Published:Updated:

செஞ்சூரியனின் சலங்கையாட்டம்

செஞ்சூரியனின் சலங்கையாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
செஞ்சூரியனின் சலங்கையாட்டம்

சிறுகதை: வா.மு.கோமு - ஓவியங்கள்: ரவி

செஞ்சூரியனின் சலங்கையாட்டம்

சிறுகதை: வா.மு.கோமு - ஓவியங்கள்: ரவி

Published:Updated:
செஞ்சூரியனின் சலங்கையாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
செஞ்சூரியனின் சலங்கையாட்டம்

``ஜி... நம்ம அண்ணன் நாலு வருஷம் மிந்தி எனக்காக, ஆரம்பிச்ச படத்தை ரெண்டு லட்சம் ரூபாய் போனாப்போவுதுன்னு நிறுத்திட்டாப்லைங்க ஜி.” 

செஞ்சூரியனின் சலங்கையாட்டம்

குப்புசாமி என்கிற தன் பெயரை `செஞ்சூரியன்’ என மாற்றிக்கொண்டு இயக்குநராகவும் நடிகராகவும் ஆசைப்படும் நபர், தன் எதிரில் அமர்ந்திருந்த எழுத்தாள நண்பரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

சென்னிமலையில் மலைப்படிக்கட்டுகள் ஆரம்பமாகும் இடத்தில் சோமுவும் செஞ்சூரியனும் தயாரிப்பாளர் கோதண்டத்தின் வரவை எதிர்பார்த்து அமர்ந்திருந்தனர். சோமுவுக்கு, மலைப்படிக்கட்டில் அமர்ந்து தயாரிப்பாளரிடம் பேசுவது பிடித்த மில்லாமல்தான் இருந்தது. இருந்தும் செஞ்சூரியனுக்கும் கோதண்டத்துக்கும் முருகன் அமர்ந்திருக்கும் மலையடிவாரம்தான் விருப்பமாய் இருந்தது.

நான்கைந்து வருடம் முன்பாக இங்கு வைத்துதான் சென்னையிலிருந்து இவர்களைத் தேடி வந்திருந்த இயக்குநரிடம் கதை கேட்டுப் பிடித்துப்போய் `அழகு தாயின் மகன்’ ஒரு நாள் ஷூட்டிங் போய் இரண்டாவது நாளில் நின்றது. சோமுவுக்கு அன்று அமாவாசை தினமாக இல்லாமலிருந்தது திருப்தியாயிருந்தது. இருப்பவர்கள் முருகனை தரிசிக்க மலையுச்சிக்குச் செல்ல, இல்லாதவர்கள் இவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில்தான் அமர்ந்து கைநீட்டிக்கொண்டி ருப்பர்.

`அழகு தாயின் மகன்’ திரைப்படத்தில் நாயகனாக குப்புசாமிதான் நடிப்பதாக இருந்தது. அன்று குப்புசாமியின் மனைவிக்குப் பிரசவமாகி, பெண் மகவை ஈன்றெடுத்த நாளாகிப்போனதால், பெருந்துறை மருத்துவமனையில் மனைவிக்கு அருகில் நின்று, வரும் சொந்தபந்தங்களுக்கு இனிப்புகளை வழங்கும் பணியில் இருந்துவிட்டார். இரண்டாம் நாள் ஷூட்டிங் நடக்கும் இடமான தாராபுரத்தில் காய்ந்துபோன காம்ளி நதிக்கு இவர் வருகையில் புதிய இயக்குநர் `அங்கியா இங்கியா! அதாகிடும் இதாகிடும்!’ என்று ஆரம்பித்துவிட்டார்.

``ஜி, நான் ஒருநாள் வரலைன்னா என்னங்க ஜி? `என்னைய விட்டுட்டு ஷூட்டிங் போகவேண்டிதுதானே!’ அப்படின்னேன் ஜி. அண்ணன் பார்த்துட்டு, `என் கண்ணு முன்னாடியே எங்க பையனைப் பேசுறியா நீ? பணம் போனா போயிச்சாட்டாது... படமும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்’னுட்டாரு! அப்புறம் அந்த டைரக்டரு மன்னிப்பு கேட்டும் அண்ணன் ஒப்புக்கலீங்க ஜி!”

இவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து நேரெதிர்ப் படிக்கட்டுகளில் நான்கைந்து குரங்குகள் அமர்ந்திருந்தன. அவை ஒன்றுக்கொன்று பேன் பார்க்கும் வேலையை, சலிக்காமல் செய்துகொண்டிருந்தன. இவர்கள், கொரிக்க என்று கையில் எதுவும் எடுத்து வரவில்லை. எடுத்து வந்திருந்தால் `எனக்கு... எனக்கு...’ என்று அவை இவர்களைச் சுற்றி வந்து அமர்ந்திருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செஞ்சூரியனின் சலங்கையாட்டம்

எழுத்தாளர் சோமு, கடந்த ஒரு மாத காலமாக செஞ்சூரியனுடன் இணைந்து கதையைப் பேசிப் பேசி மெருகேற்றி ஒரு முடிவுக்கு வந்து, டைப்பிங்கும் முடித்துவிட்டார். சோமுவுக்கு, தயாரிப்பாளைரைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. செய்து முடித்த பணிக்கு முன்தொகையாக 20,000 ரூபாய் இன்று தந்துவிடுவதாகவும், முருகன் மலையடிவாரத்தில் தயாரிப்பாளர் இன்று மூன்று லட்சம் ரூபாயை செஞ்சூரியன் கையில் தருவதாக ஒப்புக்கொண்டு வருகிறார் என்றும் சொல்லி, கூட்டிவந்துவிட்டார். பணம் என்றால், பிணமும் வாய் பிளக்கும்தானே! சோமுவும் தன் குடும்பத் தேவைகள் கருதி அவர் வாகனத்தின் பின்னிருக்கையில் அமர்ந்து வந்துவிட்டார்.

சோமுவின் துணைவியாரின் நீண்டகால விருப்பமான மின்சார அடுப்பும், மிக்ஸியும் இன்று வீடு செல்கையில் செஞ்சூரியனின் இருசக்கர வாகனத்தின் பின்னிருகையில் அமர்ந்தபடியே மடியில் வைத்துப் பிடித்துச் சென்றுவிடலாம். சோமுவின் பையனுக்கு, வரும் 30-ம் தேதி பிறந்த தினம். ஒரு ஜீன்ஸ் பேன்ட்டும் மேலங்கியையும் சென்னிமலை குமரன் ரெடிமேடு ஆடையகத்தில் கையோடு எடுத்துச் சென்றுவிடலாம்.

இவர்கள் பேசி மெருகேற்றி முடித்துவைத்திருக்கும் `சலங்கையாட்டம்’ திரைப்படம், குறைந்த பட்ஜெட் படம்தான். தொண்ணூறு லட்சம் ரூபாய்க்குள் 22 நாள் ஷூட்டோடு முடிந்துவிடும் என்பதில் உறுதியாய் செஞ்சூரியன் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். தயாரிப்பாளரிடமும் சொல்லிவிட்டாராம். ரெட் கேமராவில்தான் படம் எடுக்கப்படுவதாக சோமுவிடம் சொல்கிறார். சோமுவுக்கு, கதையை வசனமாகக் கொடுக்க மட்டும்தான் தெரியும். ரெட் கேமரா பற்றியெல்லாம் ஒரு வாய்பாடும் தெரியாது.

படத்தில் நான்கு பாடல்கள். நான்கையும் செஞ்சூரியனின் மாப்பிள்ளை மூர்த்திதான் எழுதியிருந்தார். அவருக்கு, படத்தில் ஜோதிட சிகாமணி வேடம் வேறு இருக்கிறது. மொத்தக் கதையில் அவர் இரண்டு சீன்களில் தலையைக் காட்டுகிறார். முதல் கோயில் திருவிழாப் பாடலான, `மாடு முப்பது, கவுறு முப்பது, மாட்டுக்குக் கட்டுற தும்பு முப்பது...’ பாடலை ஏற்கெனவே அலைபேசி வழியாகக் கோதண்டத்துக்குப் பாடலாகவே பாடிக்காட்டினார். அதில் கோதண்டம் சொக்கிப்போய்விட்டதாகவும் செஞ்சூரியன் சொல்லிக்கொண்டி ருந்தார் சில நாள்கள்.

``ஜி, அண்ணன்கிட்ட கோவையா நீங்க அப்பப்ப வசனத்தோடு நம்ம கதையைச் சொல்லுங்க! நீங்க சொல்றதைவெச்சுத்தான் அண்ணன் இன்னிக்கி நம்ம கையில அட்வான்ஸ் குடுப்பாரு. நாளைக்கி கேமரா மேனுக்கும் இசையமைப்பாளருக்கும் அட்வான்ஸ் 50,000 ரூபாய் குடுத்துட்டா, பத்து நாள்ல நாம ஷூட்டுக்குப் போயிடலாம்.”

சோமுவுக்கு எல்லாம் மலைப்பாய் இருந்தன. ஆயிரம் படங்களுக்கும்மேல் வெளிவராமலேயே பெட்டியில் கிடப்பதாக இவரின் சென்னை நண்பர்கள் சொல்கிறார்கள். அப்படி செஞ்சூரியன் எடுக்கும் படமும் போய் கிடப்பில் கிடந்துவிடா மலிருக்க, சென்னிமலை மலையுச்சியைப் பார்த்து மனதில் வேண்டிக்கொண்டார். படம் வெளிவந்தால்தான் இவருக்கும் வேறு வாய்ப்புகள் தேடி வரும். இவரது உடுமலை நண்பர் வேறு அடிக்கடி இவரது அலைபேசிக்கு அழைத்து ``புரொடியூசர் வந்துட்டாருங்ளாண்ணா? எப்படி தெரியுறார்? படம் எடுத்துடுவாரா?’’ என்கிறார். ``வந்துட்டு இருக்காராமா மகி!’’ என்று ஒற்றைச்சொல்லில் முடித்துவிடுகிறார்.

செஞ்சூரியன் எப்படியும் `சலங்கையாட்டம்’ படத்தை எடுத்துவிடுவார் என உடுமலை நண்பர் மகேந்திரன் நம்புகிறார். படத்தில் வில்லனாக வரும் பஞ்சாயத்துத் தலைவருக்கு ஜீப் ஒன்றை இலவசமாகப் பிடித்து விட்டார். செஞ்சூரியன் அந்த ஜீப்பை வளைத்து வளைத்துப் புகைப்படமெடுத்துத் தன் அலைபேசியில் பதுக்கிக்கொண்டார். போக, மகேந்திரனின் அக்கா பையன் கதிர்வேலுதான் படத்தின் நாயகன். அவர் பத்து லட்சம் ரூபாயை நடிப்பதற்காகக் கையில் வைத்திருப்பதாக மகேந்திரன் செஞ்சூரியனிடம் உறுதிமொழி கொடுத்துவிட்டார்.

செஞ்சூரியனின் சலங்கையாட்டம்

கதிர்வேலுவுக்குத் தலையில் முடி குறைவு எனவும், தாவாங்கட்டையில் தாடி வளர்க்கவேண்டும் எனவும் உத்திரவிட்ட செஞ்சூரியன், அவரையும் தன் அலைபேசிக்குள் அடக்கிக்கொண்டார். போக, முழுத் தோப்பையே ஷூட்டிங்குக்காக விடும் பெரியவர், ஐந்து லட்சம் ரூபாய் தருவதாகச் சொல்லிவிட்டதாக நேற்று காலையில் மகேந்திரன் செஞ்சூரியனிடம் சொல்லிவிட, மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தார். முறுக்குமீசை வைத்து கெத்தாக பெரியவர் இருப்பதால், அவர்தான் பஞ்சாயத்துத் தலைவர் என்று இவரும் சொல்லி மகேந்திரனைத் திக்குமுக்காடச் செய்துவிட்டனர்.

மகேந்திரன் காலையில் சோமுவை அழைத்துப் பேசுகையில், ``அண்ணோவ்... பெரியவரு நேத்து சாயந்திரமே தென்னைமரத்தைப் பார்த்துக் கையை நீட்டி, `எவனும் எம்பட காட்டுக்குள்ள ஒரு நிமிஷம் நிக்கப்புடாது. எல்லோரும் ஓடியேபோயிருங்கடா!’னு தன்னப்போல பேச ஆரம்பிச்சுட்டாருங்ணோவ்!” என்றே கூறினார்.

`சினிமாவில் தலையைக் காட்ட எல்லோருமே ஆசைகொண்டி ருக்கிறார்கள்’ என்றே சோமு நினைத்துக்கொண்டார். `தனக்கும் அப்படி ஒரு ஆசை இருக்கிறதா?’ என்று தன்னையே கேட்டுக்கொண்ட போது, `அதெல்லாம் சுத்தப்படாது’ என்றே தோன்றியது.

ஆவலோடு இருவரும் எதிர்நோக்கிக் காத்திருந்த கோதண்டம், கூடவே தன் வயதையொத்த நண்பர் ஒருவரின் துணையுடன் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை சகிதமாய் ஒல்லிப்பிச்சானாக நடந்து படிகள் ஏறி வந்தார். இருவரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றுகொண்டார்கள். `சுழல்காற்று இப்போது அடிக்கத் தொடங்கினால் கோதண்டம் பறந்துபோய் பெருங்கிணற்றில் விழுந்துவிடுவார்’ என்று சோமு நினைத்துக்கொண்டார். வயது அவருக்கு 60 இருக்கலாம் என யூகித்தார்.

``ஏங்கண்ணா, வெள்ளோட்டுல இருந்து வந்து சேர்றதுக்கு இவ்ளோ நேரம் பண்ணிப்போட்டீங்களாட்ட இருக்கே. நாங்க ஒரு மணி நேரமா இங்கியே உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்கோம்!”

``அதுக்குள்ள ஆயிரத்தெட்டு சோலி வந்துடுது குப்புசாமி” என்றபடியே இருவருக்கும் வணக்கம் வைத்தார்.

``அண்ணோவ், செஞ்சூரியன்னு கூப்புடுங்ணா... பேரைத்தான் ஜெயிக்கிறதுக்குன்னே நியூமராலஜிப்படி மாத்தி வெச்சுக்கிட்டனே! இவருதானுங்கண்ணா சோமு. நாலு வருஷமா பழக்கம். எங்கூருக்குக் கிட்டத்தாலையே இருந்துட்டு கதை எழுதிட்டிருந்திருக்காரு பல வருஷமா. எனக்குப் பாருங்க, தெரியாமயே இருந்திருக்குது!”

``நீதான், வசனம் எழுதுனா சோமுதான் எழுதணும்னு பிடிவாதமா சொல்லிட்டியே!” என்றவர் தன் தோளில் கிடந்த துண்டைப் படிக்கட்டில் விரித்துப் போட்டு அதன்மீது பத்மாசன நிலையில் அமர்ந்துகொண்டார். சோமுவுக்கு அது ஆச்சர்யமாய் இருந்தது. `எப்பயுமே எங்க உட்கார்ந்தாலும் இதே பழக்கம்தானுங்களா?’ என்று கேட்க நினைத்துவிட்டவருக்கு, செஞ்சூரியன் மற்றொருவரை ``இவர்தானுங்க ஜி நம்ம படத்துக்கு மேனேஜர்’’ என்றார். சோமுவுக்கு `ஒரு நிமிடம் இதயம், துடிப்பதை நிறுத்திவிட்டதோ!’ என்று பயமாயிருந்தது. இப்படிப்பட்ட நல்ல மனிதர்களை எல்லாம் ஒரே நாளில் சந்திக்க, கொடுத்துவைத்திருக்க வேண்டும்தானே!

மேனேஜர் கையில், ஜிப் வைத்த பேக் ஒன்று இருந்தது. அதில்தான் செஞ்சூரியனுக்குத் தருவதற்கான மூன்று லட்சம் ரூபாய் இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டார் சோமு. ஆக, ஒரு மாத உழைப்பு அவருக்கு இன்று வீண்போகப்போவதில்லை. மகிழ்ச்சியில் இருவரின் முகங்களிலும் பளபளப்பு கூடிக்கொண்டது.

``பாட்டுக்காரர் மூர்த்தி வரலையா செஞ்சூரியன்?” என்றார் கோதண்டம்.

``இன்னிக்கி வெள்ளிக்கிழமைங்கண்ணா. தறி ஓட்டிட்டு இருக்காப்லையாமா. 3 மணிக்காட்ட தானே சம்பளம் போடுவாங்க. அவருக்கும் உங்களை நேர்ல பார்த்துப் பேச ஆசைதானுங்கண்ணா. லீவே போடுறதா சொன்னாப்லைங்க. நான்தான் `அதெல்லாம் வேண்டாம். தறி ஓட்டத்தைப் பாருங்க’ன்னு சொல்லிட்டேன். அவருக்கு வேற அஞ்சு ரூவா அவசரமா வேணும்னு சொன்னாரு. உள்ளூர்ல கோயில் சாட்டு வர்ற புதன்கிழமைங்களாமா!”

``அப்புறம் ஷூட்டிங் சமயத்துல ஒரு மாசம் லீவு போட்டுக்குவாப்லைதானே!” சும்மா அமர்ந்திருந்த மேனேஜர் செஞ்சூரியனிடம் கேட்க, ``அதெல்லாம் ஓனருகிட்ட பத்துப் பதனைஞ்சு நாளைக்கி முன்னயே சொல்லிட்டாப்லைங்க ளாமா! லீவு தரலைன்னா தறித்தொழிலே போனாலும் போயிட்டுப்போவுன்னு பேசுறாப்ல.’’

``அண்ணன் சொன்னாரு பாட்டுக்காரரைப் பத்தி இப்பத்தான். போன்லயே தாளத்தோடு பாடிக்காட்டுனாப்லையாமா! வந்திருப்பாப்ல, நேராவே பாடச்சொல்லிக் கேட்கலாம்னு வந்தேன். சரி, உன்னோட போன்ல கதாநாயகன் போட்டோ, ஜீப்பு போட்டோவெல்லாம் வெச்சிருந்தியாமா... எனக்குக் காட்டு”என்றார் மேனேஜர். செஞ்சூரியன், அவருக்கு தன் போனிலிருந்து எடுத்துக் காட்டினார்.

``நம்ம கதைக்கு இந்தத் தம்பி சரியா வருவாரா?”

``நீங்கவேற, பத்து லட்சம் ரூபாய் நம்மளை நம்பிக் குடுக்குது, தம்பி. அத வாங்கிக்கிறதை வுட்டுட்டு... அதெல்லாம் தம்பிய நடிக்கவைக்கிற வேலையை நான் பார்த்துக்கி றேனுங்கண்ணா. முடிய மட்டும் கூடையாட்ட வளர்த்துனா போதும் அந்தத் தம்பி. இல்லீன்னாலும் விக்கு வெச்சிக்கலாங்கண்ணா. படத்துல என் தம்பி கேரக்டர்தானே பண்றாப்ல தம்பி. கூடவே இருந்து நடிப்பு சொல்லிக்குடுக்க வேண்டிதுதான்.”

``அக்ரிமென்ட் போட்டு கையெழுத்து வாங்கிக்கலாம். படத்தை வித்துட்டோம்னா, தம்பி காசை அப்பவே திரும்ப செட்டில் பண்ணிடலாம்.”

செஞ்சூரியனின் சலங்கையாட்டம்``அப்படித்தான் பேசியிருக்கு ங்கண்ணா! சோமோட நண்பர் உடுமலையில இருக்காங்கன்னு சொன்னேன்ல. அவரோட அக்கா பையன்தான் தம்பி. உடுமலையில நம்ம பட ஷூட்டிங்குக்கு தோட்டத்தையே குடுத்தவரு வேற அஞ்சு லட்சம் ரூபாயை வெச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்காராமா! அதுபோக இன்டர்வெல்லுக்குப் பின்னாடி திருவிழா சாங் வருதுங்க. அதுக்கு உடுமலையில இருக்கிற பெரிய பெரிய நிறுவனங்களோட ஃப்ளெக்ஸ் வைக்கிறோம். அந்தப் பாட்டை ரெண்டு நாள் ஷூட் பண்றோம். நமக்கு செலவே இல்லைங்கண்ணா. நீங்க சென்னைக்குப் போயி மெர்க்குரி சினி கம்பைன்ஸ் பழைய கார்டை தயாரிப்பாளர் சங்கத்துல ரெனியூவல் பண்ணிட்டு வந்துட்டீங்கன்னா போதும். அந்த கார்டைவெச்சுதான் கடை கடையா ஏற முடியும் அவரு. நம்போணுமில்லங்கண்ணா அவிங்களும்... நிறைய படத்துல ஃப்ளெக்ஸ் வைக்கிறாங்களாம். சீடி-யை கடைக்காரருக்குக் குடுக்கிறப்ப பளிச்சுனு தெரியுதாம். படம் வந்து தியேட்டர்ல ஓடுறப்பப் பார்த்தா இருக்கிறதில்லையாம். நாம அந்த வேலையைப் பண்ணக் கூடாதுங்கண்ணோவ்.”

``காசைக் கையில வாங்கிட்டு ஏமாத்துவேலையை நாம பண்ணக் கூடாது. அது தப்பாப்போயிடும். சரி... எழுத்தாளரு, கதையை அண்ணன்கிட்ட சொல்லட்டுமே! படம் பார்க்கிறவங்களுக்கு சிரிப்பு கூட்டுற மாதிரி படம் முழுக்க இருந்துட்டே இருந்தா சரிதான்” என்றார் மேனேஜர்.

``கதையை போன்லயே பாதி சொல்லிட்டேன். தினமும் அண்ணன் என்கிட்ட `இன்னிக்கி எப்படிப் போச்சு?’னு பொழுதோடு கேட்பாரே. தினமும் அஞ்சு அஞ்சு சீன் பேசி முடிச்சுட்டுதானே டைப்பிங்கே போனாப்ல! லேப்டாப்பை எடுத்துட்டு வந்தே படிச்சுக் காட்டலாம்னா அதுல பேட்டரி போயிடுச்சுங்களாமா! அஞ்சு நிமிஷம்கூட தாங்காதுங்காட்டிதான் எடுத்துட்டு வரலை அவரு. நீங்க அண்ணனுக்கு லைட்டா கதையைச் சொல்லுங்க ஜி!” என்றார் செஞ்சூரியன்.

தொண்டையை சோமு கனைத்துக்கொண்டு கோதண்டத்திடம் `சலங்கையாட்டம்’ கதையை ஆரம்பித்தார். அவருக்கு திடீரென படபடப்பு கூடிக்கொண்டது. இயக்குநர் செய்யவேண்டிய வேலையை, இயக்குநரே வசனகர்த்தாவின் தலையில் கட்டிவிட்டார்.

``அதானுங்ணா, நம்ம கதை நடக்கிறது ஒரு கிராமத்துல. அண்ணன், தம்பி ரெண்டு பேரு. ரெண்டு பேருக்கும் சலங்கை யாட்டம்னா உசுரு. காடு, தோட்டம்னு 20 ஏக்கரா வெச்சிருக்காங்க! அண்ணனுக்குக் கல்யாணமாகி, மூணு வருஷமா கொழந்தை இல்லை. ரெண்டு பேருமே குடிகாரர்கள்தாங்கி றது சுத்துப்பட்டு எல்லா ஊருக்காரவுங்களுக்கும் தெரியும். வீட்டுல அக்கா தன் பொண்ணோட இருக்காங்க. அந்தப் பொண்ணு, காலேஜ் படிக்கப் போயிட்டு இருக்குது.”

``ரெண்டு பேர்த்தோட அப்பாவா நீங்கதான் நடிக்கிறீங்கண்ணா! தோட்டத்துல பத்துப்பேருக்கு சலங்கையாட்டம் சொல்லிக்குடுக்கி றவரு நீங்கதான். இன்டர்வெல்லுக்குப் பின்னாடி ஒரு பெரிய பாட்டு வருதுன்னு சொன்னனுங்கதானே! பாட்டு முடியுறப்ப மூணு நிமிஷம் தாளத்துக்குத் தனியா நீங்க வெளுத்துவாங்குறீங்க!” என்று செஞ்சூரியன் சொல்கையில் கோதண்டம் புன்னகை அவ்வளவு அழகாய் இருப்பதாய் சோமு நினைத்துக்கொண்டார்.

``அண்ணன் வந்து வீட்டு அம்மணிகிட்ட காத்தாலதான் சொன்னாரு, `ஒரு படம் எடுத்து ரிலீஸ் பண்டாம, எங் கட்டையே தீயில வேகாது’ன்னு!’’ மேனேஜர் இடையில் நுழைந்து பெருமிதத்துடன் கூறியதைக் கேட்டும் கோதண்டம் புன்னகைத்தார்.

``அதுக்கு அக்கா என்ன சொல்லுச்சுங்க. அதச் சொல்லுங்க” செஞ்சூரியனும் இடையில் நுழைந்து கேட்டார்.

``வேகலீன்னாலும் யாரு உடப்போறாங்க? போடுறதே மின்மயானத்துல கொண்டி! டப்புனு இழுத்து உட்டான்னா பொகைதான் கூண்டுல போயிட்டு இருக்கும்னு!” அதையும் மேனேஜர் போட்டு உடைக்க அதற்கும் புன்னகையாய் அமர்ந்திருந்தார்.

``அப்புறமுங்ணா, உள்ளூர்ல பக்கத்துக் காட்டுப் பங்காளிதான் பஞ்சாயத்து போர்டு பிரசிடென்ட். எப்படியாச்சும் ஆளுங்களை வெச்சு ரெண்டு பேரையும் போட்டுத்தள்ளிட்டா, காட்டை சொந்தமாக்கிக்கலாம்னு திரியுறாரு. இதுல சின்னவன், அக்கா பிள்ளையைக் காதலிக்கிறதும் வருதுங்ணா.”

``கதை நல்லாருக்கு, சூடா இருக்கிறாப்ல அப்பப்ப கொலைகள் விழுந்துட்டே இருந்தா நல்லாருக்கும்!” மேனேஜர் தன் கருத்தை உள்நுழைத்துப் பேசினார்.

செஞ்சூரியனின் சலங்கையாட்டம்``இன்டர்வெல்லப்ப உள்ளூரு வாத்தியாரைப் போட்டுத்தள்றாங்க, அண்ணனும் தம்பியும் சேர்ந்துங்ணா!” மேனேஜருக்கு செஞ்சூரியனே பதில் அளிக்கவும் அவர் திருப்தியானார்.

``பாதிக்குப் பிறகு சென்னையில இருந்து பிரசிடென்ட் பையன் உள்ளூரு நோம்பிக்கு வந்துடுறாப்ல! அவனுக்கும் கட்டுற முறைதான சின்னவன் காதலிக்கிற பொண்ணும்! அதனால அவனோட ஆசையை நாயகிகிட்ட சொல்றப்ப அவ ஒப்புக்க மாட்டீங்கிறா. அப்பனும் மகனும் குடும்பத்தோடு போயி பொண்ணு கேட்கிறாங்க! பொண்ணோட அம்மா, தண்ணி கிண்ணீன்னு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத பையன் அப்படிங்கிறதால சம்மதம் சொல்லிடுது!”

``துப்பாக்கின்னா சுடணும், குண்டுன்னா வெடிக்கணும், சம்மதம் சொன்னா கல்யாணம் நடந்துடணும்” என்றார் மீண்டும் இடையில் நுழைந்து, மேனேஜர்.

``ஆமாங்ணா! வில்லன் பையன்தான் நாயகியைக் கட்டிக்கிறான். ஆனா, முதல் ராத்திரி முடிஞ்ச காலையில நாயகன் அவளைத் தூக்கிடுறான். அப்புறம் சேஸிங்தான்.”

``செமயா இருக்கே! அப்புறம் என்னதான் ஆகுது?”

செஞ்சூரியனின் சலங்கையாட்டம்``வில்லனோட ஆள்கள் நாயகனைப் போட்டுத்தள்ளிடுறாங்க! நாயகி, புருஷனைப் போட்டுதள்ளிடுறா! அதோட படம் முடியுது. இதுல பார்த்தீங்கன்னா, சென்னையில ஐடி கம்பெனியில வேலையில இருந்த பையன் ஊருக்கு வந்து விவசாயத்துல இறங்குறதுதான் பயங்கரம்ங்ணா. அதுக்கு வசனம் எழுதினாரு பாருங்க இவரு! எனக்கே வில்லனோட பையனாவே நடிக்கலாம்னு ஆசையாயிப்போச்சுங்க! `அருவி’ படத்துல அந்தப் பொண்ணு பேசுமுங்கள்ல... அதைவிட நீளமான வசனம்ணா! படத்துல பார்த்தீங்கன்னா அசந்துடுவீங்க நீங்க!” மேனேஜருக்கு செஞ்சூரியன் சொல்லச் சொல்ல காதுகள் விடைத்துக்கொண்டன.

``அப்படின்னா என் பையனோட மெயில் ஐடி-க்கு, எழுதினதை இன்னிக்கே அனுப்பிடுங்க. நான் முழுசா படிச்சுப் பார்த்துடுறேன்!” என்றார் மேனேஜர்.

செஞ்சூரியனின் சலங்கையாட்டம்

``மெயில் ஐடி-யை இப்பவே குடுங்கண்ணா, ஊடு போனதீம் அனுப்பிவெச்சுடுறோம்.”

``அது என்னான்னு என் பையனுக்குத்தானே தெரியும். அவனை மெசேஜ் பண்ணச்சொல்லிடுறேன் சாயந்திரமா! அண்ணனுக்கு வேற ஈரோட்டுல முக்கியமான வேலை இருக்குதாமா. ஒரு மணி நேரம் பேசிட்டுப் போயிடலாம்னுதான் வந்தோம் ரெண்டு பேரும். ஏண்ணா, போலாங்களா?”

``வில்லன் கேரக்டருக்கு நடிக்கிறதுக்கு ஒரு ஆளைத் தேடீட்டு இருக்காங்கண்ணா. அஞ்சு லட்சம் ரூபாய் குடுக்கிற மாதிரி திருப்பூர்ல பார்க்கணும். கிட்டத்தட்ட என் சைடுல இருந்து பார்த்தீங்கன்னா, முப்பது லட்சம் ரூபாய்க்கு நான் கேரன்டீங்கண்ணா!”

``அதுக்கும் ஆளைப் பிடி செஞ்சூரியன். நமக்கு, கஷ்டமில்லாமப்போயிடும்ல!” என்றபடி கோதண்டம் பத்மாசன நிலையிலிருந்து கால்களை எடுத்துக்கொண்டு எழுந்தார். சீக்கிரமே கடைசிக் கட்டத்துக்கு வந்துவிட்டதால் நிம்மதியானார் சோமுவும். இனி செஞ்சூரியன் தயாரிப்பாளரிடம் தொகையைப் பெற்றுவிடுவார். படிகளில் அமர்ந்திருந்த குரங்குகள், இப்போது மரத்துக்கு ஏறிவிட்டன. சற்று தூரத்தில் ஆண் மயில் ஒன்று சாவுகாசமாய் கீழே கொத்திக்கொண்டு நின்றிருந்தது.

``அப்புறம் உங்க சைடுல முப்பது ரெடிதானுங்கண்ணா? உடப்புடாதுங்கண்ணா இந்த வாட்டி. நாமதான் ஜெயிக்கிறோம். நாளைக்கி கேமராமேனுக்கும் மியூசிக் டைரக்டருக்கும் ஐம்பது ஐம்பது போட்டுவிடுறதா சொல்லியிருக்கனுங்கண்ணா!” என்றார் செஞ்சூரியன்.

``தொப்பை இருக்கே உனக்கு. இதை எப்போ குறைக்கிறது?” என்று மேனேஜர் அவரிடம் கேட்க, ``இதெல்லாம் ஒரு தொப்பையாண்ணா? சிவாஜிகணேசன் அந்தக் காலத்துல பெல்ட் கட்டிக்கிட்டு ஸ்ரீதேவிக்கு ஜோடியா நடிக்கலியாண்ணா? வயசு எனக்கு 37தாண்ணா ஆச்சு! ரஜினிகாந்தே இன்னமும் நடிச்சுட்டுதாண்ணா இருக்காரு.”

``நீ சொல்றதும் சரிதான். மூணு நாளைக்கு மின்னதான் அண்ணன் `வெள்ளோட்டுக்குப் பக்கத்துல நூல் மில்லு குடோன் ஒண்ணு விலைக்கு வருது’ன்னு 30 லட்சம் ரூபாயைக் கட்டி பேப்பரெல்லாம் வாங்கிட்டாரு. அதை இனி ஓடவைக்கணும்னுதான் ஒருத்தர்கிட்ட பேச, ஈரோடு போகவேண்டியிருக்குது நாங்க.”

செஞ்சூரியனின் சலங்கையாட்டம்``அண்ணா, அப்புறம் சொன்னீங்க, மூணு நாளைக்கு முன்ன? நாளைக்கி அட்வான்ஸ் போட்டுவிடணும்ணா! என்கிட்டையும் ஏற்பாடு பண்றதுக்கு ஒண்ணுமில்லங்கண்ணா!”

``அட, ஒரு நல்ல விஷயத்துக்குத்தானே தொழில்ல பணத்தைப் போட்டிருக்காரு அண்ணன். நீயே ஏற்பாடு பண்ணி அனுப்பு. இல்லியா, நாளைக்கே அந்த உடுமலைத் தம்பியை எல்லோரும் போயிப் பார்ப்போம். பத்து லட்சம் ரூபாயை ரெடியா வெச்சுக்கச் சொல்லு. அதை வாங்கி அட்வான்ஸ் கொடுத்திடுவோம். என்ன நான் சொல்றது?”

``அப்பிடியே பண்டிக்கலாங்ணா! காலை நேரத்துல உடுமலை போயிடலாம்!” செத்த முகத்துடன் குரல் கம்ம, செஞ்சூரியன் சொல்வதை சோமுவும் செத்த முகத்தோடு பார்த்தார்.

``அப்புறம் பையனோட மெயில் ஐடி-யை சாயந்திரம் உனக்கு மெசேஜ் பண்ணச் சொல்லிடுறேன். வாங்க பஸ்ஸ்டாண்டுல ஆளுக்கொரு வடையும் டீயும் சாப்பிட்டுப் போகலாம்!” மேனேஜர்தான் இவர்களிடம் சொன்னார்.

``நீங்க சாப்பிட்டு கிளம்புங்கண்ணா, நாங்க இன்னம் சித்த நேரம் கழிச்சுக் கிளம்புறோம்” என்றபடி செஞ்சூரியன் அவர்களுக்கு வணக்கம் வைத்துவிட்டு படிக்கட்டில் அமர்ந்தார்.

``ஜி, என்ன ஜி... 30 லட்சம் ரூபாயைக் கொண்டி நூல் மில்லுல போட்டுட்டதா மேனேஜர் சொல்றாரு?” என்று சோமுவின் முகம் பார்த்து செஞ்சூரியன் கேட்க, ``எனக்கென்னங்க தெரியும்? நீங்கதானே தினமும் போன்ல புரொடியூசர்கிட்ட பேசிட்டே இருக்கிறதா சொன்னீங்க!” என்றார் சோமுவும். அவசரத் தேவைக்கு இப்போதைக்கு ஆயிரம் கிடைத்தால்கூட அவருக்குப் போதும். ஆனால், செஞ்சூரியனிடம் இருக்குமா என்று வேறு தெரியவில்லை.

``உடுங்க ஜி, எப்படியாச்சும் தேடி இன்னொரு புரொடியூசரை நான் புடிச்சுடுறேன். வாங்க போகலாம்” என முன்னால் சென்றவர் பின்னால் சோமு நடந்தார். குரங்குகள், இப்போது மரத்திலிருந்து படிக்கட்டுகளுக்கே திரும்பிவிட்டன.   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism