Published:Updated:

கவிதையின் கையசைப்பு - 12 - கடவுள் கற்றுத்தராத கவிதை

கவிதையின் கையசைப்பு - 12 - கடவுள் கற்றுத்தராத கவிதை
பிரீமியம் ஸ்டோரி
கவிதையின் கையசைப்பு - 12 - கடவுள் கற்றுத்தராத கவிதை

எஸ்.ராமகிருஷ்ணன்

கவிதையின் கையசைப்பு - 12 - கடவுள் கற்றுத்தராத கவிதை

எஸ்.ராமகிருஷ்ணன்

Published:Updated:
கவிதையின் கையசைப்பு - 12 - கடவுள் கற்றுத்தராத கவிதை
பிரீமியம் ஸ்டோரி
கவிதையின் கையசைப்பு - 12 - கடவுள் கற்றுத்தராத கவிதை
கவிதையின் கையசைப்பு - 12 - கடவுள் கற்றுத்தராத கவிதை

த்திய ஐரோப்பியக் கவிதை மரபானது, சர்ரியலிஸம் மற்றும் சிம்பலிஸம் என்ற இரண்டு கவிதைப் போக்குகளைச் சரடாகக்கொண்டு உருவாக்கப்பட்டது. குறிப்பாகச் செக் கவிஞர்கள், கனவுநிலைப்பட்ட கவிதைகளை எழுதுவதில் அதிக ஆர்வம்கொண்டிருந்தார்கள். போலந்திலும் குறியீட்டு வகைக் கவிதைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தன. ஸ்லோவிக் கவிதைகளுக்கு இந்த இரண்டு வகைப் போக்கின் தாக்கமும் அதிகமிருந்தன. குறிப்பாகச் சிம்பாலிஸக் கவிதைகள் அதிக வரவேற்பைப் பெற்றிருந்தன. ஸ்லோவிக் குடியரசு, மத்திய ஐரோப்பாவில் உள்ள நாடு. இதன் மேற்கில் செக் குடியரசும் ஆஸ்திரியாவும், வடக்கில் போலந்தும், கிழக்கில் உக்ரைனும், தெற்கில் ஹங்கேரியும் எல்லைகளாக அமைந்துள்ளன.

கவிதையின் கையசைப்பு - 12 - கடவுள் கற்றுத்தராத கவிதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிலன் ரூபஸ் (Milan Rufus) ஸ்லோவாக்கியக் கவிஞர்களில் மிக முக்கியமானவர். நான்கு முறை நோபல் பரிசிற்கு சிபாரிசு செய்யப்பட்டவர். இவரது கவிதைகள் 20 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டி ருக்கின்றன. லிப்டோவ் பகுதியைச் சேர்ந்த இவர், 1928-ம் ஆண்டு பிறந்தார். 1948-ல் கல்லூரிப் படிப்பில் வரலாறு மற்றும் ஸ்லோவாக்கிய இலக்கியம் கற்ற ரூபஸ், கொமினியஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். சில ஆண்டுகள் நேபிள் நகரில் மொழித்துறை பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். விளாதிமிர் ஹோலன் என்ற கவிஞரைத் தனது ஆதர்சமாகக்கொண்ட ரூபஸ், அவரது கவிதைகளிடமிருந்து எளிமையையும் வாழ்வின் ஆதாரங்களை வெளிப்படுத்தும் குறியீடுகளையும் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார்.குழந்தைகளுக்கான நூல்களையும் மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டுள்ள ரூபஸ், ஸ்லோவாக்கிய இலக்கியத்தின் முதன்மைக் கவியாகக் கொண்டாடப்படுகிறார்.

1930-களில் ஸ்லோவாக்கியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அந்தத் தாக்கம் அவரது மனதில் ஆழமாகப் பதிந்துபோனது. ‘ஒரு துண்டு ரொட்டி’ என்ற படிமம் அவரது கவிதைகளில் தொடர்ந்து இடம்பெறுகிறது. அதற்குக் காரணம் பஞ்சகாலமே. இதுபோலவே குடிநீருக்கான தேடுதல் மற்றும் தண்ணீரின் மகத்துவம் பற்றித் தொடர்ந்து ரூபஸ் எழுதுகிறார். தண்ணீரை அன்பின் அடையாளமாகச் சுட்டுகிறார். தண்ணீரைப் போலவே மனிதர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகிறார்.

கவிதையின் கையசைப்பு - 12 - கடவுள் கற்றுத்தராத கவிதைஒரு தேசத்தை எழுதுவது என்பது, கவிஞனுக்குச் சவாலான வேலை. அவன் தேசத்தின் வரலாற்றிலிருந்து தனது பணியைத் தொடர்வதில்லை. மாறாக, நினைவுகளி
லிருந்தும், தொன்மைக் கலைகளிலிருந்தும், அழியாத கனவுகளிலிருந்துமே தேசத்தின் உண்மை அடையாளங்களைக் கண்டறியத் தொடங்குகிறான். நிஜத்தை நோக்கிய அவனது பயணமே கவிதையில் முன்னெடுக்கப்படுகிறது. குறிப்பாக, மானுடத் துயரங்களே அவனை அதிகம் பாதிக்கின்றன. பெரும் வரலாற்று வெற்றிகளைவிடவும் எளிய மனிதர்களின் துயரங்களையே அவன் கவிதையாகப் புனைகிறான். காலமாறுதல், ஒரு தேசத்தில் ஏற்படுத்தும் பண்பாட்டு விளைவுகளைக் கவிதைகளே துல்லியமாக அடையாளம் காட்டுகின்றன. ரூபஸின் ஒரு கவிதை,

‘வாழ்க்கை, எரிந்து விழும்
நட்சத்திரம்போல ஒளிர்ந்தபடியே
வீழ்ச்சியை நோக்கிப் போகிறதா’
என்று கேட்கிறது.
‘ஒளிரும் நட்சத்திரமா அல்லது
வீழும் நட்சத்திரமா, எது வாழ்க்கை’


என்ற ஊசலாட்டம் உருவாகிறது.

கவிதையின் கையசைப்பு - 12 - கடவுள் கற்றுத்தராத கவிதை

ரூபஸின் ஆரம்பகாலக் கவிதைகள்,  ‘ஸ்ட்ரீம்’ மற்றும் ‘நியூ லீனியேஜ்’ இதழ்களில் இடம்பெற்றன. குறியீட்டு வகைக் கவிதைகள் என்றபோதும், ஸ்லோவிக் நாட்டார் கலைமரபின் தொடர்ச்சியை அவரது கவிதைகளில் காணமுடிந்தது. மார்ட்டின் மார்டினீக் என்ற புகழ்பெற்ற ஸ்லோவிக் புகைப்படக்காரரின் புகைப்படங்கள் இவரது கவிதைகளுக்கு முக்கியத் தூண்டுதலாக இருந்தன. வாழ்க்கையின் மதிப்பீடுகள், இழப்புகள், துயரங்கள் குறித்த புரிதலை, தேடுதலை இவரது கவிதைகளில் தொடர்ந்து காணமுடிகிறது.

நார்வே தேசத்தின் முக்கியமான நாடக ஆசிரியரான ஹென்ரிக் இப்சன், 1867-ல் வெளியிட்ட ஐந்து அங்க நாடகம் ‘பியர் ஜிண்ட்’. இப்செனின் வாழ்நாளில் மிகவும் பரவலாக நிகழ்த்தப்பட்ட நாடகம் இதுவே. நாடகத்திலுள்ள பல பாத்திரங்கள் இப்சனின் சொந்தக் குடும்ப உறுப்பினர்களின் முன்மாதிரிகள்போல வடிவமைக்கப் பட்டிருந்தன. இந்த நாடகத்தை ரூபஸ், ஸ்லோவிக்கில் மொழியாக்கம் செய்திருக்கிறார். ‘நவீன மனிதனின் சிக்கல்களை இப்சன் அளவிற்கு நுட்பமாகப் பேசியவர் இல்லை. ஆகவே, அந்த நாடகத்தை மொழியாக்கம் செய்தேன்’ என்று ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார் ரூபஸ்.

ஸ்லோவாக்கியா ஒரு சிறிய நாடு. நிச்சயமாக, அது ரஷ்யாவின் பெரும் நிலப்பரப்பு, சீனாவின் நூறு கோடியைத் தாண்டிய மக்கள்தொகை, அல்லது கனடாவின் இயற்கை வளங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்க வில்லை. ஆனால், ஸ்லோவாக்கி யர்கள் தங்களைக் குறைத்து மதிப்பிடுவதற்கு செல்வம், மக்கள்தொகை மற்றும் புவியியல் பகுதிகளை ஒரு தவிர்க்க முடியாத காரணியாகப் பயன்படுத்து வதில்லை. பண்பாடே அவர்களின் மிகப்பெரிய செல்வம். ‘ஸ்லோவாக்கியா ஓர்  அற்புதமான நாடு. மக்கள் யாரும் அவர்கள் விரும்பும் எதையும் வெளிப்படையாகப் பேசலாம்; விவாதிக்கலாம். சுதந்திரமாகச் செயல்படலாம். அரசியல் நிலைப்பாடுகள் வீட்டிற்குள் எந்த ஆதிக்கமும் செலுத்துவதில்லை. கறாரான அரசியல் தன்மையை அவர்கள் கேலி செய்யக் கூடியவர்கள். எந்த ஒரு சிந்தனையையும் விவாதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள். உணவு மேசையில் அவர்கள் ஒருபோதும் அரசியல் பேசுவதில்லை’ என்கிறார் மிலன் ரூபஸ்.

கவிதையின் கையசைப்பு - 12 - கடவுள் கற்றுத்தராத கவிதை

ஸ்லோவாக்கிய இலக்கியப் படைப்புகள், ஆங்கிலத்தில் குறைவாகவே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. கவிஞர் டெட் ஹியூஸ்-டேனியல் வெய்ச்போர்ட் முன்முயற்சியால் சிலரது கவிதைகள் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளன. அதைத் தவிர, முக்கியக் கவிஞர்களின் படைப்புகள் பல இன்னமும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. ரூபஸின் கவிதைகளும் அப்படியே. தனிநபர்கள் சிலரது முன்முயற்சியில் ரூபஸின் கவிதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை தவறுகள் மலிந்தவை.

குழந்தைகளுக்கான அவருடைய புத்தகங்கள், கற்பனை வளமிக்க எழுத்துகளாகும். அவருடைய சிறிய பிரார்த்தனைப் பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை. இளைஞர்கள் அதை விரும்பி வாசித்தார்கள். திருச்சபையில்கூட அந்தக் கவிதைகள் வாசிக்கப் பட்டன. ‘When We Have Matured’ என்ற ரூபஸின் முதல் கவிதைத் தொகுப்பு, கனவு நிலைப்பட்ட மத்திய ஐரோப்பிய மரபிலிருந்து விலகி, தனக்கான புதிய பாடுபொருளை, மொழிதலை முன்வைத்தது. அதன் காரணமாக அக்கவிதைகள் வாசகர்களால் கொண்டாடப்பட்டன. கம்யூனிஸ அரசால் ஏற்பட்ட ஒடுக்கு முறைகளை ரூபஸின் கவிதைகள் உரத்துப் பேசின. ‘அதிகாரம், மக்களை முட்டாளாக்குவதுடன் மந்தைகளைப்போலவும் நடத்துகிறது. மனித மீட்சிக்குக் கவிதைகளே உதவுகின்றன’ என்கிறார் ரூபஸ்.

‘ஒரு துண்டு ரொட்டி மனிதனை உயிர்வாழ வைப்பதுபோலவே, ஒரு கவிதை மனிதனை ஆற்றுப்படுத்துகிறது. தைரியத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்ளவைக்கிறது’ என்று ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார் ரூபஸ்.

‘மேஜையின் மீது வைக்கப்பட்ட ரொட்டி
ஒரு குவளை நீர்
அல்லது ஒரு துளி உப்பு
போன்றதே கவிதையும்’


என்று ரூபஸின் கவிதை குறிப்பிடுகிறது. உயிர்வாழ்வதற்கான ஆதாரங்களுடன் ஒன்றாகக் கவிதையை இணைத்திருப்பதே அவரது தனித்துவம்.

‘பைபிளில் வரும் லோத்தின் மனைவி, அழிந்துகொண்டிருக்கும் தனது சொந்த ஊரான சோதோம் நகரைத் திரும்பிப் பார்க்கிறாள், உடனே உப்புத்தூணாக உருமாறிவிடுகிறாள். கவிஞர்கள், அழிந்து கொண்டிருக்கும் உலகைத் திரும்பிப் பார்க்கும்போது லோத்தின் மனைவியைப்போல உப்பாக மாறிவிடுவ தில்லை. மாறாக அழிவின் பாடலை உரத்துப் பாடத் தொடங்குகிறார்கள். லோத்தின் மனைவி குரலற்றவள். கவிஞர்கள் தங்கள் குரலாக அழிவின் துயரங்களைப் பாடிக்கொண்டே யிருக்கிறார்கள். சோதோம் நகரம் அழிவுற்றதுபோலவே நமது காலத்தில் முக்கிய நகரங்கள் அழிவுற்றுக் கொண்டிருக்கின்றன. கவிஞர்கள் திரும்பிப் பார்க்கக்கூடியவர்கள். அழிவைக் கண்டு அவர்கள் பயந்து ஓடுகிறவர்களில்லை. மாறாக, அழிவின் கடைசித்துளிவரை அவர்கள் கண்கொள்கிறார்கள். அதை மனதில் பதியவைத்துச் சொற்களைக் கொண்டு அழியாப்பாடலை உருவாக்குகிறார்கள். கவிஞனின் வேலை, காலத்தின் பிடியிலிருந்து உலகை மீட்பதே’ என்கிறார் ரூபஸ்.

‘கவிஞன், கடவுளின் செல்லக்குழந்தை. அவனை உலகிற்கு அனுப்பியதே, அன்பைத் தனது சொற்களின் வழியே அவன் பகிர்ந்து தருவான் என்பதற்காகவே’ என்கிறார் ரூபஸ்.வண்ணங்கள் எதையும் தொடாமல் சிறார்கள் காற்றிலே ஓவியம் வரைவார்கள். அந்த அரூப ஓவியங்கள் அவர்கள் கண்ணுக்கு மட்டுமே புலப்படக்கூடியவை. கவிதை எழுதுவது, அதுபோன்ற ஒரு செயலே. பால்யத்தின் வாசனையில்லாமல் ஒருவனால் கவிதை எழுதிவிட முடியாது. காற்றில் சிறகுள்ள குதிரையை வரைந்து அதைப் பறக்கச் சொல்லும் சிறுவனின் ஆசை போன்றதே கவிஞனின் மனதும். உலகம் இச்செயலைப் பரிகசிக்கக்கூடும். ஆனால், வாழ்க்கை இது போன்ற தூய சந்தோஷங்களை வேண்டவே செய்கிறது.

கவிதையின் கையசைப்பு - 12 - கடவுள் கற்றுத்தராத கவிதை‘மரங்களைப் பற்றிப் பேசுவதென்பதும்
குற்றமே.
காரணம், அது நீதியின்மையைப்
பற்றிய மௌனத்தை உள்ளுணர்த்துகிறது’


என்று பெர்டோல்ட் பிரெக்டின் கவிதை வரிகள் உண்டு. இக்கவிதை இயற்கையை அதிகாரத்திற்கு எதிரான மௌனசாட்சியாக முன்னிறுத்துகிறது. வேர்ட்ஸ்வொர்த் வகைக் கவிஞர்களால் இயற்கையை வியந்து பாடும் கவிதைகள் எழுதப்பட்ட சூழலில், இயற்கையை நீதியின்மையின் சாட்சியமாக பிரெக்ட் முன்வைக்கிறார். ரூபஸின் கவிதைகள் செயல்படுவதும் இதுபோன்ற தளத்தில்தான்.

‘ஆயுதங்களைக்கொண்டு மட்டுமல்ல
சிரிப்பாலும் ஒருவரைக் காயப்படுத்த
முடியும்’


இக்கவிதை வரி, சிரிப்பால் உருவாக்கப்படும் வடுவைப் பற்றிப் பேசுகிறது. சிரிப்பு பற்றி நம் மனதில் பதிந்துபோயிருந்த வழக்கமான சித்திரத்தை இந்த வரி மாற்றியமைக்கிறது. விஷச்சிரிப்பு என்ற சொல்லின் அர்த்தம் இந்த வரியின் வழியே அடையாளப் படுத்தப்படுகிறது.

பொதுப்புத்தி உருவாக்கிவைத்துள்ள பிம்பங்களுக்கு மாற்றை உருவாக்குவது கவிதைகளே. அவை நாம் அறிந்த விஷயங்களை, அறியாத தளத்தை, அறியாத முறையில் அறியப்படாத பொருளுடன் அணுகுகின்றன; விளக்க முற்படுகின்றன.

‘உடைந்த கல்லறையை
தட்டி ஓயும் மழை’


என்றொரு படிமத்தை ரூபஸின் கவிதை ஒன்றில் கண்டேன். இயற்கை, தன் போக்கில் இயங்கிக்கொண்டி ருக்கிறது. வாழும் வீடும் கைவிடப்பட்ட வீடும் அதற்கு வேறு வேறில்லை. மனிதர்கள் இயற்கையைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று போராடுகிறார்கள். இயற்கையோ தன்போக்கில் தன் இயல்பில் கடந்துபோய்க்கொண்டேயிருக்கிறது. இடிந்த கல்லறை என்பது காலத்தின் அடையாளம். தட்டி ஓயும் மழை, தொடரும் வாழ்வின் அடையாளம்.

இன்னொரு கவிதையில், ‘நாம் பசியை நேசிக்க வேண்டும்’ என்கிறார் ரூபஸ். காரணம், பசிதான் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. பசித்திருப்பதே தேடலின் ஆதாரம். பசி, நம் வலிமையை நமக்கு அடையாளம் காட்டுகிறது. பசி, நம் இயலாமையைப் புரியவைக்கிறது. பசி, நம்மை நினைவுகொள்ளவைக்கிறது. பசி, நம் கடந்தகாலத்தை மறக்கவைக்கிறது. ஆகவே, பசியை நாம் நேசிக்க வேண்டும். ‘கடவுள் கற்றுத்தராத கவிதையைக் கண்ணீர் மனிதனுக்குக் கற்றுத் தந்துவிட்டது’ என்கிறார் ரூபஸ்.

உடலுக்குப் பொருத்தமான உடைகளை விருப்பமானவர்கள் நமக்கு அனுப்பித் தருவதைப்போலவே, மனதிற்கு விருப்பமான சொற்களைக் கவிஞர்கள் நமக்குத் தருகிறார்கள். கவிதையும் ஓர் ஆடையே. அந்த ஆடை விசித்திரமானது, பழைமையானது, அதிசயமானது.

ரூபஸின் கவிதைகள் பெரிதும் காட்சிபூர்வமானவை. அவை, தீவிர பிரக்ஞையுடன் எழுதப்பட்டவை. தினசரி வாழ்வின் அனுபவங்களைத் தனித்துவமாகக் கையாளக்கூடியவை. அவரது கவிதையின் படிமங்கள் வாசகர்களை தன்வசப்படுத்தி முழுமையான அனுபவத்தைப் பகிர்ந்து தருவதாக உள்ளன. மைக்கேல் ஏஞ்சலோ பற்றிய இவரது கவிதை, நுண்கலையின் மீதான ஈடுபாட்டின் சந்தோஷ வடிவமாகவே வெளிப்பட்டுள்ளது.

ரூபஸின் கவிதைகளில் கடவுள், மதம் சாராத அடையாளமாக முன்வைக்கப் படுகிறார். பிரார்த்தனைப் பாடல் போன்று தோற்றமளிக்கும் இவரது சில கவிதைகள், கடவுளைப் பெருங்கருணைகொண்ட மனிதவுருவாகச் சித்திரிக்கின்றன.
சிம்பாலிஸக் கவிதைகளில், கவிஞன் புற யதார்த்தத்திலிருந்து சொற்களால் விளக்க முடியாத உலகை நோக்கிச் செல்கிறான். குறியீடுகளை முன்வைத்து அவற்றை விளக்க முற்படுகிறான். ரூபஸ், அத்தகைய குறியீடுகளை உருவாக்க முற்படும்போதும் அவற்றை எளிய குறியீடுகளாக அமைக்கவே முயல்கிறார்.

உலகின் ஆச்சர்யங்களைப் பலரும் கவிதைகளில் முன்வைத்தபோது, ரூபஸ் தெளிவற்ற வாழ்க்கையை, அதன் சிடுக்குகளை, வலியை, துயரை எழுதவே முற்பட்டார். ‘கவிதை ஒரு ரகசிய மொழி. அது நம் சொந்தத் தேவைக்குக் கீழ்ப்படியாது’ என்று குறிப்பிடுகிறார் மிலன் ரூபஸ்.

‘ஒரு படகினைத் தீட்ட
நீ தண்ணீரை
வரைய வேண்டியதில்லை’


என்ற கவிதை வரிகளை கவிஞர் காப்லின்ஸ்கி எழுதியிருக்கிறார். கவிதை எந்த உலகைப் பிரதிபலிக்கிறது என்பதை அடையாளப்படுத்தும் கவிதை இது. ரூபஸ் இத்தகைய வரிகளையே பின்தொடர்ந் திருக்கிறார்.

1998-ல் புதிதாகக் கண்டறியப்பட்ட சிறிய கிரகம் ஒன்றிற்கு ‘ரூபஸ்’ எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஒரு கவிஞனுக்குச் செய்யப்பட்ட உயரிய மரியாதை இதைவிட வேறு என்ன இருக்க முடியும்?!

(நிறைந்தது)

கவிதையின் கையசைப்பு - 12 - கடவுள் கற்றுத்தராத கவிதை

அழகு

யாரால் கூற இயலும்
படைவீரர்கள் தங்களுடைய கேடயங்களில் ஓவியம் தீட்டியது ஏன் என்று?

நமக்குள் எவ்வளவு ஆழத்தில் அழகு இருக்கிறது
என்பதை யார் கூற முடியும்?

-மிக ஆழம்,
உன்னோடு சேர்ந்து ஒரு சண்டைக்கோழியின் கத்தலைப்போல
நாம் மரணத்தைப் பயமுறுத்துகிறோம் அந்த அளவுக்கு மிக ஆழம்.

எங்களது உலகில் நாங்கள் எல்லா பக்கங்களிலும் பூட்டிவைக்கப்பட்டிருக்கிறோம்
கவிஞனைக் கைவிட்டுவிடாதீர்கள்.
ஒரு சக்கரத்தின்மேல் சும்மா கத்தும் குண்டுக் கரிச்சானை அவனிடம் காட்ட வேண்டாம்.
பேச்சின் ஒரு சிறிய கூடு, முழுக்கவும் ஒரு மின்னுதல்...

அவனுடன் இருப்பதுவும் துயரம் அவன் இல்லாமலிருப்பதுவும் துயரம்.

சிலுவையிலிருந்து வாக்குமூலம்

கவிதையின் கையசைப்பு - 12 - கடவுள் கற்றுத்தராத கவிதைசிலுவையிலிருந்து காற்று மட்டுமே எடுக்கப்பட்ட ஒரு நிலத்தில்
மனிதன் அவனுடைய பாதத்தில் ஓர் ஆணியுடன் பிறந்தான்.
அதைக்கொண்டு, அவன் நேசித்த பூமியில் அவன் அறையப்பட்டான்.
அவ்வாறாக அவன் பிறந்தான், அவ்வாறாக அவன் இறந்தான்.

இப்பொழுது எல்லாமே பழங்கதையானது
ஆணியும் சிலுவையும். பூமி, இனியும் பிரியத்துக்குரியது இல்லை,
பெற்றுக்கொள்வதும் இல்லை. யாருக்கும் சொந்தமிலா நிலம். மேலும் பழக்கம்
அவனது கனத்த உள்ளங்கையைத் துரிதப்படுத்துகிறது.

அந்த ஏழ்மையே சிலுவையாய் இருந்தது. கவிஞனுக்கு இப்போது
அது ஒரு ஞாபகம் மட்டுமே. எதையோ அவன் யூகிக்கிறான். மேலும் குசுகுசுக்கிறான்:
“அவரைத் தூக்கிக் கீழே இறக்கும்போது அவர்கள் அவரைக் கொன்றுவிட்டார்கள்”

ஆனால் அவர் இறந்துபோனார். அவர் வலியால் கதறவில்லை.
பயம் அவர் அறியாதது.
பயம் அவர் அறிந்தது.

ஒரு கவிதையும் ஒரு குழந்தையும்

குழந்தைப் பருவ உலகம்.
அதன் பிரகாசத்தில் எல்லாமும் உருகுகிறது.
களைத்துப்போன எலும்புகள்மீது மானுடம் மிளிர்கிறது.

குழந்தைப் பருவத்தின் உலகம் –
குழந்தைகள் ஒரு வாழும் கவிதை.
இந்த உலகில் மெய்மை என்பது ஓர் அதிசயம்
அதிசயம் என்பது இங்கே ஒரு மெய்மை.

உங்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால்
இங்கு இருக்கும் இது பரிமாறப்படுகிறது,
கலாதேவதைக்குத் தலைவணங்கு
அவளைக் கேள்.

கலாதேவதை உன்னிடம்
கொஞ்சம் சிலிர்ப்புடன் கூறுவாள்:
ஒரு கவிதையும் ஒரு குழந்தையும்
கையோடு கை கோத்திருக்கும் இரட்டையர்கள்.


மீந்திருக்கும் மலர்கள்

ஒரு கொத்து மலர்களும்
மூன்று துயரப் பறவைகளும்.
என்ன இது, அன்பே?
ஒரு பாடலா அல்லது ஒரு கதைப்பாடலா?

ஓர் அழும் குழந்தைகூட சில சமயங்களில் கேட்டுவிடும்
ஏன் நம்மை ஊழ் வந்து உறுத்துகிறது என.
எனினும் ஒரு பிரியம்கொண்ட சக்தி மேலிருந்து கூர்ந்து கவனிக்கிறது,
அதன் பாதுகாப்பு நிச்சயம் தொடர்ந்து இருக்கும்.
பொங்கிவரும் கண்ணீர் விரைவில் வற்றிவிடும்.
பறவைகள் பறந்துபோய்விட்டன.
பூக்கள் மீந்திருக்கின்றன.

பிரிதல்

எனது வாயுடன் உனது வாய், நிறைந்தது.
எனது கைகளுடன் உனது கைகள், நிறைந்தது.
உனது விம்மி அழும் குரல், பாதாளங்களின் காற்றைப்போல
எனது மண்டையோட்டில் முணுமுணுக்கிறது.

மன்னியும், மிக மன்னியும், அது முடிந்துபோனது.
அவமானம், அதன் கூர்மையான கத்தியை எனக்குள் பாய்ச்சுகிறது.
ஒரு கணத்தில், மிகுந்த உள்ளுணர்வின் தூண்டுதலால்
நான் தாங்கியிருந்த சிலுவையை நீ பார்க்கவேண்டியதாயிற்று.

எனினும் ஒரு ரகசியமான வெப்பத்துடன்
ஒரு கோழை நம்பிக்கை,  நமது கனவுகளில் நம்மை வெதுவெதுப்பாக்குகிறது,
அதை மறப்பதற்கு உன்னிடம் யாரேனும் கூறுவது
நம்பிக்கையைவிடவும் மிக உண்மையானது.

புலன்களுக்குள் சுத்தியல் அறையும் அந்த நாள்
அது குழப்பத்தை உண்டாக்கிய அதே வழியில் சச்சரவை அமைதிப்படுத்தும்.
உதடுகளிலிருந்து கசப்புச் சொற்களின் நுரையை,
முகத்திலிருந்து கண்ணீர்த் துளிகளின் நெருப்பை அது நக்குகிறது.
குழந்தைப் பருவ நிலக்காட்சி

நிலக்காட்சிகள் உயிர்த்திருக்கின்றன. நீ வேண்டும் இந்த ஒன்று
உனது கனவுகளில் மட்டுமே இருக்கிறது. நுழையாதே, நீ விழுந்துவிடுவாய்.

ஒரு கள்ளப்பயணி நீ என்பதுபோல இருக்கிறது இது
உனது காலத்திலிருந்து வெளியேற நீ முயற்சி செய்தாய்
ஒரு விமானத்திலிருந்து நேரடியாக ஒரு மேகத்தின் மேல், என்பதாக.
அதை உறுதி செய்யலாம், அது எடுத்துச் சென்றுவிடும்
பாரத்தை, அது நீதான்,
எப்போதைக்குமாக உனது சிறகின்மையை. 

ஆனால், இப்போது அது ஒரு பலிபீடம். வெறும் ஒரு பலிபீடம்.
மேலும், எவர் ஒருவரும் தேவபிரபுவைப் பார்த்ததில்லை.


தவிரவும் சிற்பி எந்தக் கல்லிலிருந்து செதுக்கினான்
என்பதில் என்ன இருக்கிறது.

இங்கே கல் கல்லாக இல்லை,
அது ஓர் எண்ணம். எனவே ஒரு கணத்துக்கு நில்லுங்கள்.

பிறகு போய் வாழுங்கள்.

கவிதையின் கையசைப்பு - 12 - கடவுள் கற்றுத்தராத கவிதை

உறைபனியில் காலடித் தடங்கள்

என்ன அவள் விரும்பினாளோ அது அவளிடம் இருக்கிறது, ஒரு கவிதை.
மின்னும் சொற்கள் அல்ல.
ஞாபகத்திற்குத் தலையில் ஓர் இருக்கை இருக்கிறது.

மேலும் தலை ஏற்கெனவே வெள்ளையாக இருக்கிறது.

மேலும் தலை ஏற்கெனவே தனித்து இருக்கிறது.

அது தனிமையில்.
அந்த சூத்திரம்,
பிறப்பவை அனைத்தும் இறக்கும் என்னும் அது,
ஏற்கெனவே அவளுக்கு அது வெகுகாலமாகத் தெரிந்திருக்கிறது.

மேலும் நிச்சயமாக அவளுக்குக் குற்றவுணர்வு வருத்தம் இல்லை
இன்னும்கூட அதிக ஆர்வமாக இருந்தாள்
 
அவள் ஆகாயத்துக்கு நன்றிகள் கூறுகிறாள்
அவளது இருப்பில் அது பங்கெடுத்துக்கொண்டதற்காக.


ஒரு பையன் ஒரு வானவில்லை வரைகிறான்

கவிதையின் கையசைப்பு - 12 - கடவுள் கற்றுத்தராத கவிதைகுருடு, கூட,
பறக்க முயற்சி செய்யும் ஒரு பறவைக்குஞ்சுபோல,
மேலும் மென்மையானது
மேலும் உணர்வில்லாமல் உறைந்துபோனது.

காதல் எனக்கு வழங்கியது வலி;
உப்பைப்போல, அதன் மதிப்பு எனக்குத் தெரியாது.
மேலும் பகல் இருண்டு வளர்கிறது
ஒரு பைத்திய மனவேதனை
நாளின் சாம்பல் குதிரைகள்மேல் விளாசுகிறது.

கவிதை அதன் சிறகுகளை, ஒரு பாவமிழைத்த துயரப் பாடலுடன்
ஒரு வெற்று மடியில் மடக்கிவைக்கிறது.
எனினும் கலங்கிய நீர் நிலைகளில்
கோடை வானவில் நீர் அருந்துகிறது
இன்று எனது சிரைகளில் இருந்து எனது இளைப்பாறல்போலவே.

காதலிக்க நான் கற்றுக்கொள்வதற்கு முன்பு
நான் உன்னை நிந்தனை செய்திருந்தால்
ஆனந்தமே,
என்னை மன்னித்துவிடு.