Published:Updated:

“மொழி, பண்பாடு சார்ந்த வேறுபாடுகளை நாம் கொண்டாட வேண்டும்!”

“மொழி, பண்பாடு சார்ந்த வேறுபாடுகளை நாம் கொண்டாட வேண்டும்!”
பிரீமியம் ஸ்டோரி
“மொழி, பண்பாடு சார்ந்த வேறுபாடுகளை நாம் கொண்டாட வேண்டும்!”

ராமச்சந்திர குஹாசந்திப்பு : க.சுபகுணம்படங்கள் : கே.ராஜசேகரன்

“மொழி, பண்பாடு சார்ந்த வேறுபாடுகளை நாம் கொண்டாட வேண்டும்!”

ராமச்சந்திர குஹாசந்திப்பு : க.சுபகுணம்படங்கள் : கே.ராஜசேகரன்

Published:Updated:
“மொழி, பண்பாடு சார்ந்த வேறுபாடுகளை நாம் கொண்டாட வேண்டும்!”
பிரீமியம் ஸ்டோரி
“மொழி, பண்பாடு சார்ந்த வேறுபாடுகளை நாம் கொண்டாட வேண்டும்!”

மகால இந்திய வரலாற்றாசிரியர்களில் மிக முக்கியமானவர் ராமச்சந்திர குஹா. சமூக அசைவுகள், சூழலியல், நுகர்வுக்கலாசாரம், அரசியல், கிரிக்கெட் எனப் பல்வேறு களங்கள் குறித்துத் தொடர்ச்சியாக எழுதிவருபவர். இந்திய அளவிலான குறிப்பிடத்தக்க பத்திரிகைகளில்,தொடர்ச்சியாக சமூக விமர்சனம் செய்துவருபவர். சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த அவரை, விமானத்திற்குக் காத்திருந்த சொற்ப நேர அவகாசத்தில் சந்தித்தோம்...

“மொழி, பண்பாடு சார்ந்த வேறுபாடுகளை நாம் கொண்டாட வேண்டும்!”

“ ‘இந்திய தேசம்’ என்ற கருத்தாக்கம் தீவிரமாகப் பேசப்படுகிறபோதெல்லாம்  ‘திராவிட நாடு’ என்ற ஒன்றைக் கட்டமைக்கும் குரல்களும் எழுகின்றன. ‘திராவிட நாடு’ என்ற ஒன்று உருவாவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதென்று நினைக்கிறீர்களா?”

“நாம் அந்த மாதிரியான சூழலைக் கடந்துவந்து நீண்ட காலமாகிவிட்டது என்றே நினைக்கிறேன். தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தும் தற்போது இந்திய ஒன்றியத்துக்குள் உறுதியாக இணைந்துவிட்டன.”

“உங்களுடைய ஒரு கட்டுரையில், ஈழத்தில் தமிழர்கள் நடத்திய போராட்டத்தையும் இந்தியாவில் காஷ்மீரிகள் நடத்திய போராட்டத்தையும் ஒப்பிட்டு எழுதியிருந்தீர்கள். இந்த இரண்டு இனங்களின் விடுதலை என்பது சாத்தியமில்லை என்பதையும் இரண்டு போராட்டங்களுமே ஒரே அடிப்படையிலானவை என்பதையும் இன்னும் நம்புகிறீர்களா? இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக நீங்கள் முன்வைக்கும் பார்வை என்ன?”

“மொழி, பண்பாடு சார்ந்த வேறுபாடுகளை நாம் கொண்டாட வேண்டும்!”“இந்தியாவிலிருந்து பிரிந்து நிற்பதையே விடுதலையாகக் கருதும் நிலையில்தான் தற்போதைய காஷ்மீர் உள்ளது. தன் சுயநலத்துக்காக பாகிஸ்தான், இந்த உணர்ச்சிக்கு எண்ணெய் வார்த்து வளர்த்துக்
கொண்டிருக்கிறது. அதேகதியில் இந்திய அரசும் தன் வேலையை வெற்றிகரமாகச் செய்துகொண்டுதானிருக்கிறது. தேர்தல் குளறுபடிகள், அம்மக்களின் தலைவர்களைக் கைதுசெய்தல், ஊழலை வளர்த்தெடுத்தல், அளவுக்கு அதிகமான அடக்குமுறைகளைப் போராட்டக்காரர்கள் மேல் ஏவிவிடுதல் என்று வெற்றிகரமாகச் செய்யப்படும் இந்திய அரசின் ‘சேவைகள்’ சிலவற்றை இங்கே பட்டியலிடலாம். காஷ்மீரில் தொலைந்துபோன அமைதியை மீட்டெடுக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகும். சில பத்தாண்டுகள்கூட ஆகலாம். அதில், ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. பாகிஸ்தான் -இந்தியா இரண்டு தரப்பும் ஒருமித்தக் கருத்தோடு காஷ்மீரை அணுகினால் மட்டுமே அதுவும் சாத்தியமாகும்.

ஈழத்தைப் பொறுத்தவரை, சிங்கள ராணுவம் வெற்றிபெற்றுவிட்டதால் பிரச்னை முடிந்துவிட்டதாகச் சொல்லமுடியாது. சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்தும்  அதிகாரமட்டத்திலிருந்தும் ஈழத்தமிழர்களுக்கு இன்னும் நட்புக்கரம் நீட்டப்படவில்லை.

இரண்டிலுமே, முழுமையான ‘விடுதலை’ என்பது வெகுதூரத்தில் உள்ளது. ஒருவேளை அது அவர்களுக்குச் சாத்தியமாகாத கனவாகக்கூட இருக்கலாம் என்ற நிலைதான் இப்போது. அந்நிலத்தின் மக்களிடமும் உலகப் பொதுச் சமூகத்திடமும் இவ்விரண்டு பிரச்னைகள் சார்ந்து ஓர் ஆழமான அதிருப்தி நிலவிக்கொண்டே இருப்பதை மறுக்கமுடியாது.”

“தமிழ்நாட்டில் ‘ஈஷா’ யோகா மையத்தால் வைக்கப்பட்டுள்ள  ‘ஆதியோகி’ சிலை மற்றும் இந்திய அரசால் நிறுவப்பட்டுள்ள  பட்டேல் சிலை போன்றவற்றை மையமிட்டது இந்தக் கேள்வி. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பகுதிகளை அழித்து சிலைகள் நிறுவுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”


“இரண்டு சிலைகளுமே ஒரு வெறித்தனமான சுயத்தம்பட்டத்தைத்தான் காட்டுகின்றன. ஒரு சிலை, ஜக்கி வாசுதேவ் தனக்குத்தானே செய்துகொள்ளும் சுயவிளம்பரம். இரண்டாவதில், நரேந்திர மோடி. பொருளாதார ரீதியாகவும் சுற்றுச்சூழல் ரீதியாகவும் இந்நிலத்தின்மீது இவர்கள் உருவாக்கும் சேதாரங்கள் மிகப்பெரிது. தன் சுயபுகழைப் பாடிப் பெருமை யடித்துக்கொள்ள இவர்கள் ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சேதாரங்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.” 

“மொழி, பண்பாடு சார்ந்த வேறுபாடுகளை நாம் கொண்டாட வேண்டும்!”

“இந்திய விடுதலை இயக்க வரலாற்று வரைவில், தமிழ்நாட்டின் பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறதே?”

“இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுமே அப்படித்தான் நினைக்கின்றன. தமிழர்கள் மட்டுமல்ல... வங்காளிகள், கன்னடர்கள், மராத்தியர்கள், பஞ்சாபிகள் அனைவருமேகூட தங்களின் சுதந்திரப் போராட்டப் பங்களிப்புகள் வரலாற்றில் குறைவாகச் சொல்லப்பட்டுவிட்டன அல்லது கவனிக்கப்படவில்லை என்றுதான் நினைக்கிறார்கள். ஒருவகையில் இந்த உணர்வு மகிழ்ச்சியூட்டுகிறது. தேசத்தின்மீது எந்த அளவுக்குப் பெருமை கொள்கிறோமோ அதில் துளியும் குறைவின்றித் தத்தம் பூர்வ நிலப்பகுதியின் மீதும் பெருமை கொள்கிறோம் என்பதைத்தான் இந்த உணர்வு காட்டுகின்றது. இதுதான் இந்திய மனம் இயங்கும் விதம்.”

“உங்களுடைய எழுத்துகள் தமிழில் வெளிவந்துள்ளன. தமிழ் வாசகர்கள் உங்கள் நூல்களை விரும்பி வாசிக்கின்றனர்....”

“மொழி, பண்பாடு சார்ந்த வேறுபாடுகளை நாம் கொண்டாட வேண்டும்!”“தமிழில் மட்டுமன்றி என் நூல்கள் மராத்தி, இந்தி போன்ற மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுவருகின்றன. ஓர் எழுத்தாளரின் பணி, வாசகர்களுக்குத் தான் சொல்லவருவதைத் தெளிவாகக் கொண்டுசெல்வது அதுவும், பரவலாகக் கொண்டு செல்வது. அதற்கு மொழிபெயர்ப்புகள் உதவுகின்றன. என் இணைய முகவரி பொதுத்தளத்தில் அனைவருக்குமானதாக இருக்கிறது. அதனால், யார் வேண்டுமானாலும் என் எழுத்தின் மீதான விமர்சனங்களை நேரடியாக முன்வைக்கலாம். அதன்மூலம், பல சமயங்களில் ஆரோக்கியமான பின்னூட்டங்களும், பாராட்டுகளும் சில சமயங்களில் முரண்பாடான விமர்சனங்களும் நாடு முழுக்கவிருக்கும் பரவலான வாசகர்களிடமிருந்து வருகின்றன. மகிழ்ச்சியான விஷயம்தான்!”

“இந்தியாவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவராக,  ‘இந்தியாவை மறுதலித்த, இந்திய தேசியத்தை எதிர்த்த’ பெரியாரையும் கருதுகிறீர்களா?”

“நிச்சயமாக. பெரியார், தமிழகத்தையும் இந்தியாவையும் கட்டமைத்ததில் முக்கியமானவர். இந்திய வரலாற்றில் கூட்டாட்சிக் கருத்து வலிமைப்படுவதில், சாதிய, பாலினச் சமத்துவத்தில் அவரது பங்கு தவிர்க்க முடியாதது. அவரது மொழி தர்க்கரீதியானது; மக்களை நேரடியாக பாதிக்கும் எளிமைகொண்டது. அதன்மூலம் சமுதாயத்தில் அவர் பல விஷயங்களைச் சாதித்தும் காட்டியுள்ளார்.”

“இந்திய தேசியம், இந்துத்துவம் இரண்டும் ஒன்றுதானே. ஒன்று தேசியவாதத்தின் லிபரல் பார்ம் மற்றொன்று கடும்போக்கு. இரண்டுமே மொழி வழி பண்பாட்டு மரபுகளை மறுதலிக்கின்றதே ?”

“இந்திய தேசியம் குறித்த உங்கள் பகுப்பாய்வு தவறானது. மொழி, இனம், மதம் என்று அனைத்திலும் பன்முகத்தன்மைகொண்ட நிலப்பகுதி இது. இந்தப் பன்முகம்தான் இந்திய தேசியத்தில் பெருமைப்பட வேண்டிய முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. இந்துத்துவா, ஒரே மதத்தையும் ஒரே மொழியையுமே தேசியமாக முன்வைக்கிறது. இரண்டும் ஒன்றாகாது. காந்தி, நேரு, தாகூர் போன்றோர் முன்னிறுத்திய பன்மைத்துவத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும்.”

“ஒரு சூழலியல் வரலாற்றாசிரியராக,  ‘இப்போது இந்தியாவில் அரசின் வளர்ச்சித் திட்டங்கள், சுற்றுச் சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன’ என்ற வாதத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?  ‘பழங்குடிகள்மீது இந்திய அரசு போர் தொடுத்துள்ளது’ என்ற குற்றச்சாட்டு பற்றி உங்கள் கருத்து என்ன?”

“மொழி, பண்பாடு சார்ந்த வேறுபாடுகளை நாம் கொண்டாட வேண்டும்!”

“தற்போதைய பாரதிய ஜனதா கூட்டணியைப்போலவே, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் பழங்குடியின மற்றும் ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்கு விரோதமாக, சூழலியல் பாதுகாப்பில் மெத்தனமாகத்தான் இருந்துள்ளது. இந்த இரண்டு ஆட்சிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால், அறிஞர்களும் ஆர்வலர்களும் அரசுக்கு இன்னும் அழுத்தம் கொடுக்க வேண்டும். கருத்தியல் ரீதியான களம் சார்ந்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். நீண்டகால நலனுக்குத் தகுந்த பொருளாதாரத் திட்டங்களை வகுக்க அரசை வலியுறுத்த வேண்டும்.”

“ஏன் இந்துத்துவம் அறிவுத் துறையினரைக் கண்டு அஞ்சுகிறது?”

“மிகத் தீவிரமாகக் கடைபிடிக்கப்படும் சித்தாந்தங்கள் அனைத்துமே சுதந்திரமாகச் சிந்திக்கக்கூடிய அறிஞர்களைக் கண்டு அஞ்சவே செய்யும். இது, இஸ்லாமிய லெனினியச் சித்தாந்தங்களுக்குப் பொருந்துவதைப் போலவே இந்துத்துவா சித்தாந்தங்களுக்கும் பொருந்தும். மோடியைச் சுற்றி ஏற்படுத்தப்படும் ஊதிப் பெருக்கப்படும் பிம்பம் மற்றும் பிரமாண்டம் இதை இன்னும் மோசமாக்குகிறது.”

“உங்களது “Anthropologist- Among the marxist and other essays” புத்தகத்தில், ‘காந்திய மற்றும் மார்க்ஸியக் கோட்பாடுகளுக்கு இடையே எதை ஏற்றுக்கொள்வது என்று இந்தியர்களிடம் ஏற்படும் மனச்சிக்கல்கள்’ பற்றிப் பேசியிருந்தீர்கள். இக்கால இந்தியாவில் இன்னும் நிறைய கருத்தியல்கள் இருக்கின்றன. இந்தியச் சமூகத்தையும் அதன் மக்களையும் எந்தக் கருத்தியல் மேம்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?”

“அந்த நூல் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியானது. அதற்குப் பின்னர் இந்தியா பெரிய மாற்றங்களைச் சந்தித்துவிட்டது. இந்துத்துவாவின் பெரும்பான்மை அதிகரித்துவிட்டது. இதனால், இந்தியாவின் இயல்பும் அதன் கட்டமைப்பும் மோசமடைந்துவிட்டன. பொது நிறுவனங்கள் அதனுள்ளிருந்து அரிக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் சரிசெய்ய காந்தி, அம்பேத்கர் போன்ற பெரிய சிந்தனாவாதிகளின் கருத்துகளை நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அவற்றை எடுப்பதன் மூலமாக நாம் காணும் விடை, 2019-ம் ஆண்டின் இந்தியாவுக்குத் தீர்வு தருவதாக அமையவேண்டும். அதுவும், அவர்கள் வாழ்ந்த காலகட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கும் இக்கால இந்தியாவுக்குத் தீர்வு தருவதாக இருக்க வேண்டும்.”

“தொடர்ந்து மாதவ் காட்கில்’ கமிட்டியின் பரிந்துரைகளை மாநில அரசுகள் தவிர்த்தன. மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் காப்பாற்றி மீட்டெடுக்க எல்லாச் சரியான திட்டங்களும் கொண்ட அந்த அறிக்கை ஏன் ஏற்கப்படவில்லை?”

“காட்கில் அறிக்கை ஏற்கப்படாமல் போனதற்குப் பொறுப்பேற்க வேண்டியது முதலில் கான்டிராக்டர்கள். அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்துக்கு இடையிலிருக்கும் உறவு இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தங்கள் சமூகப் பொருளாதார அரசியல் மற்றும் சுய ஆதாயங்கள்தான் சூழலியல் பாதுகாப்பைவிட அவர்கள் அனைவருக்கும் முக்கியமானதாக உள்ளது. சுதந்திரமான ஊடகங்களும் குடிமைச் சமூகமும் தொடர்ச்சியாக அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமாக நீண்டகால நன்மைகளைப் பயக்கும் சூழலியல் பாதுகாப்பையும் அறிவுபூர்வமான பொருளாதார வளர்ச்சியையும் சாத்தியப்படுத்த வேண்டும்.”

“நேருவின் மதச்சார்பின்மைக் கொள்கையின் ஆதரவாளர் நீங்கள். ஆனால், மதச்சார்பின்மைக்கு எதிரான கட்டமைப்புகள் வேறுமாதிரியாக இருந்த காலகட்டத்தில் வந்த கருத்தாக்கம் அது. மோடி-அமித் ஷாவின் தீவிரமான மதவாத முன்னெடுப்புக்குச் சரியான எதிர்ப்பாக இந்த மதச்சார்பின்மைக் கருத்தியலை மாற்றி அமைக்க வேண்டியிருக்குமா?”

“ ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தைக்குப் பதிலாகப் ‘பன்மைத்துவம்’ என்ற வார்த்தையைப் பரிந்துரைக்கவே நான் விரும்புகிறேன். இந்தச் சித்தாந்தம் குறித்து, ஒப்பீட்டளவில் நேருவைக்காட்டிலும் காந்தியிடமிருந்துதான் நான் அதிகம் பெற்றேன். இந்தியப் பெருநிலத்தில் மொழிசார்ந்த பண்பாடு சார்ந்த  வேறுபாடுகளை நாம் ஊக்குவிக்க வேண்டும், கொண்டாட வேண்டும். கிழக்கு மற்றும் தெற்கு இந்தியப் பகுதிகளில் இந்தி என்ற ஒற்றை மொழி திணிக்கப்படக் கூடாது. இங்கிருக்கும் மதங்களை அதன் பன்முகங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். நாட்டின் குடிமக்கள், அவர்கள் எந்த இறையாண்மையைப் பின்பற்றுபவராக இருந்தாலும் அவர்களுக்குச் சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். உள்ளார்ந்த நம்பிக்கையை, நல்லிணக்கத்தை, மரியாதையை ஊக்குவிக்க ஒவ்வொரு குடிமகனும் தன்னால் இயன்றதைச் செய்யவேண்டும். குடிமைச் சமூகத்தில் காந்தி செய்ததைப்போல, மாநிலங்கள் மத்தியில் நேரு செய்ததைப்போல நாமும் நம்மால் இயன்றதைச் செய்யவேண்டும். வேதனைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சிகூட காந்தி மற்றும் நேருவின் மரபைக் கைவிட்டுவிட்டது. அவர்களும் இந்துத்துவாவைத்தான் கொண்டுசெல்கிறார்கள். ஆனால், மென்மையான அணுகுமுறையில்.”