
தானியம் போல் சிதறும் உதிரம்...
வெளிர் மஞ்சள் சாம்பல் நிறக் குருவி
பறவை இனத்தின் பெயர் அறியவில்லை
சாலையில் அமர்ந்து கண்களின் உருட்டலில்
அகப்படவில்லை எந்தவொரு தானியமும்.
சூடு கால்களில் பரவுவதாலேயே
தத்தித் தத்தி அமர்கிறது
கூர் நகங்களில் பிசுப்பிசுப்பாகப் பரவி
கருங்கற்களை இளக்கிய தார் பசையாகி
குருவியின் கால்களை சாலையோடு இறுக்குகிறது.
றெக்கைகள் வேகமாகப் படபடத்தும்
மேலெழும்ப முடியாமல் தவித்தலில்
கீழே உதிர்ந்து காற்றில் பறக்கும் இறகுகள்
சுமக்கிறது அச்சத்தையும்
இரை தேடிய விழிகள்
இயலாமையில் இறைஞ்சுகின்றன.
போக்குவரத்து நெரிசல் இல்லாமலிருந்த சாலையில்
தற்போது அடிக்கடி விரையும் வாகனங்கள்
இடத்தைப் பார்வையிட கார்ப்பரேட் நிறுவனங்களின்
ஆட்களை ஏற்றிவரும் அதிநவீன
நாற்சக்கர வாகனம் நசுக்கலாம்
பூர்வகுடியைப் போலவே பட்சியையும்.
தானியம்போல் சிதறிய உதிரம் அறையும் வாகனத்தில்
அதே சிவப்பு நிறத்தில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறது
‘கிரீன் சிட்டி லேண்ட் புரமோட்டர்ஸ்.’
- வலங்கைமான் நூர்தீன்
தூக்கு வாளி
தலையாட்டியபடி
அம்மாவின்
விரல் பிடித்து
நகரும் குழந்தை.
- ந.சிவநேசன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அய்யனாரின் கதறல்
பனங்குளத்து அய்யனாரின்
குளத்தடியில்
உளுவை மீனைத் தேடுகிறது
மரங்கொத்தி.
காடுசிறுத்த கவலையில்
காயும் உள்ளாடைகளை வெறித்தபடி
நிற்கிறார் வேட்டைக்காரன்.
உலக்கை ஓசை ஆகாத தூண்டில்காரன்
மிக்ஸி ஓசைகேட்டும்
மெளனமாகவே இருக்கிறார்.
குறிவிறைக்க இருக்கும் குதிரைகள்
தம் நிழலில் கிடக்கும்
நெகிழிக் கோப்பைகளைக் கண்டு
மிரளாமல் நிற்கிறது.
கொடுவெயில் எனக்
கருவேல மரத்தடியில் அமர்ந்த
செவிட்டுப் பூசாரி
கறுப்புக் கிடாயை நேர்ந்துகொண்டு
மழைவேண்டினான்.
எஞ்சிய தீயாய்
அரிவாளில் உலரும் ரத்தம் உதிர
காட்டுமீசையில் படிந்த புழுதி பறக்க
மரங்களை நேர்ந்து விடடா
எனக் கதறினார் அய்யனார்.
- கோகுலா
ஓவியம்: ரமணன்