Published:Updated:

"அரசாங்கத்துக்கு நிஜத்துலயும் நாங்க ஜோக்கர்தான்!’’ - சர்க்கஸ் ஜோக்கர்களின் துயரம்

"இந்த அரசாங்கம் எதற்கோ பணத்தைச் செலவு செய்றாங்க. ஆனா, எங்களை மாதிரி ஆளுங்களோட நல்லதுக்கு இதுவரைக்கும் எதுவும் பண்ணினதில்லை. அரசாங்கமும் எங்களை ஜோக்கர்களாகத்தான் பார்க்கிறது!"

"அரசாங்கத்துக்கு நிஜத்துலயும் நாங்க ஜோக்கர்தான்!’’ - சர்க்கஸ் ஜோக்கர்களின் துயரம்
"அரசாங்கத்துக்கு நிஜத்துலயும் நாங்க ஜோக்கர்தான்!’’ - சர்க்கஸ் ஜோக்கர்களின் துயரம்

முன்பெல்லாம் சர்க்கஸ் ஊருக்குள் வரப்போகிறது என்ற செய்தி வந்தாலே ஊரே திருவிழா மயமாகும். குழந்தைகளின் குதூகலத்தை வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது. ஊரெங்கும் சந்துபொந்து விடாமல் சர்க்கஸின் சுவரொட்டிகள் அலங்கரித்துவிடும். பெரிய லாரிகள் சர்க்கஸ் போடுவதற்கான தகரங்களையும், கூடாரங்களையும் ஏற்றிக்கொண்டு ஊருக்குள் புழுதியைக் கிளப்பிக்கொண்டு செல்லும். ஜோக்கர், விலங்குகள், ஜிம்னாஸ்டிக் பெண்கள் எனக் கலைஞர்கள் வரத் தொடங்குவார்கள். கூடாரங்கள்போடும் பணி ஒவ்வொன்றாகத் தொடங்கும்போதிலிருந்தே அதை வேடிக்கை பார்க்க தினம் தினம் ஒரு கூட்டமே நிற்கும். 

சர்க்கஸ் தொடங்கும் நாளன்று மக்களின் கூட்டம் மைதானத்தில் திரளும், வானுயர்ந்த கம்பங்களானது கூடாரத்தைத் தாங்கி நிற்கும். வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அரங்கின் பிரமாண்டம் மனதைச் சுண்டி இழுக்கும். உச்ச நடிகரின் முதல் நாள் முதல் காட்சி போன்றதொரு தோற்றம் உருவாகும். இருக்கையைப் பிடித்து அமர்ந்து சர்க்கஸ் தொடங்கியதும், மக்களின் கைதட்டலானது அரங்கத்தைத் தாண்டியும் அதிரும். அதுதான் மக்களுக்கான கொண்டாட்டம். மக்கள் தங்களின் கவலைகளை மறந்து சிரிப்பார்கள். பொருந்தாத  உடை, சிரிப்பை வரவழைக்கும் ஒப்பனை என ஜோக்கர்கள் தோன்றியதும் குழந்தைகள், பெரியவர் என அனைவரும் மகிழ்வர்.

சர்க்கஸின் இறுதி நாள் வரை சற்றும் சலிக்காது கைதட்டல் ஒலித்துக்கொண்டிருக்கும். இறுதியில் 20 நாள்களாகப் போடப்பட்டிருந்த சர்க்கஸின் கூடாரங்கள் பிரித்தெடுக்கப்பட்டு விலங்குகள் கூண்டுக்குள் ஏற்றப்பட்டு கொண்டுசெல்வார்கள். மைதானம் மீண்டும் வெற்று நிலமாக எஞ்சி நிற்கும். சர்க்கஸ் முடிந்த சில நாள்கள் வரை ஊர்மக்கள் ஏதோ ஒன்றை இழந்துவிட்டுப் பரிதவிப்பது போன்றே வாழ்வார்கள். 6 வயதுக் குழந்தை முதல் 60 வயது முதியோர்கள் வரை அடுத்த சர்க்கஸின் வருகைக்காகக் காத்திருப்பார்கள். சர்க்கஸின் ஜோக்கர்களை மக்கள் கொண்டாடுவார்கள். தங்களின் திறமையை மக்கள் ஆரவாரத்துடன் ஆதரிப்பதை எண்ணி அவர்களும் மகிழ்வர். இன்று சர்க்கஸ் அரங்கும், அந்த ஜோக்கர்களும் எப்படி இருக்கிறார்கள்?

சமீபத்தில் ஈரோடு மாவட்டத்தில் நடந்துவரும் ஜம்போ சர்க்கஸுக்குச் சென்றிருந்தேன். சர்க்கஸ் நடக்கும் மைதானம், கிழிந்து ஒட்டுப்போட்ட கூடாரங்களுடனும் துருப்பிடித்த தகரங்களுடனும், வன விலங்குகள் ஏதுமின்றி தூசிபடிந்த சிவப்புக் கம்பளங்களுடன் வரவேற்றுக்கொண்டிருந்தது. திரையரங்குகளுக்கு நிகரான டிக்கெட் விலை. தினமும் 3 காட்சிகள். பின்னணியில் ட்ரம்ஸ் மற்றும் கிட்டார்களின் இசை தொடங்க சர்க்கஸும் தொடங்கியது. பல வருடங்கள் கழித்து சர்க்கஸை முன் வரிசையில் அமர்ந்து வாயைப்பிளந்து ரசித்தேன். இடையிடையே பஃபூனின் காமெடி தர்பார் 2 மணி நேர சர்க்கஸில் புத்துணர்ச்சி ஊட்டியது. 500க்கும் மேற்பட்டோர் அமர்ந்து ரசிக்கும் பரந்து விரிந்த அரங்கில் வெறும் 30 பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். ரப்பர் ஆடைகளை அணிந்த பெண்கள் அரங்கேற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ், எத்தியோப்பிய கலைஞர்களின் நடனம், பயில்வானின் பளுதூக்கும் நிகழ்ச்சி, மரணக்கூண்டுக்குள் மோட்டார் பைக் ஓட்டுவது, கத்தியின்மேல் நடப்பது என ரசிகர்களின் கூட்டமில்லாதபோதும் சர்க்கஸ் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இறுதியில் அந்தரத்தில் விளையாடும் பார் விளையாட்டுடன் சர்க்கஸ் நிறைவு பெற்றது.

தங்கள் உடைகளை மாற்றிக்கொண்டு அவரவர் கூடாரத்திலிருந்த ஜோக்கர்களை சென்று சந்தித்தேன். அந்தரத்தில் விளையாடும் பார் விளையாட்டு போலதான் அவர்களின் வாழ்வும் இருந்தது. ``என் பேரு ஏழுமலை, திருவண்ணாமலைதான் சொந்த ஊர். பொறந்ததுல இருந்தே சர்க்கஸ்லதான் வாழ்க்கை ஓடுது. என் அப்பா இதே சர்க்கஸ்ல சமையல்காரராக இருந்தவர். நான் 40 வருஷத்துக்கும் மேல சர்க்கஸ்ல இருக்கேன். ஊரு ஊராகப் போறதால தமிழ் கொஞ்சம் தடுமாறித்தான் வரும். என் மனைவி நல்லாப் பேசுவா" எனத் தனது மனைவி ஜானகியை அழைத்தாா். பின்பு இருவரும் இணைந்தே உரையாடினாா்கள் ``சர்க்கஸ்லாம் பார்க்க யாரும் இப்போலாம் வர்றது இல்லைங்க. மக்களுக்கு இது மேல இருந்த ஈடுபாடுலாம் போயிடுச்சு. மிருகங்களையும் தடை பண்ணிட்டாங்க. இப்போ ஒட்டகங்களையும் சர்க்கஸ்க்கு அழைச்சுட்டு வரக் கூடாதுனு சொல்லீட்டாங்க. இன்னும் கொஞ்ச வருஷத்துல இருக்குற கொஞ்ச சர்க்கஸும் இழுத்து மூடிடுவாங்க, எங்களுக்கு இதை விட்டா வேற எதுவும் தெரியாதுங்க" என்ற அவர்களின் வார்த்தைகளில் பின்னால் உள்ள வலியையும், இயலாமையையும் உணர முடிந்தது.

அருகிலிருந்த மற்றொரு கூடாரத்தில் சாதரையும், மொஹ்மத் சாயித்தையும் சந்தித்தோம். இருவரும்தான் ஜம்போ சர்க்கஸின் `அபூர்வ சகோதரர்கள்' அப்பு. சாதர் மாஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர் பிறந்ததிலிருந்தே சர்க்கஸ் கூடாரத்துக்குள் வாழ்க்கையைக் கழித்து வரும் சாதருக்கு வயது 29. ``வெளிய போயி வேலைக்குக் கேட்டப்போ எல்லாம் உன்னோட உசரத்துக்கு வேலை இல்லைனு சொல்லி அனுப்பிடுவாங்க. ரொம்ப கஷ்டமா  இருக்கும். அதனால் இந்த சர்க்கஸ்லயே வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருக்கேன். இந்த அரசாங்கம் எதற்கோ பணத்தைச் செலவு செய்றாங்க. ஆனா, எங்களை மாதிரி ஆளுங்களோட நல்லதுக்கு இதுவரைக்கும் எதுவும் பண்ணினதில்லை. அரசாங்கமும் எங்களை ஜோக்கர்களாகத்தான் பார்க்கிறது" என்றாா் வேதனையுடன். மொஹ்மத் சாயித் கான் இவரது குடும்பமும் சர்க்கஸில் வேலை செய்தவர்கள் தான் 7-ம் வகுப்பு முடித்தவுடன் சர்க்கஸ் மீதுள்ள விருப்பத்தால் சர்க்கஸில் சேர்ந்தவர் ``எனக்கு இந்த சர்க்கஸ்தான் உலகம். வெளிய எங்கேயும் வேலை கிடைக்கலை. ஆனா இப்போலாம் சர்க்கஸுக்கும் மக்கள் கூட்டம் குறைஞ்சிடுச்சு. எங்களுக்குக் கைதட்டல் எல்லாம் எதுவும் இல்லாம சர்க்கஸ் செய்வதற்கு கஷ்டமா இருக்கு" எனத் தனது வேதனையை வெளிப்படுத்தினார். 

பல ஊர்களில் பலதரப்பட்ட மக்களைக் கவலைகள் மறந்து சிரிக்க வைத்த ஜோக்கர்கள் பெரும் துயரத்துடன் தங்கள் வாழ்வை நடத்தி வருகிறார்கள். கடைசி நாள் சர்க்கஸ் முடிந்து கிழிந்து தைத்த கூடாரங்கள் கலைக்கப்பட்டு, விலங்குகளுடன் கலைஞர்களும் ஊரைக் காலி செய்தனர். ஒப்பனையற்ற ஜோக்கர்கள் லாரியின் பின்புறத்தில் அந்தக் காலி இடத்தை வெறித்துப் பார்த்தபடி சென்றனர்.