தொடர்கள்
Published:Updated:

விடுதியும் கிழவனும்

விடுதியும் கிழவனும்
பிரீமியம் ஸ்டோரி
News
விடுதியும் கிழவனும்

யவனிகா ஸ்ரீராம், ஓவியம் : வேல்

வேசியர் இல்லத்தில் ரத்தம்
சுக்கில சுரோணிதக் கறைகளை அலசித் துடைத்து
படுக்கைகளை இதயவடிவத் தலையணைகளோடு
அழகுற மீள்செப்பமிடும் ஒரு நரைத்த
முதியவனைத் தேநீரின் பொருட்டு அழைப்புமணியின் வழியே சோம்பலாய் வரவழைத்தேன்
என்னிடம் சில உடலுறவுக் காட்சிகளை
உள்ளடக்கிய அலைபேசி எப்போதும் காமத்திற்குப் போதுமானதாய்
இருந்த ஒரு காலம்
உங்களுக்கும் ஞாபகமிருக்கும்
பெண்கள் அதிகம் மதிப்புக்கூட்டப்பட்ட
இனிப்புப் பண்டங்கள்போலச் சந்தைக்குப் பெரும் குவியலாய்த் தருவிக்கப்பட்டிருந்தார்கள்
கிழவனுக்கு ஓர் இளம்பெண்ணின் மீது
பின்வாங்கும் கடலலைகளின் அவமானம்போல் தோய்ந்து அடிமையாய்
மிஞ்சிய உப்பின் காதல்
அதுவும் அவள் சுவைக்கத் தந்தது
அவன் நத்தைகளை வறுத்து கண்ணீர் மல்கும் காரத்துடன் அவள் உறங்கப்போகும்
இடுக்கில் தலைகோதி தின்னச் சொல்லிவிட்டு அவள் கால்நக்குவான்
போதையில் கிழட்டுத் தாயோளி எனச் சீறி அவன் அடிவயிற்றில் உதைக்கும்
அவள் பாதார விந்தங்களைப் பற்றி அணைத்து அவன் சிரிக்கும் ஒலிதான்
ஒரு பெருநகரத்தின் விடியலில் பறவைகளின் வலசையைத் தொடங்கிவிடுகிறது

விடுதியும் கிழவனும்

மேலும் வேசியர் இல்லங்கள் தந்தைமையைவிட்டுப் பிரிந்தவை
கிழவன் புணர்ச்சியின் வன்மையால் அல்லது ஏமாற்றத்தால் துவண்டும்
தளர்ந்த இளம் தொடைகளின் மீது தன் துர்நாற்ற வாயால் ஆழ்ந்த முத்தமிட்டும்
இதமாகத் தசையுறங்க கைளால் பிசைந்தும் தன் பகலுணவைப் பெற்றுக்கொள்கிறான்
பகலில் உறங்கி இரவில் செல்வச்செழிப்பாய் மங்களத்தைத் துலங்கும் வேசியர் இல்லத்தில்
அவன் தன் மீன்பிடிப்புக் காலங்களை மறந்துபோனான்
ஒரு பியரின் விலைக்கும் காண்டம்களின் காருண்யத்திற்கும்
நோய் வராத பாதுகாப்பின் பேரில் நவீன ரப்பர் காடுகளுக்கு நன்றி செலுத்துவான்
அவன் பராமரிப்பில் பால்ச்சிறுமிகள் சூரியனின்கீழ்
கண்ணயர்கிறார்கள்
கிழவன் நல்ல மொச்சைகளின் பொருட்டு
கரும்புச் சர்க்கரை வறுத்த முந்திரி விதைகள் மேலும் கேட்பாரற்று
மிச்சமாகும் மது வடிகள் காரணமாகச் சமவெளிகளில்
விடுபட்டுத் தொலைவில் வந்து
களைத்த கண்களுடன் கடவுளைப்போல உறங்கிக்கிடக்கிறான்
அவன் முதலாளி காலையில் முகத்தில் தண்ணீரை ஊற்றி எழுப்பும்போது
அதிர்வுடன் இல்லத்து மகளிரை எண்ணிக்கையிடப் பணிக்கப்படுகிறான்
தேநீருக்கும் அந்தப் படியேறி வந்த உழைப்பிற்கும் மேலும் என் சோம்பலுக்குமாய்
இருமடங்கு பணம் கொடுத்தேன்
ஒருமுறை கழிவறையைத் திறந்துபார்த்துவிட்டு என்முன்பு
தலைதாழ்த்தி கதவை மென்மையாக இழுத்தடைத்து விடைபெற்றான்.