Published:Updated:

நான் ஏன் எழுதுகிறேன்?

நான் ஏன் எழுதுகிறேன்?
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ஏன் எழுதுகிறேன்?

நான் ஏன் எழுதுகிறேன்?

எஸ்.சுதந்திரவல்லி

நா
த்திகத்துக்கும் ஆத்திகத்துக்கும் இடையிலானது எனது எழுத்துகள். நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்பா என்னைத் தொட்டுப் பேசியதுகூட கிடையாது. சிறுவயதில் ஆரம்பித்த அந்த இடைவெளி, வளர்ந்த பிறகும் அப்படியே இருந்தது. எனது பதின் பருவத்தில் அப்பா குடிநோயாளியாக இருந்தார். வீட்டில் பெரும்பாலும் சண்டை நடக்கும். ஒரு கட்டத்தில் அக்கா மனச்சிதைவுக்கே உள்ளாகியிருந்தார். அந்தவிதமான பாதிப்புக்குள் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அதிலிருந்து என்னை மீட்டெடுக்க, புத்தகங்கள் அதிகம் வாசித்துக்கொண்டிருந்தேன். அது மட்டுமல்லாது, அந்த வயதில் எனது மனநிலையை சமப்படுத்த ஏனோ ஏதேனுமொரு நண்பனும் தேவைப்பட்டுக் கொண்டிருந்தான். 

நான் ஏன் எழுதுகிறேன்?

ஏழாம் வகுப்பு படிக்கும்போதே காமிக்ஸ், பாக்கெட் நாவல், ராணிமுத்து... என புத்தகங்கள் வாசிக்கப் பழகியிருந்தேன். வாசிப்பதும் ஹைக்கூ கவிதைகள் எழுதுவதும்  திருமணத்திற்கு முன்புவரை இருந்தது. வீட்டின் அருகே வசித்த உஷா அக்காவோடு சேர்ந்து நடமாடும் நூலகத்திலிருந்து வருகிற புத்தகங்களை வாங்கி வாசித்ததும் உண்டு. என் கணவரும் எழுத்தாளர் என்பதனால், திருமணத்திற்குப் பின்னர் அவருடைய பாதிப்பில், வாசிப்பிலும் எழுத்திலும் எனக்குள் மாற்றம் வந்தது. சுந்தர ராமசாமி, லா.ச.ரா, அசோகமித்திரன், மௌனி, புதுமைப்பித்தன் போன்றவர்களின் எழுத்துகள் அறிமுகமாயின. நவீன கவிதைகளும் வாசிக்க ஆரம்பித்தேன். மொழியின் முக்கியத்துவத்தையும் எனக்கான மொழியையும் கண்டடைய முடிந்தது.

நான் ஏன் எழுதுகிறேன்?திருமணமான மூன்று வருடங்களுக்குப் பிறகு, கணவரும் குடிக்க ஆரம்பித்தார். ஏறக்குறைய 15 வருடங்கள் குடிநோயாளியாக மாறியிருந்தார். நானும் குழந்தைகளும் அவரிடம் சிரமப்பட்டோம். அவரிடமிருந்து பிரிவதற்காக எடுத்த முயற்சிகளெல்லாம் தோல்வியுற்ற நிலையில், மீண்டும் அவரிடமே மண்டியிட்டு, வருவதை எதிர்கொள்ளலாம் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன் குடியை நிறுத்தினார். அதன் பிறகு குடியில்லை என்றாலும், சில காலங்கள் குடிநோயாளியின் குணங்களோடே இருந்தார். எல்லா துயரமும் சேர்ந்து ஒருவித  மன அழுத்தத்திற்குள் சிக்கியிருந்தேன். அதிலிருந்து வெளிவர மீண்டும் புத்தகங்கள் வாசிப்பதிலும் கவிதைகள் எழுதுவதிலும் கவனம் செலுத்தினேன். எனது முதல் கவிதைத் தொகுப்பு, ‘பட்டணத்து ரயிலை மட்டும் கிராமத்தை நோக்கிக் கொண்டுவந்து சேர்த்தாள்’ தொகுப்பில், குடிநோயாளிகளின் மனநிலையையும் அவர்களுடன்  வசிக்கிறவர்களின் அவலம் குறித்தும் எழுதியிருக்கிறேன். நண்பர்களின் ஊக்குவிப்பும் தொடர்ந்து எழுதுவதற்குக் காரணமாக இருந்தது. இரண்டாவது தொகுப்பில், துயரங்களை எளிமையாகவும் கிண்டலோடும் சமநிலை மனதோடும் கடந்திருக்கிறேன்.

என் தந்தை இடதுசாரி நாத்திகவாதி.  ‘ஆண்-பெண்ணில் ஏற்றத்தாழ்வு வேண்டியதில்லை இருபாலரும் சமமானவர்’ என்பார். ‘கோயிலுக்குச் செல்ல வேண்டியதில்லை, மனமே கோயில்’ என்பார். கணவர் ஆத்திகவாதி; ஆணதிகாரம் மிக்கவர். கோயிலுக்குச் சென்றால்தான் மனம் சுத்தமாகும்’ என்பார். நாத்திகத்துக்கும் ஆத்திகத்துக்கும் இடையிலானது எனது எழுத்துகள்.

படம்: ராம்குமார்

ந.பெரியசாமி

‘சி
றுதொண்டர்’ புராணக் கதையை கட்டிலில் படுத்தவாறு தாத்தா பாடிக்கொண்டிருப்பார். கேட்டுக்கொண்டிருக்கும் எனக்கு, பிள்ளைக்கறி சமைக்க வேண்டி கேட்கும் இடம் உருக்கமானதாக இருக்கும். ஒவ்வொரு முறையும் அழுதுவிடுவேன்.  ‘பிள்ளைக்கறி மீது கடவுளுக்கு எப்படி ஆசை வரும்? அப்போ, கடவுள் தப்பாச்சே’ எனும் எண்ணம் தோன்ற, கதைதானே என சமாதானமாகிக்கொண்டு, யாரோ எப்பவோ  எழுதியது யோசிக்கவும் அழவும் செய்துவிடுகிறதே, இப்படி நாமும் ஒரு நாள் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ராஜாக்களின் உயிர்களைச் சிப்பியுள் ஒளித்துவைத்து அதைக் கண்டடையச் செல்பவனின் வீர சாகசங்களைக் கூறும் பாட்டியின் கதைகள் அதை வலுவூட்டும் விதமாக இருந்தன.

எழுத்தாசையால் ஏற்பட்ட தொடர் வாசிப்பு, ஒன்றில் தெளிவைத் தந்தது. பிரத்யேகப் பிறவிகள் மட்டும்தான் எழுதமுடியும் என்றில்லை, பயிற்சியும் அனுபவமும் இருந்தால் எல்லோராலும் எழுதமுடியும் என்பதுதான் அது.

நான் ஏன் எழுதுகிறேன்?

பூவை வெளியில் காட்டி, பருப்புகளை நிலத்தில் வைத்திருக்கும் கடலைச் செடிகளை ஒத்ததுதானே நம் வாழ்வும். புறத்தில் ஒன்றாகவும் அகத்தில் வேறொன்றாகவும்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முழு வானத்தையும் பார்க்கும் திறன்கொண்ட நவீனத் தொழில்நுட்பமும் கருவிகளும் அனைத்தையும் சுருங்கச் செய்கின்றன. எழுத்து மட்டும்தான் அனைத்தையும் விசாலப்படுத்துகிறது. கையளவு நீரைக் கடலாகப் பார்க்கும் பார்வையை அதுதான் தருகிறது.

நான் ஏன் எழுதுகிறேன்?வாழ்வின் பொக்கிஷமான பால்யத்தை, அதில் இழந்தவற்றைக் காலமற்று இருப்பில் வைத்திருக்க, புதுப்புது பாதைகளை போட்டுப் பார்க்க எழுத்து தேவைப்படுகிறது.நேசிக்கும் மனிதர்களையும் ஜீவராசிகளையும் என்றென்றைக்குமாக உடன் பயணிக்கச் செய்து, சோர்வடையும்போதெல்லாம் உரையாடி, அவர்களின் அனுபவங்களை நமக்கானதாக்கி, இடர் கலைத்து பனை மரமாக எழுத்தில் நிலைத்திடுகிறோம். விழும் சிறு சிறு துளிகளால் தன்னை நிரப்பிக்கொள்ளும் குளமாக்கி, புதியவற்றையும் நல்ல நண்பர்களையும் நம் வாழ்வில் கோர்த்துக்கொண்டிருக்கும் எழுத்தை எழுதத்தானே வேண்டும்!

உணர்வுகளின் இழையால் பின்னப்பட்ட காதலால் இணைந்து வாழ விரும்புவோரைச் சாதி, மத, ஆணவத்தின் தடித்தனத்திற்கு இன்றைய நவீன காலத்திலும் பலிகொடுத்துக்கொண்டிருக்கிறோம். அதிகாரத்தைத் தக்கவைக்க அப்பாவிகளைப் பலியாக்கும் போர்கள், இயற்கைச் சூழல் நாசம், குடிநீர் தொடங்கி வாழ்வின் அனைத்து அன்றாடப்  பயன்பாட்டிலும் கலப்படம் செய்து உழைப்பைச் சுரண்டும் கார்ப்பரேட் கொடூரங்கள், இயற்கையை இல்லாமலாக்கும் அவலம் என ஏதாவதொன்று நம்மைத் தொந்தரவுக்கு உள்ளாக்கியபடியேதானே இருக்கிறது. இப்படியான சமூகத்தில் நாம் யாராக இருக்கிறோம், இதில் நம் பங்களிப்பு என்னவாக இருக்கிறது என்பது குறித்த புரிதலே தேர்வுகொள்ளும் மொழியில் எழுத்து வடிவத்தில் வெளிப்படும். நிலத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும், குதிர்களில் கிடக்கும் விதைநெல்லான எழுத்தை எழுதுவது தப்பித்துக்கொள்வதற்காக அல்ல, தொடர்ந்து இச்சமூகத்தின் இயக்கத்தில் இருந்துகொண்டிருப்பதற்காக.

படம்  : வ.யஷ்வந்த்