Published:Updated:

சித்திரங்கள்! - சிறுகதை

கார்ல் மாக்ஸ் - ஓவியங்கள்: செந்தில்

பிரீமியம் ஸ்டோரி

ல்ல... வேணாம்... அந்தப் போட்டோவ அவன்கிட்ட காட்டாதீங்க...”

அவளது குரலில் தழுதழுப்பு கூடியிருந்தது. அதேசமயம் அதில் ஆத்திரத்தின் கமறலும் இருந்தது. அவள் உணவு மேசையில் அமர்ந்து இரண்டாவது வாய் உணவை எடுத்து வைக்கும் எத்தனத்தில் இருந்தபோதுதான், அவன் படுக்கையறையிலிருந்து வெளியில் அந்தப் புகைப்படத்தை மகனிடம் காட்டப்போகிறேன் என்று சொன்னான். 

சித்திரங்கள்! - சிறுகதை

“அவனுக்கும் எனக்குமான பந்தத்தை நீ இல்லாம ஆக்கிட்ட... நான் இதை இப்படியே விடப்போறதில்ல... நீ ஒரு தே***ன்னு அவனுக்குத் தெரியணும்...” என்று கத்தினான். அவர்கள் இருவருக்கும் முதுகு காண்பித்தபடி அதுவரை தொலைக்காட்சியில் லயித்திருந்த அஸ்வின் திரும்பி இருவரையும் பார்த்தான். ஒரு மைக்ரோ விநாடிக்குக் குறைவான நேரமே அவன் கண்கள் அவன் அப்பாவை நோக்கித் திரும்பியது. மீண்டும் அது அவன் அம்மாவின்மேல் நிலைத்தது. ஒரு வார்த்தையும் பேசாமல் மீண்டும் தொலைக்காட்சியைப் பார்க்கத் தொடங்கினான். அந்தக் கார்ட்டூன் சித்திரம் அவனுடைய விழிகளின் வேகத்துக்குத் தொடர்பில்லாமல் பறந்துகொண்டிருந்தது.

பெரிய குஷன் நாற்காலியின் மத்தியில், குளிரில் நடுங்குபவனைப்போலக் கால்களை மேலே வைத்துக் குறுக்கிக்கொண்டு முட்டிகளுக்கு நடுவே முகத்தைப் புதைத்துக்கொண்டு, கதவிடுக்கின் வழியாகப் பார்ப்பவனைப்போன்ற தோரணையில் அவன் அந்த  ஒளிக்காட்சியில் அமிழ்ந்திருந்தான். உட்கார்ந்திருக்கிறானா, நின்றுகொண்டி ருக்கிறானா, படுத்திருக்கிறானா என்ற முடிவுக்கு வரமுடியாத அளவில், அந்த இருக்கையில் தன்னை வைத்திருக்கும் அவனது தொனியை ரசித்தபடி அவள் உணவுத் தட்டுடன் வந்து மேசையில் அமர்ந்த அடுத்த இரண்டு நிமிடங்களில்தான் சுந்தர் வெளிப்பட்டு அந்தப் புகைப்படத்தை அவளிடம் காட்டுகிறான்.

அந்தப் புகைப்படத்தை திவ்யாவின் கைப்பையிலிருந்து சுந்தர் கண்டெடுத்து நான்கு வருடங்கள் இருக்கும். அன்று நடந்த ஒவ்வொன்றும் திவ்யாவின் மனதில் சித்திரத்தைப்போல அணு அணுவாகப் பதிந்திருக்கிறது.

அப்போது திவ்யா ரியாஸுடன் காதலில் இருந்தாள். அஸ்வினுக்கு அப்போது நான்கு வயது. ஒருமுறை அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாவின் பொருட்டு மேகமலைக்குப் போனபோது ரியாஸுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அது. அவன் அவளது இடுப்பில் தனது வலது கையை வைத்து சால்ஸா நடனம் ஆடுவதைப்போன்ற தொனியில் தனது தோளை ஒட்டி அவளைப் பிடித்திருக்கும் புகைப்படம். பின்புலத்தில் சமவெளியும் மலையும் பூக்களுமாக ரம்மியமானதொரு புகைப்படம் அது. அவளது வாழ்க்கையில் அவள் எடுத்துக்கொண்ட மிகச் சொற்பமான புகைப்படங்களில் அதுவும் ஒன்று. யாராக இருந்தாலும், ரியாஸுக்கும் திவ்யாவுக்கும் இடையில் இருக்கும் காதல் இருவர் கண்ணிலும் ஒளிர்ந்துகொண்டிருப்பதை அந்தப் புகைப்படத்தில் கண்டுகொள்ளமுடியும். அது அவ்வளவு அப்பட்டமாக வெளியே கசிந்துகொண்டிருந்தது.

திவ்யா அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போதெல்லாம், மையலுடன் கூடிய நீண்ட கலவிக்குப் பின்னான ஒரு புகைப்படம் அதன் மேனியெங்கும் பனியைப் பூசிக்கொள்கிறது என்று நினைப்பாள். ஆனால், அது சுந் தரின் கைக்குக் கிடைத்தவுடன் அந்தப் பனிப்பாறையின் உடைந்த சில்லுகளாகக் கடுமை கொண்டன. திவ்யாவின் வாழ்வில் மிகப்பெரிய   கீறலை  அது   கொண்டுவந்துவிட்டது.

சுந்தர் அதை அவளது கைப்பையிலிருந்து எதேச்சையாகக் கண்டுபிடித்த அந்நாளில், “அது வெறும் புகைப்படம் மட்டுமே” என்று கிறீச்சிட்டது மட்டுமே திவ்யாவின் எதிர்வினையாக இருந்தது. அன்று, இருண்டுபோன முகத்துடன், ஓடாத தொலைக்காட்சியின் முன்னால், ஒரு கையில் ரிமோட், இன்னொரு கையில் புகைப்படத்தை வைத்துக்கொண்டு அதை வெறித்தபடி அவன் அமர்ந்திருந்தபோது, அந்தப் புகைப்படத்தைக் கைப்பையில் வைத்துக்கொண்டிருந்த தனது அறிவீனத்தை நொந்தபடி அவள் சமைந்து போயிருந்தாள்.

அவர்களுடன் மேகமலை வந்திருந்த இன்னொரு அலுவலக நண்பனின் கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படம். அவன்தான் மற்ற படங்களுடன் சேர்த்து அந்தப் புகைப்படத்தையும் அன்றே பிரின்ட் போட்டுக்கொண்டு வந்து இருவரிடமும் கொடுத்தான். அந்த வனாந்தரத்தில், பிரின்ட் போடும் லேபை எங்ஙனம் கண்டடைந்தான் என்று இருவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அவனிடம் கேட்கவும் செய்தார்கள்... ஆனால், அவனோ அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல், “நீங்கள் இருவரும் இந்தப் புகைப்படத்தில் அவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்...” என்று இந்தியில் சொல்லிவிட்டு ரியாஸின் புட்டத்தில் தட்டினான். You dirty seducer... என்று ரியாஸின் காதில் கிசுகிசுத்துவிட்டு நகர்ந்தான்.

இருவரும் சேர்ந்து அந்தப் புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தார்கள். ரியாஸ் அனிச்சையாக அதைக் கிழிக்க முற்படுகையில், திவ்யாதான் தடுத்து அதை வாங்கி, தனது கைப்பையில் வைத்துக்கொண்டாள். “ஏன்...” என்று குழப்பமாகப் பார்த்தவனிடம், “இங்கிருந்து கிளம்புவதற்குள் கிழித்துப் போட்டுவிடுகிறேன்...” என்று உறுதியளித்தாள். அதில் ஒட்டிக்கொண்டிருந்த காதலில் கிறங்கிப்போய்த்தான் அவனும் சரி என்று சொல்லியிருக்க வேண்டும். அங்குதான் தவறு நிகழ்ந்துவிட்டது. திவ்யாவால் அந்தப் புகைப்படத்தைக் கிழித்தெறிய முடியவில்லை. கணினியில் இருக்கும் புகைப்படத்தை அழிப்பதற்கும் ஒரு புகைப்படத்தைக் கிழிப்பதற்கும் இவ்வளவு வேறுபாடு இருக்குமா என்பது திவ்யாவுக்குத் திகைப்பாக இருந்தது. 

சித்திரங்கள்! - சிறுகதை

இத்தனைக்கும் கைப்பையின் உள்ளே இருக்கும் இன்னொரு மடிப்பில்தான் அதை வைத்திருந்தாள். அதைக் கூடவே வைத்துக்கொண்டு அலைவதிலும் ஒருவித த்ரில் இருக்கவே செய்தது. சுந்தர் அவளது பையைத் திறந்து ஆராய்பவனும் அல்ல. வருமானவரி ரிட்டனுக்காக அவளது PAN அட்டையைக் கேட்டபோது சமையலறையில் இருந்த அவள்தான் “ஹேண்டு பேக்ல இருக்கு எடுத்துக்கங்க...” என்று சொன்னாள். அவன் சரி என்று சொல்லிவிட்டு உள்ளே போகும்போது, புகைப்படத்தின் நினைவு வந்தவளாக, தெறித்து ஓடியவள் அவன் புகைப்படத்துடன் நிற்பதைக் கண்டாள். அவனிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், திரும்பவும் சமையலறைக்கு வந்து தண்ணீர்க் குழாயைத் திறந்து கையை நனைத்தபடி நின்றுகொண்டிருந்தாள். உடல் சன்னமாக நடுங்கிக்கொண்டிருந்தது. வார்த்தைகளைக் கூட்டிக் கூட்டிச் சேர்த்துக்கொண்டிருந்தாள். அந்தியில் விளக்கைச் சுற்றிப் பூச்சிகள் பறப்பதைப்போல வார்த்தைகள் அவளைச் சுற்றி மிதந்தபடியிருந்தன.

அவன் சமையலறையை நோக்கி வரும் காலடி ஓசை கேட்டது.

“என்ன இது..?”

“போட்டோ...”

“போட்டோன்னா...?”

“அது வெறும் போட்டோ மட்டும்தான்.”

அந்தப் பதில் அவளுக்குப் பெரும் அபத்தமாக இருந்தது. அவன் கேட்காத ஒன்றை ஓடிச்சென்று மறைப்பதைப் போன்ற அதன் தொனிமீது அவளுக்கே அதிருப்தியாக இருந்தது. அவனது முகத்தில் தோன்றுவது என்ன மாதிரியான உணர்வு என்று அவளுக்குப் புரியவில்லை. ஆனால், மிகவும் விசித்திரமாக, அந்தக் கணம் அவன் வந்து தன்னைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாள். அல்லது அவன் இன்னொரு அடி முன்வைத்து, கொஞ்சம் நிதானமாக அவளுடைய கண்களைப் பார்த்தால்கூடப் போதும், ஓடிச்சென்று அவனிடம் புதைந்துகொள்ள முடியும் என்று விரும்பினாள்.

இந்தத் தடுமாற்றம் சில விநாடிகள் அவளிடம் நீடிக்கும்போதே, அவன் அந்தப் புகைப்படத்தைத் தனது காற்சட்டைப் பைக்குள் கவனமாகத் திணித்தான். அவளது முகத்திலிருந்து தனது பார்வையை விலக்கிக்கொண்டு, கூடத்திலிருந்த சோஃபாவில் போய்ப் பொத்தென்று அமர்ந்தான். அவள், துளிக்கும் கண்ணீரை அடக்கிக்கொண்டு, அடுப்பின் ஜுவாலையைக் கூட்டினாள். நெருப்பின் வெம்மை, குழைந்த வயிற்றில் அலையாக அடித்தது.

அந்தப் புகைப்படத்தை அவன் அவ்வளவு லாகவமாகப் பைக்குள் திணித்துக்கொண்டிருக்கக் கூடாது என்று மனது அரற்றியது. அது அவளைக் கூசச் செய்தது. முதல் முறையாகத் தனது அந்தரங்கமானதொரு இடத்திலிருந்து அவன் உதிர்ந்ததை திவ்யா உணர்ந்தாள். அதே சமயம் அவனிடம்  எதையும் கோரும் தகுதியை, அதைக் கரிசனமாக அவன் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் உரிமையைத் தாம் இழந்துவிட்டோம் என்பதை அவள் உடனே புரிந்துகொள்ளவும் செய்தாள்.

“நான் ஏன் இவ்வளவு தத்தளிக்கிறேன்...” என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டாள். சுந்தருடன் இது குறித்து இனி எதுவும் பேசமுடியாது என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

“முன்பு மட்டும் பேசியிருக்க முடியுமா என்ன...?”

“முடியும்...!”

“அதன் அப்பட்டமான தன்மையுடன் இல்லாவிட்டாலும், அவன் ஒரு ஸ்நேகிதன் என்ற அளவிலாவது ரியாஸைக் குறித்து சுந்தரிடம் சொல்லியிருக்கலாம்.”

அதேசமயம், தன்னால் பொய் சொல்ல முடியாது என்றும் நினைத்துக்கொண்டாள். உண்மையை மறைப்பதற்கும் பொய் சொல்வதற்கும் மெல்லிய வேறுபாடு இருக்கிறது. ஒரு புகைப்படத்தைக் கணினியில் அழிப்பதற்கும் நிஜத்தில் கிழித்தெறிவதற்கும் இருப்பதைப்போல.

ஆம், அது வெறும் புகைப்படம் மாத்திரம் அல்ல, நாங்கள் இருவரும் அந்தச் சமயத்தில் தீவிரக் காதலில் இருந்தோம், அதன் பின்னான அந்தப் புகைப்படத்தில் பதிவாகியிருப்பது, அந்த மையலின் சாயலே என்பதைச் சொன்னால் சுந்தரால் தாங்கிக்கொள்ள முடியுமா என்று யோசித்துக்கொண்டிருந்தாள். அப்படி வெளிப்படையாகச் சொல்வது வன்முறை என்று அவளுக்குத் தோன்றியது. மிக எளிதாக “ஆம் எங்களுக்குள் வெறும் ஸ்நேகம் என்பதைத் தாண்டிய ஒரு உறவு இருந்தது” என்று அவனிடம் சொல்லிவிட முடியும் என்று நினைத்தாள்.

இனி எதற்கும் வாய்ப்பில்லை என்றாகிவிட்டது. அடுத்து என்ன என்று அவளால்  ஒரு தீர்மானத்துக்கு  வரமுடியவில்லை. ஒன்றுமட்டும் புரிந்தது.“அவன் தன்னை இன்னும் மூர்க்கமாக வெளிப்படுத்தி க்கொள்ளும் வரை காத்திருக்க வேண்டும் என்பதே அது” என்று யோசித்தாள். மின்னலின் கணமேதான் இந்த நினைப்பு அவளுக்கு வந்தது. தன்னையே மிகவும் ஆச்சர்யமாக அவள் பார்த்துக்கொண்டாள். எவ்வளவு விரைவாகத் தான் இந்த விவகாரத்தை `கையாளத் தொடங்குகிறோம்’ என்பதை நினைக்க திவ்யாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஆனால், மனதின் இன்னொரு மூலையில் “வேறு என்ன வழி இருக்கிறது உனக்கு, வேறு என்ன செய்யமுடியும் சொல்...” என்று ஒரு குரல் கேட்டபடியே இருந்தது. இன்னொரு குரல், நீ செய்திருப்பது பிறழ்வு இல்லையா... நீ உடைத்திருப்பது ஓர் இதயத்தை அல்லவா... என்று தணிந்த குரலில் முனகிக்கொண்டே இருந்தது. இரண்டு ஓயாத இரைச்சல்களுக்கு மத்தியில் அதே நேரம் எப்போதும் விழுந்துவிடும் சாத்தியம் உள்ள விளிம்பில் நின்றுகொண்டிருப்பவளைப் போல அவளால் வெகு நேரம் அங்கு இருக்கமுடியவில்லை.

சமையலறையை விட்டு வெளியேறி அவனிடம் சென்று பேசலாம் என்று நினைத்தாள். அடுப்பை அணைத்துவிட்டு அவள் வெளியே வந்து கூடத்தை எட்டிப்பார்த்தாள். மிகச்சரியாக அப்போது அவன் மீண்டும் அந்தப் புகைப்படத்தை எடுத்து, “அது வெறும் புகைப்படம் மட்டும்தானா...” என்பதை உறுதி செய்துகொள்பவனைப்போல அதை ஊடுருவிப் பார்த்தான்.

அவள் சற்றுமுன்பு உணர்ந்த நடுக்கத்துடன்கூடிய கூச்சம் தனது உடலை விட்டு நழுவி வெளியேறுவதை உணர்ந்தாள். ரௌத்திரம் மண்டியது. கொல்லைப்புறக் கதவைத் திறந்துகொண்டு படிகளில் இறங்கி, தண்டுகள் பெருத்துத் தென்னைக்கு நிகராக வளர்ந்து வானத்தை முட்டிக்கொண்டு நிற்கும் வாழையின்  அடியில் போய் நின்றாள். ஈரமும் பிசுபிசுப்புமான அந்த இடத்தில் எவ்வளவு நேரம் அப்படி நின்றோம் என்று தெரியாமல் நின்றுவிட்டு, அவள் உள்ளே வந்தபோது, சுந்தர் வீட்டை விட்டு வெளியேறியிருந்தான். வீடு கனத்த மௌனத்தில் இருந்தது. அறையினுள் எட்டிப் பார்த்தாள். அஸ்வின் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தான். அவனை எழுப்பி முகம் கழுவ வைத்தாள். அவன் வந்து கூடத்தில் டிவி முன்னால் அமரவும், அவனுக்கு ஒரு தட்டில் இரண்டு இட்லிகளை வைத்து அவனுக்குப் பிடித்த தக்காளிச் சட்னியை இட்லியில் படாமல் தட்டின் ஓரத்தில் வைத்து, அவன் கையில் கொடுத்தாள்.

அவளுக்கும் பசித்தது. சாப்பிடலாமா என்று நினைத்தாள். சுந்தர் எங்கு போயிருப்பான் என்ற அலைக்கழிப்பு உணவு பற்றிய சிந்தனையைத் துண்டித்தது. அலைபேசியில் அழைத்துப் பார்க்கலாம் என்று தனது அலைபேசியை எடுக்கப் படுக்கையறைக்குள் நுழைந்தாள். அங்கு அவளது அலைபேசிக்கு அருகிலேயே அவனுடையதும் கிடந்தது.

சமையலறைக்குப் போய் நான்கு இட்லிகளை எடுத்துத் தட்டில் வைத்துக்கொண்டு மீண்டும் கூடத்திற்கு வந்தாள். ஒரு துண்டை எடுத்து வாயில் வைத்தபோது கண்ணீர் முட்டியது. மூக்கில் வடியத் தொடங்கும் நீரை சத்தத்துடன் துடைத்துக்கொண்டபோது, அஸ்வின் திரும்பி, என்ன என்பது போலப் பார்த்தான். அவசரமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள். தட்டை டீப்பாயின்மேல் வைத்துவிட்டு மீண்டும் சமையலறையின் உள்ளேபோய்க் கையைக் கழுவிக்கொண்டாள். குளியலறைக்குப்போய் வாஷ் பேசினின்மேலே இருந்த கண்ணாடியில் முகத்தை உற்றுப் பார்த்தாள். எந்த வித்தியாசமும் இல்லை. சற்றுமுன் துளித்த கண்ணீரின் சுவடும் இல்லாமல் விழிகள் பளீரென்று இருந்தன.

முகத்தை அலம்பிக்கொண்டாள். கண்ணாடியில் ஒட்டியிருந்த மஞ்சள் நிற ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு மீண்டும் ஹாலுக்கு வந்தாள். அஸ்வினிடம், “எதாவது வேணும்னா அம்மாவை எழுப்பு, வெளியில் எங்கும் போகக் கூடாது...” என்று சொல்லிவிட்டு மீண்டும் படுக்கையறைக்குள் வந்து படுத்தபோது அடுத்த பத்தாவது நிமிடத்தில் தூங்கிப்போனாள்.

அஸ்வின் வந்து அவளை எழுப்பியபோது உச்சியாகியிருந்தது. அவனது காற்சட்டையைக் கழற்றி விட்டபோது, அவன் பாத்ரூமை நோக்கி ஓடினான். கொஞ்ச நேரத்தில் அவன் மீண்டும் கூடத்திற்குப் போனான். அவள் மதிய உணவைச் சமைக்கத் தொடங்கினாள்.

இரவு வரை சுந்தர் வீட்டிற்கு வரவில்லை. திவ்யாவும் வேறு யாரையும் அழைத்து விசாரிக்க விரும்பவில்லை. காத்திருக்கலாம் என்றே நினைத்தாள். அஸ்வின் தூங்கியபிறகு விளக்கை அணைத்துவிட்டு, கதவைக் கொஞ்சமாகத் திறந்துவைத்துவிட்டு, வீட்டின் வெளியே வந்து உட்கார்ந்து கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தாள். அதீத வெறுமையாக இருந்தது. எழுந்து உள்ளே போய் அஸ்வினை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு அவனுடன் படுத்தாள். அவனுடைய மூச்சுக் காற்று கோழி இறகால் தொடுவது போலக் கழுத்தில் மோதி விலகியது. எதனுடனும் பொருத்த முடியாத மென்மையுடன் அது இருந்தது. மனதில் எந்தத் துயரமோ, கவலையோ இல்லாமல் நிர்மலமாக இருந்தது. ஆனால் கண்ணீர் வடிந்தபடியே இருந்தது. அதுவொரு அனிச்சையான செயல்போல, மூச்சு விடுவதைப்போல எந்தக் காரணமும் அற்றதாக இருந்தது.

சுந்தர் உள்ளே வந்து படுக்கையறையின் விளக்கைப் போட்டபோது திவ்யாவுக்குப் பளிச்சென்று விழிப்பு வந்தது. அதுவரை இல்லாத பயம் சட்டென்று வந்து நெஞ்சை அடைத்தது. கண்களைச் சுருக்கி சுவர்க்கடிகாரத்தில் மணி என்ன ஆகிறது என்று பார்க்க முற்பட்டாள். அடர்ந்த இருட்டிலிருந்து கூசும் வெளிச்சத்திற்குப் பழக, கண்களுக்கு நேரம் எடுத்தது. கடிகாரம் இருப்பதுகூடத் தெரியவில்லை. கண்களை அழுந்தத் துடைத்துக்கொண்டாள். காய்ந்த கண்ணீர் இமைகளை மொறு மொறுவென ஆக்கிவிட்டிருந்தது. தோராயமாக ஒரு மணிக்குமேல் இருக்கும் என்பதுபோலப் பட்டது. அவள் எழலாமா என்று யோசிக்கும்போது, “பட்” என்ற சத்தத்துடன் விளக்கு அணைந்தது. கட்டிலின் இன்னொரு மூலையில் அவன் படுப்பதன் ஒலி எழுந்தது.

அமைதியான இருட்டில் மதுவின் வாசம் மெல்லிய நெடியுடன் கசிந்தது. அவளுக்குப் பிடித்த வாசம் அது. “சாப்பிடலையா...” என்று கேட்பதற்காகத் தொண்டையைச் சரிசெய்ய முயன்றாள். வார்த்தைகள் வரவில்லை. கேட்க வேண்டாம் என்றும் தோன்றியது. போர்வையை இழுத்து முகத்தை மூடிக்கொண்டு ஒருக்களித்து சுவரின் பக்கமாகத் திரும்பிக்கொண்டாள். அஸ்வின் தூக்கத்திலேயே உருண்டு வந்து அவளது கழுத்தில் கையைப்போட்டு இறுக்கிக்கொள்வதைச் சன்னமான அசைவுடன் உணர்ந்துகொள்ள முடிந்தது. எழுந்து போய் வெளியே கூடத்தில் படுத்துக்கொள்ள வேண்டும் என்கிற உந்துதலை நிராகரித்துவிட்டுத் தூங்க முயன்றாள்.

காலையில் எழுந்ததும் வழக்கம்போல, வேலைகளைச் செய்துவிட்டு அலுவலகத்திற்குத் தயாரானாள். அஸ்வினைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ வந்தது. அங்கிருந்து கிரீச்சிற்கு அழைத்துச் செல்பவரும் அந்த ஓட்டுநரே என்பதால், “பார்த்து... பத்திரம்...!” என்ற வழக்கமான வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அவனுக்கான உணவு மற்றும் இரண்டு நோட்டுகள் அடங்கிய பையை அவரிடம் கொடுத்தாள். அவர் அந்தக் காலையிலேயே குளித்து நெற்றியில் பெரிய பட்டையுடன் இருந்தார். பையை வாங்கும்போது விபூதியின் வாசம் நாசியை வருடியது. சுகந்தமாக இருந்தது. அவரைப் பார்த்து சிரித்தாள். பதிலுக்கு அவரும் சங்கோஜமாக சிரித்துவிட்டு, அஸ்வினின் கையைப் பற்றிக்கொண்டு ஆட்டோவை நோக்கி நடந்தார். 

சித்திரங்கள்! - சிறுகதை

சுந்தர் எழுந்து வந்து ஹாலில் உட்கார்ந்திருந்தான். அலுவலகத்துக்குக் கிளம்பும் அவசரம் எதுவும் இல்லாததுபோல இருந்தது அவனது உடல்மொழி. திவ்யாவும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அவள் அலுவலகத்துக்குத் தயாராகிவிட்டாள். வெளிக்கதவைத் திறந்தபடியே, “நான் கிளம்புறேன்...” என்று இவன் இருந்த பக்கமாகத் திரும்பிச் சொன்னாள்.

“நீ இனிமே வேலைக்குப் போக வேண்டாம்...”

அவள் குழப்பத்துடன் திரும்பிப் பார்க்கும்போது, அவன் எழுந்து படுக்கையறைக்குள் நுழைந்தான். திவ்யா ஒரு கணம் தயங்கி நின்றுவிட்டு, அவளும் படுக்கையறையை நோக்கி நடந்தபோது அவன் பாத்ரூமிற்குள் போய்விட்டிருப்பதைக் கண்டாள். கதவு மூடிக்கொள்ளும் ஒலி மாத்திரம் கேட்டது.

திவ்யா அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக ஹாலில் உட்கார்ந்திருந்தாள். இதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் என்ன நினைக்கிறான் என்றும் புரியவில்லை. அவன் வெளியே வந்தபோது ஒருமணி நேரத்திற்குமேல் ஆகியிருந்தது. அலைபேசியைப் பார்த்தாள். வழக்கமான நான்கைந்து குறுஞ்செய்திகளுக்கு அடுத்து, `sorry..!’ என்ற ரியாஸின் குறுஞ்செய்தியும் இருந்தது. திரும்பி வந்து சோஃபாவில் உட்கார்ந்தவுடன், அந்தக் குறுஞ்செய்தியைத் திரும்பத் திறந்து படித்தாள். அந்த ஒற்றை வார்த்தை வெளியிலிருந்து பார்ப்பதற்கே தெரிகிறதுதான். இருந்தாலும் உள்ளேபோய்ப் படித்தாள். பிறகு, நீண்ட நேரம் அதை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

சுந்தர் வெளியில் வரும்போது, பேன்ட் சட்டை அணிந்து முழுதாகக் கிளம்பியிருந்தான்.

“இப்படி ஒரு வார்த்தையில போக வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்...”

“போக வேண்டாம்னு அர்த்தம்...”

“இதுல நான் டிஸைட் பண்ண ஒண்ணும் இல்லையா...”

“இல்ல...”

“அப்டின்னா...”

“நீ ஒரு மயிரும் புடுங்க வேணாம்... மூடிக்கிட்டு வீட்ல இருடி தே***ன்னு அர்த்தம்...”

“....... ....... .....”

கதவு டமார் என்ற சத்தத்துடன் சுவரில் மோதி மீள்வதன் ஒலியும், பைக் நகர்வதன் ஒலியும், வெளிப்புறக் கதவு காம்பவுண்டில் வேகமாக மோதி அதிர்வதன் சத்தமும், ஒன்றன் பின் ஒன்றாகக் கேட்டு அடங்கியது.

எந்த யோசனையும் அற்றதொரு பாழ் வெளியில் இருத்தி வைக்கப்பட்டதுபோல திவ்யா அசைவற்று அமர்ந்திருந்தாள். அவயவங்கள் செயலிழந்ததுபோல வெறுமை அடர்ந்தது. சமையலறையின் வாஷ் பேசினில், தண்ணீர்க் குழாயிலிருந்து சொட்டுச் சொட்டாக நீர்த்துளி பாத்திரத்தின்மீது பட்டுத் தெறிக்கும் ஓசை தெளிவாகக் கேட்டது. கடிகாரமுள் நகரும்  ‘க்ரக்... க்ரக்...’ எனும் உராய்வின் ஒலிகூடத் துல்லியமாகக் கேட்கும் அளவுக்கு வீடு அமைதியில் உறைந்திருந்தது.

ஒன்றுமட்டும் அவளுக்குப் புரிந்தது. ஓயாத சமரொன்றின் முனையைத் தான் பற்றிவிட்டோம் என்பதே அது. தொலைக்காட்சியைப் போடலாமா என்று நினைத்தாள். அப்படி நினைத்ததைவிட வேகமாக “வேண்டாம்...!” என்று தோன்றியது. உடைகளைக் களைந்து வேறு உடைக்கு மாறலாமா என்ற எண்ணத்தையும் நிராகரித்தாள். தோல்வியை ஒத்துக்கொண்டதாகிவிடும் என்பதுபோன்ற ஒரு பொருத்தமற்ற சிந்தனை அலைந்து விலகியது.

ரியாஸிடமிருந்து இன்னொரு குறுஞ்செய்தி வந்தது. “என்னாச்சு...?” என்ற ஒற்றை வார்த்தையும், ஒரு ஆட்டினுமாக அது இருந்தது. திவ்யா எந்தப் பதிலும் அனுப்பவில்லை. அதை வெறித்துப் பார்த்தபடியே இருந்தாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் அவனிடமிருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை எடுக்காமல், அது மணியடித்து ஓயும் வரை பார்த்துக்கொண்டே இருந்தாள். அவளுக்கு ஆச்சர்யமாகவும் அதே சமயம் அச்சமாகவும் இருந்தது. அவன் இப்படியெல்லாம் அலைபேசியில் அழைப்பவனே அல்ல, பிறகு ஏன்...?

அடுத்த அரை மணி நேரத்தில் அவனிடமிருந்து இன்னொரு குறுஞ்செய்தி வந்தது. 

“What happened...? Sundar is in our office and meeting HR… now they are asking me to come…”

படித்து முடித்தவுடன் திவ்யாவுக்குக் குப்பென்று வியர்த்தது. அலைபேசி கிட்டத்தட்ட கையிலிருந்து நழுவியது. இரண்டு மூன்று நிமிடங்கள் என்ன நடக்கிறது என்று நிதானத்துக்கு வந்து, பிறகு ரியாஸின் அலைபேசிக்கு அழைத்தாள். அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

மூன்று மணிக்கு அஸ்வின் பள்ளியிலிருந்து வரும்வரையில், வீட்டில் இங்கும் அங்கும் நடந்துகொண்டே இருந்தாள். எதிலும் மனது ஒட்டவே இல்லை. அவனை இறக்கி விடும் ஆட்டோ சத்தம் கேட்டவுடன், வழக்கத்துக்கு மாறாக வாயில் கதவுக்கு விரைவாக நடந்து சென்று அவனது கையைப் பற்றி உள்ளே அழைத்து வந்தாள். அவனிடம் ஏதேதோ கேட்டுக்கொண்டே இருந்தாள். அவனுக்குச் சாப்பாடு கொடுத்து, குளிப்பாட்டி, தொலைக்காட்சியில் ரைம்ஸ் கேட்க வைத்து அவனைத் தூங்க வைத்தது வரையில் அவனை விட்டு அவள் அகலவே இல்லை. ஒரு துணையைப்போல, பற்றிக்கொள்ளக் கிடைத்த ஒரே வாய்ப்பைப்போல அவனை ஒட்டிக்கொண்டே நின்றாள். எப்போது என்று தெரியாத உறக்கத்தில் ஆழ்ந்தபோது அந்தக் குறுஞ்செய்தி வந்தது.

கண்ணைக் கசக்கிக்கொண்டு அதைத் திறந்து பார்த்தாள். அது சுந்தரிடமிருந்து வந்திருந்தது. அதுவொரு புகைப்படம். அப்போதுதான் எடுக்கப்பட்ட புகைப்படம். சுந்தரும் ரியாஸும் அருகருகே தோளை உரசியபடி நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள். மேசையில் காலியான பியர் பாட்டில்கள் நிறைந்திருந்தன. கையில் ஆளுக்கொரு பாட்டிலைப் பிடித்திருந்தார்கள். இருவரது முகத்திலும் போதையும் சிரிப்பும் உறைந்திருந்தது. கேமராவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களது முதுகுக்குப் பின்னால், அந்த பாரின் லோகோவும், பாட்டில்கள் அடுக்கி வைப்பட்டிருக்கும் மேசையும் ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. அது திவ்யா ரியாஸுடன் முதல்முறை சென்ற மதுவிடுதி என்பதை அவளால் உடனே புரிந்துகொள்ள முடிந்தது.

அவள் அலைபேசியைக் கட்டிலிலேயே போட்டுவிட்டு, வெளியே போர்ட்டிகோவைக் கடந்து சென்று தெருக் கதவின் பூட்டைத் திறந்துவிட்டு கொண்டியை மட்டும் போட்டு வைத்தாள். உள்ளே வந்து நிலைக்கதவையும் வெறுமனே சாத்தி வைத்துவிட்டு படுக்கையறையின் உள்ளே வந்து கதவைத் தாழிட்டுக்கொண்டு அஸ்வினின் அருகில் படுத்தாள். அவன் இந்த ஒலிகளால் தொந்தரவு செய்யப்பட்டுப் படுக்கையில் புரண்டான்.

சித்திரங்கள்! - சிறுகதை

அஸ்வின்... டேய், அஸ்வின் என்று சன்னமாக அவனை எழுப்பினாள்.

``என்னம்மா...?”

அவன் விழித்துக்கொண்டதும், இவ்வளவு தெளிவாக என்ன என்று கேட்டதும் திவ்யாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

``உங்கப்பா என்ன பயங்கரமா அடிச்சிட்டாருடா... இங்க பாரு அம்மாவுக்கு நிறைய இடத்துல வீங்கியிருக்கு...” என்று அவனது பிஞ்சுக் கைகளை எடுத்து தனது உடலெங்கும் ஒற்றி ஒற்றிக் காண்பித்தாள். அவன் கண்களில் கண்ணீர் துளிக்கும் வரை தான் எங்ஙனம் வலி தாங்கமுடியாமல் அழுதேன் என்பதை அவனிடம் சொல்லிக்கொண்டே இருந்தாள். அவன் அச்சத்துடன் அவளை இறுக்கிக் கட்டிக்கொள்ளும் வரை அவளுக்குச் சொல்வதற்கு நிறைய இருந்தன.

சுந்தர் அதிகாலையில் வீட்டுக்கு வந்ததோ கதவைத் தட்டியதோ, பதற்றத்தில் இங்கும் அங்கும் அலைந்ததோ, பிறகு அவளது குரலைக் கேட்டதும் கதவில் ஓங்கிக் குத்திவிட்டுக் கூடத்தில் படுத்துக்கொண்டதோ அவளுக்குப் பொருட்டாகவே இல்லை. அஸ்வின், “கதவைத் தொறக்காதம்மா... அப்பா வந்தா அடிப்பாரு” என்று மழலையில் சொன்னது மட்டுமே அவளது நினைவில் நின்றது.

இதோ இந்த நான்கு வருடத்தில், வேலைக்குப் போகாத, உறவினர் வீடுகளுக்குப் போகாத, நண்பர்களின் வீடுகளுக்குப் போகாத இந்த ஆண்டுகளில், அவள் சுந்தரிடமிருந்தும் நீண்ட இடைவெளிக்குப் போயிருந்தாள். அதுவொரு பொருட்டே இல்லாத நிலைக்கு அவனும் நகர்ந்திருந்தான். ஆனால், எல்லாச் சிறிய வாய்ப்புகளிலும் அவளை அவமதிப்பதை அவன் தவற விடுவதே இல்லை. கலவியின்போது அவமதிப்பின் வன்முறை அதன் உச்சத்தை எட்டியது. அவள் ஒரு பொருள், பொருள் மட்டுமே என்பதை அவளுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பது மட்டுமே அவனது எத்தனமாக இருந்தது.

ஆனால், அவனால் அஸ்வினைத்தான் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவன் ஏன் தன்னிடமிருந்து இவ்வளவு விலகி விலகிப் போகிறான் என்று தவித்தான். திவ்யா கூடத்தில் இல்லாத நேரங்களில், சுந்தர் மட்டும் அங்கு இருக்கிறபோது, அஸ்வின் தன்னை ஒரு சிறிய தலையணை அளவுக்குச் சுருக்கிக்கொண்டு சோஃபாவில் உட்கார்ந்திருந்தான். அல்லது எழுந்துபோய் அவளது அருகில் நின்றுகொண்டான். சுந்தருக்கு அவனைக் கட்டிக்கொள்ள வேண்டும்போல இருந்தது. இந்தத் திருமண உறவைத் தக்கவைத்துக்கொள்ள அஸ்வின் மட்டும்தான் ஒரே காரணம் என்பதை எப்படி அவனுக்குப் புரியவைப்பது என்று குழம்பினான். தூக்கத்தில் இருக்கும் அவனைக் கட்டிக்கொண்டால்கூட விலகும் அவனது செயல் துயரத்தைக் கூட்டியது. அதை எவ்வாறு சரிசெய்வது என்றும் அவனுக்குத் தெரியவில்லை. அந்தக் கையாலாகாத ஆத்திரத்தின் உச்சியில்தான், அந்தப் போட்டோவுடன் வெளியே வந்து, “நீ ஒரு தே**** என்பதை அவனுக்குச் சொல்கிறேன்” என்று கத்தத் தொடங்கினான். எங்கோ ஓர் இடத்தில், தன்னிடம் அஸ்வின் நெருங்குவதற்கு திவ்யா உதவ வேண்டும் என்று விரும்பினான்.

திவ்யாவிடம் கத்தினானேயொழிய அவனால் அதைச் செய்யமுடியவில்லை. என்ன இருந்தாலும் அவன் குழந்தை என்று நினைத்தான். ஆத்திரத்துடன், சாப்பிடாமல் அலுவலகத்துக்குக் கிளம்பிப் போனான். அவன் போனதும், திவ்யா போய் அஸ்வினுடன் சோஃபாவில் அமர்ந்துகொண்டாள்.

“அப்பா கத்தவும் பயந்துட்டியா..?”

“இல்லையே...”

“ஏன்..?”

“அதான் நீ இருக்கியே... அப்புறம் என்ன..?

“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்... உனக்குத்தான் எட்டு வயசு ஆயிடுச்சில்ல... புரிஞ்சிப்ப...”

“என்னம்மா...?”

“அப்பா ஏன் தெரியுமா என்கிட்ட கோவப்பட்டுக்கிட்டே இருக்காரு..? அவருக்கு ஒரு கேர்ள்ஃபிரண்டு இருக்கா... அதான்...”

``அப்படியா..?” என்று அவன் கண்கள் மின்னச் சிரித்தான். ஆமாம், டீட்டைல் கொஞ்சங் கொஞ்சமா சொல்றேன்... திவ்யாவும் அவனைக் கட்டிக்கொண்டு சிரித்தாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு