Published:Updated:

``கழகங்கள் கைவிட்டாலும் கம்பன் கைவிடவில்லை'' - நாஞ்சில் சம்பத் உருக்கம்

``கழகங்கள் கைவிட்டாலும் கம்பன் கைவிடவில்லை'' - நாஞ்சில் சம்பத் உருக்கம்
``கழகங்கள் கைவிட்டாலும் கம்பன் கைவிடவில்லை'' - நாஞ்சில் சம்பத் உருக்கம்

``கழகங்கள்  கைவிட்டாலும் கம்பன் என்னைக் கைவிடவில்லை'' என ராமேஸ்வரத்தில் நடந்த கம்பன் கழக விழாவில் நாஞ்சில் சம்பத் உருக்கமாக உரையாற்றினார். 


 

ராமேஸ்வரம் கம்பன் கழகம் சார்பில் 33-ம் ஆண்டு கம்பன் விழா நடந்தது. 2 நாள்கள் நடந்த இந்த விழாவின் முதல் நாள் நிகழ்வுக்கு புதுச்சேரி துணை சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமை வகித்தார். கம்பன் கழகத் தலைவர் முரளிதான் வரவேற்றார். இலங்கை கம்பன் கழக நிர்வாகி இ.ஜெயராஜ், பேராசிரியர் அப்துல் காதர், பட்டிமன்றப் பேச்சாளர் த.ராமலிங்கம், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், பாரதி, இலங்கை பிரசாந்தன் உள்ளிட்டோர் இலக்கிய உரை ஆற்றினர்.

2-ம் நாள் நிகழ்வில் `தாழ்வு இல்லாத்தம்பி' என்ற தலைப்பில் நாஞ்சில் சம்பத் இலக்கிய உரையாற்றினார். இலக்கிய உரையைத் தொடங்கிய அவர், ``அரசியல் துறவறம் பூண்டுவிட்ட என்னைக் கழகங்கள் கை விட்டாலும், கம்பன் கழகங்கள் கைவிடவில்லை. கம்பன் எனும் கடலில் நான் மூழ்கியவனும் இல்லை. முத்து எடுத்தவனும் இல்லை. பெரியார், மறைமலை அடிகள் ஆகியோருக்கு எல்லாம் முதலில் தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கியவர் கம்பர். அவரின் எழுத்துகளில் 'வீடணன்', 'இலக்குவணன்' என எழுத்து சீர்திருத்தைக் கையாண்டவர். அத்தகைய கம்பனை பணிகளாலும், பயணங்களாலும் என்னால் தேட முடியவில்லை. என்றாலும்கூட வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கம்பனை நாவாடி இருக்கிறேன். ஒரு மொழியைப் பற்றி பேசவும், அதைக் கேட்கவும் ஒரு கூட்டம் இருக்கும் வரை அந்த மொழி வளர்ந்துகொண்டேதான் இருக்கும். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்குகூட எழுந்து நிற்க மனம் இல்லாதவர்கள் உள்ள மாநிலமாகத் தமிழகம் உள்ளது. 

மலைச்சாமி, கண்ணுச்சாமி எனப் பெயர் வைத்துக்கொண்டிருப்பவர்களால் தமிழ் மொழியில் பேசத் தெரியவில்லை. ஜீவா போன்ற தலைவர்கள் எல்லைக்கு அந்தப் பக்கம் நின்றுகொண்டு கம்பனைப் பற்றி பேசியவர்கள் வாழ்ந்த மண் இது. ராவணனின் தவற்றை சுட்டிக்காட்ட யாருக்கும் தைரியம் இல்லாதபோது கும்பகர்ணன் மட்டுமே அதைச் செய்தான். இன்றைக்கும் அதுதான் நிலை. நடக்கும் தவறுகளை யாரும் சுட்டிக்காட்டுவதில்லை. கொண்ட கொள்கைக்காக  ஆட்சி, அரியாசனம் மட்டுமல்ல உயிரையும் துறக்க துணிந்தவன் கும்பகர்ணன். கொள்கைக்காக உயிரைத் தரக்கூடிய ஒரு கூட்டம் தமிழகத்தில் உள்ள அதே வேளையில் பொங்கல் பண்டிகைக்கு நிர்ணயிக்கப்பட்ட  இலக்கை தாண்டிட துணை போகும் ஒரு கூட்டம் சரக்கு அடிக்க வரிசை கட்டி நிற்கிறது. சரக்கு அடிக்க வரிசையில் நிற்கும் அந்தத் தம்பிகள் தெளிவு பெற கம்பன் கழகம் இதுபோன்ற இலக்கியக் கூட்டங்கள் தமிழகம் எங்கும் தழைத்து வர வேண்டிய காலம் இது'' என்றார்.

இந்நிகழ்ச்சிகளில் கம்பன் கழக நிர்வாகிகள் கோடூர் ரமணி, ஜெயச்சந்திரன், நந்தகோபால், ராமச்சந்திரன், இலக்கிய ஆர்வலர்கள் டாக்டர் குலசேகரன், பேராசிரியர் அப்துல்சலாம், முனைவர் சுமையா தாவூத், கராத்தே பழனிச்சாமி, பொறியாளர் முருகன், முனைவர் சபுரா பீவி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.