Published:Updated:

படைப்பும் ஆளுமையும்: 6 நிமிட வாசிப்பில் 'விகடன் தடம்' தரும் 8 கட்டுரைகள்!

படைப்பும் ஆளுமையும்: 6 நிமிட வாசிப்பில் 'விகடன் தடம்' தரும் 8 கட்டுரைகள்!
படைப்பும் ஆளுமையும்: 6 நிமிட வாசிப்பில் 'விகடன் தடம்' தரும் 8 கட்டுரைகள்!

இம்மாத விகடன் தடம்: https://bit.ly/2GqV1Ft

படைப்பும் ஆளுமையும்: 6 நிமிட வாசிப்பில் 'விகடன் தடம்' தரும் 8 கட்டுரைகள்!

"கீழ்வெண்மணி படுகொலைச் சம்பவம் நடந்து 50 ஆண்டுகளாகின்றன. அந்தச் சம்பவத்தை இப்போது எப்படிப் பார்க்கிறீர்கள்?"

> "50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை இப்போதும் மாறவில்லை என்பதுதான் எதார்த்தம். அடித்தட்டு மக்கள் இன்னும் அப்படியேதான் இருக்கிறார்கள். சம்பவம் நடந்து ஓராண்டுக்குப் பிறகு, நான் கீழ்வெண்மணிக்குச் சென்றேன். சம்பந்தப்பட்ட பலரையும் சந்தித்தேன். சி.பி.ஐ  - சி.பி.எம் தோழர்கள்தான் என்னை அழைத்துச்சென்றார்கள். கோபாலகிருஷ்ண நாயுடு உறவுக்காரர்களையும் சந்திக்க முயன்றேன், முடியவில்லை. எல்லாக் கள அனுபவங்களையும் உள்ளடக்கித்தான் 'குருதிப்புனலை' எழுதினேன்."

"50 ஆண்டுகளுக்கும் மேல் திராவிட இயக்கக் கருத்தியல் தமிழகத்தை நகர்த்துகிறது. நவீன இலக்கியத்தில் அது ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கருதுகிறீர்களா?" 

படைப்பும் ஆளுமையும்: 6 நிமிட வாசிப்பில் 'விகடன் தடம்' தரும் 8 கட்டுரைகள்!

 "நான் அக்ரஹாரத்தில் வளர்ந்தவன். திராவிட இயக்கக் கருத்தியலின் தேவையை நன்கு அறிவேன். அந்தக் காலகட்டத்தில் பெரியார் தேவையாகத்தான் இருந்தார். ஆனால், வைணவம் பற்றி நீங்கள் கேட்டபோது சொன்ன பதிலைத்தான் இதற்கும் சொல்வேன். எந்தவொரு கருத்தியலும் தத்துவமும் நிறுவனமயமாகும்போது நீர்த்துப்போகும். இதிலும் அதுதான் நடந்திருக்கிறது. ஆனால், திராவிட இயக்கத்தின் தாக்கமில்லாமல் இங்கு எதுவும் நடக்க வாய்ப்பில்லை. திராவிட இயக்கக் கருத்தியலோடு எழுதுகிற இமையம், சல்மா போன்றோரின் படைப்புகளெல்லாம் சிறப்பாக இருக்கின்றன."

- அரை நூற்றாண்டுகளாகத் தமிழைப் பற்றி நடைபோடும் எழுத்துக் கலைஞர் இந்திரா பார்த்தசாரதி. நாவல், சிறுகதை, கட்டுரை, நாடகம், ஆய்வு என எழுத்தின் எல்லா வடிவங்களிலும் பங்களித்தவர். கூர்மையான அரசியல் பார்வையும் அங்கதமும்கொண்ட மொழியால், நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியல் அசைவுகளைப் பதிவுசெய்த படைப்பாளி. சமீபத்தில், ஆனந்த விகடனின் 'பெருந்தமிழர் விருதுபெற்றார். 88 வயதிலும், உற்சாகமாக கம்ப்யூட்டரில் டைப் செய்து, 'கிண்டிலி'ல் கதைகள் வாசித்துக்கொண்டிருக்கிற மூத்த ஆளுமையுடனான ஒரு முக்கிய நேர்காணலே, "எந்தத் தத்துவமும் நிறுவனமயமாகும்போது நீர்த்துப்போகும்!". இதில், தன் படைப்புலகம் மட்டுமின்றி ராமாநுஜர், வைணவம், குருதிப்புனல், திராவிடம் எனப் பல விஷயங்கள்குறித்து பேசியிருக்கிறார்.

படைப்பும் ஆளுமையும்: 6 நிமிட வாசிப்பில் 'விகடன் தடம்' தரும் 8 கட்டுரைகள்!

சாருவின் இலக்கிய பிம்ப ஆளுமையில், சிறுகதைகள் ஒப்பீடற்றவை என்று கட்டுரையின் தொடக்கத்திலே சொல்வதில் எனக்குத் தயக்கம் எதுவுமில்லை. சாரு என்ற பெயர் பொதுப்புத்தியில் உருவாக்கியிருக்கிற கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு, அவர் எழுதியுள்ள 63 கதைகளை வாசிக்கும்போது ஏற்படுகிற அனுபவங்கள்தான் முக்கியமானவை...

எழுத்துகளின் வழியாக சாரு யாரென்று சித்திரிக்கிற புனைவு உலகம், சவால் நிரம்பியது. சாரு எழுதியுள்ள கதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது, வெறுப்பினால் பீதியடைய நேரிடலாம்; மனித உடல்கள் எவ்வாறெல்லாம் கொண்டாடப்பட்டன; விலக்கிவைத்துக் கேவலப்படுத்தப்பட்டன; வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டன என விருப்பு வெறுப்பு இல்லாமல் புனைந்திருப்பது புலப்படுகிறது. சாரு, மனத்தடை இல்லாமல், தயக்கமின்றிச் சித்திரிக்கிற புனைவுத் தகவல்களால் வாசகரின் சமநிலை பாதிக்கப்படலாம். சாரு மனிதர்களின் பழக்கவழக்கம், நம்பிக்கை, உணர்ச்சி, பயம், மகிழ்ச்சி போன்ற ஆதாரமான விஷயங்களை மறுகட்டுமானம் செய்ய முயல்கிறார். ஒவ்வொருவரும் அவரவருக்குள் உற்றுப்பார்த்து, வாழ்வின் விநோதங்களும் மர்மங்களும் நிரம்பிய வெளியில் பயணிக்கத் தூண்டுகிறார்.

- எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் எழுத்துலகை ஆழமாகவும் தெளிவாகவும் விவரிக்கும் 'கறுப்பு நகைச்சுவையும் சுய பகடியும் கலந்த கதைகள்' எனும் கட்டுரை, சமகால இலக்கியச் சூழலில் தவிர்க்கக் கூடாத ஒன்று.

படைப்பும் ஆளுமையும்: 6 நிமிட வாசிப்பில் 'விகடன் தடம்' தரும் 8 கட்டுரைகள்!

40,000 ரூபாய் ஒப்பந்தத்தில் பர்மாவில் நாடகம்போட அழைத்தார்கள். சுந்தராம்பாள், தன்னுடன் துணை நடிகையான ராதாவையும் அழைத்துச்சென்றார். கப்பலைவிட்டு இறங்கியதும் சிவப்பு நிறமான ராதாவுக்கு மாலை அணிவித்து அவரைத் தடபுடலாக வரவேற்றார்கள். கறுப்பு நிறப் பெண்தான் சுந்தராம்பாள் எனத் தெரிந்ததும் ஒப்பந்தக்காரர் இடிவிழுந்ததுபோல உடைந்துபோய்விட்டார். ஆனால், நாடகம் பெரும் வெற்றிபெற்றது. சுந்தராம்பாளையும்  கிட்டப்பாவையும் சாரட் வண்டியில் உட்கார்த்தி, ரங்கூன் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச்சென்று, தங்களின் பேராதரவை ரங்கூன் மக்கள் காட்டினார்கள். 

கிட்டப்பா ஏற்கெனவே மணமானவர். மெள்ள மெள்ள தம்பதிகளுக்கிடையில்  விரிசல் ஏற்படத் தொடங்கியது. சுந்தராம்பாள் கர்ப்பமாக இருந்தபோது, கிட்டப்பா தன் வளைகாப்புக்கு வர வேண்டும் என அவர் பெரிதும் எதிர்பார்த்தார். கிட்டப்பா வரவே இல்லை... 

திருமணம் செய்து ஏழே ஆண்டுகளில் விதவையானபோது, சுந்தராம்பாளுக்கு வயது 25 தான். அந்த இளம் வயதிலேயே வெள்ளைச் சேலையுடுத்தி விதவைக்கோலம் பூண்டார். நகை அணிவதில்லை; பிற ஆடவருடன் நடிப்பதில்லை என முடிவெடுத்தார்.

- கே.பி.சுந்தராம்பாளின் வாழ்க்கை வரலாற்றையும், கிட்டப்பா உடனான உறவையும் பதிவுசெய்திருக்கும் 'நான் என்ன செய்கிறேன்?' எனும் கட்டுரையை வாசிக்கும்போது, ஒவ்வொரு பத்தியும் நம் மனத்திரையில் காட்சிகளாக விரிந்து ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவது நிச்சயம்.

படைப்பும் ஆளுமையும்: 6 நிமிட வாசிப்பில் 'விகடன் தடம்' தரும் 8 கட்டுரைகள்!

ஜோர்ட்ஜெவிக்கின் கவிதை ஒன்றில், மீன் காட்சியகத்திற்குள் செல்கிறான் ஒரு சிறுவன். அங்கே, கண்ணாடித் தொட்டியில் இருந்த மீன்கள் அந்தப் பையனை நோக்கி, தன்னை விடுவிக்கும்படி கூக்குரலிடுகின்றன. வெளிப்படையாக எல்லாமும் தெரியும் இந்தக் கண்ணாடிச் சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடக்க முடியாது. எங்களை எப்படியாவது விடுவித்துவிடு என்று குரலிடுகின்றன. அந்தச் சிறுவன், மீன்களை விடுதலை செய்ய கண்ணாடித் தொட்டியை உடைக்கிறான். தரையில் விழுந்த மீன்கள் துடிதுடித்து இறந்துபோய்விடுகின்றன. தான் நல்லதுதானே செய்தோம். ஏன் மீன்கள் உயிர்வாழவில்லை என்று சிறுவன் திகைத்துப்போகிறான்.

இக்கவிதை, சமகாலக் கவிஞனின் குற்ற உணர்வைப் பேசுகின்றன. வெளிப்படையாகத் தெரியும் கண்ணாடிச் சுவர்களுக்குள்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதிலிருந்து விடுதலை என்பது சுவரை உடைப்பதில்லை. இன்னொரு நீர்நிலையை நாடிச் செல்வதே. மீன்களுக்குத் தேவை கடல். அது தரையில் வாழ விரும்பவில்லை. அதை அறியாமல், பல நேரங்களில் சுதந்திரத்தை ஏற்படுத்தித் தருவதாக நம்பிக்கொண்டு, மரணத்தைப் பரிசளித்துவிடுகிறோம் என்று ஜோர்ட்ஜெவிக் சுட்டிக்காட்டுகிறார்.

- மிலான் ஜோர்ட்ஜெவிக் கவிதை உலகம் குறித்து தனக்கே உரிய நடையில் 'கவிதையின் கையசைப்பு' தொடரில் 'நானொரு சிறு கல்' என்ற தலைப்பில் நம் கண்முன் வைக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். 

படைப்பும் ஆளுமையும்: 6 நிமிட வாசிப்பில் 'விகடன் தடம்' தரும் 8 கட்டுரைகள்!

* "எங்களின் ஆசான் இந்திரா பார்த்தசாரதி. என்னுடைய  'ஜீரோ டிகிரி' நாவலைத் தடைசெய்யக் கோரி எழுந்த சர்ச்சைகளின்போது, என் நாவலை ஆதரித்து எழுதியவர்" என்றார் சாரு நிவேதிதா.

* "சங்க இலக்கிய ஆதாரங்களை முன்னுதாரணமாகக்கொண்டு, ஒரு வெகுசனப் பத்திரிகையில் நாவலைத் தொடராக எழுதுவதென்பது, மிகவும் சவாலான விஷயம்" என்றார் சு.வெங்கடேசன்

* "இலக்கிய வாசிப்பை, புத்தகங்களை எனக்கு முதன்முதலில் அறிமுகம்செய்தவர் என் தந்தை. சமீபத்தில் மறைந்த என் தந்தைக்கும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பணம் செய்கிறேன்" என்றார் தமிழ்நதி.

* "என்னைப் பொறுத்தவரையில் இந்த விருது என்பது, இதுவரையிலான என்னுடைய எழுத்துகளுக்கான அங்கீகாரம் என்றே கருதுகிறேன். எனவே, இந்த விருதை அங்கீகரிக்கப்படாத எழுத்தாளர்களோடும் படைப்பாளர்களோடும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நன்றி" என்றார் பா.பிரபாகரன்.

* "நான், என் கதைகளின் வழியே... குழந்தைகளுடன் சிறுவர்களுடன் பொதுச்சமூகம் உரையாடத் தயங்கும் விஷயங்களைப் பேசுகிறேன். என் மனைவி லக்ஷ்மிக்கும் என் மகனுக்கும் என்னைப்போன்ற ஆட்டிஸக் குழந்தைகளைப் பெற்ற அனைத்துப் பெற்றோர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்!" என்று உருக்கம் தொனிக்கப் பேசினார் யெஸ்.பாலபாரதி.

* "கடந்த 25 ஆண்டுகளாகப் பல கட்டுரைகளைத் தமிழில் எழுதிவருகிறேன். பல மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறேன். எப்போதேனும் சிறிய அங்கீகாரமாவது கிடைக்கும் என நினைத்திருந்தேன். இந்த விருதைப் பெறுவதில் சந்தோஷமும் பெருமையும் கொள்கிறேன்" என்று சொற்களால் கனிந்தார் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி.

* "இந்தக் கவிதைத் தொகுப்புக்குக் கிடைத்திருக்கும் 'ஆனந்த விகடன்' விருதை, போலந்துக் கவி அன்னா ஸ்விருக்குக் கிடைத்த விருதாகவே கருதுகிறேன். இரண்டாம் உலகப்போரால் அழிக்கப்பட்ட 'வார்ஸா' நகரத்திற்கும், அங்கே செத்துமடிந்த ஒரு மில்லியன் மக்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். எனது கணினிக்குள் இருக்கும் பல உலகக் கவிகளின் மொழிபெயர்ப்புக் கவிதைகளும் விரைவில் நூல்களாக மாறும். அதற்கான பெரும் உந்துதலாக இந்த விருது அமைகிறது!" என்றார் சமயவேல்.

* "மேடைக்கான நாடகங்கள் பல எழுதியிருக்கிறேன் என்றாலும், மேடையில் பேசுவது இன்னும் எனக்குக் கைவராத ஒன்றாகவே இருக்கிறது. இந்திய அளவில் 'சாகித்ய அகாடமி', பத்மஸ்ரீ விருதெல்லாம் வாங்கிவிட்டேன். அந்த விருதுகளை வாங்கியதைவிட, பல மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறது,  'ஆனந்த விகடன்' அளிக்கும் இந்தப் 'பெருந்தமிழர்' விருது." பெருமிதமும் கூச்சமுமாகப் பேசினார் இந்திரா பார்த்தசாரதி.

-  கடந்த ஆண்டில் சமூக, கலை இலக்கிய, ஊடகத் துறைகளில் முக்கியப் பங்களித்தவர்களைக் கொண்டாடும் 'நம்பிக்கை விருது விழா - 2018', சென்னை வர்த்தக மையத்தில் கடந்த 09.01.2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. அதன் பெருந்துளிகளின் தொகுப்புதான் 'அறம் ஒலித்த அரங்கம்!' 

படைப்பும் ஆளுமையும்: 6 நிமிட வாசிப்பில் 'விகடன் தடம்' தரும் 8 கட்டுரைகள்!

...'மனம் அமைதியுற, உள்ளம் பரவசம் கொள்ள, பேரின்பத்தை அடைய, பிரபஞ்சத்தின் பேருண்மை அறிய எங்களிடம் வாருங்கள்' என்று ஒரு போஸ்டர். அதன் நடையும் நல்ல லே-அவுட்டும் என்னைக் கவர்ந்தன. உடனே போய் அதை என்னவென்று அறியத் தீர்மானித்தேன். மாலை ஐந்து மணி வாக்கில் கிளம்பினேன். தேனியின் ஒவ்வோர் அங்குலமும் அத்துபடி. ஆதலால், முகவரியை சுலபத்தில் கண்டுபிடித்து விட்டேன். காம்பவுண்டு வீடு, வராண்டாவின் ஓரத்தில் மாடிப்படிகள். பத்திருபது படிகள் ஏறிப் போய்த்தான் பேரின்பத்தை அடைய முடியும். ஏற்கெனவே, கொஞ்சம் பேர் பேரின்பத்தை டீல் செய்யப் போயிருப்பதைக் கீழேகண்ட செருப்பு ஜோடிகள் உணர்த்தின. அவற்றில் இரண்டு லேடீஸ் செருப்புகள் இருந்தது ஒருவிதக் கிளர்ச்சியையும், ஒரு காட்டுத்தனமான டயர் செருப்பு வியப்பு மற்றும் பயத்தையும் அளித்தது. ஏனெனில், அப்போது வந்த சினிமாவில் ராஜ்கிரண் டயர் செருப்பு அணிந்து சாட்டைக் குச்சியுடன் வந்து பலரை விளாறியிருந்தார். 

நான் ஒரு விநாடி தயங்கினேன். இரண்டு காரணங்கள், ஒன்று இப்படியான இடத்துக்கு இதுவே முதல் முறை என்பது. இன்னொன்று, காசு கீசு கேட்பார்களோ என்பது. 'பேரின்பத்தை யாராவது ஓசியில் தருவார்களா? நிச்சயம் 50 ரூபாயாவது கேட்பார்கள்' என்று தோன்றியது. என்னிடம் பத்தோ இருபதோதான் இருப்பு. 'திரும்பிப் போய்விடலாமா' என்று தோன்றி, கொஞ்சம் குழம்பி, அங்கிருந்த தண்ணீர் டிரம்மில் தண்ணீர் பிடித்துக் குடித்தபடி யோசித்து, சரி போய்விடலாம் என்று திரும்புகையில், படிக்கட்டில் ஓர் ஆள் தார்ப்பாய்ச்சுபோல் கட்டியிருந்த கீழாடை உரசிக்கொள்ள கசக் கசக் என்று இறங்கிவந்தார். என்னை மிக நேராகப் பார்த்தார். `அது என்னா கண்ணுங்கிறீங்க?' அவருக்குப் புருவமே இல்லாததுபோல் கொஞ்சம் அமானுஷ்யமான மூஞ்சி. பிரபஞ்சத்தின் பேருண்மையை அல்ரெடி அறிந்து கொண்டுவிட்ட சாயலில் இருந்தார். என்னை அவர் பார்த்த பார்வையில், கால்கள் எடை குறைந்து வயிறு லைட்டா இழுத்துப் பிடித்தது. "யார் நீ என்ன வேணும்?" என்று அதட்டலாகக் கேட்பார் என்று நினைத்தால்...

- 'முதன் முதலாக' தொடரில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி பகிர்ந்திருக்கும் 'இதுதாண்டா பரவசம் அல்லது பேரின்பத்தின் அறிமுகம்' எனும் கட்டுரை, ஓர் அரிதான பேரனுபவம் தரக்கூடும். 

படைப்பும் ஆளுமையும்: 6 நிமிட வாசிப்பில் 'விகடன் தடம்' தரும் 8 கட்டுரைகள்!

நாட்டார் வழக்கில் கவிதைகள் எழுதும்போது, எனக்குள் புதைந்துகிடந்த முன்ஜென்மத்தைப் புரட்டிப் பார்த்ததுபோல், பல பொழுதுகளில் உணர்ந்திருக்கிறேன். எனது இருத்தலை அறியச்செய்யும் ஊடகமாய் எனக்கு என் எழுத்துகள் இருக்கின்றன. தமிழின் குறிப்பிடத்தக்க வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதும்போதும், மின்னிதழில் தொடர் கட்டுரைகள் எழுதும்போதும், எழுத்து எனது அடையாளமாக மாறிவிட்டிருந்தது. அதன்வழி கிடைத்த அங்கீகாரம் என்னை இன்னும் அதிகமாக எழுத்தின்பால் ஈர்த்தது. எந்தவித ஒளிவுமறைவுக்கும் இடம்கொடுக்காமல், நேர்மறை எண்ணங்களின்மீது கட்டமைக்கப்படும் என் எழுத்துகளில் சமூகத்தின்மீதான நேசமும் குறைவில்லாமல் படர்ந்திருக்கும்.

- 'நான் ஏன் எழுதுகிறேன்?' தொடரில் தன் எழுத்தனுபவம் பகிர்கிறார் எழுத்தாளர் நவீனா.

படைப்பும் ஆளுமையும்: 6 நிமிட வாசிப்பில் 'விகடன் தடம்' தரும் 8 கட்டுரைகள்!

'பகடு' நான் எழுதிக்கொண்டிருக்கும் அடுத்த நாவல். 'பகடு' என்னும் இந்தச் சொல் வலிமை, பெருமை, எருது போன்ற பல்வேறு பொருள்களைத் தாங்கி நின்றாலும், யானை எனும் பொருள்தான் இந்த நாவலுக்கானது...

... இந்த நாவல் எழுத எழுதப் பல்வேறு கேள்விகளை எழுப்பிக்கொண்டேயிருக்கிறது. ஒரு கேள்விக்குப் பதில் சொல்லி முடித்தால், அந்தப் பதில் இன்னொரு கேள்வியை எழுப்புகிறது. அந்தக் கேள்விக்கு இன்னொரு பதில். அந்தப் பதிலிருந்து இன்னொரு கேள்வியென முற்றுப்பெறாமல் தொடர்கின்றன. கேள்விகளின் முடிச்சுகள் திரட்சியடைந்த காட்டுக்கொடிகளைப்போல பின்னிப்பிணைந்து அந்தரத்தில் ஆடுகின்றன. அவற்றை அசைப்பதுகூட இயலாத ஒன்று. அதற்குப் பதில் சொல்லிப் போதவில்லை. இதுதான் வரலாறென்று எழுதப்படாத மக்களின் வாழ்வை எழுத முற்படும் யாரையும் நெருக்கடிக்குள்ளாக்கும் கேள்விகள் அவை என்ற புரிதலோடு அவற்றை அணுகுகிறேன். மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய நிலங்களுக்கு அடியிலும், அங்கு வாழும் மக்களின் நினைவுகளுக்குள்ளும் புதைந்துகிடக்கும் கதைகளின் கூர்மை காட்டுக்கொடிகளை அறுத்துப்போடக்கூடிய வலிமையோடு இருந்தன...

- 'அடுத்து என்ன?' தொடரில் எழுத்தாளர் க.வீரபாண்டியன் பகிர்ந்திருக்கும் 'இழந்தவற்றை மீட்டெடுக்க இலக்கியம் வினையாற்றும்' எனும் கட்டுரை, அவரது இலக்கிய முயற்சியையும் அரிய தகவல்களையும் தருகிறது.

இம்மாத விகடன் தடம் இதழை வாங்க... இந்த லிங்க்கை க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2t6DKJE