Published:Updated:

மூங்கில் பூக்கும் தனிமை

மூங்கில் பூக்கும் தனிமை
பிரீமியம் ஸ்டோரி
மூங்கில் பூக்கும் தனிமை

சிறுகதை: பாரதிபாலன்ஓவியங்கள்: செந்தில்

மூங்கில் பூக்கும் தனிமை

சிறுகதை: பாரதிபாலன்ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
மூங்கில் பூக்கும் தனிமை
பிரீமியம் ஸ்டோரி
மூங்கில் பூக்கும் தனிமை

ந்தானகிருஷ்ணன் சாரை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்ப தாக, ஒத்தக்கடை குமார் என்னிடம் சொன்னான். அதுவும் அதிகாலை, நேரங்கெட்ட நேரத்தில் போன்செய்து இதைச் சொன்னான். உடனே நான் ``எந்த சந்தானகிருஷ்ணன்?” என்று கேட்டேன்.  

மூங்கில் பூக்கும் தனிமை

இந்தக் கேள்வியை அவன் என்னிடமிருந்து சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டான். ஒரு கணம் அதிர்ச்சியடைந்தான்.  குரல் குழறியது.

``தூங்கிட்டு இருக்கியா?” என்று அவன் குரல் மெள்ள நழுவியது.

``இல்லை இல்லை, சொல்லு” என்றேன். என் குரலில் வெளிப்பட்ட சலிப்பை அறிந்து, அவன் குரல் தாழ்ந்தது.

``நம்ம சந்தானகிருஷ்ணன் சாரை, மெட்ராஸ்லதான் ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்களாம்” என்று சற்றுத் தயக்கத்தோடு சொன்னான்.

`அப்படியா!’ என நான் ஆச்சர்யம் காட்டுவேன் என்று அவன் எதிர்பார்த்திருக்கலாம். `என்னவாம்... என்ன ஆச்சு அவருக்கு?’ எனப் பதற்றம் காட்டுவேன் என்றும் அவன் எதிர்பார்த்திருக்கலாம். நான் சிரத்தைகாட்ட வில்லை என்றவுடன், அவன் குரல் பலவீனமாகிவிட்டது. உடனே அதைச் சமாளிப்பதுபோல, பேச்சை வேறு திசைக்கு ஓட்டினான். ஏதோ ஒன்றை சம்பந்தமில்லாமல், ஏதாவது பேச வேண்டுமே எனப் பேசிவிட்டு போனை வைத்துவிட்டான்.

அதோடு அவன் அமைதியடைந்திருப்பான். ஆனால், என்னால் முடியவில்லை. எப்படி முடியும்? என்னால் எப்படி அவரை மறக்க முடியும்? அவ்வளவு எளிதாகவா அவரை நான் மறந்துவிட முடியும்? `எந்த சந்தானகிருஷ்ணன்?’ என்று நான் அவனிடம் கேள்வி கேட்டேனே தவிர, அப்படிக் கேட்டது என்னைக் குத்திற்று.

அப்போது ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்கெல்லாம் அவர்தான் ஆதர்சம். சிலர் அவரை `ஆக்ஸ்ஃபோர்டு சந்தானம்’ என்றுதான் சொல்வார்கள். அப்படிச் சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும்.

அந்தக் காலத்திலேயே அவர் ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டிக்குப் போய் ஆங்கில இலக்கியம் படித்தவர். ஆனால் அவரை, அதாவது அந்த உருவத்தைப் பார்த்தால் அப்படி நம்ப முடியாது. மிகவும் சாதாரணமாகத்தான் இருப்பார். கச்சையான உடம்பு. நெடுநெடுவென்று நல்ல உயரம். நிறத்துக்கும் குறைவிருக்காது. ஆடம்பரமாக உடுத்த மாட்டார். ரொம்ப ரொம்ப சாதாரண உடைதான். அதிலும் ஒரு நேர்த்தி, ஓர் அழகு, ஓர் ஒழுங்கு, ஒரு மிடுக்கு இருக்கும். அந்த உடையை அவர் அணிவதால்கூட அந்த `மிடுக்கு’ வந்திருக்கலாம். நாலு முழ வேட்டி, முழுக்கைச் சட்டை ஒன்று, அதுவும் வெள்ளை வெளேர் எனப் பளிச்சென்று இருக்கும். மடிப்பு கலையாமல் கஞ்சி போட்டுத்தான் கட்டுவார். அப்படி அந்த உடையில் அவரைப் பார்க்கின்றபோதுகூட அவர்மீது ஒருவிதமான மதிப்பு வந்துவிடும், அது உடையினால் வருகின்ற மதிப்பு மட்டுமல்ல.

ஆக்ஸ்ஃபோர்டில் படித்தவர் அவர் என்றால் நம்பவே மாட்டார்கள். இழுத்துவிட்டாற்போல் நெற்றியில் குங்குமம் இட்டுக்கொள்வார். பார்ப்பதற்கு எளிமையாகத் தெரிந்தாலும் அவ்வளவு சுலபமாக அவரை அணுகிவிட முடியாது. அவருடைய கண்கள் பளபளவெனத் தீக்கங்குபோல இருக்கும். அறிவு தீட்சண்யம் என்பார்களே, அதுபோலத்தான் கண்கள் இருக்கும். சோப் போட்டுக் கழுவியதுபோல் எப்போதும் முகம் பளிச்சென இருக்கும். அவ்வளவு பளபளப்பு!

கல்லூரி மொத்தமும் அவரைக் கண்டால், மாணவர்கள்தான் என்று இல்லை, ஆசிரியர்கள்கூட அவரிடம் ஓர் அடி தள்ளிதான் இருப்பார்கள். `பிரின்ஸ்பால்’ என்று ஒருவர் இருந்தாலும், அந்தக் கல்லூரியைப் பொறுத்தவரை சந்தானகிருஷ்ணன்தான் ஹீரோ. பிரின்ஸ்பால்கூட அவருக்கு பயப்படுவார். பயப்படுவார் என்றால், `அவர் அறிவுக்கு முன்னால் நாமெல்லாம் எம்மாத்திரம்!’ என்ற ஒரு தாழ்வு. பேசினாலும் சரி, எழுதினாலும் சரி அவ்வளவு தெளிவாக இருக்கும். ஆங்கிலம்தான் என்று இல்லை, தமிழ் இலக்கியத்திலும் மொழியிலும்கூட ஆழ்ந்த பயிற்சி அவருக்கு உண்டு. எந்தச் சங்கப்பாடலைக் கேட்டாலும் அப்படியே சொல்லக்கூடிய அளவுக்குப் பயிற்சிபெற்றவர். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் சொல்வார். அவரைக் காண வேண்டும், பேச வேண்டும், சந்தேகம் கேட்க வேண்டும் என ஒன்றும் வேண்டாம். அவரோடு சிறிது நேரம் இருந்துவிட்டுப் போனால் போதும் என்று பலரும் வந்து போவார்கள். பெரிய பெரிய அறிஞர்கள்கூட வருவார்கள். அது மற்றவர்களுக்குப் பொறாமையாக இருந்தாலும், அதற்கான தகுதி அவருக்கு உண்டு என்பதால் அமைதி அடைந்துவிடுவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூங்கில் பூக்கும் தனிமை

நான் படித்த அந்தக் கல்லூரி, ஒரு தனியார் கல்லூரி; அரசு நிதி உதவியில் செயல்படும் கல்லூரி; பாரம்பர்யமிக்க கல்லூரி. அந்தக் கல்லூரிக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் `சந்தானகிருஷ்ணன்’ அங்கு பணியாற்றுகிறார் என்பதுதான் தனித்த அடையாளமாக நிலைத்துவிட்டது.

ஆண்டுக்கு ஒருமுறை அந்தக் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெறும், அதுவும் மிகச் சிறப்பாக. இதுபோன்ற நேரத்தில்தான் அந்தக் கல்லூரியின் நிறுவனர், அந்தக் கல்லூரிக்கு வருவது வழக்கம். அவர், பாரம்பர்யமான குடும்பத்தைச் சேர்ந்தவர்; மிகப்பெரிய தொழிலதிபர். கல்வியை ஒரு சேவையாகவே செய்துவரும் குடும்பம், அவரது குடும்பம். அதன் காரணமாக அவருக்கு பெரிய மரியாதை உண்டு. அவர் கல்லூரிக்கு வந்தவுடன் அவரைக் காண கல்லூரிப் பேராசிரியர்கள் எல்லோரும் திரண்டு போவார்கள். அவரைப் பார்த்ததும் பணிந்து வணக்கம் வைப்பார்கள். அந்தக் கூட்டத்தோடு சந்தானகிருஷ்ணன் ஒருபோதும் போக மாட்டார். கல்லூரியின் நிறுவனர்தான் அவர் இருக்கும் இடத்துக்கே தேடிச் சென்று அவருக்கு வணக்கம் வைப்பார், அப்போதுகூட அவர் உடல் வளையாமல் நேராக, நிமிர்ந்துதான் நிற்கும். இதை அவர் ஒரு திமிராகச் செய்வதில்லை. அது அவர் இயல்பு என்பதுபோலவே இருக்கும். இதைப் பார்த்துதான் எல்லோரும் ஆச்சர்யப்படுவார்கள்.

அவருடைய ஆங்கில வகுப்புகளைக் கேட்பதற்காக மற்ற கல்லூரிகளில் இருந்தெல்லாம்கூட, சில நேரம் மாணவர்கள் வருவதுண்டு. அதுவும் ஆராய்ச்சிப் படிப்புப் படிக்கும் மாணவர்கள் அவருக்காகக் காத்துக் கிடப்பார்கள். இவையெல்லாம் நான் அந்தக் கல்லூரியில் படித்தபோது மற்றவர்கள் சொல்லக் கேட்டவை மட்டுமல்ல, கண்கூடாக நானே பார்த்துத் தெரிந்துகொண்டவை.

என் பரம்பரையில் ஒருவர்கூட பள்ளிக்கூடத்தைப் பார்த்ததில்லை. என் பரம்பரை மட்டுமல்ல, என் கிராமமே கல்லூரியின் வாசனையைக் காணாதது. எப்படியோ தட்டுத்தடுமாறி நான் கல்லூரியில் காலடி எடுத்து வைத்துவிட்டேன். அதைத் தொட, நான் பட்டபாடு எனக்குத்தான் தெரியும். அதை `வலி’ என்று ஒற்றைச் சொல்லில் கூறிவிட முடியாது. என்னைப் பொறுத்தவரை எப்படியோ தொட முடியாத ஒன்றைத் தொட்டுவிட்டேன்.  என் குலமும் குடியும்கூட அதை அதிர்ஷ்டமாகத்தான் நினைத்தன. அந்தக் கனவோடுதான் நான் அந்தக் கல்லூரியில் கால் வைத்தேன்.

சிறுவயதிலிருந்தே எனக்கு ஆங்கிலம் என்றால் சற்று அலர்ஜி. அதனால் நான் ஆங்கிலப் படிப்புப் பக்கம் ஒதுங்கவில்லை. பி.எஸ்ஸி., விலங்கியல் பட்டப்படிப்பில் சேர்ந்தேன். எங்கள் வாழ்வே பெரும்பாலும் விலங்குகளோடுதான் கழிந்தது. இதைச் சொல்ல நான் வெட்கப்படவில்லை. எங்கள் ஐயாவுக்கு வயல்வெளியில் எலி பிடிப்பதுதான் பிழைப்பு. குடியானவர்களின் வயல்களிலும் தோட்டங்களிலும் எலிப்பொறி வைப்பார். அதற்கான தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர். எப்போதும், அந்தச் சேற்றிலே கிடப்பார். `எலி பிடிக்கிறேன்’ என்று வளைக்குள் கைவிட்டு, எத்தனையோ முறை பாம்புக்கடி, நண்டுக்கடி இன்னும் என்னென்னவோ விஷக்கடி எல்லாம் பட்டு, உயிர் தப்பியிருக்கிறார்! எத்தனை எலி பிடிக்கிறாரோ, அதற்குத் தகுந்தபடிதான் கூலி கிடைக்கும், அதுவும் வருடக் கடைசியில் நெல் அறுவடையின்போதுதான், ஒரு மரக்காலோ, இரண்டு மரக்காலோ. எலிக்காரன் என்றால் இளக்காரம்தான். கருக்கா நெல்லாகத்தான் போடுவார்கள். அதையும் எளிதில் வாங்கிவிட முடியாது.

ஆத்தாவுக்கு ஆடு மேய்ப்பதுதான் வேலை. காலையில் ஆட்டை ஓட்டிக்கொண்டு போனால் இரவுதான் வீடு திரும்புவாள். அந்த ஆடுகள்கூட எங்களுக்குச் சொந்தமில்லை. எல்லாம் `கிடை’ ஆடுகள்தான். மேய்ச்சல் கூலிதான். இவையெல்லாம் தற்செயல் எனச் சொல்வதா அல்லது நானாக உருவாக்கிக்கொண்டவையா என எனக்குத் தெரியவில்லை. ஆனால், விலங்குகளோடு எனக்கு இருந்த பிரியமும் உறவும் அலாதியானவை.

இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். விலங்குகளைப் பற்றித்தான் படிக்க வேண்டும் என்ற லட்சியமெல்லாம் எனக்கில்லை. கல்லூரிக்குப் போய்ப் படிக்க வேண்டும், அவ்வளவுதான். இத்தனைக்கும் நான் ப்ளஸ் டூ-வில் நல்ல மார்க் எடுத்திருந்தேன். அப்போது எனக்கு `மெடிக்கல் சீட்’கூடக் கிடைத்திருக்கும் என்று சொன்னார்கள். அப்போதெல்லாம் இப்போதுபோல், நுழைவுத்தேர்வு, நீட் தேர்வு என்றெல்லாம் இல்லை. ப்ளஸ் டூ மார்க்கை அடிப்படையாக வைத்துதான், சீட் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். நீங்கள் நம்ப மாட்டீர்கள், என்னைவிடக் குறைவான மார்க் எடுத்த வண்டிமாட்டுச் செட்டியார் மகன் செல்லமுத்து, மதுரை மெடிக்கல் காலேஜில் சேர்ந்துவிட்டான். 

மூங்கில் பூக்கும் தனிமை

அப்போது நான் இருந்த நிலையை உங்களுக்கு எப்படிச் சொல்வது? மருத்துவம் படிப்பதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்றுகூட எனக்குத் தெரியவில்லை. அதெல்லாம் நமக்கு அப்பாற்பட்ட படிப்பு என்ற ஒதுங்கல், ஒரு தாழ்வுமனப்பான்மை. இவை மட்டுமல்ல, `அதற்கெல்லாம் நம்மால் செலவு செய்ய முடியாது’ என்ற அச்சத்தாலும் அதைப் பற்றிச் சிந்திக்காமலேயே இருந்துவிட்டேன். இதைப் பற்றியெல்லாம் எனக்குச் சொல்வதற்குக்கூட அப்போது ஆள் இல்லை. அப்படியான ஒரு சூழலில்தான் இருந்தேன். ஏதாவது ஒரு கல்லூரியில் போய் காலடி வைத்துவிட்டால் போதும் என்பதுதான், அப்போதைய என்னுடைய அதிகபட்சக் கனவு.

ன் மனம் பரபரத்தது, `சந்தானகிருஷ்ணன் சாருக்கு என்ன ஆகியிருக்கும்?’ என ஒரே பதற்றம். எப்படி என்னால் அவரை மறக்க முடியும்? மறக்கக்கூடியவரா அவர்? ஏதோ ஒருவிதத்தில், என் வாழ்வோடு தொடர்புடையவர் ஆகிவிட்டவர் அவர். நான் கல்லூரியை விட்டு வந்து 30, 35 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. இப்போதெல்லாம்0 நான் எதற்கும் பதற்றம்கொள்வதுமில்லை... பரபரப்பு அடைவது மில்லை, அல்லது அப்படி நினைத்துக்கொண்டி ருக்கிறேனோ என்னவோ!

என் கல்லூரிப் பருவம் முழுவதும் ஒருவிதமான பதற்றத்தோடும் பரபரப்போடும்தான் கழிந்திருக்கிறது. ஏதோ ஒன்று அவ்வப்போது வந்துகொண்டே இருந்தது. அதிலிருந்து என்னால் விடுபடவே முடியவில்லை. நானும் எவ்வளவோ முயன்று பார்த்துவிட்டேன், முடியவில்லை. என் மனம், எப்போதும் நடுங்கிக்கொண்டேதான் இருந்தது. அதை எப்படிக் கடக்கப்போகிறோம் என்ற கவலை, என்னை வாட்டிக்கொண்டே இருந்தது. `எப்படியும் கடந்துவிடுவோம்’ என்று துணியும்போது மீண்டும் அது சறுக்கி விழுந்துவிடும்.

கல்லூரி வாழ்க்கை என்பது, அந்தப் பருவத்துக்கே உரிய உற்சாகம், சந்தோஷம். இவற்றில் ஒன்றுகூட எனக்குக் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு பாரம். என் தலையை அழுத்தும் பாரம். எப்போதும் என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. ஏதோ ஒன்று என்னைத் துரத்திக்கொண்டே இருந்தது. அந்த வெறிநாய்த் துரத்தலிருந்து எப்படியாவது ஓடித் தப்பித்துக்கொள்ள வேண்டுமே என்ற படபடப்பு, எப்போதுமே என்னுள் நிலைகொண்டிருந்தது. இதற்கு சந்தானகிருஷ்ணன் சாரும் ஒருவகையில் காரணமாக இருக்கக்கூடும் அல்லது அப்படி ஒரு பிரமையில் இருந்தேனோ என்னவோ, எனக்குத் தெரியாது. இது குமாருக்கும் தெரியும். அதனால்தான் உடனே அவன் எனக்கு போன்போட்டு இதைச் சொல்லியிருக்கிறான். எதை எதிர்பார்த்து அவன் என்னிடம் இதைச் சொன்னான் என்று எனக்கு இப்போது தெரியவில்லை. ஒருவேளை, அது எனக்கு உள்ளூர சந்தோஷம்தரும் என்றுகூட அவன் நினைத்திருக்கலாம். அப்படிப்பட்ட மனம்கொண்டவன் நான் அல்ல என்பதும் அவனுக்குத் தெரியும். மனம், எப்போதும் ஒரே நிலையில் நிலைப்பதில்லை. அப்படி நினைப்பதும் நீடிப்பதில்லை.

என் காரை எடுத்துக்கொண்டு நேராக, அந்த ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். அந்த ஆஸ்பத்திரி, அண்ணாநகரில் இருந்தது. இதய அறுவைசிகிச்சைக்குப் புகழ்பெற்ற மருத்துவமனை அது. நான் போனபோது அவர் ஐ.சி.யு-வில் இருப்பதாகச் சொன்னார்கள். ஐ.சி.யு வார்டுக்கு வெளியே ஒரு சிறு அறை. அதில் நீளமான இரும்பு நாற்காலித் தொடர் ஒன்று கிடந்தது. அதில் ஓர் இருக்கையில் அவருடைய மனைவி உட்கார்ந்திருந்தார். எப்படியோ அவரை அடையாளம் கண்டுகொண்டேன். நான்கைந்து பெண்கள் இருந்தனர். அதில் ரொம்பவும் வாடிக் கிடந்தவர் இவர்தான். சாதாரண நூல் புடவையைக் கட்டிக்கொண்டு, கசங்கிப்போய் எங்கோ வெறித்துக்கொண்டிருந்தார். ஒருவிதத் தனிமை மனநிலை அவரைச் சூழ்ந்திருப்பதுபோல் தெரிந்தது. அவருக்குத் துணையாக ஒரு பெண்ணும் இருந்தார். அநேகமாக அது அவருடைய மருமகளாக இருக்கலாம்.

சந்தானகிருஷ்ணன் சாரின் மனைவி முகத்தை வெகுநேரம் உற்றுப்பார்த்தேன். அவர் முகத்தில் ஒருவிதமான பீதி. வழக்கமாக ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தவுடன் முகத்தில் வந்து அப்பிக்கொள்ளும் பீதி அல்ல அது. நான் மெள்ள அவருக்கு அருகில் சென்று அமர்ந்தேன். அவருக்கு என்னைத் தெரியவில்லை. சந்தானகிருஷ்ணன் சாருக்கே என்னைத் தெரியாது. அப்படி இருக்க, இவருக்கு என்னைத் தெரிந்திருக்க நியாயமில்லை. என்னைக் கண்டதும், நான் யாரையோ பார்க்க வந்திருப்பதாக நினைத்துக்கொண்டு அவர் முகம் சற்று விலகியது.

அவர் மட்டும் இப்படித் தன்னந்தனியாக, உறவுத் துணையின்றி, அதுவும் இதுபோன்ற நேரத்தில். அவருடன் இருந்த அந்த இளம் பெண், கைக்குழந்தைக்கு ஏதோ வெளியில் வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தார். நான் மெள்ள அந்த அம்மாவிடம், ``நான் சாரோட ஸ்டூடன்ட் அம்மா” என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும், அவர் முகம் ஆச்சர்யத்தில் விரிந்தது. சிறிது நேரம் அங்கு அவரோடு இருந்தேன். ``ஏதாவது உதவி வேண்டுமா?” என்று திரும்பத் திரும்பக் கேட்டேன், நான் ஆஸ்பத்திரிக்கு அவரைப் பார்க்க வந்ததே பெரிய திருப்தி. அடைபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு லேசாகக் கதவைத் திறந்ததும் வரும் காற்று தரும் புழுக்கத் தணிப்பாக, அவர் என்னை உணர்ந்திருக்க வேண்டும். சிலீரென முகத்தில் காற்று மோதியதும் ஏற்படும் ஆசுவாசம்போல, அவர் முகம் மாற்றம் கண்டது.

பிறகு அவர் என்னைப் பார்த்த பார்வையில், ஓர் உறவு மிதந்தது. இத்தனைக்கும் அவரை நான் முன்பு பார்த்ததுகூட இல்லை. என்னையும் அவர் பார்த்ததில்லை. சற்றும் அறிமுகமில்லாத யாரோ ஒருவர், இப்படி இக்கட்டான நேரத்தில் உடன் இருக்கும்போது அருகில் வந்து ஆறுதல் சொல்லும்போது அது அறியாத முகமாக இருந்தாலும், அது மனதை இளக்கிவிடுகிறது. வார்த்தைகளற்ற ஒரு மௌன வெளி நம்மை இழுத்துக்கொண்டு போய் நிறுத்திவிடுகிறது. அந்த மனநிலையில்தான் அவர் இருந்திருக்கக்கூடும். என் முகத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே இருந்தார். அவர் என்னோடு எதுவும் பேசவில்லை. வார்த்தையாக இல்லை அவ்வளவுதானே தவிர, அவர் என்னோடு பேசிக்கொண்டுதான் இருந்தார். நானும் அவரோடு பேசிக்கொண்டுதான் இருந்தேன். எங்கள் உரையாடல் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.

இப்படி இரண்டு மணி நேரம் ஓடிவிட்டது. ``சரிங்கம்மா, நான் போயிட்டு திரும்பவும் நாளைக்கு வர்றேன்” என்று எழுந்தபோது, அவர் குரல் மெள்ள விசும்பியது. அதுவரை தேக்கி வைத்துக்கொண்டிருந்தது எல்லாமே வெடித்துச் சிதறின. எனக்கு, எப்படி ஆறுதல் கூற வேண்டும் எனத் தெரியவில்லை. அதற்கான வார்த்தைகளும் என்னிடம் இல்லை. அப்படியே சிறிது நேரம் அங்கு நின்றுகொண்டே இருந்தேன். ``பயப்படாதீங்க ஒண்ணும் ஆவாது. சார் குணமாகிவிடுவார். அவருக்கு ஒண்ணும் ஆகாது” என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

``நீங்க மதுரையா?’’ என்று கேட்டார். பிறகு ``எந்த வருடம் படிச்சீங்க?” என்றார். நான் சொன்னேன். பிறகு ``பாலகுமார், செந்தில்நாதன், நந்தகுமார், சத்தியசீலன் எல்லாம் உங்க செட்தானே?” என்று கேட்டார். நான் தலையை மட்டும் ஆட்டிவைத்தேன். இவர்கள் எல்லோருமே என் செட் மாணவர்கள்தான். ஆனால், அவர்கள் அப்படிச் சொல்ல விரும்ப மாட்டார்கள். என்னிலிருந்து அவர்கள் மேம்பட்டவர்கள் என்பது போன்ற ஓர் எண்ணம், அப்போது அவர்களுக்கு இருந்தது. அந்தக் கோடு கடைசி வரை தொடர்ந்தது.

இவர்கள்மீது மட்டும் சந்தானகிருஷ்ணன் சார் தனிமதிப்பு வைத்திருந்தார். படிப்பில் கெட்டிக்காரர்கள். படிப்பைத் தவிர அவர்களுக்கு வேறு சிந்தனை இருக்காது. இவர்களுக்கு, சார் தனியாக வீட்டில் வைத்து பாடம் நடத்தியிருக்கிறார். இவர்கள் எல்லோருமே தற்போது உயர்ந்த நிலையில் உள்ளார்கள். உயர்ந்த நிலை என்று நான் சொல்வது, ஒருவன் பேராசிரியராக இருக்கிறான்; ஒருவன் அரசின் உயர் பதவியில் இருக்கிறான்; இன்னொருவன் வெளிநாட்டில் பணி செய்கிறான்; இன்னும் சிலர் ஐ.எஃப்.எஸ்., ஐ.பி.எஸ் என்ற நிலையை அடைந்திருக்கிறார்கள். எல்லோருமே சந்தானகிருஷ்ணனின் உருவாக்கம். சார் கொடுத்த ஊக்கமும் பயிற்சியும்தான். இவர்கள் ஒருவரிடமும் எனக்கு இப்போதும் தொடர்பில்லை. ஒத்தக்கடை குமார் மட்டும்தான் தொடர்பில் இருக்கிறான். அவன்கூட மதுரையில் கலெக்டர் ஆபீஸில் ஏதோ பெரிய பொறுப்பில்தான் இருக்கிறான்.

மூங்கில் பூக்கும் தனிமை

எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது, கல்லூரியின் முதல் நாளில் மூன்றாவது வகுப்பு. அவருடைய ஆங்கில வகுப்பு. நான் அந்தக் கல்லூரியில் படித்தபோது, முதல் இரண்டு வருடம் தமிழும் ஆங்கிலமும் கட்டாயப் பாடமாக இருந்தன. அதில் தமிழ்ப் பாடம் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆங்கிலப் பாடம் சற்று அச்சமூட்டியது என்றாலும், எப்படியும் சமாளித்துவிடலாம் என்று நம்பினேன். என் அதிர்ஷ்டமா, துரதிஷ்டமா எனத் தெரியவில்லை. எனக்கு ஆங்கில ஆசிரியராக வந்தவர் சந்தானகிருஷ்ணன் சார். பொதுவாக சந்தானகிருஷ்ணன் போன்ற பெரிய பேராசிரியர்கள் எல்லாம், ஆங்கில இலக்கியத்தை மெயின் சப்ஜெக்டாக எடுத்துப் படிப்பவர்களுக்குத்தான் வகுப்புகள் எடுப்பர். என்னைப்போல பகுதி ஒன்றாக ஆங்கிலம் படிப்பவர்களுக்கு அவருக்குக்கீழ் உள்ள ஏதாவது ஓர் உதவிப் பேராசிரியர்தான் வந்து வகுப்புகள் எடுப்பது வழக்கம். ஆனால், அவர் அப்படிப் பார்ப்பதில்லையாம். எல்லா வகுப்புகளுக்கும் போவாராம்.

நான் ஆறாவது பெஞ்சில் கடைசியில் உட்கார்ந்திருந்தேன். அவருடைய முதல் வகுப்பு அறிமுக வகுப்பாகவே இருந்தது. ஒவ்வொருவரிடமும் ஒரு கேள்வியை ஆங்கிலத்தில் கேட்டுக்கொண்டே வந்தார். என் முறை வந்தது, மிக மிக சாதாரணக் கேள்வியைத்தான் என்னிடம் கேட்டார். அப்போது எனக்கு அவர் என்ன கேள்வி கேட்கிறார் என்பதுகூடத் தெரியாமல் முழித்துக்கொண்டே இருந்தேன். அவருக்கு எரிச்சல் வந்துவிட்டது. என்னை ஒருமுறை முறைத்துவிட்டு, கடந்து போய்விட்டார். இந்தக் கேள்வியைக்கூட இவனால் புரிந்துகொண்டு பதில் சொல்ல முடியவில்லையே என்ற எரிச்சல். அந்தக் கேள்வியை என்னால் இப்போதும் மறக்கவே முடியாது. அந்தக் கேள்வி, இன்னும் என்னைத் தொடர்கிறது. அந்தக் கேள்வி இதுதான், `Who is Your Father?’ விதி, என்னை அதோடு விடவில்லை. இதற்குப் பிறகுதான் கதையே தொடங்குகிறது.

கல்லூரி விடுதியில் இருக்கின்ற சீனியர்கள் ``சந்தானகிருஷ்ணன் சாரிடம் ரொம்பக் கவனமாக இருக்கணும். அவரிடம் தப்பிக்கவே முடியாது” என்று எச்சரித்தார்கள். இதுமட்டுமல்ல, ஒரு கதையையும் சொன்னார்கள். ஒருமுறை பிரின்ஸ்பால் ஒரு சர்க்குலர் அனுப்பியிருக்கிறார். அதில் ஏழு பிழைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றைத் திருத்தி அவருக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார். எனவே, `நல்லா படித்து இன்டனல் டெஸ்ட் எழுது’ என்று அடிக்கடி சொல்வார்கள். நானும் முடிந்தவரை முயற்சி செய்துவிட்டேன்.

முதல் டெஸ்ட் எழுதிவிட்டு, அதன் மார்க்குக்காக நாங்கள் காத்திருந்தோம். அவர் பேப்பர் கட்டோடு வகுப்புக்குள் நுழைந்தவுடனே, எனக்கு பீதியாகிவிட்டது. ரோல் நம்பர்படி ஒவ்வொரு பெயராக வாசித்து அவர்களை அருகில் அழைத்தார், அவர்களுடைய எக்ஸாம் பேப்பரைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு, அதில் என்ன தவறு செய்திருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டி, அதை அவர்களிடம் கொடுத்தார். அப்படி அவர் கொடுத்தது பத்து, இருபது பேருக்குத்தான். மீதிப் பேப்பரை எல்லாம் அவர் ஒன்றுமே சொல்லாமல், அதாவது `அதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று…’ அவரவர் முன் விசிறி அடித்துவிட்டார். அப்படிப்பட்ட `மற்றும் பலர்’ வகையறாவைச் சேர்ந்தவன்தான் நான். என்மீது வந்து விழுந்த பேப்பரை, ஆர்வத்தோடு எடுத்துப் பார்த்தேன். பெரிய முட்டை. நான் எப்படியும் 100-க்கு 30 மதிப்பெண்ணாவது பெற்றுவிடுவேன் என்றுதான் நம்பிக்கொண்டிருந்தேன். அப்போது விழுந்து சிதறியது என் கோட்டை. என்னால் மீண்டு எழுந்திருக்கவே முடியவில்லை.

நானும் முயன்று முயன்று படித்துப்பார்த்தேன். இரவு பகலாக மனப்பாடம் செய்தும் பார்த்தேன். அந்த ஆங்கில வாக்கியங்களை, வார்த்தைகளை ரத்தத்தில் ஏற்றினேன். உயிர்மூச்சாக உள்ளே இழுத்து நெஞ்சில் நிறைத்தேன். தேர்வு அறைக்குள் நுழைந்தவுடன் எல்லாம் காற்றோடு கரைந்துவிடுகின்றன. மற்ற எல்லோரும் இரண்டாவது அட்டெம்ட், மூன்றாவது அட்டெம்ட்டில் தேறிவிட்டார்கள். என்னால் ஏனோ எழுந்திருக்கவே முடியவில்லை. மற்ற பாடங்களில் எல்லாம் தேறிவிட்டேன். இந்த ஆங்கிலத்தில் மட்டும் என்னால் முடியவேயில்லை. இன்டர்னல் பத்து மதிப்பெண் இருந்திருந்தால்கூட நான் பல்கலைக்கழகத் தேர்வில் எப்படியாவது தேர்ச்சிபெற்றிருப்பேன். அவர் எனக்குக் கருணைகாட்டுவார் எனக் காத்திருந்தேன். அவர் தராசை மிகச் சரியாகப் பிடித்துவிட்டார். தடுமாறும் தராசாக இருந்தால்கூட நான் தப்பித்திருப்பேன். அவரின் தராசு, கடைசி வரை தடுமாறவே இல்லை. பலமுறை அவரை டிபார்ட்மென்டில் போய்ப் போய்ப் பார்த்தேன். அவர் என் முகத்தை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. அவர் நினைவில் நான் இல்லை.

நானும் எப்படியாவது அவரைக் கவர்ந்துவிட வேண்டுமென்று எவ்வளவோ பிரயத்தனப்பட்டுப் பார்த்துவிட்டேன். ஒன்றும் ஆகவில்லை. ஒரு தடவை, ஒரு காரியம் செய்தேன். அசட்டுத்தனமான காரியம்தான். எனக்கும் அது தெரியும். என் நிலைமை அப்போது அப்படி. `எப்படியாவது அவர் மனதில் இடம்பிடித்து, தேர்வில் வெற்றிபெறுவதற்குரிய இன்டனல் மார்க்கைப் பெற்றுவிட வேண்டும். அதுவும் `பிச்சையாக’க்கூடப் பெற்றுவிட வேண்டும்’ என்ற மனநிலைதான் எனக்கு அப்போது இருந்தது.

ஒரு நாள், அது ஞாயிற்றுக்கிழமை என நினைக்கிறேன். அதிகாலையில் எழுந்து மதுரை பெரியார் பேருந்துநிலையத்துக்குச் சென்று ரஸ்தாளி வாழைப்பழம் ஒரு தார் வாங்கிக்கொண்டேன். அதை வாங்குவதற்கு ஹாஸ்டலில் இருந்த என் நண்பர்களிடம் கடன்தான் வாங்கினேன், ஸ்காலர்ஷிப் பணம் வந்தவுடன் தந்துவிடுவதாகச் சொல்லி. கைமாற்றாக நான்கைந்து பேரிடம் பணம் வாங்கினேன். அப்போது ஒரு தார் ரஸ்தாளிப்பழம் 70 ரூபாயோ 50 ரூபாயோதான். அதை வாங்கித் தோளில் சுமந்துகொண்டு, டவுன்பஸ்ஸில் ஏறி அவருடைய வீட்டுக்கு (அண்ணாநகர்) போனேன். பஸ் ஸ்டாப்பிலிருந்து அவர் வீடு சற்று தூரம்தான். அந்த வாழைத்தாரைத் தோளில் சுமந்துகொண்டு போகும்போது, எனக்கு சற்றுக் கூச்சமாக இருந்தது. தலையைக் குனிந்துகொண்டே நடந்தேன்... வேகமாக நடந்தேன். காலை நேர ஏறுவெயில், முகத்தில் அறைந்தது. உடம்பெல்லாம் வியர்த்துவிட்டது. எப்படியோ அவர் வீட்டை மிதித்துவிட்டேன்.

அப்போதுதான் சார் குளித்துவிட்டு, வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு வெளியே வந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு நா வறண்டுவிட்டது. எப்படிப் பேச வேண்டும் எனத் திட்டமிட்டது எல்லாம் மறந்து, திருதிருவென முழித்துக்கொண்டிருந்தேன். பிறகு எப்படியோ சுதாரித்துக்கொண்டு ``சார், இது எங்க தோட்டத்துல விளைஞ்சது. எங்க ஐயா உங்ககிட்ட கொடுக்கச் சொன்னார்” என்று அவர் காலடியில் வைத்தேன்.

இதெல்லாமே ஒத்தக்கடை குமார் சொல்லிக்கொடுத்த ஐடியாதான். ரஸ்தாளிப்பழம் என்றால், சாருக்கு ரொம்பப் பிடிக்கும் என்று அறிந்து, இந்தத் திட்டத்தை எனக்குச் சொல்லித் தந்தான். ஆனால், எதுவும் பழுக்கவில்லை. அவர் அந்த வாழைத்தாரை வாங்கவேயில்லை. ``திருப்பி எடுத்துக்கொண்டு போ’’ என்று விரட்டிவிட்டார். எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். அவர் முகம் ரத்தமாகச் சிவந்துவிட்டது. திரும்பவும் அதைத் தூக்கிக்கொண்டு வந்து, ஒரு கடையில் வெறும் 30 ரூபாய்க்கு விற்றுவிட்டு, ஹாஸ்டலுக்குப் பசியோடு வந்து சேர்ந்தேன்.

திரும்பத் திரும்ப முயன்றும், விழுந்த இடத்திலேயே விழுந்துகொண்டிருந்தேன். ஒரே ஓர் இடம் மட்டும்தான் வழுக்கிக்கொண்டே இருந்தது. என்னால் அந்த இடத்தில் மட்டும் காலை ஊன்றவே முடியவில்லை. ஒரே ஒரு தடைதான், அதைத் தாண்டிவிட்டால் நான் தாவிவிடுவேன். டிகிரி வாங்குவது என்பது, இனி முடியாத காரியம் என்ற நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். கடைசியாக ஒருமுறை அவரை வீட்டில் போய்ப் பார்க்கலாம், மனம் உருகிப் பேசிப்பார்க்கலாம், அவர் காலைத் தொட்டுக் கெஞ்சிப்பார்க்கலாம் என்றுகூட வெறிகொண்டு முயன்றேன். அந்த அளவுக்கு நான், பரபரப்பாகப் படபடப்பாக இருந்தேன். அப்போதைய என் மனநிலையை இப்போது விவரிக்க முடியவில்லை. என் முயற்சி எதுவும் அவரிடம் பலிக்கவேயில்லை. நன்றாகப் படிக்காத மாணவர்கள் லாயக்கற்றவர்கள். அவர்கள் யாராக இருந்தாலும் அவர் நினைவில் நீடிப்பதே இல்லை.

நான் பல்கலைக்கழகத் தேர்வில் தேர்ச்சிபெறவில்லை. கடைசி வாய்ப்பையும் இழந்து, இனி எனக்கு டிகிரி இல்லை என்றான பிறகு, ஒரு ஆண்டு மதுரை வீதிகளில் பைத்தியக்காரனைப்போல சுற்றிக்கொண்டு அலைந்தேன். என்ன செய்வது எனத் தெரியாமல், தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுகூட நினைத்தேன். அப்போது என் ஐயாவின் முகமும் அம்மாவின் முகமும் என் முன்னால் நிழலாடின. அவர்களை நினைத்தவுடன் எனக்கு அந்தத் தற்கொலை எண்ணம் தப்பிவிட்டது. என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன். மூன்றாண்டு படிக்கவேண்டிய படிப்பை, ஐந்து ஆண்டு தொடர்ந்தும், ஒரே ஓர் ஆங்கிலப் பேப்பருக்காக என்னுடைய டிகிரி அந்தரத்தில் தொங்கும்போது, சற்றுப் பதற்றமாகத்தான் இருந்தது. என் பட்டம், எங்கோ கண்காணாத அந்தரத்தில் காற்றுவெளியில் பறந்துகொண்டுதான் இருக்கிறது. இனி அது என் கைக்கு எப்போதும் எட்டாது. ஐந்து வருடப் போராட்டத்தில், நான் என் ஊருக்குப் போகவே இல்லை. ஐயாவையும் அம்மாவையும் நான் பார்க்கவே இல்லை. அவர்களுக்கு இது எப்படியோ தெரிந்துவிட்டது. அந்த வேதனையைச் சுமந்துகொண்டுதான் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

ந்தானகிருஷ்ணன் சாரை, ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டனர். அம்பத்தூரில் உள்ள அவர் மகன் வீட்டில் இருக்கிறார். இது அவருக்கு மறுபிறவி என்பதுபோல் ஆகிவிட்டது. ரொம்பச் சிரமப்பட்டுவிட்டார். அவர் ஆஸ்பத்திரியில் இருந்த அந்த 28 நாளும், நான் ஆஸ்பத்திரிக்குப் போய் வந்தேன். என்னுடைய இன்னொரு காரையும் டிரைவரையும் ஆஸ்பத்திரியிலேயே அவர்கள் பயன்பாட்டுக்கு விட்டுவிட்டேன். அவருக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். மகன் கனடாவில், மகள் அமெரிக்காவில். கடைசி மகன்தான் அம்பத்தூரில். அவருக்கு அம்பத்தூரிலிருந்து ஓ.எம்.ஆர் சாலைக்கு வேலைக்குப் போய்த் திரும்புகின்ற அலுப்பு சலிப்புக்கு இடையேதான் அப்பாவையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

என் நிலை வேறு, என்னுடைய கம்பெனியில் 70 இன்ஜினீயர்கள், உபரிப் பணியாளர்கள் என்று சொந்த நிறுவனம். எனக்கு அந்த உபத்தரவம் இல்லை. தினமும் காலையில் வந்துவிடுவேன். முடிந்தால் மாலையிலும் ஒரு நடை. என் வருகைக்காக லிப்ட் திறக்கும் சத்தம் கேட்கும்போதெல்லாம், அந்த அம்மாவின் விழிகள் நகருமாம் - சந்தானகிருஷ்ணன் சாரின் மனைவிக்கு ஒருவிதமான தனிமை மனநிலை. எத்தனை நட்பு - எத்தனை உறவு - எத்தனை மாணவர்கள்... என்று எப்படி இருந்தோம்? இப்போது குளம் வற்றிவிட்டதோ என்று கவலை. ஆஸ்பத்திரியில் இருந்த, அந்த 28 நாளில் எத்தனை பேர் வந்து பார்த்திருப்பார்கள்? இதை எல்லாம்கூட அவர் மனம் நினைத்து வாட்டமடைந்துவிடுகிறது.

ரு நாள் மாலையில் தனிமையின் நிழலில் இருந்த சந்தானகிருஷ்ணன் சாரின் மனைவி என்னிடம் பேசினார். பேசினார் என்றால், தினமும் பேசும் பேச்சு அல்ல. இது, அவர் உள்ளத்தின் குரல். எனக்கும்தான். இந்த அறுவைசிகிச்சைக்குப் பிற்பாடு, சந்தானகிருஷ்ணன் சாருக்கு நினைவும் குரலும் குன்றிவிட்டன. எல்லாவற்றையும் பார்க்கிறார், கேட்கிறார், பார்வை மேலும் கீழும் அலைகிறது. உள்முகமாக ஏதோ பேசுகிறாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. கண்கள் மட்டும் அப்போதுபோலவே, பளிங்கு மாதிரி பளபளவென மின்னுகின்றன.

``இது யாருனு தெரியுதா?”

என்னைப் பார்க்கிறார். உதடுகள் படபடவெனத் துடிக்கின்றன.  குரல் எழவில்லை. ஒரு நிமிடமோ இரு நிமிடமோதான் பார்வை தாழ்ந்து, தொடக்கென விழிகள் கவிழ்ந்துகொள்கின்றன.

``ஒங்க ஸ்டூடன்ட்தான் இவர்.”

``…..…”

``தெரியுதா? பெரிய கம்பெனி நடத்துறார்.”

சந்தானகிருஷ்ணன் சார், என் முகத்தைப் பார்க்கிறார். எதையோ தேடும் பார்வை. பார்த்துக்கொண்டே இருக்கிறார். அந்தப் பார்வை என்மீது நிலைபெற்று நீங்கியது. சிறிதும் சலனமில்லை. அவர் நெஞ்சு மட்டும், மேலும் கீழும் அலைந்திற்று.

``ஒங்க ஸ்டூடன்ட்தான் இவர்’’ என்று அவர் மனைவிதான் மீண்டும் உரக்கக் கூறுகிறார். அதைச் சொல்லும்போது, அவர் குரல் உற்சாகம்கொள்கிறது. ``ஒங்க பிள்ளை மாதிரி கூடவே இருந்து, அத்தனையும் பார்த்துக்கிட்டார். நீங்க செஞ்ச புண்ணியத்துக்குக் கெடச்ச பலன் இவர்தான்” அவர் காதருகே போய் உணர்வு மேலிட, நா தழுதழுக்கக் கூறுகிறார். இதையெல்லாம் அவர் காது கேட்கிறதோ என்னவோ, கண்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. எதையோ தேடும் பார்வை துருவித் துருவித் தேடும் பார்வை. வலதுகண் ஓரம் ஒரு துளி இறங்கிற்று. மெள்ள கன்னத்தில் விழுந்து கரைந்திற்று. அந்தக் காட்சியை என்னால் பார்க்கவே முடியவில்லை. அப்படிப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர் கண்களிலிருந்து தரதரவென நீர் இறங்கிற்று.

ன்று இரவு பெரிய டாக்டர் ரவுண்ட்ஸ் வந்தார். சந்தானகிருஷ்ணன் சாரைப் பார்க்க அறைக்குள் வந்தார். நானும் உடன் இருந்தேன்.

``பெரியவர் எப்படி இருக்கார்?”

``இருக்கார் டாக்டர்.”

டாக்டர், சந்தானகிருஷ்ணன் சாரின் கண்களைப் பிதுக்கிப் பார்த்தார். நெஞ்சை சோதித்தார். ``பேச்சுதான் இன்னும் வரலை.”

``டாக்டர்!” என்றார் அவர் மனைவி. டாக்டர் கேஸ் ஹிஸ்ட்ரியைப் படித்தார். சிறிது நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தார்.

``பிசியோதெரபி ஃபிக்ஸ் பண்ணுங்க…” என்றார் நர்ஸைப் பார்த்து. பிறகு, ``பெரியவர் என்னவா இருந்தார்?” என்று பொதுவாகக் கேட்டார்.

``புரொபசர்” என்றேன்.

உடன் டாக்டர் அவரின் அருகில் சென்று அவர் காதருகில் ``வாட்ஸ் யுவர் நேம்?” என்று ஆங்கிலத்தில் கேட்டார். சந்தானகிருஷ்ணன் சார் திருதிருவென முழித்தார். மீண்டும் அதே கேள்வியைத் திரும்பக் கேட்டார். சந்தானகிருஷ்ணன் சாரால், அந்த எளிய கேள்விக்குக்கூட பதில் சொல்ல முடியவில்லை. டாக்டர் உதட்டைப் பிதுக்கிக்கொண்டே விருட்டென, அடுத்த அறைக்குச் சென்றுவிட்டார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism