
நான் பாடல் எழுதிய திரைப்படத்தின்
பாடல் வெளியீட்டு விழாவில் அணிவதற்கென
பல நாள்கள் முன்பே வாங்கி வைத்தேன்
சாம்பல் நிறச் சட்டை.
அலமாரியில் அதை அலுங்காமல் வைத்தபோது
சிறப்புத் தருணங்களுக்காக வாங்கிய
முன்னாள் புதுச்சட்டைகள்
சுருக்கங்களால் சிரித்து வரவேற்றன.
படம் என்று வெளியாகும்? தெரியாது
பாடல் விழா எப்போது? தெரியாது
சிலபல ஆண்டுகளே கடந்தாலும் என்ன,
இது சாம்பல் நிறம் - சாயம் போகாது.
படம் வெளியாகும் தேதி முடிவானது.
பாடல் விழாவுக்கான செலவை
சமூக வலைதள விளம்பரங்களுக்குப் பயன்படுத்த
புதிய பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்தல்
விழா ரத்து.
அன்று அலமாரி திறந்தபோது
சட்டையின் மடிப்பு
சற்றே கலைந்திருந்தது
முதல் நாள் முதல் காட்சிக்கு
அணிந்து செல்வதாக ஆறுதல் சொல்லி
மடிப்பைச் சரி செய்தேன்.
அந்த நாள் வந்தது…
சட்டையை அணிந்தபோது - அது
இத்தனை நாள் அடக்கி வைத்த பெருமூச்சு
மேனியில் பரவியது.
முதல் பொத்தான் கழற்றி
காலரைத் தளர்த்தி - கைகளை மடித்து
திரையரங்கில் அமர்ந்தபோது
அது இருக்கையில் இடுங்கி வெட்கப்பட்டது.
படம் ஓடி முடிந்தது.
என் பாடல் இடம்பெறவில்லை
படமே இடம்பெறாத சூழல்கள் இடையே
இது ஒன்றும் துக்கமில்லை.
திரையரங்கம் எங்கும் குளிர்சாதனம் இருந்தும்
என் சட்டை மட்டும்
சத்தமில்லாமல் நனைந்திருந்தது.
நான் அணிந்த சட்டை
நானாக மாறியிருந்தது.