Published:Updated:

``படைப்பு விற்பனையாகிறதா என்பதைவிட வாசிக்கப்படுகிறதா என்பதே முக்கியம்!” - சோ.தர்மன்

``ஊடகத்தின்மூலமாகப் பிரபலமானவன் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிடும். ஆனால், அவன் எழுதும் நூலை எவனும் வாசிப்பதற்காகவெல்லாம் வாங்கியிருக்க மாட்டான். இது தமிழ் இலக்கியத்தில் மிக மோசமான விபத்து என்றுதான் சொல்ல வேண்டும்.”

``படைப்பு விற்பனையாகிறதா என்பதைவிட வாசிக்கப்படுகிறதா என்பதே முக்கியம்!” - சோ.தர்மன்
``படைப்பு விற்பனையாகிறதா என்பதைவிட வாசிக்கப்படுகிறதா என்பதே முக்கியம்!” - சோ.தர்மன்

ழுத்தாளர் சோ.தர்மன் எழுத வந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. 10 ஆண்டுக்கு ஒரு நாவல் என இதுவரை மூன்று நாவல்களை மட்டுமே எழுதியிருக்கிறார். கடைசியாக இவரது `சூல்’ நாவல் 2015-ல் வெளியானது. தற்போது நான்காவது நாவலான `பதிமூன்றாவது மைய வாரியம்’ என்ற நாவலை அச்சுக்கு அனுப்பிவிட்டு, சிறுகதைகள் எழுதுவதில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். தமிழ் இலக்கியப் பங்களிப்பிற்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழங்கும் `மனோன்மணியம் சுந்தரனார்  விருது’ இந்த ஆண்டு சோ.தர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்த்து தெரிவித்து அவரிடம் பேசினேன். 

``இப்போது நிறைய பேர் ஊடகத்தில் பார்த்துத்தான் நூல்களை வாங்குகின்றனர். என்னிடம் அப்படி ஊடகத்தைப் பார்த்துப் பேசுபவர்களிடம் `என்னுடைய புத்தகம் ஏதாவது படிச்சிருக்கியா?’ என்றால் `இல்லை’ என்கிறான். அவனை என்ன செய்ய? அப்படியென்றால் வாசகருக்கும் எழுத்தாளருக்கும் உள்ள தொடர்புதான் என்ன? `ஒரு வாசகனாக நீ வாங்கும் நூலை எல்லாம் வாசிக்கின்றாயா?’ `வாசித்த நூல் நன்றாக இருக்கின்றது, நன்றாக இல்லை என யாரிடமாவது சொல்லியிருக்கிறாயா?’ `அப்படி இல்லையென்றால் ஏன் நீ ஒரு நூலை வாங்குகிறாய் என்று கேட்கிறேன்’’ என்ற கேள்வியோடு பேச்சைத் தொடங்கினார்...

``இந்த விருதை என் எழுத்துக்கான மரியாதையாகத்தான் பார்க்கிறேன். பல்கலைக்கழகத்திலிருந்து கிடைக்கும் விருது, அதுவும் சாகித்ய அகாதமிக்கு நிகரான விருதுத் தொகையோடு எனும்போது அதைக் குறைத்து மதிப்பிட முடியாது. இல்லையா? கடந்த மூன்று ஆண்டுகளாக மனோன்மணியம் பல்கலைக்கழகம் இந்த விருதை வழங்கி வருகிறது. இதற்குமுன் இந்த விருதை  கி.ரா., கலாப்ரியா வாங்கியுள்ளனர். தற்போது எனக்கு அறிவித்துள்ளார்கள். இதே மாதிரி எழுத்தாளர்களைக் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் கௌரவப்படுத்த வேண்டும் என்பதை ஒரு கோரிக்கையாகவே வைக்கிறேன். ஆனால், இதை யாரும் செய்யமாட்டேன் என்கிறார்கள்.’’ 

``ஒரு எழுத்தாளனுக்கு இதுபோன்ற விருதுகள் மூலமாகக் கிடைக்கும் அங்கீகாரம் என்பது அவனை ஊக்கப்படுத்தும் செயல் இல்லையா? நான் முழு நேர எழுத்தாளர்தான். என்னால் நிறைய எழுத முடியும்தான். என்றாலும் அப்படித் தொடர்ந்து எழுதினால் என்னுடைய படைப்பாற்றல் முற்றிலுமாக அழிந்துவிடும். அதுமட்டுமல்ல அது ஒரு உற்பத்தித் தொழிலாகவும் மாறிவிடும். உற்பத்திக்கும் படைப்பாற்றலுக்கும் வித்தியாசம் இருக்கிறது, இல்லையா? ஒரு நாவல் எழுத அதிக நாள்கள் எடுத்துக்கொள்ளலாம். தவறில்லை. ஏனென்றால் ஒரு படைப்பு நாள்பட நாள்பட  வீரியம் அதிகமாகுமே தவிர, குறையவே குறையாது. நான் 600 பக்கங்கள் எழுதுகிறேன் என்றால் அதை மீண்டும் மீண்டும் வாசித்து 300 பக்கமாக மாற்றிவிடுவேன். அப்படியெல்லாம் கொண்டுவருவதால் என்னுடைய நாவலின் தரம் அப்படியிருக்கிறது. 

தமிழ்நாட்டில் இப்போது இலக்கியப் பிரபலம், ஊடகப் பிரபலம் என இரண்டு வகையான பிரபலங்கள் இலக்கியத்தில் உள்ளனர். ஊடகத்தின் மூலமாகப் பிரபலமானவன் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிடும். ஆனால், அவன் எழுதும் நூலை எவனும் வாசிப்பதற்காக வாங்கியிருக்க மாட்டான். இது தமிழ் இலக்கியத்தில் மிக மோசமான விபத்து என்றுதான் சொல்ல வேண்டும்.

என்னுடைய முதல் நாவல் `தூர்வை’. மீரா, அன்னம் பதிப்பகம் மூலமாக வெளியிட்டார். காரணமே இல்லாமல் திடீரென ஒரு நாள் அந்த நாவல் 100 பிரதிக்கும்மேல் விற்றது. அப்போது மீரா போன் பண்ணி `சம்பந்தமே இல்லாமல் `தூர்வை’ 100 பிரதி விற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஏதும் அதிசயம் நடந்துள்ளதா?’ என்று கேட்டார். நானும் என்னவென்று தெரியாமல் விசாரித்தால் நடிகர் நாசர் `சோ.தர்மனின் தூர்வை நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதிலிருக்கும் கதாபாத்திரங்கள் எல்லாம் என்னை மிகவும் பாதித்துள்ளன’ என்று நான்கு வரி ஒரு வார இதழில் எழுதியிருக்கிறார். அந்த நான்கு வரிக்கு 1994-லிலேயே நூறு பிரதிகள் போயிருக்கின்றன என்றால் பாருங்கள். இப்போது தொலைக்காட்சியில் கையில் அந்தப் புத்தகத்தை வைத்துக்கொண்டு, ஒரு நட்சத்திர எழுத்தாளராகக் காட்டிவிட்டால் அதற்காகவே 200 பிரதி விற்பனை ஆகி விடாதா? இப்படி விற்பனையாவது பொருளாதார அடிப்படையில் நல்லதுதான் என்றாலும் அந்த மாதிரியான மலிவான விற்பனைத் தந்திரத்துக்குள் போக நான் விரும்பவில்லை. 

`இசை இசைக்கப்படும்போது முழுமையாவதில்லை. அது ரசிக்கப்படும்போதுதான் முழுமையாகிறது’ என்பார் தாகூர். அதுபோல ஒரு நூல் எழுதப்படுவதைவிட, விற்பனையாவதைவிட அது வாசிக்கப்படும்போதுதான் முழுமையாகிறது. எனவே படைப்பு விற்பனையாவதைவிட, வாசிக்கப்படுகிறதா என்பதுதான் முக்கியம். வாசகர்கள் வாங்கிய நூல்களை வாசித்துவிட்டு நல்லா இல்லை என்றாவது சொல்லுங்கள். அப்படிச் சொன்னால்தானே ஒரு படைப்பாளன் அடுத்த படைப்பை நன்றாக எழுதுவான். அப்படி யாரும் எதுவுமே செய்வதில்லை. தமிழகத்தில் நல்ல விமர்சகர்கள் என்று யாரையாவது சொல்ல முடியுமா? கைலாசபதி, வெங்கடசாமிநாதன், க.நா.சு மாதிரி யாராவது ஆரோக்கியமான விமர்சனப் போக்கைக் கொண்டிருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும், நாங்களும் (எழுத்தாளர்கள்) ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறோம். வாசகனும் ஏதோ வாங்கிக்கொண்டிருக்கிறான்” என்று பல கேள்விகள், விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார்.