Published:Updated:

பெய்திருக்கவேண்டிய மழை

பெய்திருக்கவேண்டிய மழை
பிரீமியம் ஸ்டோரி
பெய்திருக்கவேண்டிய மழை

சிறுகதை: பரிசல் கிருஷ்ணாஓவியங்கள்: ஸ்யாம்

பெய்திருக்கவேண்டிய மழை

சிறுகதை: பரிசல் கிருஷ்ணாஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
பெய்திருக்கவேண்டிய மழை
பிரீமியம் ஸ்டோரி
பெய்திருக்கவேண்டிய மழை

சிவா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் நுழையும்போது மணி 9.30. ஆங்காங்கே படுத்திருந்த சிலர், காபிக் கோப்பையைக் கையில் பிடித்தபடி நடந்துகொண்டிருந்த பயணிகள், ‘ரீச் ஆனதும் மெசேஜ் பண்ணு’ குரல்கள், `தண்ணி பாட்டில் வாங்கிட்டு வரட்டுமாடி’ கொஞ்சல்கள், அவசர நடையில் இருப்பவர்களை இலகுவாகக் கடந்தபடி சுமையுடன் ஓடிக்கொண்டிருக்கும்  போர்ட்டர்கள்... எல்லா வற்றையும் தாண்டிப் பத்தாம் நம்பர் பிளாட்பாரத்தை அடைந்தான். 

பெய்திருக்கவேண்டிய மழை

சேரன் எக்ஸ்பிரஸின் அன்ரிசர்வ்டு கோச் நிரம்பி வழிந்தது. அதற்கடுத்தது HA 1... A1 என்று ஆரம்பித்தன கோச் எண்கள். மொபைலைத் திறந்து எஸ்ஸெம்மெஸ்ஸை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டான். B2 - 24 என்றது ஐஆர்சிடிசி-யின் குறுஞ்செய்தி. ஒவ்வொரு பெட்டியையும் வேடிக்கை பார்த்தபடி B2 கோச்சில் சிவா ஏறும்போது மணி 9.45. இன்னும் 25 நிமிடங்களில் கோவையை நோக்கிப் புறப்பட இருந்தது ரயில்.

வெளியிலிருந்து உள்ளே வந்ததும், ஏசி கோச் இதம் தந்தது. 24-ம் எண்ணைத் தேடியபடியே ரயில்பெட்டிக்குள் நடந்தான். குழந்தை ஒன்று ஜன்னல் இருக்கைக்கு சண்டையிட்டுக்கொண்டிருந்தது. `சீட் மாத்திக்கலாமா?’ என்று ஓர் இளைஞனைக் கேட்டுக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.  பெரும்பாலும் எல்லார் கையிலும் மொபைல். அதில் பலரது காதில் இயர்போன். 24-ம் எண் சைடு பர்த்தில், மேலே இருந்தது. சூட்கேஸைக் கீழே வைத்துவிட்டு ஷோல்டர் பேகை மேலே வைத்தான். ஏறி, இருக்கையில் இருந்த பெட்ஷீட்டை விரித்துகொண்டான். இருந்த சின்னத் தலையணையோடு பேகையும் தலைக்கு வைத்துப் படுத்துக்கொண்டு, மொபைலை எடுத்து, நெட்ஃப்ளிக்ஸைத் திறந்து, கொரியன் சீரிஸை விட்ட இடத்திலிருந்து  தொடர்ந்தான்.  
  
சில நிமிடங்களுக்குப் பிறகு ரயில் புறப்பட்டதா என்று பார்க்க கண்களைத் தாழ்த்தினான். இன்னமும் ஆட்கள் ஏறிக்கொண்டிருந்தனர். மணிபார்த்தான். 10.05. இயர்போனைக் காதிலிருந்து எடுத்து, தண்ணீர் பாட்டிலைத் தேடும்போதுதான் அந்தக் குரல் கேட்டது.

“நான் போய்ட்டு மெசேஜ் பண்றேன். நீங்க கெளம்புங்க.  என்னமோ மொதவாட்டி நான் ஊருக்குப் போறமாதிரி நின்னுட்டே இருக்கீங்க. சொன்னா கேளுங்க. கெளம்புங்க. அஞ்சு நிமிஷத்துல வண்டி எடுத்துருவான்... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் கிளம்புங்க...”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவாவின் காதுகள் அந்தக் குரலை உள்வாங்கி மூளைக்கு அனுப்பியது. மூளை அது ரம்யாவின் குரல்தான் என்று உறுதிசெய்தது.  நான்கு வருடங்களுக்குப் பிறகு ரம்யாவின் குரலைக் கேட்கிறான் சிவா. அதே மாடுலேஷன். அதே  ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்!

ரம்யா...!

பெய்திருக்கவேண்டிய மழை“ஹேய்ய்... சிவா நாம லாஸ்ட் இயர் இன்டர்காலேஜ் காம்பெடிஷன்ல பார்த்திருக்கோம்ல? பி.எஸ்.ஜி. காலேஜ்தானே நீ? செம்ம டான்ஸுடா.”

கல்லூரி இறுதியாண்டில், ஒரு இன்டர்காலேஜ் விழாவில் ரம்யா சிவாவிடம் பேச ஆரம்பித்தது இப்படித்தான். ஆறு மாதங்கள் மிக நன்றாகவே போனது. அவள் ஹிந்துஸ்தான் கல்லூரியில் கணினி அறிவியல் படித்துக்கொண்டிருந்தாள். நன்றாகப் பாடுவாள். படிப்பாள். இருவருக்கும் ஒரு கதையில் நாயகன் - நாயகிக்குத் தேவையான எல்லாப் புரிதல்களும் பிடித்தங்களும் இருந்தன.

கல்லூரிப்படிப்பு முடிந்து ஒரு வருடம் இருவரின் நட்பும் தொடர்ந்தது. ரம்யா நடுவில் கீரநத்தம் செஸ் ஐடி பார்க்கில் வேலைக்குச் சேர்ந்தாள். சிவாவுக்கு ஹோப் காலேஜ் டைடல் பார்க்கில் ஒரு கம்பெனியில் வேலை. திடீரென்று அழைப்பாள்.

“சிவா... எங்க இருக்க? வீட்டுக்கு வா. ப்ரூக்ஸ் போலாம். படத்துக்குப் போகணும்.”

சிங்காநல்லூர் தாண்டி வெள்ளலூர் ரோட்டில் நான்கு கிலோமீட்டருக்கு அப்புறம் சிவா வீடு.  சாய்பாபா காலனி தாண்டி, கவுண்டம்பாளையம் போகும் வழியில் S, Q, W என சிக்கலான எழுத்துகளாக வளைந்து வளைந்து செல்லும் தெருக்கள் தாண்டி ரம்யா வீடு. 

மாங்கு மாங்கு எங்கு பைக்கில் விரைவான். இருவரும் படத்துக்குப் போய் ஐபாகோவில் ஐஸ்க்ரீம் எல்லாம் முடித்துவிட்டு, வீட்டில் விட்டுவிட்டு வருவான். வாரம் இரண்டு மூன்று நாள்களாவது குறும்படத் திரையிடல், ஃப்ரெண்ட்ஸ் மீட்,  சினிமா என்று எங்காவது சந்திப்பது தொடர்ந்தது. அவளது பிறந்தநாளுக்கு கிஃப்ட் கொடுத்தபோது கைகள் நீட்டி அணைத்துக்கொண்டு ‘நீ ஸ்பெஷல்டா’ என்றதில் காதலை சிவா  உணர்ந்தான்.

ஒரு வருடத்தில் வாரத்தில் இரண்டு மூன்று நாள்கள் சந்தித்துக்கொண்டிருந்தார்கள். ரம்யாவுக்கு அவள் தாய்மாமன் என்றால் அவ்வளவு பிரியம். அவர் திருமணமாகி திருப்பூரில் ஒரு கார்மென்ட் ஃபேக்டரி வைத்திருந்தார். அங்கிருந்து டிஷர்ட் எல்லாம் வாங்கி வந்து தருவாள். அந்தத் தாய்மாமன் ஒரு விபத்தில் இறந்துவிட, சுக்குநூறான ரம்யாவை தினமும் சந்தித்துத் தேற்றிக்கொண்டிருந்தான். இருவருக்குமான நெருக்கம் இன்னும் அதிகமானது அந்தக் காலகட்டத்தில்தான். அப்போதெல்லாம் தூக்கமில்லாமல்  தவிப்பாள். இவனை அழைத்து, எதாவது பேசிக்கொண்டிருக்கச் சொல்வாள். இவன் அன்றைக்குப் படித்த புத்தகம், சினிமா என்று எதையாவது பேசுவான். “நான் பேசிட்டே இருக்கேன். உனக்கு தூக்கம் வந்தா தூங்கிரு. உன்கிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் இல்லைன்னா நீ தூங்கிட்டன்னு புரிஞ்சுக்கிறேன்” என்பான் சிவா. அப்படிப் பல நாள்கள் அவளுடனே இருந்ததைப்போல உணர்ந்திருந்தான். ஆறுமாதங்கள் கழித்து அவள் பழையபடி ஆனாள். மீண்டும் சினிமா, குறும்படங்கள் என்று வார இறுதிகள் கழிய... இவனும் அவளுடனான நெருக்கத்தை ரகசியமாக ரசித்துவந்தான். அந்தக் குறிப்பிட்ட நாள் வரும்வரை.

ரஹ்மான் கான்செர்ட் ஒன்று கோவையில் நடந்தது. அவள் வெறிகொண்ட  ரஹ்மானிச ரசிகை.

``டிக்கெட் வேணும் சிவா... ரொம்ப நாளா ட்ரீட் கேட்கறீல்ல? டிக்கெட் மட்டும் வாங்கிக் குடுத்துடு. சண்டே நைட் ‘பைக் & பேரல்’ போறோம். டீல்?”

எப்படியோ யார் யாரையோ பிடித்து, இரண்டு டிக்கெட் வாங்கி அவளைப் பார்த்துக் கொடுத்ததும் கத்திய கத்தலில் ப்ரூக் ஃபீல்டே திரும்பிப் பார்த்தது.

“ஏய்.. எதுக்கு இப்படிக் கத்தற? எல்லாரும் பார்க்கறாங்க...”

“கார்த்திக்குக்கு ஒரு ரஹ்மான் லைவ் கான்செர்ட் போகணும்கறது வாழ்நாள் கனவு. டிக்கெட்டே கெடைக்காதுன்னு புலம்பினான். வாங்கிக் காட்டறேன்னேன். அதான் இவ்ளோ ஹேப்பி. நீ ஸ்பெஷல்டா” என்று இப்போதும் கட்டிக்கொண்டாள். சிவாவுக்கு எல்லாம் இருளாய்த் தெரிந்தது. அப்படியானால் அந்த ரெண்டாவது டிக்கெட் கார்த்திக்குக்கா?

கார்த்திக்?

ஒரே ஒருமுறை இன்ட்ரோ கொடுத்திருக்கிறாள். அவள் பக்கத்துவீட்டுக்காரன். குடும்ப நண்பன். பெங்களூரில் ஐடி வேலை.  

ரம்யா சாதாரணமாகச் சொன்னாள். “சின்ன வயசுல இருந்து அவனைப் பிடிக்கும்டா.”

``யூ மீன்... ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா?”

ரம்யா வராத வெட்கத்தை வரவழைத்துக்கொண்டவளாய்க் குனிந்தாள். அவளுக்கு அது செட்டே ஆகவில்லை!

“சொல்லவே இல்லையே நீ?”

“இல்ல சிவா... நான் லவ் பண்றேன். அவன் மனசுல என்ன இருக்குன்னு தெரியல. இப்ப நான் பாக்கற புராஜெக்ட் முடியப்போகுதுன்னு அவன்கிட்ட எங்கப்பா சொல்லியிருக்கார். உடனே அவன்  எனக்கும் பெங்களூர்ல - அவன் வொர்க் பண்ற கம்பெனிலயே - வேலை ஏற்பாடு பண்ணியிருக்கான். இப்ப நான் பாக்கறதவிட டபுள் சாலரி. ரெண்டு வாரத்துல இன்டர்வ்யூ. பெங்களூர்க்கு ஸ்லீப்பர் பஸ்லதான் போறோம். கரெக்டா  நாங்க போற அன்னைக்கு அடுத்தநாள் அவனுக்கு பர்த்டே. நைட் 12 மணிக்கு பஸ்ல வெச்சுதான் சொல்லப்போறேன். உன்கிட்டதான் மொதல்ல சொல்றேன். ஏன்னா நீ எப்பவுமே ஸ்பெஷல்” என்றாள்.

‘போடீ!’ என்று ஓங்கி அறையலாம்போல இருந்தது இவனுக்கு.

`இவளுக்கு டிக்கெட் புக் செய்ய, கூப்பிடும்போதெல்லாம் ஓடிப்போய் நிக்க, ஆன்லைன் ஷாப்பிங்குக்கு கிரெடிட் கார்டு நம்பர் கொடுக்க, தலைவலிக்குது என்றாலே டாக்டர் அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி அழைத்துச்செல்ல... ‘வர்ற வழில சானிடரி நாப்கின் வாங்கிட்டு வாடா’ என்று சொல்வது உட்பட எல்லாவற்றுக்கும் நான்... லவ் பண்ண மட்டும் கார்த்திக்.’

“அவன்கூட இருந்தா ஒரு தனி ஃபீல். என்ன சொல்றதுன்னு தெரியல. அவன் மங்குணி. வேலை வேலை வேலைதான். கம்ப்யூட்டரைப் பிரிச்சு மேய்வான். எங்க ரெண்டு ஃபேமலிக்குமே லைட்டா ஒரு ஐடியா இருக்கு. சின்ன வயசுல இருந்து ஃபேமலி ஃப்ரெண்ட்ஸ் வேற.”

அவள் ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்க “ஒரு அர்ஜென்ட் வேலை இருக்கு” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். அந்த ஒன்றரை வருட நாள்களில் சிவா, அப்படி அவளை சடாரென்று விட்டுப் புறப்படுவது அதுதான் முதல்முறை.

வீட்டுக்கு வந்ததும் அவளிடமிருந்து வாட்ஸ் அப் மெசேஜ் வந்திருந்தது. வேண்டுமென்றே அதைப் பார்க்காமல் விட்டான். பிறகு போனை எடுத்து ஆன்லைனில் இருப்பதாய்க் காட்டிக்கொண்டான். ஆன்லைனில் இருந்தும் அவளது மெசேஜைப் பார்க்காமல் இருப்பதை அவள் அறியட்டும் என நினைத்தான். இன்னமும் அவன் மனது நிலைகொள்ளாமல் தவித்தது. இப்போது அவள் மெசேஜுகளைப் பார்த்தான்.

 - என்னாச்சுடா உனக்கு?

 - எவ்ளோ சந்தோஷமா உங்கிட்ட ஷேர் பண்ணினேன்.

 - அப்டியே அம்போனு விட்டுட்டுப் போய்ட்டல்ல? திரும்ப வீட்டுக்குப் போக டாக்ஸிக்குக் காசிருக்கான்னுகூட நீ கேட்கலல்ல? உன்கூட வந்தா எப்பவும் நீ இருக்கன்ற தைரியத்துல வெறுங்கையோடதானே வருவேன்?

பெய்திருக்கவேண்டிய மழை

`அடே இளிச்சவாயா!’ என்பதைத்தான் இந்தப் பெண்கள் எத்தனை விதங்களில் அழகாகச் சொல்கிறார்கள்’ என்று நினைத்துக்கொண்டான் சிவா. 
 
மெசேஜைப் பார்த்த ப்ளூ டிக் அவளுக்குத் தெரியட்டும். பதில் சொல்லாமல் இருப்போம். கிடந்து தவிக்கட்டும் என்று நினைத்துக் கொண்டான் சிவா. ஆனால் அவளை ஆன்லைனில் காணவில்லை. வாட்ஸ் அப்பிலிருந்து வெளியேறுவதும் மீண்டும் வாட்ஸ் அப் வந்து அவள் ஆன்லைனில் இருக்கிறாளா என்று பார்ப்பதுமாய், சிவாதான் நிலைகொள்ளாம லிருந்தான்.

இரண்டு மணிநேரத்தில் குறைந்தது ஐம்பது முறைக்கு மேல் போனை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தான். இரண்டு மணிநேரம் கழித்து,  அவளிடமிருந்து, `நீ என்னமோ சரியில்லை. நாளைக்குப் பேசறேன் உன்கிட்ட. எகெய்ன்... யூ ஆர் ஆல்வேஸ் ஸ்பெஷல் டு மீ. குட்நைட்’ என்ற மெசேஜ் வந்திருந்தது. அடுத்தநாள் அவள் அழைத்தபோது ‘will call later’ என்று மெசேஜ் அனுப்பினான். வெட்டியாக இருந்தாலும் பிஸி என்றான். சரியாக மெசேஜுக்கு ரிப்ளை அனுப்பாமல் இருந்தான். அவள் நேரடியாகக் கிளம்பி சிவாவின் வீட்டுக்கு வந்து வெளியே அழைத்துச் சென்றாள். “நீயே என்னைப் புரிஞ்சுக்கலைன்னா வேற யார் புரிஞ்சுப்பா?” என்று சண்டை போட்டாள். ‘உனக்கு என் ஃபீல் புரியவே இல்லையா ரம்யா?’ என்று கத்தவேண்டும் போலிருந்தது சிவாவுக்கு. கார்த்திக் இவர்களைவிட ஏழு வயது சீனியர். நிச்சயம் இவனைவிட அவளுக்குப் பொருத்தமாக இருப்பான் எனும் உண்மைவேறு சிவாவை அசைத்துப் பார்த்தது. பத்துவருட எக்ஸ்பீரியன்ஸ். சீனியர் புராஜெக்ட் மேனேஜர் வேறு. நிச்சயம் இவளுக்கு பெங்களூர் வேலை உறுதி.

அதற்குப் பிறகு இரண்டு வாரங்களில், அவளை அழைக்கும்போது கால்வெய்ட்டிங் வந்தால், சிவாவுக்கு கார்த்திக்கின் முகம் வந்து போகும். அவள் ஆன்லைனில் இருந்து, ப்ளூ டிக் வரவில்லை என்றால் கார்த்திக் மனதுக்குள் உருவமாய் வந்து சிரிப்பான். அப்படியே ப்ளூ டிக் வந்து 30 செகண்டுக்குள் அவளிடமிருந்து பதில் வரவில்லையென்றால் கை பரபரக்கும். ஃபேஸ்புக்கில் கார்த்திக் என்ற பெயரில் இருக்கும் எல்லாரையும் சல்லடை போட்டுத் தேடினான். அவளது ஃப்ரெண்ட்லிஸ்ட்டை இரண்டு மணிநேரம் குடைந்தான். அவளது கார்த்திக்கின் ஐடி எது என்று தெரியவில்லை. எதற்கோ அவள் சிவாவை அழைத்து யோசனை கேட்டபோது  “கார்த்திக்கிட்டயே கேளேன்” என்று சண்டை போட்டான்.

இனி அவள் தனக்கானவளாக மாறப்போவதே இல்லையென்று புரிந்துகொண்டான் சிவா.  “வர்ற சண்டே  ரஹ்மான் கான்செர்ட்... அடுத்த சண்டே பெங்களூர்” என்று அவள் அத்தனை சந்தோஷமாகப்  பகிர்ந்துகொண்டபோது, “என்னை விட்டு அவன்கூடப் போறது உனக்கு ஃபீலே ஆகலையா?” என்று கேட்டான்.

“என்னடா பேசற நீ? நீ வேற அவன் வேறடா. என் லைஃப்ல நீ, அவன் எடத்துக்கு வரலாம். ஆனா உன்னை மாதிரி எல்லாமுமான நண்பனா கார்த்திக்கால மாறவே முடியாது. நீ எப்பவுமே ஸ்பெஷல்” என்றாள். அவள் ‘நீ ஸ்பெஷல்’ என்றாலே இவனுக்குள் எரிச்சல் மூண்டது. பேசிக்கொண்டிருக்கும்போதே போனை நோண்டிக்கொண்டிருந்தது இவனுக்குள் வெறியைத் தூண்டியது. மீண்டும் பலமாக சண்டை ஆரம்பிக்க, அவளும் கோபித்துக்கொண்டு ‘என்னைக்காச்சும் உன்னை லவ் பண்றேன்னு சொல்லியிருக்கேனா?’ என்று கேட்டு சண்டை பிடிக்க... பொது இடத்தில் ‘போடீ...’ என்று திட்டிவிட்டு வந்துவிட்டான். அவள், இவன் முதுகில் சொன்ன ‘கெட் லாஸ்ட்’ இவனுக்குக் கிணற்றுக்குரலாய்க் கேட்டது. 

அதன்பிறகு அவளை மொத்தமாகத் தவிர்த்தான். ஃபேஸ்புக், வாட்ஸ் அப், கால் என்று எல்லாவற்றிலும் பிளாக் செய்தான். ஆபீஸில் ரொம்பநாள் அவர்களாகவே கேட்டுக் கொண்டிருந்த ஆன்சைட்டை ஓகே செய்து டெக்ஸாஸுக்குப் பறந்தான். முழுவதுமாக வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ரம்யாவின் அத்தியாயம் தன் வாழ்வில் முடிந்தது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டான்.

 டெக்ஸாஸில் இருந்தபோது வாரத்துக்கு ஒருமுறை அம்மா அப்பாவிடம் ஃபேஸ்டைமில் பேசுவான். ஆறுமாதங்கள் சென்றிருக்கும்.  ஒருமுறை அம்மா “வீடியோ கால்ல வாடா” என்றாள். எப்போதாவதுதான் அவளாகக் கேட்பாள். சரி என்று வீடியோ கால் செய்தான். இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு, “டேய் ஒருநிமிஷம் யார் வந்திருக்காங்கன்னு பார்டா” என்றாள் அம்மா. டக்கென்று அம்மாவின் முதுகுக்குப் பின்னாலிருந்து ரம்யா வந்தாள். ஒருநிமிடம் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தான் சிவா.

“அடேய் கோவக்காரா” என்றாள் ரம்யா. “எல்லாத்துலயும் பிளாக் பண்ணிட்டா சரியாப்போய்டுமா? உலகம் ரொம்பச் சின்னதுடா!” என்று சிரித்தாள். முன்னைவிட சற்றுப் பூசலாகத் தெரிந்தாள். “என் மெய்லுக்குக்கூட நீ ரிப்ளை பண்லைல்ல?” என்றாள்.

பெய்திருக்கவேண்டிய மழை

நான்கு மாதங்களுக்கு முன் அவளிடமிருந்து மின்னஞ்சல் வந்தது நினைவுக்கு வந்தது.  அப்போதிருந்த கொலவெறி மைண்ட்செட்டில் திறக்காமலே கிடப்பில் போட்டு அப்படியே விட்டுவிட்டான்.

ரம்யா திரும்பி அம்மாவிடம் “அம்மா... ப்ளீஸ்ஸ்ஸ்...” என்றாள். அம்மா புரிந்துகொண்டவளாக “தனியா பேசறியா... சரி கண்ணு...” என்று நகர்ந்து சென்றாள்.

“பாரு. அவங்க வயசுக்கு அவங்க எவ்ளோ புரிஞ்சு நடந்துக்கறாங்க. நீ ஏண்டா இப்படி இருக்க? ஏன் என்னை மொத்தமா அவாய்ட் பண்ற?” என்று கேட்டாள் ரம்யா.

“ப்ச்... விடுப்பா... சொல்லு” என்றான் முழுதாக கோபம் தணியாததைக் காட்டிக்கொள்ளும் குரலில்.

“கண்ண மூடு.” 

“எதுக்கு?” என்று கேட்டான்.

``கண்ணமூடு. நான் சொல்றப்ப திற” என்றாள்.

கண்களை மூடினான். அவளிடமிருந்து  “இப்ப தொற” என்ற குரல் கேட்டதும் திறந்தான். வீடியோ காலிங் திரையை முழுவதும் மறைத்தபடி  `கார்த்திக் Weds ரம்யா’ என்றெழுதப்பட்ட திருமணப்பத்திரிகை இருந்தது. சில நொடிகளில், பத்திரிகை விலகி ரம்யா தன் முகம் காட்டினாள்.

“வீட்ல எல்லாரும் காலைல ஈச்சனாரில போய் மொத பத்திரிகை வைக்கறாங்க. நீ நம்பமாட்ட. நான் உடனே உங்கம்மாட்ட வந்து உனக்கு இன்னைக்கு வீடியோ கால் பண்ணச் சொன்னேன். உனக்குத்தான் மொத பத்திரிகை. இன்னும் உங்கம்மாக்குக்கூட ஏன் வந்திருக்கேன், எதுக்கு உன்கிட்ட பேசறேன்னு தெரியாது. நீ எப்பவுமே எனக்கு ஸ்பெஷல்டா” என்றாள்.

இவனுக்கு முன்பைப்போல கோபமோ ஆற்றாமையோ எதுவுமே இருக்கவில்லை. தன் மனது அமைதியாக இருப்பதைக் கண்டு அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. “கல்யாணத்துக்கு நீ நிச்சயம் வரணும். வர்லைன்னா கொன்னுருவேன்” என்றாள். போகப்போவதில்லை என்றாலும் அப்போதைக்கு சிரித்து “டிரை பண்றேன் ரம்யா” என்றான்.    

அடுத்தநாள் மீண்டும் மனது முன்பைப்போல கேள்விகள் கேட்க ஆரம்பித்தது. மண்டை குடைய, தன்னை ஏன் நிராகரித்தாள் என்பதை மனது அலைபாய்ந்தது. அம்மாவிடம் ``நான் வர்றது கஷ்டம்மா... இப்ப லீவே கேக்க முடியாது. நீ வேணா போய்ட்டுவா. அவளைப் பத்தி என்கிட்ட எதும் பேசாத” என்று சொல்லிவிட்டான்.  மீண்டும் சில மாதங்களிலேயே அவள் நினைவிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டான். இரண்டு வருடங்கள் கழித்து ஒருமுறை கோவை வந்தான். அப்போதும் நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லாரையும் பார்த்துவிட்டுச் சென்றான். அப்போது நண்பர்களுடன் கழித்த ஒரு  நல்லிரவில் மட்டும் ரம்யா பற்றிய பேச்சு வந்து சென்றது. பெங்களூரிலிருந்து அவர்கள் சென்னைக்கு மாற்றலாகி செட்டில் ஆகிவிட்டார்கள் என்பதை அறிந்தான். ஆனால் கவனமாக, மேற்கொண்டு எதுவும் பேசாமல் அதைக் கடந்தான்.

ந்த வீடியோ காலுக்குப் பிறகு, நான்கு வருடங்களுக்குப் பின் இன்றைக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வைத்துதான் அவள் குரல் கேட்கிறான் சிவா. ரயில் இப்போது புறப்பட்டது. தனக்கடுத்த வரிசையில் சைடு பர்த்தில் கீழே இருந்தாள் ரம்யா. பேசுவதா வேண்டாமா என்று குழம்பினான். பிறகு தவிர்க்கலாம் என்று முடிவுசெய்து அமைதியாக மொபைலைக் கையில் எடுத்தான்.

சில நிமிடங்களிலேயே டிடிஆர் வந்து கைநீட்டினார். பர்ஸைத்தேடி, பான்கார்டை எடுத்து நீட்டினான். அப்போது அவருக்குப் பின்னால் வந்து, ரம்யா தன் ஐடி கார்டுடன் நின்றதைக் கவனித்தான். மிகச்சரியாக டிடிஆர், ரம்யாவை மறைத்துக்கொண்டிருந்தார்.  டிடிஆர் இவனது ஐடி கார்டை, வாங்கிச் சரிபார்த்துவிட்டுத் திரும்பக் கொடுத்தார். அவர் இவனிடம் கார்டை நீட்டும்போது கொஞ்சம் நகர்ந்ததில், பின்னால் நின்றுகொண்டிருந்த ரம்யா சிவாவைக் கவனித்துவிட்டாள்.

“ஹேய்ய்ய்ய்ய்... சிவா...” என்றவள் டெசிபல் குறைத்து “வாட் எ சர்ப்ரைஸ்!” என்றாள். அவளது ஹேய்ய்ய்ய்க்கு விழித்து, நிமிர்ந்த சில கண்களிடம் சைகையிலேயே ஸாரி சொன்னவள் சிவாவை `இறங்கு இறங்கு’ என்று கைகாட்டிக்கொண்டே டிடிஆரிடம் கார்டை நீட்டி, சரிபார்த்து வாங்கிக்கொண்டாள்.

பொது இடம் வேறு. என்ன சொல்வதென்று குழம்பிய சிவா, தவிர்க்க முடியாமல் இறங்கினான். “இங்க வா” என்று உரிமையாய் அவன் கைபிடித்து அவளது இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரவைத்தாள். 

கொஞ்சநேரம் அந்தச் சூழலில் தன்னைப் பொருத்திக்கொள்ள சிரமப்பட்டான் சிவா. பாரதிராஜா, பாலுமகேந்திரா தொடங்கி மணிரத்னம், கௌதம் மேனன் என்று பலரும் காதல் காட்சிகளுக்கு ரயிலை சம்பந்தப்படுத்துவதில் ஏதோ நிஜம் இருப்பதாய் அந்த நிமிடத்தில் தோன்றியது அவனுக்கு. ஜன்னலுக்கு வெளியே உலகம் நகர்ந்து கொண்டிருந்தது. எதிரில் அமர்ந்திருந்த ரம்யாவின் கண்களில் கோடிசூர்யப்பிரகாசம்.

``ஒருநிமிஷம் இரு” என்றவள் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தாள். “கார்த்திக்... யு நோ ஹூம் ஐ மெட் இன் டிரெய்ன் நவ்... உன்னால கெஸ் பண்ணவே முடியாது” என்றாள்.

“சிவாவா?” என்றான் கார்த்திக் எதிர்முனையில்.

“ஹைய்ய்ய்யோ... ஹைய்ய்யோ... எப்படி கார்த்திக்?” என்று ஆச்சர்யம் கூட்டினாள் ரம்யா.

“வேற எதுக்கு உன் குரல் இவ்ளோ எக்ஸைட் ஆகப்போகுது?” என்றவன் “சிவாட்ட குடு” என்றான்.

சிவா முழுதாகப் புன்னகைக்காமல், மொபைலை வாங்கினான்.

``ஹலோ கார்த்திக், எப்டி இருக்கீங்க?”

“ஹாய் சிவா... பரவால்லியே, பேசறீங்க. அநியாயத்துக்கு இன்ட்ரோவெர்ட்னு கேள்விப்பட்டேன். டெக்ஸாஸ்ல இருந்து எப்ப வந்தீங்க? எவ்ளோ நாள் டிரிப்?” 

 “நேத்துதான். மூணுவாரம் இருக்கேன் கார்த்திக்.”

“ஏன் கோவை நேரா போகாம சென்னை டு கோவை?”

“சென்னை ஆபீஸ்ல  ஒருநாள் அபீஷியல் வேலை இருந்தது. அத முடிச்சுட்டு அப்டியே வந்தேன். ஒரு டிரிப் ஆபீஸ் செலவு!”

“ரிட்டர்ன் சென்னைல இருந்தா... இல்ல...”

“இன்னும் டிசைட் பண்ல கார்த்திக்.”

“ஓகே... சென்னைல இருந்துன்னா ஒருநாள் முன்னாடி வந்துரணும். எங்ககூட இருந்துட்டு அப்றம் போலாம்” என்றான் கார்த்திக்.

“ஷ்யூர்” என்றவன் மொபைலை ரம்யாவிடம் கொடுத்தான். “ரொம்ப பயந்துட்டே வழியனுப்பினியே... இனி நிம்மதியா தூங்கு. என் ஸ்பெஷல் ஃப்ரெண்ட் இருக்கான்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் ரம்யா.

``உன்னைப் பத்தி நிறைய சொல்லியிருக்கேன் கார்த்திக்கிட்ட. சரி, நீ சொல்லு... எப்படி இருக்க? எப்ப கல்யாணம்? யாரையாச்சும் பார்த்துட்டியா?” என்று கேள்விகளை அடுக்கியவள், “நீ எங்க பார்த்திருக்கப்போற...” என்று பேச்சை நிறுத்தினாள்.
சிவா அமைதியாக நகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“சிவா...”

“சொல்லு...”

“ஏன் என் கல்யாணத்துக்கு வர்ல? ஓகே. அவ்ளோ செலவு பண்ணி வரமுடியாது.  அட்லீஸ்ட் ஒரு விஷ் கூடவா பண்ணத் தோணல?”

சிவா அமைதியாக இருந்தான். அவளை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்தான். என்னதான் அவள் மெதுவான குரலில் பேசினாலும் அந்த இரவின் அமைதிக்கு ஒலி அடங்கவில்லை.

``எனக்குக் கல்யாணமாகி நாலு வருஷமாச்சு சிவா. நீயும் வெளிநாடெல்லாம் போய் வேலை செஞ்சுட்டிருக்க. இனியும் இப்படி எதையும் எக்ஸ்ப்ரஸ் பண்ணாமயே இருக்கப்போறியா?”

சிவா தீர்மானித்தான். இந்த இரவில்... இந்த ரயிலில் பேசவேண்டியதைப் பேசிவிட்டால் போதுமென்று தோன்றியது.

“ரம்யா... நான் உன்னை லவ் பண்ணினேன்னு உனக்கு ஃபீல் ஆகவே இல்லையா?”

“இல்லையே. மொதல்ல நீ உன் லவ்வை எக்ஸ்ப்ரஸ் பண்ணியிருக்கியா?”

“உன்கூடப் பழகின ஒன்னரை வருஷத்துல நீ கூப்டப்பலாம் வந்து நின்னது... உனக்கு என்னவும்னா மொத ஆளா நீ எனக்குக் கூப்டறதுலாம்?”

 “அது கேர். அக்கறை. காதல்னு அதை நான் எப்படி எடுத்துக்கறது? நீ சொன்னியா?”

“சொன்னாத்தான் தெரியுமா?”

“ஆமா. சொன்னாத்தான் தெரியும்” தீர்க்கமாகச் சொன்னாள் ரம்யா. “அந்த ஒன்னரை வருஷத்துல எப்பவாச்சும் நீ என்கிட்ட சண்டை போட்டிருக்கியா சிவா? நான் வரச்சொல்லி வராம இருந்திருக்கியா? நான் பண்றது எதாவது பிடிக்கலைன்னு சொல்லியிருக்கியா? அதாவது கார்த்திக் மேல எனக்கு லவ் இருக்குன்னு நான் சொல்றதுக்கு முன்னாடி?”

சிவா முழித்தான்.  இல்லையே என்று தலையாட்டினான்.

“இல்லைல்ல? என்கிட்ட எதுக்குமே நீ கோவிச்சுக்கிட்டது இல்லை. சண்டை போட்டதில்லை. `வா’ன்னா சொன்ன நேரத்துக்கு வந்திருக்க. அப்படி இருக்கற ஒருத்தனை எப்படி என்னால லவ்வரா நினைச்சுக்க முடியும். உலகத்துலயே பெஸ்ட் ஃப்ரெண்டா இருக்கற ஒருத்தனாலதான் அப்படி எல்லாம் நடந்துக்க முடியும். தவிரவும் எப்பவுமே உன் ஃபீலிங்ஸை நீ எக்ஸ்ப்ரஸ் பண்ணினதில்லை நீ. ஆனா அதான் நீ. அதான் உன் ஸ்பெஷாலிட்டி. ஒண்ணு சொல்றேன் சிவா. இந்த உலகத்துல கார்த்திக்குகளுக்குப் பஞ்சமே இல்லை. சிவா கிடைக்கறதுதான் ஒரு பொண்ணுக்கு ரொம்பக் கஷ்டம். பாதி சிவாக்களை இவங்களே கார்த்திக் ஆக்கிக்கறாங்க. கார்த்திக்கா ஆக முடியாத சிவாக்கள் என்னத்தையோ இழந்துட்டதா ஃபீல் பண்ணிக்கிட்டுத் திரியறாங்க. அவங்களுக்குத் தெரியறதில்லை... கார்த்திக்கைவிட சிவா ஸ்பெஷல்னு!”

சிவா இப்போது நிமிர்ந்து அவளை நேருக்கு நேர் பார்த்தான். நான்கு வருடங்களுக்கு முன்பும் சரி... இப்போதும் சரி. அவள் தெளிவுடன்தான் இருந்திருக்கிறாள் என்று தோன்றியது சிவாவுக்கு. இப்போது இன்னும் அதிக தெளிவு!  

பெய்திருக்கவேண்டிய மழை

“நீ எனக்கு இப்பவும் எப்பவும்  அதே ஸ்பெஷல் சிவாதாண்டா. இன்னும் எத்தனை வருஷம் என்கிட்ட நீ பேசலைன்னாலும் நான் அதே மாதிரி உன்கிட்ட பேசமுடியும். நீ என்னை நேசிச்சதோ, அதை எக்ஸ்ப்ரஸ் பண்ணாம விட்டதோ, நான் கார்த்திக்கை லவ் பண்ணினதுக்கு இத்தனை வருஷம் ரியாக்ட் பண்ணினதோ எதையுமே நான் தப்பா சொல்லல. என்னால ரொம்ப நல்லா புரிஞ்சுக்க முடியுது. ஏன்னா, எனக்கு நீ எப்படியோ அப்படி உனக்கும் நான் ஸ்பெஷல் ஃப்ரெண்ட்தானே. அதைக்கூடப் புரிஞ்சுக்கலைன்னா எப்படி?”

இப்போது சன்னமாகப் புன்னகைத்தான். ``சரி... உனக்குக் குழந்தை?” என்றான்.

“ஒரு பையன். பேரு என்ன தெரியுமா?”

`சிவா’வாக இருக்காது என்று உறுதியாகத் தெரியும். ஆனாலும் என்னவாக இருக்கும் என்று யோசித்தான்.

“நண்பன்! தமிழ்ப்பேருதான் வைக்கணும்னு அவருக்கு ஆசை. பல பேருக்கு அப்பறம் இதை முடிவு பண்ணினோம். நண்பான்னு எல்லாரும் கூப்டுவாங்கல்ல? திட்றதுன்னாகூட ‘டேய் நண்பா’ன்னு கூப்டுத்தான் திட்டுவாங்க” சிரித்தாள். “எவ்ளோ ஸ்பெஷல் பேருல்ல!”

ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் சிவா.

“அவனுக்குப் பாட்டின்னா உசிரு. போனவாரம் அம்மா வந்திருந்தாங்க. முந்தாநாள் அவங்க கெளம்பறப்ப அழுதான்னு, சொன்னாக் கேட்காம கூட்டிட்டுப் போய்ட்டாங்க. இன்னைக்கு அங்க போய் அம்மா அம்மான்னு அழுதிருக்கான். போய் ரெண்டு நாள் இருந்துட்டு நான் கூட்டிட்டு வரணும்.”

அதன்பிறகு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டி ருந்தார்கள். காலை ஆறு மணிக்கு அவள்தான் எழுப்பிவிட்டாள்.

“தூங்கவேல்லடா. ரொம்ப எக்ஸைட்டடா இருந்தது உன்னைப் பார்த்தது. வீட்டுக்கு வா. பையனப் பாரு. மறுபடியும் மூஞ்சியத் தூக்கிவெச்சுட்டுத்  திரியாதே. மொதல்ல அப்பாம்மா திட்றதெல்லாம் உன்கிட்ட புலம்பிட்டிருந்தேன். இப்ப கார்த்திக்கும் நண்பனும் பண்ற அழிச்சாட்டியமெல்லாம் உன்கிட்ட ஷேர் பண்ணுவேன். அவ்ளோதான் வித்தியாசம். என் நம்பர் அதேதான். தயவுசெஞ்சு அன்பிளாக் பண்ணு, சரியா?” என்றாள்.

கோவை ரயில் நிலையத்திலிருந்து அவள் தனி டாக்ஸியில் செல்ல, இவனும் வீடு வந்து சேர்ந்தான்.

தூங்கி எழுந்ததும் சென்னை ஆபீஸுக்கு அழைத்தான்.

“ஹெச் ஆரைக் கனெக்ட் பண்ணுங்க.”

ஹெச் ஆர் லைனில் வந்தார். “சார்... நான் சிவா பேசறேன். நேத்து மீட் பண்றப்ப டெக்ஸாஸ்ல இருந்து சென்னை ஆபீஸுக்கு வர இன்டரஸ்ட் இருக்கறதா சொன்னேன்ல? வேணாம் சார். அதப்பத்தி இப்போதைக்கு வி.பி-கிட்ட எதும் பேச வேண்டாம். டெக்ஸாஸ்லயே இன்னும் ரெண்டு மூணு வருஷம் இருக்கேன். அப்பறம் பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு வேறு சில சம்பிரதாயமாகப் பேசிவிட்டு வைத்தான்.

``எந்திரிச்சுட்டியா” என்று அம்மா வந்தாள். “எத்தனை நாள் இருக்கப்போற?” என்று கேட்டாள்.

“மூணுவாரம்மா. கார் இருக்குல்ல? ஈவ்னிங் ரம்யா வீட்டுக்குப் போய் அவ பையன ஒரு எட்டு பார்த்துட்டு வரலாம். நீயும் வா. போறப்ப சென்னை போய்ட்டு அவங்க வீட்ல ஒருநாள் தங்கிட்டுப் போகணும்மா” என்றான்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism