Published:Updated:

எல்லாம் எழுதப்பட்டுவிட்டன

எல்லாம் எழுதப்பட்டுவிட்டன
பிரீமியம் ஸ்டோரி
எல்லாம் எழுதப்பட்டுவிட்டன

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

எல்லாம் எழுதப்பட்டுவிட்டன

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
எல்லாம் எழுதப்பட்டுவிட்டன
பிரீமியம் ஸ்டோரி
எல்லாம் எழுதப்பட்டுவிட்டன

மிழர் வாழ்வில் பாடலைப் பிரிக்க முடியாது. பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் ஏதேனும் ஒரு பாடலைப் பாடிக் கடக்கிறது நம்மினம். நாம் ‘மொழி மக்களாக’ அறியப்படுவதும் நம் மொழி, செம்மையுற்ற பண்மொழி என்பதும் ஒன்றோடொன்று தொடர்புடையது. நம்முடைய நாட்டார் பாடல்கள் தாலாட்டு, அம்மானை, தெம்மாங்கு, ஒப்பாரி என்று பல வகைகளில் கிளை விரித்திருக்கின்றன. நம் தாயார் தாலாட்டுப் பாடல் பாடித் தொட்டிலிட்டுத் தூங்கவைத்து வளர்த்தார். என் சிறுவத்தில் எனக்குப் பின்னர் பிறந்த பிள்ளைகள் தாலாட்டினைக் கேட்டு வளர்ந்ததைக் கண்ணாரக் கண்டிருக்கிறேன். ஊரில் ஓர் இறப்பு என்றால், ஒலிபெருக்கியினைக் கட்டிவிடுவார்கள். ‘வீடுவரை உறவு’,  ‘போனால் போகட்டும் போடா’ போன்ற பாடல்கள் வழமைக்கு ஒலிக்கும். பிறகு, ஊர்ப் பாட்டிகளிடம் ஒலிவாங்கி தரப்பட்டு அவர்கள் ஒப்பாரி பாடத் தொடங்குவார்கள். கரையாத கல் நெஞ்சும் கரையும்படி ஒப்பாரி பாடுவார்கள். இழவுக்கு வருகின்றவர்கள் தொலைவிலிருந்தே ஒப்பாரியைக் கேட்டு மனங்கலங்கி அழுதபடி வந்துசேர்வார்கள். ஒப்பாரிக்கு அழாதவர்கள், கண் ததும்பாதவர்கள் கலை, இலக்கியம், பாடல், இசை குறித்தெல்லாம் பேசுவதற்கே தகுதியற்றவர்கள்.

எல்லாம் எழுதப்பட்டுவிட்டன

இப்படி நம் வாழ்விலும் தாழ்விலும் இரண்டறக் கலந்திருந்தன இசையும் பாட்டும். கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாகவே அவ்விடத்தைத் திரைப்பாடல்கள் கைப்பற்றின. தொடக்கத்தில் பாபநாசம் சிவன், உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ் போன்றவர்கள் அத்துறையில் கொடிகட்டிப் பறந்தார்கள். இக்கட்டுரை எழுதுவதற்கு முன்னர் நான் கேட்டுக்கொண்டிருந்த பாடல், ‘பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச் செல்வமன்றோ’ என்ற பாடல்தான். அதனை எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ். வெறும் ஐந்தாறு வரிகளுக்குள் அமைந்த அப்பாடல், முக்கால் நூற்றாண்டினைத் தொட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் சிவன்  ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ என்று எழுதியவர். உடுமலை நாராயணகவி 10,000 பாடல்களுக்கு மேல் எழுதியி ருக்கிறாராம். பாரதியார், பாரதிதாசன் போன்றவர்களோடு நட்பு பூண்டவர்; விடுதலைப் போராட்டத்திலும் பங்களித்தவர். இம்மூவரின் பெருங்காலம் முடிவுக்கு வருகையில்தான் மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் ஆகியோரின் காலம் தொடங்குகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்லாம் எழுதப்பட்டுவிட்டனதிரைப்பாடலாசிரியர்களில் இன்னும் புகழ்பாடப்படாத கவிஞரில் மருதகாசியே முதன்மையானவர். 4,000 பாடல்களில் அவர் தனி அரசாட்சி செய்திருக்கிறார். கா.மு.ஷெரீப், கு.மா.பாலசுப்பிரமணியன், சுரதா போன்றோர் திரைப்பாடல்களில் புதிய உயரம் தொட்டவர்கள். கு.மா.பா. இயற்றிய பாடல்களின் தொகுப்பு நூலொன்றை அவர் தம் புதல்வர் கு.மா.பா.திருநாவுக்கரசு எனக்கு அனுப்பியிருந்தார். அன்னார் எழுதிய பாடல்கள் தமிழின் புதுத்தரம் குன்றாத வளமுடையனவாய் இருந்தன. பிறகு வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா.காமராசன், வைரமுத்து என்றொரு வரிசை வருகிறது.

திரைப்பாடல்களைக் குறித்து எப்போதுமே இரண்டு விதமான கருத்துகள் இருந்திருக்கின்றன. என்ன இருந்தாலும் அவை கூத்துப் பாடல்கள். உயர்வகை இலக்கியச் செம்மைமிக்க ஆக்கங்கள் அல்ல. கதைச்சூழலுக்கேற்ப ஒரு பாத்திரத்தின் சொற்களைக் கூறுபவை. கதையின்படி, திருடி வாழ்வதே சிறப்பு என்று ஒரு கதைமாந்தன் கருதி வாழ்வான் எனில், அவன் பாடும் பாடல்கள் திருட்டின் சிறப்பினைப் பாடும் வகையில்தான் இருக்கும். இதனை எப்படி உயர்வகை இலக்கியமாகவும் வழிகாட்டியாகவும் எடுத்துக்கொள்ள முடியும்? ஒரு பெண்ணை இணங்கச் செய்வதற்காக என்னென்ன சொல்ல முடியுமோ அனைத்தையும் ஒருவன் தன் பாட்டில் வைத்துப் பாடுவான். அதனை எப்படி மேற்கோளாகக் காண்பிக்க முடியும்? இப்படிப் பற்பல இடையூறுகள் ஒரு பாடலைப் புறங்கையால் தள்ளி நகர்த்தும்படி அமைந்திருக்கின்றன. இன்றைக்கும் இலக்கியத் தளத்திலாகட்டும் பொதுமக்கள் கருத்திலாகட்டும்… திரைப்பாடல்களை மலிவுப் பொருளாகப் பார்க்கின்ற பார்வை அப்படியே இருக்கிறது.

தொண்ணூறுகள் வரைக்கும் இங்கே தடம்பதித்த திரைப்படப் பாடலாசிரியர்கள் எல்லாம் எப்படி உருவாயினர் என்று ஆராய்ந்து பார்த்தால், நிறைவான விடை கிடைக்கிறது. அவர்கள் எல்லோரும் முறையான தமிழ்ப்பயிற்சி பெற்றவர்கள். பள்ளிப் படிப்பு குறையாக இருந்தபோதிலும், யாப்பிலக்கணத்தை முறையாகக் கற்றவர்தான் உடுமலை நாராயணகவி. மருதகாசியார்க்கு வன்மையான நாடகப் பின்புலம் இருக்கிறது. கண்ணதாசன் தம்முடைய இளமையில் ‘கூளப்பநாயக்கன் காதல்’, ‘குற்றாலக் குறவஞ்சி’ போன்ற இலக்கியங்களை மனப்பாடம் செய்து பயின்றவர். ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ நிறுவனத்தார் நடத்திய ‘சண்டமாருதம்’ என்ற இதழுக்கு உதவி ஆசிரியர். அவர்கள் தமிழைக் கரைத்துக் குடித்தவர்கள் என்று மிகையாகக் கூறவில்லை. எழுதுவதில் முறையான பயிற்சியும் பட்டறிவும் மிக்கவர்கள். புலமைப்பித்தன், காமராசன் போன்றவர்கள் தமிழாசிரியர்கள். முத்துலிங்கம் இதழியல் துறையில் எழுதிக்கொண்டிருந்தவர். கண்ணதாசனின் உதவியாளராக விளங்கிய பஞ்சு அருணாசலம் ஆயிரக்கணக்கான பாடல்களின் உருவாக்கத்தை நேர் நின்று கண்டவர்.

எல்லாம் எழுதப்பட்டுவிட்டன

வைரமுத்து தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இப்படி எல்லோரும் ஏதேனும் ஒருவகையில் எழுத்தோடும் தமிழோடும் தம் வாழ்க்கையைப் பிணைத்துக் கொண்டவர்கள். இவர்கள் பாடலாசிரியர்கள் ஆனதும் அவர்கள் கற்ற தரத்திற்கேற்ப பாடல்களும் பிறந்தன.

இன்றைக்கு வந்திருக்கின்ற பாடலாசிரியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளவுகோல்வைத்துப் பாருங்கள். எல்லோரும் திரைத்துறையில் நுழைய முயன்றவர்கள். அவர்களுடைய முதல் கனவு இயக்குநராவது. தமிழ்நாட்டில் திரைப்பட இயக்குநர் ஆகும் கனவோடு லட்சக்கணக்கான இளைஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில், பல பத்தாயிரக்கணக்கான இளைஞர்கள் கோடம்பாக்கத்தில் முயன்றுகொண்டிருக் கின்றனர். பிறர், அந்தக் கனவுகளோடு தத்தம் வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். என்றேனும் ஒருநாள் அவர்கள் ஒரு படத்தை இயக்கியே தீர்வது எனும் அக்கனவிலிருந்து விடுபட்டால் பற்றுக்கோல் எதுவுமில்லாமல் மனஞ்சிதறிப் போவார்கள்.

வைரமுத்து கோலோச்சி இருந்தவரை, திரைத்துறையில் ஒருவர் பாடலாசிரியராகப் புகுவது குதிரைக்கொம்பாக இருந்தது. அவ்வமயம் தம்மை அண்டியிருந்த பாடலாசிரியர்கள் பலருக்கும் ஆளுக்கொரு பாடலேனும் வழங்க வேண்டிய கட்டாயத்தில் இளையராஜா இருந்தார். அதனால் அவர் புதியவர்களை ஊக்குவிக்கவில்லை. ஏ.ஆர்.ரஹ்மானின் வருகையாலும் பெரிதாய் நலம் விளையவில்லை. புதிய பாடலாசிரியர்கள் அவருடைய பதிவகத்திற்குள் நுழைய முடியவில்லை. இவர்களுக்கிடையில், தனியொருவராய் நின்று இசைத்துக் கொண்டிருந்தவர் தேவா. அவருடைய இசையமைப்பில் காளிதாசன் என்றொருவர் தொடர்ந்து பாடல்களை எழுதினார்.  ‘வைகாசி பொறந்தாச்சு’ படப் பாடல்களை எழுதியவர் அவர்தான். என்னவோ தெரியவில்லை, காளிதாசன் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியிருந்தாலும் தனது வரிகளால் அவர் நினைவுகூரப்படுவதில்லை. இத்தனைக்கும் அவர் இசையொழுங்கு குறையாத வரிகளை எழுத வல்லவர்.

‘சம்மதம் சொல்லிய
சந்தன மல்லிய
கையோடு அள்ளட்டுமா?
மங்கையின் காதில்
மன்மத ராக
மந்திரம் சொல்லட்டுமா?’

என்று லகுவாக எழுதினார்.

தொண்ணூறுகளில் பழைய பாடலாசிரியர்களிடையே ஒரு புதுப்பெயர் அறிமுகமானது. வாசன் என்பது அப்பெயர். அவர்தான் இன்றுவரைக்கும் தொடரும் பாடலாசிரியர் படையின் தொடக்கமாக அமைந்தவர். தகர்க்கவே முடியாத கோட்டையாக விளங்கிய பாடல் பதிவகத்திற்குள் நுழைந்தவர்கள் என்று பழநிபாரதியையும் வாசனையும் சொல்லலாம். ‘ஆஹா’ என்ற படத்தின் அனைத்துப் பாடல்களையும் வாசனே எழுதினார். ‘பூவே உனக்காக’, ‘உள்ளத்தை அள்ளித்தா’ படப் பாடல்களால் பழநிபாரதிக்கு வெளிச்சம் கிடைத்தது. வாசனைப் பற்றிப் பெரிதாக அறியக் கிடைக்கவில்லை. ஆனால், பழநிபாரதி இதழியல் பின்புலமுள்ளவர். அறிவுமதியும் தொண்ணூறுகளில் குறிப்பிடத்தக்க பாடல்களை எழுதினார்.

‘மன்னவன் விரல்கள்
பல்லவன் உளியோ?’

என்ற தரம் பேணினார்.

இந்நேரத்தில், திரைப்பாடல்களின் வழமையான கட்டமைப்பு தகர்ந்து கொண்டிருந்தது. சொற்கள் தெளிவாகக் கேட்க வேண்டும் என்ற கட்டாயம் கைவிடப்பட்டது. பாடகனை மீறிய குத்தொலிகளுக்கு முதன்மை அழுத்தம் தரப்பட்டது. இளையராஜா இசையில், பாடல் வரிகளுக்கு எங்கேயும் குழிபறிப்பு நடக்கவில்லை. வரிகளுக்குப் பக்கத்தாளம்தான் இசை என்ற இலக்கணத்தைப் பின்பற்றினார். வரிகளை ஒடுக்கி இரைச்சல் பெருக்கிய போக்கினை  ரஹ்மான்தான் தொடங்கிவைத்தார் என்று சொல்லுவேன். ‘காதல் தேசம்’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரிகளை என்னால் அன்று கணிக்க முடிந்ததில்லை. அப்போக்கினை தேவாவும் அடியொற்றினார். அவ்விடத்தில்தான்,  ‘பாடலாசிரியராக ஒரு தமிழ்ப்புலவர் வேண்டியதில்லை, கதைநலம் தெரிந்த இலக்கியப்பான்மை அவர்க்கு வேண்டியதில்லை, மெட்டுகளுக்கு ஏற்ப சொற்களை இட்டு நிரப்பத் தெரிந்த ஒருவர் போதும்’ என்றானது.

எல்லாம் எழுதப்பட்டுவிட்டன

‘சினிமாச் சந்தையில் முப்பது ஆண்டுகள்’ என்ற சிறு நூலொன்றைக் கண்ணதாசன்  எழுதியிருக்கிறார். கண்ணதாசனின் எந்தப் புத்தகத்தைப் படிக்கிறீர்களோ இல்லையோ, அச்சிறு நூலைப் படித்துவிடுங்கள். மெட்டுக்குப் பாட்டு எழுதுவதன் கடினத்தை அதில் விளக்கியிருக்கிறார். ‘மெட்டுக்குப் பாட்டெழுதுவது என்பது கிடுக்கிக்குள் சிக்கிக்கொண்ட எலி மாதிரிதான். சொல்ல வரும் விஷயத்தைச் சொல்ல முடியாது. பாடலுக்கான இலக்கணம் இருக்காது. படித்துப் பார்த்தால் வசனம் மாதிரி இருக்கும். அநாவசியமான வார்த்தைகளும் நீட்டலும் இருக்கும். போதுமடா சாமி என்று வசனம் எழுதப் புகுந்தேன்’ என்று கண்ணதாசன் அந்நூலில் கூறுகிறார். ஆனானப்பட்ட கண்ணதாசனே மெட்டுக்குப் பாட்டெழுதுவதில் இவ்வளவு குறைபாடுகளை உணர்ந்தார். இன்று புதிதாய் வந்த ஒரு பாட்டுக்காரர் அப்படியென்ன பெரிதினும் பெரிது தந்துவிடப் போகிறார்? தத்தகாரத்திற்கு மொத்தக் காரமாய் எழுதிச் செல்ல வேண்டியதுதான்.

என் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘அண்மை’ என்ற நூல், தொண்ணூற்றேழாம் ஆண்டில் வெளியானது. அத்தொகுப்பினைப் படித்திருந்த இயக்குநர் வசந்த், தம் உதவியாளர் வழியாக என்னைப் பாட்டெழுத அழைத்தார். அப்போது அவர் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற படத்தினைத் தொடங்கியிருந்தார். “திரைத்துறையில் தற்போது பாடலாசிரியர் நாற்காலியொன்று புதிய கவிஞர்களைக் காணாமல் வெற்றிடமாய் இருக்கிறது. உங்களைப்போன்ற தகுதியான கவிஞர்கள் முயற்சியில் இறங்கினால் எளிதில் கைப்பற்றலாம். முன்னேற்பாடுகள் முடிந்ததும் கூறுகிறேன், வர அணியமாக இருங்கள்” என்று தொலைவிளித்துக் கூறினார். அப்போது நான் என்னூர்த் தொழிலில் மும்முரமாக இருந்தேன். பிறகு அவர் அழைக்கவுமில்லை. நான் கேட்கவுமில்லை. ஆனால், அப்போது அவர் சொன்னதைப்போலவே ஒரு வெற்றிடம் இருந்தது. அந்த நாற்காலியைப் பிடிக்க, திரைத்துறையில் இருந்த உதவி இயக்குநர்கள் முதல், கடைநிலைத் தொழிலாளி வரை எல்லாருமே முயன்றனர். புதிய பாடலாசிரியர்களாக மலர்ந்தவர்களில் பலர், திரைத்துறையில் அப்போது ஏதேனும் ஒரு துறையில் ஒட்டியிருந்தவர்கள். முதலில் சொன்னதுபோல இயக்குநர் ஆவதுதான் அவர்களின் முதற்கனவு. இடையில் பாடலாசிரியர் ஆக நேர்ந்தாலும் பழுதில்லை என்னும் நிலை. அவர்கள் பாட்டெழுதி பத்தோடு பதினொன்றாய் ஆனதில் வியப்பென்ன? அவர்களிடம் மொழிச்செழுமையும் பண்பாட்டுப் பேருணர்ச்சியும் மிக்க ஒரு வரி பிறக்குமா? மெட்டுக்கு இட்டுக்கட்டப்பட்ட மொட்டைச் சொற்றொடர்கள்தாம் பிறக்கும்.

ஒருசில கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுவிட்டால், அதை ஓர் இயக்குநரிடம் தந்து பாடல் எழுத வாய்ப்பு கேட்கலாம் எனும் நிலையும் அப்போதிருந்தது. அதற்காகவே நூற்றுக்கணக்கான கவிதைத் தொகுப்புகள் வெளியாயின. தொண்ணூறுகள் வரைக்கும் ஆண்டுக்குப் பத்துக் கவிதைத் தொகுப்புகள் வந்தாலே பெரிது. அதனைத் தகர்த்தவை, இத்தகைய ‘பாடலாசிரியர் முயற்சி’த் தொகுப்புகளே. “ஒரு தொகுப்பினை அச்சடித்து விசிட்டிங் கார்டு மாதிரி கொடுக்க வேண்டியதிருக்கு” என்று கவிதை எழுதிய முத்துக்குமார் செய்ததும் அதைத்தான். ஒரு கவிதைத் தொகுப்பு, அதனைத் துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முயன்றால் பாட்டெழுதும் வாய்ப்பு, பாட்டுக்குப் பத்தாயிரம், தமிழ்கூறு நல்லுலகெங்கும் பெரும்புகழ், ஒளிமயமான எதிர்காலம்… இந்தக் கனவு ஆயிரக்கணக்கானோரை ஆட்டிப் படைத்தது. ஆனால், உண்மைநிலை வேறு.

இனியும் இலக்கியத்தன்மை குன்றாமல் எழுதப்படும் பாடல்கள் தேவையில்லை என்ற முடிவுக்குத் திரையுலகம் வந்தது. “கேட்சியா இருக்கணும் சார்… லிரிக்ல ஒரு பெப் இருக்கணும்… படு லோக்கலா எழுதிக் கொடுங்க சார்…’ என்று இயக்குநர்கள் கேட்டார்கள். அப்துல் ரகுமான் சொன்னதுபோல் ‘அம்மி கொத்துவதற்குச் சிற்பி எதற்கு? அம்மி கொத்தத் தெரிந்தவர்கள் பாடல் எழுதத் தொடங்கினார்கள். புதிய பாடல்களை அவற்றின் இசைதான் கேட்க வைக்கிறதேயன்றி, அவற்றின் வரிகள் இசைக்குத் துணை செய்வதோடு ஒதுங்கி நிற்கின்றன. பாட்டுக்குப் பக்கத்தாளம்தான் இசை என்பது போய், பாடலில் வரும் குரலுக்குச் சில சொற்றொடர்கள் எனும் நிலை இன்று.

எல்லாம் எழுதப்பட்டுவிட்டன

இன்றைய பாடல்களை விரும்பிக் கேட்பவர்கள், அகவை இருபத்தைந்தைத் தாண்டாதவர்கள். திரைப்படங்களின் பார்வையாளர்களும் அவர்களே. அன்றைக்கு ஒரு சிவாஜி படத்தையோ எம்.ஜி.ஆர் படத்தையோ பார்த்துத் திரும்பும் என் தாத்தா, படத்தின் பாடல் வரிகளைப் பாடியபடி வீடடைவார். இன்றைய தாத்தாக்கள் திரைப்படங்களுக்குச் செல்வதுமில்லை. அப்படிச் சென்றாலும் அவர்கள் உதடுகளில் பாடல் வரிகள் தங்குவதுமில்லை.

திரைப்படம், திரைப்பாடல், இசை ஆகியவற்றுக்குத் தனியான நிலைத்த தரம் உண்டா? அவை அனைத்தும் வணிகப் பண்டங்கள். இன்றைய நிலையில் கோடிக்கணக்கான பணமுதலீடு தேவைப்படும் தொழில் சினிமா. அதில் திரைப்பாடல் என்பது ஒரு கூறு. அம்முதலீட்டு முயற்சியில், ஒரு பாடலுக்கான தேவை என்பது பட வெற்றிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். வெற்றிக்கு அப்பாற்பட்ட எதுவும் அவர்கட்குத் தேவையில்லை. இன்றைக்குத் திரைப்பட ஆக்க முறைகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மேம்பட்டிருக்கின்றன. படத்தொகுப்பும் ஒளிப்பதிவும் கணினி வரைகலையும் காட்சியின்பத்தைப் பன்மடங்கு பெருக்கிவிட்டன. அம்முன்னேற்றத்திற்கு இன்னொரு புறத்தில் அதனில் புழங்கும் மொழியுலகம் படுவீழ்ச்சியடைந்து கிடக்கிறது.

தலைப்புகள் பிறமொழியில் பயில்கின்றன. எடுத்தாளத்தக்கத் தொடர்களாகக்கூட இருப்பதில்லை. தாயின் கருவறையைக் குறிக்கும்படி ‘குடியிருந்த கோயில்’ என்று அன்று தலைப்பு வைக்கப்பட்டது. இப்போது அப்படியொரு தலைப்பினை எதிர்பார்க்க முடியுமா? ‘செம போத ஆகாத’,  ‘இருட்டறையில் முரட்டுக் குத்து’ என்றெல்லாம் பெயர்வைக்கிறார்கள். அவர்கள் நமக்குத் தேனினும் இனிய பாடல்களைத் தருவார்கள் என்று எதிர்பார்ப்பதேகூட பேதைமைதான்.

இன்றைக்கு நேற்றில்லை… இனி வரும் காலத்திலும் திரைப்பாடல்கள் மூன்றே மூன்று பாடுபொருள்களுக்குள் அடங்கிவிடக்கூடியவைதாம். பெண் ஈர்ப்பினைக் கோருவது, காதலில் மகிழ்ந்து பாடுவது, பிரிவுழன்று கூறுவது… எனும் மூன்று சூழல்களில் அமைந்தவையே நம் பாடல்கள். மேற்காணும் பிரிவினையில் ஆண்பால் பெண்பால் மாற்றம் இருக்கலாம். அதற்கும் அப்பால் என்றால், இயற்கை வியப்பு, விழாப்பாட்டு போன்ற சூழல்கள் அமையக்கூடும். இடையில் நாயகத் தோற்றத்துக்கு ‘நான் அவனாக்கும் இவனாக்கும்’ என்னும் உருப்பெருக்கப் பாடல்கள் தேவைப்பட்டன. இவற்றுக்குள்ளேயே நம் பாடலுலகம் சிக்கித் தவிப்பதை எண்ணி நாம் இரக்கம் கொள்ள வேண்டும்.

சிலர் என்னிடம் கேட்பார்கள், அவர்களில் இயக்குநர்களும் உளர்,  ‘அண்மைப் பாடல்களில் ஒரு வரியைக் கூடச் சிறந்ததாய் ஏற்க மாட்டீர்களா? என்பர். “அப்படி ஒரு வரி இருப்பின் நீங்களே கூறுங்கள்” என்பேன். “ ‘ஒரு பெண்ணாக நானும் உன்மேல் பேராசை கொண்டேன்’ என்ற வரி நன்றாகத்தானே இருக்கிறது?” எனும் தெகிடி படப்பாடல் வரியைக் கூறினார் ஒருவர். இதனை அன்றே கண்ணதாசன் எழுதிவிட்டார். “பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ” என்பது கண்ணதாசன் இயற்றியது. பாடும் வாய்மொழியில் பால் மாற்றம் உண்டெனினும் அப்பாடற் கருத்து “பெண்ணாகக் கொள்ளும் பேராசைதான்” எல்லாம் ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்டன. எழுதப்பட்டவற்றை மீறி எழுதும் ஒருவர் எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம்தான். இன்றைய சமூக வலைதள விரைவுலகில் அதற்குரிய நம்பிக்கை கொள்வதும் கடிது என்றே சொல்வேன்.

மகுடேசுவரன்   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism