தொடர்கள்
Published:Updated:

விழு

விழு
பிரீமியம் ஸ்டோரி
News
விழு

ஆதிரன்

ண்ப…
கற்றுக்கொள்ளலாமா விழுவதற்கு

மரத்திலிருந்து இறந்தவை விழுவதுபோல
மிதிவண்டி அழுத்தும் குழந்தை விழுவதுபோல
இளம்பெண் காதலில் விழுவதுபோல
திரைச்சண்டைக்காரன் புவியீர்ப்புக்கு எதிராய் விழுவதுபோல
ஆலத்திலிருந்து வெளிறிய விழுது விழுவதுபோல
பாலத்திலிருந்து ஒரு வாகனம் விழுவதுபோல

நண்ப…
இது ஒரு வியாபாரம்
சில இழப்புகள் கவிதைபோல
ஈடு செய்ய ஏலாதவைகள்
அல்லது ஓர் அரசு ஆணைபோல
கருணையற்றவை
மறந்துவிடலாம்

விழு

நண்ப…
தரையிறங்கும் விமானம்போல
பயணி தனது பாராசூட்டை உபயோகிப்பதுபோல
பால்சுறா வானை நோக்கி விழுவதுபோல
பரிசு கூரையைப் பிய்த்துக்கொண்டு விழுவதுபோல

நண்ப…
சக்தி வாய்ந்த வதந்தி காதில் விழுவதுபோல
காகிதத்தில் பொருளற்ற வரி விழுவதுபோல
செயலிழந்த சேட்டிலைட் காற்றுமண்டலத்தில் விழுவதுபோல
ஜப்பானியப் பெண்ணின் மஞ்சள் சருமத்தில் வெயில் விழுவதுபோல
தூங்கும் தட்சனின் காதிலிருந்து பென்சில் விழுவதுபோல
துயருற்ற கவிஞன் நிறுவனத்திற்குள் விழுவதுபோல

நண்ப…
கற்றுக்கொள்ளலாமா விழுவதற்கு
கேள்வி ஒன்று பதிலை நோக்கி விழுவதுபோல
ம்…?

- ஆதிரன்