
றாம் சந்தோஷ், ஓவியம் : மணிவண்ணன்
துரத்தும் நிழல்களிலிருந்து

தன்னைப் பத்திரப்படுத்திக்கொள்ளவே
சரியாக இருக்கிறது சுகறாவுக்கு
சுகறா
அடிக்கடி சுகாறா என்றும் விளக்கப்படுவதுண்டு
சுகாறா என வெறிமையின் குரலில் அவள் விளிக்கப்படும் பொழுது
அவள் உடல்மொத்தம் அதிர்வுற்று உதிர்வது
வழக்கம்
உதிரும் தன் உறுப்புகளைப் பொறுக்கிக்கொண்டு
ரம்யத்திலும் ஒரு துளி கசப்புள்ளதை உணர்ந்தவளாய்
அவள் பெயர்வாள்.

சுகறா இந்த முறை, தனது முப்பத்தி மூன்றாவது காதலனை உறவாடினாள்
அவனோ தனது முதலாவது காதலைப் போலவே இருந்தான்;
கூடுதலாக இரண்டாவது காதலனைப் போலவும் இருந்தான்;
மூன்றாவது காதலனைப் போலவும் அவன் இருந்ததை
அவள் உணரத் தொடங்கினாள்
இவ்வாறு தொடர்ந்து நான்காவது ஐந்தாவது… என
முப்பத்தி இரண்டாவது காதலன்களைப் போலவும் அவன் இருந்தான்
இது நிச்சயம் அவளை ஆச்சர்யமுறச் செய்யவில்லை.
இறுதியில், சுகறா அல்லது சுகாறா இவ்வாறாகப் பிரக்ஞையுற்றாள்:
தனது முதல், இரண்டாம், மூன்றாம் தொடங்கி
முப்பத்தி மூன்றாம் காதலன்கள் வரை
யாவரும் ஒருவரே என.
அவள் மேலும் பிரக்ஞையுற்றாள்
அவன் ஒரு மேஜிக்காரன் என்பதை
அவள் மேலும் பிரக்ஞையுற்றாள்
அவன் தன்னைப் போல ஒரு மேஜிக்காரி இல்லை என்பதையும்.