Published:Updated:

ஜான் ஆப்ரஹாமின் கழுதை

ஜான் ஆப்ரஹாமின் கழுதை
பிரீமியம் ஸ்டோரி
ஜான் ஆப்ரஹாமின் கழுதை

கீரனூர் ஜாகிர்ராஜா - ஓவியங்கள் : மணிவண்ணன்

ஜான் ஆப்ரஹாமின் கழுதை

கீரனூர் ஜாகிர்ராஜா - ஓவியங்கள் : மணிவண்ணன்

Published:Updated:
ஜான் ஆப்ரஹாமின் கழுதை
பிரீமியம் ஸ்டோரி
ஜான் ஆப்ரஹாமின் கழுதை

பதற்றமிக்க கடற்பயணங்கள் முடிந்துவிட்டன,
நான் ஒருவனைத் தேடி வந்தேன். வேதங்களில்
அவனுக்கு ஜான் என்று பெயர். முகவரியும்
நிழலுமில்லாதவன்... பசியில்லாதவன்...

-பாலச்சந்திரன் சுள்ளிக்காடு 

ஜான் ஆப்ரஹாமின் கழுதை

1987-ஆம் வருஷம் மே மாதம் 30-ஆம் தேதி, நிகரற்ற குடிபோதையில் மொட்டை மாடியிலிருந்து கீழேவிழுந்து இறந்துபோன ஜான் ஆப்ரஹாமை, எங்க ஊர் வண்ணார் தெரு வெள்ளாவி முனையில் உயிருடன் காண்பேன் என நான் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், இந்தப் பன்னிரண்டு ஆண்டுக் காலங்களில், அநேக இரவுகளில் ஜான் ஆப்ரஹாமைச் சந்திப்பதுபோன்ற கனவுகளை நான் கண்டுவந்தது உண்மை. ஜனசந்தடி மிக்கதொரு நகரத்தின் குடிசாலையில், அதற்கு நேர்மாறான வாட்டிகன் செயின்ட் பீட்டர் தேவாலயத்தில், மண்டை ஓடுகள் சிதறிக்கிடக்கும் இடுகாட்டில், டெல்லி அசோகா லாட்ஜ் அறையில், ரித்விக் கட்டக்கின் அருகாமையில், சேன்னங்கரயில், கும்பகோணம் எல்.ஐ.சி. அலுவலகத்தில், கோயம்புத்தூர் போன்ற விதவிதமான ஊர்களின் தெருக்களில், இருண்ட திண்ணைகளில், மொட்டைமாடிகளில், அக்ரஹாரங்களில், இப்படித் தினுசு தினுசாகப் பல ஸ்தலங்களில், பல்வேறு சந்தர்ப்பங்களில்.

ஜான் எனக்கு என்ன மாதிரியான உறவு என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறதா? நான் அவரை அடிக்கடி கனவில் காண என்ன காரணம் என்று யோசிக்கிறீர்களா? அவர் எனக்கு மாமனா, மச்சானா, அண்ணனா, நெருங்கிய சிநேகிதனா என்று கேட்பீர்களானால், அப்படி எல்லாம் எதுவுமில்லை என்றுதான் கூறுவேன். ஆனால், என் பிரத்யேகக் கனவுகளின் வழியே, அவர் எனக்கு நன்கு பரிச்சயப்பட்ட மனிதர். கனவின் வழி அறிமுகத்துக்கெல்லாம் இங்கு அங்கீகாரமில்லை என்று நீங்கள் தீர்ப்பு அளிப்பீர்களானால், எனக்கு அது குறித்து எவ்விதப் பொருட்படுத்தலும் இல்லை என்பேன். எனவே, நானும் ஜானும் பங்கேற்கும் இந்தக் கதையாடலை, நீங்கள் செவிமடுக்கக் கடமைப்பட்டுள்ளீர்கள், காது உள்ளவன், கேட்கக் கடவன்.

ன் பழைய சிநேகிதன் ஒருவனின் மரணச்செய்தியை அறிந்து, அதற்காகத்தான் நேற்று காலை, என் சொந்தக் கிராமத்துக்கு வந்துசேர்ந்தேன். சிநேகிதன் உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலைபார்த்து, நல்ல சம்பளம் வாங்கி, ஆஸ்திகளைப் பெருக்கிக் கொண்டிருந்தான். அவனுடைய துணைவி தனலட்சுமிக்குக் கணவனின் எதிர்பாராத மரணத்தைக் காட்டிலும், அவன் பணிநிறைவுசெய்ய ஆறுமாத கால அவகாசம் இருக்கும்போதே இறந்துவிட்டதில் அதிக வருத்தம். தம்பதிகளுக்குப் பிள்ளைப்பேறும் இல்லை. சிநேகிதனின் அப்பா, தொண்ணூறைக் கடந்த வயதுகளில் இன்னும் திடகாத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார். மலம், மூத்திரம் போவதில் ஒரு பிரச்னையுமில்லை. முன் பற்களில் சில, வயது மூப்பின் காரணமாக விழுந்திருந்தாலும், கடைவாய்ப் பற்களின் உறுதியால் அவர் தன் உணவை நன்றாக மென்று விழுங்கி, செரித்துக்கொள்கிறார். எனவே, வாயுக்கோளாறுக்குச் சுருட்டுப் பிடிக்க வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை. வீட்டுக்கு வெளியே கயிற்றுக் கட்டிலை இழுத்துப்போட்டு, பனிக்காலத்தில் கம்பளியைப் போர்த்திக்கொண்டு, வெயில் காலத்தில் மேலுக்குச் சட்டை அணியாமல் பனை விசிறியால் விசிறி வெக்கையைத் தணித்துக்கொண்டு, நன்றாக உறங்கி எழுகிறார். பேச்சுத்துணைக்கும் அவருக்கு ஆள்களிருந்தார்கள். தெருவில் பத்து வயசுப் பிள்ளை முதல் சம்சாரி வரை, அவருடைய கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து நலம் விசாரித்துப் போவார்கள். “எனக்கென்னப்பா கவல. நான் நல்லா இருக்கேன். எம் பொஞ்சாதி போனதுக்கப்புறம் ரெண்டாந்தாரம் கட்டிக்கிலியே தவிர, ஒரு பிரச்னையும் இல்லப்பா. எம் மகனுக்குத்தேம் ஊர்ல இல்லாத வியாதியெல்லாம் ஒட்டுமொத்தமா வந்து, நடமாட முடியாம கெடக்குறான். பல்லு பூராவும் கொட்டிப்போச்சு. ஒரு லச்சம் செலவு பண்ணி பல்லு கட்டியிருக்கான். என்ன பிரயோசனம்? ரத்தக்கொதிப்பு, சக்கர, மூலம், எலும்புத் தேய்மானம், வாயுப்புடிப்பு, நெஞ்சுவலி எல்லாம் சேர்ந்து ஒரு இட்டிலியக்கூட மென்னு முழுங்க முடியில. என்னிய நீங்க விசாரிக்க வேண்டாம். அவனப் போயிப் பார்த்து ஆறுதலா ரெண்டு வார்த்த சொல்லிட்டுப் போங்க... போங்க...” என்று வந்தவர்களையெல்லாம் மகன் பக்கமாகத் திருப்பிவிடுவாராம் கிழவர். “போய்ச் சேர்ற வயசுல குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்துக்கிட்டு கெழட்டுப்பயலுக்குக் குசும்பப் பாத்தியாடி தனம்” என்று பெண்டாட்டியிடம் புலம்பித் தள்ளுவானாம் சிநேகிதன். இப்படிப்பட்ட அப்பா, பிள்ளையை நீங்கள் எங்காவது கண்டது உண்டா மக்களே.

கோயம்புத்தூரிலிருந்து தாராபுரம் வந்திறங்கி, நாலாம் நம்பர் டவுன் பஸ்ஸில் ஏறி அமர்ந்து, கிராமத்துக்கு டிக்கெட் வாங்கியபோதே, என் முகத்தைப் பார்த்துவிட்டிருந்த ஊர் சனங்களில் ஒரு சிலர் “எங்கிருந்தாலும், சிநேகிதக்காரன் சாவைக் கேள்விப்பட்டதியிம், கெளம்பி வந்துட்டானுல்லப்பா... அதுதாம்ப்பா ப்பிரண்ட்சிப்பு” என்று பேசிக்கொண்டனர் என் காதுபட. ஓட்டுநர் திட்டமிட்டு இந்தப் பாட்டைப் போட்டானா அல்லது எதேச்சையாக நடந்த விஷயமா எனக்குத் தெரியாது. “முஸ்தப்பா முஸ்தப்பா... டோன்ட் வொர்ரி முஸ்தப்பா...” என்று சாதனம் அலறத் தொடங்கியது. “மூழ்காத ஷிப்பே ஃப்ரண்ட்ஷிப்தான்...” என்கிற தத்துவ வரி ஒலிக்கையில், பஸ்ஸிலிருந்த ஊர்க்காரர்கள் நான் கண்கலங்குகிறேனா என்று கவனித்து கர்சிப் தரக் காத்திருந்தார்கள்போல.

வீட்டுக்குப் போகாமல் நஞ்சையா பிள்ளையின் வெற்றிலை பாக்கு கடையில் பேக்கை வைத்துவிட்டு, முதலில் சாவு வீட்டுக்குத்தான் போனேன். எங்க செட்டு பசங்கள் எல்லாரும் சாவு வீட்டுக்குக் கீழே குழுமியிருந்தனர். என்னைக் கண்டதும் அவர்களுடைய உடல்மொழியில் மாற்றம் தெரிந்தது. அது எனக்கான வரவேற்பு. சாவு வீட்டில்வைத்து “வாடா, எப்ப வந்தே?” போன்ற விசாரிப்புகளெல்லாம் தேவையில்லை. நடுக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த நீளமான பெஞ்சில் சிநேகிதன் கிடந்தான். குருதி கசிந்திருக்கும்போல, மூக்கின் இரண்டு துவாரத்திலும் பஞ்சுவைத்திருந்தார்கள். உடம்பின்மீது சில பூமாலைகள் கிடந்தன. கற்பூர வாசனையை மீறி ஓர் ஈ அங்குமிங்கும் போக்குக் காட்டியது. ஒப்பாரிக் கிழவிகள் ஓய்ந்திருந்தனர். சுவர்க்கடிகாரத்தின் முட்களில் நகர்வில்லை. நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். சிநேகிதனின் முகம் வற்றி, ஒடுங்கி, திகைப்புற்ற பாவனையிலிருந்தது. கண்களிரண்டும் திறந்திருந்தன. அதை மூடிவிடுமாறு சொல்லிய பின், வெளியில் இறங்கினேன், சிறிது நேரம் குழுமத்துடன் சேர்ந்து நின்றிருந்தேன். யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. அன்றைக்கு சனிக்கிழமை. சனிப்பிணம் துணைக்கு ஆள் கேட்கும் என்கிற நம்பிக்கை இருந்ததால், மகனோடு சேர்ந்து அப்பனும் போகக்கூடுமென்றும் அவ்வாறு நிகழ்ந்தால், அது விசேஷமான சாவு என்றும் பேசிக்கொண்டார்கள். ஆனால், கிழவரிடம் மரணத்துக்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. அவர் கயிற்றுக்கட்டில் நாயகனைப்போல கால்நீட்டிப் படுத்துக்கொண்டு, செத்துப்போன மகன் பிறந்த அன்று தெருவுக்கு ஆக்கிப்போட்ட விருந்து குறித்து விவரணைகளுடன் பேசிக்கொண்டிருந்தார். புதைக்கப்படும் சிநேகிதனைப் பார்க்கும் மனத்திடமில்லாததால், இடுகாட்டுக்குப் போவதில்லை என்று ஏற்கெனவே தீர்மானித்திருந்தேன். எல்லோரிடமும் தலையை ஆட்டி சைகையால் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன். என் வீடிருந்த திசையில் கால்கள் செல்லாமல் வேறுபக்கம் செல்ல, திகைத்து அவை இழுத்த இழுப்புக்கு உடன்பட்டேன்.

வடகிழக்குத் திசையில் நடந்துகொண்டிருந்தேன். போயர்கள், வேளார்களின் குடியிருப்புகள் உள்ள பகுதி அது. அடுத்து வருவது வெள்ளாவி முக்கும், வண்ணார் வீடுகளும், பீக்காடும், சுண்ணாம்புக் காளவாய்களும். சிறுவனாக அரைக்கால் சட்டை போட்டிருந்த காலத்தில் ஒருமுறை இந்தப் பகுதியில் நான் காணாமல் போயிருக்கிறேன். உள்ளூரில் காணாமல்போவது ஒருவித சுவாரசியமான விஷயம். இப்போது நான் இந்தப் பகுதிக்கு ஏன் வந்தேன்? மீண்டும் காணாமல்போகவா?

டெலிபோன் எக்சேஞ் வந்திருந்தது. எக்சேஞ்சுக்கு நேர் எதிரில் முன்பொரு சுண்ணாம்புக் காளவாய் இருந்தது. இப்போது அது இருந்ததற்கான தடயமே இல்லை. அந்த இடத்தில் ஒரு நாயுடுமார் பாட்டி, பெட்டிக்கடை வைத்து உட்கார்ந்து, யாரிடமோ தெலுங்கு பாஷையில், செல்போனில் பேசிக்கொண்டி ருந்தாள். வெயில் கொளுத்தியது. வியர்த்திருந்த நெற்றியையும் கழுத்தையும் கைக் குட்டையால் துடைத்துக்கொண்டேன். குளித்தாக வேண்டுமெனும் எண்ணம் இருந்தது. மரித்த சிநேகிதனின் முகம் மீண்டும் மீண்டும் மனத்திரையில் தோன்றியபடியே இருந்தது. அவனுடைய மரணத்தைக் கேள்விப்பட்டு உள்ளூர், வெளியூர் உறவுகள், நண்பர்கள், உடன் பணிபுரிந்த ஆசிரியர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். ஆனால், அவனிடம் பயின்ற மாணவன் ஒருத்தன்கூட வரவில்லை என்று பேசிக்கொண்டார்கள். இந்தத் தகவல் எனக்கு விளங்கிக்கொள்ளவியலாத, புதிரான உணர்வைத் தந்தது.

சிநேகிதனின் வீட்டுக்கு ஏழெட்டுப் பையன்கள் டியூஷனுக்கும் வந்துகொண்டிருந்தார்களாம். அதில், ஒல்லியாய் சிவப்பாய் செல்வக்குமார் என்கிற பையனும் ஒருவன். அவனைத் தன் சொந்த மகனைப்போல பாவித்தானாம் சிநேகிதன். பிள்ளையில்லாதவர்களுக்கெல்லாம் இப்படியான குணாதிசயம் இருக்கும்தான். யாருக்கும் இல்லாத சலுகைகள் அவனுக்கு அந்த வீட்டில் இருந்திருக்கிறது. ஒருமுறை தனலட்சுமியின் மடியில் அவன் தலைவைத்துப் படுத்திருந்ததையும் அவள் வாஞ்சையுடன் அவனுடைய தலையைக் கோதிவிட்டதையும் பார்த்திருப்பதாகச் சிலர் சொன்னதுண்டு. கடைசிக்கு, அந்த செல்வக்குமார்கூட சாவுக்கு வரவில்லை என்பதுதான் பெரிய புதிர்.

ஜான் ஆப்ரஹாமின் கழுதை

வெயில் ஏறிக்கொண்டிருந்தது. உடம்பின் பிசுபிசுப்பும் கூடியது. எதற்காக இந்தப் பக்கம் வந்தோம் என்பதற்கும் விடை கிடைத்தபாடில்லை. வேலியோரமாக நான்கைந்து பன்றியினங்கள் அலைந்து திரிந்தன. எக்சேஞ்சுக்குப் பக்கவாட்டிலிருந்த வெள்ளாவி அடுப்பு புகைந்து கொண்டிருந்தது. இரண்டு பக்கமும் கருவமுள் மரங்களடர்ந்து நேரே செல்லும் பாதை, லைன் வீட்டில் சென்றுமுடியும். முள்மர நிழலிலும் மறைவிலும்தான் அந்தத் தெருச்சனங்கள் காலைக்கடன், மாலைக் கடன்களைக் கழிப்பது. இரண்டு தெருக்களையும் சேர்த்து ஒரு வீட்டில்கூட இன்னும் கழிப்பறை கட்டிக்கொள்ளவில்லை. வெள்ளாவி முக்கிலிருந்து லைன் வீடு போகிறவர்கள், எச்சரிக்கையுடன் காலடி எடுத்துவைக்க வேண்டியிருக்கும்.

வேலியோரத்தில் என் கவனம் பதிந்திருந்தபோது, உயரமாக ஒல்லியாக ஊருக்கு அந்நியமானதொரு மனிதரூபம், வேகமாகக் கடந்துசெல்வதை ஓரவிழியால் கவனித்துவிட்டிருந்தேன். என் பெரும்பாலான கனவுகளில் தோன்றி நீங்கும் படிமம்போல அந்தக் காட்சி மூளையைக் கிளறிவிட்டது. ஒருவேளை இதற்காகத்தான் இன்றைக்கு திட்டமிடாமலே இந்த இடத்தில் வந்து நிற்கிறோமா? என்னை இங்கு கொண்டுவந்து சேர்த்திருக்கும் சக்தி எது?

ஜான் ஆப்ரஹாமின் கழுதைஅவர், அல்லது அந்த ரூபம் எதையோ சுற்றிலும் தேடியபடி வேகமாகப் போய்க்கொண்டேயிருக்க, என்னைச் சுற்றிப் படர்ந்து இறுக்கிய புதிர்வேலி சட்டென்று விலகிக்கொள்ள, நான் மெய்மறந்து உரக்கக் கூவினேன்.

“ஜான்...”

பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்த உருவம் திகைத்து நின்றது. பிறகு கோயில் பிரகாரத்திலுள்ள கற்சிலை ஒன்று பக்தனைத் திரும்பிப் பார்ப்பதைப்போல, கழுத்தை மட்டும் திருப்பி என்னைப் பார்த்தது. நான் கண்டுகொண்டேன். ஜான்தான்... ஜானேதான்!

னக்கு இருபதடி தூரத்தில் அவர் நின்றிருந்தார். கழுத்தைத் திருப்பியவாக்கில் நின்றிருந்தார். நான் மெள்ள அவரை நெருங்கியிருந்தேன். குறும்பான, அசல் குட்டநாட்டுக் கண்கள். இதழோரத்தில் குன்றிமணியளவு நகைப்பு, தலையில் நீளநீளமாக மயிர்க்கற்றைகள். நரை கலந்து காற்றிலாடும் தாடி. ஜான் ஆப்ரஹாமேதான்.

முப்பது வருஷங்களுக்கு முன் ஜானின் மரணம், ஒரு தற்கொலையைப்போல நிகழ்ந்துவிட்டிருந்த துர்சம்பவம் என நானறிந்திருந்தேன். அவர் நிச்சயமாக அளவுக்கதிகமாகக் குடித்து மரணமுற்றார். அதில் சந்தேகம் ஏதுமில்லை. ஜானின் உடலைக் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்தார்கள். பிறகு எப்படி ஜான் வரக்கூடுமென நீங்கள் கேட்பதில் உள்ள நியாயமும் புரிகிறது. ஆனால், நான் இதற்கு என்ன பதிலைச் சொல்லிவிட முடியும்? யேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதை நம்புகின்ற நாம், ஜான் ஆப்ரஹாம் என்கிற கிறிஸ்தவர் உயிர்த்தெழுந்தார் என்பதையும் நம்புவோமாக. ‘ஒரு குடிகாரத் திரைப்பட இயக்குநரும் தீர்க்கதரிசியாகிய தேவகுமாரனும் ஒன்றா?’ என நீங்கள் மீண்டும் கேள்வி எழுப்பினால் காண்க: ‘கலகக்காரனின் திரைக்கதை’ நூலில் இடம்பெற்றுள்ள ஜான் ஆப்ரஹாம் பற்றிய கவிதைகளை. இந்தக் கதையேகூட அந்த நூலைத் தொடர்ந்து வாசித்த காரணத்தால் உறக்கம் கெட்டு, யாமத்தில் வந்த சொப்பனங்களின் அடிப்படையில் புனைந்ததே.

வருக்கும் எனக்குமான இடைவெளி குறைந்திருந்தது. அவர் என்னை அடையாளங்கண்டிருந்தார். எவ்விதக் கேள்விகளுமின்றி அணைத்துக்கொண்டார் என்னை. ஆனால், என்ன ஒரு ஏமாற்றம், ஜானிடமிருந்து எப்போதுமே நுகர்ந்திராத ரோஜாவின் சுகந்தமல்லவா வீசியது. அவர் உடுத்தியிருந்த ஆடைகளில்கூட இதற்கு முன் இருந்திராத ஒழுங்கு, நேர்த்தி, ஹா... இந்த ஜானுக்கு என்ன ஆயிற்று?

“ஏன் களைப்பாக இருக்கிறீர்கள்?”

அவர் என்னைப் பார்த்துக் கேட்ட கேள்வி, இப்படியாக இருந்தால், யாராக இருந்தாலும் ‘ஜானுக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா’ என்றுதானே யோசிப்பார்கள். ஜானைக் காண்பவர்கள், அவரை அதீதக் களைப்புடன்தான் சந்தித்திருப்பார்கள். மிகை மதுவில் தள்ளாட்டத்துடன் அல்லது ஒரு விடுதியிலுள்ள அறையில் கட்டிலுக்குக் கீழே கிடந்து, தனக்குத்தானே நான்கைந்து விதமாகப் பேசிக்கொண்டு அல்லது அறிந்த ஆள்கள் எவரிடமேனும் யாசித்தபடி, போதையில் நண்பர்களிடம் வம்பிழுத்தபடி...

மது நெடி வீசாத ஜானா? ஏன் களைப்பாக இருக்கிறீர்கள் என்று என்னைக் கேட்கும் ஜானா? அணிகின்ற உடைகள் குறித்து அக்கறை எடுத்துக்கொண்ட ஜானா? ஆயிரம் கேள்விகள் இருந்தன என்னிடம். எப்படிக் கேட்பேன்? எனக்கு மட்டுமல்ல எவருக்குமே ‘ஒழுங்கு செய்யப்பட்ட ‘ஜானைப் பிடிக்கும் என்று தோன்றவில்லை. ஆனாலும், என்னவோ மறு ஜென்மத்திலான ஜானைச் சந்தித்த மாதிரி ஒருவித குறுகுறுப்பு இருந்தது. சந்தேகமும்! குறுக்குச் சாலையில், மண்பாதையில் நடந்து நடந்து தார்ச்சாலை வந்ததும், இனி கிழக்கா மேற்கா எந்தப் செல்வது என்று திகைக்காமல், ஜானை மேற்கு திசை நோக்கி நடத்தினேன். அவரும் ஆச்சர்யப்படுமளவு அதற்கு இணங்கி நடந்தார். “தென் திசையில் போனால் பழனிவரும். வடதிசையில் போனால் தாராபுரம் ஜான்” என்றேன். “ஓ...” என்று மலையாளிக்கே உரிய பாணியில் தன் வியப்பை வெளிப்படுத்தினார். ஹை ஸ்கூல் வந்தது. “நான் படித்த பள்ளிக்கூடம் ஜான்” என்றேன் பரவசத்துடன். “அப்படியா? உள்ளேபோய் ஒண்ணு பார்ப்போமா?” ஜான் அப்படிக் கேட்டதும் என் பரவசம் சுருங்கி, காணாமல்போயிற்று. கண்டிப்புக்குப் பேர்போன அந்த பிராமணத் தலைமையாசிரியர் இன்னும் அந்தப் பள்ளியில்தான் உலவிக்கொண்டிருப்பாரோ என்கிற பயம். ஜான் என்னை உற்றுக் கவனித்துவிட்டு “பிரச்னை வல்லதும் இருந்தா வேண்டாம்” என்று சிரித்தார். “ஏய்ய்ய்... பிரச்னை ஒண்ணும் இல்ல... பக்சே...” நான் சற்றே ஜானிடம் வழிந்தேன் என்று நினைக்கிறேன்.

ஹை ஸ்கூல் கடந்திருந்தோம். இடப்புறம் தூர்ந்துகிடந்த ஒரு கிணற்றை எட்டிப் பார்த்து, சலிப்புற்ற பாவனை காட்டினார். நான் இப்போது ஜானிடம் கேட்க வேண்டியதைக் கேட்கத் துணிந்தேன்.

“ஜான்... இந்த ஊருக்கு வந்திருக்கிறீர்களே... காரணம் தெரிந்துகொள்ளலாமா?”

“ஏய்... அதொண்ணுமில்ல. கழுதையத் தேடி வந்ததாக்கும்.”

“கழுதையா? மறுபடியும் கழுதை எதற்கு?”

“ ‘அக்ரஹாரத்தில் கழுதை - பார்ட் டூ’ எடுக்கான் வேண்டி.” ஜான் சாந்தமாகக் கூறினார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

‘யு ட்டூ புரூட்டஸ்’ பாணியில் “ஜான் நீங்களுமா?” என்று கத்திவிட்டேன். பார்ட் டூ, பார்ட் த்ரீ எடுத்த சினிமாக்காரர்களின் முகங்கள் எல்லாம் ஒன்றுக்குப் பின் ஒன்றாக நினைவில் வலம் வர, “இந்த ஆள் நம்ம பழைய ஜான் இல்லை. டூப்ளிகேட்... பொய்... பொய்...” என்று என் மனம் குமுறியது.

“பழைய கழுதைக்கி சாமிநாதன் எழுதினார். அவர் மரிச்சிட்டதால புதுக்கழுதைக்கி நல்ல ரைட்டர் யாரையாவது எழுதவைக்கணும்” கண்களை இடம் வலமாகச் சுழற்றியவாறு ஜான் நடந்துகொண்டிருந்தார். நான் அந்த ஒரு நிமிஷத்தில் தீர்மானித்திருந்தேன், ஜானைக் கொலைசெய்வது என்று.

சங்குப்பிள்ளை கடைக்கு அடுத்த காளியம்மன் கோயில் இறக்கத்தில் ஜானை நடத்திச்சென்று, முட்புதர் மண்டிய இடத்தில் ஆளைக் கவிழ்த்து, தலையில் பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப்போட்டு... ஜானைப் போன்ற லகுவான ஆள்களைக் கொலைசெய்வதொன்றும் பெரிய காரியமில்லை.

“மன்னித்துவிடுங்கள் ஜான்! நீங்கள் என் பிரியத்துக்குரியவர். உங்களைக் கனவுகளில் சந்தித்த பொழுதெல்லாம் நீங்கள் அந்தப் பழைய கலங்கிய கசங்கிய ஜானாகவே தெரிந்தீர்கள். அந்த ஜான்தான் எனக்கு இஷ்டமானவருங்கூட... உங்களை நேரில் பார்த்தபோது, நான் அடைந்த சந்தோஷம் நீங்கள் என்னைக் கட்டித் தழுவியபோது நீங்கிவிட்டிருந்தது. புளித்த கள்ளின் நெடிக்கு மாறாக, எப்போது உங்களிடமிருந்து ரோஜாக்களின் சுகந்தத்தை நுகர்ந்தேனோ, அந்த நிமிஷமே சந்தேகம் கொண்டேன். நீங்கள் என்னுடைய ஜானாக இருக்க முடியாது... “ஒயிட் காலர்ஸே எனக்குப் பிடிக்காது...” என்று காக்கநாடனிடம் திமிராகப் பேட்டிகொடுத்த ஜானா? நடுவீதியில் வயநாட்டு வேசியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஜானா இது?”

என் மனக்குரலைக் கேட்டுவிட்டவர்போல முன்னே நடந்துபோய்க்கொண்டிருந்த ஜான், என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தார். ஓங்கிய பெரும் சிரிப்பு. அது அவருடைய முந்தைய கால வெடிச்சிரிப்போடு சற்றேறக்குறைய பொருந்திப்போனது. “நீங்க ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்கனு நெனைக்கிறேன். நான் ‘கழுதை’யை எடுத்தபோதே எவனும் பார்க்கல. தமிழ்நாட்டில அந்தப் படத்த ஓடவே விடல. இப்போ ‘கழுதை ரெண்டு’ எடுத்து பிலிம் ரோலை என் கழுத்தில சுத்திக்கிட்டு கெறங்கவா? அப்படி இல்ல. கழுதையத் திரும்பவும் எடுக்கணும்ங்கற அத்தியாவசியம் இல்ல, கழுதையின் சாம்பலைக் காளியிடம் கொடுத்தாச்சு...” ஜான் இப்போது அச்சு அசலாகப் பழைய ஜானைப்போலவே சிரித்து என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தினார். ஜானைக் கொலைசெய்யும் திட்டத்தை நான் கைவிட்டுவிடுவேனோ? இந்தச் சிரிப்பு என்னைத் தடம் மாற்றிவிடுமோ?

“ஜான்... அங்கே உங்க நாட்டில் அல்லது மதராஸில கழுதை இல்லையா? இந்த ஊரில கழுதை இருக்குன்னு யார் சொன்னது?”

“யார் சொல்லணும்? பைபிள் சொல்லிச்சு. ‘உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குச் செல்லுங்கள். அங்கே ஒரு கழுதையும் அதனுடைய ஒரு குட்டியும் கட்டியிருக்கக் காண்பீர்கள்...’ அதிகாரம் இருபத்தொண்ணில் உண்டு.”

“உங்களுக்கு எதிரேயா இந்த கிராமம் இருக்குது?”

“குட்ட நாட்டிலிருந்தோ குன்னங்குளத்திலிருந்தோ பார்த்தால், கொஞ்சம் தூரமாயிருந்தாலும் இந்த கிராமம்தான் காட்டுது. இப்போ எனக்கு எதிரில்தான் இந்த கிராமம் இருக்கு...”

ஜான் பழைய பார்முக்குத் திரும்பிவிட்டிருந்தார். இனி என்னால் ஜானை எதிர்கொள்வது சிரமம்தான்.

“ஜான்... ஒருகாலத்தில் இந்த கிராமம் கழுதைகளாலே நிரம்பியிருந்தது. இப்போ கழுதைகளே இல்லை.”

“கழுதைகளே இல்லாமல் வண்ணார்கள் எப்படித் தொழில் செய்றாங்க?”

“ஜான்... நாம சந்திச்சோம் இல்லையா அந்த இடம். அதுதான் வெள்ளாவி முக்கு. ஆற்றிலிருந்து அந்த இடத்துக்குத்தான் வெளுத்தத் துணிகளைக் கழுதைகள் சுமந்து வரும். வண்ணார்குடி இப்போ பாதிக்கு மேல காலியாயிருச்சு. அவர் பிள்ளைகளில் சிலர் அரசாங்க உத்தியோகத்துக்குப் போகவும், அவங்க தொழிலைவிட்டு டவுன்ல குடியேறிட்டாங்க. இருக்குற கொஞ்சம் பேர் வீட்டிலேயே சலவை செய்யுறாங்க. சண்முகநதி, அமராவதி எல்லா ஆறுகளும் தண்ணி இல்லாம வத்திக் கெடக்கு ஜான். போதாக்குறைக்கி வீட்டு வீட்டுக்கு வாஷிங்மெஷின் கெடக்குது... கழுதைகளோட தேவையில்லாமப் போச்சு...”

“இருந்த கழுதைங்கள என்ன செஞ்சாங்க?”

“கால்களைக் கட்டி ஆட்டோ ரிக்ஷாவில ஏற்றி கண்காணாத் தொலைவில் கொண்டுபோய் விட்டிருப்பாங்க...”

“திரும்பிவரத் தெம்பில்லாத கழுதைங்களா?”

“வராது ஜான். வந்தாலும் உங்கப் படத்துல நடக்கிற மாதிரி கொன்னு பொதச்சிருவாங்க...”

“அது சரி... ஆனா எனக்கு இங்க கழுதை இருக்கறதா காட்டுது...”

“எங்கே காட்டுது? சாவடியிலா... கசாப்புக் கடை முக்கிலா... சுடுகாட்டிலா? முன்ன அங்கெல்லாம்தான் கழுதைங்க நின்னுச்சு. எனக்குத் தெரிய நீங்க இப்போ ஒரே ஒரு எடத்துல கழுதைய பார்க்கலாம்...”

“எங்கே? எங்கே?” ஜான் பதற்றமானார்.

“பஸ் ஸ்டாப்ல ஒருத்தன் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் வச்சு நடத்துனான். வளத்தியா கண்ணாடி போட்டிருப்பான்...”

“அவன் கழுதை வளர்த்துறானா?” ஜானிடம் பேராவல் நிரம்பித் ததும்பியது.

“இல்லை ஜான். “ ‘என்னைப் பார் யோகம் வரும்’னு ஒரு கழுதைப்படம் பிரேம் பண்ணி வச்சிருப்பான். அதைச் சொன்னேன்...” 

ஜான் ஆப்ரஹாமின் கழுதை

இப்போது ஜான் என்னுடைய வலது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். செவியில் ‘உய்ங்ங்ங்’ என்று ஓசை எழுந்து, அடங்கத் தாமதமாயிற்று. இவர் நம்ம ஜான்தான் என்று முடிவுசெய்ய இந்த ஒரே ஒரு சம்பவம் போதுமானதாக இருந்தது!

“எனக்குக் கழுதையப் பார்க்கணும். படம் எடுக்க அல்ல. அதை ஒரே ஒரு தடவை கண்ணால் பார்த்தாலே போதும். அது ஒருவிதமான உந்துதல். அவ்வளவுதான்...”

ஜான் இதை ஆவேசமாகக் கூறினார். நான் கன்னத்தைத் தடவியபடி இருந்தேன். அவர் அதைக் கண்டுகொள்ளாமல் நடந்தார்.

ஜா
னின் சுயரூபம் எனக்கு நன்றாகத் தெரியும். வழியில் ஏதாவது சாராயக்கடைக்குள் நுழைந்து அவர் திரும்பினால், வேறொரு ஜீவனாக அவதாரம் எடுத்துவிடுவார். உடனிருப்பவர் நிலைமை கவலைக்குரியதாகிவிடும். நான் ஜானின் தற்போதைய மனநிலையை மாற்ற முயன்றேன். அது எனக்குத் தேவையாகவும் இருந்தது. ‘என் சிநேகிதனின் மரணம் குறித்தும் அவனிடம் படித்த மாணவர்களில் ஒருவன்கூட அவனுடைய மரணத்தைக் கேள்விப்பட்டு வரவில்லை’ என்றும் சொன்னேன். கேட்டுக் கொண்ட பாவனையில் ஜான் தலையை ஆட்டினார். அவரின் கண்கள் ‘கவுண்டர் ஓட்ட’லின் மீதிருந்தது. “கட்டஞ்சாயா ஒண்ணு” தார்ச்சாலையில் நின்றுகொண்டே கத்தினார். அது டீ மாஸ்டருக்குப் புரிந்திருக்காது என்கிற தோரணையில் “கறுப்புச் சாயா... பிளாக் டீ... சுலைமானி...” என்று மீண்டும் கத்தினார்.

“ஆனால், ஜான்... தமிழ்நாட்டுக் காரங்களுக்கு உங்கக் கட்டஞ்சாயா தயாரிக்கத் தெரியாது. கஷாயமாக்கும் தருவானுங்க...” என்றேன். “ஏதாவதொரு கழுதையைக் குடிப்போம்” என்று பலமாகச் சிரித்தார். அந்தக் ‘கழுதை’ நகைச்சுவையைப் புரிந்துகொண்டு நானும் சிரித்தேன்.

“செய்ய வேண்டிய வேலைகள் ஒருபாடு உண்டு...” என்று சொன்ன ஜான், இடுப்பில் செருகியிருந்த மதுக்குப்பியை எடுத்துத் திருகி, தண்ணீர்கூட கலக்காமல், கடகடவென்று குடித்து முடித்து, காலிப் பாட்டிலைக் குப்பைக்கூடையில் வீசினார். இடுப்பில் ‘விஷயம்’ இருந்தது எனக்குக் கடைசி வரைத் தெரியவில்லை. இது எல்லாம்தான் ஜானின் இயல்பு. ஆனால், டீக்கடையில் நின்றவர்களுக்கு அவருடைய செய்கை அதிர்ச்சியை அளித்திருக்க வேண்டும். அவர்கள் ஜானையும் என்னையும் மாறிமாறிப் பார்த்தார்கள். மது அருந்திவிட்டு, அடுத்த நிமிடமே டீ குடித்த ஜானை நானும் ஆச்சர்யமாகப் பார்த்தேன். “நல்லா ஏத்திவிடும்” என்றார். ‘என்னடா இது நம்ம ஊர்க்காரங்களுக்குத் தெரியாத வித்தியாசமான பார்முலா’ என்று குழம்பியவாறு “என்னவெல்லாம் வேலைகள் ஜான்?” என்று கேட்டேன். “ ‘ஜோசப் என்ற பாதிரி’ எடுக்கணும். நானும் பால் சக்காரியாவும் சேர்ந்து அதனோட ஸ்கிரீன்பிளே செய்தோம். பிற்பாடு அதை விட்டுட்டு ‘வித்தியார்த்திகளே’ எடுக்கப் போயிட்டேன். பாதிரி கதையை நான் விட்டதில் சக்காரியாவுக்கு மனவருத்தம். அந்தக் கதையில் அவர் பயங்கர இன்வால்வ்மென்ட் ஆயிருந்தாரு... சக்காரியாவப்போல் பைபிள் நாலட்ஜ் உள்ள ஆள் யாருமே இருக்க முடியாது...”

“ ‘பாத்துமாவின் ஆடு’க்குக்கூட புது விளக்கம் சொல்லணும்னு உங்களுக்கு ஒரு திட்டம் உண்டாயிருந்தது இல்லையா ஜான்?”

ஜான் ஆப்ரஹாமின் கழுதை“ஆமா... கோவலன்ட சரித்திரம்... எல்லாம் செய்யணும். செஞ்சிட்டு மரிக்கணும். ஆமா... பக்கத்தில ஏதும் லிக்கர் ஷாப் உண்டா?”

“ஜான்... இப்போத்தானே குடிச்சீங்க?”

“அது கட்டஞ்சாயா உள்ளே போனதும் எறங்கிடுச்சு”

“என்ன ஜான்... அது நல்லா ஏத்திவிடும்னு சொன்னீங்க?”

“சொன்னேனா... அப்படியா சொன்னேன்?”

ஜான் சமாளிக்கவில்லை. அவர் இயல்பு அது. கவுண்டர் கடையைவிட்டு வெளியில் வந்தோம். அனல்காற்று அடித்தது. எங்காவது நிழல்விட்ட மரம் பார்த்து அல்லது கவுண்டர் கடையிலேயேகூட சற்று நேரம் அமர்ந்திருக்கலாம் என்று நினைத்தேன். ஜானை வெயிலோ புழுக்கமோ எதுவும் பாதித்த மாதிரி தெரியவில்லை. பஸ் நிறுத்தம் நோக்கி நடந்த ஜான், பைக்கில் மெள்ள ஊர்ந்து ஜனங்களை நோட்டம் விட்டவாறு வந்துகொண்டிருந்த ஒரு போலீஸ்காரரைக் கையைக் காட்டி நிறுத்தி, “இங்கே கழுதை எங்காவது இருக்குமா?” என்று கேட்டு விட்டார். போலீஸ்காரர் முகம் மாறி விபரீதம் ஏதும் நிகழும் முன்பே நான் அவரிடம் சென்று இடைவெட்டி, “சார் அவர் ஒரு சினிமா டைரக்டர், நிஜமாகவே ஒரு கழுதையைத் தேடித்தான் வந்திருக்கிறார்” என்று சமாளித்தேன். போலீஸ்காரர் ஜானை முறைத்துப் பார்த்துவிட்டு வண்டியில் வேகம் கூட்டினார். ‘போய்க்கடா’ என்பதுபோல அதை அலட்சியப்படுத்திய ஜான், “உங்க சிநேகிதன் விஷயம் சொன்னீங்க...” என்று வேறு விஷயத்துக்குத் தாவினார்.  “ஆமாம் ஜான். அவனுடைய சாவுக்கு அவனுடைய ஒரு ஸ்டூடன்ட்கூட வரலைங்கிறது எனக்குப் பெரிய புதிரா இருந்தது. சம்பிரதாயத்துக்குக்கூட ஒருத்தனும் வந்து நிக்கல...”

“அவனோட ஆத்மா சாந்தியடைஞ்சி ருக்காதில்ல?” கேட்டுவிட்டு ஜான் என்னைப் பார்த்தார். “ஜான்...” என்று அவரை நானும் கூர்ந்து பார்த்தேன்.

“அவன் ஏற்கெனவே செத்துப் போயிருக்கணும்...” என்றார் ஜான்.

“இவர் வேற புதிர் போடுறாரா” என்று நினைத்தபடி நடந்தேன்.

“அவன் ஏற்கெனவே க்ளாஸ் ரூம்ல ஸ்டூடன்ட்ஸ்க்கு டீச் பண்ணும்போது மரிச்சிருக்கணும். அப்படிப்பட்ட வாத்தியார் சாவு, அன்றாடம் நடக்குது பள்ளிக்கூடத்தில. அது தெரியாதா உங்களுக்கு? இப்போ வீட்டில கெடக்குற டெட்பாடி வெயில்ல வத்தின கருவாடு. மீன் ஏற்கெனவே செத்துப்போயி...”

நான் புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் அதை ஆமோதித்தேன். நெற்றியில் விழுந்துகிடந்த மயிர்க் கற்றைகளை ஒரு கையால் அழுத்தமாக மேலேற்றி விட்டு, “நானுங்கூட முன்பொரு டுட்டோரியல் காலேஜ்ல பசங்களுக்கு க்ளாஸ் எடுத்தேன். பிற்பாடு அந்த வேலையைவிட்டு வந்துட்டேன்.” என்றார் ஜான். “எதனாலே ஜான்?” நான் கேட்டேன். “உங்க சிநேகிதனப்போல் கருவாடு ஆகிட வேண்டா மேண்ணு!” சொன்னதும் ஜானின் வழக்கமான ஓங்கிய சிரிப்பு.

பஸ் நிறுத்தத்திலிருந்து தர்மாஸ்பத்திரி கடந்து சந்து திரும்பியவர், ரொம்பவே பரிச்சயப்பட்டவர்போல “இந்தப் பக்கம் துர்க்கை இருப்பாளே...” என்றார். “ஆமாம் ஜான்... துர்க்கையும் வாகீஸ்வரனும் உண்டு” என்றேன். “துர்க்கை அருள் பாலிப்பாள்” நடந்துகொண்டே போனவரின் கண்களில், மாட்டாஸ்பத்திரிக்கு அடுத்திருந்த மந்தையில் கட்டப்பட்டிருந்த கழுதையும் அதன் குட்டியும் தெரிந்தது. ஜான் முகம் மலர்ந்து, கரங்கள் குவித்து, கழுதையையும் அதன் குட்டியையும் பார்த்து “நமஸ்காரம்...” என்றார்.