Published:Updated:

கருத்துகள் நிறைய இருக்கின்றன... களப்போராளிகள்தாம் தேவை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கருத்துகள் நிறைய இருக்கின்றன... களப்போராளிகள்தாம் தேவை!
கருத்துகள் நிறைய இருக்கின்றன... களப்போராளிகள்தாம் தேவை!

கருத்துகள் நிறைய இருக்கின்றன... களப்போராளிகள்தாம் தேவை!

பிரீமியம் ஸ்டோரி

ழுதுகிற ஒவ்வொரு பாடலிலும் பரவலான கவனம் பெற்றுவருபவர் கு.உமாதேவி. பாடலாசிரியர், கவிஞர் என்கிற அடையாளங்கள் தாண்டி, சமூக மாற்றத்துக்கான களச்செயற்பாட்டாளராகவும் தொடர்ந்து இயங்கி வருபவர். ஒரு மாலை நேரத் தேநீருடன் அவரோடு உரையாடினேன்!

கருத்துகள் நிறைய இருக்கின்றன... களப்போராளிகள்தாம் தேவை!

‘`நவீன கவிஞர், பாடலாசிரியர்... இரண்டில் எந்த அடையாளம் உங்களுக்கு நெருக்கமானது?’’

‘`இந்த இரண்டுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதாக உணரவில்லை. எனது நவீனக் கவிதைகளில் எவ்வித மொழிநடையும் கருத்தும் கையாளப்பட்டதோ அதே அணுகுமுறையைத் தான் நான் பாடல் எழுதுவதற்கும் பயன்படுத்து கிறேன். நம் செவ்விலக்கியங்களுக்கும் நவீன இலக்கியங்களுக்கும் இடையிலான பாலமாகவே என் கவிதைகளையும் பாடல்களையும் படைக்க விரும்புகிறேன். அந்த முயற்சிகளின் விளைவாகத்தான் அழகிய தமிழ்ச்சொற்கள் எனது இலக்கிய அடையாளங்களாய் மாறுவதாகவும் பார்க்கிறேன்.”

‘`ஒரு கவிஞருக்கு இருக்கும் சுதந்திரம் ஒரு பாடலாசிரியருக்கு இருப்பதில்லை. அந்த எல்லையினால் உங்களது சுதந்திரம் பறிக்கப்படுவதாக நினைக்கிறீர்களா?’’


‘`உண்மையைச் சொன்னால் ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தை எந்தச்சூழலும் பறித்துவிட முடியாது. ஏதோவொரு சூழலில் தன்னுடைய சுதந்திரம் பறிக்கப்பட்டதென்று ஒருவர் சொல்வாரென்றால் அவரைப் படைப்பாளராகக் கருத முடியாது. காரணம், படைப்பு என்பது நேரடியான வெளிப்பாடுகளில் மட்டும் உருவாக்கப்படுவது கிடையாது. அதற்குப் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. அவற்றின் ஏதோவொரு வடிவத்தில்கூட நாம் உணர்த்த விரும்பியதை உணர்த்திவிட முடியும்.’’

‘`உங்கள் பாடல்களில் ‘தாபம்’ என்ற சொல் அதிகம் வருகிறதே?’’

‘`தாபப்பூ, தாபதநிலை, தாபங்கள். இதில் தாபதநிலை என்பதற்குத் துணையை இழந்த பெண்ணின் துறவுநிலை என்று பொருள். பாடல்களில் ஒரு சொல்லுக்கான உயிரும் பொருளும் அச்சொல்லைத் தாங்கிவரும் இசையில்தான் இருக்கிறது. இசையில் உருவான சொல்தான் ரசிகர்களைக் கவர்கிறது. அந்த அடிப்படையில்தான் `96’ திரைப்படத்தில் ‘தாபங்களே ரூபங்களாய்’ என்று எழுதினேன். இசைதான் தனக்குப் பிடித்த சொல்லைக் கேட்கிறது. பிடித்த உணவை அடிக்கடி கேட்கும் குழந்தைக்குத் தாய் அதே உணவை ஊட்டுவதைப்போன்று இசையாகிய குழந்தைக்குத் தமிழ்மொழி சொற்களை ஊட்டுகிறது.’’

``பாடல் எழுதுவதில் உங்களுக்கென்று வரையறைகள் வைத்திருக்கிறீர்களா?’’

‘`ஒரு பாடலாசிரியராகக் கதைகளைச் சார்ந்தே என் பாடல்கள் அமைவதால், எனக்கென்று ஒரு வரையறை தேவைப்படவில்லை. ஆனால் ஒரு மனிதருக்கும் இன்னொரு மனிதருக்கும் அல்லது பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான சமத்துவத்துக்கு எதிராக எழுதிவிடக்கூடாது என்ற எனது இயல்பே, எனது வரையறையாக இருக்கலாம்.’’

‘`சென்னைப் பின்புலம் சார்ந்தவர் நீங்கள். கானாப் பாடல்கள் எழுதும் எண்ணம் இருக்கிறதா, எழுதியதுண்டா?’’

கருத்துகள் நிறைய இருக்கின்றன... களப்போராளிகள்தாம் தேவை!

‘`சென்னை வாழ் மக்களுடைய மொழியில் எழுதப்படுகின்ற கானாப் பாடல்களை ஒரு செவ்வியல் இலக்கியங்களாகப் பார்க்கின்றேன். `வந்திருக்கிறேன்’ என்ற எட்டு எழுத்துகளால் ஆன ஒரு சொல் `வந்டேன்’ என்று நான்கு எழுத்துகளால் சுருங்கியும் அதே பொருளைத் தருகிறதென்றால் சென்னை மக்கள் தமிழ்மொழியில் எந்த அளவிற்குத் தோய்ந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அத்தகைய செவ்வியல் தமிழில் பாடல் எழுதும் வாய்ப்பை எனக்கான கூடுதல் பெருமையாகத்தான் பார்க்கின்றேன்.’’

‘`பௌத்தம் குறித்து நிறைய ஆய்வுகள் செய்தவர் நீங்கள், அதைப் பின்பற்றுபவராகவும் இருக்கிறீர்கள். பொதுவாக தலித்துகளைத் தாண்டி பௌத்தத்தைப் பெரிதாக வேறு யாரும் பின்பற்றுவதோ பேசுவதோ இல்லையே, ஏன்?’’

‘`தலித் அல்லாதவர்கள் பௌத்தத்தைப் பின்பற்றாததற்கான காரணங்களை நிகழ்கால அரசியலிலிருந்து புரிந்துகொள்ள முடியாது. தலித் அல்லாதவர்களும் வரலாற்றில் பூர்வ பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதற்கு இந்தியா முழுவதும் இன்றும் தோண்டி யெடுக்கப்படும் ஆயிரக்கணக்கான புத்தர் சிலைகளே சாட்சிகளாக இருக்கின்றன. தமிழ் இலக்கியத்தில் வாழ்கின்ற வரலாற்று மாந்தர்களான கனியன்பூங்குன்றனார், ஔவையார், இளம்போதியார், பக்குடுக்கை நன்கணியார், நக்கண்ணையார், மாதவி, மணிமேகலை, குண்டலகேசி, சீத்தலைச் சாத்தனார், வள்ளுவர், போதி தருமர், தர்மபாலர், புத்தமித்திரர் போன்றவர்கள் தலித் சமூகத்தினர் அல்லர். தமிழ்ச் சமூகத்தினர். இவர்களையெல்லாம் மொழி சார்ந்து தமிழர்களென்று அடையாளப் படுத்துபவர்கள், அவர்கள் சார்ந்த பௌத்தப் பண்பாட்டின் அடிப்படையில் அடையாளப்படுத்தாமல் இருப்பதை ஆராய்கின்ற போதே உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்துவிடும். நமக்கு அடையாளப்படுத்தப்பட்ட போதி தருமர் பௌத்தத் துறவியேயன்றி, தமிழ்த்துறவி அல்லர். கலைஞர் கருணாநிதி பூம்புகார், மந்திரிகுமாரி என்று தன் படைப்புகள் மூலம் பௌத்தத்தை மீட்டுருவாக்கம் செய்தார் என்பதும் இங்கு நினைவுகூர்ந்திடத்தக்கது.’’

``சாதி ஆணவக் கொலைகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கிற சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’


``சாதி ஆணவக் கொலைகளை தலித்துகளுக்கு எதிரான அரசியல் எதிர்வினையாக மட்டும் பார்க்க முடியாது. அது சமத்துவ உரிமைக்கு எதிரான ஒரு யுத்தம். இதை மீண்டும் பௌத்தத்தோடுதான் தொடர்புபடுத்த வேண்டியுள்ளது. சாதிக்கும் பௌத்தத்திற்கும் இடையே நடந்த மோதல்களே இந்தியாவின் வரலாறாக இருக்கிறது. சாதியின் அடிப்படையில் இன்று மோதிக்கொள்பவர்கள் எல்லாம் பூர்வீகத்தில் பௌத்தர்களாகவே இருந்திருக்கிறார்கள். அன்று இருந்த சாதி இன்றும் தொடர்கிறது. ஆனால், பௌத்தர்கள் தங்களின் அடையாளங்களை இழந்திருக்கிறார்கள். சாதியை நம்புகின்ற பண்பாடு உடையவர்களால்தான் உறவுகளையும் கடந்து ஆணவப் படுகொலைகளைச் செய்ய முடிகிறது. மதுவினை அருந்தக்கூடாது என்று சட்டத்தின் மூலமாக மக்களைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், சாதிமீதான நம்பிக்கையை சட்டத்தின் மூலம் மாற்ற முடியாது. ஒரு நம்பிக்கையை மாற்றுவதற்கு இன்னொரு நம்பிக்கையை உருவாக்க வேண்டும். சாதிமீதான நம்பிக்கையை மாற்றுவதற்கு சமத்துவம் மீதான நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.’’

உமாதேவி களப்போராளியாக இருக்க விரும்புகிறாரா அல்லது கருத்துகளை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கும் ஒருவராக இருக்கப்போகிறாரா?


என்னைப் பொறுத்தவரையில் சிறந்த கருத்துகளை நிறைவேற்றுவதற்குக் களப்பணியாற்றுபவர்கள்தாம் உண்மையான கருத்துரையாளர்கள். நாம் வாழ்வதற்கான கருத்துகள் இலக்கியங்களிலும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திலும் நிறைந்துவழிகின்றன. அதை நிறைவேற்றுவதற்குத்தான் ஆட்கள் தேவை. “இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்படாமல் போனால் ஜனநாயகம் என்பது சாணக்குவியல்மீது கட்டப்பட்ட மாளிகையாக இருக்கும்” என்கிறார் டாக்டர். அம்பேத்கர். நான் கருத்துகளை நிறைவேற்றக்கூடிய களப்போராளியாகவே இருக்க விரும்புகிறேன்!

ச.அழகுசுப்பையா - படங்கள்: கே.ராஜசேகரன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு