பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

அம்மாவின் மரணம்

காலடி சப்தங்களில்
குட்டி வர்றான் துரை வர்றான்
ரோஸிநாய் வருது சுருளிநாய் வருது
மேல் வீட்டு சின்னப்பன் வர்றான்
எனச் சொன்ன அம்மாவுக்குத்தான்
இன்று யார் வந்ததும் தெரியவில்லை

வீடு முழுக்க மின்சாரம் இல்லாத
நள்ளிரவிலும் தன் அறைக்கு
மெழுகுவத்தி ஏற்றிக்கொள்ளாத
அம்மாவைச் சுற்றி இன்று அத்தனை
மெழுகுவத்திகள்

அந்நிய பாஷை எல்லாம் பேசும்
அம்மாவுக்கு
இன்று யாரின் மொழியும் புரியவில்லை
மூடி இருந்த விழிகளில் திறந்தேதான்
கிடந்தது வீடு

ஒருபோதும் பூட்டாத வீடு
இனி பூட்டும்போதெல்லாம்
அம்மா வெளியேறித்தான் இருப்பார்

பார்வை அற்ற இப்பெரும் மரணத்துக்கு
உருகிச் சாகும் சாட்சி
நானாகவே இருந்துவிட்டுப்போகிறேன்
மீசையற்று

அழுதாலும் தீராத அன்னைக்கு 
எழுதினாலும் தீராத என்னை வைத்து
ஒன்றுமேயில்லை
எரிகிறது என் எலும்புகளில்
அவர் காணா மெழுகுவத்திகள்..!

- கவிஜி

சிங்கங்கள் வைக்கும் விருந்து

பன்னாட்டுக் கழுகுகளுக்கு
சிங்கங்கள் வைக்கும் விருந்தில்
பிரதான இடம்பெறுகிறது
பச்சை இலைகள் தூவப்பட்ட
முதுகெலும்பு சூப்.
அதைப் பருகுவதற்காகவே
கடல் மலைகளைத் தாண்டி
வரும் கழுகுகள் சூப்புக்கு ஈடாகக்
கொண்டுவரும் தம் தேசத்துப்
பிராணிகளுக்காக நாக்கில் நீர் ஒழுகக்
காத்திருக்கும் சிங்கங்கள்
அறிவதில்லை முதுகெலும்பை
இழக்கும் மிருகத்தின் வதை.

- வீ.விஷ்ணுகுமார்

காலிக்கோப்பைகள்

சொல்லிமுடிக்காத
வார்த்தை பிரயத்தனங்களை
வாசிக்க ஒரு புல்லாங்குழல்
தேவைப்படுகிறது

ஊமையாகிய நான்
அடைபட்டிருக்கிறேன் காற்றில்...

சிறைகளிலிருந்து
சில சமாதானப்புறாக்கள்
யாருக்காகவோ
பறந்து திரிந்துகொண்டிருக்கின்றன...

தகிக்கும் வெயிலில்
சாலைகளில் விரவிக்கிடக்கும்
நெகிழிக்குடுவைகளை
பொறுக்கி விரையும்
சிறுவனிடத்து
ஒட்டிக்கொண்டிருக்கும்
காலிவயிற்றை
நிரப்பிய காற்று
புல்லாங்குழல் தேடி விரைகிறது...

புறாக்கள் இரைந்துகொண்டிருக்கின்றன

- பன்னீர்.மு. குரால்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு