Published:Updated:

அடுத்து என்ன? - மொழியோடு வலியையும் சேர்த்தே பெயர்க்கிறேன்

அடுத்து என்ன? - மொழியோடு வலியையும் சேர்த்தே பெயர்க்கிறேன்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - மொழியோடு வலியையும் சேர்த்தே பெயர்க்கிறேன்

அனுராதா ஆனந்த், படம் : அருண் ஏ துரை

அடுத்து என்ன? - மொழியோடு வலியையும் சேர்த்தே பெயர்க்கிறேன்

அனுராதா ஆனந்த், படம் : அருண் ஏ துரை

Published:Updated:
அடுத்து என்ன? - மொழியோடு வலியையும் சேர்த்தே பெயர்க்கிறேன்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - மொழியோடு வலியையும் சேர்த்தே பெயர்க்கிறேன்

ல்லாப்  பருவங்களிலும் இடங்களிலும் சூழலிலும் என்னைவிட்டு அகலாமல், கூடவே தொடர்ந்து வரும் பழக்கம் வாசிப்பு மட்டும்தான். கடக்கவியலா பொழுதுகளைக் கடக்க அல்லது அதிலிருந்து  தற்காலிகமாக வேணும் தப்பிக்க, குலைந்த சமநிலைகளை மீட்டெடுக்க, தக்கவைக்க வாசிப்பே எனக்குத் துணையாயிருக்கிறது.  வாழ்வின் துடுப்பாகவும் இருக்கிறது. நாம் எல்லோரும் வார்த்தைகளால்

அடுத்து என்ன? - மொழியோடு வலியையும் சேர்த்தே பெயர்க்கிறேன்

ஆனவர்கள்தானே.

“நாம் வார்த்தைகளுக்கு வெகுமுன்பே தொடங்கியவர்கள்; வார்த்தைகளைக் கடந்தும் தாண்டியும்தான் முடிக்கப் போகிறவர்கள்; நம் நாள்கள் வார்த்தைகளின் விஷமேறியவை; நாம் உண்மையாகச் சொன்னவை, நம்பாமல் சொன்னவை, உணர்ச்சிகளிலிருந்து விவாகரத்தானவை, காயப்படுத்தும் வார்த்தைகள், மறைக்கும் வார்த்தைகள், குறைக்கும் வார்த்தைகள்... இறந்த வார்த்தைகள் எல்லாமுமே” என்கிறார் பென் ஓக்ரீ (Ben Okri).

தொடக்கக் காலங்களில் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் வாசித்தேன். அரிதாகத் தமிழில் வாசிக்கும் பழக்கம் தொடங்கி, இப்போது ஆங்கிலத்திலும் தமிழிலுமாகச் சமஅளவில் உள்ளது. ஆங்கிலத்தில் எந்தப் படைப்பை வாசித்தாலும் ஆழ்மன ஓட்டத்தில் எப்போதும் அதன் தமிழ்  மொழியாக்கம் மனதிற்குள் எங்கோ  ஓடிக்கொண்டேயிருக்கும். பலமுறை அதை நான் உணர்ந்திருக்கிறேன். அதுவும் என்னை மிகவும் பாதித்த பிரதியெனில், அதன் தமிழாக்கம் உடனே மனதில் தோன்றி, கூடவே வரும். அப்படி என்னிடம் மொழிபெயர்ப்பைக் கோரிய பிரதிகளை முதலில் கையில் எடுத்தேன். அவை பெரும்பாலும் கவிதைகளாகவே இருந்தன. அதை எழுதத் தொடங்கி, செம்மைப் படுத்தும்போது மனதிற்கு மகிழ்ச்சியாகவும் பிடித்த காரியத்தைச் செய்ததுபோலவும் ஒரு நிம்மதியிருந்தது.

மொழிபெயர்ப்புப் படைப்புகளை  வாசிக்கும்போது, நமக்குக் கிடைப்பது முற்றிலும் புதிய அனுபவங்கள், புதிய  காட்சிப் பதிவுகள், புதிய நிலப்பரப்பு, புதிய வாழ்வியல் முறைகள், புதிய படிமங்கள், புதிய வடிவங்கள், புதிய சொல்லாடல்கள், புதிய கூறல்முறைகள், புதிய அதிர்வுகள்... எனவே, புதிய தேடல்களை அவை நமக்கு ஏற்படுத்தித் தருகின்றன.

நான் வாசித்துணர்ந்த சில பிறமொழிப் படைப்புகளை நம்மவர்களிடம் அறிமுகப் படுத்துவதுதான் முக்கிய நோக்கம். ஒரு கலைப்படைப்பை அனுபவிக்க, மொழி தடையாக இருக்கக் கூடாது அல்லவா? அதனால், மொழிபெயர்ப்புப் பணியை விரும்பிச் செய்கிறேன்.

பிற மொழிகளின் சமகால எழுத்தைச் சமகாலத்திலேயே வாசிக்கும் அனுபவம் என்பது, முற்றிலும் வேறான ஆழமான தாக்கத்தை வாசகனுக்குத் தரவல்லது. வறட்சியான அன்றாடச் செய்திகளைக் காட்டிலும், ஒரு நிலத்தின் அரசியலை வெகு தெளிவாகவும் சரியான நோக்கிலும் கடத்தவல்லது புனைவுகளே. அதனால்தான், தற்காலப் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கத் தொடங்கினேன். தொடக்கத்தில் ஆங்கிலக் கவிதைகளை மட்டுமே  மொழிபெயர்த்தேன். இப்போது, தற்கால ஆங்கிலச் சிறுகதைகளையும் மொழிபெயர்த்துவருகிறேன். சில அபுனைவுகளையும் மொழிபெயர்க்கும் எண்ணம் உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்து என்ன? - மொழியோடு வலியையும் சேர்த்தே பெயர்க்கிறேன்

பொதுவாக மொழிபெயர்ப்பதற்கு படைப்புகளைத் தெரிவு செய்யும்போது, சமகால வாழ்வின் நெருக்கடிகளைப் பற்றிப் பேசும் படைப்புகளை முதன்மைப் படுத்துகிறேன். மனித இயல்புகளும் மாண்புகளும் ஏன், நம் மனதின் கொடூரங்களும் நயமற்ற தன்மைகளும்கூட பண்பாடுகளைக் கடந்து பொதுவான வைதான். மேலும், இலக்கியம் சார்ந்து  உலக அளவில் நாம் எங்கு உள்ளோம் என்பதை வாசகன் தீர்மானிக்க மொழிபெயர்ப்புகள் வழிசெய்கின்றன. அதன் பின், பாலினமாய், நிறமாய், இனமாய் ஒடுக்கப்பட்டவர்களை முன்னிறுத்தித் தேர்வுசெய்கிறேன். ஏனெனில்,  அவர்களின் வலி அப்படியே எந்தப் பாசாங்குமில்லாமல் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை எப்போதும் எனக்கு உண்டு. மொழியும் பண்பாடும் முற்றிலும் வேறாக இருந்தாலும், அங்கு இனம் மற்றும் நிறம் சார்ந்து ஒடுக்கப்பட்டவர்களையும், இங்கு சாதியால் ஒடுக்கப்பட்டவர்களையும் ஒரே தளத்தில்வைத்து தொடர்புப்படுத்திப் பார்க்க முடியும். அந்தத் தளத்தில் அவர்கள் நமக்கு நெருக்கமாகிறார்கள். அதுபோலவே, அவர்களின் கதைகளும் அந்நியமற்று நெருக்கமாகின்றன. மொழியோடு ஒரு நிலத்தின் வலியையும் சேர்த்தே பெயர்க்கிறேன்.

அடுத்து, தற்கால ஆங்கிலச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு வரவிருக்கிறது. இதிலும், முந்தைய புத்தகங்களைப்போல பெண்கள், கறுப்பினத்தவர்கள், பால்புதுமையினரின் படைப்புகள் ஆகியவை பெருமளவு இடம்பெறும். ஆண்மையச் சமூகத்தில், பெண் தனது இருப்பைத் தக்கவைக்க அவள் கையில் கொடுக்கப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்ட மழுங்கிப்போன ஆயுதங்களை மட்டுமே கொண்டு நடத்தும் போராட்டங்கள் எல்லா நாட்டிற்கும் பொதுவானவை. ஒவ்வொரு முறை வீழ்த்தப்பட்ட பின்னும் அவள் ஒட்டிய மணலைத் தட்டிவிட்டு, சிராய்ப்புகளைத் துடைத்துவிட்டு எழுவதும் எல்லா இடங்களிலும் தவறாமல் நடக்கும் ஒன்றுதான். உடல் சார்ந்து இயற்கை அவளுக்களித்த ‘வரமா சாபமா’ என்று இன்னும் சரியாக விளங்காதவைகளும் சேர்ந்து, அவளுடைய வாழ்வியலை வலி நிறைந்ததாக ஆக்கியுள்ளன. வெகு காலம் ஊமையாயிருந்து சமீபத்தில்தான் புதிதாகக் குரல் பெற்றவள் என்பதால், அதைச் சொல்வதும், பீடத்தில் அமர்ந்து தீர்ப்பளிக்காமல் அதைக் கேட்பதும் இன்று அவசியமாகிறது. எனக்கும் நெருக்கமானதாக இருக்கும் இவ்வலிகளை, இக்கதைகள் மூலம் மொழி தாண்டி கடத்துவது முக்கியமாக இருக்கிறது.

பெரும்பான்மையிலிருந்து சற்று வேறான மக்களையும் அவர்தம் தேர்வுகளையும் எப்போதுமே சமூகம் ஒரு பயத்துடனும் சந்தேகத்துடனும் பார்க்கிறது. சட்டரீதியாகவும் சமூகரீதியாகவும் ஒடுக்க முற்படுகிறது. ஓரங்களில் வசிப்பவர்களின் வலிகளையும் சிக்கல்களையும் பேசும் கதைகளுக்குக் காதுகொடுப்பது, புரிந்துகொள்வது காலத்தின் கட்டாயமாகும்.பால்புதுமையினரின் குரலை மொழி மாற்றி  அவர்களுக்கு பலம் சேர்ப்பது நம் கடமை என்றே நினைக்கிறேன்.

பெருநகர வாழ்வும் தொடர்புகளும் பெருகியுள்ள இந்தக் காலகட்டத்திற்கே உரிய வாழ்வியல் மற்றும் உறவுச் சிக்கல்களை மிகவும் நுணுக்கமாகச் சொல்லும் கதைகள் இவை. சொல்லல் முறையில் நவீனமும் கச்சிதமும் தற்கணத்தன்மையும் நிறைந்தவை. நாம் வரைந்துவைத்திருக்கிற செயற்கைக் கோடுகளையும் மனதில் திணித்து வைத்திருக்கிற வேறுபாடுகளையும் தாண்டி, மனித மனம் அன்புக்கு ஏங்குவதாக இருக்கிறது. சில நல்ல வார்த்தைகளுக்காக உருகிப்போய் காத்துக்கொண்டிருக்கிறது.அங்கீகாரத்திற்குப் பசித்திருக்கிறது. காதலையும் காமத்தையும் தேடி அலைகிறது.இவை மறுக்கப்படும்போது, துயருற்று வருத்தம்கொள்கிறது. அதீத வருத்தத்தில் வக்கிரம்கொள்கிறது. தனக்கு நெருக்கமான வர்களையும் தொடர்பே அல்லாதவர் களையும் துன்புறுத்தி, தானும் துன்புற்று மடிகிறது. எல்லா நிலைகளிலும் தன்னை ஒரு படி ஏற்றமாகக் காண்பிக்க முற்படுகிறது. அதற்காக அடுத்தவனைத் தாழ்த்தி ஒடுக்குகிறது. இதுதான் எல்லா மனிதர்களும் பொதுவாகச் செய்யும் சல்லித்தனம். கதைமாந்தர்களும் இதைத்தான் செய்கிறார்கள். இதைத்தான் எல்லா மொழிகளிலுமுள்ள எல்லாக் கதைகளும் திரும்பத் திரும்பச் சொல்கின்றன. ஆனால், தீராக் கதைபசிகொண்ட நமக்கு, இதை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை. அதனால்,  ஆவலாக அதை உட்கொள் கிறோம்.

நமது துயரங்களில் நாம் தனித்தில்லை என்ற ஆறுதலைப் பிறமொழிக் கதைகள் நமக்கு அளிப்பதாகக்கூட இருக்கலாம்.விநோதமான முறையில் இப்படித் துயரத்தில் கூட்டுச் சேர்ப்பது மனிதன் சார்ந்தும், மனிதம் சார்ந்தும் ஒருவித நம்பிக்கையும் அளிக்கிறது என்றே நினைக்கிறேன்.

தமிழில் திறமையான மொழிபெயர்ப் பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், எண்ணிக்கையில் குறைவாக இருப்பதாகவே அறிகிறேன்.  அவசியமாய் மொழிபெயர்க்க  வேண்டிய நூல்களின் எண்ணிக்கை மிகுதியாய் இருக்கிறது. மற்ற மாநிலங்களைவிடவும் இரட்டை மொழி அறிவுத்திறன் கொண்ட நபர்கள் தமிழகத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள். உண்மையில், அவர்களுக்கு மொழியிலும் இலக்கியத்திலும் பரிச்சயம் இருந்தாலும், எதற்கோ தயங்கி நிற்கிறார்கள்.

ஏற்கெனவே எனது இரண்டு மொழிபெயர்ப்புக் கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. தற்கால ஆங்கிலச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு வருட இறுதியில் வரவிருக்கிறது. மற்றபடி சிறுகதை, கவிதை என எனது சொந்தப் படைப்பு களையும் வெளியிடும் ஆர்வத்துடன் எழுதிக்கொண்டிருக்கிறேன்.