Published:Updated:

``விமர்சனங்கள் அபிப்ராயம் சொல்பவையாகவே இருக்கின்றன!” - எழுத்தாளர் ரவிக்குமார்

``படைப்பாளிக்கு ஒரு சிக்கல் வரும்போது அதை ஆதரிக்கலாம். அப்படி ஆதரிக்கின்றோம் என்பதற்காக அவரது படைப்பை விமர்சிக்கக் கூடாது என்றில்லை. அதே நேரத்தில் ஒரு படைப்பை விமர்சிக்கின்றோம் என்பதற்காகவே அவர்மீது தாக்குதல் நடத்தும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம் என்பதுமில்லை.”

``விமர்சனங்கள் அபிப்ராயம் சொல்பவையாகவே இருக்கின்றன!” - எழுத்தாளர் ரவிக்குமார்
``விமர்சனங்கள் அபிப்ராயம் சொல்பவையாகவே இருக்கின்றன!” - எழுத்தாளர் ரவிக்குமார்

``படைப்பாளி தன்னுடைய படைப்பை எழுதி முடித்தவுடன் அவரும் அந்தப் பிரதிக்கு ஒரு வாசகர்தான். தான் எழுதிய படைப்பை விலகி நின்று புறவயமாக அதை அணுகும் மனநிலை அவருக்கு இருக்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது, படைப்பாளிக்கு தான் உருவாக்கிய படைப்பின் மீது விமர்சனம் தோன்றும். படைப்பு என்பது, எப்போதும் படைப்பாளிக்கு விசுவாசமாக இருக்காது. பல நேரங்களில் அவருக்கு அது துரோகத்தைச் செய்யும். அப்படிப்பட்ட வாய்ப்புகள் எங்கெல்லாம் இருக்கின்றன, அவற்றை எப்படிச் சரிசெய்யலாம் என்பதைக் கண்டறிய விமர்சனப் பார்வை மிகவும் முக்கியமானது. அது, படைப்பாளி தன்னைப் புதுப்பித்துக்கொள்ள உதவும்.”

``விமர்சனத்தின் தேவை என்ன?'' என்ற கேள்விக்கு, எழுத்தாளர் ரவிக்குமார் சொன்ன பதில்தான் இது.

இன்று பலரும் தங்கள் படைப்புகள் மீது வைக்கும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதில்லை. கோட்பாட்டுரீதியில் விமர்சனம் செய்பவர்களும் ஓரிருவர்தான் உள்ளனர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் `திறனாய்வுச் செம்மல்'  என்ற விருதை எழுத்தாளர் ரவிக்குமாருக்கு அறிவித்துள்ளது. விருது பெற்றதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, அவரிடம் உரையாடினேன். தமிழ் இலக்கியச் சூழலின் இன்றைய விமர்சனப் போக்கு குறித்து அவரது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

``தற்போது தமிழில் விமர்சகர்கள் அருகிவிட்டனர். கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு படைப்பை அணுகுபவர்கள் குறைந்துவிட்டனர். தங்களுக்குப் பிடித்திருந்தால் இது நல்ல படைப்பு என்று ரசனை அடிப்படையில் அபிப்ராயம் சொல்பவர்களே, ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றிப் பாராட்டிக்கொள்பவர்களே இங்கு விமர்சகர்கள் என அறியப்படுகிறார்கள். ஏன் நன்றாக இருக்கிறது என்பதற்கான எந்த விளக்கமும் அவர்களிடம் இருப்பதில்லை.

1980-90 களில்   மார்க்சிய, நவீனத்துவ, அமைப்பியல் கோட்பாடுகள் அடிப்படையில் படைப்புகளைப் பார்ப்பவர்கள் கணிசமாக இருந்தார்கள். அவர்களில் கல்விப்புலத்தில் உருவாகிவந்தவர்கள், சிற்றிதழ் பின்புலத்தில் உருவாகிவந்தவர்கள் என இரண்டு வகையினர் இருந்தனர். இந்த இரு பிரிவினருக்கும் இடையே முரண்பாடுகள் இருந்தன. இருப்பினும் இவர்களுக்கு இடையே கருத்துகள் பரஸ்பரப் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டன. ஆரோக்கியமான விமர்சனச் சூழல் உருவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், அப்படி ஏற்படவில்லை. அப்போது கலக குணத்தோடு கட்டமைக்கப்பட்ட  சிற்றிதழ்  சூழல் இன்று கரைந்துவிட்டது. 

தமிழில் யதார்த்தவாத இலக்கியப் போக்கின் மேலாதிக்கம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதும், இந்துத்துவக் கருத்தியல்கொண்டவர்கள் வெகுசன ஊடகங்களால் `தலைசிறந்த எழுத்தாளர்கள்' எனக் கட்டியெழுப்பப்பட்டு பாப்புலர்/சீரியஸ் எழுத்துகளுக்கு இடையிலான வேறுபாடு அழிக்கப்பட்டதும் இதன் உபவிளைவுகள். வாசிப்பின் தீவிரத்தை அழித்துக்கொண்டிருக்கும் இந்தத் தொடுதிரை காலத்தில் மைய நீரோட்டத்தின் போக்கில் மிதப்பதல்ல. அதை எதிர்த்து நீந்துவதே முக்கியமானது என்ற புரிதல்கொண்ட எழுத்தாளர்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. கல்விப்புலத்திலிருந்து ஏதாவது ஒரு மாற்றம் வந்தாலேயொழிய இனித் தீவிரமான விமர்சனச் சூழல் உருவாகாது. சோகம் என்னவென்றால், கல்விப்புலச் சூழலும் மோசமான நிலையிலேயே இருக்கிறது.

இந்நிலையில்தான் எனக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. மதிப்புக்குரிய பேராசிரியர் தி.சு.நடராசனால் நிறுவப்பட்ட இந்த விருதை,  முக்கியமான விருதாகவே பார்க்கிறேன். நான் கோட்பாடுகளை மொழிபெயர்ப்பு மூலமாக அறிமுகம் செய்ததோடு, அந்தக் கோட்பாடுகளை வைத்து விமர்சனங்களையும் செய்துவந்துள்ளேன். பெருமாள்முருகன் மீது இந்துத்துவவாதிகள் தாக்குதல் நடத்தியபோது நான் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தேன். அதேசமயத்தில் வட்டார வழக்கு, கதாபாத்திரங்களை விவரித்த விதம் போன்றவற்றில் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கவும் தவறவில்லை. அந்தப் படைப்புமூலமாக அவருக்கு உருவாக்கப்பட்ட முற்போக்குப் பிம்பம்  சரியானதுதானா என்ற விமர்சனத்தையும் வைத்தேன். 

படைப்பாளிக்கு ஒரு சிக்கல் வரும்போது அதை ஆதரிக்கலாம். அப்படி ஆதரிக்கிறோம் என்பதற்காக அவரது படைப்பை விமர்சிக்கக் கூடாது என்றில்லை. அதே நேரத்தில், ஒரு படைப்பை விமர்சிக்கிறோம் என்பதற்காகவே அவர் மீது தாக்குதல் நடத்தும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம் என்பதுமில்லை. இதற்கு முக்கியக் காரணம் கோட்பாட்டுத் தெளிவு இருப்பதால்தான்.

ஷோபாசக்தியின் சிறுகதையும், சேரனின் கவிதையும் ஒரே விஷயத்தை எப்படி வெவ்வேறு பார்வையில் அணுகியுள்ளன என்பதையும் விமர்சனத்துக்குட்படுத்தி எழுதியுள்ளேன். சுந்தர ராமசாமியின் பிள்ளைகெடுத்தாள் விளை, புதுமைப்பித்தனின் படைப்புகள் குறித்த எனது நிலைப்பாடுகளும் அத்தகையவைதான். கருக்கு எல்லோராலும் கொண்டாடப்பட்டபோது, மிஷெல் ஃபூக்கோவின் கோட்பாட்டைப் பயன்படுத்தி தன் வரலாற்றுப் பாணியிலான எழுத்துகளின் வரம்பைச் சுட்டிக்காட்டினேன். 

படைப்பு என்பது எப்படி இருந்தாலும், அதை மதிப்பிட புறவயத்தன்மையான ஒரு பார்வை இருக்க வேண்டும். பொதுப்புத்தியில் சிறந்த படைப்பு என்று நிறுவப்பட்டவற்றை விமர்சனத்துக்குட்படுத்தி ஆராய்ந்து கட்டுரைகள் எழுதியுள்ளேன். என்னுடைய விமர்சனம் என்பது, குறிப்பிட்ட ஒரு கோட்பாட்டை மட்டும் மையமிட்டதாக இருந்ததில்லை. தலித்திய, மார்க்சிய, பின்நவீனத்துவக் கோட்பாடுகளை அறிந்தவன் என்ற வகையில், இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்ப்பதாகத்தான்  இருக்கிறது. இந்தக் கோட்பாடுகளைத் தனித்தனியாகக் கூறுபோட்டு விமர்சனத்தில் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்போது `ஆயிரம் பூக்கள் கருகட்டும்’ என்ற விமர்சன நூலை எழுதியுள்ளேன். ஒருசில நாளில் அந்த நூலை வெளியிடவும் உள்ளேன்.”