Published:Updated:

ராமச்சந்திரனின் ஒற்றை இறகு

ராமச்சந்திரனின் ஒற்றை இறகு
பிரீமியம் ஸ்டோரி
ராமச்சந்திரனின் ஒற்றை இறகு

ஓவியங்கள்: வேல்

ராமச்சந்திரனின் ஒற்றை இறகு

ஓவியங்கள்: வேல்

Published:Updated:
ராமச்சந்திரனின் ஒற்றை இறகு
பிரீமியம் ஸ்டோரி
ராமச்சந்திரனின் ஒற்றை இறகு

“ஏற்கெனவே திரைப்படங்களில் தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிரான விஷயங்கள் குறித்து எனது தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை எடுத்திருந்தது அனைவரும் அறிந்ததே. ‘தமிழில் பெயரிடப்படும் படங்களுக்கு எல்லாம் வரிவிலக்கு’ என்கிற முடிவை முந்தைய அரசு எடுத்திருந்தது. முன்னாள் முதல்வர் திரு.லோகநாதன் தன் சுய விளம்பரத்துக்காகவும் குடும்ப நலனுக்காகவும் எடுத்திருந்த முடிவுதான் அது என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அது அவரது துதிபாடிகள் பாராட்டுவதற்குப் பயன்பட்டதே தவிர, அதனால் வேறு எந்தப் பலனும் இல்லை என்று பொதுமக்களிடம் தொடர்ச்சியாகக் கருத்து இருந்துவந்தது. அதனால், ‘தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயரிட்டால் மட்டும் போதாது, அந்தப் படத்தின் பாடல்கள், தலைப்பு, காட்சிகள், கதை அனைத்தும் தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக இல்லாமல் இருந்தால்தான் வரிவிலக்கு’ என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எனது அரசு எடுத்திருந்தது. அதேபோல் இப்போது ‘தமிழில் எழுதப்படும் கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றில் இடம்பெறும் செய்திகளும் வார்த்தைகளும் தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக இல்லாமலிருக்க வேண்டும்’ என்று பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் வந்ததால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவையும் எனது தலைமையிலான அரசு எடுத்திருக்கிறது. முந்தைய திரு.லோகநாதன் அரசில் வெளியான கவிதைத் தொகுப்புகளின் எண்ணிக்கை 347. அதில், ஆண் கவிஞர்கள் எழுதியவை 332, பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைத் தொகுப்புகளோ 15. இந்தக் கவிதைத் தொகுப்புகளில் அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளும் தமிழ்க் கலாசாரத்துக்கு எதிரான விஷயங்களும் அடங்கிய கவிதைத் தொகுப்புகள் 174. இந்தக் கவிதைத் தொகுப்புகளை எழுதியதில் திரு.லோகநாதனின் கட்சி உறுப்பினர்களாக இருக்கும் பெண்கவிஞர்களும் ஆண்கவிஞர்களும் அடக்கம் என்பதை இந்த அவையின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். எனவே, தமிழ்க் கலாசாரத்தைக் காப்பதில் உறுதியாக இருக்கும் எனது அரசு, இனி தமிழ்க் கவிதைகளில் தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரான செய்திகளோ வார்த்தைகளோ இடம்பெறக் கூடாது என்றும் ஒவ்வொரு கவிதைப் புத்தகமும் இனி அந்தந்த வட்டாரத்தின் வட்டாட்சியரால் தணிக்கை செய்யப்பட்டு தடையில்லா ஒப்புகைச் சான்றிதழ் பெற்ற பிறகே வெளியிடப்படும் என்றும் முடிவெடுத்திருக்கிறது.’’  

ராமச்சந்திரனின் ஒற்றை இறகு

இவ்வாறு முதல்வர் பேசியதும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களும் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்த புகைப்படங்களும் விரிவான செய்திகளும் நாளிதழ்களில் இடம் பெற்றிருந்ததைப் பார்த்து, தாசில்தார் பிரேம்குமார் திடுக்கிட்டார். ஏனெனில், அவருக்குத் தமிழ்க் கவிதைகளோடு வாழ்க்கையின் எந்தக் காலகட்டத்திலும் பரிச்சயம் இருந்ததில்லை. அதிலும், பள்ளிக் காலங்களில் செய்யுள்களை மனப்பாடம் செய்வது என்பது எப்போதும் அவருக்குக் கொடுங்கனவாகவே இருந்துவந்தது. இருந்தாலும், இது நவீனக் கவிதைகள் என்பதால் ‘புரியத்தானே செய்யும்’ என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டார்.

அவர் அதிர்ச்சியடைந்ததற்கு இன்னொரு முக்கியக் காரணமும் இருந்தது. முதல்வரின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை வரவேற்று, ‘தமிழ் அடலேறுகள்’ இயக்கத்தின் தலைவரும் சினிமா இயக்குநருமான நகைமாறன் வெளியிட்டிருந்த அறிக்கைதான் அது. ‘இந்த முடிவைத் தங்கள் கட்சி முழுமனதோடு வரவேற்கிறது. வாராவாரம் முதல்வருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் விழாவை நடாத்தும் வாய்ப்பை முதல்வர் வழங்கிவிடுகிறார்’ என்று தெரிவித்திருந்த அடலேறு நகைமாறன், ‘ஒருவேளை தமிழ்ப் பண்பாட்டைச் சிதைக்கும் கவிதை நூல்கள் வெளியாகி விட்டால் அதற்கு வட்டாட்சியர்கள்தான் பொறுப்பு என்றும் அவர்களைப் பணிநீக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டும்’ என்றும்வேறு தெரிவித்திருந்ததுதான் பிரேம்குமாரின் அச்சத்துக்குக் காரணம்.

ராமச்சந்திரனின் ஒற்றை இறகுஅண்ணளவாக ஒரு நாளைக்கு மூன்று புத்தகங்கள் வீதம், மாதத்துக்கு நூறு கவிதைப் புத்தகங்கள் அவரது அலுவலக மேசைக்கு வந்து குவிய, மேலும் மேலும் திகைப்புக்கு உள்ளானார் தாசில்தார் பிரேம்குமார். மனிதர்கள் எல்லாம் குரங்கிலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்பதை நம்பும் பிரேம்குமார், ‘கெட்டதைப் பார்க்காதே, கெட்டதைக் கேட்காதே, கெட்டதைப் பேசாதே’ என்று சுயக்கட்டுப்பாட்டை போதிக்கும் காந்தியின் குரங்குகளாகத்தான் அவை இருக்க வேண்டும் என்பதையும் உறுதியாக நம்புகிறார். எனவே, நல்லொழுக்கத்தைப் போதிக்கும் நற்செய்திகளே கவிதைகளில் இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால், ஒவ்வொரு கவிதைப் புத்தகத்தையும் பிரித்துப் பிரித்துப் படித்துப் பார்க்க, மேலும் மேலும் அதிர்ச்சிக்குள்ளானார். ஏனெனில், அவர் சிறுவயதில் படித்திருந்த செய்யுள்களாவது புரியும் தரத்தில் இருந்தது. இந்தக் கவிதைகளைப் படிக்கப் படிக்க அவர் கண்ணில் நூறாயிரம் பூச்சிகள் பல்வேறு வண்ணங்களில் பறந்தன.

பிரேம்குமாருக்கு ரெங்கநாதன் என்று ஒரு நண்பனிருந்தான். அவன் இந்த நவீன கவிதைகளை எல்லாம் படிப்பவன், சில சினிமாப் பாடல்களும் எழுதியிருக்கிறான். அவனிடம் இந்தக் கவிதைகளைக் கொடுத்து விளக்கம் கேட்டான். “கவிதைகளுக்கு விளக்கம் கேட்பதுதான் கவிதைகளுக்கு நிகழும் உச்சபட்ச அவமானம். ஒரு பிரதிக்கான அர்த்தத்தை வாசகன்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். பிரதியே பிரதிக்கான அர்த்தத்தை உருவாக்குகிறது” என்று அவன் சொன்னது, அந்தக் கவிதைகளைவிட புரியாமல் இருந்தது. இது ஏதோ ஆட்டோமேட்டிக் சமாசாரம் என்று நினைத்தார். செய்யுள்களுக்காவது கோனார் நோட்ஸ் இருக்கும். இவற்றை என்ன செய்வதென்று தெரியவில்லை. ‘கவிதைகள் புரிந்தால் என்ன, புரியாவிட்டால் என்ன, அவற்றில் ஆபாச வார்த்தைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வதுதான் தாசில்தாரின் வேலை’ என்ற முடிவுக்கு வந்தவர், கவனமாகப் படிக்கத் தொடங்கினார்.

கிட்டத்தட்ட எல்லாப் புத்தகங்களிலும் ‘முலை’ என்ற வார்த்தை இருந்தது அவருக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. சிறுவயதில் நண்பர்கள் பேசும் கெட்டவார்த்தைக் கதைகள், இணையக் காமக்கதைகள், கழிப்பறைகளில் படம் வரைந்து குறிக்கப்பட்ட பாகங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ‘முலை’ என்பது மோசமான வார்த்தை என்பதை ஆணித்தரமாக நம்பிய பிரேம்குமார், அந்தக் கவிதைப் புத்தகங்களுக்கு எல்லாம் தடையில்லாச் சான்றிதழ் கொடுக்க மறுத்தார்.

மூன்றாம் நாள் அவரை அலுவலகத்தில் ஆவேசமாகச் சந்தித்த கவிஞர் ஒருவர், “முலைங்கிறது சங்க இலக்கியத்திலிருந்தே தமிழ்ல இருக்கிற வார்த்தை சார். கம்ப ராமாயணத்தில ராமன் காட்டுக்குப் போனப்போ, அயோத்தி மக்கள்லாம் அவரைக் கூப்பிடப் போறாங்க. அவர் வரமாட்டேங்கிறார். திரும்பிப் போறப்போ நைட் ஆகிடுது. மக்கள் காட்டுல படுத்துத் தூங்குறாங்க. அப்போ, சின்ன வயசுப் பொண்ணுல இருந்து பல பொண்ணுங்க முலையை சைஸ் வாரியா வர்ணிச்சு எழுதியிருக்கார் கம்பர். நீங்க அப்போ தாசில்தாரா இருந்தா கம்பராமாயணமே வந்திருக்காதே?” என்றார் குத்தலாக.

‘அவ்வளவு சோகமான சிச்சுவேஷனில் கம்பர் ஏன் அவ்வளவு கிளுகிளுப்பாக எழுதினார்? இந்தாள் சொல்வதை நம்பலாமா?’ என்று குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது தாசில்தாருக்கு. இருந்தாலும் “நீங்க ஒண்ணும் கம்பர் இல்லையே, அப்படி எழுதறதுக்கு” என்று சமாளித்தார். ஒருநாள் அவரது நவீன கவிதை நண்பன், திரைப்படப் பாடலாசிரியன் ‘குகை’ என்ற புத்தகத்தில் வந்த ‘மாறிவரும் திரைப்பாடல்களும் பாலுணர்வின் வாசல்களும்’ என்ற கட்டுரையைக் கொண்டுவந்து கொடுத்தான்.

‘பத்து வருடங்களுக்கு முன்னால் வந்த எல்லா சினிமா டூயட் பாடல்களையும் ஒரே ரகத்தில் அடக்கிவிடலாம். நாயகன் உறவுக்கு அழைப்பதும், ‘எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்’ என்று நாயகி சிணுங்குவதும்தான் எல்லாப் பாடல்களின் சாராம்சம்’ என்றது அந்தக் கட்டுரை. அவர் சில பாடல்களை நினைவுபடுத்திப் பார்த்தபோது ‘நியாயம்தானே’ என்று தோன்றியது. 

ராமச்சந்திரனின் ஒற்றை இறகு

‘தாசில்தார்களைச் சிறைக்குள் அடைக்க வேண்டும்’ என்று அறிக்கைவிடுத்த நகைமாறனின் சினிமாக்களிலேயே அப்படியான பாடல்கள்தான் அதிகம். அதிலும், ஒரு பாடல் முழுதும் நாயகன் வேட்டியைக் கழற்றி, ஒலிம்பிக் தீபத்தைப்போலத் தலைக்கு மேலே பிடித்தபடி, நாயகிக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருப்பான். ‘அப்போ சினிமாப் பாடல்களை விட்டுட்டு இந்தப் புரியாத புத்தகங்களில் ஏன் மல்லுக்கட்டுறாங்க’ என்றும் தோன்றியது. ஆனால், கட்டுரை முடியவில்லை.

‘ஆனால் சமீபகாலமாகப் பாடல்களின் தொனி மாறியிருக்கிறது. இப்போது பாலுறவுக்கு அழைப்பது நாயகர்கள் அல்ல; மாறாக நாயகிகள்.

‘டாடி மம்மி வீட்டில் இல்ல
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா’ என்றும்

‘வாடா வாடா பையா
என் வாசல் வந்து போய்யா’


என்றும், அழைக்கும் குரல்கள் மாறியிருக்கின்றன. பாலுறவு அழைப்பு விடுக்கும் வெளி, பெண்களுக்கும் திறந்திருக்கிறது. குறிப்பாக வீடு திறந்திருப்பது, வாசல் போன்றவை பெண்நோக்கு பாலியல் சுதந்திரத்துக்கான குறியீடுகள்’ என்றது கட்டுரை. குழப்பம் இன்னும் அதிகரித்தது. எப்படியிருந்தபோதும் அவர் ‘முலை’ என்ற வார்த்தையை அனுமதிக்கப்போவதில்லை. ‘வாசல் திறந்தால் என்ன, திறக்காவிட்டால் என்ன, வேலை முக்கியம்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.

ஆனால், ஒரு வாரம்கூடக் கழிந்திருக்காது. ‘உங்கள் வட்டாரத்திலிருந்து வந்த ஒரு கவிதைப் புத்தகத்தில் ‘தனம்’ என்ற ஆபாச வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறதே? இதற்கான விளக்கத்தை அளிக்கவும். மூன்றுமுறை மட்டுமே நீங்கள் தவறுவதற்கான வாய்ப்பு உண்டு. இது முதல் முறை’ என்று எச்சரித்து தலைமை அலுவலகத்திலிருந்து அவருக்குக் கடிதம் வந்திருந்தது.

‘தனம்’ என்பது கெட்டவார்த்தையா? அவருடன் கல்லூரிக் காலத்தில் படித்த தனலெட்சுமி, ‘தனம்’ என்றே அழைக்கப்பட்டாள். தூரத்து உறவுப்பெண் தனபாக்கியமும் ‘தனம்’ என்றே அழைக்கப்பட்டாள். அது கெட்ட வார்த்தையா? இணையத்தில் தேடியபோதுதான் ‘ஸ்தனம்’, ‘தனம்’,  ‘கொங்கை’ என்று முலைகளுக்கு வேறு சொற்கள் இருப்பதும் தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்ட கோபமும் விரக்தியும் மேலும் மேலும் அதிகரித்தது. ‘இனி கூடுதல் எச்சரிக்கையுணர்வு தேவை’ என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டார். அன்றிலிருந்து தனத்துக்கும் கொங்கைக்கும் தணிக்கை.

எவ்வளவு எச்சரிக்கையுடன் இருந்தபோதும், இரண்டே வாரங்களில் அவருக்கு இரண்டாவது எச்சரிக்கைக் கடிதமும் வந்துவிட்டது. ‘ஒரு கவிதைப் புத்தகத்தில் ‘யோனி’ என்ற ஆபாச வார்த்தை இடம்பெற்றுவிட்டதாம். இனி ஒரே ஒரு முறைதான் அவர் மன்னிக்கப்பட முடியும். பிறகு, தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு துறைரீதியான விசாரணை நடத்தப்படும். அவர் எப்போது இந்த நவீன கவிதைகளைப் படிக்க ஆரம்பித்தாரோ அப்போதிருந்தே அதிர்ச்சிமேல் அதிர்ச்சி அடைந்து கொண்டேயிருந்தார் என்பதால், இந்த அதிர்ச்சியில் அதிர்ச்சியடைந்தாரா என்று அவருக்கே தெரியவில்லை. ஆனால், ஏன் இப்படிக் குழம்பிய மொழியில் சிந்திக்கிறோம் என்ற உணர்வு மட்டுமிருந்தது.

‘யோனி’ என்பது கெட்டவார்த்தையா? அதுவும் பெண்களின் பிறப்புறுப்பைக் குறிக்கும் வார்த்தையா? அப்படியான ஒரு வார்த்தையை அவர் கேள்விப்பட்டதே இல்லை. பெண்களின் பிறப்புறுப்பைக் குறிக்கும் மூன்றெழுத்துக் கெட்டவார்த்தையும் ரெண்டெழுத்துக் கெட்டவார்த்தையும் அவருக்குத் தெரியும். குழாயடிச் சண்டைகளில், நண்பர்களுடனான மோதல்களில், குடிகாரர்களின் வசவுகளில், மீண்டும் இணையக் காமக்கதைகளில் இந்த வார்த்தைகள் அடிக்கடி புழங்குவதை அவர் அறிந்திருக்கிறார். ஆனால், யாரும் ‘போடா முட்டாள் யோனி’ என்று திட்டி அவர் பார்த்ததே இல்லை.

ராமச்சந்திரனின் ஒற்றை இறகுசமையலறையில் மும்மரமாக இருந்த மனைவியிடம், “யோனின்னா என்னன்னு தெரியுமா?” என்று கேட்டார். “வடநாட்டு ஸ்வீட் பலகாரமாங்க? ஆமா இந்த வாரமாவது சேலை எடுக்கப் போலாமா? கலம்காரி சேலைதான் எடுக்கணும்” என்றார் மனைவி. குழப்பமாக இருந்தது.

யாருக்குமே தெரியாத ஒரு வார்த்தையைப் பயன்படுத்தினால் ஏன் அரசாங்கம் மிரள்கிறது? அது இருக்கட்டும். தொண்ணூறு சதவிகிதம் தமிழர்களுக்குக் கெட்டவார்த்தை என்று தெரியாத, அர்த்தமே புரியாத வார்த்தையை ஏன் இந்தப் பாழும் நவீன கவிஞர்கள் பயன்படுத்துகிறார்கள்? கேட்டால் ‘கலகம்’ என்கிறார்கள். கலகம் என்றால் நேரடியாகவே அந்த மூன்றெழுத்துக் கெட்டவார்த்தையையும் இரண்டெழுத்துக் கெட்டவார்த்தையையும் பயன்படுத்த லாமே? யோசிக்க யோசிக்க அந்த வார்த்தை அவருக்கு ஏற்கெனவே பரிச்சயமானது என்பது மங்கலாய்த் தெரிந்தது. உண்மைதான்!

அவரின் சித்தப்பா, ரயில்வே ஊழியர். ஜோதிடம், ஜாதகம் பார்ப்பதில் ஆர்வமுடையவர். அவர் அடிக்கடி ‘யோனிப்பொருத்தம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார். “பத்துப் பொருத்தத்தில் யோனிப்பொருத்தம் ரொம்ப முக்கியம்” என்பார். இணையத்தில் தேடியபோது, ‘திருமணத்துக்குப் பிறகு, ஆணுக்கும் பெண்ணுக்கும் தாம்பத்திய உறவு எப்படி இருக்கும் என்று கணிப்பதுதான் யோனிப்பொருத்தம்’ என்றது.

‘கொம்பில்லாத தாவரஉண்ணிகள் அனைத்திற்கும் புணர்ச்சி உறுப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். ஊண் உண்ணிகள் அனைத்திற்கும் புணர்ச்சி உறுப்பு ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும். எலி, கீரி போன்ற அனைத்துண்ணிகளுக்குப் புணர்ச்சி உறுப்பு ஒரே மாதிரியாக இருக்கும். நாகம், சாரை போன்ற ஊண் உண்ணிகளுக்குப் புணர்ச்சி உறுப்பு ஒரே மாதிரிதான் இருக்கும்.

பெண்களின் யோனி பேதங்கள் மிருகங்களின் யோனி பேதங்களை ஒத்திருக்கும் என்பது ரிஷிகளின் கருத்தாகும். ஆண், பெண் இருவருக்குமான யோனி பேதங்களை அவர்களுடைய ஜென்ம நட்சத்திரங்கள் மூலமாகக் கண்டறிந்து, அவை பரஸ்பரம் இணைவதற்கு ஏற்றவைதானா என்பதைக் கண்டறிவது யோனிப்பொருத்தம் பார்ப்பதின் நோக்கமாகும். மிருகங்கள் புணர்ச்சியில் ஈடுபடும்போது, குணபேதங்கள் காணப்படும். உதாரணமாக ஆடுகள் அடிக்கடி புணர்ச்சியில் ஈடுபடும். ஆனால், புணர்ச்சி நேரம் மிகவும் குறைவுதான். நாய்கள் அடிக்கடி புணர்ச்சியில் ஈடுபடுவதில்லை. ஆனால், புணர்ச்சி நேரம் அதிகமாகும்.’ என்றெல்லாம் விரிவாக விளக்கிய ஜோதிட இணையம், எந்தெந்த நட்சத்திரக் காரர்களுக்கு எப்படிப்பட்ட மிருகப் புணர்ச்சி இருக்கும் என்பதையும் பட்டியலிட்டிருந்தது.

அசுவினி - ஆண் குதிரை, பரணி - ஆண்யானை, மிருகசீரிஷம் - பெண் சாரை, மகம் - ஆண் எலி, அஸ்தம் - பெண் எருமை என்று பட்டியல் நீண்டுகொண்டே போனது. அப்போ இந்த ஜோதிடத்தை என்ன செய்ய? ஒரு பெண்ணின் யோனி, புணர்ச்சிக்குப் பொருத்தமானதா என்பதை ஜாதகக் கட்டங்களின் வழி தீர்மானிப்பது அவருக்கு வேடிக்கையாக இருந்தது. கல்லூரி முடித்து, இந்த அரசுப் பணிக்காகப் பல தேர்வுகளை எழுதி, தாசில்தாராக இருக்கும் தான் இப்படி யோனி ஆராய்ச்சியில் ஈடுபடுவது சரிதானா என்று வருத்தமாகவும் இருந்தது அவருக்கு.

அது என்னவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ‘யோனியை அனுமதித்தால் வேலை பறிபோவது நிச்சயம்’ என்ற முடிவுக்கு வந்தார். முன்புபோல் ஏமாற அவர் தயாரில்லை. முலைக்கு மாற்றுச் சொற்கள் கண்டுபிடித்ததைப்போல யோனிக்கும் மாற்றுச் சொற்களைப் பயன்படுத்தி, தன் நாற்காலிக்கு வேட்டுவைப்பார்கள் என்று உறுதியாக நம்பினார். தனக்குத் தெரிந்த தமிழாசிரியர் மூலம் யோனிக்கும் அல்குல் போன்ற மாற்றுச்சொற்கள் உண்டு என்பதை அறிந்தார். இனி அல்குலுக்கும் அனுமதியில்லை.

“பெண்களின் மார்புகளுக்கும் பிறப்புறுப்புகளுக்கும் இத்தனை வார்த்தைகள் இருப்பதைப்போல் ஆண்களின் பிறப்புறுப்புக்கும் வார்த்தைகள் உண்டா?” என்று கேட்டார். தமிழாசிரியர்  “இல்லை” என்றார். ஆண்களின் பிறப்புறுப்பைப் பற்றி இலக்கியத்தில் என்ன பதிவுகள் உள்ளன என்று கேட்டதற்கு ‘அப்படி ஒன்றும் பெரிதாக இல்லையே’ என்றார் தமிழாசிரியர். ‘ஆண்களின் உறுப்புகளைப் பற்றி எழுதுவதற்குத் தமிழ் இலக்கியவாதிகளுக்கு ஆர்வமே இல்லையா?’ இப்போது பிரேம்குமாருக்கு அதிர்ச்சிகள் மெல்ல மெல்ல நீங்கி, எல்லாம் விநோதமாகத் தோன்றியது. இந்த விளையாட்டு சுவாரஸ்யமானது என்ற வகையில் அவருக்கு நவீன கவிதைகள்மீது ஆர்வமும் அதிகரித்தது. ஒதுக்கிவைத்த கவிதைப் புத்தகங்களை எடுத்துப் படிக்கத் தொடங்கியபோது, சில கவிதைகள் புரியவும் ஆரம்பித்தன. ஒரு வெற்றிப்புன்னகை தவழ்ந்தது தாசில்தாரிடம்.

சொட்டு ஒன்று
சொட்டுச் சொட்டாய்ச்
சொட்டிக்கொண்டிருந்தது.
ஒரே ஒரு சொட்டு
சொட்டுச் சொட்டாய்
எப்படிச் சொட்டும்?


என்று எழுதிப் பார்த்தார். ‘கவிதை மாதிரி இருக்கிறதே’ என்று தன் நவீன கவிநண்பனை அழைத்துக் காட்டினார். மந்திர உச்சாடனம்போல் இரண்டு மூன்று முறை கவிதை வரிகளைச் சொல்லிப் பார்த்தவன், “பிராய்டியக் குறியீடுகள் மூலம் இதைப் பாலியல் கவிதையாக வாசிக்க முடியும்” என்று விளக்கினான். நீண்ட நாள்களுக்குப் பிறகு அதிர்ச்சியாக இருந்தது தாசில்தாருக்கு.

இடைப்பட்ட காலங்களில் கவிதைப் புத்தகங்களின் வருகை குறைய, நவீன இலக்கிய உலகில் பதற்றம் பரவியது. அது குறித்து ஆராய்வதற்காக இலக்கியக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அரசின் கண்காணிப்பு அதிகமாக, இலக்கியக் கூட்டங்கள் ரகசியமாக நடத்தப்பட்டன. சங்கேதக் குறியீடுகளைச் சரியாகச் சொன்னவர்கள் மட்டுமே இலக்கியக் கூட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். வாசலில் இருப்பவர் ‘மழையின் தனிமை’ என்பார். எதிரில் இருப்பவர் ‘வெயிலின் பிரக்ஞை’ என்று சரியான சங்கேதக் குறியீட்டுச் சொல்லைச் சொன்னால்தான் அனுமதி. இல்லையென்றால், அவரை ஒரு குழப்பு குழப்பி அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவார்கள்.

அதேபோல், ‘உங்கள் பெயர் என்ன?’ என்று கேட்டால், உங்கள் பெயர் எதுவாகவும் இருக்கட்டும், ஆனால், ‘ராமச்சந்திரன்’ என்றுதான் சொல்ல வேண்டும். ‘எந்த ராமச்சந்திரன்?’ என்று அடுத்த கேள்வி வரும். எதுவும் பதில் சொல்லாமல் அரை நிமிடம் மௌனமாக இருந்தால் கூட்டத்துக்குள் நுழைய அனுமதி.

உள்ளூரில் இருக்கும் எல்லா இலக்கியவாதிகளுக்கும் தாசில்தார் பிரேம்குமாரை கோபத்துடன் தெரியும் என்பதால், ஆசையுடனும் எதிர்பார்ப்புடனும் 60 கிலோமீட்டர் தள்ளியிருந்த ஒரு இலக்கிய ரகசியக் கூட்டத்துக்குச் சென்றிருந்தார் பிரேம்குமார். அன்று அரசின் தடையை எப்படி எதிர்கொள்வது என்ற ஆலோசனைகளும், முக்கியமான எழுத்தாளர் ஒருவர் தன் சீடர் எழுதிய ‘கொழுந்தியா’ நாவல் எப்படி மூன்றாம் உலக இலக்கியம் என்றும், அதற்கு புக்கர் பரிசு கிடைப்பதற்கான வழிகள் குறித்து பேசவிருக்கிறார் என்றும் அறிந்ததில் ஆர்வம் அதிகரித்தது.

வாசலில் இருந்தவர், “நீங்கள் யார்?” என்று கேட்டார். ஒரு பதற்றத்தில்  “பிரேம்குமார்...” என்று சொன்னவர், உடனடியாக சுதாரித்துக்கொண்டு “கவிஞர்!” என்றார்.

“கவிஞரா? இங்கே எம்.எல்.எம் கூட்டம்ல நடக்குது?” என்றார் வாசலை மறித்து நின்றவர்.

ஒரு கணம் திகைத்தவர், “உனக்கான கவிதையை நீ எழுது. ஏன் எழுதவில்லை என்று என்னைக் கேட்காதே.” என்றார். தன் பாக்கெட்டிலிருந்து ஒரு காய்ந்த கோழியிறகை எடுத்து அவரின் உள்ளங்கையில் வைத்து, “சிறகிலிருந்து பிரிந்து வந்த இறகு” என்றார்.

வழிமறித்தவர் விலகினார். வாசல் திறந்தது!

சுகுணா திவாகர்