமாகவைத்து எழுதப்பட்ட ‘இப்டா (Indian People’s Theatre Association - IPTA)’வின் புகழ்பெற்ற ‘நாபன்னா’ நாடகத்தை 1954-ல் இந்திய அரசு தடைசெய்தது. பிரிட்டிஷ் அரசாங்கம்கூட இந்த நாடகத்தைத் தடைசெய்யவில்லை. ‘நீங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கினீர்கள்’ என்ற தோப்பில் பாசியின் மலையாள நாடகம் கேரளத்தில் தடைசெய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் இத்தடை நீக்கப்பட்டது. தமிழ்நாட்டில் எம்.ஆர்.ராதாவின் ‘கீமாயணம்’ நாடகமும் கருணாநிதியின் ‘காகிதப்பூ’ மற்றும் ‘போர்வாள்’ நாடகங்களும் காங்கிரஸ் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டன. வால்மீகி ராமாயணத்தின் சில பகுதிகளை அரங்கேற்றுவதற்கு ராஜாஜி அரசாங்கத்துக்கு எதிராக எம்.ஆர்.ராதா பல போராட்டங்களை நடத்தவேண்டி வந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நாடகத்தின் மீதான தடைகள்

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் நாடகங்களுக்கு எதிராக இச்சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்றாலும், கேரளம், மேற்குவங்காளம்போல் இச்சட்டம் உடனே ஒழிக்கப்படாமல், சமீபகாலம் வரை (2013) அது அமலில் இருந்தது. அதன்படி, போலீஸ் அனுமதியில்லாமல் பொதுஇடங்களில் நாடகம் நடத்த முடியாது. நாடகம் நிகழ்த்துவதற்கு முன் நாடகப் பிரதிகள் முன்கூட்டியே போலீஸ் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு, அனுமதி பெற்றாக வேண்டும் என்கிற நடைமுறை அண்மைக்காலம் வரை அமலில் இருந்தது.  ‘பரீக்‌ஷா’ ஞாநியின் நீதிமன்ற நடவடிக்கைக்குப் பிறகே 2013-ல் இச்சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

உண்மையில் நாடகம் என்கிற கலைவடிவத்தின் வீச்சு குறித்து அரசாங்கம் அச்சம்கொண்டுள்ளது. அது, கலாசாரவாதிகளின் கையிலும் சிந்தனையாளர்களின் கையிலும் இருப்பதை எந்த அரசாங்கமும் விரும்புவதில்லை. மேம்போக்கான கோமாளிகளின் கையில் நாடகம் இருப்பதில் அரசாங்கத்துக்கு எந்தச் சிக்கலும் இல்லை. அதனால்தான், இன்று அரசு நிர்வாகமும் போலீசும் நாடகத்தைவிட அதிக வீச்சுகள்கொண்ட சினிமாவால் கடுமையாக விமர்சிக்கப்படும்போதும் அரசாங்கம் அதிகமான எச்சரிக்கை உணர்வுகொள்வதில்லை. ஏனென்றால், எல்லா எதிர்ப்பு உணர்வையும் சமன்படுத்தக்கூடிய அம்சங்கள் நம்முடைய வர்த்தக சினிமாவில் தாராளமாகவே உள்ளதால், எதுவும் கட்டுக்கு மீறிவிடாது என்கிற நிம்மதி அரசாங்கத்துக்கு உண்டு. கொஞ்சம் மீறி ஒரு மாறுதலான நல்ல படம் வந்துவிட்டால், அதைக் கலைப்படம் என்ற முத்திரை குத்தி விநியோகஸ்தர்களை வாங்கவிடாமல் செய்கிற உத்திகள் அநேகம் உண்டு. அண்மையில் பம்பாயில் நடைபெற்ற குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களுக்கான உலகப்பட விழாவில் இந்தியக் குறும்படங்களும் ஆவணப்படங்களும் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று அரசாங்கம் நிபந்தனை விதித்தது. ஏனென்றால், இந்தப் படங்கள் வர்த்தக நோக்கமில்லாத தன்னார்வக் குழுக்களாலும் சமூகச் செயல்பாட்டாளர் களாலும் எடுக்கப்படுபவை. நம்முடைய சமூக நிலைமைகள் குறித்த யதார்த்தமான சித்திரிப்பு, நம்முடைய ஆட்சியாளர்களுக்குச் சங்கடமாகத்தானே இருக்கும். கடைசியில் நம்முடைய கலைஞர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பினால் அந்தத் தணிக்கை நிபந்தனை கைவிடப்பட்டது. சத்யஜித் ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’ படம் உலகப் புகழ்பெற்ற பிறகும்கூட, இந்தியாவின் வறுமையை வெளிநாட்டில் விற்றவர் என்று அவரைப் பற்றி ஒரு தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

கோமல் சாமிநாதன் வழக்கமான சபா நாடகங்களைப் போட்டுக்கொண்டிருந்த வரை, அரசு நிர்வாகம் அவரைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால், தண்ணீருக்காக மக்கள் பரிதாபமாக அலைவதைச் சித்திரிக்கும் அவருடைய ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம் வெளிவந்தபோது, முக்கியமான சில திருத்தங்களுக்கு அவர் ஒப்புக்கொண்ட பிறகே அவருடைய நாடகத்தை அனுமதித்தது. அதேபோல்  ‘பரீக்‌ஷா’வின் ‘பலூன்’, ‘முட்டை’ ஆகிய நாடகங்களில் வெளிப்பட்ட விமர்சனப் பார்வையால் எரிச்சலடைந்த அரசு நிர்வாகம், விஜய் தெண்டுல்கரின் மராத்தி நாடகமான ‘கமலா’வை பரீக்‌ஷா தமிழில் நிகழ்த்தியபோது, நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு அரைமணி நேரம் கழித்தே நாடகத்தைப்போட அனுமதி அளித்தது. சென்னை ராணிசீதை அரங்கில் நாடகத்துக்காக எல்லோரும் காத்திருக்கவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அண்மையில் ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ நாடகம் ‘நிஜ நாடக இயக்க’த்தின் தயாரிப்பில், த.மு.எ.க.ச சார்பில் சென்னையில் நிகழ்த்தப்பட்டபோது, அந்த நாடகத்துக்கு போலீஸ் அனுமதி சுலபமாகக் கிடைக்கவில்லை. மிகவும் போராடியே அந்த அனுமதியைப் பெற நேரிட்டது. பெரியாரின் பெயர் இல்லாமல் வேறு ஒரு பெயரில் இந்த நாடகம் அனுப்பப் பட்டிருந்தால், உடனே அந்த நாடகம் தடை செய்யப்பட்டிருக்கும். பெரியாரைத் தடைசெய்யும் அளவுக்கு இன்னும் திராவிடக் கட்சிகள் துணியவில்லை.

நாடகத்தின் மீதான தடைகள்

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் உருவாக்கியுள்ள, சிந்தனையற்ற மந்தைக் கலாசாரத்துக்கு எதிரான, மாற்றுக் கலாசார நடவடிக்கைகளை ஓர் எதிர் பண்பாட்டுச் செயல்பாடாகக் கருதி, அவற்றின் ஒடுக்கக்கூடிய மனநிலையே இன்றைய ஆட்சியாளர்களிடம் செயல்படுகிறது. இந்நிலையில், படைப்புச் சுதந்திரம் மற்றும் கருத்துப் பரவலில் ஆர்வம்கொண்ட படைப்பாளிகளும் கலைஞர்களும் பலவிதமான தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கலாசாரம் குறித்த ஒரு தீர்க்கமான பார்வையுடன் அதன் பல்வேறு வேறுபாடுகளை அனுமதித்துக் கலைகள் சுதந்திரமாக இயங்க வழிவகுப்பதே ஓர் அரசாங்கம் சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பேணுகிற விஷயமாக இருக்கும். நாடகம் என்பது அழகியல் மற்றும் சமூக உணர்வுக்கான குரல்களை வெளிப்படுத்த வாய்ப்புகள் பெற்ற ஓர் எளிய வடிவம். இன்று இளம் படைப்பு சக்திகள் தங்கள் எதிர்ப்பு உணர்வுகளுக்கான வடிகாலாகச் சிறிய நாடக வெளிப்பாடுகளை நோக்கித் திரண்டு வருகிற சூழல் உருவாகிவருகிறது. தொழில்நுட்ப சாதனங்களும் காட்சி ஊடகங்களின் பாதிப்புகளும் பெருகியுள்ள இன்றைய சூழலில், பல்வேறு சமூகக் கலாசார எதிர்ப்பு உணர்வுக் குரல்கள் இந்த வடிவத்தில் வெளிப்பாடு கொள்வதற்கான சாத்தியங்கள் பெருகியுள்ளன. இன்று நீறுபூத்த நெருப்பாகக் கல்விப் புலங்களிலும், சமூகக் கூடல்களிலும், சுற்றுச்சூழல் செயல்பாடுகளிலும் பல்வேறு நடைமுறைகளுக்கு எதிரான இத்தகைய குரல்கள் வெளிப்படக் காத்திருக்கின்றன.

முக்கியமாக, இன்று சமூகம் மேலும் மேலும் தொழில்நுட்பத்தைச் சார்ந்துவரும் நிலையில், மனிதன் தன்னுடைய உடலின் உள்ளார்ந்த ஆற்றல்களை வலுப்படுத்திக் கொள்ளவேண்டிய தேவை அதிகமாகி உள்ளது. உடல் குறித்த கட்டுமானங்கள் விலக்கப்பட்டு, உடலின் அதிகபட்ச சாத்தியங்களை முன்வைக்க வேண்டிய அவசியங்கள் பெருகியுள்ளன. நாடகம் போன்ற நிகழ்கலைகளே அதற்கான களங்களை வழங்கக்கூடியவையாக உள்ளன. உலகமயமாக்கலுக்குப் பிறகான இன்றைய மதிப்பீடுகளின் சரிவு மற்றும் உறவுநிலைகளின் சிதைவு ஆகிய ஒரு வன்முறைச் சூழலில், பல்வேறு எதிர்ப்புக் குரல்கள், தங்களுக்கான வெளிப்பாடுகளை நோக்கித் திரள்வதும் அதிகார சக்திகள் அதற்கான பல்வேறு தடைகளை முன்வைக்க, அதை எதிர்கொள்ள ஆயத்தமாவதும் எதிர்ப்பு நாடக இயக்கம் சந்திக்க வேண்டிய பிரச்னைகளாக உள்ளன. சந்திப்போம்!