Published:Updated:

நான் ஏன் எழுதுகிறேன்?

நான் ஏன் எழுதுகிறேன்?
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ஏன் எழுதுகிறேன்?

நான் ஏன் எழுதுகிறேன்?

நவீனா

வீனா, தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியைச் சேர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம்

நான் ஏன் எழுதுகிறேன்?

பெற்றவர். தற்போது, கல்லூரி ஒன்றில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஆப்பிரிக்கப் பெண் எழுத்துகள் குறித்து முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். பெண்ணியம் சார்ந்தும், கிரேக்க மற்றும் ரோமானியப் புராணக் கதைகளைத் தழுவியும் இரண்டு ஆங்கிலக் கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் ‘லிலித்தும் ஆதாமும்’ என்கிற இவரது முதல் கட்டுரைத் தொகுப்பு தமிழில் வெளியாகியுள்ளது.

தமிழில் கவிதை, சிறுகதை, கட்டுரை எனப் பல தளங்களில் இயங்குவதற்கு அடித்தளமாக அமைந்த வாசிப்பின் அடுத்தகட்டமாக எழுத்து தென்பட்டது. சமூகத்திடமிருந்தும், அதைச் சார்ந்து வாழும் மனிதர்களிடமிருந்தும், அவர்கள் படைக்கும் இலக்கியங்களிடமிருந்தும், பல அறிவைத் திரட்டிக்கொண்ட பிறகு, அதை முறைப்படி அடுத்துவரும் தலைமுறைகளுக்குச் சென்று சேருமாறு ஏதோ ஒரு கலை வடிவில் விட்டுச் சென்றவர்களால்தான்,  இன்று கலைகளும் இலக்கியங்களும், வரலாறுகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவ்வகையில், என்னைச் சுற்றி நிகழும் அனைத்தின்மீதான எனது புரிதல்களையும் அறிவையும் எழுத்துகளாகப் பதிவு செய்வதை எனது இயல்பான கடமையாகவே கருதுகிறேன். மேலும், எழுத்து எனும் உலகம் நான் நானாக இருப்பதை அனுமதிக்கிறது. உண்மையில் நான் வாழ விரும்பும் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப் பதற்கான மகிழ்ச்சியையும் நிறைவையும் என்னிடத்தில் அது விட்டுச்செல்கிறது.

நான் ஏன் எழுதுகிறேன்?

நாட்டார் வழக்கில் கவிதைகள் எழுதும்போது, எனக்குள் புதைந்துகிடந்த முன்ஜென்மத்தைப் புரட்டிப் பார்த்ததுபோல் பல பொழுதுகளில் உணர்ந்திருக்கிறேன். எனது இருத்தலை அறியச் செய்யும் ஊடகமாய் எனக்கு என் எழுத்துகள் இருக்கின்றன. தமிழின் குறிப்பிடத்தக்க வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதும்போதும், மின்னிதழில் தொடர்க்கட்டுரைகள் எழுதும்போதும், எழுத்து எனது அடையாளமாக மாறிவிட்டிருந்தது. அதன்வழி கிடைத்த அங்கீகாரம் என்னை இன்னும் அதிகமாக எழுத்தின்பால் ஈர்த்தது. எந்தவித ஒளிவுமறைவுக்கும் இடம்கொடுக்காமல், நேர்மறை எண்ணங்களின்மீது கட்டமைக்கப்படும் என் எழுத்துகளில் சமூகத்தின்மீதான நேசமும் குறைவில்லாமல் படர்ந்திருக்கும்.

கால ஓட்டத்தின் வேகத்தோடு சேர்ந்து பயணிக்கக்கூடிய எழுத்துகளில் அதன் வாசகர் தன்னைத்தானே ஏதோ ஒரு புள்ளியில் இனம்கண்டுகொள்கிறார். அத்தகைய எழுத்துகள், எவராலும் அழிக்கமுடியாத சுவடுகளோடு பல தலைமுறைகள் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும். அவ்வகை எழுத்துகள் மக்களுக்கானவை, கடைக்கோடி மனிதனுக்கானவை. அவற்றுள் ஒன்றாக எனது எழுத்துகள் அடையாளப் படுத்தப்படுவதையே நான் விரும்புகிறேன். தீர்வு சொல்வதற்காக அல்லாமல் சமூகத்தின் போக்கை அழுத்தமாகப் பதிவுசெய்யும் பணியையே எனது எழுத்துகள் எடுத்தாள்கின்றன. தனிப்பட்ட பிரச்னைகளாலும் பாதிப்புகளாலும் உந்தப்பட்டு, அதனால் எழும் கோபங்களைத் தீர்த்துக் கொள்வதற்கான தளமாக மட்டுமே எழுத்துகளைப் பயன்படுத்துவது இலக்கியத்தின் நோக்கத்தை ஒருவாறு குறுகலாக்கிவிடக்கூடும் என்பதால், பரந்துபட்ட பார்வையோடு சமூகத்தின் அனைத்து அங்கத்தினருக்கும் பொதுப் பொருளாக விளங்கக்கூடிய எழுத்துகளை, ஒரு பெரும் காட்டை, தன் சிறு அலகால் தட்டித் திறக்கும் சிறு குருவியின் எளிமைகொண்டு புனைவதற்கான இந்தப் பயணத்தை, இன்னும் பல படிநிலைகளைக் கடந்துசெல்லும் ஆவலோடு துவங்கி இருக்கிறேன்.

ஷக்தி

சக்திவேல் புருஷோத்தமன், ஷக்தி என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதிவருகிறார். புற்றுநோய் கதிரியக்கச் சிகிச்சையாளராகப் பணியாற்றிவரும் இவர் புகைப்படம் எடுப்பது, நெடுந்தூரப் பயணங்கள் செல்வது, இயற்கை விவசாயம் ஆகியவற்றின்மீது அதிக ஈடுபாடுகொண்டவர். ‘பிலிஃப்’ எனும் புற்றுநோய் பாதித்த இறுதிக்கட்ட மக்களுக்கான அறக்கட்டளை ஒன்றையும் நடத்திவருகிறார். ‘மரநாய்’, ‘அபோர்ஷனில் நழுவிய காரிகை’ என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

நான் ஏன் எழுதுகிறேன்?

எழுதத் தொடங்கியபோது, தலைமுறைகள் கடந்துசென்ற இந்த நிலத்தின்மீதுதான் கவனமிருந்தது. இந்தக் காலகட்டத்தின் பச்சையான வெளிப்பாடு என் கவிதைகளாய் இருக்க வேண்டுமெனவே விரும்பினேன். பாரம்பர்யங்களை மீட்டெடுத்து மறுகட்டுமானம் செய்ய, அந்நிலத்தின்மீதும் இயற்கை விவசாயம்மீதும் முன்னில்லாத வகையில் அன்பு பெருகியது. அவ்வன்பு ஒரு மாற்றத்தை, இயல்பு வாழ்வில் கவிதை மொழியில் ஒரு துல்லியத்தை உருவாக்கியதை நன்றாக உணர்ந்திருந்தேன். மனித வாழ்வின் தீவிரத் துன்பங்களில் ஒன்றான புற்றுநோய்க் கதிரியக்க சிகிச்சை நிபுணராக என் வாழ்வு பயணப்படத் தொடங்கிய காலத்தில், என் கவிதைகளுக்கு ஒரு விவரணை மொழி தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. மானுட வாழ்வில் நோய் துயர் மூண்டெறியும் ஒருவனின் மனநிலை, சாதாரணத்துவத்தை மீறிய அக் கங்குகளில் இருந்து லகுவான கவிதைகளை மாற்றும் வாய்ப்புகள் மனோவியல் ரீதியாக அயர்வைத் தருகின்றவை. ஆனால், இவ்வகை யதார்த்தத் தளங்கள்தான் எனக்குத் தேவைப்பட்டுக்கொண்டே இருப்பவை.

நான் ஏன் எழுதுகிறேன்?

மூன்று போகங்கள் விளையச் சுனங்காத இந்நிலம், எண்ணெய் அரசியலுக்கு உலகமே ராணுவ பலத்தில் சீரழியும் இக்காலகட்டத்தில், ஒரு போகத்திற்கு மாறிப்போயிருக்கிறது. 19-ம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து அந்த அரசியலின் வேர்கள் மெள்ள வியாபித்ததை உணர மறந்திருந்த முந்தைய தலைமுறைகள், ஜனநாயக சர்வாதிகாரத்தின்முன் தங்களுக்கான தர்மங்களைக் கூவிச் சலித்தும் எதிர்த்தும் பயனற்ற பின், அவர்கள் ஆழ்துளை எண்ணெய்க் கிணறுகளை அமைத்தார்கள். சற்று பெரிய தொகை சம்பளத்திற்குத் தங்களையும் கூடுதல் விலைக்காகத் தங்கள் நிலங்களையும் விற்ற 20 ஆண்டுகளுக்குப் பின், ஏராளமான எண்ணெய்க் கிணறுகளை விளைநிலங்களுக்கு மத்தியில் உருவாக்கினார்கள். என் நிலங்களை வெக்கை வியாபித்தது. அம்மை பீடிக்கும்படி நிறைய எரிவாயுக் குழாய்களை எரியவிட்டார்கள். மீத்தேன்களுக்காக, ஹைட்ரோ கார்பன்களுக்காக என வகை வகையாகப் போராட வேண்டியிருந்தது. இந்த எதிர்ப்புகளை, வலிகளை ஒரு எழுத்தாளனாக எதிர்க்க, பதிவுசெய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கிருப்பதாக நினைக்கிறேன்.

இரு வாழ்வியல் சூழலுக்கு இடையில், யதார்த்தம் தன்னைச் சுயமாக அறிமுகப்படுத்தி வாழ்வின் நிச்சயமின்மையைக் கவிதைகளாக்கச் சொல்கிறது. கிடைக்கப் பெறாத அன்பிலிருந்து நகரமயமாக்கல் மாற்றங்களை, நாகரிகத்தின் வளர்சிதை மாற்றங்களை என எல்லாவற்றிலிருந்தும் அந்நியமாகி அப்பட்டமாகத் தோற்றவற்றிலிருந்துகூட ஒரு கவிதையைத் தருவிக்க முடிகிறது. ஸ்வாதீனத்திற்குத் திரும்ப இயலாதபடி தாக்கப்படும் போராடும் நண்பர்களின் குமுறலாக, உள்வாங்கி வைத்திருக்கும் நடைமுறை வாழ்வின் சிக்கல்களின் பிரதியாக,  இறையியல் போதனைகளை நம்பி காலம் கடத்தும் இயலாதவர்களின் குரலாக, உயிர்த் தோற்றவியலில் விதி பிசகியவர்களின் கனவுகளாக, வரையறையற்று நசுக்கப்பட்டுத் துளைக்கப்படும் இந்நிலத்தின் விசும்பலாக, பின்வாங்கி வெளியேறிவிட்டதாகச் சொல்லப்படும் ஒவ்வொரு மருத்துவமனைப் பணியிலும் வெளிச்சொல்ல இயலாத வலிக்கு நிவாரணியாக, உடல்ரீதியாக உழைத்து வாய்க்கும் வயிற்றுக்கும் போதாத உணவில் வாய்க்கப்பெறாத மருத்துவத்தால் போகிறவனின் இறுதிக்கண மூச்சாக, மலம் கழிக்க ஒதுங்கியவன் எரிவாயுக்குழாய் வெடிப்பில் தீப்பற்றிய நொடியின் ஊன் கருகிய கொடும்வாதையின் முனகலாக, வழிப்படுத்தி எழுத என் எழுத்துகள் எழுதலுக்குள்ளாகிக் கவிதைகளாகும். அதுவே கவிதைகள், அதற்காகவே எழுதுகிறேன். கவிதைக்காகப் பிரத்யேக உத்திகள் எதுவும் என்னிடம் இல்லை. கற்பனை என்பதைத் தாண்டி, இயலாத வடிவங்களின் ஓவியமாக எழுத வாய்க்கும் இவ்வாழ்வின் எதிரொலியை உள்வாங்கி எழுதவே எழுதுகிறேன்; எழுதுவேன். முடிவில்லாத நதிபோல...

- படம் : க.சதீஷ்குமார்