தொடர்கள்
Published:Updated:

ரூபவட்டம்

ரூபவட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரூபவட்டம்

ச.துரை, ஓவியம் : ரவி

ரூபவட்டம்

முன்பொரு காலத்தில்
நான் ஆளுயர கரப்பான்பூச்சியாம்
நிரந்தரமான இருப்பிடமற்றவனாம்
தலைநகர ஜோதிட சிகாமணி இதைக் கூறும்போதே
எனக்கு இரு ஊசி மீசையும்
யாருக்கும் தெரியாத ரெக்கையும் வளர்ந்துவிட்டது.
கதவிடுக்குகளின் வழியே ஊடுருவுவது
அத்தனை சுவாரஸ்யமானதாகிவிட்டது
கழிவறை விடுதிச் சுகங்கள் ஜெயமே
என்றெல்லாம்தான் இருந்தேன்.
பின்பொரு நாள் தற்கொலைத்த
தவளையென்று ஊர்க்கோடாங்கி விளித்தபோது
என் பிசுபிசுத்த கால்கள்
அநியாயத்திற்கென்று தாவத் தொடங்கின.
முதலில் ஊர்க்குளத்திலிருந்து
மேல்த்தட்டு நீச்சல்குளம் தாவினேன்.
பிறகு அலுப்பான புதைமணல்
உடல்க்காரியொருத்தியின் சொல்லுக்கு இணங்கி
காட்டு யானையொன்றின்
தடித்த தோள்களுக்குத் தாவினேன்.
வரலாற்று விசிறியொருவர் விருப்பப்படி
அடித்து விளையாட நேர்ந்தபோது
ஒரேயொரு முறை மட்டும் ஜெயின்கோட்டையிலிருந்து
வில்லியம் கோட்டைக்குத் தாவினேன்.
இந்த அலைச்சலும்
அடங்காத பிசங்கலும் எதற்கென்று
கரப்பானைத் தின்று உப்பிய வயிறுடைய
தவளையான என்னைப் பாம்பொன்று
வாயில் வைத்தபடி கடைசியாகக் கேட்டது.
எதுவும் சொல்லும்படியாக இல்லை நாகமே
என்னைத் தின்றாவது என்னை உறங்கிவிடேன்.