Published:Updated:

அடுத்து என்ன? - வாசு முருகவேல் - என் பெயர் அகதி

அடுத்து என்ன? - வாசு முருகவேல் - என் பெயர் அகதி
பிரீமியம் ஸ்டோரி
News
அடுத்து என்ன? - வாசு முருகவேல் - என் பெயர் அகதி

வாசு முருகவேல்

அடுத்து என்ன? - வாசு முருகவேல் - என் பெயர் அகதி

ன்னை அகதியாக்கிய காலமே, எழுத்தாளனாகவும் ஆக்கியிருக்கிறது. நாட்டைப் பிரிந்து உழலும் வேதனையில் என் சொற்கள் தத்தளிக்கின்றன. ஆதலால், எழுதிக் கடக்கும் வாழ்வைத் தொடங்கியிருக்கிறேன். சமூகம் குறித்து அவதானிக்கும் என்னுடைய பண்பானது, சிறிய வயது முதல் பழக்கத்திலிருக்கிறது. எனது பன்னிரண்டாவது வயதிலேயே நாளிதழ்களைப் புரட்டத் தொடங்கியிருந்தேன். தந்தையார் எனக்கு நாளிதழ்களின் மூலம் அரசியலைத் தெரியப்படுத்தினார். ஒருவகையில் அனைத்தின் தொடக்கமும் அதுதான்.

நான் ஈழத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு அகதியாகப் புகுந்த காலம் மிகவும் வித்தியாசமானது. ஈழம் குறித்த உரையாடல்கள் பெருமளவில் அப்போது நடைபெறவில்லை. ஈழப் பிரச்னை சார்ந்து தமிழ்நாட்டில் ஏற்பட்ட மௌனம் இன்னும் புரியப்படாதது.

நோர்வே மத்தியஸ்தம் வகித்த சமாதான காலகட்டத்தில், போர் மேகங்கள் கலைந்திருந்தது ஈழம். போருக்கு முந்தைய அமைதி, இளைப்பாறும் நிழலை உலகெங்கும் வாழும் தமிழீழர்களுக்கு வழங்கியது. அன்றைய காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து பலர் ஈழத்திற்குப் போவதும் வருவதும் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கு ஆன்மிகச் சுற்றுலா வந்தார்கள்; ஈழத்திற்கும் சென்றார்கள். ஆனால், பெருமளவிலானவர்களின் எண்ணம் தாயகத்திற்குச் செல்வதுபோல அமையவில்லை. அதையும் சுற்றுலாபோலவே எண்ணினார்கள்.

ஈழத்தமிழர் குறித்த நேரடியான பிம்பங்களாக வெளிநாட்டிலிருந்து வந்திருந்த இவர்கள்தான் தமிழகத்தில் தென்பட்டார்கள். எப்போதும்போலத் தமிழகத்தின் அகதிகள் முகாம்களில் குடிநீருக்குக்கூட வசதியற்று வாழும் ஈழத்தமிழ் அகதிகள் எவரின் கண்களுக்கும் தெரியவில்லை. ஒருவகையில் நானும் ஒருவனாக அதில் கலந்திருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

அடுத்து என்ன? - வாசு முருகவேல் - என் பெயர் அகதி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வளசரவாக்கம் போன்ற பகுதியில் மிகுந்த வசதியான தோற்றத்திலான நடை உடை பாவனையுடன் பல ஈழத்தமிழர்கள் சுற்றிக்கொண்டிருந்தார்கள். யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் என்ன உணவகங்கள் இருக்குமோ அதற்குச் சற்றும் குறைவில்லாமல் ஈழ உணவுக் கடைகளும் இருந்தன. இங்கு வாழும் அகதிச் சனங்களுக்கு இரண்டு விடயங்கள்தான் பெரிய தலைவலியாக இருக்கும். முதலாவது, காவல் நிலையங்களில் பதிவுசெய்வது. இரண்டாவது, வீடு கிடைப்பது. பெரும்பாலும் ஈழத்தமிழர் என்றாலே வீடு கிடைக்காது. அதற்கு லஞ்சம்போல மாற்று வழிகளில் வீடு தேடவேண்டியிருக்கும். பேரம் பேசாமல் ஒப்புக்கொண்டு வாழத் தயாரானவர்கள், விரைவாக வீடுகளை வாடகைக்குப் பெறலாம். ஈழம் குறித்த பரவலான விழிப்புஉணர்வு வந்தும்கூட, இப்போதும் இந்தப் பிரச்னை இருக்கிறது. எல்லோரும் நிரந்தரமற்ற வாழ்க்கையின் மேல் அசாத்தியமான கனவுகளுடன் இருந்தோம். தாயகத்தில் இருப்போருக்கும் தமிழகத்தில் இருப்போருக்கும் இடையில் ஒரு பெரிய கோடு விழுந்து கிடந்தது. 2009-ம் ஆண்டுவரை அது நீடித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

நான் குற்றவுணர்வுகொள்ளும் காலகட்டம், முள்ளிவாய்க்கால் நாள்கள். சிலர் நினைப்பதுபோலத் தமிழகத்தவர்களை மட்டுமல்ல, ஈழத்தமிழரில் ஒரு பகுதியினரையும்  ஈழம் குறித்துத் திரும்பிப் பார்க்கவைத்ததும் இனப்படுகொலைக் காலம்தான். அப்போதுதான் ஒட்டுமொத்தமாக என் மக்களை நோக்கி நான் உந்தப்பட்டேன். அதுவரை இருந்த வாசிப்பு உட்பட அனைத்தும் என் மக்கள் சார்ந்தும் அவர்களின் துயர்கள் சார்ந்தும் திரும்பின. சமூக ஊடகங்களின் மூலம் என் மனக்கொதிப்புகளை எழுதத் தொடங்கினேன். நிலம் சார்ந்தே என் எழுத்து இயக்கமென வரித்துக்கொண்டேன்.

ஈழ இலக்கியத்தின் காலகட்டத்தை இரண்டாகப் பிரிக்கலாம் என எண்ணுகிறேன். முள்ளிவாய்க்காலுக்கு முன்-பின் என்கிற இந்த வகைப்பாட்டிற்குள் ஈழப் படைப்புகளை அணுகலாம். பிறகு, ஈழப்  படைப்புகள் என்று முன்னிறுத்தப்படும் சில படைப்புகள், இனப்படுகொலைக்கு ஆதரவாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாது, ஈழப் பிரச்னை சார்ந்து எடுக்கப்பட்டதாகச் சொன்ன திரைப்படங்களில் ஈழமே இல்லாதிருந்தது. ஆனால், அதுவே தமிழகத்தில் ஈழம் எனவும் ஈழப் பிரச்னை எனவும் கட்டமைக்கப்பட்டது. ஈழத்தமிழ் மொழியைக்கூட, தமிழ்த் திரைப்படம் ஒன்றில் சிதைத்துச் சிரித்தார்கள் என்பது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும்.

அடுத்து என்ன? - வாசு முருகவேல் - என் பெயர் அகதி

நான் சொல்லும் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான இலக்கியக் காலகட்டம், புதிய வீச்சில் செழுமைகொண்டிருக்கிறது. தீபச்செல்வனின் கவிதைகளில் வருகிற எல்லா குழந்தைகளும் ஒரு யுத்தக் கல்லைச் சுமக்கிறார்கள். தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ நாவல், ஈழ இனப்படுகொலையின் இன்னொரு காலகட்டத்தை உலகுக்கு உணர்த்திற்று. குணா கவியழகனும் அகரமுதல்வனும் இனப்படுகொலைக் களத்தின் ரத்த சாட்சிகள். இருவரின் எழுத்துகளும் இறுக மூடியிருந்த உலகின் கண்களையும் காதுகளையும் திறக்கச் செய்திருக்கின்றன. நான் இந்த வரிசையில் என்னைப் புகுத்திக்கொள்ள விரும்புகிறேன். அறம் சிலுவையில் ஏற்றப்பட்ட நேரத்தில், அறத்தை எழுதுகோலால் உயிர்ப்பிக்கும் இந்தக் கூட்டு மனோநிலை எங்களுக்குள் இருக்கிறது.

என்னுடைய முதல் நாவலான  ‘ஜெப்னா பேக்கரி’ குறித்துக் கூறுவதற்கே நிறைய விடயங்கள் இருக்கின்றன. அந்த நாவலின் கரு என்பது புதியது என்பது மட்டுமே அல்ல. அதற்கான பல்வேறு ஆய்வுகளை நான் செய்யவேண்டியிருந்தது. அதற்காகப் பல்வேறு நாடுகளில் வசிக்கும் பலரிடமும் நிறைய உரையாடல்களை நிகழ்த்தினேன். பலரும் பல்வேறு தயக்கங்களோடுதான் பேச முன்வந்தனர்.

கட்டியமைக்கப்பட்ட பொய்களுக்கு எதிராக நான் நிகழ்த்திய நேர்மையான எழுத்து யுத்தமே அது. அதனால், சிலர் அடைந்த பதற்றமும் என்மீது வீசப்பட்ட கண்டனக் கற்கள் நடுங்கிய நடுக்கமும் கண்டு சிரித்தேன். எழுத்துக்கு அஞ்சும் மனம் அநீதிவான்களிடம் இருப்பதை எண்ணி ஆறுதல் அடைந்தேன்.

இன்னும் அகதியாக வாழும் நான் எழுதுவதற்கு ஆயிரம் கதைகள் உண்டு. யுத்த நெருக்குவாரங்கள் தந்த அலைக்கழிவுகளில் ஒரு சிறுவனாக இருந்த எனது கதைகள் நிலம்போல நீளும். அந்தவகையில், ‘கிழக்கு’ பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கும் ‘கலாதீபம் லொட்ஜ்’ நாவல் வேறொரு ஈழத்தமிழ் வாழ்வை உலகின் கண்களுக்கு முன் நிறுத்துகிறது. ஆனாலும், உலகின் கண்களில் எனக்கு நம்பிக்கையில்லை. பாலச்சந்திரனின் புகைப்படத்தையும் இசைப்பிரியாவின் அழுகுரலையும் நான் கூறும் உலகமே கடந்துபோனது.

 படங்கள்: ப.சரவணகுமார்