Published:Updated:

`நீர்மூழ்கிக் கப்பலை தன் எழுத்தில் அறிமுகப்படுத்தியவர்!’ - ஜூல்ஸ் வெர்ன் பிறந்ததினப் பகிர்வு

`நீர்மூழ்கிக் கப்பலை தன் எழுத்தில் அறிமுகப்படுத்தியவர்!’ -  ஜூல்ஸ் வெர்ன் பிறந்ததினப் பகிர்வு
`நீர்மூழ்கிக் கப்பலை தன் எழுத்தில் அறிமுகப்படுத்தியவர்!’ - ஜூல்ஸ் வெர்ன் பிறந்ததினப் பகிர்வு

``ஒரு மனிதனின் கற்பனையில் தோன்றும் எதையும், இன்னொரு மனிதனால் நிஜமாக்க முடியும்.” - ஜூல்ஸ் வெர்ன்

இன்று நாம் பயன்படுத்தும் அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் உந்துதலாக இருப்பவை, அதைக் கண்டுபிடித்தவரின் எளிய  கனவும் கற்பனையும்தான். படைப்புத்திறன்மிக்க ஒரு மனம்தான், இன்றைய யதார்த்தத்திலிருந்து நாளைய உலகுக்கான புதிய சாத்தியங்களை உருவாக்க முடியும். அத்தகைய மனங்களைச் செதுக்கும் மகத்தான பணியைத்தான் புனைவு இலக்கியங்கள் எல்லா காலங்களிலும் செய்துவருகின்றன. குறிப்பாக, வருங்கால அறிவியல் அறிஞர்களுக்குத் தேவையான கற்பனைத்திறனைக் கொடுப்பதில் அறிவியல் புனைகதைகள் பெரும்பங்காற்றுகின்றன. அப்படி, அறிவியலாளர்கள் நன்றியுடன் குறிப்பிடும் எழுத்தாளர்தான் ஜூல்ஸ் வெர்ன். இவர் 1828-ம் ஆண்டு பிப்ரவரி 8 அன்று பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். 

துறைமுக நகரமான நான்டெவில் பிறந்து வளர்ந்த அவர், சிறு வயது முதல் படகுகள், கப்பல்கள் போன்றவற்றை அதிகம் வேடிக்கை பார்ப்பவராக இருந்தார். பல்வேறு நாடுகளிலிருந்து வந்து செல்லும் கப்பல்களைப் பார்த்து, அவருக்குப் புவியியல் மீது ஆர்வம் வந்தது. அதனால், பள்ளியில் படிக்கும்போதே உலகெங்கும் சுற்றித் திரியும் சாகச மனநிலையில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இலக்கியத்தின் மீது தனக்கிருந்த ஆர்வத்தை மழுங்காமல் பார்த்துக்கொண்ட ஜூல்ஸ் வெர்ன், வழக்குரைஞர் பணிக்காக பாரிஸ் நகரத்துக்கு இடம்பெயர்ந்து, பல மேடை நாடகங்களை எழுதத் தொடங்கினார். பிறகு ஹெட்சல் என்கிற புத்தகப் பதிப்பாளர் ஒருவரின் நட்பு கிடைத்தது. பல அறிவியல் புனைகதைகளை எழுதி, அவர் மூலம் உலகப் புகழ்பெற்றார். இவரது புத்தகங்கள், ஷேக்ஸ்பியரின் புத்தகங்களைவிட அதிக எண்ணிக்கையில் பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 

`A Journey To The Centre Of The Earth' -  இந்த நாவல் ஜூல்ஸ் வெர்னின் உலகப் புகழ்பெற்ற படைப்பு. பூமியின் மையத்தில் என்ன இருக்கிறது என்பதைத் தேடி, பாதாள உலகுக்குள் பயணம் மேற்கொள்ளும் மூன்று மனிதர்களின் கதைதான் இந்த நாவல். நாவலின் தொடக்கத்தில், புவியியல் பேராசிரியர் ஒருவருக்கு பண்டைய காலத்தில் எழுதப்பட்ட ஒரு குறிப்பு கிடைக்கிறது. அதில், `பாதாள உலகுக்குள் பயணம் செய்து, பூமியின் மையத்தை அடைந்துவிட முடியும்' என்பதாக ஒரு வரியை வாசிக்கிறார். அங்கிருந்து அவரது தேடல் தொடங்குகிறது. அவருடன் ஒரே அலைவரிசைகொண்ட இருவரை அழைத்துக்கொண்டு பாதாளத்தில் பயணிக்கிறார்.

`உண்மையில் பூமியின் மையத்துக்குச் செல்ல முடியுமா? அப்படிப் போனால் பூமியின் மேற்பரப்புக்குத் திரும்பி வர இயலுமா? பாதாள உலகம் எப்படியெல்லாம் இருக்கும்? உள்ளே உயிரினங்கள் இருக்கின்றனவா?' போன்ற பல கேள்விகளுக்கு, கற்பனையையும், உண்மையான அறிவியல் தகவல்களையும் கலந்துகட்டி ஒரு புனைவை நமக்கு விடையாகக் கொடுத்திருக்கிறார் ஜூல்ஸ் வெர்ன்.

`Around the world in Eighty days', அவரது மற்றொரு முக்கியமான நாவல். இதன் நாயகன், தான் இந்த உலகம் முழுவதையும் எண்பது நாளில் சுற்றிவிட்டு வருவதாகச் சவால்விட்டு பிரான்ஸிலிருந்து கிளம்புகிறான். அவனது பயணத்தை மிகச் சுவாரஸ்யமாக விவரிக்கிறது இந்த நாவல். ஜி.பி.எஸ் கருவியெல்லாம் கண்டுபிடிக்கப்படாத காலம் அது. ஆனால், நாயகனின் இருப்பிடத்தை பிரான்ஸிலிருந்தே ஒரு குழு கண்காணிக்கும். அதற்காக, நாயகனின் உடலில் ஒரு கருவி பொருத்தப்பட்டிருக்கும். அறிவியல் புனைவு என்பதையும் கடந்து, இந்த நாவலில் தத்துவத்தையும் ஜூல்ஸ் வெர்ன் தொடுகிறார். காலம், வெளி, தனி மனிதனுக்குள் அறிவியலும் சமூகநெறிகளும் ஏற்படுத்தும் தாக்கம் போன்றவற்றை அவர் விவாதித்திருக்கிறார். 

ஜூல்ஸ் வெர்னின் `Five weeks in a Balloon' புத்தகம், ஆப்பிரிக்கக் கண்டத்தைக் குறித்த சிறந்த சித்திரத்தை அன்றைய மேலைநாட்டவருக்கு வழங்கியது. இந்த நாவலுக்காக ஆப்பிரிக்காவைப் பற்றியும் ஆப்பிரிக்கர்களைப் பற்றியும் அவர் நிறைய வாசித்தார். வாசித்து அறிந்தவற்றை, சுவாரஸ்யமான கதையாக எழுதினார். நாவலின் பிரதான கதாபாத்திரங்கள், ஹைட்ரஜனால் நிரம்பிய பலூன் ஒன்றில் ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றி வருகின்றன. அவை சந்திக்கும் அனுபவங்களே நாவலுக்கான களம். ஆப்பிரிக்காவைப் பற்றி அன்றைய மேலைநாட்டு வெகுஜன மக்கள் கொண்டிருந்த பிம்பத்தை, இந்த நாவல் மாற்றியது. 

ஜூல்ஸ் வெர்ன், தன் எல்லா கதைகளிலும் புதுமையான கற்பனைகளை உருவாக்கினார். அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு அவர் உருவாக்கிய சாதனங்கள், பின்னாளில் அறிவியல் கண்டுபிடிப்பாளர்களால் உண்மையாகவே வடிவமைக்கப்பட்டன. அப்படி நிகழ்த்தப்பட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று, நீர்மூழ்கிக் கப்பல். நீர்மூழ்கிக் கப்பலை முதன்முதலில் தன் எழுத்தில் அறிமுகப்படுத்தியவர் ஜூல்ஸ் வெர்ன்தான்.

இவரது `Twenty Thousand Leagues under the sea' நாவலே, முழுக்க முழுக்க ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் நடைபெறும் சாகசக் கதைதான். அதை வாசித்ததால்தான், சைமன் லேக் என்பவர் உலகின் முதல் நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தார். அவர் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பல்கள், இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கக் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டன.

இதேபோல, `Clipper of the clouds' நாவலை வாசித்ததால் ஏற்பட்ட உந்துதலால் ஐகோர் ஸிகோர்ஸ்கி என்பவர் ஹெலிகாப்டரை வடிவமைத்தார். அறிவியல் துறையில் 19-ம் நூற்றாண்டில்தான் பல முக்கியமான கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டன. ஜூல்ஸ் வெர்ன் வாழ்ந்ததும் அதே நூற்றாண்டில்தான். அறிவியல் புனைகதைகள் வாசிக்க விரும்புவோர், முதலில் இவரது எழுத்துகளிலிருந்தே தொடங்குகிறார்கள். இலக்கிய உலகில் இவரது பங்களிப்பைப் போற்றும்வகையில், 2008-ம் ஆண்டு விண்கலன் ஒன்றுக்கு இவர் பெயர் சூட்டப்பட்டது. ஜூல்ஸ் வெர்னின் பிறந்த நாளான இன்று, அவரது நினைவைப் போற்றுவோம்.