Published:Updated:

ஒரு சிற்பியின் சுய சரிதை

ஒரு சிற்பியின் சுய சரிதை
பிரீமியம் ஸ்டோரி
ஒரு சிற்பியின் சுய சரிதை

சிற்பி எஸ்.தனபால்

ஒரு சிற்பியின் சுய சரிதை

சிற்பி எஸ்.தனபால்

Published:Updated:
ஒரு சிற்பியின் சுய சரிதை
பிரீமியம் ஸ்டோரி
ஒரு சிற்பியின் சுய சரிதை

மிழின் கலைப்பெருமைகளுள் ஒருவர் சிற்பி எஸ்.தனபால். ஓவியம், சிற்பம், இசை, நடனம், நடிப்பு, தோட்டக்கலை எனக் கலையின் பெருவெளியில் சாத்தியங்களை ஒரு கனவுபோல விரித்துச் சென்றவர். மேற்கத்தியக் கலைக்கோட்பாடுகளை உள்வாங்கிச் செரித்தபடியே, இந்தியச் செவ்வியல் மற்றும் நாட்டார் அழகியலின் கூறுகளைத் தமது படைப்புகளில் முன்னெடுத்தவர். தமிழின் வரலாற்று நாயகர்கள் பலருக்கும் நண்பராக விளங்கியவர். 1993-ம் ஆண்டு, ‘ஆனந்த விகடன்’ இதழில் பத்து மாதங்களாக ‘ஒரு சிற்பியின் சுயசரிதை’ என்ற தலைப்பில் தனபால் எழுதிய தொடரிலிருந்து, சிறுபகுதி மட்டும் அவரது நூற்றாண்டு நினைவின் பொருட்டு இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

ஒரு சிற்பியின் சுய சரிதை

சென்னையில் பிறந்தவர்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள். அதிலும், அந்தக் காலச் சென்னையில்!

நான் பிறந்தது 3.3.1919-ல். ஒரே எண்கள் திரும்பவும் ரிபீட் ஆகிறாற்போல் என் பிறந்த தினம் அமைந்ததில் இன்றளவும் எனக்குப் பெருமையுண்டு! அந்தக் காலச் சென்னையில் மயிலாப்பூர் என்பது சொர்க்கபுரிக்கு இணையான ஒரு நகரம்! அந்த அளவுக்குச் செல்வத்தில் செழித்த ஏரியா அது! மறக்க வேண்டாம்... அந்தக் காலத்தில்! மயிலை, கச்சேரி ரோட்டில் இருந்த எங்கள் வீட்டின் கொல்லைப்புறம், கற்பகாம்பாள் கோயில் நிலத்தையொட்டி உரசிக்கொண்டு நிற்கிற அளவுக்குப் பரந்த நிலப்பரப்பு!

அப்போதெல்லாம் மயிலாப்பூரில் இத்தனை ஜனநெரிசல் இல்லை... கடை கண்ணியும் இருந்ததில்லை... லஸ் கார்னரில் ஒரேயொரு பங்க் கடை மட்டும்தான் உண்டு. அதிலும், பத்திரிகைகள், தினப்படி சாமான்கள் போன்றவைதாம் விற்கும். மளிகைக் கடை வைத்திருந்த என் அப்பா சுப்பராயலு, அடிக்கடி டவுன் வரை சென்று கடைக்குச் சாமான்கள் வாங்கிவருவார்.டவுனிலிருந்து வருகிற ட்ராம் வண்டி எங்கள் வீட்டுக்கு முன்னால் நிற்கும். அநேக வேளைகளில் அதிலிருந்து அப்பா மட்டும்தான் இறங்குவார். கும்பல் கிடையாது! ட்ராம் போன பிறகு, இடுப்பில் கட்டியிருக்கும் சிவப்பு நிறப் பட்டு வேட்டியில் ருத்ராட்ச பார்டர் கண்ணைப் பறிக்க... ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக அப்பா ரோட்டை `க்ராஸ்’ பண்ணி நடந்துவரும்போது, அதைப் பார்ப்பதற்கே ஏதோ தெய்விகமாக இருக்கும்!

அப்பாவுக்குச் சரீரத்துக்கு ஏற்றாற்போன்ற கனமான சாரீரம்! வெண்கலக் குரலில் அவர் கூப்பிடும்போதே, மரியாதை கலந்த பக்தியோடு அவர்முன் நிற்கத் தோன்றும். வீட்டுப் பெண்கள் யாவரும் அவர் எதிரில் நின்று நான் பார்த்ததில்லை. இருப்பினும், வீடு மொத்தமும் அப்பா மீது அளவற்ற அன்பு வைத்திருந்தது. `அப்பாவுக்கு இது பிடிக்கும்’ என்று அவரைச் சுற்றியே சுழன்றது. அப்பேர்ப்பட்ட என் அப்பா, என்னுடைய எட்டாவது வயதில் காலமானார்... வீடு ஆடிப்போனது. அவர் நடத்திய மளிகைக் கடை வியாபாரத்தை அம்மாவால் சில மாதங்களுக்கு மட்டுமே தொடரமுடிந்தது. பிறகு, எங்களுக்கு இருந்த சில சொந்த வீடுகளிலிருந்து வசூலாகிய வாடகைப் பணம்தான் குடும்பத்தை நடத்த உதவியது.

எனக்கு முன்னும் பின்னுமாய் மூன்று சகோதரிகள். நான் வீட்டுக்கு ஒரே ஆண்மகன். இருந்தாலும், என்னைத் தனியாக வெளியே போகக்கூட அனுமதிக்க மாட்டார்கள். மிஞ்சி மிஞ்சிப்போனால் கோயிலுக்குப் போய்வர அனுமதி கிடைக்கும். அதுவும் எப்படி? அக்காவின் துணையோடு! மற்றபடி, என் வயசுப் பிள்ளைகள் மாதிரி கோலி விளையாடவோ, காத்தாடி விடவோ நான் செஞ்சதில்லை...

ஒரு சிற்பியின் சுய சரிதைவீட்டில் அம்மா முனியம்மா தவிர, எட்டு வயதிலேயே விதவையான அத்தை அனந்தம்மாளும் இருப்பார்... அவருக்கும் அப்பா மாதிரியே `கணீர்’ குரல்! அன்னிபெசன்ட் அம்மையார் மாதிரி திடகாத்திரமாய் இருப்பார். வீட்டில் உள்ள சுடுமண் பொம்மைகளின் தலையை எல்லாம் நான் உடைத்துவிட்டதாய் என் அக்கா என்னை அடிக்க வர, அப்போதெல்லாம் பாய்ந்து வந்து என்னை அடிகளிலிருந்து தடுத்தாண்டவர் இந்த அன்னிபெசன்ட்தான்!

பள்ளிக்கூடம் விட்டால் வீடு... வீடு விட்டால் கோயில் என்று செக்குமாடு போலச் சுழன்றுகொண்டிருந்தாலும், என்னுள் புதைந்திருந்த கலையுணர்வுக்கு இதனால் பங்கம் எதுவும் வந்துவிடவில்லை.மயிலை கோயிலின் வாகனங்களும் அவற்றில் செதுக்கியிருந்த வேலைப்பாடுகளும் என்னைப் பிரமிப்படையவைத்திருக்கின்றன. ஒருமுறை அதிகாரநந்தி வாகனத்தில் ஸ்தபதி ஒருவர் சில்வர் பேப்பர் ஒட்டி வேலை செய்துகொண்டிருக்க... அதை நாள் முழுக்க நின்று, வாய்பிளந்து வேடிக்கைபார்த்து வீட்டில் வசவு வாங்கியிருக்கிறேன்.

என் வகுப்புத் தோழன் ஒருவனின் அப்பா மரப்பொம்மைகள் செய்வார். அவரோடு உட்கார்ந்து மரத்தைக்கொண்டு பீர்க்கங்காய் செய்ததுதான் என்னுடைய முதல் கலை வெளிப்பாடு. எனக்கு வரைவதில் உள்ள ஈடுபாட்டை எனது பள்ளிக்கூடத் தலைமையாசிரியரும் பிரபல தமிழறிஞருமான சீனி வேங்கடசாமி அறிந்தபோது, ``நீ ஓவியக்கல்லூரியில் சேருடா... அதுதான் உனக்கு நல்லது” என்றார்.

`ஓவியக்கல்லூரியா... அது எங்கே இருக்கும்?! அதில் ஸீட்டு கிடைக்கணுமானா என்ன தகுதி வேண்டும்?!’ -ஒன்றும் தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன். இதற்கிடையே என் அக்காவுக்குத் திருமணமாகியது. எங்கள் வீட்டுக்கு மாப்பிள்ளையாக மாமா லோகையா வந்தார். என் ஆசையை அவரிடம் சொன்னபோது, ``அந்த காலேஜ்ல இடம் பிடிக்கணும்னா, உனக்குக் கொஞ்சமாவது வரையத் தெரியணுமே!’’ என்றார். சட்டென்று முகம் தொங்கியது எனக்கு! ``கவலைப்படாதே, நான் ஒரு இடத்துலே உன்னைக் கொண்டுபோய் விடறேன்... அங்கே நீ ஓவியம் வரையறதுக்கான அரிச்சுவடி படிச்சுக்கலாம்!” என்றார்.உற்சாகமாய் மாமாவுடன் போனேன். மாமா கொண்டுபோய் விட்ட இடம், சென்னை பிராட்வேயில் முன்பு இருந்த ரத்னா அண்ட் கோ! அது ஒரு போட்டோ ஸ்டூடியோ!

ஒரு சிற்பியின் சுய சரிதை

த்னா அண்ட் கோ போட்டோ ஸ்டூடியோவில், அந்தக் கால மகாராஜாக்களின் பிரமாண்ட ஆயில் பெயின்ட்டுகள் வாசற் பக்கமாய் மாட்டப்பட்டிருந்தன. அதைப் பார்த்துதான் நான் அங்கே ஓவியம் பயில முடியும் என்று என் மாமா நினைத்திருப்பார் போலும்!

என்னை ஏற இறங்கப் பார்த்த போட்டோ ஸ்டூடியோ முதலாளி, ஒரு போட்டோவை எடுத்து என்னிடம் கொடுத்தார். ``இதுல டச் பண்ணிக் குடு” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ``படத்துல அங்கங்கே ஓட்டை ஓட்டையா அழுக்குப் புள்ளி இருக்கில்லே... அதை டச் பண்ணு!” என்று சொல்லி பிரஷ்ஷையும் கையில் திணித்துவிட்டார் அவர். படத்தின் ஷேடுக்குத் தக்கவாறு டச் பண்ணவேண்டும் என்பது தெரியாமல் நான் கன்னாபின்னாவென்று கறுப்படித்து ஓட்டையை அடைத்தேன்.

முகம் சுளித்த முதலாளி, “பையனை வேணும்னா டார்க் ரூம்ல விட்டுப் பார்க்கலாம்! நாளைக்கு வரச் சொல்லுங்க!” என்றார் என் மாமாவிடம். ரெண்டு பேருமாய் வீடு திரும்புகையில், இருட்டறைக்குள் என்ன வேலை கொடுப்பார்களோ என்று எனக்குக் கவலையாக இருந்தது! மறுநாள் நான் வேலைக்குக் கிளம்ப வேண்டும். துணிவை வரவழைத்துக்கொண்டு மாமாவிடம் “நான் டார்க் ரூம் வேலைக்கெல்லாம் போகமாட்டேன்...அங்கெல்லாம் வரைய முடியாது!” என்றேன். மாமா ஒன்றும் சொல்லவில்லை. அடுத்து வேறொருவரிடம் கூட்டிப்போனார். அதுவும் ஒரு போட்டோ ஸ்டூடியோ! அங்கேயும் இந்த `டச் அப்’ வேலைதான் கொடுத்தார்கள். பிறகு அங்கிருந்து இன்னொரு போட்டோ ஸ்டூடியோ!

மூன்றாவது போட்டோ ஸ்டூடியோ முதலாளி லோகநாதர், சற்று சுவாரஸ்யமான மனிதர்! ஓவியம் வரையத் தெரிந்தவர். தன் கைப்பட அவர் வரைந்திருந்த ராதாகிருஷ்ணர் ஓவியம்தான் அவரது ஸ்டூடியோவில் `ஹைலைட்’டாக காட்சி தந்துகொண்டிருந்தது. இவர் எனக்கு அவ்வப்போது ஓவிய டிஸைன்கள் கொடுத்து `காப்பி’ செய்யச் சொல்வார். சில சமயங்களில் கையில் காமிரா பிடிக்கவும் வைத்திருக்கிறார். அப்படித்தான் ஒரு முறை ரெட்ஹில்ஸ் அருகே ஒரு குரூப் போட்டோ எடுக்க என்னை அனுப்பியிருந்தார். குரூப் போட்டோ எடுக்க எங்களிடம் ஆர்டர் கொடுத்தவர், குரூப்பில் கடைசியாக நின்றுகொள்ள... அவர் தலை மட்டும் போட்டோவில் `கட்’ ஆகிவிட்டது.

குரூப் போட்டோவை வாங்க வந்தபோதுதான் அவருக்கே தெரிந்தது. லோகநாதர் சற்றும் சளைக்கவில்லை! ``நீ ஏதாவது தண்ணி கிண்ணி ஊத்திக்கிட்டு ஒருமாதிரியா நின்னிருப்பே! அதான் எங்க காமிரா உன்னைப் பதிவுப் பண்ணாம விட்ருச்சு” என்றார். வந்த ஆள் சற்று வழிந்தார். என் முதலாளியின் கூற்றை அப்படியே அவர் நம்பியதுதான் இன்னும் ஆச்சர்யம்! `எப்படியாவது அந்த `குரூப்பில் என்னைச் சேர்க்க வேண்டும்...’ என்று அழுத அவரை இன்னொரு போட்டோ எடுத்து, தலையை மட்டும் ‘கட்’ செய்து பழைய குரூப் போட்டோவில் ஒட்டிக்கொடுத்து அனுப்பிவிட்டார் முதலாளி லோகநாதர்!

ஒரு சிற்பியின் சுய சரிதை

லோகநாத முதலாளியிடம் நான் சில மாதங்கள் நிலைத்து வேலை பார்த்ததற்குக் காரணம், அவரது தமாஷான குணம் மற்றும் ஓவியத் திறமைதான்! அவரிடம் வேலை பார்த்துக்கொண்டிருந்த போதுதான் எனது ஏரியாவாசியும் நண்பனுமான சி.பாலனை நான் யதேச்சையாகச் சந்திக்க நேர்ந்தது. நான் போட்டோ ஸ்டூடியோவில் வேலை பார்ப்பதைக் கேட்டதும் திகைத்துப் போனான் பாலன்! ``ஓவியம் பயிலணும்னா இது சரியான வழி இல்லேடா! கோவிந்த ராஜூ நாயக்கர்னு ஒரு ஓவியர் இருக்கார்... அவர்கிட்ட கூட்டிப்போறேன். அங்கே போய் பிராக்டீஸ் பண்ணு!’’ என்றபடி என் கண்களைத் திறந்தான்.

கோவிந்த ராஜு நாயக்கர் சென்னை ஓவியம் மற்றும் சிற்பக் கல்லூரியில் படித்தவர். அவரது அப்பா வாசுதேவ நாயக்கர் அந்தக் காலத்தில் ராமாயணப் புத்தகங்களுக்குச் சித்திரம் வரைந்தவர். கோவிந்தராஜு நாயக்கரிடம் நான் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஓவியம் பயின்றேன். அதன் விளைவாய் ஓவியக் கல்லூரியில் நுழைவதற்காகத் தகுதிப் பரீட்சை  எழுதவும் நான் அழைக்கப்பட்டேன். தகுதிப் பரீட்சை என்பது, இப்போது மாதிரி மூணு மணி நேர டெஸ்ட்டிங் மட்டுமே அல்ல. அப்போதெல்லாம் தொடர்ந்து பத்து நாள்களுக்கு எங்களை இன்டர்வியூ செய்வார்கள். அதாவது, அவர்களும் ஒருபக்கம் வேலை செய்து கொண்டிருப்பார்கள். நாங்கள் அதைப் பார்க்கவும் செய்யலாம். அதைத் தவிர, நாங்களும் பத்து நாள்கள் எங்கள் ஓவியத் திறமையை பேப்பரில் கொட்டவேண்டும்.

பத்து நாள்கள் முடிவில்தான் ரிசல்ட் வரும். அதன்படி, நான் முதல் கட்டத்தில் வெற்றி பெற, புகழ்பெற்ற அந்த ஓவியக் கல்லூரி என்னை வாரி அணைத்துக் கொண்டது. நான் உள்ளே நுழைந்தபோது, கல்லூரியின் பிரின்ஸிபலாக இருந்தவர் இந்தியாவின் புகழ்பெற்ற சிற்பிகளுள் ஒருவரான ராய் சௌத்ரி. அவர் சென்னை ஓவியக்கல்லூரிக்கு முதல்வராக வரக் காரணமாக இருந்தவர் சென்னையில் வசித்த ஒரு மிகப்பெரும் கலாரசிகர். 

ஒரு சிற்பியின் சுய சரிதை

அந்தக் காலத்தில் சென்னைப் பட்டணத்துக்கு வருபவர்களில் அநேகம் பேருக்கு லாட்ஜில் தங்கும் அளவுக்குப் பண வசதியெல்லாம் இருக்காது. பெரும்பாலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே இருக்கும் ‘ராமசாமி முதலியார் சத்திரம்’ மாதிரியான இடங்களில்தாம் தங்குவார்கள். அப்போது ஏழைகளின் இலவசக் கூரை அது! அந்தப் பொதுச் சத்திரத்தின் சொந்தக்காரர் ராமசாமி முதலியார், பெரிய வியாபாரி! ராமசாமி முதலியாருக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்த செல்வாக்கு காரணமாக, முதல் இந்தியராக ராய் சௌத்ரி `பிரின்ஸிபல்’ பதவியை ஏற்றார்.

ல்லூரி முதல்வராக ராய் சௌத்ரி பதவியேற்றதுமே, ஓவியத் துறைக்கு ஓர் அற்புதமான வசந்தகாலம் ஆரம்பித்துவிட்டது! ஜி.டி.பால்ராஜ், ஞானாயுதம் போன்றோர் ஆங்கிலேயர்கள் ஸ்டைலில் இயற்கை ஓவியங்களாக வரைந்து தள்ளுவார்கள். இவர்களுக்கு மத்தியில் சையத் அகமது என்ற மாணவர் ஒருவர் கொஞ்சம் வித்தியாசமாய் இந்திய பாணியில் அஜந்தா கலர்களை வைத்தே அதிகமாய் வரைவார். இவர்கள் எல்லாம் எங்கள் சீனியர் மாணவர்கள். இவர்களது ஓவியங்களை அடிக்கடி பிரிட்டிஷ்காரர்கள் வந்து விலைகொடுத்து வாங்கிப் போவார்கள். எங்களுக்கும் கண்களில் கனவு விரியும்.

மல்யுத்த வீரரான ராய் சௌத்ரிக்கு நல்ல ஆஜானுபாகுவான தேகம். பேன்ட்டில் ஷர்ட்டை இன்சர்ட் செய்துகொண்டு சிகரெட் புகைத்தபடி ஸ்டைலாய் நடந்துவருவார். எங்களுக்கும் மல்யுத்த பயிற்சி அளிக்கும் நோக்கில், கல்லூரி வளாகத்திலேயே மல்யுத்தக் களமும் அமைத்துக் கொடுத்த ஒரே பிரின்ஸிபல் அவர்தான்!

நான் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்த சமயம்...

ஆசிரியர், `முதல் ஓவியப் பயிற்சி’ என்ற புத்தகத்திலிருந்து ஒரு கிளிப்பிங்கை எடுத்து, கரும்பலகையில் குத்தி இருந்தார்! நாங்களெல்லாம் அதை எங்கள் பேப்பரில் காப்பி செய்துகொண்டிருந்தபோது, முதல்வர் ராய் சௌத்ரி அந்தப் பக்கமாய் வந்தார். ``என்னது இது? புத்தகத்தைப் பார்த்தா வரையக் கற்றுக் கொடுப்பது? இது தப்பான முறையாயிற்றே! உடனடியாக மாணவர்களுக்கு மாடல்களை வரவழைத்துத் தாருங்கள்!’’ என்றார் ராய் சௌத்ரி. ``ஸாரி சார்... அதுக்கெல்லாம் கல்லூரியில் நிதி கிடையாது!’’

``நிதி இல்லாவிட்டால் என்ன? நாமெல்லாம் மாணவர்களுக்கு மாடல்களாக நிற்போம்! பரஸ்பரம் மாணவர்களேகூட அந்த மாதிரி மாடலிங் முயற்சியைச் செய்து பார்க்கலாமே!’’ என்றார் ராய் சௌத்ரி திட்டவட்டமாய்! ராய் சௌத்ரியின் புண்ணியத்தில் நாங்கள் ஓசி மாடல்களை வைத்துக் கொஞ்சகாலம் ஓவியம் பயின்றோம். ஒரே மாதத்துக்குள் முதலாண்டு மாணவர்களும் மாடல்கள் வைத்துக்கொண்டு பணிபுரிய அரசு நிதி ஒதுக்கியது. எல்லாம் ராய் சௌத்ரி செய்த சிபாரிசுதான்!

கல்லூரியில் சேர்ந்த புதிதில், நானும் என் நண்பன் சி.பாலனும் சீனியர்களின் வகுப்புகளுக்குச் சென்று அவர்களது படைப்புகளைக் கண்டு வாய்பிளந்து நின்றிருக்கிறோம். எங்களுக்கும் அவர்களைப் போல் வரைவதற்கு ஆசை வந்தது. கல்லூரி நேரம் முடிந்ததும் பரபரப்பான மூர்மார்கெட் ஏரியா முன் பேப்பரும் கையுமாக நின்றுவிடுவோம். மனிதர்களின் அசைவையும் நடமாட்டத்தையும் அவ்வளவு சீக்கிரத்தில் வரைந்துவிட முடியவில்லை! அதற்குப் பயிற்சி நிறைய தேவையிருந்தது. மூர்மார்கெட் தவிர, கல்லூரி அருகேயிருந்த `ஜூ’வுக்குத் தினமும் போவேன் நான்!

ஒரு நாள்... துள்ளித் திரிந்த மானை வரைய நினைத்திருந்தேன். கொம்பு போடுவதற்கு முன்பே மான் `டேக்கா’ காட்டிவிட்டது. இருந்தும் நான் விடாமல் இரண்டு நாள்கள் அங்கேயே பழியாய்க் கிடந்து, அவ்வப்போது எனக்குக் கிட்டிய மான் தரிசனத்தை வைத்து ஒருமாதிரியாய் வரைந்து முடித்தேன்.  ராய் சௌத்ரியிடம் அதைக் காட்டியபோது, விழிவிரித்துப் பாராட்டினார். மூர் மார்க்கெட்டும் ஜூவும் எனக்கு வேகமாய் வரைகிற அனுபவம் கொடுத்ததாய்ச் சொன்னார். அவர் பாராட்டில் திக்குமுக்காடிப்போனேன். ராய் சௌத்ரியிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக, தினந்தோறும் காலையில் அவர் குவார்ட்டர்ஸ் முன்பு ஒரு புதிய பெயின்டிங்கோடு நிற்பேன். கொஞ்ச நாள்களில் என் `ஸ்பீட்’ பற்றிக் கல்லூரி மொத்தமும் பேசத் தொடங்கியது.

மெல்ல மெல்ல ராய் சௌத்ரி, என்பால் அன்பாய்க் கரைந்தார். கல்லூரி நேரம் முடிந்ததும் அவரது அலுவலக அறைக்குப் பக்கத்தில் நானும் எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்பேன். அவருக்கு குவார்ட்டர்ஸிலிருந்து சூடாக `சாயா’ வரும். அந்த டீ எனக்கும் அனுப்பப்படும்.எந்த மாணவனுக்காவது மார்க் விஷயத்தில் ஆசிரியர் யாரேனும் அநீதி இழைத்துவிட்டால் போதும்! அந்த மாணவன் நேராய் என்னிடம்தான் வருவான். நான் ராய் சௌத்ரியின் முன் பிரச்னையை வைக்க... அவர் பாதிக்கப்பட்ட மாணவனின் பரீட்சை பேப்பர்களை வரவழைத்துப் பார்ப்பார். நியாயமாகச் செய்யவேண்டியதைச் செய்வார். பிற்பாடு சம்பந்தப்பட்ட ஆசிரியரையும் அழைத்து நாலு வார்த்தை சொல்வார். அந்த அளவுக்கு மாணவர்களை மதித்த... அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொண்ட முதல்வர் ராய் சௌத்ரி!

அவர் சிற்பங்கள் செய்யும்போது என்னைக் கூடவே வைத்திருப்பார். நான் சிற்பக் கலையில் அவருக்குச் செய்கிற உதவிகளைப் பார்த்துவிட்டு ஒரு நாள் அவர் என்னிடம் சொன்னார், “தனபால், நீ பேசாமல் சிற்பக்கலை வகுப்புக்கு மாறிவிடேன்!” என்று. நான் இதை எதிர்பாராததால், சற்றுத் திடுக்கிட்டுத்தான் போனேன்! மற்றவர்களிடம் கருத்து கேட்டபோது, ``இதென்ன பைத்தியக்காரத்தனம்?! ஓவியக்கலை வகுப்பு முடிய இன்னும் ஒரே வருடம்தான் இருக்கிறது. அதற்குள் எதற்காக இந்த அவசர முடிவு?!” என்றார்கள்.

``மேலும் சிற்பக்கலையைப் படித்துதான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை... பழக்கத்திலும் தெரிந்துகொள்ள முடியும். ஓவியக் கலையிலிருந்து திடீரென்று மாறினால், அதில் ஏற்கெனவே இரண்டு வருடம் பயின்றது விரயமாகிப்போகும்... டிப்ளோமாவைக் கையில் வாங்க முடியாது! சிற்பக்கலையில் டிப்ளோமா பெற காலதாமதமாகும்!” என்பதுபோன்ற பல அறிவுரைகளையும் எனக்கு வழங்கினார்கள்.எனக்கு அவை நல்லதாகவே பட்டதால், ராய் சௌத்ரியிடம் `ஸாரி’ சொல்லி விட்டேன். ராய் சௌத்ரி, என் மறுப்பை ஒரு புன்முறுவலோடு ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து அவரது சிற்ப வேலைகளில் உதவிவந்தேன். 

ஒரு சிற்பியின் சுய சரிதை

எனக்கு ஓவியத்திலும் சிற்பத்திலும் இருந்த ஆசை போன்றே இசையிலும் நாட்டியத்திலும் ஆர்வம் இருந்தது. இசை வகுப்புகளில் சேர்ந்து பயில்வது முடியாமல் போனாலும், எங்கள் வீட்டுப் பெண்கள் இசை பயின்றபோது, அங்கேயே பழியாய் உட்கார்ந்திருப்பது என் வழக்கம்! அந்தக் கேள்வி ஞானத்திலேயே என்னால் வர்ணம் வரை பாடமுடிந்தது! பெரிய பெரிய வித்வான்களின் கச்சேரிகளுக்குச் சென்று, அவர்கள் பாடுவதைக் கேட்டால் இசையறிவு நன்றாக வளரும்... அதிலும், அப்போது எனக்குப் பிடித்தமான இசைக்கலைஞர் - அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்!

அந்தக் காலத்தில் டேப்ரிக்கார்டர், காஸெட்டுகள் வசதியெல்லாம் கிடையாது. வெறும் கிராமபோன் இசைத்தட்டுகள்தாம்! இப்போது மாதிரி வீட்டில் குழந்தைகள் ரூமுக்கென்றுகூட தனி டி.வி., டேப்ரிக்கார்டர் என்றெல்லாம் தொடர்ந்து அலறிக் கொண்டிருந்தாலும், அதில் தலையிடாத பெற்றோர் என்பது மாதிரி சூழலெல்லாம் கிடையாது! வீட்டில் நாம் இஷ்டப்படும் நேரத்தில் கிராமபோன் தட்டில் பாட்டுக் கேட்பதெல்லாம்... அது பக்தி மார்க்கத்தைச் சேர்ந்த கர்னாடக சங்கீதமே ஆனாலும் சாத்தியமல்ல. அப்படியிருக்கும்போது, வீட்டில் இசைக் கச்சேரிக்குப் போவதற்குக் காசு கேட்க முடியுமா?! ஆனாலும் ஆசை யாரை விட்டது?!..

அரியக்குடியின் கச்சேரிக்குப் போவதற்கென நாங்கள் நண்பர்கள் காசு திரட்டுவோம்... எப்படி?! நகரத்துச் சுவர்களில் இரவு முழுக்க வேலைசெய்து விளம்பரங்களுக்கு வர்ணம் தீட்டியும் எழுதியும் பிழைக்கும் விளம்பர ஆர்ட்டிஸ்டுகளிடம் வேலைகேட்போம்.கலைக்கல்லூரி இளைஞர்கள் என்பதால் அவர்களும் தட்டாமல் கொடுப்பார்கள். சின்னச் சின்னதாய் வரைவது... எழுதுவது மாதிரியான வேலைகளை எங்கள் மீது சுமத்துவார்கள்! கண் விழித்து வேலைசெய்ய டீ, பன் உபசரிப்பெல்லாம் கிடைக்கும். காலையில் நாலணா காசு கொடுப்பார்கள்.  இப்படி நாலைந்து நாட்களுக்குத் தொடர்ந்து ராக்கண் முழித்தால் போதும்..! அரியக்குடியாரின் கச்சேரி அரங்கினுள், அமோகமாய் நுழைந்து காதுக்கினிய சங்கீதம் பெறலாம்! அதுதான் அந்தக் காலத்தின் மகிமை!

இசை தவிர நாட்டியத்திலும் எனக்கு இன்ட்ரெஸ்ட் வந்தது. அதற்குக் காரணம், பிரபல நாட்டியக்காரர் உதய்சங்கர் தன் குழுவுடன் மவுன்ட் ரோடு தியேட்டர் ஒன்றில் (இப்போதிருக்கும் அண்ணா சிலை எதிரே அப்போது ஒரு தியேட்டர் இருந்தது) நடத்திய நிகழ்ச்சி! இதன் பின், பெங்களூரிலிருந்து ராம் கோபால் என்கிற பர்மாக்காரர் ஒருவர் வந்து சென்னையில் நாட்டிய நிகழ்ச்சி நடத்தியதையும் நான் பார்க்க நேர்ந்தது. தவிர, சென்னையைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் பரதநாட்டியத்தையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது! இதையெல்லாம் பார்த்த பிறகு, `அட! ஆண்கள்கூட ஆடலாம் போலிருக்கிறதே!’ என்கிற நம்பிக்கை எனக்கு வந்தது. நான் பரதநாட்டியம் கற்க முடிவு செய்தேன்.

ரதநாட்டியத்துக்கான ‘குரு’ குறித்து விசாரித்தபோது, காட்டுமன்னார் கோவில் முத்துசாமி நட்டுவனார் பற்றி என்னிடம் சிலர் சொன்னார்கள். அவருக்கு வயது எழுபது, நல்ல திடகாத்திரமாய் இருப்பார்.சட்டை எதுவும் போட்டிருக்கமாட்டார். கழுத்தில் உத்திராட்ச மாலை... இடுப்பில் வேட்டி... அதற்கு மேல் ஒரு துண்டு! அவ்வளவுதான் அவரது உடை! நாட்டியம் சொல்லிக் கொடுப்பதில் மன்னர்! அப்பேர்பட்ட திறமைசாலி, சென்னை ஜார்ஜ் டவுனில் நாட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் ஒரு ரூம் எடுத்துத் தங்கியிருந்தார்.

ஒரு சிற்பியின் சுய சரிதை

அவரிடம் சென்றபோது, என் ஆர்வத்தைக் கண்டு, பரதநாட்டியத்தில் தில்லானாவுக்கு முந்தைய பன்னிரண்டு அடவுகளைச் சொல்லிக்கொடுத்தார். பரதநாட்டியத்துக்கு அடிப்படையான விஷயங்கள் கைவந்ததும், கறுத்த மேகம் மாதிரி என் மனதில் குடிகொண்டிருந்த நாட்டிய மோகம், ‘ஜோ’ வென்ற ஆக்ரோஷத்தோடு நாட்டிய வெறியாய்க் கிளர்ந்து, மழையாய்ப் பொழிய ஆசைப்பட்டது.

அந்தக் காலத்தில் நடராஜன் - சகுந்தலா என்ற பிரபலமான ஒரு நாட்டியத் தம்பதி. தங்களது நடனத்தால் சென்னை நாட்டிய மேடைகளைக் கலக்கிக்கொண்டி ருந்தார்கள். அவர்கள் குழுவில் நான் மூன்றாமவனாகச் சேர்த்துக் கொள்ளப் பட்டேன். அவர்களோடு சேர்ந்து நான் அரங்கேறிய ‘பெரியாழ்வார்’, ‘புத்தர்’ போன்ற நாட்டிய நாடகங்களைப் பற்றி ஊர் மொத்தமும் பேசியிருக்கிறது. வெறுமனே நடனத்தில் பங்குகொண்டு நான் ஆடிவிட்டு வருவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. நாட்டிய நாடகத்துக்குத் தேவையான கிரீடம் போன்ற நகைகள், அலங்காரப் புராதன உடைகள் போன்றவற்றிலும் அதிகம் கவனம் செலுத்தினேன். அவற்றை அழகான முறையில் தயாரித்துத் தரும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.

அதிலும் ‘பெரியாழ்வார்’ நாடகத்துக்கென நான் செய்த வேலை இன்றுவரை என் நினைவில் உண்டு! சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்று அங்குள்ள கடவுள் விக்கிரகங்களின் கிரீடங்கள் மற்றும் ஆபரணங்களை உன்னிப்பாகப் பல மணி நேரம் நின்று கவனித்தேன். இரண்டு நாட்களுக்குள் அந்த நகைகளின் டிசைன்களைத் தத்ரூபமாகப் பேப்பரில் கொட்ட முடிந்தது. பிறகு அவற்றை எடுத்துக்கொண்டு எங்கள் கல்லூரி உலோகத்துறை ஆசிரியர் சி.எம்.சுந்தரம் ஆசாரியிடம் கொடுத்தேன். அவர் அவற்றைச் சீப்பான உலோகத்தில் கனகச்சிதமாய்ச் செய்து, தங்க நிற பெயின்ட் அடித்தார். பார்த்தவர்களெல்லாம் அந்த நகைகள் ‘கவரிங்’ என்று சட்டென்று நம்ப மறுத்தார்கள். அத்தனை நுணுக்கமாவும் கலைநயத்தோடும் அவை செய்யப்பட்டிருந்தன.

ஒரு சிற்பியின் சுய சரிதை

புத்தர் நாட்டிய நாடகத்தில், எனக்குத்தான் புத்தர் வேடம்! போதி மரத்தடியில் புத்தர் தவமிருக்கும் காட்சி. புகழ்பெற்ற சாரநாத் புத்தா போஸில் இருக்கும். அந்த நாடகத்திலும் புத்த பீடம். பின்னால் ஒளிவட்டம் மாதிரியான சகல பொறுப்புகளும் என்னிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஓவியக் கண்ணோட்டம் இருந்ததால், எல்லாவற்றையுமே என்னால் சுலபமாகச் செய்யமுடிந்தது. நடராஜன் - சகுந்தலா தம்பதி என்னை விளம்பரப் படுத்தியதுகூட ‘சித்திரம் தனபால்’ என்ற பெயரில்தான்! எங்களது புத்தரும் பெரியாழ்வாரும் அன்று அரங்கேறாத மேடைகளே இல்லை எனும் அளவுக்கு இருந்தது.

‘ஆனந்த விகடன்’ தவிரவும், முன்பு ‘நாரதர்’ என்ற பத்திரிகையை அமரர் எஸ்.எஸ்.வாசன் நடத்திக்கொண்டிருந்தார். ‘நாரதர்’ பத்திரிகையின் பொறுப்பை சீனிவாச ராவ் என்பவர் கவனித்துக் கொண்டிருந்தார். சீனிவாச ராவ் தனது குழந்தையின் முதலாவது பிறந்தநாள் வைபவத்தைக் கொண்டாடுவதற்கு இடம் தேடி அலைந்துகொண்டிருந்தபோது, ஜெமினி ஸ்டூடியோவிலேயே அந்த விழாவை விமரிசையாக நடத்த வசதிசெய்து கொடுத்தார் வாசன். அந்த விழாவில் ஓர் அம்சமாக, மாலை நேரத்தில் எங்கள் புத்தர் நாடகம் அரங்கேறியது. அதில் புத்தராக வந்த என்னைப்பார்த்து “அது சிலையா... அல்லது ஆளா!?’’ என்று சந்தேகமாக கேட்டிருக்கிறார் வாசன். “சிலை இல்லை... ஆள்தான்’ என்று அவரிடம் சொல்லப் பட்டபோது “பலே! அசத்துறாங்கய்யா” என்றாராம்!

“வாசன் சாரையே அப்படிச் சொல்ல வச்ச நீ பெரிய ஆள்தான்யா!” என்றார் சீனிவாச ராவ் அன்றைய நிகழ்ச்சி முடிவில்.

இன்னொரு முறை ‘பெரியாழ்வார்’ நாடகம் பார்க்க அமரர் கல்கி வந்திருந்தார். எங்களை வெகுவாய்ப் பாராட்டிவிட்டு போனவர், உதவியாட்கள் மூலமாக இரண்டொரு நாட்களில் எங்களது நாடகத்தின் புகைப்படம் கேட்டு வாங்கிக்கொண்டார். நாங்கள் எதிர்பாராத வகையில் எங்கள் நடன ட்ரூப்பை அட்டையிலே வெளியிட்டுச் செய்தி போட்டிருந்தார். அந்த ‘கவர் ஸ்டோரி’ எனது திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வெளியாகியதால், மாப்பிள்ளை கிண்டலில் அதிகமாக மாட்டிக்கொண்டது எனது நடனம்தான். எனது நடன ஆர்வம் பரதநாட்டியத்தோடு நின்றுவிடவில்லை...

ருமுறை பிரபல டைரக்டர் கே.சுப்பிரமணியம் தனது ‘நர்த்தன முரளி’  படத்துக்காக இந்தியாவின் அனைத்து மூலைகளிலிருந்தும் பல்வேறு விதமான நடன ஆசிரியர்களை சென்னைக்கு வரவழைத்திருந்தார். படத்தின் பொருட்டு அவர்களெல்லாம் சில காலம் சென்னையிலேயே தங்கியிருந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் கதகளி குமார்!

கதகளி நடனம் கற்க முயன்று அவரிடம் நான் சென்றபோது, அங்கே கதக் நடனமணி போலோநாத்தை நான் சந்தித்தேன். அவரும் கதகளி கற்க குமாரிடம் வந்திருந்தார்.கதகளி குமாரிடம் கதகளியும் கூடவே போனஸாக போலோநாத்திடம் ‘கதக்’க்கும் கற்ற நான், மீனவன் டான்ஸில்தான் பெரிதும் புகழ்பெற்று விளங்கினேன். மீனவன் டான்ஸின் அரிச்சுவடியை நான் கற்றதென்னவோ கதகளி குமாரிடம்தான். இருப்பினும் அவரை அப்படியே காப்பியடித்து வாழ்வதில் எனக்கு விருப்பம் இருக்கவில்லை. ஆட ஆசைப்பட்ட முதல் மனிதன் எப்படியும் இயற்கையிட மிருந்துதானே அதைக் கற்றிருப்பான் என்கிற எண்ணத்தில், காலை வேளைகளில் நான் கடற்கரைக்குப் போய் உட்கார்ந்
திருப்பேன்! அலைகளின் ஆர்ப்பரிப்பும் படகுகளின் அசைவும் அழகான நர்த்தனமாய் என் மனதில் பதியும். இயற்கை தந்த இன்ஸ்பிரேஷனோடு மேடையில் மீனவனாய் ஆடும்போது, மக்கள் அதைப் பெரிதும் ரசித்தார்கள்! இதன் பின், அரசாங்க கலைவிழாக்கள் எங்கே நடந்தாலும் அதில் என்னுடைய மீனவன் டான்ஸும் ஒரு முக்கிய அயிட்டமாகச் சேர்த்துக்கொள்ளளப் பட்டது!

இதற்கிடையே சிறு பிரச்னை ஒன்றின் காரணமாக, நடராஜன் - சகுந்தலா தம்பதியின் ட்ரூப்பிலிருந்து நான் பிரிந்துவர நேர்ந்தது. அப்படி அங்கிருந்து வந்தபிறகு,  ‘மயிலை ரசிக ரஞ்சனி சபா’வில் நான்கு நாட்கள் நடந்த  கலைவிழா ஒன்றில், நான் எனது தனிப்பட்ட ட்ரூப்புடன் மேடையேறினேன். எங்கள் ட்ரூப்பில், அப்போது மூன்று அயிட்டங்கள் முக்கியமானவை! புத்தர், இயேசு கிறிஸ்து மற்றும் சிவதாண்டவம்! அப்போது, திருக்கழுக்குன்றம் டி.பட்டம்மாள் என்ற பிரபல நர்த்தகியும் எங்கள் ட்ரூப்பில் ஒருவர். ட்ரூப்பின் இசையமைப்பாளர் கேப்ரியல், வித்தியாசமான முறையில் இசைக்கருவிகளைக் கையாள்வார்! ரம்பத்தை வளைத்துப்பிடித்து அதில் வயலின் வில்லைச் செலுத்தி வாசிப்பார். ஜலதரங்கம் மாதிரி தபேலாதரங்கம் என்று ஒன்று உண்டு. அதன்படி, ஏழு தபேலாக்களைச் சுற்றிலும்வைத்து வாசிக்க பயங்கரத் தேர்ச்சி வேண்டும்... அதில் கேப்ரியல் கில்லாடி! இப்படி வல்லவர்களும் நல்லவர்களும் இணைந்த டீம் அது. புத்தர் நாடகத்தில் நாங்கள் செய்திருந்த சில காட்சியமைப்புகள் பற்றிப் பல பத்திரிகைகளில் குறிப்பிட்டிருந்தார்கள். அதாவது, இறந்த ஒருவரின் உடலை பாடையில்வைத்து இடுகாட்டுக்குத் தூக்கிச் செல்வதை இளைய பருவத்தில் ‘சித்தார்த்தா’வாக வரும் புத்தர் பார்க்க நேரிடுகிறது அல்லவா? அந்தக் காட்சியில் அருவருப்பு வராமல் இருக்க, பிணத்தை மேடைக்குப் பின்புறம் எடுத்துச்செல்ல வைத்தோம். அதை மேடை ஸ்க்ரீன் ஒன்றில் நிழலாய் மட்டுமே தெரியும்படி ‘லைட்டிங்’ செய்தோம். இதற்குப் பிரமாத வரவேற்பு! இயேசு கிறிஸ்து நாட்டிய நாடகத்திலும் அப்படிச் சில நிழல் காட்சிகளை அமைத்திருந்தோம். இந்த நாட்டிய நாடகங்களில், என்னோடு நடித்தவர்களில் பிரபல நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவும் ஒருவர்!

ஆங்..! சொல்ல மறந்தேனே! எனது நாட்டியத் திறனால் ஒருமுறை சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அது, ‘சினிமா உலகம்’ என்ற பத்திரிகையை நடத்திவந்த சினிமா தயாரிப்பாளர், பி.எஸ்.செட்டியாரிடமிருந்து வந்த அழைப்பு! கண்ணா ஃபிலிம்ஸார் எடுத்த ‘திருமழிசை ஆழ்வார்’ என்ற அந்தப் படத்தில் ஆழ்வாருக்கு ஒரே சமயத்தில் கடவுள் கிருஷ்ணராகவும் சிவனாகவும் காட்சி தருவார்! வைணவமும் சைவமும் ஒன்றுதானோ என்று ஆழ்வாரை எண்ணவைக்கும் அந்த ஸீனில் நான் அந்த இரு கடவுளர்களாகவும் நடித்தேன்.சிவனாக சிவதாண்டவமும் ஆடியிருக்கிறேன்.

பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதலில் நான் பார்த்தது பாண்டிச்சேரியில்தான். கவிஞருக்கு நல்ல கம்பீரமான தோற்றம்! முகத்துக்கு ஏற்ற கச்சிதமான மீசை! நெஞ்சை நிமிர்த்தி அவர் நடக்கும்போதும் லேசாய் மீசையைத் தடவியபடி கால்மீது கால்போட்டு அவர் உட்காரும் ஸ்டைலிலும் யாருக்குமே அவரை மரியாதையாக கும்பிடத் தோன்றும்.

ஒரு சிற்பியின் சுய சரிதை

கவிஞருக்கு ஓவியத்தில் நிரம்ப ஆர்வம் இருந்தது. “இது என்ன? அது என்ன?” என்றுக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் ஆவல் இருந்தது. ஓவியர்களிடத்தில் மிகுந்த அபிமானமும் இருந்தது. என்னிடம் ஒருநாள், “நம் புத்தகம் ஒன்றின் அட்டைக்கு என் படம் வேண்டும் என்கிறார்கள். போட்டோக்கள் கொடுத்து எனக்கு அலுத்துவிட்டது! நீ என்னை வரைந்து கொடு! அதையே உபயோகிக்கச் சொல்கிறேன்!” என்றார். நான் சொன்னேன்... “ஆளை அப்படியே அச்சாய் வரைகிற ஸ்கெட்ச் ஆர்ட்டில் என்னைவிடக் கைதேர்ந்த ஓவியர் ஒருவர் இருக்கிறார். அவரைவிட்டு வரையச் சொல்கிறேன். அசந்துவிடுவீர்கள்!” என்றேன். “உன் இஷ்டம்போல் செய்!” என்றார். நான், ஓவியர் ஹெச்.வி.ராம்கோபாலை அனுப்பிவைத்தேன். அந்தக் காலத்தில் மிகப் பிரபலமாய் இருந்த ‘சுதந்திரா’ பத்திரிகையில் ராம்கோபாலின் கைவண்ணத்தில்தான் தலைவர்களின் முகங்கள் மலரும்! அப்பேர்பட்டவர், பாரதிதாசனைப் பலரும் பாராட்டும் வகையில் வரைந்திருந்தார்.

இன்னொரு சந்தர்ப்பத்தில், பாவேந்தரின் சிலையைச் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சென்னையில் ஒட்டுமொத்தமாக 15 நாட்கள் வரையிலும் சிலைக்காகப் போஸ் கொடுப்பதாகச் சொன்னார்... செய்தார்! தமிழ்ச் சமுதாயத்தின் புரட்சிக்கவி ஒருவரின் சிலையை நான் வடித்ததற்காக ஒரு சிற்பியாய் நின்று பெருமைப்பட்டேன்.

பாவேந்தரைச் சிலையாய் வடித்தது போலவே, காமராஜர், ராதா கிருஷ்ணன், பெரியார் போன்றவர்களையும் வடித்திருக்கிறேன். என் கண்ணெதிரிலே... கைக்கெட்டும் தூரத்தில் பொறுமையாய் அவர்கள் போஸ் கொடுத்து அமர்ந்திருக்க... நான் சிற்பியாய்ச் சிலிர்த்துக் கொண்டு புறப்பட்டிருக்கிறேன். முதலில், ராதா கிருஷ்ணனை சிலையாய் வடிக்க எனக்குக் கிடைத்த வாய்ப்பு பற்றிச் சொல்கிறேன்!

ராதா கிருஷ்ணன் அப்போது நமது நாட்டின் உப ஜனாதிபதி. “உப ஜனாதிபதி சென்னையில் மூன்று நாட்களே தங்குவார்... குறுகிய நாட்களில் சிற்பம் செய்ய முடியுமானால் பணியைத் துவக்கலாம்” என்று எனக்குச் சொல்லப்பட்டது. “ஒரு நாளில் அதிகபட்சம் ஒன்றரை மணி நேரத்தை மட்டுமே அவரால் சிற்ப போஸுக்காக ஒதுக்கமுடியும்” என்று சொன்னார்கள். நான் அப்போதைக்கு ஒப்புக்கொண்டு தலையாட்டிவிட்டேனே தவிர, அவ்வளவு குறுகிய நேரத்தில் என்னால் அவரைச் சரியாக வடிவமைக்க முடியுமா?! என்ற கேள்வி எனக்குள் எழாமல் இல்லை. ‘அட, முயற்சித்துதான் பார்ப்போமே!’ என்று எண்ணிதான் கோதாவில் இறங்கினேன்.

எனக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுக்கப்பட்ட அன்றைய தினத்தில், சோதனையாய் உப ஜனாதிபதியின் உடலுக்குச் சுகமில்லாமல் போயிற்று. நானும் எனது உதவியாளர் ஹமீதும் ஏகப்பட்ட உபகரணங்களுடன் போய் இறங்கியதுமே... எங்களுக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது. “நாளை அவரது உடலில் முன்னேற்றம் தெரிந்தால் சொல்லி அனுப்புகிறோம்... இப்போதைக்கு மன்னியுங்கள்” என்று பணிவாய்ச் சொன்னார்கள் ராதா கிருஷ்ணன் வீட்டினர். அனுமதி கிடைத்த மூன்றே நாட்களிலும் ஒரு நாளை இழக்கவும் எனக்கு மனசில்லை...

“அவர் படுத்தபடியே இருக்கட்டும். சிறிது நேரம் அருகிலிருந்து நெருக்கமாய்ப் பார்க்கவாவது அனுமதி கொடுங்கள்” என்றேன் நான். அவரை உற்றுப் பார்த்து மனசுக்குள்ளாவது சில அளவுக் கணக்குகளை எடுத்துக்கொள்ளலாம் என்பதுதான் என் எண்ணம்! உள்ளே போய் அனுமதி கேட்டுவந்த பிறகு, என்னை ராதா கிருஷ்ணனின் பெட் ரூமுக்கு அழைத்துச் சென்றார்கள். ராதா கிருஷ்ணன் கிட்டத்தட்ட மூக்கால் பேசினார்.சளியோடும் காய்ச்சலும் சேர்த்துக்கொள்ள, படுக்கையில் ரெஸ்ட் எடுக்கும்படி டாக்டர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். “ஸாரி! என்னால் எழுந்திருக்கவே முடியாது!” என்றார் அமைதியாய்ப் புன்னகைத்தபடி. “அதனாலென்ன?! நாங்கள் இன்று எடுக்கப்போவது ‘ஸ்கெலிட்டன்தான்’!” என்றேன் நான். அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

ஸ்கெலிட்டன் வொர்க் என்பது, சிற்பத்தின் அடிப்படை ஆரம்ப வேலை! அதாவது, ஒரு முகத்தின் நீள அகலங்களைக் குறித்துக்கொண்டு, நாசி துவாரம், கண்கள், புருவ அமைப்பு, வாய், தாடை போன்று மொத்த முகத்தின் அமைப்பையும் கணக்கிட்டு, களிமண்ணை அந்தந்த இடத்திற்கேற்ப வாகாய் வளைத்து நீட்டி அமைக்கும் வித்தை! இதற்கே அன்றைக்கு ஒரு மணி நேரம் பிடித்தது!

“நாளை நீங்கள் ட்ராயிங் ஹாலுக்கு வந்து அமர வேண்டும்... அப்போதுதான் இந்த ஸ்கெலிட்டனை நேர்த்திசெய்ய முடியும்!” என்று நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மறுநாள் 40 நிமிடங்களுக்கு அவர் வந்தமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டி ருந்தார்.உப ஜனாதிபதி என்பதால், அவர் முகத்தின்மீது ஸ்கேல் வைத்தெல்லாம் கணக்கிட எனக்குத் தயக்கமாக இருந்தது.வங்காளத்து சாந்தி நிகேதனின் சிற்பக் கலை ஆசிரியர் ராம்கிங்கர்பேஜ் (மலைவாசி இன சிற்பி) மாதிரி கண்ணால் பார்த்தே அளவுகளை நிர்ணயித்துக்கொண்டேன்.

மூன்றாம் நாள்... அன்றும் 40 நிமிடங்கள் கிடைத்தன. களிமண்ணால் ஆன சிலையை பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் முறைக்கு மாற்றியமைத்தேன்! பின்னர், வீட்டுக்கு வந்து சிலைக்கான பீடம் அமைத்தேன்.
இப்படி 1961-ல் கிட்டத்தட்ட இரண்டே கால் மணி நேரத்திற்குள் நான் செய்தது ராதா கிருஷ்ணன் சிலை!

காமராஜரைச் சிலையாக வடிக்க நினைத்தபோது, அவருடைய குருவும் எனக்குத் திருமணம் செய்துவைத்தவருமான நித்தியானந்த அடிகள் உதவிக்கு வந்தார். என்னை காமராஜருக்கு அறிமுகம் செய்துவைத்தார். “அதுக்கென்ன தாராளமா செய்துட்டுப் போகட்டுமே” என்றார் காமராஜர். பிறகு அவரைச் சந்திக்கும்போது, “சில பெரிய தலைவர்களின் சிலைகள் அவ்வளவு நன்றாக வடிவமைக்கப் படவில்லையே... ஏன்?” என்று என்னிடம் கேட்டார் காமராஜர். “அரசியல்வாதிகள் படைப்பாளிகள் அல்ல... ஒப்புக் கொள்கிறேன்! ஆனால், இரண்டாம் மூன்றாம் தரச் சிலைகளைக் கட்டுப்படுத்தும் செல்வாக்கு என்னவோ அவர்களி டத்தில்தானே உள்ளது. நன்றாக இல்லாத சிலைகளை உங்களைப்போன்ற அரசியல்வாதிகள் ஏன் அனுமதிக்க வேண்டும்!” என்று அவரிடம் கேட்டேன்.

அவர் சற்றே தர்மசங்கடமாகச் சிரித்தார். “நீங்கள் நாளையிலிருந்து உங்கள் சிற்ப வேலைகளைத் துவங்கலாம்” என்றார் சிரித்துக்கொண்டே. தினமும் காலையில் எட்டு மணிக்குப் போய்விடுவேன். அவர் ரெடியாக இருப்பார். “உங்களது சட்டையைக் கழற்ற முடியுமா? உங்களை ‘பேர் பாடி’யாகச் சிலை வடிக்க விருப்பம்!” என்றேன். தயங்காமல் சட்டையைக் கழற்றிவிட்டு உட்கார்ந்தார். ஒரு வாரம் இப்படியே ஓடியது. தினமும் எனக்கென ஒன்றிரண்டு மணி நேரம் ஒதுக்கினார். இதற்கிடையே, ‘எனது நண்பர் ஒருவர் உங்களை ஓவியமாகத் தீட்ட ஆசைப்படுகிறார்’ என்றேன். “அவரையும் வரச்சொல்லுங்களேன்...” என்றார் பெருந்தன்மையாக! இதன்பின், நண்பர் பணிக்கரும் என்னுடன் வந்திருந்து அவரை ஓவியமாகத் தீட்ட ஆரம்பித்தார். மூன்று வாரக் காலத்தில் எங்கள் இருவரின் பணிகளும் முடிந்தன.

காமராஜரை நேரில் இருந்து, பார்த்து, நான் வடித்த அந்தச் சிலை - தற்போது கார்ப்பரேஷன் மேயர் ஹாலில் வீற்றிருக்கிறது!

பெரியாரை என் முன் அமரவைத்து... சிலையாக வடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எழுந்தபோது, தமிழறிஞரும் எழுத்தாளருமான மயிலை சீனி.வேங்கடசாமி என் நினைவுக்கு வந்தார். அவர் என்னை பெரியாரிடம் அழைத்துச் சென்றார். அப்போது, மவுன்ட் ரோட்டின் பின்புறம் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தார் பெரியார். “எத்தனை நாள் தேவைப்படும்?!” என்று கேட்டார் பெரியார். “பதினஞ்சு இருபது நாளாவது வேணும். தினமும் இரண்டு மணி நேரம் கிடைச்சாக்கூட போதும்!”

“அத்தனை நாட்கள் சேர்ந்தாற்போல நான் இங்கு இருக்கறதில்லையே! ஒண்ணு செய்யுங்க... திருச்சியில் அரசியல் வகுப்பு எடுக்கறதுக்காக முப்பது நாள் கேம்ப் போடப்போறேன். முடிஞ்சா நீங்க அங்கே வந்திடுங்க... உங்க வேலையை அங்கே வச்சே முடிச்சிடலாம்” என்றார் பெரியார்.திருச்சி வரை ரோலிங் ஸ்டாண்ட், களிமண் போன்ற எனது சிற்ப உபகரணங்களைக் கிலோ கணக்கான வெயிட்டில் எடுத்துச் செல்வது என்பது ரொம்பவும் கடினமான விஷயம்தான்! இருப்பினும், கிடைத்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்பதால், உடனடியாகத் திருச்சிக்கு வருவதாக ஒப்புக்கொண்டேன். பிறகு, சில பொதுப்படையான விஷயங்களை எங்களிடம் பெரியார் பேசிக்கொண்டி ருந்தார். பட்டைப் பட்டையாக விபூதித் தீட்டிக்கொண்டிருந்த ஐயர் ஒருவர் அங்கே வந்தார். அவரை இன்முகத்தோடு வரவேற்ற பெரியார், “நான் சொன்னால் சொன்னதுதான்... உங்களுக்குத்தான் அந்த வீடு! நீங்க கவலைப்படாமப் போயிட்டு வாங்கய்யா!” என்றார். அதாவது, அந்த பிராமணருக்குத் தன் வீட்டை வாடகைக்குக் கொடுப்பதாய்ச் சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு ஆச்சர்யமாகிவிட்டது.

வெளியே வந்ததும் எனது ஆசான் சீனி.வேங்கடசாமியிடம் “இவரைப் பற்றி வெளியே பிராமணர்களின் எதிரி என்று சொல்கிறார்கள். இவர் என்னடாவென்றால், இங்கே பிராமணருக்குத் தன் வீட்டை கொடுக்கிறாறே...?!” என்றேன்.  சீனி.வேங்கடசாமி சிரித்தார். “பிராமணருக்கு மட்டுமல்ல, எந்தத் தனி மனிதருக்கும் அவர் எதிரியல்ல. பிராமணீயத்துக்குத்தான் எதிரி!” என்று சொன்னார். எனக்குப் பெரியாரின் இன்னொரு பரிமாணம் புரிந்தது.

அடுத்த சில தினங்களில், திருச்சிக்கு அறுபது கிலோ லக்கேஜுடன் புறப்பட்டேன். பெரியார் மிகுந்த அன்போடு ஒத்துழைத்தார். மணிக்கணக்கில் ஓரிடத்தில், ஒரே கோணத்தில் அமர்ந்திருப்பது பற்றி துளியும் எரிச்சல்படவில்லை. பெரியாரது அலையலையான கூந்தல், கடற்கரை அலைகளை நினைவுபடுத்தியது. அவரது கழுத்து அமைப்பைப் பார்க்கும்போது எனக்கு ‘பீரங்கி’தான் நினைவுக்கு வரும். அவரைப் போன்ற உருவ அமைப்புள்ளவரைச் சிலையாகச் செய்வதென்றால் எந்தச் சிற்பிக்குமே குதூகலம் வரும்... அப்படியொரு பர்ஸ்னாலிட்டி அவர்!

ஒரு நாள்… நான் சிலை செய்துகொண்டிருக்கின்றபோது, திடீரென ஒரு பெரிய பட்டாளம் ஏகக் கூச்சலுடன் உள் நுழைந்தது. பெரியாரிடம், ‘சாமி சிலை உடைப்பு பற்றிய தங்களது போராட்டத் திட்டங்களை விவரித்து’ அவரது அனுமதியை வேண்டியது. பெரியாரும் அவர்களுக்குச் சில யோசனைகளை வழங்கிக்கொண்டிருந்தார். அந்தக் கும்பலில் இருந்த சிறுவன் ஒருவன், என் கைகளால் உருவாகிக்கொண்டிருந்த முழுமைபெறாத களிமண் பெரியாரை ஏதோ பிள்ளையார் சிலை என்று அவசரத்தில் நினைத்து விட்டான். கையிலிருந்த கட்டையால் அதை ஒரே போடாகப் போட இருந்தவனை மடக்கிப் பிடித்து நிறுத்தி, அவசர அவசரமாகக் களிமண் பெரியாரைப் பக்கத்திலிருந்த அறைக்குள் மாற்றிவைத்து… அறையை இறுகச் சாத்தி, பூட்டியும் விட்டேன்!

ஒருவேளை அந்தப் பையன் அடித்திருந்து, சிலை வீணாகியிருந்தால் எனது இருபது நாள் உழைப்பு காணாமல்போயிருந்திருக்கும். இதனாலோ என்னவோ, வந்த மொத்தக் கூட்டமும் பெரியாரைப் பார்த்துவிட்டுச் செல்லும்வரை நான் டென்ஷனாகவே இருந்தேன். பெரியாரின் சிலை பிரமிக்கத்தக்க வகையில் உருவானது. பெரியாருக்கும் சிலை பிடித்திருந்தது. கவிஞர் பாரதிதாசன் அந்தச் சிலையை வைத்த கண் வாங்காமல் நெடுநேரம் பார்த்துவிட்டு, என்னைப் பாராட்டி ஒரு கவிதையை எழுதித் தந்தார். ஓவியர்கள், சிற்பிகள் மத்தியிலும் எனக்குப் பெரும் புகழைச் சம்பாதித்துக் கொடுத்ததில் இந்தக் கலைப்படைப்புக்கு முக்கியப் பங்குண்டு. அந்தப் பெரியார் சிலை இப்போது எங்கிருக்கிறது...? நியாயமான கேள்விதான்!

நான் நேரில் பார்க்காமல், பார்க்க வாய்ப்பு கிடைக்காமல், ஆனாலும் செய்தே தீரவேண்டும் என்கிற வெறியோடு செய்த தலைவர் சிலைகளும் உண்டு. மகாத்மாவின் சிலையை வடிக்கும் எண்ணம் எனக்கு வந்தபோது காலம் கடந்துவிட்டிருந்தது.  ‘கோடிக்கணக்கான இந்தியர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் ஒரு மகாத்மாவை மனதால் உணர்ந்து சிலை வடிக்க முடியாதா?’ எனும் கேள்வி என்னுள் எழும்பியதும் உத்வேகம் பிறந்தது. மகாத்மாவைப் பற்றி ‘தேசிய வெளியீட்டுக் கழகம்’ அவருடைய அரிய படங்களுடன் கூடிய புத்தகம் ஒன்றை அப்போது வெளியிட்டிருந்தது. அந்தப் புத்தகத்திலிருந்த புகைப்படங்களை முதல்‌ வேளையாகக் கத்தரித்து வைத்துக்கொண்டேன்.

தினமும் காந்தி படத்தைத் கையில் எடுத்துக்கொண்டு, அதிகாலை நேரத்தில் ‘நீள வாக்’ ஒன்று போவேன். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம், காந்தியின் படத்தைக் கையில் பிடித்தபடி அவ்வப்போது ரோட்டையும் பார்த்தபடி நடக்கும்போது எனக்குள் எதுவோ ஒன்று சென்று பதியும்‌. வடமொழியில் ‘எத் பாவம், தத் பவதே’ என்று ஒரு ஸ்லோகம் உண்டு! அதாவது, எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிவிடுவது என்று பொருள்! அந்த விதத்தில், என்னால் நினைத்த மாத்திரத்தில் காந்தியாக முடியாது. என்றாலும், காந்தியை ஒரு வடிவமாக என் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள இந்தத் தினசரி ‘வாக்’கும் அவர் படமும் உதவியது. இப்படி... கிட்டத்தட்ட மூன்று மாதம் காந்தியுடன் நடைபோட்டேன். நள்ளிரவுகளில்கூட காந்திப் படத்தைக் கையில் வைத்தபடி உற்று நோக்கிக்கொண்டிருப்பேன்.

காந்தியுடன் நான் மேற்கொண்ட பயணத்தில் எனக்கு வெற்றிதான்! காந்தி, இறைவனை நோக்கிய‌ பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிறாற் போன்ற தோற்றம், எனக்குள்ளிருந்த கலைக்கதவைத் திறக்க... அதுவே சிலையாயிற்று! என் நினைவில் உள்ளுறைந்து, கரங்கள் மூலம் வெளிப்பட்ட ‘காந்தி’ சிலை, பலரது பாராட்டுகளையும் பெற்று வெற்றியடைந்தது. காந்தியை நான் வடித்திருக்கிறேன் என்று காமராஜர் கேள்விப்பட்டதும், வீடு தேடி வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போனார். தேவதாஸ் காந்தி, சென்னைக்கு வந்தபோது அவரையும் சிலை‌ பார்ப்பதற்காக என் வீட்டுக்கு அனுப்பிவைத்தார் காமராஜர்! சிலையைப் பார்த்ததும், தேவதாஸ் சில நிமிடங்கள் யாருடனும் எதுவும் பேசவில்லை. பல கோணங்களிலும் நின்று பார்த்தவர், இறுதியில் பெருமுச்செறித்தார். என் கைகளைப் பிடித்து அழுத்தி, “ரொம்ப நன்றாகச் செய்திருக்கிறீர்கள்! என் அப்பாவை நேரில் பார்ப்பதுபோலவே இருக்கிறது!” என்றார். சொல்லும்போதே குரல் தழுதழுத்தது. கண்ணீர்த் திவலைகள் எட்டிப் பார்த்தன. தேவதாஸ் மட்டுமல்ல... தேவதாஸின் மாமனார் ராஜாஜிகூட  என் காந்தி சிலையை மெய்மறந்து பாராட்டினார். “மறைந்த தலைவர்களை செய்யும்போது, எதற்கும் இருக்கட்டுமே என்று மாடலாக ஒருவரை எதிரே காந்தி போலவே நிற்கவைத்துச்‌ செய்வார்கள் சிலர். இதனால், எப்படிப் பார்த்தாலும் ‌அந்த‌ மாடல் மனிதரின் சாயல், தலைவர் சிலைக்குள் வந்துவிடும். அதைத் தவிர்க்கும் வகையில் நீங்கள் காந்தியின் படத்தை மட்டும் வைத்துக்கொண்டே முயன்றிருக்கிறீர்கள்... நீங்கள் தோற்கவில்லை தனபால்... இதில் நிஜமான காந்தியே என்‌ முன் தெரிகிறார்!” என்றார் உணர்ச்சிபூர்வமாய்! எனக்கு இந்தப் பாராட்டுகள் போதுமானதாக இருந்தன!

ல்லா ஓய்வுக்காரர்களையும் போல எனக்கும் என் சுறுசுறுப்பான கல்லூரி வேலை முடிவடைகிறதே என்பதில் கொஞ்சம் வருத்தம் இருந்தது. வேலையைவிட அந்த வளாகத்தில் உள்ள மரம், செடி கொடிகளை நான் அடிக்கடி பார்க்க முடியாதே என்கிற ஏக்கம் எனக்குள் அதிகமிருந்தது. இன்றும் கல்லூரிப் பக்கம் போனால் என் கண்கள் சுற்றிலும் உள்ள இயற்கைக் காட்சிகளில்தாம் சுழன்று சுழன்று மீள்கின்றன. இயற்கையைப் பொறுத்தவரையில், எனக்கு போன்சாய் மரங்களை வளர்த்து வருவது 40 வருடப் பொழுதுபோக்காக இருக்கிறது‌.

ஜப்பானியர்களின் ஆதர்சக் கலையாகிப் போன ‘போன்சாய் மர வளர்ப்பு’ பற்றி நான் அதிகம் ஆர்வம்கொள்ள உதவியது, எனது குரு ராய் சௌத்ரி வளர்த்துவந்த ஒரு போன்சாய் மரம்! அதைப் பார்த்த இன்ஸ்பிரேஷனில், நான் போன்சாய் பற்றிய புத்தகங்களைத் தேடிப்பிடித்துப் படிக்க ஆரம்பித்தேன். அந்த உந்துதலில் நானே சில மரங்களை ‘போன்சாய்’ முறையில் வளர்க்கவும் துவங்கினேன். ஜப்பானியர்கள் போன்சாயைச் சிற்பக்கலை என்றுதான் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் அது உண்மையும்கூட! சராசரி மனிதர்களைவிட ஒரு சிற்பியால் மிகவும் அழகாக அதை வளர்க்க முடியும் என்பது என் கருத்து! இன்றைக்கு முப்பது போன்சாய்களை நான் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறேன் என்பதில் எனக்கு ஏக பெருமை! இன்றைக்கும் வெளியில் போய்விட்டு வீட்டுக்குள் காலடி எடுத்துவைக்கும்போதே  என் கண்கள் இவை மீதுதான் படிகின்றன! அவை வாடியிருந்தால், கைக்குழந்தைக்கு ஒருவேளை ஆகாரத்தை ‘மிஸ்’ பண்ணிவிட்ட அம்மா மாதிரி பரிதவித்துப்போய் பரபரக்கிறேன்! ஆம்… போன்சாய் வளர்ப்பும் குழந்தை வளர்ப்பு மாதிரிதான்!

பல குழந்தைகள், இல்லத்தரசிகளுக்கு வீட்டில் ஓவியம் கற்றுத்தருகிறேன். “இப்படிப் பொழுதுபோக்குவதைவிட, நீங்கள் இந்த வயதிலும் ஏதாவது ஒன்றைக் கிறுக்கி, உங்களது படைப்பாக விற்றுக் காசாக்க முடியுமே!” என்று புத்தி சொல்பவர்கள் உண்டு! ஆனால், அவர்கள் சொல்வதிலெல்லாம் கிடைக்காத அதீத சந்தோஷம் இப்படிப் பலருக்கும் கற்றுத் தருவதில் கிடைப்பதாக எனக்குப் படுகிறது. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ எனும் நோக்குதானே வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. இப்படி என்னை என்றும் இளமையாகவே சிந்திக்கும்படி என்னைப் படைத்த இறைவனுக்கு என் வந்தனம்!

தொகுப்பு: வெய்யில், பச்சோந்தி, சக்தி தமிழ்ச்செல்வன்