தொடர்கள்
Published:Updated:

பிரம்மைகளின் மாளிகை

பிரம்மைகளின் மாளிகை
பிரீமியம் ஸ்டோரி
News
பிரம்மைகளின் மாளிகை

இந்திரன், ஓவியம் : வேல்

பிரம்மைகளின் மாளிகை

பிரம்மைகளால்

பிரம்மைகளின் மாளிகை


கட்டப்பட்ட மாளிகையில்
வாழ்ந்து வருகிறேன் எழுபது ஆண்டுகளாய்
அன்பு, பாசம், நன்றி, விசுவாசம்
விரோதம், துரோகம், பழிவாங்கல்
உள்ளே ஒன்றுமில்லாத செங்கற்கள் கொண்டு
விதவிதமாய் அலங்கரித்திருக்கிறேன்
என் வீட்டை.
யார் யாரோ போட்ட
செங்கல் சூளைகளில்
சுடப்பட்டுள்ளன
என் மாளிகையைக் கட்டி எழுப்பியதற்கான
செங்கற்கள்.
சாதி, மதம், தேசம், சின்னவன், பெரியவன்
புத்திசாலி, முட்டாள், திறமைசாலி, அயோக்கியன்
என்று நீளும் என் தீர்ப்புகளின்
வாஸ்து சாஸ்திரம் பார்த்து
என் வீட்டைப் பலமுறை இடித்துக் கட்டியிருக்கிறேன்.
என்னை யாருக்கும் தெரியாத
இந்த அந்நிய நகரத்தின் சூரியன்
பெயர் தெரியாத தெருக்களில்
என்னை
ஒரு நிழலாகப் பிடித்துத் தள்ளுகிறபோதுதான்
ஒவ்வொரு செங்கல்லாய்
பெயர்ந்து விழுகிறது
என் பிரம்மைகளின் மாளிகை.
இன்று இந்த இடிபாடுகளிலிருந்து
காயத்தோடு எழுந்து வரும்
நான்
யார்?