Published:Updated:

``சித்திரைத் திருவிழா தெரியும்... வல்லாளப்பட்டி புரவி எடுப்பு தெரியுமா?’’ - `திருவிழாக்களின் தலைநகரம் மதுரை’ #BookReview

``சித்திரைத் திருவிழா தெரியும்... வல்லாளப்பட்டி புரவி எடுப்பு தெரியுமா?’’ - `திருவிழாக்களின் தலைநகரம் மதுரை’ #BookReview
``சித்திரைத் திருவிழா தெரியும்... வல்லாளப்பட்டி புரவி எடுப்பு தெரியுமா?’’ - `திருவிழாக்களின் தலைநகரம் மதுரை’ #BookReview

எந்தெந்த திருவிழாவில் என்னென்ன சாப்பிடக் கிடைக்கும் என்பதையும் பதிந்திருப்பதால் ஒருவகையில், `பாய்ஸ்’ செந்தில் டைரியாகவும் இதைக் கொள்ளலாம். சித்திரவீதிக்காரன் இந்நூலின் முன்னுரையில், `உங்களுடன் மீண்டும் மதுரை நகருக்குள் பயணிக்க ஆவலாகக் காத்திருக்கிறேன்’ என்று எழுதியிருப்பதில், துளியும் பொய்யில்லை!

``அடியேய், பிள்ளைய எங்கடீ?’’  

``அழகரு பின்னுக்குப் போயிருப்பான்கோவ்.’’

இந்தப் பதிலைக் கேட்காத `மதுரைக்காரவுக’ இருந்திருக்கவே முடியாது. அழகருடைய பல்லக்கில் `லிப்ட்’ கேட்டு அவருடனேயே திரிவார்கள், மதுரைப் பொடிசுகள். மண்ணோடு பிறந்த திருவிழாக்கள் மண்ணுக்குரியோரை ஈர்க்கும்தானே! வயது வேறுபாடின்றி அனைவர் நெஞ்சிலும் நெருங்கியவை மதுரைத் திருவிழாக்கள். தன்னை அறியாமல் தப்பாட்டத்துக்குக் கால்கள் துடிக்குமே, அதே போன்ற நெருக்கம்தான். அப்படி, பிள்ளை வயதில் அத்தகைய நிகழ்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு தெருவில் மக்களோடு கரைந்து களித்து, தற்போது அந்த அனுபவத்தை எழுதி, முக்கிய ஆவணப் புத்தகமாக அச்சேற்றியிருக்கிறார் சித்திரவீதிக்காரன். 

மதுரையின் திருவிழா வரலாறுகளை ஏந்தி உயிர்ப்பான நூலாக வெளிவந்திருக்கிறது, சித்திரவீதிக்காரனின்  `திருவிழாக்களின் தலைநகரம் மதுரை.’ தகவல்களைத் தொகுத்து தன் எழுத்துகளால் வடித்திருக்கிறார். பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் வல்லாளப்பட்டி புரவிஎடுப்பு, படையலிடும் கல் எது என்பதை கோயில் மாடு அடையாளங்காட்டும் கோவில்பாப்பாக்குடி சாமிகும்பிடு, நேர்ந்துகொண்டதன்படி பக்தர்கள்கூடி நாடகங்கள் போடும் வலையங்குளம் இசைநாடகத் திருவிழா என மதுரையில் நடைபெறுகிற பல ஆச்சர்யமான விழாக் குறிப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.

அந்த ஆச்சர்யங்களை மட்டுமன்றி விமர்சனங்களையும் இட்டிருக்கிறார். கல்பாலம் அருகே வைகையாற்று உள்மண்டபத்தின் அவலநிலையும் சுயநலங்களாலும் அலட்சியங்களாலும் மதுரையின் கிருதுமால் நதித்தடம் அழிந்தே போய்விட்டதும்... எனப் பல வரலாற்றுப் பேரிழப்புகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. வரலாற்றை அதன் தற்போதைய நிகழ்வுகளோடு பொருத்திக்காட்டிப் புரிய வைக்கிறார் சித்திரவீதிக்காரன். எல்லோரும் அறிந்திருக்கும் சித்திரைப் பெருந்திருவிழா, அழகர்மலை மற்றும் திருப்பரங்குன்றத்

தேரோட்டங்கள், தெப்பத்திருவிழாக்கள், கீழவாசல் மரியன்னை தேர்பவனி, கோரிப்பாளையம் தர்கா சந்தனக்கூடு போன்றவற்றில் கிடைக்கும் பலவித அரிய தகவல்கள் ஆவணமாக்கக்கப்பட்டுள்ளன. நம் கைப்பிடித்துக் கூட்டிப்போய், தெப்பத்திருவிழாவின் குச்சி ஐஸ்களையும், அழகர் திருவிழாவின் நீர்மோர், பானகம் ஐட்டங்களையும் வாங்கித் தந்து தாகம் தீர்த்து வைக்கிறார்.

எந்தெந்த திருவிழாவில் என்னென்ன சாப்பிடக் கிடைக்கும் என்பதையும் பதிந்திருப்பதால் ஒருவகையில், `பாய்ஸ்’ செந்தில் டைரியாகவும் இதைக் கொள்ளலாம். சித்திரவீதிக்காரன் இந்நூலின் முன்னுரையில், `உங்களுடன் மீண்டும் மதுரை நகருக்குள் பயணிக்க ஆவலாகக் காத்திருக்கிறேன்’ என்று எழுதியிருப்பதில், துளியும் பொய்யில்லை! மதுரை விழாச் சூழல்களும் வரலாறுகளும் எழுத்துகளினூடாகப் பிசிறுகளற்றுத் தெரிகின்றன. புத்தக வடிவமைப்புதான் வாசகனைக் காதலாய் ஈர்க்கும். அட்டைப் பக்கங்களும் தாள்களும் அத்தனை கச்சிதம். `சமூக இளைப்பாறுதலே, திருவிழாக்கள்’ என்கிற பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவனது கூற்றின் அடிநாதமாகப் புத்தகம் கனிந்து கனக்கிறது. 

நூல் ஆசிரியர் சித்திரவீதிக்காரனை சந்தித்தோம். மிகவும் இலகுவான உடை, கூட்டத்துக்குள் அவ்வளவு சீக்கிரத்தில் அகப்பட்டுவிடாத அசல் மதுரை முகம். `எப்போது வேண்டுமானாலும் வீதிகளில் இறங்கி, விழாக்களில் கலந்துவிடத் தயாராயிருக்கிறார்’ எனக் கணிக்க முடிந்தது. ``புத்தகத்தையும் திருவிழாவையும் புத்தகத் திருவிழாவையும் கொண்டாடும் மதுரை மண்ணின் இந்தப் புத்தகம் முழுக்க மதுரை மாவட்டத்தின் திருவிழாக்கள்தான்’’ என்றார். மதுரைக்கு டூர் போக விரும்புகிறவர்கள், `செத்த... இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டுப் புறப்படுங்கள்’ எனத் தைரியமாய்ச் சொல்லலாம். `இம்புட்டு நாளா இங்கதான் கெடந்தேன். இது தெரியாம போச்சேப்பா’ என மதுரைக்காரர்களையும் நெற்றி தட்டிக்கொள்ளச் செய்கிறது, இந்தத் தகவல் களஞ்சியம். 

`உதவி நூல்கள்’ பட்டியலில் ஆசிரியரின் உழைப்பும் கனவும் தேடலும் காதலும் அப்பட்டமாகத் தெரிகின்றன.

`ரசிச்சா, திருவிழாவ இப்படி ரசிக்கணும்ய்யா!’

அடுத்த கட்டுரைக்கு