
தய்.கந்தசாமி - ஓவியங்கள்: ரவி
புயல் பாடம்
பைத்தியம் பிடித்த காற்று
கிழக்கின் நிழல்களைப் பிடுங்கி
மேற்குக் கடலில்
வீசிப் போனது
வங்கோடைகளால் சபிக்கப்பட்ட
வளநாடெங்கும்
மரங்களின் பிணங்கள்
பனைகள் மட்டும் நிற்கின்றன
திசைகள் கோடியென
நிரூபிக்க
காற்று ஆடிய வெறியின்
அசைக்க முடியா சாட்சியாக
அறுந்த நினைவுகளின்
சல்லிவேர்களைக் காட்டியபடி
சருகாய்க் கிடக்கின்றன
தோப்புகள்
முன்னறிவித்துவிட்டு
அது நடத்திய தாக்குதலில்
குலைந்துபோயின
மனக்கோட்டைகள்
பஞ்ச பூதத்தில் ஒன்று
பத்து கோடி பூதமாகி
படை நடத்திய பாதையில்
பஞ்சத்தின் தழும்புகள்
தலைமுறை சேமிப்பை
களவாடிக்கொண்ட காற்று
அட்சய பாத்திரத்தை
திருவோடாக்கித்
திருப்பிக் கொடுத்தது
பசியில் நீண்ட கரங்களில்
திரும்பவும் விழுந்தது
செங்கோலின் பிரம்படி
வயிறுகளை
நெடுஞ்சாலை வரை
நீட்டியவர்கள்
திருட்டுப் பட்டத்துடன்
திரும்பினார்கள்
வரமென்று நினைத்து
வாக்களித்த
பாவத்தின் சம்பளம்
சாபமெனக் கற்பித்த
புயற்காற்று போற்றுதும்
புயற்காற்று போற்றுதும்

பாசாங்கின் பிசுபிசுப்பு
பிணக்குகள் மணக்கும்
உன் மாளிகையின் தாழ்வாரங்களில்
தேன் தேடி அலையும்
என் பட்டாம்பூச்சிகளிடம்
நீயே சொல்லி அனுப்பு
உன் மிடுக்கை...
நேசத்தின் தாகங் கொண்டலையும்
அவை அறியாதே இருக்கட்டும்
நம்மிடையே
வறண்டு போய்விட்ட
உறவின் ஈரம்...
நாமற்ற உலகைக்
கண்டடையும்
ஒரு துளிகணத்தில்
பூத்துக் குலுங்கட்டும்
அவற்றுக்கான
பெருவனம்...
அது வரை... அது வரை மட்டும்
காய்ந்து போகாதிருக்க
பிரார்த்திப்போம்
நமது பாசாங்கின் பிசுபிசுப்பு

கூட்டுக்குள்
ஒரு பறவைக் குஞ்சின்
அலகென
எதிர்பார்த்திருக்கிறது வாழ்க்கை
நீ கொண்டு தருவாயென
மீந்த நம்பிக்கையொடு
இன்னுமிருக்கும் இந்த உயிரை
எதுவும் செய்திட
இயலவில்லை என்னால்.
ஒற்றைச் சொல்லையேனும்
உயிர் தண்ணீரெனத் தா
சங்குக்குள் தங்கிவிட்ட
சமுத்திரத்தின் பேரிரைச்சல்
கரைவதும் உறைவதும்
உனது கையில் இப்போது...
கூடென உடலை
முன்மொழிந்தவன்
குருவியென உரைத்தது
உன்னிடம் இப்போது...
கூட்டுக்குள் கொஞ்சம் மிஞ்சியிருக்கிறது
பெருவனத்தின் துளியோசை...