Published:Updated:

மெய் சிலிர்க்கும் ஓவியங்கள்... அரசைக் கேள்வி கேட்கும் சிற்பங்கள்... திருக்குறள் கண்காட்சி ஸ்பெஷல்

"133 அதிகாரத்துக்கும் படங்கள் வரைந்து புத்தகமாக வெளியிட முடிவு செய்தோம். APP உருவாக்கினோம். வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என ஆரம்பித்ததுதான் இந்தக் கண்காட்சி."

மெய் சிலிர்க்கும் ஓவியங்கள்... அரசைக் கேள்வி கேட்கும் சிற்பங்கள்... திருக்குறள் கண்காட்சி ஸ்பெஷல்
மெய் சிலிர்க்கும் ஓவியங்கள்... அரசைக் கேள்வி கேட்கும் சிற்பங்கள்... திருக்குறள் கண்காட்சி ஸ்பெஷல்

``நீங்கள் நிற்கும் இடத்தில் 2,000 வருடங்களுக்கு முன்பு என்ன இருந்தது? உங்கள் கற்பனையைக் காலயந்திரம் ஆக்குங்கள். உங்களைச் சுற்றி ஒரு பிரமாண்டமான திரைப்படத்தை ஓட்டிப் பாருங்கள். போரும் கலையும் காதலும், கவிதையும், இயற்கையும், அறமும், அடுக்கடுக்காய் விரியும். தமிழர் என்ற இனத்தின் மனசாட்சியும் சாட்சியும் ஒன்றே. திருக்குறள் அதன் பெயர்."

இலக்கியம் கலையின் வழியே மீட்டுருவாக்கம் செய்யப்படும்போது அழகின் அடுத்த பரிணாமத்தை அடைகிறது. மீள் வாசிப்புக்கான அவசியத்தை உணர்த்துகிறது. வாழ்வியலுக்கான இன்றியமையா பண்புகளை கவித்துவத்தோடு கூறுவதில் இலக்கியம் மகத்தானது. திருக்குறள் அதில் தனித்துவமானது. குறள்களின் குரலைக் கேட்டு, அதிகாரங்களை ஆழமாக உணர்ந்த ஒரு கலைஞனின் வெளிப்பாடாக, அதிகார வர்க்கத்துக்கு எதிர்க்குரலாக, அன்பின் ஆன்மாவாக பிரதிபலித்துக்கொண்டிருந்தது சிற்பம் மற்றும் ஓவியக் கண்காட்சி. பார்வையாளர்களின் எண்ணங்களுக்குச் சவால்விட்டு, பிரமாண்டப்படுத்திய கண்காட்சியின் சில தருணங்கள் இதோ...

படம், பாடல், உரை, ஓவியம் எனப் பல்வேறு தளங்களில் மக்களிடம் திருக்குறளை இலக்கியப் பிரியர்களும் கலைஞர்களும் கொண்டுசெல்கின்றனர். 'வேறு எந்த வடிவில் திருக்குறளை மக்களிடம் கொண்டு செல்ல முடியும்?' என்ற கேள்வியில் விளைந்த பதில்தான் கண்காட்சியாகப் பரிணமித்திருக்கிறது. 133 அதிகாரத்தின் பொருளையும் மையப்படுத்தி, 133 வகையான கலை வடிவங்களை ஓவியம், ஸ்கல்ப்சர் (சிற்பம்), செராமிக், மெட்டல் ஆகியற்றைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர்.

கருவறைக்குள் அமர்ந்து அப்பா, அம்மாவை உதைத்துத் தள்ளும் குழந்தை சிற்பம், பெரியவர்களை மதிக்க வேண்டும், மரியாதைப் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என 'பெரியாரைப் பிழையாமையை' பறைசாற்றி நின்றது. `காகத்தின் மேல் காகக்கூட்டங்கள் உணவை பகிர்ந்துண்ணும்' சிற்பம் `ஈகையை’ முன்னிறுத்தி நம்மையும் பகிர்ந்துண்ண அழைத்தபடி சிற்பமாகியிருந்தது.

`சாதி, மதம், ஏழை, பணக்காரன் வேறுபாடின்றி எல்லா உயிரும் சமம் என உலகை அணைத்துக்கொண்டிருக்கும் கேரக்டர்’ அன்பு செய்யுங்கள் என்று சொல்லி உங்களையும் அணைத்துக்கொண்டு 'அன்புடைமையோடு' நின்றது. நிலா நெற்றி, வில் புருவங்கள், மீன் கண்கள், மயிலிறகாய் அடர்ந்த கூந்தல், பூக்களை அணிந்துகொள்ளும் மென்மையான காது எனக் காதலில் மூழ்க வைக்கும் பேரழகான பெண் 'தகை அணங்குறுதலை' அழகாக்கியிருந்தாள். புத்தகத்தின் மேல் சாவிகள் அடர்ந்து நிற்கும் சிற்பம் உனக்கான பாதையை நீயே திறந்துகொள் எனக் 'கல்வியை' போதித்துக்கொண்டிருந்தது. நட்பு, காமத்தையும் உறவுகள் சார்ந்த சிக்கலான விஷயங்களுக்கான சிற்பம்/ஓவியம் குழந்தைகளையும் மனதில் வைத்து உருவாக்கியிருப்பது பாராட்டுதலுக்குரியது.

சமகால அரசியலைத் திருக்குறளோடு பொருத்திச் செதுக்கப்பட்டிருந்த சிற்பங்கள், கூர்மையான விமர்சனங்களை அரசியல்வாதிகளை நோக்கி வீசியது. நம் நாட்டின் இன்றைய வளர்ச்சி நிலைமையை `நாடு’ என்னும் அதிகாரத்துக்காக உருவாக்கிய சிற்பம் விமர்சித்தது. அரசனுக்குப் பணிந்து நடக்கும் அமைச்சர் கூட்டத்தை செஸ் காயின்ஸ் வடிவத்தைப் பயன்படுத்தி `மன்னரைச் சேர்ந்து ஒழுகுதல்' என்னும் அதிகாரத்துக்காக உருவாக்கியிருந்தார். வரலாற்றை ரீவைண்ட் செய்ய வைத்தது அச்சிற்பங்கள். புத்தகத்தினுள் வேர்களைச் செதுக்கி, வேர்களிலிருந்து அம்பேத்கரை உருவாக்கி, அதன் நிழல் வழியாக அம்பேத்கரை தனித்துவப்படுத்திய சிற்பம் 'அறிவுடைமையை' உயர்த்தி நின்றது. இப்படி, எல்லா அதிகாரங்களையும் ஆழமாகவும், அர்த்தமாகவும் வடிவமைத்திருந்தார் ஓவியர் மாதவன். பார்வையாளர்கள் சிற்பங்களையும் ஓவியங்களையும் பார்க்கும்போது தன்னை அதனுடன் அறிமுகப்படுத்திக்கொள்ள முடிகிறது. தனக்குரிய புரிதல்களுடன் அணுகும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அர்த்தங்களை வழங்கும்படியாக பல சிற்பங்கள் உள்ளன. எல்லாவற்றையும் கடந்து திருக்குறளைப் படிக்கத் தூண்டுகிறது. சில சிற்பங்கள் மெய்சிலிர்க்கவும் வைக்கின்றன.

சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை உருவாக்கிய கலைஞர் மாதவன் நம்மிடம் பேசும்போது, ``133 அதிகாரத்துக்கும் படங்கள் வரைந்து புத்தகமாக வெளியிட முடிவு செய்தோம். APP உருவாக்கினோம். வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என ஆரம்பித்ததுதான் இந்தக் கண்காட்சி. விளையாட்டாகத் தொடங்கியது, சீரியஸாக இன்று இவ்வளவு பிரமாண்டமாகியிருக்கிறது. அனைத்து குறள்களையும் சில நாள்கள் படித்தேன், புரிந்துகொண்டேன். ஆரம்பகட்டத்தில் புரிந்ததை ஓவியங்களாக வரைந்து வைத்தேன்.

பல தோல்விகளுக்குப் பிறகே ஒவ்வொன்றும் அதற்கான இறுதி வடிவத்தை அடைந்தது. மூன்று வருடங்கள் இதற்காகக் கடுமையாக உழைத்தோம். மாடர்ன் ஆர்ட்டுக்கு மக்கள் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை ரியலிஸ்டிக்கான இந்த மாதிரியான கண்காட்சிக்கும் கொடுக்க வேண்டும். திருக்குறளில் தெரிந்துகொள்ள, வாழ்க்கைக்கான பல விஷயங்கள் இருக்கின்றன. சின்ன வயதில் அதை நாம் படிப்பதில்லை. இந்தக் கண்காட்சிக்கு மக்கள் வந்து பார்த்தால் திருக்குறள் படிப்பதற்கான அவசியத்தைப் புரிந்துகொள்வர். நிச்சயம் ஆர்வத்தைத் தூண்டும். இன்றைய சூழலில் கலைஞர்களுக்கான சுதந்திரம் இல்லை. கலைஞனுக்கு அடிப்படைத் தேவையே சுதந்திரம்தான். அரசின் தவறுதான் அது. இருப்பதைத்தான் நாங்கள் விமர்சிக்கிறோம். இல்லாததை நாங்கள் படைப்பாக்குவதில்லை. இதுவும் மாற வேண்டும்" என்றார்.

கண்காட்சியை நடத்திய தி சிம்பல் கம்பெனி மேனேஜர் ஹரி கிருஷ்ணா ``திருக்குறளைப் பற்றிய புரிதலைக் கொண்டு வர வேண்டும் என்கிற முயற்சியில் தொடங்கியதுதான் இந்தக் கண்காட்சி. படித்துப் புரிந்துகொள்வதற்கு முன் கலை வழியாக மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ள இந்தக் கண்காட்சி உதவியாக இருக்கும். புத்தகம், ஆப் வழியாகவும் இதை முன்னெடுத்துள்ளோம். வாழ்க்கையில் சுயமாக சிந்தித்துச் செயல்பட திருக்குறள் நிச்சயம் வழிகாட்டும். சந்தோஷ் நாராயணன் இசையில் தாய் எங்கள் தமிழ்நாடே என்கிற ஆல்பமும் வெளியிட உள்ளோம்" என்றார்.

சென்னை ஆர்ட் ஹவுஸில் நடக்கும் இந்த கண்காட்சி வரும் 31-ம் தேதி வரை நடக்கிறது. சிந்திக்க, கற்றுக்கொள்ள, மிரண்டுபோகச் செய்யும் ஆச்சர்யம் அங்குக் காத்திருக்கிறது.