Published:Updated:

காலத்தில் வாழும் கலைஞன்

காலத்தில் வாழும் கலைஞன்
பிரீமியம் ஸ்டோரி
காலத்தில் வாழும் கலைஞன்

சா.கந்தசாமி

காலத்தில் வாழும் கலைஞன்

சா.கந்தசாமி

Published:Updated:
காலத்தில் வாழும் கலைஞன்
பிரீமியம் ஸ்டோரி
காலத்தில் வாழும் கலைஞன்

சுப்பராயலு தனபால் எனும் சிற்பி எஸ்.தனபால் பிறந்த நூற்றாண்டு விழா தொடங்குகிறது. அவர், தமிழ்ப் பாரம்பர்யத்தில் வந்த நவீனச் சிற்பி. ஐரோப்பிய பாவனைகளை அவர் சிற்பங்களில் காண முடிகிறது என்றாலும், அடிப்படையில் அவர் இழையறாத பல்லவ, சோழ மரபில் வருகிறவர்.

காலத்தில் வாழும் கலைஞன்

தனபால், இளம்பருவத்திலேயே தான் ஒரு கலைஞன் என்பதைக் கண்டறிந்து கொண்டவர். அதுவே, அவரை ‘சென்னை  கவின் கலைக் கல்லூரி’யில் சேர்ந்து படிக்கவும் பயிற்சிபெறவும் வைத்தது. அது பற்றி பின்னாள்களில் அவர் இப்படிக் குறிப்பிட்டார்: “நான் மயிலாப்பூர் வாசி, எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளிக்கூடத்திற்கு நடந்து போய் வந்து கொண்டிருந்தேன். மயிலாப்பூர் குளத்துக்கரையில், வேளார்கள் சக்கரத்தைச் சுற்றிச் சுழலவிட்டு மண்பாண்டங்கள் உருவாக்குவதைப் பார்த்து மயங்கி நின்றுவிடுவேன். சில நாள்கள் பள்ளிக்கூடம் போவதைக்கூட மறந்துபோயிருக்கிறேன். சில சமயம், வேளார்களோடு சேர்ந்துகொண்டு மண் மிதித்திருக்கிறேன்; கைகளால் மண் பிசைந்திருக்கிறேன். கொம்பால் சக்கரம் சுழற்றியிருக்கிறேன். மண்பாண்டங்கள் உருவாக்கியிருக்கிறேன். ஆனால், நான் மண்பாண்டங்கள் செய்யும் வேளார் குலத்தில் பிறந்தவன் இல்லை. பள்ளிக்கூடப் படிப்பில் பெரிய ஆர்வம் இல்லாமல், சித்திரங்கள் வரைந்துகொண்டும் சிற்பங்கள் செய்துகொண்டும் இருந்தேன்.

காலத்தில் வாழும் கலைஞன்மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் திருவிழாக் கொண்டாட்டங்கள் என்னை வசீகரித்தன. நானும் கொண்டாட்டங்களில் ஈசனோடு சேர்ந்துபோய்விட்டேன். எனது பள்ளிக்கூட ஆசிரியர்கள், கவின்கலைக் கல்லூரியில் (அது அப்போது கலை கைத்தொழில் பள்ளிக்கூடமாக இருந்தது.) சேர்த்துப் படிக்கவைப்பது நல்லதென என் பெற்றோரிடம் கூறினார்கள். அதை ஏற்று, என் பெற்றோர் அங்கே சேர்த்துவிட்டார்கள். இந்தியாவிலேயே கலைகள், கைத்தொழில் பயில ஏற்படுத்தப்பட்ட முதல் பள்ளி அது. அலெக்ஸாண்டர் ஹன்ட்டர் என்ற மருத்துவர் அதை ஏற்படுத்தினார். அவரின் நோக்கம், கலை கைத்தொழில் என்பதை முறையான வழியில் இந்தியர்கள் பெற வேண்டும் மற்றும் ஐரோப்பிய கனவான்கள் மரபான இந்தியக் கலைப்படைப்புகளைப் புதிதாகப் பெறவேண்டும் என்பதுதான். புதிய கலை கைத்தொழில் பள்ளிக்கூடம் சுடுமண் சிலைகள், இரும்புக் கதவுகள், அலங்கார வேலைப்பாடுகள்கொண்ட மேசைகள், நாற்காலிகள், நீர்வண்ண இயற்கைக் காட்சி ஓவியங்கள் எனப் பலவற்றையும் உருவாக்கிக் கொடுப்பதாக இருந்தது. அதோடு புடவைகள் மீது பொறிக்கும் கலை வேலைப்பாடுகொண்ட மர அச்சுகளையும் தயாரித்துக் கொடுத்தது. கைத்தொழில், கலையென்ற அம்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

சென்னைக் கலை கைத்தொழில் பள்ளிக்கூடம், பிரதானமாகப் பாரம்பர்ய அம்சத்தைத்தான் முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்தது. இங்கிலாந்திலிருந்து வந்து முதல்வராகப் பதவிபெற்ற இ.பி.ஹேவல் இந்தியக் கைத்தொழில், கலைகள்மீது அதிகமான ஈடுபாடுகொண்டு அதனையே முதன்மைப்படுத்திவந்தார்.

1928-ம் ஆண்டில், வங்காளத்தைச் சேர்ந்த பிரபல ஓவியரும் சிற்பியுமான தேவிபிரசாத் ராய் சௌத்ரி, கலை கைத்தொழில் பள்ளியின் முதல்வரானார். அவர்தான் கலைப் பள்ளியின் முதல் இந்திய முதல்வர். ஆனால், அவரோ ஐரோப்பிய மரபில் உருவானவர்.

ரவீந்திரநாத் தாகூர் குடும்பத்தைச் சேர்ந்த அபினேந்திரநாத் தாகூர், ககனேந்திரநாத் தாகூர் ஆகியோர்  ‘இந்தியக் கலை என்பது, அதன் கலாசாரம் மற்றும் தத்துவத்தின்படியே இருக்க வேண்டும்’ என்று இ.பி.ஹேவலோடு சேர்ந்துகொண்டு எழுதியும் பேசியும் வந்தனர். புதுமையின் மீதும், ஐரோப்பிய மரபின் மீதும், தைல வண்ணங்களின் ஒளிவீசும் வனப்பின் மீதும் ஈடுபாடு கொண்டவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தார்கள். அவர்கள் ஐரோப்பிய பாணியில் வண்ண ஓவியங்கள், சிற்பங்கள் செய்துவந்தார்கள். இங்கிலாந்தில் அவர்களின் ஓவியங்கள், சிற்பங்கள் குறித்து விமர்சனங்கள் வெளிவந்தன. அதனால், ஆங்கிலம் படித்த மேல்தட்டு மக்களின் கவனத்தைப் பெற்றார்கள். அவர்களில் ஒருவர்தான் தேவிபிரசாத் ராய் சௌத்ரி. அவர்தான், சென்னைக் கலை கைத்தொழில் பள்ளியின் ஜன்னல்களைத் திறந்துவிட்டு ஐரோப்பியக் கலைமரபு முழுவதையும் இங்கே வரவழைத்தவர் என்று சொல்லப்பட்டாலும், வெளிநாடுகளில் அவர் செயற்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இந்தியாவிலும் அதற்குக் கடுமையான எதிர்ப்பு இருந்தது. தமிழ்நாட்டில் க.நா.சுப்ரமண்யம், “தமிழ் இந்திய மரபை அடியோடு வெட்டியவர் ராய்சௌத்ரி” என்று ஒருமுறை கூறினார்.

காலத்தில் வாழும் கலைஞன்

சென்னைக் கலை கைத்தொழில் பள்ளி, ஐரோப்பிய மரபின் எச்சமாகச் செயல்பட ஆரம்பித்திருந்த காலத்தில், எஸ்.தனபால் அங்கு மாணவனாகச் சென்றார். “அது கலைக்கூடமாக இருந்தாலும், ஓரளவு அதிர்ச்சியளித்தது” என்று கூறினார். கற்பனைப் படைப்பாற்றல் என்பதன் மீது நம்பிக்கையற்று, யதார்த்தம் என்று நேரில் பார்த்து நகலெடுப்பது அதைக் கொண்டாடுவது போன்ற விஷயங்கள் அவருக்குப் புதுமையாக இருந்திருக்கின்றன.ஆனாலும், அவர் மனம் கலைகளை அதன் நெடிய மரபுகளைத் தேடியது.சித்தன்னவாசல், மாமல்லபுரம், மதுரை, தஞ்சாவூர், காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிதம்பரம், கும்பகோணம் எல்லாம் சென்றுவந்தார். அந்தப் பயணம் அவருக்குள் நடனத்தின் மீது ஆர்வத்தை உருவாக்கியது. ஆடல்வல்லான் போல ஆடவும் ஆர்வங்கொண்டார். நடனம் என்பது மகளிர் ஆடும் நளினத்தால் கலையாகிறது என்பது இல்லை. கூத்தன் ஆடி, ஆண்மகன் ஆடிக் களிக்கிறான். எனவே, ஒவ்வோர் ஆண்மகனும் ஆடலாம் என்பதை அறிந்துகொண்டார். அவர் நடராஜ்-சகுந்தலா குழுவில் சில ஆண்டுகள் நடனம் ஆடினார். நடன நாடகமொன்றில் பகவான் புத்தராக மௌனமாக வீற்றிருந்தது பெரும் வரவேற்பைத் தந்தது என்றார்.

எஸ்.தனபால் அடிப்படையில் கலைஞர். எனவே, பல துறைகளிலும் தனது  றெக்கைகளை விரித்து மேலே பறந்தார். ஆனால், அவருக்குப் பிடித்தமானதாக எப்போதும் சிற்பத் துறையே இருந்தது. அவர் ஒருகட்டத்தில், கலை கைத்தொழில் கல்லூரியின் சிற்பத் துறைத் தலைவராகப் பதவிபெற்றார். ஆனால், அவர் அதற்கு முன்பாகவே ‘சிற்பி’ என அறியப்பட்டவராக, சமூக பிரக்ஞை மிகுந்தவராக விளங்கினார்.  ‘கலை என்பது கலை மட்டுமே. அதில், அரசியல் சமூகப் பிரச்னைகளுக்கெல்லாம் இடமில்லை’ என்பதைப் புறந்தள்ளினார்.

அவருக்குப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மீது அதிகமான அபிமானம் இருந்தது. சிற்பி, கவிஞர் என்ற நிலையைத் தாண்டி, இருவரும் உற்ற நண்பர்களாக இருந்தார்கள். தனபாலுக்கு கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம், தமிழ்ப் பெரியவர் திரு.வி.க.,  தந்தை பெரியார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற பலரிடம் நல்ல பழக்கம் இருந்தது. அவரது காலத்தில் அவரேதான் சமூகப் பிரக்ஞையுள்ள சிற்பியாகவும் ஓவியராகவும் இருந்தார். அவரின் ‘ஔவையார்’ சிற்பம் அசலான படைப்பு. அவரின் ‘ஔவையார்’ திறந்த வாயுடன் பெருங்குரலில் ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்’ என்று ஒலித்துக்கொண்டேயிருக்கிறாள்.

காலத்தில் வாழும் கலைஞன்

சிற்பி தனபாலின் சிற்பங்கள், மெருகு குலையாத அழகு மிளிர்கிறவை. தனித்தன்மையும் பொதுத்தன்மையுங் கொண்டவை. அதோடு, நெடிய பாரம்பர்யத்தில் வருகின்றவை. 1,800 ஆண்டுகளுக்கு முன்னால் சோழ சாம்ராஜ்யத்தில், கலைஞர்கள் உருவாக்கிய ஆடல்வல்லான் - நடராஜர் செப்புத் திருமேனிகள், சிற்பக் கலைகளின் அடைய முடியாத உச்சமாக இருக்கின்றன. அதற்குப் பின்னால் உருவாக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் பேயுருச் சிற்பங்கள், சொல்லப்பட்டக் கதையைப் புறந்தள்ளி கலையின் பூரணத்துவம் பெற்றிருக்கிறது. ஒரு படைப்பு என்பது, தனிப்பட்ட ஒரு மனிதனால் உருவாக்கப்படுகிறது என்றாலும், அது அவன் சமூகம் சார்ந்தது. அதன் வாழ்வியல், தத்துவம், கலைநேர்த்தி என்பதன் வெளிப்பாடாக உள்ளது.

பிரெஞ்சு நாட்டு நவீனச் சிற்பியான அகஸ்டீன் ரூதேன்,  அசலான சிற்பங்களைக் காண உலகப் பயணம் மேற்கொண்டு தமிழ்நாடு வந்தான். சென்னை அரும்பொருள் காட்சியகத்தில் உள்ள திருவாலங்காடு ஆடல்வல்லான் செப்புத் திருமேனியைக் கண்டு, வியப்புற்று, இனி காண்பதற்கு உலகத்தில் சிற்பம் ஏதுமில்லை என்று சொல்லிவிட்டுச் சொந்த நாட்டிற்குத் திரும்பிப்போய்விட்டான்.

‘ஆடல்வல்லான்’, தமிழ் மக்களின் தத்துவ ஞானம், மேதைமையில் பால் பேதமற்ற தன்மை, மானிட உடம்பின் வடிவநேர்த்தி, அதோடு ஒரு படைப்புக் கலைஞனின் தணியாத கலைவேட்கை என்று பலவற்றையும் சேர்த்துச் சொல்கிறது.

‘ஒரு படைப்புக் கலைஞன், ஒரு படைப்பை உயிர்த்தன்மையுடன் உருவாக்குவதே அபூர்வம்’ என்று சொல்லப் பட்டுவருகிறது. அதைக் கலைஞர்கள் என்று பெயரெடுத்துள்ள பல கலைஞர்கள் மெய்ப்பித்துக் கொண்டே வருகிறார்கள்.

அசலான வெகுசில கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சிற்பி எஸ்.தனபால். அவரின் ‘தாயும் சேயும்’, ‘ஔவையார்’,  ‘பாய்ந்தோடும் குதிரை’ சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய ஆக்கங்கள். அவரின் படைப்புகள், வெற்றிபெற்ற இன்னொருவரின் படைப்பிலிருந்து உருவாக்கப்பட்டவை அல்ல. அவரின் கலையாளுமையால், கற்பனை வளத்தால், இலக்கிய, தத்துவ, சரித்திரத்தின் வழியாகப் பெற்றதிலிருந்து உருவாக்கப்பட்டவை. ஒருமுறை அவரிடம்,  “உங்கள் படைப்புகளில் பிரிட்டிஷ் சிற்பி ஹென்றி மூரின் பாதிப்பு இருக்கிறது’ என்று கலை விமர்சனங்கள் எழுதுகிறார்களே?” என்று கேட்டேன்.

“இல்லை. நான் எந்தவிதத்திலும் ஹென்றி மூரால் பாதிக்கப்பட்டவன் இல்லை. ஹென்றி மூர் படைப்புகளை, கல்லூரியில் புத்தகங்களில் பார்த்திருக்கிறேன். பல சிற்பங்களை நான் உருவாக்கிய பிறகு, ஒருமுறை லண்டனுக்குச் சென்றபோது, ஹென்றி மூர் படைப்புகளின் அசலையும்கூடப் பார்த்தேன். என்னளவில் எனக்கும் ஹென்றி மூருக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. ஆனால் நமது விமர்சனங்கள், வெறும் படிப்பாளிகள் தாங்கள் படித்துத் தெரிந்துகொண்டவற்றையெல்லாம் இன்னொரு படைப்பின் மீது ஏற்றி வைத்துவிடுவதாக இருக்கிறது. அது இலக்கியத்தில் அதிகம். சிற்பம், ஓவியத்தில் குறைவு. ஆனால், தற்போது படிப்பு அதிகமாவதால், இங்கும் சிக்கல்கள் ஏற்படுகின்றன” என்றார்.

1992-ம் ஆண்டில், சிற்பி தனபால் பற்றி தமிழ்நாடு நுண்கலைக் குழுவிற்காக ஓர் ஆவணப்படம் தயாரித்தேன். அப்போது, அவருக்கு 73 வயதாகி இருந்தது. ஆனால், ஓவியம் வரைவதிலும் சிற்பம் உருவாக்குவதிலும் பேரார்வம் கொண்டிருந்தார். அவருக்கு ராய் சௌத்ரி மீது அதிகமான அபிமானம் இருந்தது. அவர் உருவாக்கிய உழைப்பாளர்கள் சிலையில், தான் ஓர் உழைப்பாளியாக நெம்புகோல் பிடித்துக்கொண்டிருப்பதாகக் கூறினார். தன்னோடு இருந்த கிருஷ்ணாராவ், எஸ்.முனுசாமி, சந்தானராஜ், பணிக்கர் அந்தோணி தாஸ், சிற்பி மூக்கையா, சிற்பி ஜானகிராமன் பற்றி அடிக்கடி நினைவு கூர்ந்தார்.

கே.எம்.ஆதிமூலம். ஆர்.பி.பாஸ்கரன், அல்போன்சா அருள்தாஸ், வாசுதேவ், பி.கிருஷ்ணமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, ஹரிதாசன், நந்தகோபால் போன்றவர்களெல்லாம் அவரின் வாரிசுகள். ஆனால், அவர்களில் ஒருவரும் அவரைப் பின்பற்றியவர்கள் இல்லை. ஒவ்வொருவரும் தன் வழியாகவே கலைஞர்களாக உருவாக வழிகாட்டினார் தனபால்.

அவரின் ஆவணப்படத்தில் இரண்டோர் ஓவியக் கலைஞர்கள் இடம்பெற்றால் சரியாக இருக்குமென்றுபட்டது. ‘யாரை அழைக்கலாம்?’ என்று கேட்டதற்கு, ‘ஆதியை அழையுங்கள்!’ என்றார். அவர், கே.எம்.பணிக்கரோடு சேர்ந்து சோழ மண்டல ஓவியர் கிராமத்தை உருவாக்கியதில் முக்கியப் பங்களிப்பாளராக இருந்தார். ஆனால், பின்னாளில் ஏற்பட்ட பல செயல்பாடுகளால் அவர் வெளியில் தள்ளப்பட்டார்.

1995-ம் ஆண்டில், சென்னை நந்தனம் குடியிருப்புப் பகுதியின் செயலாளராக இருந்தேன். மகாத்மா காந்தியின் பிறந்த நாளில், மரம்நடு விழாவிற்கு ஏற்பாடு செய்து, எழுத்தாளர் ஜெயகாந்தனையும் சிற்பி தனபாலையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்தோம். இருவரும் காலைப்பொழுதில் வந்து மரக்கன்றுகள் நட்டார்கள். இன்று, எங்கள் பகுதி ஒரு சோலைவனம் மாதிரி இருக்கிறது என்று பலரும் சொல்கிறார்கள். நாங்கள் அவர்களிடம் ‘இவையெல்லாம் மாபெரும் தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன், மகத்தான சிற்பி தனபால் இருவரின் திருக்கரங்களால் நடப்பட்டவை’ என்று சொல்கிறோம்.

“நான் உருவாக்கிய மகாத்மா காந்தி திருவுருவச் சிலை ஒன்றை அன்பளிப்பாகத் தருகிறேன். ஒரு மேடை கட்டி இங்கே வையுங்கள். நான் நிதி உதவிகூட செய்கிறேன்” என்று தனபால் கூறினார். ஆனால், அது நிகழாமல் போய்விட்டது.

‘கலைஞர்கள் மரணிப்பதுண்டு. கலைகள் ஒருபோதும் மரணிப்பதில்லை’ என்று சொல்லப்படுவதுண்டு. சர்வதேசச் சிற்பியான எஸ்.தனபாலின் கலையையும் மனதில்வைத்தே அப்படிச் சொல்லப் பட்டிருக்கிறது என்று கருதுகிறேன்!