Published:Updated:

``மனிதன் வரலாற்றின் குழந்தை!" - சு.வெங்கடேசன் பரிந்துரைக்கும் வரலாற்றுப் புத்தகங்கள் #ChennaiBookFair2019

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``மனிதன் வரலாற்றின் குழந்தை!" - சு.வெங்கடேசன் பரிந்துரைக்கும் வரலாற்றுப் புத்தகங்கள் #ChennaiBookFair2019
``மனிதன் வரலாற்றின் குழந்தை!" - சு.வெங்கடேசன் பரிந்துரைக்கும் வரலாற்றுப் புத்தகங்கள் #ChennaiBookFair2019

'காவல் கோட்டம்' வழியாக பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர் சு.வெங்கடேசன் தற்போது 'வேள்பாரி'யாக நிற்கிறார். வரலாற்றை வாசிப்பதற்கான அவசியம் பற்றியும், வரலாறு சார்ந்து வாசிக்க வேண்டிய புனைவு பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“பிறர் எழுதியுள்ள புத்தகங்களைக் கொண்டு உங்களைத் திருத்திக் கொள்வதில் நேரத்தைச் செலவிடுங்கள்; பிறர் வருத்தி உழைத்ததைக் கொண்டு நீங்கள் எளிதில் பெறக்கூடிய பயன் இது!” -  சாக்ரடீஸ்

வரலாற்றின் குறுக்குவெட்டு தோற்றங்களை அபுனைவுகள் ஆவணப்படுத்தி இருக்கின்றன. வரலாறு அபுனைவுகளாக அன்றி, புனைவுகளின் வழியே கதைகளாகும்போது வாசகரை உணர்ச்சிகரமாக நெருங்குகிறது. சமூகத்தை வழிநடத்தவும், தவறுகளைச் சுட்டிக்காட்டவும், கற்றுக்கொள்ளவும் வரலாறுகளே பெரும் கருவி. அந்த வரலாறு இலக்கியத்தன்மை அடைகின்றபோது இன்னும் கவனம் பெறுகிறது. புனைவுகளின் வழியாக வரலாறுகள் மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது.

'காவல் கோட்டம்' வழியாகப் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர் சு. வெங்கடேசன். சாகித்ய அகாதமி விருதையும் அந்நாவலுக்காக பெற்றார். வேள்பாரி வழியாக தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். வரலாற்றை வாசிப்பதற்கான அவசியம் பற்றியும், வரலாறு சார்ந்து வாசிக்க வேண்டிய புனைவுகள் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

"வரலாற்றை வாசிப்பதன் முக்கியத்துவம் என்ன?"

மனிதன் வரலாற்றினுடைய குழந்தை. காலத்தை வேண்டுமென்றால் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரிக்கலாம். வாழ்க்கையை அவ்வாறு பிரித்து பார்க்க முடியாது. சிந்தனை முறை, மொழி, சொற்கள் எல்லாவற்றுக்கும் மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. வரலாற்றின் பெருநதியில் மிதக்கிற சிற்றிலை போலத்தான் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வும் இருக்கிறது. எனவே, வரலாறு சார்ந்த புத்தகங்களைப் படிப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம். நாம் நிற்கிற நிலம், அதன் மண்ணின் துகள், வாசனை எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டுமென்றால் வரலாற்றைப் படிப்பது அவசியம்.

"வரலாறு சார்ந்து எழுதப்பட்ட புனைவுகளில் முக்கியமானதாக நீங்கள் கருதுவது?"

1) வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல் சங்கிருத்தியாயன்

பல்லாயிரம் ஆண்டின் மனிதக்குல வரலாற்றைச் சொல்லக்கூடிய மிகச்சிறந்த நாவல். மிகச்சிறந்த பயணியான ராகுல் ஜி, புனைவின் வழியாக வரலாற்றைத் தத்துவ ரீதியாகவும் முற்போக்கு சிந்தனையுடனும் கதைகளினூடே பயணத்திற்கு அழைத்துச் செல்கிறார். வால்காவில் தொடங்கி கங்கையை வந்தடையும் இந்த வரலாற்று நாவல் உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் பாரதி புத்தகாலயம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

2) சிக்கவீர ராஜேந்திரன் - மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்

ஒரு மனிதனுடைய வாழ்வைப் பற்றி பேசக்கூடிய கதைதான் சிக்கவீர ராஜேந்திரன். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் குடகு நாட்டை ஆண்ட மன்னனின் பொறுப்பின்மையை, படிப்படியான வீழ்வைச் சித்திரிக்கிறது. புனைவாக எழுதப்பட்ட வரலாற்று நாவல்களின் முன்னோடியாகவே இந்தப் படைப்பு பாராட்டப்படுகிறது. கன்னட நாவலான 'சிக்கவீர ராஜேந்திரனை' தமிழில் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது.

3) நீலகண்டப் பறவையைத் தேடி - அதீன் பந்த்யோபாத்யாய

வரலாறு சார்ந்த நாவல்களில் அதிகம் கவனம் பெற்றது நீலகண்ட பறவையைத் தேடி. கவித்துவமான மொழியில் பல்வேறு விஷயங்களை மையமாகக் கொண்டு நாவலாகப் படைத்திருக்கிறார். நேஷனல் புக் டிரஸ்ட் பதிப்பகம் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

4) வானம் வசப்படும் - பிரபஞ்சன்

பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியின் வரலாற்றை எழுதப்பட்ட ஆவணங்களிலிருந்து புனைவாக கட்டமைத்துள்ளார் பிரபஞ்சன். புதுச்சேரி மக்களின் வாழ்க்கையை, அன்றைய சுழலின் அரசியலைக் கலந்து புனைவாக எழுதியுள்ளார். 1995-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதையும் இந்நாவல் பெற்றுள்ளது. இந்நாவலை நற்றிணைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

5) கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன்

கரிசல் இலக்கியங்களின் முன்னோடியாகத் திகழ்பவர் கி.ரா. கரிசல் மண் மக்களின் மொழியைப் பயன்படுத்தி புதிய பாணியில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார். கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை அவர்களின் வாழ்வியலை, வாழ்வியல் சார்ந்த பிரச்னைகளை வாய்மொழி வரலாற்றின் வழியாகப் புனைவாக்கியுள்ளார். கி.ராவின் முக்கியமான நாவலாகக் கருதப்படும் கோபல்ல கிராமம் நாவலைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு