Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

ஓவியம்: செந்தில்

சொல்வனம்

ஓவியம்: செந்தில்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்
சொல்வனம்

மழை நசநசக்கும் இரவு

ப்போது வேண்டுமானாலும் அணையலாம்
நடுங்கும் குளிரில்
எரியும் ஒற்றைத்தெருவிளக்கு

யாரையும் தேடவில்லை
ஆனால் எச்சரிக்கிறது
தூரத்தில் கேட்கும் கூர்க்காவின் விசில்

அமானுஷ்ய இருளில்
ஒளிரும் பூனையின் கண்களுக்கு
சினேகமாகும் வெட்டும் மின்னல்கள்

குடைபிடிக்காமல் சைக்கிள் மிதிப்பவனின்
கால்களில் சேற்றுப்புண் வராமலிருக்க
சுற்றிய பச்சை பாலித்தீன் பைகள்

ஏ.டி.எம் வாயிலின் நாற்காலியில்
கொட்டாவிகளுடன் காவலாளி
அவனருகில் வாலாட்டும் தெரு நாய்

பிளாட்பாரத்தில்  உறங்கப்போகும்
பிச்சைக்காரன் பத்திரப்படுத்துகிறான்
செங்கல்லின் அடியில் தன் ஆதாரை.

-வலங்கைமான் நூர்தீன்

சொல்வனம்

காற்றுக் குமிழியாகவே

மே
லும் அந்தக் கனவை
நாற்பது வருடங்களாக எனக்குத் தெரியும்.

அதன் முகம்
அதன் நிறம்
எனதறையின் சுவரெங்கும்
இன்னும் பழைய மாதிரியே
பிரத்தியேகமான வடிவங்களோடு இருக்கின்றன.

மேலும் அதன் தன்மை குறித்தும்
அதன் பரம்பரை குறித்தும்
இவ்வாறு சொல்ல வேண்டியிருக்கிறது.

கண்கள் பச்சை நிறமுடையன
சில நேரங்களில் மட்டும்
நீல நிறமாக மாறக் கூடியன
தோல்கள் மேகத்தைப்போல
மென்மை
உடல் கடலைப்போல்
எல்லையுடையது.

அந்தக் கனவு
ஆதியிலிருந்து வானத்தின் மற்றும்
பூமியின் மையப்புள்ளியில்
காற்றுக் குமிழியாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறது.

 - ஏ.நஸ்புள்ளாஹ்.

சொல்வனம்

மாலையில் யாரோ...

சு
மதி அக்காவுக்கு
மாலையில் யாரோ மனதோடு பேச
பாடல் ரொம்பப் பிடிக்கும்
எப்போதும்
முணுமுணுத்துக்கொண்டே இருப்பாள்
அவள் கல்யாணக் கேசட்டில்கூட
சின்னு மாமாவிடம் சொல்லி
முகூர்த்தப் பின்னணியில்
இந்தப் பாடலைத்தான பதியச் சொன்னாள்
இது யாரு பாட்டுக்கா என்றால்
பானுப்பிரியா பாட்டு என்பாள்
சுமதி அக்காவை பின்னாளில்
சந்தித்தபோது
பேச்சுவாக்கில்
இதே பாடலை நினைவுகூர்ந்து
இது யாரு பாட்டுன்னு
நினைவிருக்கா என்றேன்
இளையராசா பாட்டு என்றாள்
சமீபத்திய சந்திப்பில்
விளையாட்டாய்
இதே பாடலை பாடச் சொல்லிக் கேட்டேன்
சிரித்தபடியே பாடியவள்
இது ஸ்வர்ணலதா பாட்டு தெரியுமா என்றாள்
தெரியாது என்றேன்
மாலையில் யாரோ... எப்போதும்
எனக்கு சுமதி அக்கா பாட்டுதான்.

- மு.மகுடீசுவரன்

சொல்வனம்

இலகுவாகும் தோல்விகள்

கு
றிபார்த்துப் பந்தை வீசி
போல்டாக்க வேண்டுமென்றே
ஸ்டம்புகள் தெரியும்படி
விலகி நின்று விளையாடுகிறேன்.

சதுரங்கக் காய் நகர்த்தலின்
சூட்சுமங்கள் தெரிந்தும்
தோற்கவேண்டுமென்றே தவறாக
பாதைகளைத் தேர்வு செய்கிறேன்.

பரமத ஆட்டத்திலும்
பாம்புகளிடம் கொத்துப்பட்டு
இறங்கும்படியான எண்ணிக்கையே
பகடையில் விழவேண்டுமென
வேண்டிக்கொள்கிறேன்.

ஓட்டப்பந்தயத்தில்
ஒரு நொடி தாமதித்து நின்று
முந்திச்சென்று வெல்லட்டுமென
மனம் நிறைந்து விட்டுக்கொடுக்கிறேன்.

தெரிந்த கேள்விக்கும்
தெரியாதென்று பொய்யுரைத்து
கர்வத்தோடு சொல்லும் பதிலை
ரசித்திட ஆசைப்படுகிறேன்.

எனது பால்யத்தின் நினைவை மீட்டி
முகில்குட்டியுடன் விளையாடும்
வேளையிலெல்லாம்
இலகுவாகிவிடுகின்றன தோல்விகள்.

-பாப்பனப்பட்டு வ.முருகன்