Published:Updated:

`த்ரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் கதைகளின் மன்னன்' - சிட்னி ஷெல்டன் பிறந்த நாள் பகிர்வு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`த்ரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் கதைகளின் மன்னன்' - சிட்னி ஷெல்டன் பிறந்த நாள் பகிர்வு
`த்ரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் கதைகளின் மன்னன்' - சிட்னி ஷெல்டன் பிறந்த நாள் பகிர்வு

`த்ரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் கதைகளின் மன்னன்' - சிட்னி ஷெல்டன் பிறந்த நாள் பகிர்வு

``எனக்கு 14 வயது இருக்கும்போது, என் அப்பா முதல் நாவலை வெளியிட முயற்சி செய்துகொண்டிருந்தார். ஒருநாள் நானும் அப்பாவும் மதிய உணவுக்கு வெளியே செல்லத் திட்டமிட்டிருந்தோம். அதன் காரணமாக, நான் அப்பாவின் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அலுவலகத்தில் அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. ஒவ்வொரு பதிப்பகத்தின் பெயரையும் சொல்லி, `அனைவரும் முடியாது எனச் சொல்லிட்டார்கள்... இவர்களுமா?' எனப் பதைபதைப்புடன் அப்பா பேசிக்கொண்டிருந்தார்.  பேசி முடித்ததும் மெலிதாகப் புன்னகைத்தபடியே என்னிடம் வந்து, `வா, நாம் `பெவர்லி ஹில்ஸ்' சென்று உணவருந்திவிட்டு புத்தகக் கடைக்குச் செல்லலாம். அங்கு  உனக்குத் தேவையான  புத்தகங்களை  வாங்கலாம்' என்றார். எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் அமைதியாக இருப்பதுதான் அப்பாவின் இயல்பு.”

- மேரி ஷெல்டன் (சிட்னி ஷெல்டன் மகள்) 

அமெரிக்கா கொண்டாடிய மிகப்பெரிய எழுத்தாளர் இறந்தபோது, அவரது மகள் எழுதிய நினைவுக்குறிப்பின் சிறு பகுதிதான் இது. தன்னுடைய முதல் நாவலை வெளியிட ஆளே இல்லாமல் தவித்த அந்த எழுத்தாளரின் புத்தகங்கள், பின்னாளில்  உலகப்புகழ் பெற்றன; பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் பட்டியலில் இடம்பிடித்தன. வாழ்க்கை தரும் துயரங்களை அமைதியுடன் எதிர்த்து நின்ற அந்தப் படைப்பாளிதான், சிட்னி ஷெல்டன்!

சிட்னி ஸ்கெக்டெல் என்னும் சிட்னி ஷெல்டன், அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் பிப்ரவரி மாதம் 11-ம் தேதி 1917-ம் ஆண்டு பிறந்தார். எழுத்தாளராக வருவதற்கான எந்தச் சூழலும் இல்லாமல் வளர்ந்தவர். சிறுவயதிலேயே வாசிப்பில் அதிக ஈடுபாடுகொண்டிருந்ததால், தன் பொழுதுகளை புத்தகத்துடன் கழித்தவர். நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்காகச் சேர்ந்தார் சிட்னி. குடும்பச் சூழ்நிலையாலும் அமெரிக்காவில் நிகழ்ந்த கிரேட் டிப்ரஷனாலும் பாதியிலேயே படிப்பை நிறுத்தினார். தொழிற்சாலைத் தொழிலாளி, செருப்பு விற்பவர், பண்பலைத் தொகுப்பாளர் எனப் பல வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் சிட்னி. இரண்டாம் உலகப்போரில் விமான ஓட்டியாகப் பணியாற்ற பயிற்சிபெற்றார். பாதியிலேயே திட்டங்கள் நின்றதால், மீண்டும் முந்தைய வாழ்க்கைக்குத் திரும்பினார்.

ஹாலிவுட் அருகில் நடிகன் ஆக, இயக்குநர் ஆக, கதாசிரியர் ஆக விரும்பும் இளைஞர்கள் தங்கும் இடம் ஒன்று இருக்குமாம். சிட்னியும் அங்கு தங்கி இருந்தார். ஒரே ஒரு தொலைபேசி மட்டும் அங்கு இருக்கும். ஒவ்வொரு முறை அது ஒலிக்கும்போதும் தனக்கான வாய்ப்போ... என்று ஒவ்வொருவரும் அதன் அருகில் ஓடிவருவார்களாம். ஒருநாள் அதேபோல தொலைபேசி ஒலிக்க, ஒருவர் எடுத்து பேசினார். ``சிட்னி, டேவிட் செல்ஸ்னிக் ஃபார் யூ'' என்றார். `இன்று 6 மணிக்குள் ஒரு நாவலுக்கான சினாப்ஸிஸை நீங்கள் தயாரிக்க வேண்டும்’ என்று அவருக்குக் கூறப்பட்டிருந்தது. சிட்னியும் தயாரித்து வழங்க, அவருக்கு யூனிவர்சல் ஸ்டுடியோஸில் வாசிப்பாளராக வேலை கிடைத்தது. சிட்னியின் திரைப்பயணம் இவ்வாறு தொடங்கியது. அதிகாலையில் தன்னுடைய கதைகளுக்காக, நாடகங்களுக்காக நேரத்தைச் செலவழித்தார். பிறகு, வேலைக்குச் செல்வார். பின்னாளில்,  தன்னுடைய கதைகளை விற்கவும் தொடங்கினார். `அண்ட் சடன்லி இட் இஸ் ஸ்பிரிங்க்'  என்ற நாடகம்தான் இவர் முதன்முதலில் விற்ற நாடகம். நாடகங்கள் அதிகம் எழுதினார் சிட்னி. `பிராட்வே பிளே'யில் சிட்னி எழுதிய `தி மேரி விடோ' (The Merry Widow),   `ஜாக்பாட்' (Jackpot), `டிரீம் வித் மியூசிக்' (Dream with Music) ஆகிய மூன்று நாடகங்களும் ஒரே நேரத்தில் நிகழ்த்தப்பட்டன.

இவரிடம் பல ரசிகர்களையும் ஹாலிவுட் வாய்ப்புகளையும் இந்த நாடகங்கள் கொண்டுவந்து சேர்ந்தன. தொலைக்காட்சி நாடகங்கள், திரைக்கதைகள், கதைகள், வசனங்கள், பாடல்கள் உட்பட பல விஷயங்களிலும் திறமைகளை வெளிப்படுத்தினார். சிட்னியின் முதல் திரைக்கதையான `தி பேச்சுலர் அண்ட் தி பாபி சாக்ஸர்க்கு' (The Bachelor and the Bobby-Soxer) 1947-ல் ஆஸ்கர் விருது கிடைத்தது. நாடகங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான  டோனி விருதையும் வென்றார். 25-க்கும் மேற்பட்ட மோஷன் பிக்சர்ஸ், 200-க்கும் மேற்பட்ட நாடகங்கள் என வெற்றிகளை சிட்னி குவித்து வந்தாலும், எழுத்தாளராகப் புகழ்பெறாத ஏக்கம் அவருக்கு இருந்தது.

ஒருமுறை சிட்னியின் வீட்டில் தீப்பிடித்தபோது போலீஸ்காரர்கள் `உங்களுக்குத் தேவையானதை எடுத்துவிட்டு வாருங்கள்’ என்றபோது சிட்னி பேப்பரையும் பேனாவையும் மட்டும் எடுத்துக்கொண்டு வந்தார். அப்போது, ``என்னுடைய வாழ்க்கையை கற்பனைகூட செய்துபார்க்க முடியாது'' என்றார். எழுத்துக் காதலனாகவே தன் வாழ்நாளை கழித்தார். தீவிரமான இலக்கியவாதியாக சிட்னியைக் கருத முடியாது என்றாலும், உலகம் முழுவதும் தனக்கான வாசகர்களைக்கொண்டிருந்தார். த்ரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் நாவல்களையே அதிகம் எழுதினார்.

1969-ம் ஆண்டு தன்னுடைய 52 வயதில் முதல் நாவலான `தி நேக்டு ஃபேஸ்’ வெளியானது. ஒரு புத்தகம்கூட விற்காதோ என்ற எண்ணத்தில் அவரே அவருடைய முதல் புத்தகத்தை வாங்கினார். அதுவே அவருடைய பழக்கமாகவும் ஆனது. இந்த நாவல், மிகப்பெரிய அளவிலான வாசகர்களை அவருக்குக் கொடுத்தது. அடுத்த நாவலான `தி அதர் சைடு ஆஃப் தி மிட் நைட்’ (The Other Side Of The Midnight), பரிசுகளையும் பாராட்டுகளையும்  குவித்தது.

திரைத்துறையில் இருப்பதைவிட நாவலாசிரியராக இருக்கவே அவர் விரும்பினார். நாவலுக்கான தளத்தில் மிகப்பெரிய சுதந்திரம் இருப்பதாக உணர்ந்தார். ``நாவலில் ஒரு ஆர்மியை காசே இல்லாமல் கொலை செய்யலாம்” என்பார். நாவலில் பெண் கதாபாத்திரங்களை அதிக அளவில் பயன்படுத்துவார் சிட்னி. ``ஆண்களைவிட பெண்கள் இன்ட்ரஸ்டிங்கான மனிதர்களாக இருக்கிறார்கள். பெண்களின் ஸ்மார்ட்னஸ், க்ளவர்னெஸ் எல்லாம் பாலினத்தைத் தாண்டிய விஷயமாக இருக்கின்றன. என்னுடைய பெண் கதாபாத்திரங்கள் எல்லாம் நான் பார்த்த பெண்களின் பிரதிபலிப்புதான்'' என்பார். கதாபாத்திரங்கள் மீது பேரன்புகொண்ட சிட்னி, தன்னுடைய நாவலில் சில கதாபாத்திரங்களைக் கொல்லும்போது அழுதுவிடுவாராம். சில இடங்களில் அதிகமாக உணர்ச்சிவசப்படுவாராம். அந்த அளவுக்கு சென்சிட்டிவான மனிதர் சிட்னி.

``எனக்கு வாசிப்பு பழக்கமில்லை. உங்களுடைய நாவல்கள் எனக்கு அறிமுகமான பிறகு தொடர்ந்து நான் வாசிக்கிறேன். உங்களையும் பிறரையும்கூட'' என்று சொல்லும் வாசகர்களையும் உருவாக்கியவர் சிட்னி. `சிட்னியின் புத்தகங்களை எடுத்தால் கீழே வைக்கவே முடியாது'' என்று ஒரு விமர்சகர் எழுதியுள்ளார். அதற்கு ``பதிப்பகத்தினர், அட்டையில் பசையைத் தடவியது காரணமாக இருக்கலாம்'' என்று மற்றொரு விமர்சகர் கேலியும் செய்வார். தன் புத்தகங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்பவராகத் திகழ்ந்தார் சிட்னி.

``நான் ஒரு புத்தகத்தை எழுதும் முறை மிகவும் மோசமானது. அதை நான் உங்களிடம் கூறுகிறேன். ஆனால், நீங்கள் யாரும் அதைப் பின்பற்றாதீர்கள். எழுதப்போகும் கதையின் கருவையோ, நிகழும் தருணத்தையோ முதலில் நான் முடிவுசெய்வதில்லை. கதைக்குரிய கதாபாத்திரங்களையே முடிவுசெய்கிறேன். இந்தக் கதாபாத்திரங்களை வைத்தே கதையை எழுதுகிறேன். உண்மையிலேயே உங்களுக்கு எழுத்தாளராக வேண்டும் என்ற ஆசை இருந்தால், போய் எழுதுங்கள். எந்த விஷயமும் உங்களைத் தடுத்து நிறுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களை நிறுத்தக்கூடிய காரணங்கள் உங்களிடம்தான் இருக்க வேண்டுமே தவிர, வெளியுலகமாக இருக்கக் கூடாது” - என்று அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு அறிவுரையும் கூறுவார்.

சிட்னி தன்னுடைய மகளுக்கு சிறந்த கதைசொல்லியும்கூட. ஒவ்வொரு நாளும் ``எங்க நாம விட்டோம்..?'' என்று தொடங்கும் கதைக்காகவே ஒவ்வோர் இரவும் அவருடைய மகள் காத்திருப்பாராம். உடல் பிரச்னைகளாலும் மனப்பிரச்னைகளாலும் எப்போதும் உழன்றுகொண்டே இருந்தாலும், சிரித்த முகத்துடன் ``ஐ' யம் ஃபைன்'' என்று கடந்து செல்லும் ஜென்டில்மேன் சிட்னி. தன்னுடைய வாழ்க்கையை,`தி அதர் சைடு ஆஃப் மி’ (The Other Side Of Me) என்ற புத்தகமாக எழுதியுள்ளார். ``எதுவும் நிரந்தரமில்லை'' என்பார் சிட்னி. படைப்புகள் வழியாக என்றும் நிரந்தரமாக நம்மோடு உலாவக்கூடியவர் சிட்னி.  `

`LIFE IS LIKE A NOVEL. IT’S FILLED WITH SUSPENSE. YOU HAVE NO IDEA WHAT IS GOING TO HAPPEN UNTIL YOU TURN THE PAGE.”

– SIDNEY SHELDON

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு