
தள்ளுவண்டி தரும் ஆசுவாசம்
ஓலைக்கூடையைத் தலையில் சுமந்தபடி
காய்கறிகளை விற்றுவந்த சின்னராணி அக்காவிடம்
பேரப் பேச்சுகள் பத்து நிமிடங்கள் நீளும்,
புன்னகை மாறாமலே இருப்பார் எப்போதும்!
ஓலைக்கூடையினின்றும்
தள்ளுவண்டிக்கு மாறியபின்
கைராசிக்காக அய்யாவு தாத்தாவிடம்
செய்த முதல் போணியிலும்
பெரியம்மா கேட்டு வாங்கிய கொசுறுக்கும்
முகம் சுளிக்காமல் புன்னகையுடனேயே இருந்தார்.
காலத்தின் சுழற்சியில்
வீட்டுக்கூடம் வரை வந்திருந்த
வியாபார அக்காக்கள்
மறைந்து எங்கெங்கோ போகிறார்கள்
கண்காணாமல்.
காலச் சுழற்சியில் புலம்பெயர்ந்து,
பெருநகர மாநகராட்சிக்குக் குடிபெயர்ந்தபின்
விலைவில்லை ஒட்டப்பட்ட காய்கறிகளை
புன்னகை தொலைத்த சீருடைச் சிப்பந்திகளிடம்
வாங்கிச் செல்கிறேன்
ஒரு வார்த்தை பேரம் பேச நினைக்காமல்!
மக்கும்வகை பைக்கும் சில்லறை தந்து
பொருள்களை எடுத்துக்கொண்டு நிமிர்கையில்,
அசைந்தபடி நிற்கும் சிறிய தள்ளுவண்டி மட்டும் தருகிறது
சின்னராணி அக்காவின்
குளிர்ந்த கரம் பற்றிய ஆசுவாசத்தை!
- ஸ்ரீநிவாஸ் பிரபு
நினைவுகளை அசைபோடும் யானை
கோயில் வாசலில் அந்த யானை
இடமும் வலமும் மேலும் கீழுமாகத்
தலையை ஆட்டிக்கொண்டே
தன் தும்பிக்கையால்
காற்றைத் துழாவிக்கொண்டிருந்தது.
கழுத்தில் தொங்கும் மணிகள்
அதன் தலையாட்டலுக்கேற்ப
சுருதி லயம் தப்பாமல்
ஒலித்துக்கொண்டிருந்தது.
கால்களை இடம் மாற்றி
வைத்துக்கொண்டே
பக்தர்களின் சில்லறைகளை
பாகனிடம் கொடுத்துக்கொண்டிருந்தது.
காசைக் கொடுத்துவிட்டு
யானை பயத்தில்
தூர விலகிய குழந்தைக்கு
தன் தும்பிக்கை எட்டிய
தூரம் வரை நீட்டி ஆசீர்வதித்தது.
ஓய்ந்த பொழுதில் வழமைபோல்
காடுகளைப் பற்றிய நினைவுகளை
அசைபோடத் தொங்கியது.
- பாப்பனப்பட்டு வ.முருகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
குரூர அழகியல்
விறகுக் கட்டையால்
அடித்துக் கொன்ற உயிர்மீனொன்றின் உடலத்தை
நீள்வட்டத்தின் பொன்னிறத் துண்டுகளாய்
வறுத்தெடுக்கிறவனின் குரூரம்
அழகியலாகிறது.
- ஜெயாபுதீன்
இறுதி மணம்
வீட்டு உத்தரத்தில்
சேலை முந்தானையை
சுருக்கு வைத்துக்கொண்டு
கழுத்தை நீட்டுகிறாள் அவள்...
நாசிக்குள் தவழ்கிறது
தாய்ப்பால் வாசம்...!
- பழ.அசோக்குமார்