Published:Updated:

தமிழ் அழகியலைச் சுவாசித்த மகா கலைஞன்

தமிழ் அழகியலைச் சுவாசித்த மகா கலைஞன்
பிரீமியம் ஸ்டோரி
தமிழ் அழகியலைச் சுவாசித்த மகா கலைஞன்

இந்திரன்

தமிழ் அழகியலைச் சுவாசித்த மகா கலைஞன்

இந்திரன்

Published:Updated:
தமிழ் அழகியலைச் சுவாசித்த மகா கலைஞன்
பிரீமியம் ஸ்டோரி
தமிழ் அழகியலைச் சுவாசித்த மகா கலைஞன்
தமிழ் அழகியலைச் சுவாசித்த மகா கலைஞன்

நாற்புறமும் தொலைக்காட்சி, கணினி, கைப்பேசி என வந்துவிழும் பிம்பங்களின் நெரிசலில், நாம் நசுங்கிக்கொண்டிருக்கும் காலம் இது. இக்காலகட்டத்தில் நம்மைப் பண்பாட்டுரீதியாகவும் அழகியல்ரீதியாகவும் மேம்படுத்துகிற ஓவியம், சிற்பம் போன்ற கலைகளை உபாசிக்கும் கலைஞர்களைப் பற்றிப் பேசுவது ஒரு கணம் அபத்தமாகவே தோன்றலாம்.

என்ன செய்வது? தமிழனுக்கான தற்கால கலை வரலாற்றைக் கட்டியெழுப்பாமல், ஒரு பாலைவனமாகத் தமிழகம் இருப்பதைப் பார்க்கும்போது மனம் பதறுகிறது. ஒவ்வோர் ஓவியரும் சிற்பியும் மறையும்போதும் அவர்களுடன் ஒரு கலைவரலாறு மறைந்து போகிறது.

ஒவ்வொரு தனிமனிதனும் கலை சார்ந்த சுய அனுபவங்களைப் பதிவுசெய்து வைத்தால், அதுவொரு நல்ல தொடக்கமாக அமையும் எனும் நம்பிக்கையில் எழுதப்படுவதுதான் இந்த எனது பழைமைக்குள் ஒரு பயணம். எஸ்.தனபால் எனும் பெயரில் தமிழகத்தின் ஓவிய, சிற்பப் பிரதேசத்தில் உலவிய ஒரு மாபெரும் கலை ஆளுமையைப் பற்றிய என் நினைவுகளையும் செவிவழிச் செய்திகளையும் நான் இங்கே தொகுக்கிறேன். 

தமிழ் அழகியலைச் சுவாசித்த மகா கலைஞன்

எஸ்.தனபால் தனது 81-வது வயதில் உயிர்நீத்தபோது, எனக்கு 52 வயது. ஓர் ஓவியரின் மகனாகப் பிறந்த காரணத்தால், சிறுவயதுதொட்டே ஓவிய உலகின் கதைகளைக் கேட்டும், சென்னை ஓவியக் கல்லூரிக்கு எனது தந்தையாருடன் அடிக்கடிச் சென்று ஓவிய அனுபவங்களை நேரிடையாகப் பெற்றும் வளரும் பாக்கியம் பெற்றேன். பிரிட்டீஷ்காரர்களால் 1850-ம் ஆண்டு,  மே மாதம் நிறுவப்பட்ட ‘தொழிற்கலைப் பள்ளி’யில் (School Of Industrial Arts, தேவிபிரசாத் ராய் சௌத்ரியிடம் மாணவராகக் கலை பயின்று நீர்வண்ண ஓவியத்தில் தேர்ச்சி பெற்றவர் என் தந்தை ஓவியர்ஏ.பி.கஜேந்திரன். தனது ஓவியக் கல்வி முடிந்த பிறகு , சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியான சர் வெங்கட சுப்பாராவ் நிறுவிய சேவாசதன் பெண்கள் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணிசெய்தார். ஓவியர்களுக்குச் சமூக அந்தஸ்து இல்லாதிருந்த காலம் அது.

தமிழ் அழகியலைச் சுவாசித்த மகா கலைஞன்தமிழகத்தின் நவீன கலைவரலாற்றில் மிக முக்கியமான பங்களிப்புகளைச் செய்த மும்மூர்த்திகளான - தேவிபிரசாத் ராய் சௌத்ரி (1899 – 1975), கே.சி.எஸ்.பணிக்கர் (1911 – 1977), எஸ்.தனபால் (1919 – 2000) ஆகியோர் பற்றிய கதைகளைச் சொல்லிச் சொல்லியே என் தந்தை என்னை வளர்த்தார். இதனால், வாழ்ந்த காலத்தில் அவர்களை என் தந்தையுடன் நேரில் தேடிச்சென்று சந்திக்கும் நோக்கமும் பாக்கியமும் பெற்றேன்.

இந்த முப்பெரும் கலைஞர்களில் எனக்கு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது சிற்பி எஸ்.தனபால் எனும் கலை ஆளுமையுடன்தான். எளிமையான நட்பும் சிக்கலற்ற அன்பும்கொண்ட தன் கலையை ஒரு வாழ்க்கையாக வாழ்ந்த சிற்பி
எஸ்.தனபால் குறித்து அவரது சமகாலக் கலைஞரான கே.சி.எஸ்.பணிக்கர் என்ன சொல்கிறார் என முதலில் கேட்போம்.

“தென்னிந்தியாவில் பல்லவ, சோழர் கால ஓவியங்களின் மிகுந்த நேர்த்தியைத் தொடரும் உணர்வை எஸ்.தனபாலின் திறமையான, மெலிதான சித்திரங்களில் கவனித்தவர்கள், தனக்கான தனித்தரமுள்ள ஓர் ஓவியராக இவர் மலர்ந்தது குறித்து வியப்படையமாட்டார்கள். தனபாலின் சிற்பங்களில் உள்ள இந்தியத்தனமான அமைப்பு, வரப்போகும் காலங்களில் அவருக்கு முழுக்க முழுக்கத் துணைநிற்கப்போகின்றது.”

எஸ்.தனபால் ஓர் இளம் சக்தியாகப் பரிமளிக்கத் தொடங்கியபோது, ஓவிய மேதை கே.சி.எஸ்.பணிக்கரின் மிக முக்கியமான கவனிப்பு இது.  ‘மதறாஸ் ஓவியப் பள்ளி’யின் முதல்வராக இருந்த கே.சி.எஸ்.பணிக்கருக்கு அடுத்தபடியாக இந்த நிறுவனத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற எஸ்.தனபால், தனது ஆசிரியப் பணியின் தொடக்க நாள்களிலிருந்தே மாணவர்களின் மீது தனி அக்கறைகொண்ட உன்னதமான ஆசிரியராக விளங்கினார்.

“எஸ்.தனபால் எனும் சிற்பிக்கும் எஸ்.தனபால் என்கிற மனிதாபிமானம் மிக்க ஆசிரியருக்கும் போட்டிவைத்தால், என் தனிப்பட்ட கருத்தின்படி எஸ்.தனபால் என்கிற சக மனிதர்களின் மீது எல்லையில்லா அன்புவைத்த ஆசிரியரே வெற்றிபெறுவார் என்றே சொல்வேன்” -இது, அவர் காலத்தில் நெருங்கிப் பழகி வாழ்ந்த மூத்த சிற்பியும் சென்னைக் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான எஸ்.முருகேசனின் வார்த்தைகள்.

1951-ல் சென்னைக் கலைப்பள்ளியில் (அப்போது அதன் பெயர் The School Of Arts. அது கல்லூரியாகக் கருதப்படாத காலம்) அங்கு படிப்பதற்கு கல்விக் கட்டணம் 1 ¼ ரூபாய் மட்டும்தான். அந்தக் குறைந்த தொகையைக் கட்ட முடியாத ஏழை மாணவர்களும் இருந்தார்கள். எனவே, பணம் கட்டும் கடைசி நாளன்று அப்போது காசாளராக இருந்தவரின் பக்கத்தில் சென்று அமர்ந்துவிடுவார் அப்போதைய ஆசிரியரான எஸ்.தனபால். யாரெல்லாம் பணம் கட்ட முடியவில்லையோ அவர்களது  கல்விக் கட்டணத்தை எஸ்.தனபால் தனது கைப்பணத்திலிருந்து கட்டிவிடுவார். இப்படி, தான் பணம் கட்டிவிட்டதை மாணவர்களுக்கு அவர் தெரிவிக்கக்கூட மாட்டார். பிறகு அந்தக் காசாளர் சொல்லித்
தான் மாணவர்களுக்குத் தெரியவரும்.

எஸ்.தனபாலுக்கு வாய்த்த துணைவியார் திருமதி மீனாட்சி அம்மையார், விருந்தோம்பலில் மிகவும் சிறந்து விளங்கினார். சேலத்தைச் சேர்ந்த கே.எம்.கோபால், கும்பகோணத்தைச் சேர்ந்த வீர.சந்தானம் போன்ற பல கலை மாணவர்களை தனபால் தனது வீட்டில் தங்கவைத்து வளர்த்தார்.

சோழமண்டல ஓவியர் கிராமத்தில், தாந்த்ரீக நோக்கிலான விநாயக வடிவங்களின் உலோகப் புடைப்புச் சிற்பங்களைச் செய்து, உலக அளவில் பெயர்பெற்ற கே.எம்.கோபாலுக்கு 1993-ல் சென்னை ‘லலித் கலா அகாடமி’யில்  ‘காணபத்யம்’ என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியை நான் ஏற்பாடு செய்தேன். அதற்கான கலை விமர்சனத்தை ஆங்கிலத்தில் எழுதி, அழகிய கையேடு ஒன்றை நானே வடிவமைத்து அச்சிட்டேன். அந்நிகழ்ச்சியில் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த  ஆர். வெங்கட்ராமனை அக்கண்காட்சியைத் திறந்துவைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன். அத்திறப்பு விழாவில், எஸ்.தனபாலை அந்த மேடையில் கே.எம்.கோபால் பற்றிப் பேச விண்ணப்பித்தேன். அப்போது, தனபால் மிகவும் வயது முதிர்ந்து தளர்ந்துபோயி ருந்தார். அந்த மேடையில், ‘கே.எம்.கோபால் எனும் துடுக்கான ஆனால் கலைதாகம் கொண்ட ஒரு சிறுவனை எப்படி ஒரு சிறந்த கலைஞனாக மாற்றினார்’ என்பதை அவரது வாய்மொழியாகவே விளக்கியபோது அவரது கலையாளுமை வெளிப்பட்டது.

இதேபோல் 1987-ல் நானும் எஸ்.தனபாலும், சென்னை ஜெர்மன் ஹாலில் நடைபெற்ற ஓவியர் வீர.சந்தானத்தின் ஈழப் போராட்ட ஓவியங்கள் குறித்து நான் எழுதிய  ‘முகில்களின் மீது நெருப்பு’ எனும் ஓவிய நூல் வெளியீட்டு விழாவில், ஒரே மேடையில் பேசினோம். அப்போது அக்கூட்டத்தில் ஓவியர் கே.எம்.ஆதிமூலம், பழ.கருப்பையா, வீர.சந்தானம் போன்றவர்களும் இருந்தார்கள். அந்தக் கூட்டத்தில்  எஸ்.தனபால், ‘கும்பகோணத்தில் பிறந்து உப்பிலியப்பன் கோயில் கலை வெளிப்பாடுகளைக் கண்டு வளர்ந்த வீர.சந்தானத்தை, எப்படித் தனது வீட்டிலேயே தங்கவைத்து ஒரு கலைஞனாக வளர்த்தெடுத்தார்’ என்பதை அழகுற விளக்கிப் பேசினார்.  

தமிழ் அழகியலைச் சுவாசித்த மகா கலைஞன்

சரி… இப்போது எஸ்.தனபால் தன்னைப் பற்றிய ஒரு வாக்குமூலமாக என்ன சொல்கிறார் என்பதைக் கேட்போம்.

“ ‘மெட்ராஸ் ஸ்கூலை’ச் சேர்ந்த மற்ற ஓவியர்களைப்போன்றே, வங்காள ஓவிய இயக்கமும் மேலை நாட்டின் இம்ப்ரஷனிஸ இயக்கமும்தான் என் மீது பிரதான பாதிப்புகளை ஏற்படுத்தின. இவற்றை நான் எனது ஆசிரியரான தேவிபிரசாத் ராய் சௌத்ரியிடமிருந்துதான் பெற்றேன். இவற்றில், வங்காள ஓவிய இயக்கம் எனது உணர்வுக்கும் சிந்தனைக்கும் மிக அருகில் இருப்பதாகத் தெரிந்ததால், நான் வங்காள ஓவிய இயக்கத்தினாலேயே அதிகம் கவரப்பட்டேன். நந்தலால் போஸ் வரைந்த சித்திரங்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. ஆனால், நவீனத்துவம் குறித்த எனது சொந்த அனுபவங்கள் இந்த வலிமையான பாதிப்புகளையும் கடந்து, என் சுயதரிசனத்தைக் கண்டெடுக்கவைத்தன.” என்று எஸ்.தனபால் தனது கண்காட்சிக் குறிப்பேடு ஒன்றில் குறிப்பிடுகிறார்.

தனது பாதிப்புகளைப் பற்றி சொன்ன பிறகு, இறுதியாகச் சொல்லும் வார்த்தைகள் மிக முக்கியமானவை. ‘அவரது சுயதரிசனத்தால் கண்டெடுத்தவை என்ன?’ என்ற கேள்வியை நாம் எழுப்பினோமானால், அதுதான் அவரது முக்கியப் பங்களிப்பு என்பதை நாம் கண்டுகொள்ளலாம்.

எஸ்.தனபாலின் மேற்சுட்டிய வார்த்தைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அவரது படைப்புகளை ஆராய்கிறபோது, எஸ்.தனபால் இந்த மண்ணின் அடையாளம்கொண்ட ஒரு தமிழ் அழகியலைக் கட்டமைத்து இருப்பதை நாம் உணரலாம்.

அவரது ஓவியங்களில், தைல வண்ண ஓவியங்கள் குறைவாகவும் டெம்பரா வண்ணம், நீர் வண்ணம், ‘வாஷ் டிராயிங்’ என்று அழைக்கப்படும் கோடுகளும் நீர் வண்ணமும் இணைந்த ஓவியப் படைப்புகள் ஆகியவையே அதிகம் என்பதை நாம் கவனிக்க வேண்டும். இன்று சென்னை ராஜ்பவனில் சேகரிப்பிலிருக்கும் மகாத்மா காந்தியின் ஓவியம்கூட நீர்வண்ண ஓவியம்தான். இதில், வங்காள கலை மேதை நந்தலால் போஸ் படைத்த காந்தியையும் தனபாலின் காந்தியையும் ஒப்புநோக்கினாலே, தனபாலின் ஓவிய நேர்த்தி உலகத்தரம் வாய்ந்ததாக இருப்பதை நாம் அறிய முடியும். இந்த கவர்னர் மாளிகை காந்தி ஓவியத்தைப் பற்றிய மிக முக்கியமான ஒரு வரலாற்றுச் செய்தியை நான் இங்கு சொல்லத் தவறக் கூடாது என்று நினைக்கிறேன்.

1956-ல் ‘மதராஸ் குரூப்’ (Madras Group) என்ற பெயரில், சென்னை  ஓவியர்களின் ஓவியக் கண்காட்சி ஒன்றை கே.சி.எஸ் பணிக்கர் மற்றும் எஸ்.தனபால் ஆகியோர் முன்னின்று நடத்தினார்கள். இதில் கே.சி.எஸ்.பணிக்கர், எஸ்.தனபால்,  எல்.முனுசாமி, சந்தானராஜ், நரசிம்மமூர்த்தி, ஸ்ரீனிவாசலு, எஸ்.முருகேசன் ஆகிய 11 ஓவியர்கள் பங்குகொண்டனர். ஒரு கலை விமர்சகன் என்ற வகையில் இந்த ஓவியக் கண்காட்சி, தமிழகத்தின் தற்காலக் கலை வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் கருதுவேன். ஏனெனில், இந்தக் கண்காட்சியைத் திறந்து வைப்பதற்காக இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கு அழைப்பு கொடுத்திருந்தார்கள். அத்தருணத்தில் ராஜாஜி வர இயலாததால், தனக்குப் பதிலாக அப்போதைய மதராஸின் கவர்னராக இருந்த ஸ்ரீபிரகாசாவைக் கண்காட்சியைத் திறந்து வைக்குமாறு பணித்தார். ஸ்ரீபிரகாசா, கே.சி.எஸ் பணிக்கரின் ஒரே வண்ணத்தில் அமைந்த ஓர் ஓவியத்தையும், தனபாலின் ஒரு  நீர்வண்ண ஓவியத்தையும் அந்தக் கண்காட்சியில் வாங்கினார். அதில் ஓர் ஓவியம்தான் கவர்னர் மாளிகையில் உள்ள எஸ்.தனபாலின் மகாத்மா காந்தி ஓவியம்.

எஸ்.தனபால், தனது சிற்பங்களிலும் அபூர்வமான ஒரு தமிழ் அழகியலைப் படைத்துக் காட்டுவதைப் பார்வையாளர்கள் உணர்வார்கள். வங்காளக் கலைபாணியில் நந்தலால் போஸ் போன்றவர்கள் தங்களின் இசை லயமான கோடுகளை அஜந்தா, எல்லோராவின் படைப்புகளிலிருந்து பெற்றார்கள். வங்காளப் பாணியினால் கவரப்பட்ட எஸ்.தனபால், சோழர்காலச் சுவரோவியங்களின் இசை லயமான கோடுகளைப் பின்பற்றினார்.

தமிழகச் சுவரோவியங்களில் காணப்படும் வடிவங்கள், வண்ணங்களால் நிரப்பப் பட்டிருப்பினும் அவற்றைத் தீர்க்கமான கோடுகளால் வரையறுத்தார்கள் தமிழர்கள். இந்த மரபை அறிய நாம் சிறிது சங்க இலக்கியத்துக்குள் நுழைவோம்.

இதன் மரபை ‘மணிமேகலை’ காப்பியத்தில் நாம் காண முடிகிறது. மணிமேகலை, ஆதிரையின் முன்னால் நிற்பதை வர்ணிக்க வருகிற இடத்தில், சாத்தனார் அவளை ‘புனையா ஓவியம்போல் நின்றாள்’ என்கிறார்.  ‘புனையா ஓவியம்’ என்றால் என்ன? ஓவியத்தில், வண்ணங்களால் வடிவங்களைப் புனைந்து அலங்காரப்படுத்துவதற்கு முன்னால், அந்த வடிவத்தை அடிப்படையில்  தீர்க்கமான கோடுகளால் வரையறுத்துக் கொள்ளும் பழக்கத்தில் இருந்தார்கள். இப்படி, அடிப்படையில் கோடுகளால் வரைந்துவிட்டு வண்ணம்கொண்டு அதை அலங்கரிக்கும் முன்னர் இருக்கும் வடிவமே புனையா ஓவியம். கணிகையர் குலத்தில் பிறந்து ஆடல், பாடல், அலங்காரம் என்று இருக்க வேண்டிய மணிமேகலை இவற்றையெல்லாம் துறந்து, துறவாடையில் நின்ற சோகத்தை சாத்தனார் ‘புனையா ஓவியம்’ எனும் சொல்லால் விளக்குகிறார். இத்தகைய அடிப்படைச் சித்திரத்தில் எஸ்.தனபால் தன்னிகரற்றவராகத் திகழ்ந்தார். இதனால் எஸ்.தனபால் தெரிந்தோ தெரியாமலோ தற்காலக் கலையில் தமிழ் அழகியல் ஒன்றுக்குப் பங்களித்த முக்கியமான ஒருவராகிறார்.

மேலை நாட்டுச் சிற்பிகளான ரூதின், ஹென்றி மூர் போன்றவர்களால் பாதிக்கப்பட்டிருப்பினும், எஸ்.தனபால் பல்லவர்கால, சோழர்காலச் சிற்பங்களாலும் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதையும் நாம் அறிய முடியும். இந்த இடத்தில், தனது உச்சத்தில் இருந்த 1960-1980களின் இந்தியாவில் நிலவிய சமூக, அரசியல், பொருளாதார நிலைமைகள் எஸ்.தனபாலின் படைப்புகள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

உருவச் சிற்பங்களைப் படைப்பதில் தனித் தேர்ச்சி பெற்றிருந்த எஸ்.தனபால், தனது சிற்பத் திறமையை பெரியார், திரு.வி.க., பாரதிதாசன், சொக்கலிங்கம் என்று பல முக்கிய சமூக, அரசியல் தலைவர்களின் சிற்பங்களைப் படைத்ததன் மூலமாக உலகிற்குக் காட்டினார். அவற்றில் அவரது சிற்பத் திறமை உன்னதமாக இருப்பதை நாம் காணலாம். சிற்பத்தில் தனது குருவாக விளங்கிய ராய் சௌத்ரியின் பாதிப்பில், தனபால் பல உருவச் சிற்பங்களைச் செய்யத் தொடங்கினார்.

இவரது ‘தாயும் சேயும்’ எனும் சிற்பம் மிக முக்கியமானது. பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் மிக முக்கியமானவரான சுந்தரமூர்த்தியுடன் நல்ல நட்புபூண்டிருந்தார். பொய்க்கால்களை மறைக்கும்விதமாகப் பெண்கள் நீளமான பாவாடை அணிந்து ஆடுவார்கள். இத்தகைய பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடுகிற ஒரு நாட்டுப்புறக் கலைஞரான ஒரு பெண்ணின் உருவத்தைத்தான் இந்த ‘தாயும் சேயும்’ சிற்பத்தில் தனபால் சித்திரிக்கிறார். தனபால் ஓர் ஓவியராக வருவதற்கு முன்னரே, ஒரு பரதநாட்டியக் கலைஞராக அப்போது பிரபலமாக இருந்த நடராஜ் - சகுந்தலா நாட்டியக் குழுவில் இருந்திருக்கிறார். எனவேதான், அவரது ஓவியங்களிலும் சிற்பங்களிலும் இசை லயமாக நடனமாடும் கோடுகளை நாம் காணமுடிகிறது.

இவர் படைத்த பெரியார் சிற்பம் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தனது சிற்பத்தை எஸ்.தனபால் படைப்பதற்காக, திருச்சியில் இரண்டு நாள்கள் முழுமையாக ஒதுக்கி, ஒரு மாடலாக அமர்ந்திருந்தார் பெரியார். அது, ஒரு சிற்பிக்குக் கொடுக்கப்
பட்ட மிகப்பெரிய கௌரவம் என்றே சொல்ல வேண்டும். அந்த இரண்டு நாள்களும், தனபாலுடன் திருச்சி சென்ற இன்றைய மூத்த சிற்பி எஸ்.முருகேசன் சொல்லக் கேட்பது அலாதியான அனுபவம்.

பெரியார் சிற்பத்தைச் செய்வதற்காக, முதலில் பெரியாரின் பலவித கோணத்தில் அமைந்த புகைப்படங்களைப் பெற்று, அவற்றின் அடிப்படையில் ஓர் அடிப்படையான மார்பளவுச் சிற்பத்தை தனபால் சென்னையி லேயே செய்து கொண்டிருக்கிறார். பின்னர் திருச்சி சென்று, பெரியாரை இரண்டு நாள்கள் அசையாமல் அமரவைத்து பிற விவரணைகளைச் செய்து முடித்திருக்கிறார். குறிப்பாக, பெரியாரின் தாடி ஒருவிதமான தனித்துவம் மிக்கது. அதன் சில இடங்களில் அதிக கேசங்களும் சில இடங்களில் தோல் தெரிவதுமான அந்தத் தாடியை மிக நேர்த்தியாக தனபால் செய்து முடித்திருந்தார்.

இதேபோன்று, தமிழ்த் தென்றல் திரு.வி.க-வின் சிற்பத்தையும் செய்து தமிழ் அழகியலுக்குப் பங்களித்தார் தனபால். இந்தச் சிலை தோன்றிய கதையும் சுவாரஸ்யமானது. அப்போது திரவியம் ஐ.ஏ.எஸ், தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்தார். அப்போது திரு.வி.க நகர் என்பதைச் சென்னையில் சேத்துப்பட்டில் அமைத்தபோது, திரவியம் அந்த நகரில் திரு.வி.க-வின் சிற்பம் ஒன்றை நிறுவ வேண்டும் என்று திட்டமிட்டார். அந்தச் சிற்பம் செய்யும் பொறுப்பு அப்போதைய தமிழகத்தின் தலைசிறந்த சிற்பியாக விளங்கிய எஸ்.தனபாலிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சிற்பத்தைச் செய்வதற்காக, திரு.வி.க தனது ‘நவசக்தி பிரசுராலயம்’ அலுவலகத்தில் ஐந்து நாள்கள் அசையாமல் அமர்ந்து ஒத்துழைத்தார். சிற்பம் மிகச் சிறப்பாக அமைந்ததனால் மகிழ்ந்த திரவியம், எஸ்.தனபாலுக்குக் கௌரவம் சேர்க்கும்விதமாக, பேசிய தொகையைப்போல் இரட்டிப்பு மதிப்பூதியம் கொடுத்துப் பாராட்டினார்.

கலையும் வாழ்க்கையும் தனிமனிதனிடம் எவ்வாறு முழுமையடைகின்றன என்பதை, சிற்பி எஸ்.தனபால் பிறந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் நாம் உணர்ந்துகொள்ள முடியும். காரணம், எஸ்.தனபால் தன் கலையை வாழ்ந்திருக்கிறார்; கலையாகவும் வாழ்ந்திருக்கிறார்.