Published:Updated:

அங்குலட்சுமியும் பாப்பாநியூகினியும்

அங்குலட்சுமியும் பாப்பாநியூகினியும்
பிரீமியம் ஸ்டோரி
அங்குலட்சுமியும் பாப்பாநியூகினியும்

சிறுகதை: காயத்ரி சித்தார்த்ஓவியங்கள்: ரமணன்

அங்குலட்சுமியும் பாப்பாநியூகினியும்

சிறுகதை: காயத்ரி சித்தார்த்ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
அங்குலட்சுமியும் பாப்பாநியூகினியும்
பிரீமியம் ஸ்டோரி
அங்குலட்சுமியும் பாப்பாநியூகினியும்

ங்குலட்சுமி அந்த மின்னஞ்சலை 67-வது முறையாகப் படித்தாள். இத்தனைக்கும் மொத்தமே இரண்டு வரிகள்தான். `என்ன கேட்டாலும் தர சித்தமாயிருக்கிறேன். என்னையே கேட்டாலும்..!’ இதற்கு என்ன அர்த்தம்? எதற்காக இப்படி ஒரு கடிதம்? என்ன அர்த்தம் என்று 22 வயது அங்குலட்சுமிக்குப் புரியாமலில்லை. ஆனாலும் புரியாததுபோல் தனக்குத்தானே நடித்துக்கொண்டாள். நாள் முழுக்க நகம் கடித்தாள். தன் அகப் பரபரப்பு முகத்தில் தெரிந்துவிடாமலிருக்க, பெரும்பிரயத்தனம் செய்தாள்.

அங்குலட்சுமியும் பாப்பாநியூகினியும்

அந்தக் கடிதத்தை அனுப்பியவன் நரேன் என்கிற நரேந்திரன். அங்குலட்சுமியின் அழைப்பில் `நரூ.’ நரேந்திரனை அவளுக்கு ஒண்ணரை மாதமாய்த்தான் தெரியும். அதிலும் அவன் `நரூ’ ஆகி 10 நாள்தான் ஆகிறது. அதற்குள் இப்படி ஒரு மடல். கடைசியாய் அவள் நேற்று மதியம் அவனுடன் யாஹூ சாட்டில் பேசியபோது, `நரூ, உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்’ என்று எதையோ ஆரம்பித்தாள். பெரிதாய் ஒன்றுமில்லை. அவன் வசிக்கும் பாப்பாநியூகினியைப் பற்றித்தான் எதையாவது கேட்க வந்திருப்பாள். அதற்குள் வாசற்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, பதற்றமாய் சாட்டிலிருந்து லாக் அவுட் செய்து வெளியேறிவிட்டாள். அதற்குத்தான் அவன் இப்படி ஒரு பதிலை மெயிலில் அனுப்பியிருக்கிறான்!

அங்குலட்சுமிக்கு உடலில் ரத்தம் கொதித்துக்கொண்டு ஓடுவதுபோலவும், குளிர்ந்து உறைவதுபோலவும் மாறி மாறித் தோன்றிக்கொண்டிருந்தது. நேற்று அவள் அந்தக் கேள்வியை எதற்காகக் கேட்டாள் என்பதுகூட இப்போது அவளுக்கு நினைவில்லை. அப்போது அவள் வெளியேறாமல் இருந்திருந்தாலும் அவன் இதே பதிலைத்தான் சொல்லியிருப்பானா? நல்ல வேளையாய், கடவுள்போல அந்தத் தருணத்தில் வீடு திரும்பிக் கதவைத் தட்டிய அம்மாவை மனதுக்குள்ளாகவே கொஞ்சினாள்.

அங்குலட்சுமியும் பாப்பாநியூகினியும்

அம்மா, தினமும் மதியம் சூடாய்ச் சமைத்து ஐந்து அடுக்கு கேரியரில் அடுக்கி, மேலே அதன் கைப்பிடியில் தலைவாழையிலை ஒன்றைச் சுருட்டி வைத்து எடுத்துப் போவாள். பக்கத்துத் தெருவில்தான் அப்பா நடத்தும் மளிகைக்கடை இருக்கிறது. `மதியம் கடையைப் பூட்டிவிட்டு வந்தால், வியாபாரம் குறைகிறது. ஆள்களிடம் விட்டுவிட்டு வந்தால் கல்லாவில் பணமோ, அந்நேரம் பார்த்து வந்திறங்கும் சரக்கோ குறைகிறது’ என்று அப்பா புலம்பிக்கொண்டே இருந்ததால், கடந்த இரண்டு மாதமாய்த்தான் இந்தப் புதிய ஏற்பாடு. அம்மா கிளம்பிப் போவதற்கும் அப்பாவுக்கு சாப்பாடு பரிமாறி, பாத்திரங்களை அடுக்கி எடுத்துத் திரும்பி வருவதற்கும் எப்படியும் ஒரு மணி நேரம் பிடிக்கும். எல்லா நாளிலும் அங்குலட்சுமிக்கு அந்த ஒரு மணி நேரம்தான் சுபவேளை.

மலேசியாவிலிருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் டெல்லியிலிருந்தும் கொல்கத்தாவிலிருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலிருந்தும் அவள் நண்பர்களைப் பெற்றதும் அவர்களுடன் உரையாடுவதும் அந்த வேளையில்தான். அங்குவின் வீட்டில் உள்ளறையின் மூலையில் சரஸ்வதி பூஜைக்காக மானிட்டரின் நெற்றியில் இடப்பட்ட விபூதிப்பட்டையுடன்கூடிய கம்ப்யூட்டர் ஒன்று உண்டு. மளிகை பாக்கி கூடிக்கொண்டேபோனதில், அதை ஈடுசெய்ய யாரோ ஒருவர் அவள் தந்தை திரு.ராமசாமிக்குக் கொடுத்த பழைய கம்ப்யூட்டர் அது. அவர்கள் வீட்டு ரேடியோவைப் போலவே இதுவும் மக்கர் பண்ணும்போதெல்லாம் மானிட்டரின் தலையிலும் பக்கவாட்டிலுமாக ஓங்கித் தட்டுவார் அவர். அதுவும் அடிவாங்கியவுடன் பாவமாய் ஒளிவிட ஆரம்பித்து, விண்டோஸ் XP திறக்கும். யாரும் பார்க்காவிட்டாலும் ராமசாமி பெருமையாய்ப் புன்னகைத்தபடி அங்கிருந்து நகர்வார்.

ராமசாமி சுவாரஸ்யமான ஒரு மனிதர். அவர் அவ்வளவு வெள்ளந்தியாய் இருப்பதற்கும், ஏமாற்றும் எண்ணமே இல்லாமல் வந்தவர்கள்கூட அவரை ஏமாற்றிப் பணம் பறித்துச் செல்வதற்கும், அவர் பிறந்து வளர்ந்த கொங்கு மண்கூட காரணமாயிருக்கலாம். ஈரோட்டுக்கும் அவிநாசிக்கும் இடையில் இருக்கும் விஜயமங்கலம், அவரின் சொந்த ஊர். அவர் வீட்டின் பின்புறத்தில் சின்னதாய் ஓட்டை உடைசல்கள் போட்டுவைக்கும் அறை ஒன்று இருக்கிறதல்லவா! அதற்குள் போய்ப் பார்த்தால், உங்களுக்கு நான் சொல்வது இன்னமும் தெளிவாய்ப் புரியும்.

அந்த அறையில் கதவுக்குப் பின்புறமாய் பெஞ்ச்போல நீளமாய்க் கிடப்பது, அவர் கடனை உடனை வாங்கி 20,000 ரூபாய்க்கு வாங்கிய காந்தப்படுக்கை! அதில் ஏறி, கண் மூடிக் கைகட்டிப் படுத்துக்கொண்டால், சர்க்கரை முதல் கேன்சர் வரை அத்தனையும் சரியாகிவிடும் என்று எவனோ சொன்னதை நம்பி வாங்கிவந்து வீட்டின் முற்றத்தில் போட்டிருந்தார். `ஒரு நோயாளிக்கு ஒரு மணி நேரத்துக்கு 500 ரூபாய் வசூலித்தால்கூடப் போதுமே. தினமும் பத்துப் பயலாவது வராமலாபோவார்கள்? அந்தத் தெருவில் மட்டுமே அவரோடு சேர்த்து ஏழு சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்களே! எப்படியும் ஒரே வாரத்தில், மிஞ்சிப்போனால் ஒரு மாதத்தில் போட்ட முதலை எடுத்துவிடலாம்’ என்று அவரின் வியாபார மூளை கணக்குபோட்டது.

கடைசியாய் அது, வீட்டில் சண்டை மூளும்போதெல்லாம் கடைசி நாகாஸ்திரம்போல அவர் மனைவிக்குத்தான் பயன்பட்டது. அதைப் பற்றிப் பேச்செடுத்தாலே ராமசாமி நமுத்துப்போன பட்டாசாய் மாறிவிடுவார். இன்னமும் அந்த அறையில் காலி ஆம்வே பாட்டில்கள், ஈமுக்கோழித் தீவனப்பை, சக்தி யந்திரத் தகடு, ராசிக்கற்கள் வாங்கிய ரசீது, சிட் ஃபண்டில் பணம் போட்டதற்கான பத்திரங்கள் எனப் பலதும் உண்டு.

அங்குலட்சுமியும் பாப்பாநியூகினியும்

வீட்டுக்குக் கம்ப்யூட்டர் வந்ததிலிருந்து ராமசாமி அது சார்ந்து ஏமாறுவதற்கான புதிய தேடல்களில் இறங்கியிருந்தார். அவருக்கென்றே டேட்டா என்ட்ரி மூலமாய் பணம் சம்பாதிப்பது, விளம்பரங்களை க்ளிக் பண்ணினாலே போதும் பணம் கொட்டும் என்றெல்லாம் திட்டங்களோடு ஆள்கள் வந்துகொண்டே இருந்தார்கள். ஆனால், எவ்வளவோ போராடியும் அவருக்கு அந்த எழவெடுத்த மெஷினை ஆன் செய்வதைத் தவிர, வேறு ஒன்றும் புரியவேயில்லை. அதற்காகவே பி.ஏ முடித்துவிட்டு வீட்டில் சும்மா இருந்த மகளை, கணினி வகுப்பில் சேர்த்தார். அவளும் dos-ல் ஆரம்பித்து விண்டோஸ், வேர்டு, எக்ஸெல், பவர்பாயின்ட் எனக் கண்டதையும் கற்றுக்கொண்டு, பிறகும் வீட்டில் சும்மா இருந்தாள்.

சென்னையிலிருந்து மாமா பெண் லத்திகா வந்து இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரையும், யாஹூ மெசஞ்சரையும் பற்றிச் சொல்லித்தரும்வரையில் எல்லாம் நன்றாய்த்தான் போய்க்கொண்டிருந்தன. இவளுக்கு `angulakshmi123’ என்று மின்னஞ்சல் முகவரி உருவாக்கித் தந்ததுகூட அவள்தான். `யாஹூ மெசஞ்சரில் பேசும்போது நிஜப்பெயரைப் போடாதே!’ என்றும் எச்சரித்திருந்தாள். ஏன் என்றே தெரியாமல் அங்குவும் `வர்ஷினி’ என்று மாடர்ன் பெயரைச் சூட்டிக்கொண்டு சாட்டுக்குள் நுழைந்தாள். பத்து நொடிகூட தாண்டியிருக்காது. `ஹாய்...’, `ஹாய் வர்ஷு...’, `ASL please’, `hi, en kuda pesuviya?’ என, விதவிதமாய் அவள் முன்னால் சாட் விண்டோக்கள் முளைத்தன. அன்றிலிருந்து தினமும் அவளின் நண்பர்களின் எண்ணிக்கை பெருக ஆரம்பித்தது.

அங்குலட்சுமி கொஞ்சம் கறுப்பு. குழந்தையிலிருந்தே பூசினாற் போன்ற உடல்வாகு. போதாக் குறைக்கு, பத்து வயதிலிருந்து கண்ணாடி அணிந்து மூக்கின் ஓரங்கள் தழும்பேறி, கண்கள் லேசாய் உட்குழிந்து இருப்பதால் அவளுக்கு இவைகுறித்த தாழ்வுமனப்பான்மை உண்டு. யாஹூ மெசஞ்சரில் வர்ஷினி என்ற பெயரும் அவதாரில் அவள் வைத்திருந்த ஒற்றை ரோஜாப்பூவின் படமும் அவளை அழகான பெண்ணாக, பிறர் கற்பனை செய்யப் போதுமானதாய் இருந்தன. அங்கு, தன்னை மிக சந்தோஷமான பெண்ணாக உணர ஆரம்பித்தாள். நிறையபேர் பேசினாலும், அவள் தொடர்ந்து நாகரிகமாய்ப் பேசும் ஆள்களையே நண்பர்களாய்த் தேர்ந்தெடுத்தாள். அவளாகவே யாரையேனும் தேர்ந்தெடுத்துப் பேசுவதாயிருந்தால் பெண் பெயர்களையே தேடுவாள். அப்படி ஒருநாள் `நிம்மி1981’ என்ற பெயரை அழைத்தாள். அவர்களின் உரையாடல் என்னவோ,  `உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்?’, `பிடிச்ச மியூசிக் டைரக்டர் யாரு, ராஜாவா... ரஹ்மானா?’, ` `காதல் கொண்டேன்’ பார்த்துட்டீங்களா? யுவன் பின்னிட்டாருல்ல!’ என்ற ரீதியில்தான் நகர்ந்தது என்றாலும், இருவருக்குமே ஒரே மாதிரியான ரசனையின் அடிப்படையில் பரஸ்பரம் மிகவும் பிடித்திருந்தது.

மறுநாளே அங்குலட்சுமி, தன் பெயர் வர்ஷினி அல்ல என்ற உண்மையை உடைத்தாள். அங்குலட்சுமி என்று பாட்டி பெயரையே வைத்த அப்பாவை உள்ளூர சபித்தபடி, அங்குவை வெட்டிவிட்டு தன் பெயர் `லக்‌ஷ்மி’ என்றாள். மறுபக்கம் ஒரு நொடி மெளனம் நிலவியது. அடுத்து `ஸாரிங்க லக்‌ஷ்மி! நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நானே சொல்லியிருக்கணும். நான் பொண்ணு இல்லை. என் பேர் நரேன்... நரேந்திரன். உங்களை ஏமாத்தணும்னு நினைக்கலை. நேத்தே சொல்லியிருக்கணும். பேச்சு சுவாரஸ்யத்துல சொல்லணும்னு தோணலை. என்கூட தொடர்ந்து ஃப்ரெண்டா இருப்பீங்களா?’ என்ற வரிகள் திரையில் ஒளிர்ந்தன.

அங்குவின் விழிகள் விரிந்தன. உள்ளே எதுவோ பீறிட்டுப் பொங்கியது. அவள் பதில் சொல்வதற்குள்ளாக `உங்க மெயிலுக்கு என் போட்டோ அனுப்பியிருக்கேன்’ என்ற தகவல் வந்தது. இதயம் படபடக்க அவசரமாய் மின்னஞ்சலைத் திறந்தாள். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், அவள் அவசரத்தைப் புரிந்துகொள்ளாமல் ஏதோ யோசனையில் பொறுமையாய்ச் சுற்றி முடித்து மெதுவாய்த் திறந்தது. மடலைத் திறந்து புகைப்படத்தைப் பார்த்தவளுக்கு இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. நரேன், அவ்வளவு வசீகரமாய் இருந்தான். அவனும் கண்ணாடி அணிந்திருந்தான். `நினைத்தேன் வந்தாய்’ விஜய் போலவே ஃப்ரேம் இல்லாத கண்ணாடி. ஆரம்பகால ரஜினிக்கு இருந்ததைப்போல சிலும்பி நின்ற தலைமுடி லேசாய் நெற்றியில் விழுந்திருந்தது. அங்குலட்சுமி மொத்தமாய் விழுந்துவிட்டாள். ஆனாலும் கொஞ்சம் பிகுபண்ணிக்கொண்டு, பொய்யாய்க் கோபித்து அவன் கெஞ்சல்களுக்குப் பிறகு சமாதானம் அடைந்ததைப்போல மன்னித்து இரங்கினாள்.

அதன்பிறகு மற்ற நண்பர்கள் அனைவரையும் புறக்கணித்து, அவனுடன் மட்டுமே உரையாடினாள். அவன் போட்டோ கேட்டபோதெல்லாம் `கணினியில் எதுவும் சேமிக்கவில்லை!’ என்றே மழுப்பினாள். எப்போதோ ஒன்றுவிட்ட அக்கா திருமணத்தில் கண்ணாடியைக் கழற்றிவிட்டு எடுத்த பழைய புகைப்படம் ஒன்றை நால்ரோடு பிரவுஸிங் சென்டரில் ஸ்கேன் செய்து அனுப்பினாள். அதில் அவள் பட்டுப்பாவாடை - தாவணியில், நெஞ்சில் புரளும் தங்க ஆரத்தோடும், காதில் ஜிமிக்கியோடும் கொஞ்சம் ஒல்லியாய் அழகாகவே தெரிந்தாள்.

அடுத்த நாள் மதிய உரையாடலில் நரேன் `லக்‌ஷ்மி... லக்‌ஷ்மி... நீ செம அழகு!’ என்றுவிட்டு சில நொடி தாமதித்து `ஸாரி... ஸாரி... `நீங்க’ன்னு டைப் பண்றதுக்குப் பதிலா அவசரத்துல `நீ’ன்னு சொல்லிட்டேன். கோவமா?’ என்றான். அங்குலட்சுமி, அந்தத் தருணத்தை வெகுவாக ரசித்தாள். அவன் ஒருமையில் அழைத்தது, தித்திப்பாய் இருந்தது. ஆனாலும் பதிலே சொல்லாமல் சைன் அவுட் செய்து வெளியேறினாள்.

மறுநாள் அவனிடமிருந்து மடல் வந்திருந்தது. `லக்‌ஷ்மி... லக்‌ஷ்மி... லக்‌ஷ்மி...’ என்று ஆயிரத்தெட்டு முறை டைப் செய்து கடைசியாய் `ஸாரி!’ என்று இருந்தது. அங்கு உருகிப்போனாள். `ச்சு... எனக்கு கோவமே இல்ல தெரியுமா! நெட் திடீர்னு கட் ஆகிடுச்சு. அம்மாவேற வந்துட்டாங்க. திரும்ப லாகின் பண்ண முடியலை. அதுக்குள்ள இப்டிலாம் மன்னிப்பு கேக்கணுமா? நான் வயசுல சின்னவதான... `நீ’ன்னே கூப்பிடலாம் நரூ. ஸாரி நரேன்!’ என்றுவிட்டு, ஸ்மைலியால் புன்னகைத்தாள். மறுபக்கமிருந்து இன்னமும் பெரிய புன்னகை விரிந்தது.

அங்குலட்சுமியிடம் நரேனைப் பற்றி ஒரு பக்கக் கட்டுரை எழுதச் சொன்னால், பத்துப் பக்கங்கள்கூட எழுதுவாள்தான். ஆனால் அவனைப் பற்றிய தகவல்கள் என்று அவளுக்குத் தெரிந்தவை, முதல் பாராவில் நான்கு வரிகளுக்குள்ளாக அடங்கிவிடும். சென்னையைச் சேர்ந்தவன். வீட்டுக்கு ஒரே பிள்ளை. அவன் அம்மா மீன்குழம்பு வைத்தால், தெருவே மணக்கும். அப்பா பிசினஸ்மேன். பயங்கர கோபக்காரர். இவன் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படித்துவிட்டு `பாப்பாநியூகினி’ என்ற நாட்டில் பணிபுரிகிறான். அவள் சென்னையே சென்றதில்லை. பாப்பாநியூகினி, உலக வரைபடத்தில் எந்தத் திசையில் இருக்கிறது என்பதுகூடத் தெரியாது. `பப்புவா நியூ கினிவா’ என்றுதான் அவன் அனுப்பிய பேரையே முதலில் படித்தாள். அவள் படிப்பிலும் சுமார்தான். வீட்டில் யாருக்கும் எதுவும் வாசிக்கும் பழக்கமில்லாததால், அவன் சொல்லும் பாரதியார் கவிதைகளை பாரதியாரே எழுதியிருக்க வேண்டுமென்ற அவசியம்கூட அவளுக்கு ஏற்படவில்லை.

`எதைக் கேட்டாலும் வெட்கத்தையே தருகிறாய். வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்..?’ `அநேகமாய் பார்க்க மறந்தாலும் தலைக்கு மேல் வானம். என் நினைவுக்குள் நீயும்!’ போன்ற கவிதைகள் அவன் எழுதியதாகவே அவளை வந்தடைந்தன. அவன், அவளை `கண்ணம்மா’ என்று அழைக்க ஆரம்பித்திருந்தான். இதற்கிடையில் வந்ததுதான் நேற்று அனுப்பப்பட்டு இப்போது அவள் 99-வது முறையாகப் படித்துக்கொண்டிருக்கும் மடல்.

அங்குலட்சுமிக்கு, கால்கள் இருக்கும் இடத்தில் வெறும் புகை இருப்பதுபோல உணர்வு ஏற்பட்டது. பாப்பாநியூகினியின் கடற்கரையில் அவனோடு கைகோத்து அலைவதுபோல கற்பனை செய்ய முயன்றாள். அவள் சிறுவயதில் ஒரே ஒருமுறை பூம்புகாரில் கடலில் குளித்திருக்கிறாள். அச்சு அசலாய் அதைப்போலவே இருந்தது பாப்பாநியூகினியின் கடல்!

கம்ப்யூட்டர் சாம்பிராணிப் புகைபோல நாள்கள் காற்றில் கரைந்தன. அவர்கள் இப்போது அஃபிஷியல் காதலர்கள். அவன் ஐ.டி-யில் ஆன்லைன் வந்தால் இடையில் அழைக்கும் மற்ற நண்பர்களுடனும் அப்பா-அம்மாவுடனும் பேசவேண்டியிருப்பதால், அவர்களுக்கு மட்டுமென்று பெயின்ட் பெயரில் narulux@yahoo.co.in என்று புது ஐ.டி-யை உருவாக்கினான். அதிலிருந்தே அவளுடன் பேசினான். இருவரில் ஒருவர் சாட்டுக்கு வர முடியாமற்போனால் மற்றொருவர் அந்த மின்னஞ்சலைத் திறந்து விரகதாபத்திலும் பிரிவிலும் உருகி உருகி மடல் எழுதி அதே மெயிலுக்கே அனுப்பிக்கொள்வது வழக்கமானது. வர முடியாத அவனோ அவளோ, அதைத் திறந்து படித்து பதிலுக்கு உருகுவார்கள்.

அன்று மடலைத் திறந்த அங்குலட்சுமிக்கு, தலைகால் புரியவில்லை. நரேன் ஊருக்கு வருகிறான். இன்னும் ஒரு மாதத்தில் இந்தியாவுக்கு... சென்னைக்கு... அவள் இருக்கும் விஜயமங்கலத்துக்கே வரப்போகிறான். `அப்பாகிட்ட வெப் கேம், ஹெட்போனெல்லாம் கேக்க முடியாது. தோலை உரிச்சிடுவார்’ என்று ஒப்பேற்றிக்கொண்டிருந்தவளுக்கு, இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. இரண்டு வேளை போட்டுக்கொண்டிருந்த ஃபேர் அண்ட் லவ்லியை நான்கு வேளையாக்கினாள். சுமதியக்கா வைத்திருக்கும் பியூட்டி பார்லருக்குப் போய் த்ரெட்டிங், ப்ளீச்சிங், ஃபேஷியல் செய்ய ஆரம்பித்தாள். கான்டாக்ட் லென்ஸ் வேண்டும் என்று அரசல்புரசலாய் ராமசாமியின் காதுகளுக்குள் போட்டுவைத்தாள். நகம் கடித்துக் கடித்துக் காத்திருக்க ஆரம்பித்தாள்.

விஜயமங்கலம், சின்ன கிராமம். அங்கே எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். குறிப்பாய், அங்குவைத் தெரியும். எங்கே வைத்து நரேந்திரனைச் சந்திப்பது என்பது அவளின் தலைபோகிற பிரச்னையாய் இருந்தது. இரவெல்லாம் போர்வைக்குள் சுருண்டுகொண்டு உறங்காமல் யோசித்ததில், லட்டுபோல சுமதியக்காவின் பார்லர் கண் முன்னால் வந்தது. சரியாய், அவள் அம்மா சாப்பாட்டு கேரியரைத் தூக்கிப் போகும் அதே வேளையில், சுமதியக்கா யூகேஜி படிக்கும் தன் மகளுக்காக சாப்பாடு எடுத்துப் போவாள். பிள்ளைக்கு ஊட்டி முடித்து, மீண்டும் ஒருமுறை தலை சீவி, பவுடர் ஒற்றி, கன்னத்தை வழித்து நெட்டிமுறித்து, தன் கண்ணோரத்து மை தொட்டு, சுண்டுவிரலால் குழந்தையின் கன்னத்தில் குட்டியாய் திருஷ்டிப் பொட்டு வைத்து வகுப்புக்கு அனுப்பிவிட்டுத்தான் திரும்புவாள். எப்படியும் 30-45 நிமிடம் பிடிக்கும். அதற்குள் அவள் நரூவை சந்தித்துவிட்டு வீடு திரும்பிவிட முடியும். திரும்பத் திரும்ப மனதுக்குள் எல்லாவற்றையும் நிகழ்த்திப்பார்த்து `பிளான் பக்கா’ என்று தன்னையே பாராட்டிக்கொண்டு சுமதியக்காவை தாஜா செய்யக் கிளம்பினாள்.

அங்குலட்சுமியும் பாப்பாநியூகினியும்

``காலேஜ்ல கூட படிச்ச ஃப்ரெண்டுக்கா. இந்த வழியா போறப்ப, சும்மா ரெண்டு நிமிஷம் பார்த்துப் பேசிட்டுப் போயேன்னு கேக்கிறான். அப்பாவ பத்தி ஒங்களுக்குத் தெரியும்தானே? நீங்க என்கிட்ட சாவி குடுங்க. அஞ்சே நிமிஷம்! `நான் நல்லா இருக்கேன். நீ நல்லா இருக்கியா?’ன்னு ரெண்டு வார்த்தை பேசிப்புட்டு பத்திவிட்டுருவேன். ப்ளீஸ்க்கா... ப்ளீஸ்க்கா...”

அக்கா, நம்பி சாவியைக் கொடுத்துவிட்டாள். தாவணி-பாவாடையில் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து, வளையல்கள் சிணுங்க நகம் கடித்துக் காத்திருந்தாள் அங்குலட்சுமி. போட்டிருந்த ஃபேர் அண்ட் லவ்லியையும் ரெண்டடுக்கு பவுடரையும் மீறிக்கொண்டு நெற்றியிலும் மேல் உதட்டிலும் வியர்வை அரும்பியது. மெல்லிய துணி வைத்து லேசாய் ஒற்றி எடுத்தபடியே ஃபேனின் வேகத்தைக் கூட்டினாள். கண்ணாடியைக் கழற்றி வைத்திருந்தாள். அவளுக்கு தூரப்பார்வை. அவனை அருகில்தானே பார்த்துப் பேசப்போகிறாள். எவ்வ்வ்வளவு அருகில்..! உள்ளிருந்து எதுவோ கிளர்ந்து உடல் முழுக்கப் பரவியது.

யாரோ பார்லரின் கண்ணாடிக் கதவைத் தட்டினார்கள். படபடப்பாய் ஓடிப்போய்த் திறந்தவளுக்கு முகம் மாறியது. அது நரேன் அல்ல. யாரோ ஒரு புது ஆள் தயங்கி நின்றிருந்தான். நெற்றியில் பிளாஸ்திரி ஒட்டியிருந்தான். சட்டை கசங்கியிருந்தது. அங்கங்கே சிவப்புப் பொட்டுகளாய்த் தெரிவது ரத்தமா வேறு ஏதாவதா?

``இங்க லக்‌ஷ்மிங்கிறது..?” - இழுத்தான்.

``நா... நான்தான். நீங்க யாரு?”

``ஐயோ சிஸ்டர்... நீங்கதானா அது. எப்டி சொல்றதுன்னே தெரியல. ப்ளீஸ்... நான் சொல்றத கொஞ்சம் தைரியமா கேளுங்க.”

அவளுக்குத் தலை சுற்றுவதுபோலிருந்தது.

``நரேன் என் க்ளோஸ் ஃப்ரெண்ட். உங்களைப் பார்க்கிறதுக்காகத்தான் நாங்க நேத்து நைட்டே மெட்ராஸ்லேருந்து கிளம்பி வந்தோம். காலையில ஈரோட்டுக்குள்ள நுழையுறப்ப ஒரு சின்ன ஆக்ஸிடென்ட். ஐயோ... அழுவாதீங்க சிஸ்டர். சொன்னா கேளுங்க. ப்ளீஸ்... கண்ணைத் துடைங்க மொதல்ல. நரேனுக்கு, தலையில அடிபட்டிருக்கு. பயப்படுற மாதிரி ஒண்ணுமில்ல. கொஞ்சம் பிளெட் லாஸ். நாலஞ்சு தையல் போட்டிருக்காங்க. டிரிப்ஸ் ஏறுது. தலையில அடிபட்டதால எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லியிருக்காங்க. ப்ளீஸ்... நரேனுக்கு ஒண்ணுமில்ல, அழாதீங்க.”

சில நொடி, பேசுவதை நிறுத்திவிட்டு அந்த பார்லரை விலைக்கு வாங்கப்போகிறவன்போல சுற்றிலும் பார்த்தான். அவள் சத்தமில்லாமல் அழுதுகொண்டிருந்தாள்.

``நீங்க வெயிட் பண்ணுவீங்களே, சொல்லிடலாம்னுதான் ஓடி வந்தேன். சரி, நான் வர்றேன் சிஸ்டர்” என்று திரும்பியவன், தயங்கி நின்றான்.

``ஆக்ச்சுவலி... நான் இதுக்காக வரலை. ஆனா, வேற வழி இல்லாமத்தான் கேக்கிறேன். நரேனுக்கு அடிபட்டதும் அவசரத்துல வேற வண்டியில அவனை ஏத்தி ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிட்டேன். அவன் பர்ஸ் கார்லயே மாட்டிக்கிச்சு. காரை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துட்டுப் போயிட்டாங்க. என்கிட்ட இருந்த காசெல்லாம் காலையிலேயே ஹாஸ்பிடல்ல கட்டிட்டேன். இன்னமும் எக்ஸ்ரே, ஸ்கேன், பிளெட் டெஸ்ட் எடுக்கணும்னு சொல்றாங்க. நரேன் அப்பாவுக்கு, அவன் இங்க வந்திருக்கிறது தெரியாது. இந்த ஊர்ல எங்களுக்கு உங்களத் தவிர...” என்றவன், பாதியில் நிறுத்தி தலையை மறுப்பாய் ஆட்டிக்கொண்டான்.

``இல்ல சிஸ்டர் இது தப்பு. நானே எதாச்சும் பார்த்துக்கிறேன். நான் வர்றேன்” என்று திரும்பி நடந்தான்.

``நில்லுங்க” என்றாள் அவள்.

கழுத்தில் இருந்த மூன்று சவரன் சங்கிலியை அவசரமாய்க் கழற்றினாள். அவள் சடங்கானபோது அவள் தாய்மாமன் செந்தில்குமரன் சீர்த்தட்டில் வைத்த செயின் அது. அவனுக்குத்தான் அவளைக் கட்டிவைக்க வேண்டும் என்பது அவள் அம்மாவின் ரகசிய ஆசை.

வற்புறுத்தி செயினை அவன் கையில் திணித்தாள்.

``அவரை பத்திரமா பாத்துக்கோங்க.”

அவளுக்கு மீண்டும் அழுகை பீறிட்டது. அவன் போய்விட்டான்.

அந்த எட்டு மாத பெண் குழந்தை, அதன் வாயில் அங்குலட்சுமி திணித்த பருப்புச்சோற்றை மீண்டும் மீண்டும் துப்பியது. எரிச்சலாய் குழந்தையைக் கீழே இறக்கிவிட்டதும் வேகமாய் தவழ்ந்து போய் பொம்மையை எடுத்து வாயில் வைத்து எச்சிலொழுகச் சப்பியது. செந்தில், மதியச் சாப்பாட்டுக்கு வரும் நேரம். திடீரென நினைத்துக்கொண்டாள்போல, கம்ப்யூட்டரை ஆன் செய்து யாஹூ மெசஞ்சரைத் திறந்தாள். எப்போதும்போல `நரேன்’ என்ற பெயர் சாம்பல் நிறத்தில் ஆஃப் லைனில் இருந்தது. Narulux மெயில் ஐடி-யைத் திறந்தாள். பழைய தேதியிட்ட நூற்றுக்கணக்கான மடல்கள் அவளே அவளுக்கு அனுப்பிக்கொண்டதாய்க் காட்சியளித்தன. குழந்தை, தரையில் சிறுநீர் கழித்துவிட்டு, புரியாத ஒலிகளால் அவளை அழைத்தது. பெருமூச்சுடன் கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்துவிட்டு எழுந்தாள் அங்குலட்சுமி.