Published:Updated:

கண்ணம்மா - யுகபாரதி கவிதைகள்

கண்ணம்மா - யுகபாரதி கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணம்மா - யுகபாரதி கவிதைகள்

தமிழ் படி... தடம் பதி

கண்ணம்மா - யுகபாரதி கவிதைகள்

தமிழ் படி... தடம் பதி

Published:Updated:
கண்ணம்மா - யுகபாரதி கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணம்மா - யுகபாரதி கவிதைகள்
கண்ணம்மா - யுகபாரதி கவிதைகள்

முளைக்கட்டிய தானியம்போல
மனசின் அத்தனை பரப்பிலிருந்தும்
துளிர்விடும் உன் நினைவுகளை
அடங்கா ஆச்சர்யத்துடன்
அதிசயிக்கிறேன் கண்ணம்மா
வழிகாட்டுதல்களையும்
ஒழுக்க விதிகளையும் முட்டித்தள்ளி
முளைவிடுவதுதான் காதலில்லையா?!
பெருக்கெடுத்து ஓடும்
வெள்ள நேரத்து வாய்க்கால்
எங்கே உடைத்து
எப்படியெப்படி வெளியேறுமென
யார் அறிவார் கண்ணம்மா?
எதேச்சையாக அரும்பியதெனினும்
அது இயற்கையின் விளையாட்டென்றும்
அதிர்வுகளென்றும் நீயோ, நானோ
மறுப்பதற்கில்லையே
இப்போதேனும் இவ்வளவு பூக்களை
கொடையளித்த இறைவனின்
பாதக் கமலத்தில் இடுங்கிக்கொள்ளத்தான்
இத்தனையுமா கண்ணம்மா?
ஒரே விநாடியில்
ஒளி தளும்பும் நம்முடைய
உரையாடல் கங்கிலிருந்து
ஆயிரமாயிரம் அகல் விளக்குகளை
ஏற்றிக்கொள்வதன்றி

கண்ணம்மா - யுகபாரதி கவிதைகள்


வேறேதும் வழியிருக்கிறதா
கண்ணம்மா?

ருநாள்
யாரோ கட்டிய கதையாக
நாம் நம்முடைய அன்பைக்
கடந்துவிட நினைத்தும்
மீண்டும் மீண்டும் அக்கதையில்
மூழ்கினோமே கண்ணம்மா,
அது ஏனென்று இப்போதோ
இனிவருங் காலங்களிலோ
சொல்லமுடியுமென்றா நினைக்கிறாய்?
என்ன வேடிக்கை பார்த்தாயா,
நம்மைப்பற்றி நமக்கு முன்பே
அறிந்தும் புரிந்தும் வைத்திருந்த
அவர்களைத்தான் பல சமயங்களில்
விநோதமாகவும் விபரீதமாகவும்
விமர்சித்து வந்திருக்கிறோம்.
பொய்யை நிஜமாக்க முயல்வதாக
அவர்கள்மீது நாம் வாசித்த
குற்ற அறிக்கைகளை இப்போதாவது
வாபஸ்பெறத்தான் வேண்டுமில்லையா?!
நிஜத்தை நிஜமென்று ஏன்
தொடக்கத்திலேயே நாமிருவருமே
நம்பமறுத்தோம் கண்ணம்மா?

ருசில சமயங்களில்
உன் நினைவுகள் பக்கத்திலிருந்து
பாசப் பரியேற்றும் தாயாயிருக்கிறது,
ஒரு கவளம் ஒரே ஒரு கவளமென
ஆசைகளை ஆசையோடு
எப்படியாவது திணித்துவிட
எண்ணுகிறது.
சமயங்களில் குட்டுவைத்துக்
குளிப்பாட்டியும்கூட விடுகிறது
ஒரு தாய் தானீன்ற
குழந்தைக்குச் செய்வதிலும்
அதிகமான பணிவிடைகளைச் செய்து
கட்டிக்கொள்கிறது, முத்தமிடுகிறது,
கடிந்துகொள்கிறது,
காட்டுத்தனமாகவும் புகழ்கிறது.
வேறு என்னென்ன செய்கிறது என்பதையும்
சொல்லத்தான் விரும்புகிறாயில்லையா!
வேலையாயிருக்கிறேன்
அப்பறம் பேசு என்கிறது. அருகில்
அம்மாவோ பாட்டியோ அப்பாவோ
இருப்பதாகச் சொல்லி ஓடிவிடுகிறது.
கூட இப்போது தோழியிருக்கிறாள்
கூப்பிட முடியாது என்கிறது.
என்ன ஆனாலும் இன்று
பார்க்காமல் போவதில்லை என்கிறது.
பரிதாபத்தோடு நிற்குமென்னை
மேலும் பரிதாபத்துடன் பார்த்து,
உனக்குக் காதலிக்க எப்போதுதான்
தெரியப்போகிறதோ என்கிறது.
தெரிந்து செய்வதல்ல காதல்,
தெரியாமல் செய்வதுதான் காதலென்று
இருவருக்குமே தெரிவதில்லையே
கண்ணம்மா!

கண்ணம்மா - யுகபாரதி கவிதைகள்


டைகளோ அணிகலன்களோ
அளித்துக்கொள்ளும் பரிசுகளோ
எதுவாவது காட்டக்கூடுமா
காதலைத் துல்லியமாக
ஒரு வாழ்த்து அட்டையின்
வரிகளிலிருந்து வாசிக்கமுடியுமோ
அன்பின் அர்த்தங்களை...
கடற்கரை மணலிலோ
காலயராத நடையிலோ
பூங்காக்களின் மரபெஞ்சிலோ
சப்பணமிட்டு அமர்ந்துகொள்வதுதான்
காதலின் ஸ்தூல வடிவா கண்ணம்மா?
ஒன்றுமே பேசாமலிருக்கிறாயே
இந்த அமைதியும் மௌனமும்கூட
காதலின் உச்சபட்ட
கெளரவங்களா கண்ணம்மா?
ஒரு கார்த்திகைத் திருநாளில்
எத்தனையோ தீபங்களுக்கு நடுவே
நின்றுகொண்டிருந்த உன்னையும்,
எரியத் தூண்டிய என் கண்களில்
அதிக வெளிச்சமிருந்ததையும்
அறிந்தாயா கண்ணம்மா?

கண்ணம்மா - யுகபாரதி கவிதைகள்
ன்வீடும் என்வீடும்
ஒன்றிணைந்து உருவான
மூன்றாவது வீடுதான் முத்தங்களா,
வைராக்கியத்தை வலுவிழக்கச்செய்யும்
உஷ்ணங்களின் உற்பத்திக்கூடமோ
உன் வதனம்,
நடுநிசியிலும் நாட்டியமாடவரும்
காதலின் கலைமாடமோ
என்னுடைய உன்னுடைய கனவுகள்,
பழகியும் விலகியும்
பக்குவமடைவதுதான் பால்முரணா?
என்ன செய்துகொண்டிருக்கிறாய்
கண்ணம்மா,
முன்பு நானெழுதிய கடிதங்களில்
முற்றுப்பெறாத ஓர் வாக்கியத்தின்
இறுதிச் சொல் பற்றி
எண்ணிக்கொண்டிருக்கிறாயா?
இறுதியே இல்லாத என் சொற்களை
எண்ணி எண்ணி நீ பின்னும்
ஒயர்க்கூடையாகிவிட ஒப்புகிறேன்
கண்ணம்மா!

ஓவியங்கள்: இளையராஜா