பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

வெளிச்சத்தை வெறுக்கும் இரவுகள்...

னிதர்களிடம்
மாட்டிக்கொண்ட இரவுகள்
இருளுக்காய் விழித்திருக்கின்றன
மேலும் அவை நிசப்தம் வேண்டியும்
தவமிருக்கின்றன
தன்னை ஊடறுக்கும்
வாகன அரவங்களின்
கால்களில் விழுந்து கதறுகின்றன
யாமம் கடந்த தொலைக்காட்சி
ஒலி ஔிகளை
அணைக்கச் சொல்லிக்
கெஞ்சுகின்றன
கிசுகிசுத்தவாறு
நெடுநேரமாய்
அலைபேசியில்
நச்சரிப்பவர்களை
நட்புடன் நிறுத்தச் சொல்லி மன்றாடுகின்றன
கண்காணிப்பு கேமராக்கள்
அதன் நேர்மை குறித்த
சந்தேகங்களெனவும்
கண்ணைப் பறிக்கும்
மின்னொளிகள்
அதன் அந்தரங்கத்திற்கான
இடையூறுகளெனவும் புலம்புகின்றன
பகல்களின் தொடர்ச்சியை
இரவுகளில் ஏற்றாமல்
இரவுகளை இரவுகளாகவே
தொடரச் செய்ய
இறைஞ்சி நிற்கின்றன.

- சாமி கிரிஷ்

சொல்வனம்

தீர்க்கப்படாத தாகங்கள்

கு
ளிரூட்டப்பட்ட அறையில்
மேலதிகாரிகள் நடத்தி முடித்த
கலந்தாய்வுக் கூட்டத்தில் திறக்கப்படாத
தண்ணீர்ப் புட்டியில்
சிறைப்பட்டுக் கிடக்கின்றன
தீர்க்கப்படாத தாகங்கள்.

-  திருவெங்கட் 

சொல்வனம்

பிறவி

செம்மண் கோடுகள் வரைந்தாற்போல்
உழுது கிடக்கும் நிலமொன்றின் மத்தியில்
வளர்ந்தோங்கிய ஒற்றைத் தாவரமாகி
அசையும் சுடரென நின்றிருந்தவள்
திருமேனி கறுத்து
வதங்கிய பயிராக
வந்தவனைக் கண்டதும்
அதிர்வுகொண்டு
காண்போர் மயக்கம் கொள்ளும்
தோற்றம் கொண்டவனாயிற்றே
என் செய்வேனென மனம் பிதற்றி
அருகிலிருந்த குளமிறங்கி நீரானாள்
துளிகள் பறவைகளாகி
மேகத்தை அடைந்துகொண்டிருக்க
நெருக்குதல் தாளாது
கரையத் தொடங்கியது வானம்
நனைந்தான்
புதுப் பிறவி கொண்டு
மெல்ல ஆடத் தொடங்கினான்
மகிழ்வில்
மழை வலுத்தது.

- ந.பெரியசாமி  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு