Published:Updated:

இந்த நாடகத்தில் நீங்களும் நடிக்கிறீர்கள்! - சிறுகதை

இந்த நாடகத்தில் நீங்களும் நடிக்கிறீர்கள்! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
இந்த நாடகத்தில் நீங்களும் நடிக்கிறீர்கள்! - சிறுகதை

இந்த நாடகத்தில் நீங்களும் நடிக்கிறீர்கள்! - சிறுகதை

இந்த நாடகத்தில் நீங்களும் நடிக்கிறீர்கள்! - சிறுகதை

இந்த நாடகத்தில் நீங்களும் நடிக்கிறீர்கள்! - சிறுகதை

Published:Updated:
இந்த நாடகத்தில் நீங்களும் நடிக்கிறீர்கள்! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
இந்த நாடகத்தில் நீங்களும் நடிக்கிறீர்கள்! - சிறுகதை

ழ்ந்த உறக்கத்திலிருக்கும் இவன் ஜபு. முழுப் பெயர், `ஜனநாயக புத்திரன்.’ ஜனநாயகமே வெகுவாகச் சுருங்கிப்போய்விட்ட காலத்தில், தன் பெயர் மட்டும் இத்தனை நீட்டமாய் எதற்கு எனச் சுருக்கி, `ஜபு’வாகிவிட்டான். அவன் வீட்டு அழைப்புமணிதானே அடிக்கிறது, உங்களுக்கு ஏன் பதற்றம்? அவன் கண் விழித்து, கதவைத் திறக்கட்டும். கவனித்தீர்களா, அழைப்புமணியின் ஒலியைக் கேட்டு, அவன் அரக்கப்பரக்கவெல்லாம் எழுந்திருக்கவில்லை என்பதை.

இந்த நாடகத்தில் நீங்களும் நடிக்கிறீர்கள்! - சிறுகதை

அழைப்புமணியோசை நின்றபாடில்லை. பக்கத்து ஃபிளாட் ஆள்கள்கூட சத்தத்தால் எழுந்து வந்துவிட்டார்கள். அவனானால் யாராக இருக்குமென யோசித்துக்கொண்டிருக்கிறான். `நியூஸ் பேப்பர்... இருக்காது. அந்தப் பொடியன் கீழிருந்தே குறிபார்த்து வீசுகிறவன். உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக். துல்லியமாக எய்திடும் இவனையெல்லாம் வில்லேற்றம், ஈட்டி எறிதல், துப்பாக்கிச் சுடுதல், கிரிக்கெட்டில் சேர்க்காதிருப்பதால்தான் நம் நாட்டுக்குத் தகரப் பதக்கம்கூட கிடைப்பதில்லை’ எனக் கிளை பிரிந்த யோசனையை, அழைப்புமணியின் தொடரொலி திருப்பியது.

`இது பால்கார கிருஷ்ணனாகத்தான் இருக்கும். அவன்தான் எப்பவும் காலிங் பெல் மீது ஏறி நின்றுகொண்டிருப்பதுபோல இடைவிடாது அடிப்பான். எத்தனையோ முறை சொல்லியாகிவிட்டது. அவன் திருந்துகிறபாடில்லை. கேட்டால், `ஆறு மணிக்கு அப்புறம் என்ன சார் தூக்கம்? நானெல்லாம் கிரேடு இறக்க தினத்துக்கும் விடிகாலம் மூணு மணிக்கு முழிக்கிறேன்’ என்பான். காந்தும் கண்களின் எரிச்சலோடு கடிகாரத்தைப் பார்த்தால், மணி நான்குதான் ஆகியிருந்தது. அவன் வரும் நேரமும் இதுவல்ல. ஒருவேளை ஊரிலிருந்து யாராவது... அவர்களானால் போனில் தெரிவிக்காமல் வர மாட்டார்களே! அப்படியானால் திருட்..? ஹா... இது கேட்டேட் கம்யூனிட்டி. 24 X 7 X 365 செக்யூரிட்டியின் கண்காணிப்பை மீறி தூசு தும்புகூட நுழைய முடியாது. ஃப்ளாட் ஓனரிடம் முன்னனுமதி வாங்காமல் தாய்-தகப்பனைக்கூட செக்யூரிட்டிகள் உள்ளேவிட மாட்டார்கள். வேறு யார்?’

செக்யூரிட்டியைத் தொலைபேசியில் அழைத்தான். ``நம்ம ரெசிடென்ட்ஸ் அசோசியேஷன் செக்ரட்ரிதான் சார். கதவைத் திறங்க’’ செக்யூரிட்டியின் பதில், மேலும் குழப்பிவிட்டது.

`இந்நேரத்துக்கு செக்ரட்ரியா? நேற்றிரவு போதை அதீதமாகி ஏதும் பிரச்னை பண்ணி, புகாராகிடுச்சா?’ என்றபடி முகம் கழுவி, உடைகளைத் திருத்திக்கொண்டு கதவைத் திறந்தான்.

வெளியே செகரட்ரி, இவன் முன்பின் பார்த்திராத நான்கு பேர்களுடன் நின்றிருந்தார். அவர்களில் ஒரு பெண் பெரிய கேமராவுக்குப் பின்னிருந்து அவன் கதவைத் திறந்ததிலிருந்து படம்பிடிக்கத் தொடங்கிவிட்டாள். தன்னிடம் அனுமதி பெறாமல் தன்னை அவள் படம்பிடிப்பது கண்டு, இவனுக்குக் கோபம் எகிறியது. ஆனால், செக்ரட்ரியுடன் வந்திருக்கிறாளே, இயல்பாக இருக்க முயன்றான்.

``குட்மார்னிங் ஜபு, பயப்பட வேண்டாம். இந்நேரத்துக்குத் தொந்தரவு பண்ணினதுக்கு மன்னிக்கணும். ஆனா, தொந்தரவுக்கான காரணம் தெரிஞ்சா, என்னைப் பாராட்டுவீங்க. உள்ளே போய்ப் பேசலாமா?’’ என்று செகரட்ரி கேட்டதும், இவன் கதவை அகலத் திறந்து அவர்களை உள்ளே அழைத்துக்கொண்டான்.

அவர் ஏதோ இதுவும் தன்னுடைய வீடுதான் என்பது போன்ற பாவனையில் அவர்களைத் தோதான இடம் பார்த்து அமரச் சொன்னார். பிறகு துள்ளலான குரலில், ``இவங்க புதுசா ஆரம்பிச்சிருக்கிற `ட்ரூத் டி.வி சேனல்’ டீம். `தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால்கூட’ன்ற தலைப்புல புதுமையான ஒரு நிகழ்ச்சியை இன்னிக்கு நடத்தப்போறாங்க. சுதாரிக்கிறதுக்கு அவகாசம் தராம, சடார்னு ஒரு கேள்வி கேட்டா, மனசுல இருக்கிற கருத்து பதிலா வந்திடுமில்லையா... இவங்களுக்கு அதுதான் தேவை.’’

`அட புதுமை விரும்பிகளே, உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவேயில்லையா!’ என்கிற எரிச்சலைக் காட்டிக்கொள்ளாமல், அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

``போன மாசம் ஒன்பது கட்டங்களா பொதுத்தேர்தல் நடந்து முடிஞ்சதில்லையா. அதோட வாக்கு எண்ணிக்கை, இன்னிக்கு காலையில ஏழு மணிக்குத் தொடங்கப்போகுது. அதுக்கு முன்னாடி தேர்தல் முடிவு எப்படி இருக்கும்னு மக்கள்கிட்ட ரேண்டமா ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி, இவங்க 6:30 மணிக்கே வெளியிடப்போறாங்க. ப்ரீ போல், எக்ஸிட் போல் மாதிரி இது ப்ரீ கவுன்ட்டிங். நம்ம அப்பார்ட்மென்ட்லயும் சாம்பிளுக்கு ஒருத்தர்கிட்ட கருத்து கேட்கணும்னாங்க. நீங்கதான் இதுக்குப் பொருத்தமான ஆள்னு நான்தான்...’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நாடகத்தில் நீங்களும் நடிக்கிறீர்கள்! - சிறுகதைசெக்ரட்ரி சொன்னதுபோல், தான் இதற்குப் பொருத்தமானவன்தானா என்ற கேள்வி இவனுக்குள் எழுந்தது. அதைவிட, `போன மாசம் ஒன்பது கட்டங்களா பொதுத்தேர்தல் நடந்து முடிஞ்சதில்லையா?’ என்று அவர் சொன்னபோதுதான், அப்படி தேர்தல் நடந்ததே தனக்கு நினைவில் இல்லை என்பது இவனுக்கு உறைத்தது. நல்லவேளை, `தேர்தல் நடந்ததா சார்?’ என்று இடைமறித்துக் கேட்டிருந்தால், அவர் என்ன நினைத்திருப்பார்! `தேர்தல் நடந்ததையே மறந்துவிடும் அளவுக்கு பொறுப்பவற்றவனான இவனுக்கு, `ஜனநாயக புத்திரன்’னு பேர் வெச்சவங்கள எதால அடிக்கிறது?’ என்றோ, `போயும் போயும் இப்பேர்ப்பட்டவனிடமா கருத்துக்கணிப்பு கேட்க வந்தோம்!’ என்றோ மட்டரகமாக நினைக்கும் சூழலைத் தவிர்த்துவிட்ட தனது சமயோசிதத்தைப் பாராட்டிக்கொண்டான்.

தேர்தல் மீது அவநம்பிக்கை பெருகி, வாக்குச்சாவடி பக்கம் தலைகாட்டாமல் இருப்பதற்கு அநேகக் காரணங்கள் இருந்தாலும், ஜபு வாக்களிக்கத் தவறியவனல்ல. ஆனாலும் வாக்குச்சாவடிக்குப் போனது, வரிசையில் நின்றது, அடையாள அட்டையைக் காண்பித்து வாக்குச்சீட்டைப் பெற்றது... என வாக்குப்பதிவின் அடுத்தடுத்த நிகழ்ச்சி நிரல் சித்திரம், மனதுக்குள் மங்கலாகப் புரண்டாலும், அது இந்தத் தேர்தலா... இதற்கு முந்தையதா என அவனால் திடமாக முடிவெடுக்க முடியவில்லை. `இவ்வளவு நாள் கழித்து வாக்கு எண்ணிக்கை என்றால், இதுவெல்லாம் யாருக்குத்தான் ஞாபகமிருக்கும்? ஓட்டு என்ன ஊறுகாயா, போட்டு குறிப்பிட்ட காலம் ஊறினால்தான் பதம் வரும் என்பதற்கு... தேர்தல் முடிந்து ஓரிரு நாள்களில் எண்ணி அறிவித்துவிடவேண்டியதுதானே... இதில், தூக்கத்தில் இருப்பவனை உலுக்கி எழுப்பி, கருத்துக்கணிப்பு வேறு!’

அவர்கள் அப்படியொன்றும் சிக்கலான, யோசித்து பதில் சொல்லும்படியான கேள்வி எதையும் கேட்டுவிடவில்லை. அச்சடித்து, தயார்நிலையில் கேள்வித்தாள். சரியானதை டிக் செய்தால் போதும்.

* தேர்தல் நடப்பது - நேர விரயம் / பொருள் விரயம் / இரண்டும்.

* ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் என்பதை மாற்றுவதெனில், உங்கள் பரிந்துரை - 10 ஆண்டுகள் / 15 ஆண்டுகள் / தேர்தலே அவசியமற்றது.

* அண்டைநாட்டுடன் போர் தொடுக்க உகந்த காலம் - அதிருப்தி அதிகரிக்கும்போது / தேர்தல் அறிவிப்புக்கு முந்தைய மாதம் / வாக்கெடுப்புக்கு முந்தைய மாதம்.

* `ஆயுள்கால பிரதமர்’ என்கிற யோசனை சரி என்பதற்கான மதிப்பெண் 100 என்றால், நீங்கள் வழங்க விரும்புவது - 100 / 110 / 200.

* இப்போதைய பிரதமரை ஏன் ஆதரிக்கிறீர்கள் - திறமை / தீர்க்கம் / வேறு மாற்று இல்லை.

* இப்போதைய பிரதமரை எதிர்க்காமல் இருப்பதற்கான காரணம் - இல்லை மாற்று வேறு / தீர்க்கம் / திறமை.

* வரும் தேர்தலிலும் பிரதமருக்குத் தொடரும் உங்கள் ஆதரவு - மனப்பூர்வமானது / அரசியல்பூர்வமானது / தேசபக்திமிக்கது.

இப்படியாக, பத்து கேள்விகள். ஜபு, விடைத்தாளை கையொப்பமிட்டுக் கொடுத்தான். ``கேமரா முன் சில கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்’’ என்று அந்தப் பெண் கேட்டுக்கொண்டாள். ஒளிபரப்பில் இவன் பேசியது சில விநாடிகள் இடம்பெறும் என்றாள். ஒளிப்பதிவு முடிந்து கிளம்பும்போது ஏதோ ஒரு நட்சத்திர உணவகத்தில் 10,000 ரூபாய்க்குச் சாப்பிட்டால், 1,000 ரூபாய் தள்ளுபடியாவதற்கான கூப்பனை அந்தப் பெண் கொடுத்துவிட்டு, அதையும் படம் பிடித்துக்கொண்டாள். `1,000 ரூபாய் டிஸ்கவுன்ட்டுக்கு நான் ஏன் 9,000 ரூபாய் செலவழிக்கணும்?’ என்று யோசித்தபடியே அவர்களை வழியனுப்பிவைத்தான்.

தொலைக்காட்சியில் முதன்முதலாக முகம் காட்டப்போகும் நினைப்பு, அவனுக்குள் பெரும் பரவசத்தைக் கிளர்த்திவிட்டிருந்தது. தேர்தல் முடிவை முன்கூட்டியே அறிந்திடும் ஆர்வத்தில் ஒளிபரப்பைக் காணும் கோடிக்கணக்கான மக்கள் முன் தோன்றி, தான் பேசவிருப்பதை நினைத்து, அவன் தரையில் கால்படாமல் நடந்தான். 

இந்த நாடகத்தில் நீங்களும் நடிக்கிறீர்கள்! - சிறுகதை

`ட்ரூத் டி.வி-யில், காலை 6:30 மணிக்கு நான்’ என்று நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பினான். செய்தியைப் பார்த்து செல்போனில் அழைத்தவர்களிடம், `இதெல்லாம் தனக்கு பெரிய விஷயமில்லை’, `இதிலெல்லாம் தனக்கு பெரிதாக ஆர்வமில்லை’, `இத்தனை கோடி மக்கள் இருக்க தன்னைத் தேடி வந்துவிட்டார்களே என்பதற்காகப் பேசித்தொலைக்கவேண்டியதாயிற்று’ என்றரீதியில் பிகுவாகப் பேசினான். மனசுக்குள் இருந்த பரவசத்தை அப்படியே காட்டிக்கொண்டால், `டி.வி மோகத்தில் அலைகிறவன்’ என்று மலிவாகக் கருதிவிடுவார்களே.

ஜபு, ஆறு மணியிலிருந்தே தொலைக்காட்சியின் முன்பாக அமர்ந்துவிட்டிருந்தான். தேர்தல் ஆணையத்தின் அறிக்கை, பிரேக்கிங் நியூஸாக ஓடியது. `வாக்கு எண்ணிக்கையைச் சீர்குலைக்கவும் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கைப்பற்றவும் எதிர்க்கட்சிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து, அந்தக் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் நேற்று நள்ளிரவு தேசப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தேசத்துரோகத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை இடையூறின்றி நடப்பதை உத்தரவாதப்படுத்த, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தவிர்க்க முடியாததாகிவிட்டது.’

இன்னும் அரை மணி நேரத்தைக் கடத்தியாகவேண்டிய பரிதவிப்பில் ஒவ்வொரு சேனலாக மாற்றி மாற்றிப் பார்க்கத் தொடங்கினான். `தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால்கூட’போலவே `வாக்கும் நாக்கும்’, `மனசுக்குள் ஒரு கவுன்ட்டிங்’, `முந்திரிக்கொட்டை முடிவு’, `நாங்கள் சொல்கிறோம் நாடு நினைக்கிறது’ போன்ற தலைப்புகளில் மற்ற சேனல்களும் கருத்துக்கணிப்பை நடத்தியிருப்பது அப்போதுதான் இவனுக்குத் தெரியவந்தது.

வாக்கு எண்ணிக்கை எப்படி தங்களது `ப்ரீ கவுன்ட்டிங்’ கணிப்புடன் பொருந்திவரப்போகிறது என்பதை, சேனலுக்கு நான்கு பேர் சிலாகித்துக்கொண்டிருந்தார்கள். கடந்தகாலத் தேர்தல்களில் யாருடைய கணிப்பு, உண்மையான முடிவுடன் ஓரளவுக்கேனும் பொருந்திப்போனது என்பதற்கான புள்ளிவிவரங்கள், வரைபடங்கள் திரை முழுக்க விரிந்துகிடந்தன. `அதிகாரபூர்வமாக எண்ணிக்கை தொடங்கப்படுவதற்கு முன்பாகவே, நாங்கள் நாட்டு மக்களின் உணர்வுகளை நாடிபிடித்துக் கணித்துவிட்டோம்’ எனக் காட்டுவதன் மூலம் பார்வையாளர்களை அதிகரிப்பது, டி.ஆர்.பி ரேட்டிங், விளம்பரம் என ஜபு அறிந்திராத பற்பல கணக்குகள் இதற்குள்ளே பொதிந்திருந்தன.

`36.3 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கும் இதை, பொதுத்தேர்தல்னு சொல்வதே அபத்தம்’, `வாக்களிக்காமல் இருந்துவிட்டு அது மோசம் இது நாசம்னு அங்கலாய்க்கிற கும்பலுக்காகக் கவலைப்படுவது அநாவசியம்’, `வாக்களிக்காமல் இருப்பதற்கும் ஜனநாயகத்தில் இடமிருக்கு’, `வாக்களிக்காத 63.7 சதவிகிதம் பேரை, ஆட்சிக்கு எதிரானவர்கள் என ஏன் கணக்கிடக் கூடாது?’, `மந்தமான வாக்குப்பதிவு பற்றி நமக்கு ஏன் கவலை?’ என்று தாறுமாறான விவாதங்கள். உண்மையான முடிவுகளை இவர்களே அறிவிக்க இருப்பதுபோல இப்படி சேனல்கள் எழுப்பிய ஆரவாரத்தாலும் அதன் ஒரு பகுதியாக தானும் இருப்பதாலும் ஜபு மிகுந்த பரபரப்புக்குள்ளாகிவிட்டான்.

ட்ரூத் சேனலில், கருத்துக்கணிப்பில் பங்கெடுத்தவர்கள் பேசும் காட்சி பின்புலத்தில் ஓடிக்கொண்டிருக்க, காரசாரமாக நேரலை விவாதத்தில் பங்கெடுத்திருந்த மூவரில் ஒருவர் (நடுசாரி வந்தனையாளர்), `இந்த நேயர் சொல்வதைக் கவனியுங்கள்...’ என்கிறார்.  உடனே திரையில் ஜபு பேசுவது திரும்பவும் காட்டப்படுகிறது. அந்த நொடியிலிருந்து விவாதத்தின் போக்கு திசை மாறுவதுபோல அவர் மேலும் தொடர்கிறார். `இவர் சொல்வதுதான் வாக்காளர்களின் எதார்த்தமான மனநிலை. அதாவது ஆளுங்கட்சி மீது அதிருப்தி இருப்பது உண்மைதான். ஆனால், அது அந்தக் கட்சியை பதவியிலிருந்து இறக்கிவிடும் அளவுக்கானதல்ல. ஒருவேளை, இம்முறை முன்னிலும் கூடுதலான இடங்களைப் பெற்றாலும் ஆச்சர்யமில்லை.’

அவரது கருத்தை மறுப்பதுபோல மற்றவர் (இடதுசாரி நிந்தனையாளர்) `வேண்டுமானால் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமே தவிர, 2014-ஐவிட கூடுதல் இடங்களைப் பெறுவது சாத்தியமில்லை’ என்றார்.

மூன்றாமவர் (வலதுசாரி வந்தனையாளர்) `ஒருவர் சொன்னதை மட்டும் திரும்பத் திரும்பக் காட்டி வலிந்து வேறு பொருள் கூற நீங்கள் இருவருமே முயற்சிப்பதாகத் தெரிகிறது. மற்றவர்கள் சொன்னதையும் உன்னிப்பாகப் பரிசீலித்தால், உண்மை நிலவரம் பிடிபடும்’ என்றார். ஆனால், அவர் உண்மை நிலவரம் என்னவென்று சொல்லவில்லை.

`ஒன் ஃபைன் மார்னிங்...’ என்பார்களே அது தனக்கு இன்றுதான்போல என்று மகிழும்படியாக நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே தெரிந்தவர்களிட மிருந்தும் புதிய எண்களிலிருந்தும் ஜபு-வின் அலைபேசிக்கு அடுத்தடுத்து அழைப்புகள் வந்தவண்ணமிருந்தன. எப்போதும் இவனைக் கடுப்படிக்கும் ரிசார்ட் மேலாளர்கூட பாராட்டி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இவனானால் எதுவொன்றுக்கும் பதிலளிக்காமல், திரையையே பார்த்துக்கொண்டிருந்தான்.

எவ்வளவோ பேரிடம் கருத்துக் கேட்டிருந்தாலும், தான் சொன்னதைத் திரும்பத் திரும்ப மேற்கோள்காட்டியும் மையப்படுத்தியும் விவாதம் நடந்ததை குறித்த பரவசத்தில் ஆழ்ந்திருந்த ஜபு, இயல்புக்குத் திரும்பவியலாது தத்தளித்தான்.  `தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால்கூட’ என்கிற எமது கருத்துக்கணிப்பு, உண்மை நிலவரத்துக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்பதை நேரடியாகக் காணும் நேரம் நெருங்கிவிட்டது. நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையங்களிலிருந்து எமது செய்தியாளர்கள் உடனுக்குடன் தரும் முன்னணி நிலவரங்களை இதோ இன்னும் சில நொடிகளில் காணத் தயாராகுங்கள்...’

`ட்ரூத்’தில் ஜபுபோலவே இன்ன பிற சேனல்களின் கருத்துக்கணிப்புகளில் பங்கெடுத்தவர்களாலும் அவர்களுக்கு வேண்டியவர்களாலும் கருத்துக்கணிப்பு பற்றிய செய்தி பரவிக்கொண்டிருந்தது. அதுவுமின்றி, `வாக்கு எண்ணிக்கை நேரலையைக் காண்பதற்கென்றே இன்று தேசிய விடுமுறை’ என்கிற அறிவிப்பு அதிகாலையிலேயே வெளியாகிவிட்டதால், ஒருவித கொண்டாட்ட மனநிலை நாடெங்கும். நேயர்களை ஈர்ப்பதற்கு சேனல்கள் நூதன உத்திகளைக் கையாண்டன. ஒரு மணி நேரம் தங்கள் சேனலை மாற்றாமல் பார்ப்பவர்களுக்கு, ஒரு லிட்டர் பெட்ரோல்/டீசல், இடையிடையே கேட்கப்படும் கேள்விக்கு பதிலளித்தால், பிள்ளைகளை எல்.கே.ஜி-யில் சேர்க்க முன்னுரிமை கூப்பன் என்பது போன்ற விலை உயர்ந்த அதிரடி ஆஃபர்களை அறிவித்திருந்ததால், அநேகமாக நாட்டின் மொத்த சனங்களுமே டி.வி முன்பு இருந்து கருத்துக்கணிப்பையும் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தையும் காணும் நிலை உருவாகியிருந்தது.

ஒரு கருத்துக்கணிப்பில் பங்கெடுத்து நான்கு வார்த்தை பேசியதோடு தன் வேலை முடிந்துவிட்டதாக ஜபுவால் இப்போது நினைக்க முடியவில்லை. தானே தேர்தலில் போட்டியிட்டி ருப்பதைப் போன்றதோர் எண்ணம் அவனுக்குள் வலுப்பெற்றுக் கொண்டிருந்தது. ஆகவே, தான் கணித்ததன் அடிப்படையில் சொற்ப பெரும்பான்மையிலாவது ஆளும்கட்சியே வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினான். அவன் அந்தக் கட்சியின் அங்கத்தவனோ, ஆதரவாளனோ அல்ல என்றாலும், அது வெற்றி பெறுவதில்தான் தனது கணிப்புத்திறனும் கௌரவமும் அடங்கியிருப்பதாக நம்பினான். ஆகவே, அவன் வாக்கு எண்ணிக்கை துரிதகதியில் நடந்து, முடிவுகள் விரைவாகவே வெளியாக வேண்டும் என எதிர்பார்த்தான். வாக்கு எண்ணிக்கையின் முன்னணி நிலவரங்களில் ஆளுங்கட்சித் தொடர்ந்து முன்னிலை வகித்தது கண்டு, ஜபு இப்போது ஆசுவாசமானான்.

நேரலை விவாதம், ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக முன்னிலை பெற்றுவந்த கட்சி நோக்கித் திரும்பியது. `மக்களோடு எந்தவிதத் தொடர்போ, அறிமுகமோ இல்லாத சிலர், திடீரென தேர்தலுக்கு முன்பாக கட்சிகளைத் தொடங்குகிறார்கள். நாட்டின் தலையாயப் பிரச்னைகளையோ, தீர்வுகளையோ ஒருபோதும் பொதுவெளியில் பேசியிராத அவர்களில் ஒருவரது கட்சி, களமிறங்கிய முதல் தேர்தலிலேயே இவ்வளவு இடங்களை எப்படிப் பெற முடிகிறது?’ என்று விவாதகர்களில் ஒருவர் எழுப்பிய கேள்வி, ஜபுவை ஈர்த்தது. அப்படியொரு கட்சியிடமும்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் தமது வாக்கு வங்கியைப் பறிகொடுத்துவிடும் லட்சணத்தில்தான் பாரம்பர்யமான பிற கட்சிகள் இருந்திருக்கின்றன என்பதை இந்தத் தேர்தல் அம்பலப்படுத்திவிட்டது. `ஏற்கெனவே உள்ள கட்சிகளால் நிரப்பப்பட முடியாத அரசியல் வெற்றிடம், புதிய கட்சிகளால் நிரம்பும். தர்க்கப்படி சரிதானே?’ என்று மற்றவர் தந்த மறுப்பும் இவனுக்குச் சரி என்றே பட்டது. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கருத்து கேட்கலாம் என்றால், அவர்கள் மொத்தப்பேரும் கைதாகியிருக்கிறார்கள் என்று விவாத ஒருங்கிணைப்பாளர் அலுத்துக் கொண்டார்.

பிற்பகலில் வாக்கு எண்ணிக்கையின் இறுதி நிலவரம் வெளியானது. `தேர்தல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகள் குறுகிய மனப்பான்மையுடன் கீழ்த்தரமான முயற்சிகளில் இறங்கியிருப்பது கண்டு வேதனையடைகிறேன். நெருக்கடியான இக்காலகட்டத்தில் நாட்டின் ஜனநாயக மாண்பைக் காப்பதற்கு, துணிச்சலான முடிவினை எடுத்தமைக்காக தேர்தல் ஆணையத்தைப் போற்றுகிறேன். என் மீதும் எனது ஆட்சியின் மீதுமான நம்பிக்கையை மீண்டும் வெளிப் படுத்தியுள்ள லிபரல்பாளையம் மக்களின் பாதங்களில் எனது வெற்றியைக் காணிக்கை யாக்குகிறேன்’ என்று கண்ணீர்மல்க பிரதமர் ஆற்றிய உரையில் ஜபு நெகிழ்ந்துபோனான்.

பு, நாடாளுமன்றத்தின் நடுமண்டபத்தில் அமரவைக்கப்பட்டிருந்தான். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் களும் அமைச்சரவையினரும் தங்களது இந்த நிலைக்குக் காரணமான அவனைப் பாராட்டி, நன்றி தெரிவித்தனர். ஜபுவால் எடுக்கப்பட்டு, நாட்டையே புரட்டிப்போட்ட `தாவத்தூர் வீடியோ’, நிகழ்வின் முடிவில் திரையிடப்பட்டது. அந்த வீடியோவை, தான் எடுக்க நேர்ந்த சூழலை ஜபு விவரித்தான்.

``பொதுவாக, எங்கள் ரிசார்ட்டுக்கு யார் எதற்காக வருகிறார்கள் என்பதில் பணியாளர் களாகிய நாங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் இருவர், ஆயிரம் பேருக்கு விருந்தளிக்க எங்கள் தாவத்தூர் ரிசார்ட்டைத் தேர்வுசெய்திருக் கிறார்கள் என்பது சாதாரண விஷயமா? ஒருவகையில் இது எங்களுக்குக் கிடைத்த கௌரவம் என்றும்கூட பெருமிதப்பட்டோம். ஆனால், அன்றிரவு நாங்கள் வரவேற்ற அந்த விருந்தினர்களின் கலவை என்னைத் திகைக்கவைத்தது. பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதுக் கட்சிகளின் தலைவர்கள், தேர்தல் ஆணையர், தலைமை நீதிபதி, காவல் உயரதிகாரிகள், ராணுவத் தளபதிகள், மடாதிபதிகள், கார்ப்பரேட் முதலாளிகள், டிவிக்காரர்கள்... இவ்வளவு பேரும் எந்தப் புள்ளியில் இணைந்து இங்கு வந்திருக்கிறார்கள்? இந்தக் கலவையின் விநோதத் தன்மை எனக்குள் ஒருவகை குறுகுறுப்பை உண்டாக்கி, அவர்களை கவனிக்கத் தூண்டியது.

உல்லாசமும், உபசாரமும், ஒன்றுக்கு மேற்பட்ட போதையும் கிளர்த்திவிட்ட கட்டற்ற மனநிலையில் அவர்களில் சிலர் பேசியதைக் கேட்டு அதிர்ந்துபோனேன். தனிப்பட்ட முறையில் நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன், அவமதிக்கப்பட்டிருக்கிறேன் என்று அந்தக் கணத்தில் ஏற்பட்ட உணர்வுதான் எனக்குள்ளிருந்து என்னை இயக்கியிருக்கிறது எனச் சொல்லலாம். அதற்குப் பிறகுதான் அடுத்து வந்த மூன்று நாள்களிலும் அந்த விருந்தாளிகளில் பலரையும் கண்காணித்து ரகசியமாக மொபைலில் படம்பிடிக்கத் தொடங்கினேன். சிக்கினால் ஈ, எறும்பு மொய்க்கக்கூட எதுவும் மிஞ்சாமல் அழிக்கப்படுவோம் என்ற ஆபத்தான நிலையில், நான் படம்பிடித்தது சாகசத்துக்காக அல்ல.

அவர்கள் பெயரால், தொழிலால் வேறுபட்டிருந்தாலும் ஒரே கும்பல்தான். தேர்தல் நடத்தினால் தோற்போம் என்பதால், தேர்தலை நடத்தாமலேயே நடந்ததாக நாடகமாடி, ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டவர்கள். இந்தக் கபட நாடகத்தில் கும்பலின் ஒவ்வொருவரும் பங்குதாரிகள். டி.வி சேனல்கள்தான் இவர்களது முகமும் பலமும். சேனல் முதலாளிகளையும் தலைமைச் செய்தியாசிரியர்களையும் விருந்துக்கு அழைத்து பிரதமர் ஏற்கெனவே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்ததால் வேலை சுளுவாகியது. இவை அல்லாமல் ட்ரூத் டி.வி-போல 27 சேனல்களை புதிதாகத் தொடங்கியிருக்கிறார்கள். வாக்கு எண்ணிக்கை நாடகத்தைச் சமூக ஊடகங்களில் பரப்ப, அந்த ஒரு நாளுக்கு மட்டும் 3.2 லட்சம் பேரை, கொழுத்த சம்பளத்தில் அமர்த்தியி ருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஆன செலவு அதிகம்தான் என்றாலும், இவ்வளவு பெரிய நாட்டை ஆள்வதால் ஏற்படும் ஆதாயங்களை ஒப்பிடும்போது ஒன்றுமேயில்லை எனலாம்.

இந்தக் கும்பல், என்னையும்கூட நடிக்கவைத்து விட்டதென்றால் பாருங்கள். `இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கையின் முடிவு எப்படி இருக்கும் என்று நீங்கள் கணிக்கிறீர்கள்?’ என்று இந்த ஊடகங்கள் கேட்டதும், நான் உள்படப் பலரும் குழம்பிப் போனோம். இந்தக் கருத்துக்கணிப்பு, `வாக்கு எண்ணிக்கை நடக்கத்தான்போகிறது’ என்கிற நம்பகத்தை மக்களிடத்தில் உருவாக்கிவிட்டது. அடுத்த காட்சி வாக்கு எண்ணிக்கை. அசலான வாக்கு எண்ணிக்கை போன்ற பரபரப்புடன் இடம்பெற்ற நேரலை விவாதங்கள் எல்லாமே இவர்களது ஜோடனைகள்தான்.

வாக்குப்பதிவு 36.3 சதவிகிதம்தான் என்றதும், வாக்களிக்காத 63.7 சதவிகிதத்தில் நாமும் ஒருவர்போல என்று மக்கள் ஒவ்வொருவரும் தம்மை நினைத்துக்கொண்டார்கள். ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக வந்ததும் வேறு பல புதிய கட்சிகளும் ஆளுங்கட்சியால் மந்திரித்து உருவாக்கப்பட்டவை தான். ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் போட்டியிட்டிருப்பதாகக் காட்டினால்தானே மக்கள் நம்புவார்கள்... முதல் நாள் இரவே உங்களையெல்லாம் சிறைக்குள் அடைத்து விட்டபடியால், எந்த இடையூறுமில்லாமல் அவர்கள் இந்த மோசடியை நிறைவேற்றி முடித்திருந்தார்கள். அந்தச் சாமர்த்தியத்தைக் கொண்டாடிக் களிக்க, எங்கள் ரிசார்ட்டுக்கு வந்துதான் தற்செயலாக மாட்டிக் கொண்டார்கள்.

என் வீடியோ இவ்வளவு பெரிய கொந்தளிப்பை இங்கே உருவாக்கும் என நான் நினைத்திருக்கவில்லை. அன்றைக்கு விருந்திலிருந்து திரும்பிய ஒவ்வொருவரையும் மக்கள் தேடித் தேடி சிறைபிடித்து... சிறையிலிருந்த உங்களை விடுவித்து... மறு தேர்தல்... ஆட்சி மாற்றம்... என்று இவ்வளவு வேகமாக இதெல்லாம் நடப்பதற்கு என் வீடியோ காரணமாக இருந்திருக்கிறது என்று நினைக்கவே...’’

ஜபு, இப்போதெல்லாம் தட்டுத்தடுமாறி `ஜனநாயக புத்திரன்’ என்று தனது முழுப் பெயரையும் சொல்ல முயல்கிறான்.  

- ஆதவன் தீட்சண்யா, ஓவியங்கள்: ஸ்யாம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism