Published:Updated:

கலைகள் அளந்த பேராளுமை

கலைகள் அளந்த பேராளுமை
பிரீமியம் ஸ்டோரி
News
கலைகள் அளந்த பேராளுமை

கலைகள் அளந்த பேராளுமை

ப்போது அந்த வளாகத்துக்குப் பெயர், ‘சித்திரவேலை வித்தியாசாலை’. ‘ஹன்ட்டர்’ என்ற வெள்ளைக்காரர் விதைத்தது. பிராட்வேயில் தொடங்கப்பட்டு, பிற்பாடு எழும்பூருக்கு மாற்றப்பட்டது. சென்னை கடற்கரைச் சாலையில் இருக்கிற அரசுக் கட்டடங்கள் அனைத்துக்கும் செங்கல் வார்த்தது, சுண்ணாம்பு அரைத்தது எல்லாம் இந்த வளாகத்தில்தான். சமீபக் காலங்கள் வரைக்கும் சூளையும் சுண்ணாம்பு அரவைக்கல்லும் அந்த வளாகத்தில் இருந்ததாகச் சொல்கிறார்கள். 19-ம் நூற்றாண்டின் ஆரம்பகாலங்கள் வரை, ஓவியக்கலை என்பது அந்த வளாகத்தில் பெயருக்கு எங்கோ ஒரு மூலையில் இருந்தது. தச்சுவேலை, கார்பெட் தயாரிப்பு, பருத்தித் துணியில் எம்ப்ராய்டரி செய்வது, நகைகள் செய்வது, அலுமினியப் பாத்திரங்கள் செய்வது போன்ற பணிகளே அங்கு நிறைந்திருந்தன. சுருங்கச் சொன்னால், வெள்ளயர்களுக்குத் தேவையான புழங்குபொருள்களைச் செய்யும் தொழிற்சாலையாகவே இந்தக் கல்வி நிறுவனம் இருந்தது. அதை இந்திய நுண்கலைகளின் உலைக்களமாக மாற்றியவர்கள் என்று மூவரை வரிசைப்படுத்தலாம். தேவிபிரசாத் ராய் சௌத்ரி, பணிக்கர், தனபால் வாத்தியார். 

கலைகள் அளந்த பேராளுமை

சிற்பி ராய் சௌத்ரி, வங்கத்தைச் சேர்ந்தவர். தாகூரின் சாந்தி நிகேதனின் வார்ப்பு. தாகூரின் சகோதரர் அபேந்திரநாத் தாகூரின் மாணவர். அதுவரை தொழிற்சாலையாக இருந்த சென்னை ஓவியக்கல்லூரியின் முகத்தை மாற்றி ஓவியம், சிற்பம் பயிற்றுவிக்கும் ‘சித்திரவேலை  வித்தியாசாலை’யாக மாற்றியவர் இவர்தான். அதுவரை புத்தகத்தில் இருந்த சித்திரங்களைப் பிரதியெடுத்துக் கொண்டிருந்த மாணவர்கள் முன் மாடல்களைக் கொண்டுவந்து நிறுத்தினார். புதியதொரு நவீனச் சித்திர பாணியை உருவாக்கி, புதிய இந்திய கலைமரபை வடிவமைத்ததில் ராயின் பங்கு மிகவும் முக்கியமானது. பணிக்கரும் தனபாலும் ராயின் மாணவர்கள். சௌத்ரி ஓய்வுபெற்ற பிறகு பணிக்கர், கல்லூரிக்கு முதல்வரானார். இவர் முதல்வரான காலகட்டத்தில் சிற்பத்துறைக்குப் பொறுப்பாளரானார் தனபால். இதுதான் சென்னை ஓவியக் கல்லூரியின் பொற்காலம்.

கலைகள் அளந்த பேராளுமைகாலனியக் கலைவடிவ மரபுக்கு மாற்றாக, நவீன ஓவியத்துக்கான சிந்தனையும் தாக்கமும் மலர்ந்த காலகட்டம் அது. அப்படியான படைப்புகளை உருவாக்குவதும், உருவாக்குபவர்களை உற்சாகப்படுத்தி நெறிப்படுத்துவதும், உருவாக்கியவற்றைச் சரியான இடத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் முதன்மைப் பணியாக இருந்தது. பணிக்கர், தனபால் வாத்தியார் இருவரும் அந்தப் பணியைத் திறம்படச் செய்தார்கள். அதன் விளைவாக, இந்திய அளவில் சென்னை ஓவியக் கல்லூரியின் மாண்பு மேம்பட்டது.

னபால் வாத்தியாரின் மாணவரும் மருமகனுமான ஓவியர் ஆர்.பி.பாஸ்கரன், பிற்காலத்தில் சென்னை ஓவியக் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பு வகித்தவர். ‘லலித்கலா அகாடமி’யின் தேசியத் தலைவராகவும் இருந்தார். தனபால் வாத்தியாரோடு மிகவும் நெருக்கமாக இருந்ததோடு, நவீன ஓவிய இயக்கத்தின் முக்கியக் காலகட்டத்தில் தீவிரமாக இயங்கியவர். ஒரு மாலை நேரத்தில், தனபால் குறித்த தன் பெருமித நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்:

கலைகள் அளந்த பேராளுமை

“தனபால் வாத்தியார், பணிக்கர் காலம் சென்னை ஓவியக்கல்லூரிக்கு மட்டுமல்ல, இந்திய நுண்கலை மரபுக்கே பொற்காலம்தான். நவீன ஓவிய இயக்கம் துளிர்த்த காலம் தொட்டு, அதில் தனபாலின் அருகில் நின்று இயங்கியவன் என்பது இப்போதும் எனக்குப் பெருமிதம் தரும் விஷயம். அவர்களின் வழிகாட்டுதல்படி சென்னை ஓவியக்கல்லூரியில் உருவாகும் ஓவியங்கள், சிற்பங்களையெல்லாம் நான், வாசுதேவன் போன்றவர்கள் டெல்லி, மும்பை என்று இந்தியாவெங்கும் கொண்டுசேர்த்தோம். பத்திரிகைகள் அவற்றை விரிவாக எழுதின. இதுதான் அறுபதுகளில் உருவான நவீன கலை இயக்கத்தின் ஆரம்பம். நான், ஆதிமூலம், தட்சிணாமூர்த்தி, முத்துசாமி, கந்தசாமி,  ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் போன்றோரெல்லாம் இலக்கியவாதிகளை இதற்குள் கொண்டுவந்தோம். இதழ்களில் புதிய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு ஓவியங்கள் வரைந்து கொடுத்து, இன்னொரு பக்கம் இந்த முயற்சியைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றோம்.

அது ஒரு விசித்திரமான காலகட்டம். கோயிலில் இருந்த சிற்பங்களையும் நேரெதிர் காட்சிகளையும் வரைந்துகொண்டிருந்த ஓவியர்களுக்கு மத்தியில், நவீன ரியலிஸ்டிக் சித்திர மரபின் மீதான நாட்டத்தோடும் சிந்தனையோட்டத்தோடும் ஒரு குழு இயங்கிக்கொண்டிருந்தது. அதுதான் தொடக்கம் என்பதால், அந்தச் சிந்தனையுடைய ஆசிரியர்களும் மாணவர்களும் வயது பேதமின்றி, ஆசிரியர்-மாணவர் வேறுபாடின்றி, சகக் கலைஞர்களாக ஒன்றிணைந்து இயங்கினார்கள். அந்த ஒன்றிணைவுதான் நவீன ஓவிய இயக்கத்தை அடுத்த 50 ஆண்டுகளுக்குச் சிதைவில்லாமல் நகர்த்திச் சென்றது. தவிர, உலகெங்கும் இந்திய ஓவியர்களுக்குத் தவிர்க்கவியலாத பீடங்களையும் பெற்றுத் தந்தது.

காலனிய ஆதிக்கத்தின் கீழ் சில நூற்றாண்டுகள் முடங்கிக்கிடந்து மீண்டெழுந்த ஒரு தேசம், மிக விரைவாகவே தனக்கான சுய அடையாளங்களைக் கண்டடையும். அதற்கான கர்த்தாக்களைக் காலம் பிரசவிக்கும். ராய் சௌத்ரியும், பணிக்கரும், தனபால் வாத்தியாரும் அப்படி உதித்தவர்கள்தாம். சுதந்திரமடைந்த பிறகு, இந்தியா முழுவதும் சுயதேடலுக்கான எழுச்சி உதித்தது. எழுத்து, ஓவியம் என எல்லாத் துறைகளிலும் அது பல மாற்றங்களை விதைத்தது. வங்காளத்தில், பரோடாவில், டெல்லியில் உள்ள ஓவியக் கல்லூரிகளிலெல்லாம் இந்த மாற்றம் பரவியது. பேனர் எழுதவும், சுவர்ச் சித்திரம் எழுதவும் சென்ற ஓவியர்களுக்கு வேறுபல கதவுகள் திறக்கத் தொடங்கின. நவீன ஓவியம் என்கிற புதிய தத்துவ மரபு உருவாக்கப்பட்டது. உலகெங்குமிருந்து வரும் கலைஞர்கள், நம் படைப்பாளிகளின் திறமைகளை விழியுயர்த்திப் பார்த்தார்கள்.

“நானும்கூட பேனர் ஆர்டிஸ்ட்டாக வேண்டும் என்ற கனவோடுதான் ஓவியக் கல்லூரிக்குள் நுழைந்தேன். ஆனால், அங்கு எனக்குக் கிடைத்த அனுபவம் வேறு. ஆசிரியர்களும் மாணவர்களுக்கு இணையாக உழைத்தார்கள். வாழ்க்கை வேறு
விதமாக இருந்தது. தனபால் வாத்தியார் இயல்பில் டான்ஸர் என்பதால், அவரது அத்தனை செயல்பாட்டிலும் அது உடல்மொழியாக ஊறிக்கிடந்தது. களிமண்ணை எடுத்து பேஸ்ட் செய்யும்போதுகூட அவரது விரல்களும் உடலும் நடனமாடும்.

ராய் சௌத்ரி மிகப்பெரும் கலைஞன். நவீனக் கலைச்சிந்தனையை அடுத்த தலைமுறைக்குக் கடத்தியவர். ஆனாலும், அவருடைய படைப்புகளில் காலனிய கலைமரபென்பது, தவிர்க்க முடியாத அங்கமாக இருந்தது. ஆனால், தனபால், மாணவர்களின் சுயபடைப்புத்திறனை ஊக்கப்படுத்தினார். ‘முன்மாதிரிகளைக் கருதாமல் நீ உன் படைப்பை உருவாக்கு’ என்று புதிய திசையைக் காட்டினார். அதுதான் அவரது ஆகப்பெரிய பங்களிப்பு. அதுதான் தனித்த அடையாளம்கொண்ட பல ஆளுமைகளை இந்தியாவுக்குத் தந்தது.

ராய் சௌத்ரி, சிற்பியாக இருந்தாலும்கூட அவர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் சிற்பத்துறை சரிவர பராமரிக்கப்படாமல்தான் இருந்தது. தலைவர்களின் ஆளுயரச் சிலைகளையும் ஓவியங்களையும் உருவாக்குவதில்தான் அவர் கவனம் செலுத்தினார். படைப்பாற்றல் சார்ந்த கான்டம்ப்ரரி சிற்பங்கள்மீது அவர் கவனம்கொள்ளவில்லை. சிற்பத் துறைக்குப் பொறுப்பாளராக ஒரு மோல்டரையே நியமித்தார் சௌத்ரி.

பணிக்கர், முதல்வர் பொறுப்புக்கு வந்த பிறகு, சிற்பத் துறைக்குப் பொறுப்பாளராக தனபால் நியமிக்கப்பட்டார். பலமுறை நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்தும், சிற்பம் உருவாக்கப் பயன்படுத்தப்படும் வெள்ளைக் களிமண் வாங்க போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. வெறுத்துப்போன தனபால், ‘குயவர்கள் பயன்படுத்தும் சாதாரணக் களிமண்ணை வாங்கிக் கொள்கிறேன்’ என்று கூறி, வண்டி வண்டியாக இறக்கினார். மாணவர்
களுக்கு அது புது அனுபவமாக இருந்தது. பணிக்கர், தனபால் எடுத்த எல்லா முயற்சிகளுக்கும் துணை நின்றார்.

தனபால், புதிது புதிதாக மாணவர்களை ஓவியக் கல்லூரிக்குக் கொண்டுவந்தார். லேசாகப் பொறிதட்டினாலே, அதை ஊதிப் பெரிதாக்கிக் கனவுகளை விதைத்து கல்லூரிக்குள் கொண்டுவந்துவிடுவார். கே.எம்.கோபால், ஸ்ரீலங்காவைச் சேர்ந்த பஞ்சநாதன், யூகி, ஆதிமூலம், வீர சந்தானம், தட்சிணாமூர்த்தி, எஸ்.கே.ராஜவேலு, என்னைப் போன்ற பலர் அவரது இல்லத்திலேயே தங்கி வளர்ந்தவர்கள்தான். மாணவர்களாக எவரையும் சுருங்கக் கருதியதில்லை. அவர்களின் படைப்புகளைக் கொண்டாடினார். அவற்றைத் தகுந்த இடத்தில் நிறுத்தி அங்கீகாரம் பெற்றுத்தந்தார்.

இந்தியாவில் தோன்றிய ஓவிய இயக்கத்தின் கர்த்தாக்களை, காலவரிசைப்படி தொகுப்பது மிகவும் எளிது. காரணம், சுதந்திரத்துக்குப் பிறகு மிக வீரியமாகத் தொடங்கி, குறிப்பிட்ட காலகட்டத்தோடு அந்த வரிசை நின்றுவிட்டது. நவீன ஓவிய இயக்கத்தைத் தொடங்கிவைத்து வழிநடத்தியவர்கள், தனபால், பணிக்கர், கிருஷ்ணராவ் ஆகியோர்.

கன்னியப்பன், முனுசாமி, சந்தானராஜ், அந்தோணி தாஸ், ஜானகிராமன், டி.ஆர்.பி.மூக்கையா, பெருமாள் போன்றோர் இவர்களின் நேரடி மாணவர்கள். ஆதிமூலம், நான், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர்  இவர்களிடமிருந்து உருவான அடுத்த தலைமுறைக் கலைஞர்கள். டிராட்ஸ்கி மருது, சந்ரு, விஸ்வம், வீரசந்தானம் ஆகியோர் இவர்களைத் தொடர்ந்து நம்பிக்கையோடு நவீன ஓவியத்தில் இயங்கியவர்கள். இதுதான் 60 ஆண்டுக்கால படைப்பாளிகளின் வரிசை.

சென்னை ஓவியக்கல்லூரி வளர்ந்தது. நிறைய படைப்பாளிகள் உருவானார்கள். அவர்களது படைப்புகள் உலகெங்கும் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தப் படைப்பாளிகளை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்கிறார்கள் தனபாலும் பணிக்கரும். அதற்காக உருவாக்கப்பட்டதுதான்  ‘சோழமண்டலம் கலைகிராமம்’ ஒருங்கிணைவுக்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அது மிக விரைவிலேயே மொழி அரசியலில் சுழன்றது.

அரசு, முதலில் முகப்பேர் பக்கம்தான் இடம் வழங்கியது. ஆனால், ‘மகாபலி புரத்துக்கு அருகில் அதை உருவாக்குவதே பொருத்தமாக இருக்கும்’ என்று தனபால் உறுதியாக இருந்தார். அதனால், ஓவியர்களே பணம் போட்டு திருவான்மியூரையொட்டி, தேடிப்பிடித்து இடம் வாங்கினார்கள். இரவு, பகலில்லாமல் இந்தக் கலைகிராம வடிவமைப்புக்காக உழைத்தார் தனபால். அங்கு வேலைசெய்யும் ஓவியர்களுக்காக மயிலாப்பூரில் உள்ள தன் வீட்டிலிருந்து சைக்கிளிலேயே சாப்பாடு எடுத்துச் செல்வார்.

சோழமண்டலம் ஓவிய கிராமம், சிற்பி தனபாலின் கனவு. கிழக்குக் கடற்கரைச் சாலையில், 5 ஏக்கர் நிலம் வாங்கி 30 கலைஞர்களுக்குப் பிரித்து வழங்கினார்கள். துணைத்தலைவராக தனபால் இருந்தார். எல்லோரும் அவரவர் மனையில் குடிசைகளை அமைத்துக்கொண்டோம். நான், ஆதிமூலம், தெட்சிணாமூர்த்தி மூவரும் அங்கேயே தங்கி ஓவியங்கள் வரைவோம். விஸ்வநாதன், வாசுதேவன் இருவரும் எங்களுக்கு அருகில் தங்கியிருந்
தார்கள். மதியம் கடற்கரைக்குப் போய் படகிலிருந்து வரும் மீனவர்களுக்கு உதவிகள் செய்வோம். மீன் தருவார்கள். கஞ்சியும் மீனும்தான் உணவு. இரவு மின்சாரம் இருக்காது. அரிக்கேன் விளக்கை ஏற்றிவைத்துக்கொண்டு அமர்ந்திருப்போம். பல நாள்கள், தனபால் வாத்தியார் எங்களுக்கு உணவு எடுத்துவந்திருக்கிறார்.

எல்லாம் நல்லபடியாகச் சென்று கொண்டிருந்தது. நாங்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடுகட்ட நினைத்தோம். அதற்காக, அவரவர் இடத்தை அவரவர் பெயருக்கு மாற்றித் தரும்படிக் கேட்டோம். பணிக்கர் ஏற்கவில்லை. ‘அறக்கட்டளையின் பெயரில் இருப்பதால் மாற்றித்தர முடியாது’ என்றார். ‘எங்கள் பணத்தில் வாங்கப்பட்ட இடம். பிரித்தும் தந்துவிட்டீர்கள். பெயர் மாற்றித் தந்தால்தானே நாங்கள் வீடு கட்டி குடியேற முடியும்’ என்றோம். பணிக்கர், ஏற்றுக்
கொள்ளவில்லை. ‘நீங்கள் உறுப்பினர் உரிமையை இழந்துவிட்டீர்கள். இதோ உங்கள் பணம்’ என்று, 18 பேரின் பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டார். அதேவேகத்தில் கேரளாவிலிருந்தும் ஆந்திராவிலிருந்தும் ஓவியர்களைக் கொண்டுவந்து குடியேற்றத் தொடங்கினார்.

இதைப் பொறுக்கமுடியாமல் தனபால் வெளியேவந்தார். ஆதிமூலம், தெட்சிணாமூர்த்தி உட்பட 18 பேரும் வெளியேவந்தோம். பணிக்கரும், தனபாலும் மாணவர்களாக இருந்த காலத்திலிருந்தே நெருக்கமான நண்பர்கள். தனபாலுக்குச் சிற்பத் துறையின் மீது ஈடுபாட்டை ஏற்படுத்தியவர் பணிக்கர்தான். இருவரும் உலகெங்கும் பயணித்து, மியூசியங்கள், ஓவியக் கண்காட்சிகளை எல்லாம் பார்த்து, புதிது புதிதாகச் சிந்தித்து மாணவர்களுக்குப் பயிற்றுவித்தார்கள். சோழமண்டலம் இருவருக்கும் இடையில் மனத்தாங்கலை ஏற்படுத்தியது. ஆயினும், தனபாலுக்கு பணிக்கர் மீதிருந்த அன்பும் நட்பும் மாறவில்லை. பிற்காலத்தில், அவர் எழுதிய சுயசரிதையிலும் கட்டுரைகளிலும் பணிக்கர் பற்றிய நினைவுகளை மிகவும் பெருமிதமாகப் பதிவுசெய்கிறார். 
 
ராய் சௌத்ரி, தலைவர்களின் உருவங்களைச் சிற்பமாக்குவதில் மிகுந்த ஈடுபாடு காட்டுவார். பிளாஸ்டர் ஆப் பாரீஸில் சிலையைச் செய்து இத்தாலிக்கு அனுப்பி மோல்டிங் செய்து வாங்குவார். ராய் சௌத்ரியிடமிருந்தே தலைவர்களின் சிற்பங்களைச் செய்யும் ஆர்வம் தனபாலுக்கும் வந்தது. ‘தமிழகத்தில் வடித்துவைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகள் கலைத்தன்மை இல்லாமல் பொம்மைகளாக இருக்கின்றன’ என்று கருதினார் தனபால். அவர் வடித்த பல சிற்பங்கள் மிகுந்த அழகியல்தன்மை மிக்கவை. தலைவர்களை அளவெடுத்து, எதிரில் அமரவைத்து சிற்பம் வடிப்பார். முதலில் செய்தது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிற்பம். 15 நாள்கள் முழுமையாகச் சிலைக்காக போஸ் கொடுத்தார் கவிஞர். பெரியார், காமராஜர், குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன், திரு.வி.க, நேரு, காந்தி எனப் பல சிற்பங்களை அவர் செய்திருக்கிறார். அவர் செய்த காமராஜர் சிற்பம், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அறையில் வைக்கப்பட்டுள்ளது. லட்சுமணசாமி முதலியார் சிலை, சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் இருக்கிறது.

உலகத்தமிழ் மாநாட்டையொட்டி, சென்னை கடற்கரையில் தலைவர்களின் சிலைகளை வைக்க முடிவுசெய்தது அப்போதைய தி.மு.க அரசு. இதற்கென நிறைய சிற்பிகள் தேர்வுசெய்யப்பட்டார்கள். வ.உ.சி சிலை செய்யும் பணி, ஆதிமூலத்துக்கு வழங்கப்பட்டது. பெரியார் சிலைவடிக்கும் பணி, தனபால் வாத்தியாருக்குத் தரப்பட்டது. மிகுந்த ஈடுபாட்டோடு அந்தப் பணியில் இறங்கினார் தனபால். சிலை பிரமிப்பூட்டுவதாக வளர்ந்தது. கவிஞர் பாரதிதாசன் அந்தச் சிலையைப் பார்த்து வியந்து கவிதைகூட எழுதினார். குறிப்பிட்ட காலத்திற்குள் சிலைசெய்யும் பணி நிறைவுற்றது. ஆனால், என்ன காரணத்தினாலோ, அந்தச் சிலை கடற்கரையில் வைக்கப்படவில்லை. அதைப் பெற்றுக்கொள்ளக்கூட யாரும் வரவில்லை.

அந்தக் காலகட்டத்தில், கும்பகோணம் கவின்கலைக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார் தனபால். அவர் செய்த பெரியார் சிலை, வீட்டு வளாகத்திலேயே இருந்தது. களிமண் துகள் துகளாகத் தெரித்து விழுந்தது. கட்சிக்காரர்கள் சிலர் வந்து அதை எடுத்துச் சென்றுவிட்டதாக தனது சுயசரிதையில் பதிவுசெய்திருக்கிறார் தனபால். அவர் உருவாக்கிய பெரியார் சிலை ஏன் நிறுவப்படவில்லை என்ற காரணம் இன்றுவரை புலப்படவில்லை. நெடுங்காலம் அந்த வேதனை தனபாலை வாட்டியது” என்று பெருமூச்சோடு முடித்தார் ஆர்.பி.பாஸ்கரன்.

வியர் டிராட்ஸ்கி மருதுவோடு நிகழும் எல்லா உரையாடல்களும் தனபால் வாத்தியாரில் தொடங்கி தனபால் வாத்தியாரில்தான் நிறைவடையும்.

“தனபால் சாருக்கு அருகிலிருந்து கற்றதும் வேலைகள் செய்ததும் மிகவும் முக்கியமான காலம். நாங்கள் கல்லூரியில் சேரும் காலத்தில் அவர்தான் முதல்வர். 77-ல் முடிக்கும்போது அவரும் ஓய்வுபெற்றுவிட்டார். எப்போதும் இயங்கிக்கொண்டே இருப்பார். அத்தனை மாணவர்களும் அவரைத்தான் முன்னுதாரணமாகக் கொண்டோம்.

கிராமப்புறங்களிலிருந்து வந்த மாணவர்களைத் தன் பிள்ளைகளைப்போல பார்த்துக்கொள்வதோடு, தனித்த ஈடுபாட்டோடு கற்றும் கொடுப்பார். மிகவும் நுட்பமாகக் கவனித்து, தனித்தனியாக நெறிப்படுத்துவார். ஒவ்வொரு மாணவரைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பார்.

ஒரு படைப்பாளி, நல்ல கலைஞனாக மட்டும் இருந்தால் போதாது. நல்ல பண்பு வேண்டும். பொதுவெளியில் மனிதத் தன்மையோடு இயங்க வேண்டும். இந்தப் படிப்பினைகள் எல்லாம் தனபால் வாத்தியார் மூலமாகவே எங்களுக்குக் கிடைத்தது. எங்கள் எதிர்காலத்தை, வாழ்க்கையை வடிவமைத்தது அவர்தான். 

கலைகள் அளந்த பேராளுமை

நாங்கள் படித்த காலத்தில் நடந்த மிக முக்கிய நிகழ்வு, கல்லூரியின் நூலகத்தை மேம்படுத்தியது. தனபால் வாத்தியார்தான் அதைச் செய்தார். அதுதான் இப்போது நாங்கள் பல்வேறு துறைகளில் தனித்து அடையாளப்பட்டு நிற்க உதவியது. திரைப்படம் சார்ந்து, போட்டோகிராபி சார்ந்து, சித்திரக் கலையின் துணைக் கலைகள் சார்ந்து பல நூறு புத்தகங்களை தனபால் வாத்தியார் அங்கே வாங்கிக் குவித்தார்.

ஓய்வுபெற்ற பிறகும்கூட அவர் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருந்தார். ஆர்வத்தோடு வரும் மாணவர்களுக்கு ஓவியக்கல்லூரியில் இடம்பெற்றுக் கொடுத்து வழிநடத்தியிருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளில், தமிழகத்தில் உருவான ஓவியர்கள், சிற்பிகளின் வாழ்க்கையில் அவரின் தாக்கம் நிச்சயமாகப் படிந்திருக்கும்.

கல்லூரியைப் பல்கலைக் கூடமாகவே வைத்திருந்தார். தியேட்டர், சினிமா என நல்ல கலைகள் வளாகத்துக்குள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். சந்தானராஜ், அந்தோணி தாஸையெல்லாம் வீட்டுக்குப் போய் அழைத்துவந்து ஆசிரியராக்கினார்.

எனக்குத் தனிப்பட்டமுறையில் அவரோடு மிகப்பெரிய பந்தம் உண்டு. நான் வாத்தியாரைச் சந்திப்பதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே, என் அப்பாவுக்கும் வாத்தியாருக்கும் நட்பு இருந்தது. வாத்தியார் பெரியார் சிலையைச் செய்யும்போது, அதைப் படம் எடுத்து வீட்டில் வைத்திருந்தார் அப்பா. அந்தப் படத்தை இன்னும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். தனபால் வாத்தியார் வீட்டிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளித்தான் என் தாத்தாவின் வீடு. முதன்முறை வாத்தியாரைச் சந்தித்தது, அழியாத காட்சியாக இன்னும் நினைவில் இருக்கிறது. அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். வாத்தியாரின் மகளுக்கும் பாஸ்கரன் சாருக்கும் திருமணம் முடிந்து, சாமியானாகூட அவிழ்க்காத தினத்தில்தான் என் தாத்தா என்னை வாத்தியாரிடம் அறிமுகம் செய்துவைத்தார்.  என்னைக் கனிவோடு அருகில் அழைத்து, ‘நீ வரைந்த ஓவியங்கள் ஏதும் வைத்திருக்கிறாயா?’ என்று கேட்டார். வீட்டுக்கு ஓடிப்போய் அள்ளிக்கொண்டு வந்து காண்பித்தேன். அதையெல்லாம் பார்த்தவர், ‘இவனுக்கு ஓவியக்கல்லூரியில் கண்டிப்பாக இடம் கிடைத்துவிடும். என்கிட்ட விட்டுடுங்க’ என்றார். சொன்னபடியே இடம் கிடைத்தது.  அவரால் முழுமை செய்யப்பட்ட ஓவியர்களின் வரிசையில் நானும் ஒருவன் என்பது எப்போதும் எனக்குப் பெருமை.

மதுரைக் கலாசாரப் பின்னணியின் பெரும்போக்கில் இடை ஊடாக சம்பந்தப்பட்டவர் தனபால். தலைமறைவு வாழ்க்கையின்போது என்.எஸ்.கிருஷ்ணன், ஜீவா போன்ற ஆளுமைகளை தனபால் வாத்தியார் தனது வீட்டில்தான் ஒளித்துவைத்திருந்தார்.

எழுத்தையும் சித்திரத்தையும் இணைத்தது தனபால் வாத்தியார் தொடங்கிவைத்த நவீன ஓவிய இயக்கம். பாஸ்கரன், தெட்சிணாமூர்த்தி, ஆதிமூலம் மூவரும் இலக்கியவாதிகளோடு நெருக்கமான பரிச்சயம் கொண்டிருந்தார்கள். 70-களில் நிகழ்ந்த அந்த மாற்றம் இரு துறைகளையும் அடுத்தத் தளத்துக்குக் கொண்டுசென்றது. அந்த இயக்க மனநிலைதான் பொதுவெளியிலும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் இணைந்துகொண்டு இயங்க வேண்டும் என்று என்னைத் தூண்டியது. 
 
தனபாலின் சித்திரங்கள், பெங்காலி மரபின் தொடர்ச்சி. மிகச்சிறிய கோடுகளைக் கொண்ட லீனியல் டிராயிங் அவருடைய பாணி. அவர் படித்தது ஓவியமாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, ‘டான்ஸராக இருந்து சிற்பியாக மாறியவர்’ என்றுதான் சொல்வேன். 

கடந்த 15 ஆண்டுகளில், ஓவியக் கல்லூரியின் பாதை மாறிவிட்டது. 70-களில் நிகழ்ந்த வீரியமான உருவாக்கம் அதன்பிறகு நிகழவேயில்லை. தனபால் வாத்தியார் போட்ட பாதைதான் சரியான பாதை. அதிலிருந்து விலகியதன் விளைவை தமிழ்ச் சமூகம் இன்று எதிர்கொள்கிறது. நாளையும் எதிர்கொள்ளாமல் இருக்க, எல்லோரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும்...” என்றார் ஓவியர் டிராட்ஸ்கி மருது.

“தனபால் காலமான பிறகு, தமிழகத்தில் உள்ள ஓவியர்கள் அனைவரும் சேர்ந்து, ‘தனபால் நினைவாகக் கடற்கரை சாலையில் ஒரு நினைவகம் அமைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்கள். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான படைப்பாளிகள் அந்தக் கோரிக்கை மனுவில் கையெழுத்துப் போட்டிருந்தார்கள். சிறிது காலத்துக்குப் பிறகு, கலைப் பண்பாட்டுத் துறையின் இணை இயக்குநர் அந்தக் கோரிக்கை மனுவை இணைத்து, ஒரு குறிப்பாணையைக் கவின்கலைக் கல்லூரியின் முதல்வருக்கு அனுப்பினார். அதில், ‘இதற்கு முன்பு, தனி ஒரு கலைஞருக்கு நினைவகம் அமைக்க, அரசு நில ஒதுக்கீடு செய்த முன்நிகழ்வுகள் ஏதும் இல்லை. கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அரசு கலைத்தொழில் கல்லூரியில் அவரது திருவுருவப் படத்தைத் திறந்துவைத்து சிறப்பு செய்யலாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’ என்று எழுதப் பட்டிருந்தது. அப்போது கல்லூரியில் முதல்வராக இருந்தவர், தனபால் வாத்தியாரின் மருமகன் ஆர்.பி.பாஸ்கரன்.

இதுதான் தமிழகத்தில் பிறந்து வாழ்ந்து பங்களிப்பு செய்த ஆளுமைகளுக்கு அரசாங்கங்கள் கொடுக்கிற மரியாதை. இதைவிட ஒரு படைப்பாளிக்கு நேரும் அவமானம் வேறென்ன இருக்க முடியும்..? இந்தியச் சித்திர மரபை, மேலை நாட்டு தத்துவத் தாக்கத்திலிருந்து மீட்டு, சுயசார்புள்ள வடிவத்துக்குக் கொண்டுவந்த பேராளுமை தனபால். அவரது பங்களிப்பையும் அவரது உழைப்பு ஏற்படுத்திய தாக்கத்தையும் தமிழகம் எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறது என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

தனபால், கிருஷ்ணராவ், பணிக்கர் போன்றோர் நேரம் காலம் பார்க்காமல் கொடுத்த உழைப்பின் பலன்தான், இன்று இந்தியப் படைப்பாளிகளுக்குக் கிடைக்கிற அங்கீகாரமும் கௌரவமும். அத்தகைய ஆளுமைக்கு நினைவகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கவில்லை அரசு. ஓவியக்கல்லூரியில் புகைப்படத்தை மாட்டச்சொல்லி என் மூலமாகவே அந்தக் கோரிக்கை மனுவை முடித்துவைத்தார்கள்...” என்கிறார்  ஆதங்கமாக ஆர்.பி.பாஸ்கரன்.

சிற்பி தனபாலின் பங்களிப்பை அரசோ கல்வி நிறுவனங்களோ எந்தவிதத்திலும் கொண்டாடவில்லை. அவர் பெயரில் ஒரு மியூசியத்தை உருவாக்கி, தமிழின் அத்தனை படைப்பாளிகளின் படைப்புகளையும் அங்கே காட்சிக்கு வைக்கவேண்டும். அதுதான் அவருக்குச் செய்யும் மரியாதை!

வெ.நீலகண்டன்