Published:Updated:

பேரீச்சை

பேரீச்சை
பிரீமியம் ஸ்டோரி
பேரீச்சை

அனோஜன் பாலகிருஷ்ணன் - ஓவியங்கள்: டிராட்ஸ்கி மருது

பேரீச்சை

அனோஜன் பாலகிருஷ்ணன் - ஓவியங்கள்: டிராட்ஸ்கி மருது

Published:Updated:
பேரீச்சை
பிரீமியம் ஸ்டோரி
பேரீச்சை

லண்டன் ஹித்துரு விமான நிலையத்தை இன்னும் பதினொரு நிமிடங்களில் அடைந்துவிடுவோம் என்று விமானி அறிவித்தபோது அதிகாலை மூன்று மணியாகியிருந்தது. யன்னல் கண்ணாடியை உயர்த்தி வெளியே பார்த்தான். கறுப்புப் போர்வைக்குள் வான் தத்தளித்துக் கொண்டிருந்தது; தூரத்தில் மஞ்சள் நிறத்தில் ஒளிச்சிதறல்கள் நீள்சதுர வடிவில் தென்படலாயின. அலுமினிய உடல் குலுங்கி, சின்ன திடுக்கிடலுடன் மெல்ல பதியலாயிற்று. ஊடுருவியிருந்த பேரமைதி ஒரு கணம் அவனைத் திடுக்கிடவைத்தது. கண்களை லேசாகத் திருப்பி சகபயணிகளைப் பார்த்தான். தூக்கத்திலிருந்து விழித்து, கலைந்திருந்த கேசத்தைச் சரிப்படுத்தியவாறு உடலை வளைத்து நெட்டி முறிந்து சுறுசுறுப்படைந்துகொண்டிருந்தார்கள். தனித்துவிடப்பட்ட பயம் மூச்சுக் குழாய்க்குள் சிக்கி அவனை அவதியுறச் செய்தது. பின்முதுகு எரிந்தது, உலோகக் கம்பிகளாலும் சிகரெட்டுகளாலும் சுடப்பட்ட காயங்களின் மீது மேல்சட்டையின் உரசல் தீண்டியிருக்க வேண்டும். தாடைகள் அழுத்த, பற்களை இறுக்கமாக் கடித்துக்கொண்டான். கழுத்துப் பட்டிக்கால் குளிர்காற்று உள்நுழைய, தேகம் சாதுவாக அதிர்ந்ததை அருவருப்போடு உணர... கை, தடித்த குளிரங்கியைத் தனிச்சையாக அழுத்திப் பற்றிக்கொண்டது.

பேரீச்சை

குடியகல்வுப் பகுதியில் கடவுச் சீட்டை கொடுத்துவிட்டு, சொல்ல வேண்டியவற்றைத் தனக்குள் மீண்டும் சொல்லிப் பார்த்தான். கட்டுநாயகா விமான நிலையத்திலிருந்து அலைக்கழித்தவை மீண்டும் அவனின் அகத்துக்குள் துளிர்த்தன. ஒரு வெறுப்பை அடைய, என்னவென்றாலும் ஆகட்டும்; ஆவது ஆகட்டும் என்ற சலிப்பையடைந்தான். மறுகணம் பதற்றம் கூடியதை கலவரத்துடன் உணர, சமநிலை குலைந்தான். குளிர் அங்கியின் பொக்கற்றுக்குள் கையைவிட்டுப் பிசைய, அவன் பத்திரப்படுத்திவைத்திருந்த தோடு அவனது கைகளில் தீண்டிற்று.

ரம் ஒன்றிலிருந்து அவனுடன் பாடசாலையில் படித்துவந்த நதீசனின் வீடு, மாம்பழம் சந்தியருகேயிருந்த கிரவல் ஒழுங்கையின் தொங்கலில் பெரிய மாமரத்துடன் இருந்தது. இருவரும் ஒன்றாகவே பாடசாலைக்கு சைக்கிளில் மிதித்துச் செல்வதும், டியூட்டரிக்கு அலைவதும், அந்திப் பொழுதுகளில் ஒழுங்கையில் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடுவதும் வழமை. நதீசனின் அப்பா 2000 ஆண்டு இடம்பெயர்வின்போது எறிகணை வீச்சில் கொல்லப்பட்டிருந்தார். அதுவரை துடிப்புடன் பார்வதி வித்தியாலயத்தில் ஆசிரியையாகவிருந்த அவனது அம்மா, சிறிதுகாலம் துவண்டுபோயிருந்தது உண்மைதான். ஆனால், விரைவிலே மீண்டுவந்து தனி மனுஷியாக நதீசனையும் அவனது தமையன் நிரோஷனையும் கண்டிப்புடனே வளர்த்தார். எப்போதுமே படிப்பு படிப்பு என்று வலியுறுத்திக்கொண்டேயிருப்பார். தவணைப் பரீட்சை பெறுபேறுகள் வந்தபின்னர் அவனுக்குக் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலப் பாடத்தில் என்ன பெறுபேறுகள் என்று கேட்டு, தன் மகன் நதீசனுடன் கடுகடுப்பான முகத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பார். அச்சமயத்தில் அவன் தரையைப் பார்த்தவாறு நிற்பான். அதனால் என்னவோ அவர் இரும்பு மனுஷியாவே அவனுக்குத் தெரிந்தார். அன்று அவர் அழுதபோது அவன் திகைத்தாலும், உண்மையில் ஒருபக்கம் சிரிப்பு வந்ததோடு அவர் மீதிருந்த பயம் கலந்த விம்பமும் அவனுக்குள் தகர்ந்து போயிற்று.

“தம்பி எங்கட ரோஸ்கி, ஆமிக் காரன்களோட ஓடிப்போச்சு” என்று தழுதழுக்க கண்களிலிருந்து நீர் வழிய, குரல் குழறச் சொன்னார். திகைத்துவிட்டு கேற்றுக்கால் எட்டிப் பார்த்தான். வழமையாக ரோஸ்கியைக் கட்டிவைக்கும் இடத்தில் இரும்புச் சங்கிலி மட்டுமே இருந்தது; பக்கத்தில் ரோஸ்கி உணவு உண்ணும் தட்டு அநாதரவாக இருந்திற்று. வெளி விறாந்தையில் பரீட்சை வினாத் தாள்களை அவர் திருத்திக்கொண்டி ருக்கும்போது, முன்னம் இருகால்களை நீட்டி தலையைச் சாய்த்து அவர் அருகே வீறாப்பாகப் படுத்திருக்கும். கேற்றுக்கு வெளியே சிறார்கள் யாரும் சத்தம் எழுப்பிக்கொண்டு ஓடித் திரிந்தால், உறுமிக்கொண்டு ரோஸ்கி குரைக்கும். “என்னடா...?” என்று படுத்திருக்கும் ரோஸ்கியின் முதுகைக் காலால் வருடிச் சமாதானப்படுத்துவது அவரின் வழமை. அவருக்கும் ரோஸ்கிக்கும் இடையில் அன்னை மகன் உறவு இருப்பதுபோலவே தோன்றும். அப்படிப்பட்ட ரோஸ்கி, ரோந்து வரும் ராணுவத்தினர் கூட்டிக்கொண்டு வரும் வளர்ப்பு நாய்களுடன் சென்றிருக்கிறது. உடனே என்ன எதிர்வினையை முகத்தில் வெளிக்காட்டுவது என்று அவன் குழம்பிப் போய், சிரிப்பு வந்த முகத்தை ஆமையின் ஓடு என உணர்ச்சிகளை வெளிக்காட்டாது கெட்டிக்காரத்தனமாக வைத்துக் கொண்டான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேரீச்சை

ரோஸ்கி அவனுடனும் வாரப்பாடாகவே இருந்தது. அவ்வீட்டில் கண்டால் சிநேகமாக எழுந்து நின்று வாலாட்டும். செம்மண்ணை வழித்தெடுத்துப் பூசியதுபோல உடல் முழுவதும் செந்நிறத்தில் இருந்தாலும், அதன் வால்பகுதி மட்டும் வெண்ணிறமாக நுரைத்த பால்போல சடையாக இருக்கும். முன்னிரண்டு கால்களை நீட்டி அவன் தொடைகளை தட்டிவிட்டு “உவ்வ்...” என்று ஒலி எழுப்ப, தலையைத் தடவிக்கொடுப்பான். உடனே அவன் கைகளை ஈரம் படிந்த நாக்கால் நக்கி, அவனது காலை சிநேகமாக உரசும். அவர்கள் வீட்டில் எப்போதும் பெரிய கண்ணாடிப் போத்தலில் நிறைய பேரீச்சம்பழங்கள் நிறைந்திருக்கும். விளையாடச் செல்ல முதல் அவனும் நதீசனும் வாய் நிறைய பேரீச்சம்பழங்களை அள்ளி விழுங்குவார்கள். “பேரீச்சை பாலைவனத்தில் வளர்வது, தன்னுள் ஈரமும் இனிப்பும் கொண்டது” என்று நதீசனின் அம்மா சொல்வார். அப்படிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, ரோஸ்கி அவனை ஆர்வத்துடன் கண்மணிகள் விரிவுகொள்ள ஏக்கத்துடன் பார்த்திற்று. விளையாட்டாக ஒரு பேரீச்சம்பழத்தை உள்ளங்கையில் ஏந்தி வாயருகே நீட்டினான். செந்நிற நாக்கை நீட்டி வழித்து அப்படியே வாயிலெடுத்து சதைகளை உறிஞ்சிவிட்டு, கொட்டையை மட்டும் வெளியே துப்பியது. அன்றிலிருந்து அவன் ரோஸ்கிக்கு தினமும் ஒன்றிரண்டு பேரீச்சம்பழம் கொடுப்பான்.

நதீசனின் அம்மா இன்னும் அழ ஆரம்பித்தார். “அம்மோய், சும்மா இருக்கிறியலே!” என்ற அதட்டலுடன் மூத்தமகன் நிரோஷன் கதவடிக்கு வந்தார்.

நிரோஷன் அண்ணா அவர்களைவிட நான்கு வயது மூத்தவர். அவர்கள் படிக்கும் பாடசாலையிலேயே உயர்தரப் பிரிவில் படித்துவந்தார். அதிகம் இவர்களுடன் கதைக்கமாட்டார், வீட்டில் பெரிதாக இவர்களும் கண்டதுமில்லை. சவரம் செய்யப்பட்ட அவரது முகத்தில் வசீகரம் தவழ்ந்தவாறே இருக்கும். நீள கறுப்பு காற்சட்டை அணிந்தவாறு, மஞ்சள் டீசேட்டோடு லுமாலா சைக்கிளின் இரும்புக் கரியரில் நடராஜா கொம்பாசும், அய்ப்பியாசக் கொப்பிகளும் அழுத்திப் பற்றியிருக்கச் சென்றுவருவார்.

அந்திப் பொழுதொன்றில் கிரிக்கெட் விளையாடுவதற்கு புதிய டென்னிஸ் பந்து தேவையாக இருக்க, அவரது அறைக்குள் நுழைந்து ஏதாவது பந்திருக்கா என்று தேடியபோது, அவரது மேசை லாட்சிக்குள் இரண்டு கிரனைட்டுகள் சில்வர் நிறத்திலிருந்ததைக் கண்டு இருவரும் திடுக்கிட்டார்கள். பிடுங்கிவைத்த இதயங்கள்போல் வளவளப்பான உலோகத்தில் கைக்கு அடக்கமாக இருந்தன. மேல்நுனியில் சின்னக் கிளிப், நீள் வட்டமாக இருந்தது. பதற்றத்துடன் நெஞ்சு குளிர உள்ளங்கைக்கு எடுத்துப் பார்க்க, கைக்குள்ளே மறைந்துபோனது. அழுத்திப் பற்ற, வெட்டிய மாதுளம் பழத்தை உட்புறமாக அழுத்தியதுபோல வழுவழுப்புடன் உரச, தேகம் குளிர்ந்தது. இருந்தபடியே லாட்சிக்குள் வைத்துவிட்டு வெளியே வந்தார்கள். நதீசனுக்கும் அவனுக்கும் குறுகுறுப்பு பற்றிக்கொண்டது.

“அம்மாட்ட சொல்லப் போறியா?” என்றான்.

அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு, கழுத்தை வெடுக்கென்று திருப்பி இடுப்பில் கைவைத்தவாறு “ஏன் சொல்லணும்?” என்றான் நதீசன்.

புதிய வருடத்தின் இரண்டாவது மாதம் ஆரம்பித்திருந்த காலப்பகுதி. சுடுவெயிலில், வரவிருக்கும் விளையாட்டுப் போட்டிக்கான தேர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. மிகப்பெரிய மைதானத்தைச் சுற்றி கட்டப்பட்டிருந்த சீமெந்து கட்டுகளில் பிரிவு பிரிவாக மாணவர்கள் அமர்ந்திருந்தார்கள். உயரம் பாய்தல் ஒரு மூலையிலும், நூறு மீற்றர் ஓட்டப் போட்டிகள், தட்டெறிதல், ஈட்டி எறிதல் ஒரு பக்கமாகவும் விறுவிறுப்பாக நிகழ்ந்தவாறிருந்தன. பனையோலைகளில் நெய்யப்பட்ட ஓலைத்தொப்பிகளை அணிந்தவாறு ஆசிரியர்கள் மைதானத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவாறு, சுரந்த வியர்வையை வழித்துத் துடைத்தவண்ணம் எல்லோரும் ஏதோவொன்று செய்து கொண்டிருந்தார்கள்.

“கும்” என்ற பாரிய சத்தத்தை உணர்ந்தபோது முதலில் யாருக்கும் ஏதும் புரியவில்லை. சிறிது நேரம் கழிய, அருகிலிருந்த பழைய பூங்காவிலிருந்து வௌவால்கள் இரைச்சலுடன் எழுந்து வானை நிறைத்து அலைந்து பறந்தபோதே, ஏதோ விபரீதம் என்று புரியத் தொடங்கிற்று.

பேரீச்சை

மதில் பாய்ந்து ஐந்து ஆமிக்காரர்கள் துப்பாக்கிகளுடன் உள்ளே புகுந்தார்கள். மைதானத்திலிருந்து வகுப்பறைகள் தள்ளியே இருந்தன. அனைவரது முகங்களும் ஆமிக்காரர்களை நோக்கி ஆர்வத்துடன் திரும்பிற்று.

இரண்டாம் மாடியுள்ள வகுப்பறையிலிருந்து இறங்கிவரும் படிக்கட்டுகள் அருகேயிருந்த சீமெந்து பெஞ்சுகளை நோக்கி, இரண்டு ராணுவத்தினர் ஏறக்குறைய ஓடிவந்து சேர்ந்தார்கள். அங்கிருந்த பயிற்றுவிப்பா ளர்களும் ஆசிரியர்களும் கண்கள் அரண்டுகொள்ள எழுந்து நின்றார்கள்.

“மேல் மாடியிலிருந்து எங்கட காம்புக்கு கிரனைட் வீசப்பட்டுள்ளது; வீசிய ஆக்கள் இதுக்குள்ளதான் இருக்கணும்” என்று சொல்லியவாறு எல்லாரையும் லைனாக நேர் வரிசையில் நிற்கச் சொல்லிவிட்டு துப்பாக்கிகளை நேராகப் பிடித்தனர். அடுத்த கணம் நேர்வரிசை இம்மியும் பிசகாமல் உருவாகியிருந்தது.

ஒவ்வொரு மாணவர்களினதும் நெஞ்சை தொட்டுப் பார்த்தார்கள். சிலரை இழுத்து “அரபத்த யன்ன” என்று அங்காலப்பக்கம் தள்ளினார்கள். நான்கு மாணவர்கள் அப்படித் தள்ளப்பட்டு மற்றப்பக்கம் நின்றார்கள். அவர்களின் உடல்கள் விதிர்த்து உதறிக்கொண்டிருந்தன. “இவர்களின் நெஞ்சு பலமடங்கு வீரியமாக அடிக்குது, கிரனைட் எறிந்துவிட்டு படிக்கட்டுகளில் ஓடிவந்த களைப்பு இது!” என்றான் ஒரு ராணுவச் சிப்பாய். அவன் கண்கள் பழுத்த மிளகாய்போல சிவந்திருந்தன. அவர்களை நெருங்கி மற்றைய சிப்பாய் செல்ல, “ஐயோ சேர், இவர்கள் நான்கு பேரும் இப்பத்தான் ஓட்டப் போட்டியில் ஓடிட்டு வந்தவர்கள், அந்தக் களைப்புதான் இது” என்று ஓர் ஆசிரியர் வெருண்ட குரலில் சொல்லி முடிக்க, ஒரு மாணவன் மயங்கிச் சரிந்தான்.

சிப்பாய்கள் இருவரும் தங்களுக்குள் பார்த்துக்கொண்டார்கள். மிகுதி ராணுவத்தினர் வகுப்பறைக் கதவுகளை சப்பாத்துக் கால்களால் உதைந்து திறந்து ஆராயத் தொடங்கினார்கள்.

அவனும் நதீசனும் சைக்கிளில் ஒன்றாக வீடு திரும்பும்போது எதுவும் கதைத்துக் கொள்ளவில்லை. கிரனைட் வீசப்பட்ட ஆமிக் காம்பைப் பார்த்தார்கள்; முன்னால் இருந்த மண் மூட்டைகள் மட்டுமே பிய்ந்து சிதைந்திருந்தன. எறிந்த கிரனைட், அருகிலிருந்த மரத்தின் மரக்கொப்பில் பட்டுத் தெறித்து சரியாக விழவில்லை என்று அப்பட்டமாகத் தெரிந்தது.

அங்கிருந்து அரை மைல் தூரம் சென்றிருக்க, ரோஸ்கியைக் கண்டார்கள்..! இன்னுமொரு ராணுவ முகாம் முன்பே முன்னம் கால்களை நீட்டி மென்மணலில் சொகுசாகப் படுத்திருந்தது. அவர்களைக் கண்டுவிட்டு துள்ளி எழுந்து, காது மடல்களைத் தாழ்த்தி, உற்சாகம் கரைபுரண்டு சிலிர்க்க, வாலை ஆட்டியவாறு பின்னால் ஓடிவந்தது. வாலின் நுனியிலுள்ள வெண்ணிறம் ஒரு கொடிபோல அசைந்தது. “ரோஸ்கிடா... ரோஸ்கிடா” என்று நதீசனிடம் அவன் உரக்கக் கத்தினான். நதீசன் ஆர்வம் வற்றிய நாரைக் கண்களில்  ‘அதற்கு என்ன?’ என்பதுபோலப் பார்த்தான். அவன் சைக்கிளை பிரேக்கடித்து நிறுத்திவிட்டு தாவி இறங்கினான். ஓடிவந்த ரோஸ்கி முதலில் நதீசனைச் சுற்றிச்சுற்றி வந்தது. அவன் சலனமற்று இறுகிய முகத்துடன் நின்றிருக்க ஏமாற்றம் கொண்டது. பின்னர், அவனிடம் வர வாஞ்சையுடன் கைகளை நீட்டினான். உள்ளங்கையை முகர்ந்துவிட்டு எதையோ அதற்குள் தேடிவிட்டு நாக்கால் நக்கியது. எச்சில் குளிர்ந்தது. பின்னர் அப்படியே திரும்பிப் பார்க்காது ஓடிப்போனது.

அவன் இரண்டு முறை “ரோஸ்கி ரோஸ்கி” என்று கூப்பிட்டான்.

ங்காங்கே ராணுவ முகாம்கள்மீது கிரனைட் வீச்சும் கிளைமோர் தாக்குதல்களும் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. வீசியவர்கள் ஓடிவிட, குறுக்கே மாட்டுப்பட்ட சனங்கள் ராணுவத்திடமிருந்து சம்பல் அடியை வாங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களும் சோடியாக வெளியே திரிவதும் சுருங்கிப் போயிற்று. விளையாடாமல் கொள்ளாமல் இருக்க முடியாமல் ஏதோவொரு காரணம் சொல்லி, குடும்பத்தைப் பேக்காட்டி இருவரும் சந்தித்துக்கொண்டார்கள்.

“எங்கண்ணா மாணவர் பேரவையில் இருக்கிறார் தெரியுமோ?” என்றான் நதீசன்.

“அப்படியா?”

“ஓம்”

அவன் சாந்தமாகிவிட்டு “அண்டைக்கு கிரனைட் எறிஞ்சது உங்க அண்ணனோ?” என்றான் ஆர்வம் சாதுவாக வெளிப்பட.

“தெரியல, அவர் கிளாஸ்மேட் பலர் பேரவையில இருக்கினம், அவையளில யாராவது செய்திருக்கலாம்” என்றான் முருங்கையிலை காற்றில் அசைவதுபோல மென்மையாக.

கிரனைட் வீச்சு சம்பந்தமாக அன்று யாரையும் ராணுவத்தினர் கைதுசெய்திருக்க வில்லை. மைதானத்தில் கூடியிருந்த மாணவர்கள் எல்லோரையும் காலை பிரார்த்தனை கூடும் நீண்ட மண்டபத்துக்குள் அதிபர் அனுப்பிவைத்துவிட்டு, ராணுவ அதிகாரிகளிடம் பேசச் சென்றிருந்தார். சரியாகப் பாடசாலை விடும் இரண்டு மணிக்கு, குமிந்திருந்த மாணவர்களிடம், “ராணுவம் சொல்லுது, எங்கட மாணவர்களோ அல்லது ஆசிரியர்கள் யாரோதான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று...” சற்று குரலைத் தாழ்த்தி ஆற்றாமையுடன் எல்லோரையும் உற்றுப் பார்த்துவிட்டு, குரலை செருமிக்கொண்டு தொடர்ந்தார். “பாடசாலை என்பது படிப்பதற்கு, அதைச் சரியாக விளங்கிக்கொண்டால் சரி,” என்றுவிட்டு இதற்கு மேல் எதையும் வெளிப்படையாகச் சொல்ல இயலாது என்பதுபோல நகரப் பாடசாலை மணியும் அடிக்கச் சரியாகவிருந்தது.

பேரீச்சை

மாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து, மணலாறில் யுத்தம் ஆரம்பித்துவிட்டதாக வானொலிப் பெட்டியில் செய்திகள் மீள மீளச் சொல்லப்பட்டுக்கொண்டிருந்தன. அது நடந்து சரியாக ஆறாவது நாள், நிரோஷன் அண்ணா காணாமல்போனார். இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாக ஊருக்குள் கதை பரவியது. எவ்வளவு முயன்றும் ஒரு கிலோ மீற்றர் தள்ளியிருக்கும் நதீசன் வீட்டுக்கு அவனால் உடனடியாகச் செல்ல முடியவில்லை. ஊரடங்கு நேரத்தில் எப்படி வீட்டைவிட்டு வெளியாகி வன்னிப்பக்கம் இருக்கும் இயக்கத்திடம் பத்திரமாகச் சென்று சேர்ந்திருக்க முடியும் என்ற வியப்பே அவனைக் கொடுமையாகப் பிசைந்து தள்ளியது.

ஒரு மாத காலத்தின் பின்னர், ஊரடங்கு பகலில் மட்டும் நீக்கப்பட்டபோது நதீசனைச் சந்தித்தான். பாடசாலைகள் காலவரையற்ற மூடுகைக்கு உள்ளாகியிருக்க, குதூகலம் அவர்களை விழுங்கியிருந்தது. ஆனால், சரியாக மூன்று மாதத்தின் பின்னர் மீண்டும் பாடசாலை திறக்க, புத்தகப் பையுடன் செல்லத் தொடங்கினார்கள்.

“எங்கண்ணா கடற்புலியில இருக்கிறார்”

“எப்படித் தெரியும்?”

“இல்லடா...”

“பின்னே?”

“அதைவிடு”

அவனது வீட்டார் நதீசன் வீட்டுக்குச் செல்வதை அவ்வளவாக விரும்பவில்லை. அதனாலோ என்னவோ அவர்களுக்குள் சிறிய இடைவெளியும் தோன்றலாயிற்று. நதீசனது அம்மா, அதிகம் பேசாது ஒதுங்கியே இருந்தார். சங்கக் கடையில் சாமான்கள் வாங்கும்போது அவனைக் கண்டால், மூக்குக் கண்ணாடிக்கால் உற்றுப் பார்த்துவிட்டு தலையை மட்டும் ஆட்டிவைப்பார்.

தினொராம் ஆண்டு படிக்கும்போது, சரியாக ஆணி மாதம் நதீசனும் காணாமல் போனான். இயக்கத்துக்குப் போகப் போவதாக எழுதிய கடிதம், முடிக்கப்படாத கணக்குக் கொப்பியில் கண்டெடுத்ததாக அவனது அம்மா சொல்லிக்கொண்டி ருந்தபோது, அவரது வெள்ளைக் கண்களில் சாம்பல் நிறம் படர்ந்துகொண்டிருந்ததை கொக்கின் நிதானத்துடன் பார்த்தவாறு இருந்தான்.

“நீங்களாவது புத்திமதி சொல்லி இருக்கலாமே தம்பி”, என்று சொல்லிவிட்டு, தவிப்புடன் அவனைப் பார்த்தபோது, இயக்கத்தில் சேரப்போவதாக எந்த அறிகுறியும் வெளிக்காட்டாமல் நதீசன் நடந்திருந்தமை அவனை எரிச்சல்படுத்தியது. உற்ற நண்பன் என்பதை நொறுக்கிவிட்டான் என்ற காயம் உள்ளே குமிழாக வெடித்துச் சிதறியது.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறி, அசையாமல்  இரும்புக் கதிரையில் இருந்தவாறு அவர்களின் வீட்டை நோட்டம்விட்டான். வெறிச்சோடிய வீடு அவனை சோகம் கொள்ளச்செய்யாமல் அச்சுறுத்தியது. கணவரும் இல்லை, மூத்த மகனும் சென்றுவிட்டார், இவனும் போயிட்டான்; தனிமையின் வெம்மை முகத்தில் தழுவி மறைந்தது. வாசலடியில் அநாதரவாக இருந்த ரோஸ்கியின் சங்கிலியைக் கண்கள் தற்செயலாக நோக்க, உள்ளே ஒடுங்கினான். அதன் பக்கத்தில் அதன் தட்டு, சுத்தம் செய்யப்பட்டு யாருக்கோ காத்திருப்பது போலத் தனித்து இருந்தது.

வீதி வெறிச்சோடியிருந்தது. தனியே சைக்கிளை மிதித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தவாறு இருந்தான். வழமையாக சைக்கிளின் மற்ற பக்கம் சமாந்தரமாக நதீசனும் அவனுடன் வருவான்; அவன் இல்லாத வெறுமை அந்நியமாக இருந்திற்று.

“தம்பி இந்தப் பக்கம் போகக்க கவனம்” என்றார் முன்னே சைக்கிளில் வந்தவர்.

“ஏன்?”

“இரண்டு மணித்தியாலம் முன்னம், அதில இருக்கிற ஆமிகாம்புக்கு கிரனைட் எறிஞ்சுட்டு ஓடிட்டாங்கள், ஒரே கலவரம். ஆமிக்கு எதுவும் சேதம் இல்ல. இப்ப ரோட்டால போகவிடுறான், இருந்தாலும் கவனம்” என்றார்.

‘சரி’ என்றவாறு அவருக்குத் தலையாட்டி விட்டு பாதையை மாற்றாமல் நேராகவே மிதித்துச் செல்லத் தொடங்கினான். இரண்டு சிப்பாய்கள் வெளியே நின்றார்கள். உடலில் பதற்றம் இருப்பதுபோலத் தெரியவில்லை. நெருங்கிச் செல்ல, முகாமுக்கு அருகே தரையில் ஏதோ தென்பட, கண்கள் அதை நோக்கி விரிந்தன. இரண்டு நாய்கள் அலங்கோலமாகப் படுத்திருக்கும் தோற்றம் என்பது மெல்ல புரியலாயிற்று.

வயிறு பிய்ந்து குடல் வெளியே வெளித் தள்ளியிருக்க, முகம் முற்றிலும் சிதைந்து கோரமாக, சதைக்குவியலாக உருக்குலைந்து இருந்தன. செந்நிற உடலின் இரத்தம் சிதறிப் பரந்து வீதிவரை வழிந்திருந்தது. அவனின் சைக்கிள் டயர், ரத்தத்தை மிதித்துக் கடந்தது.

வீட்டுக்கு வந்தவுடன் சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே அவசரமாக ஓடிச்சென்றான். முகத்தில் அறைந்து அழவேண்டும் என்று முயன்றாலும் அழுகை துளிர்க்காமல் ஒவ்வாமையே அவன் குடலுக்குள் பிசைந்தது. நடுக்கத்துடன் உள்ளங்கைகளைத் திருப்பிப் பார்த்தான். வியர்வையில் ஈரமாகியிருந்தன.

“இங்கே என்னால இருக்க ஏலாது; நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்” நதீசன் சொல்லிவிட்டு, இமைகளைப் பாதி தாழ்த்தி தேநீர் டம்பிளரைப் பார்த்தான். விரல்கள் டம்பிளரின் நுனியைத் தடவின. பின்னர் நிமிர்ந்து “உதவ முடியுமா?” என்றான்.

பேரீச்சைநதீசன் அவனைத் தேடிவந்தது மிகுந்த ஆச்சர்யத்தைத் தந்தாலும், அடியில் கொதிக்கும் நீர்க்குமிழிபோல் அவன் அவதியுற்றான். தேநீர் கடையிலிருந்த வர்களின் முகங்களைப் பார்ப்பதை இருவரும் தவிர்த்துக்கொண்டிருந்தார்கள்.

“அண்ணா எங்கே?” என்றான்.

“செத்துட்டார். நானும் உடலைப் பார்க்கவில்லை” என்றபோது, சுருள் சுருளாக அவனது இதயம் கழன்றது.

“கடைசிச் சண்டையிலயா?”

“ம்ம்...” என்றுவிட்டு தேநீரை உறிஞ்சினான்.

சமீபத்தில் அவுஸ்ரேலியாவுக்குப் படகில் வெற்றிகரமாகச் சென்று சேர்ந்த கணாதீபன் அண்ணாவை அவனுக்குத் தெரியும். அவரின் வீட்டுக்காரரைக் கேட்டு பயண முகவர்களுடன் தொடர்புகொள்ளலாம். “சரி நான் விசாரிக்கிறேன்” என்றான்.
“நன்றி மச்சான்” என்று சொல்லிவிட்டு, ஒடுங்கிய உடலுடன் தொப்பியை இன்னும் முன் நெற்றியோடு முகத்தையும் மறைக்கும் வகையில் இழுத்துவிட்டதைப் பார்க்க, ரோஸ்கி தலையைச் சாய்த்து வாலாட்டுவது அவனுக்குச் சட்டென்று நினைவுக்கு வந்திற்று.

கணாதீபனின் அப்பா, ஒரு தொலைபேசி இலக்கத்தை பேப்பரில் எழுதிச் சுருட்டி உள்ளங்கையில் அழுத்தி வைக்கும்போது, “கவனம்” என்றார்.

முதல் இரண்டு தடவை அழைக்கும்போது அலைபேசி அணைப்பிலேயே இருந்தது. மூன்றாவது முறை அழைப்பு சென்றது, யாரும் எடுக்கவில்லை. நான்காவது தடவை எடுக்கும்போது, காற்றின் இரைச்சலுடன் குரல் கேட்டது. விஷயத்தைச் சுருங்கச் சொன்னான். இன்னுமொரு அலைபேசி இலக்கத்தைத் தந்து அதற்கு எடுக்கச் சொன்னார்கள்.

“அவுஸ்திரேலியாவுக்கு இப்ப ஆக்களை இறக்குறம்; இவர் குடும்பமோ தனியாளோ?”

“இவர் தனியத்தான், ஒராள்தான்.”

“என்ன வயசு அவருக்கு?”

“பத்தொன்பது...”

“கடல் பயணமெல்லாம் அவருக்கு ஓகேயோ?”

“அதெல்லாம் ஓகே. அவருக்குப் பிரச்னை இல்லை.”

“சரி... நாப்பது முடியும். முதல்ல பத்தை தரணும்; ஏறும்போது இருபது தரணும்; இறக்கிவிட்டவுடன் மிச்சம் பத்தை தந்தா சரி”

நதீசனிடம் விஷத்தைச் சொன்னபோது, அவன் கண்கள் வற்றிய குளத்தில் உருளும் மீன்கள் என விட்டு விட்டுத் துடித்தன. “அவ்வளவு காசுக்கு நான் எங்கடா போறது?” என்றபோது, அவனில் எரிச்சல் முகிழ்ந்து வெறுப்பாகக் கசிந்தது. தன்னைச் சமநிலைப்படுத்தி “சரி, இப்ப என்ன செய்யலாம் என்கிறாய்?” என்றான் சற்றுச் சீறலாக.

“வேறே ஏதும் நாட்டுக்குப் போகமுடியாதா?”

“தெரியல...”

“ப்ளீஸ் மச்சான், நீதான் எனக்கு உதவணும். தினமும் வந்து பிடிப்பார்களோ என்று சொந்தக்காரர் வீடு வீடாக இரவுல மாறிப் படுக்கிறேன். எல்லாரும் ஒரு மாதிரிப் பார்க்கினம். இதுக்கு மிஞ்சி என்னால முடியாது” என்று சொல்லி முடிக்க, அவனது வயிற்றில் கூர்மையான குளிர்ந்த உலோகக் கம்பி இறங்கி அமிழ்ந்து புரண்டது.

தீசன் புத்தளத்துக்கு அவனுடன் சென்றுசேர்ந்தபோது, பொழுது புலர்ந்து கொண்டிருந்தமை பேருந்து யன்னலுக்கால் தெரியத் தொடங்கிற்று. தூரத்தில் ஒலிபெருக்கியில் தொழுகைக்கான அதான் ஒலி கேட்க ஆரம்பித்திருந்தது. செல்ல வேண்டிய முகவரியை பொக்கற்றுக்கால் எடுத்து விரித்துப் பார்த்தான். கசங்கிய எழுத்திலிருந்ததை வாசித்துவிட்டு, முச்சக்கர வண்டியைப் பிடித்து ஏறியமர்ந்தார்கள். வழி நெடுகிலும் நதீசனது முகத்தை அடிக்கடி பார்த்தவண்ணம் அவன் அமர்ந்திருந்தான். புலரியோடு சேர்ந்து அவன் முகத்திலும் இருந்த இருள் நீங்கிச் செல்வதாக அவனுக்குள் தோன்றிற்று.

“இங்கே தங்கிக்கலாம்” அவர் காட்டிய இடத்தைப் பார்த்தார்கள். சிறிய அறைதான். ஒரு கட்டிலும் மடித்துவைக்கப்பட்ட போர்வையும் இருந்தன. தன் தாடியை வருடிக்கொண்டு, “ஒராள் என்றுதானே நானா சொன்னார்” என்றார்.

“ஓம். நான் இவரை விட்டுட்டு வெளிக்கிட்டிடுவன், இவர்தான் ஆள்” நதீசனைச் சுட்டினான். அவன் அமைதியாக இருந்தான்.

அவர் திருப்தியாக தலையை ஆட்டினார். சரியாகக் காலை பதினொரு மணி பேருந்தைப் பிடித்து யாழ்ப்பாணத்திற்குப் புறப்பட முன்னர், அவனது கைகளை நதீசன் அழுத்திப் பிடித்து “நன்றி மச்சான்” என்றுவிட்டு உடல் தழுவக் கட்டிப்பிடித்தான். “போய்ச் சேர்ந்த பின்னர் தொடர்பு கொள்கிறேன் மச்சான்” இடுப்பில் கை வைத்தவாறு ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தான்.

அன்றுதான் அவன் நதீசனை கடைசியாகப் பார்த்தது. அவனை புத்தளத்தில் விட்டபின், பிணைக்கப்பட்ட சங்கிலியைக் கழற்றி எறிந்ததுபோல் நிம்மதியாகவும் உணர்ந்தான். சரியாக எட்டு நாள்களின் பின்னர் பாண்டிச்சேரிக்கு வந்து சேர்ந்ததாகவும், சொன்னபடியே ஒரிஜினல் பாண்டிச்சேரி கடவுச்சீட்டை பெற்றுத் தருவதில் எந்தப் பிசகும் இடம்பெறவில்லை என்றும் சொன்னான். அவன் சொல்லிமுடிக்க, நிம்மதியாகக் காற்றில் ஒரு குத்துவிட்டான்.

ட்டுநாயகா விமானநிலைய குடியகல்வு பகுதியில், அவன் கடவுச்சீட்டைக் கொடுத்துவிட்டு அவரை நிமிர்ந்து பார்த்தான். ஸ்கானரில் கடவுச்சீட்டை ஒற்றி எடுத்துவிட்டு, அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். “இங்கிலாந்துக்கு என்னத்துக்குச் சென்றீர்கள்?” என்றார் ஆங்கிலத்தில்.

“படிப்பதற்கு...”

“எந்தப் பல்கலைக்கழகம்?”

அதையும் சொல்லிவிட்டு முதுகலை பட்டப் படிப்பின் பெயரையும் சொன்னான். அவர், ‘ஒரு நிமிஷம்...’ என்று சைகை காட்டிவிட்டு, அருகிலிருந்த தொலைபேசியை எடுத்தார். இன்னுமொரு குடியகல்வு அதிகாரி வெள்ளுடையில் வந்தார். இரண்டு பேரும் சிங்களத்தில் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். பின்னர், புதிதாக வந்த அதிகாரி, “எங்கே செல்கிறீர்கள்?” என்றார். “யாழ்ப்பாணத்திலிருக்கும் வீட்டுக்கு” என்றான். அவர் அவனது கையில் கடவுச்சீட்டைத் தந்துவிட்டு, “சரி நீங்கள் போகலாம்” என்றார்.

ருத்திராதேவி புகையிரதத்தில் ஏறி யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருக்க, அதிகாரிகள் தன்னைத் தடுத்து நிறுத்தியதை யோசித்துக்கொண்டே இருந்தான். அனுராதபுர வயல்கள் கடந்துகொண்டிருக்க, தூரத்தில் மூன்று நாய்கள் நெற்குவியல் களுக்கிடையே உருண்டு புரண்டு விளையாடிக்கொண்டிருந்ததை அவனது கண்கள் நோக்கின.

ரியாக இரண்டு வருடத்தின் பின்னர், இங்கிலாந்திலிருந்து வீட்டுக்குத் திரும்பியிருந்தான். சிலந்தி வலைகள் யன்னலின் ஓரங்களில் படர்ந்திருந்தன. இங்கிலாந்து நேரப் பழக்கம், இலங்கை நேரத்துக்கு ஏற்ப மனதில் மாறவில்லை என்பதால் நித்திரை வராமல், மின்விசிறியை இயக்கிவிட்டு தொலைக்காட்சியில் அமிழ்ந்தான். வாசல் கதவைத் தட்டும் சத்தம் பலமாகக் கேட்க ஆரம்பித்தது. படுக்கையிலிருந்து கலைந்த தலையுடன் அம்மா எழுந்து வந்தார். பார் தடியை விலக்கிவிட்டு கதவைத் திறக்க, அவனைத் தள்ளிக்கொண்டு அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

“நாங்கள் குற்றப் புலனாய்வுத்துறை யிலிருந்து வருகிறோம். எங்களுடன் வர வேண்டும் விசாரணைக்கு” என்று சொன்னவரின் தோரணையில் அதட்டல் இருந்தது. சிவில் உடையிலே இருந்தார்கள். அவன் மனம் நொறுங்கிய கண்ணாடித் துண்டங்களை ஒட்ட முயல்வதுபோல குழம்பியது. அம்மா திகைத்து நின்றார். பின்னர் சுதாரித்துக்கொண்டு, “ஏன் என்னத்திற்கு? இப்ப உங்களோட அனுப்ப ஏலாது. காலையில நானே பொலிஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வாறேன்” என்றுவிட்டு, தூங்கியவாறு இருந்த அப்பாவைச் சத்தமிட்டு எழுப்பினார். அம்மாவைப் பொருட்படுத்தாது ஒருவர் உள்ளறைக்குள் நுழைந்து, அவனது பயணப் பைகளைக் கிளறி கடவுச்சீட்டு, கைத்தொலைபேசி, மடிக்கணினியோடும் வந்தார்.

அவனைத் தரதரவென்று வெளியே இழுத்துச் செல்ல, அம்மா அவர்களுக்கு இடையில் புகுந்து இரண்டு கைகளையும் அகல விரித்து மறித்தார். முன்னம் இருந்தவர் “தள்ளிப் போ” என்றபடி அவரின் கைகளை வீசினார். தடித்த கைகள் அம்மாவின் இடப்பக்க செவிட்டில் விழ, காதில் அணிந்திருந்த தோடு கழன்று வாசல்படிகளில் துள்ளித் துள்ளி உருண்டோடியது. அம்மா சரிந்து நிலைதடுமாறி கீழே விழ, அப்பா ஓடிவந்தார்.

அவனை இழுத்துச் செல்ல, வாசல் படியிலிருந்த அம்மாவின் தோடு பெருவிரல்களுக்கு இடையிலிருந்த சதையிலேறிக் குத்திச் சிக்கிக்கொண்டது. நொண்டியபடி இழுபட்டுச் செல்ல, கேற்றடியில் வெள்ளை வேன் நிற்பதைக் கண்டான். உடல் முழுவதுமாகக் குளிர பிடரி விறைத்தது. உடல் திமிற யாரோ பின்மண்டையில் அடித்தார்கள். உடனே சாக்கை எடுத்து முகத்தை மறைக்க ஒருவர் வாயில் பழந்துணியை அடைத்தார். பின்புறமாகக் கைகள் சங்கிலியால் கட்டப்பட, வேனுக்குள் தள்ளப்பட்டான். எல்லாமே குறுகிய விநாடிக்குள் நடந்து முடிந்திருந்தன. மூச்செடுக்க சிரமப்பட, தொண்டைக்குள் துணிச் சுருள் சிக்கியுழ, உமிழ்நீர்ச் சுரக்க தொண்டை கரகரத்தது. பயம் ஒரு தடித்த போர்வையாக அவனை மூடிக்கொள்ள ஒடுங்கினான். அவன் கழுத்தைச் சப்பாத்துக் கால்கள் வேனின் தரையோடு அழுத்தின. தூரத்தில் ஒரு நாயின் ஊளையிடல் தெளிவாகத் தொலைவில் கேட்டதை அவன் செவிகள் உணரலாயிற்று.

“உனக்கும் நதீசனுக்கும் என்ன தொடர்பு?” மிகத் தூய தமிழில் கேட்டபோது, அதில் இல்லாத பிசிர் அவனை அச்சூழலிலும் வியப்பில் ஆழ்த்தியது. தடுமாறி நிமிர்ந்திருந்தான். தலைக்கு மேல் சிறிய மஞ்சள் மின்குமிழ், ஒடுங்கிய சீமெந்து அறை.

“எந்த நதீசன்?”

கையிலிருந்த கோப்பைத் திறந்து புகைப்படத்தைக் காட்டினார். நெஞ்சுப் பகுதிக்கு மேல் எடுக்கப்பட்ட புகைப்படம். இறுதியில் நதீசனைப் பார்த்ததற்கும் புகைப்படத்தில் இருப்பதற்கும் நிறையவே மாறுதல் அவனுக்குத் தென்பட்டது. மீசையும் புருவ அடர்த்தியும் இன்னும் இறுக்கமானவனாகக் காட்டியது.

“பாடசாலையிலிருந்து படித்துவந்த நண்பன்” என்றான் தடுக்கி உடையும் குரலில்.

“புலிகள் அமைப்பில் இருந்திருக்கிறார், இறுதியுத்தத்தில் சரணடையாமல் தப்பித்திருக்கிறார், தப்பித்தவனை நாட்டைவிட்டு தப்பிச் செல்ல நீ உதவி இருக்காய்! வேறு யார் யாருக்கு உதவினாய்? லண்டனில் படிப்பதற்குச் சென்ற பேரில் என்ன செய்தாய்? டயஸ்பெரா அமைப்புகளுடன் இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்தாய்தானே?”

“இல்லவே இல்லை. நதீசன் என் குளோஸ் பிரண்ட், இங்கிருக்க பயமாக இருக்கு என்றான். அதனால நாட்டைவிட்டுப் போக உதவிசெய்தேன். வேற யாருக்கும் நான் உதவி செய்யல. வேற ஒண்டும் எனக்குத் தெரியாது!” என்றான்.

“உண்மையை மட்டும் சொல்லு. வீணாக சித்ரவதைக்கு உள்ளாகாதே, நதீசனை கைதுசெய்திட்டோம். அவன் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான். திரும்பவும் விடுதலைப் புலிகள் அமைப்பை ஒன்றிணைக்கத்தானே திட்டம்?”

அவனுக்குத் தலை கிறுகிறுத்தது. சீராகச் சுவாசிக்க முடியவில்லை. மீண்டும் பொறுமையாக விளக்கினான். இறுதியில் அவன் பயந்ததுபோலவே நடக்க ஆரம்பித்தது. தரையோடு தரையாக அழுத்திவைத்து இரும்புத் தடிகளாலும் பொல்லுகளாலும் தேகம் எங்கும் அடிக்கத் தொடங்கினர். மூச்செடுக்கத் தவிக்கும் எலிபோல் அல்லலுறத் தொடங்கினான். தேகம் சிதைந்தது. சூடாக்கிய உலோகக் கம்பியை முதுகில் அழுத்தினார்கள். உடல் துள்ளித் துள்ளி அடங்கியது. புகைந்த சிகரெட்டை நெஞ்சில் அழுத்தினார்கள். ஈனமான குரல், “அம்மா அம்மா” என்று அரற்ற, வாயால் எச்சில் வடிந்து தரையில் கோடாக ஒழுகியது. வலி பொறுக்க இயலாமல் ஒன்பதாவது தடவை மயங்கிச் சரிந்தான்.

மீண்டும் மீண்டும் ஒரே கேள்வி, வெவ்வேறு அதிகாரிகள் வெவ்வேறு தோரணையில் கேட்க, தன்னிலை தவறினாலும் திரும்பத் திரும்ப ஒரே பதிலைச் சொல்லிக்கொண்டேயிருந்தான். ஏறக்குறைய ஒரு வாரம் அதே சித்ரவதையும் கேள்விகளும் தொடர்ந்தன. இரவில் மட்டும் உணவு தரப்பட்டது. கருவாடும் சோறும் சில வேலை பால்சோறும் மட்டும் இரும்புத் தட்டில் வரும். அப்போது மட்டும் கையில் பிணைக்கப்பட்ட சங்கிலியைக் கழற்றி விட்டார்கள். அவனுக்குத் துணையாக சதையில் புதைந்து வந்த அம்மாவின் தோடு மட்டும் அவனுடன் தனித்திருந்தது. தனிமையில் உள்ளங்கையில் தோட்டை வைத்து, சிதைந்த தன் நீள் விரல்களால் வருடிக்கொள்வான்.

“உன்னைக் கொல்லச் சொல்லி உத்தரவு வந்திருக்கு. ஒரு உதவி மட்டும் செய்யலாம். இருபது லட்சம் சல்லி தந்தால் உன்னை விடுகிறோம்” அந்த அதிகாரி அவன் நாடியைப் பிடித்து நிமிர்த்திச் சொன்னபோது, அவர் முகத்தைப் பார்க்க முடியாத அளவுக்கு இவனது இமைகள் ஊதித் தடித்து கண்களை மறைத்திருந்தன. அவர்கள் தந்த அலைபேசியில் வீட்டு இலக்கத்தைத் தடுமாறி அழுத்திக் கொடுத்தான். அழைப்பு செல்ல, அறையை விட்டு நீங்கினார்கள். உண்டு முடித்த சாப்பாட்டுத் தட்டருகே அவிழ்த்துவிட்ட கைச்சங்கிலி அநாதரவாக இருந்ததை கை தட்டிற்று.

பொலநறுவையில் தென்னந் தோப்புகள் மத்தியில் குடியிருந்த வீட்டில் - அப்பாவின் சிங்கள நண்பரின் வீட்டின்- படுக்கையறையில் இருந்தான். நீண்ட நாள்களின் பின்னர் பஞ்சு மெத்தைகள் அவன் உடலைத் தீண்ட, புதைந்து தூங்கி வழிந்தான். உடலின் காயங்கள்மீது தேனுடன் மருந்து கலந்து தடவப்பட்டிருந்தது. வாசலுக்கு வெளியே தணிந்த குரலில் அவனது அப்பாவும் அவரின் நண்பரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

விமானநிலையம் வரை வெள்ளுடையில் புதிதாக ஒருவர் வந்தார். “இவர்தான் பெர்னாண்டோ. இமிகிரேஷனில் சிக்கலில்லாமல் கடக்கும் வரை உதவிசெய்வார்; உன்னுடனே வருவார்” என்றார் அப்பா.

“எப்படி?” என்றான் சுரமற்ற குரலில்.

“இவர் இமிகிரேஷனில்தான் வேலை செய்கிறார்” என்று மௌனமாகிவிட்டு, மீண்டும் பலமுறை இறுகிய குரலில் சொன்னதைத் திரும்பவும் சொன்னார். “உன்னை விடும்போது, பாஸ்போர்டைத் தந்துதான் விட்டாங்க, கஸ்டடியில் இருக்கும்போது தப்பிச்சுவிட்டதாக சி.ஐ.டி பதிவுசெய்து இருக்கு. இலங்கையில இருந்தா திரும்பவும் பிரச்னையாகும் என்பதில் வலு தெளிவாகச் சொல்லிட்டினம். நீ, லண்டனில இறங்கினவுடன் கையைத் தூக்கணும். காயங்கள் எல்லாத்தையும் காட்டு” என்றார்.

உள்ளம் உள்ளொடுங்கியது. இதெல்லாம் சரியாக வருமா என்று அவனது மனம் அலைக்கழிந்தது. சோர்வு கவிய, வேனின் பின்சீட்டில் தூங்கிச் சரிந்தான்.

‘பிரிட்டிஷ் பயணிகள் இவ்வழியில் செல்லவும்’, ‘ஐரோப்பிய நாட்டவர்கள் இவ்வழியில் செல்லவும்’, ‘மற்றையவர்கள் இவ்வழியில் செல்லவும்’ என்ற பதாகைகளை வாசித்து, அதற்கேற்ப நடக்கத் தொடங்கினான். ஆசிய முகங்கள் அவனுடன் மேலும் சேர்ந்தன. எல்லோர் கைகளிலும் கடவுச்சீட்டும் பூர்த்திசெய்த தரையிறங்கும் விண்ணப்பச் சீட்டும் இருந்தன. இழுத்துச் செல்லும் சில்லுபூட்டிய சூட்கேஸ்கள் வழுக்கிச் செல்லலாயின.

குடியகல்வு பிரிவில் நீண்ட வரிசையாகப் பயணிகள் காத்திருக்கத் தொடங்கினார்கள். கால்விரல்கள் விறைப்புகொள்ள தன் முறைக்காகக் காத்திருக்கலானான். “நெக்ஸ்ட் பிளீஸ்...” என்ற குரல் விழ, ஒரு கணம் தயங்கிவிட்டு அவ்விடத்தை அடைந்தபோது, கண்ணாடிக் குடுவைக்கால் கையை நீட்டிவிட்டு அவன் முகத்தைப் பார்த்தார் அதிகாரி.

கடவுச்சீட்டைக் கொடுத்துவிட்டு, “என்னால் நாட்டுக்கு திரும்பிச் செல்ல முடியாது. என் உயிர், நாட்டில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. போனால் கொல்லப்படுவேன். அகதி அந்தஸ்து கோருகிறேன்” என்றான். அவன் குரல் அவனுக்கே அந்நியமாக ஒலித்ததைக் கண்டு வியப்புற்றான். கடவுச் சீட்டை புரட்டிய விரல்கள் எந்த மாறுதலுமின்றி ஓய, “ஒரு நிமிடம் காத்திருங்கள்...” என்றுவிட்டு வெளியே நடந்துசென்றார். சில நிமிடத்தில் கடும்நீல நிறத்தில் சீருடையணிந்த இன்னுமோர் அதிகாரியோடு வந்தார். இப்போது அவரது கையில் அவனது கடவுச்சீட்டு இருந்தது.

“நீங்கள் என்னுடன் வாருங்கள்” என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்க, அவர் பின்னே அவன் நகரலானான். வரிசையில் நின்ற மிச்சப் பயணிகளின் கண்கள் அவன் முதுகைத் துளைப்பதுபோல் தன்னிச்சையாக உணர, முதுகு புல்லரிக்கச் செய்தது.

“உங்களுக்கு மருத்துவ உதவி தேவையா?” நினைவிலிருந்து விடுபட்டுச் சுதாரித்து “தேவை” என்றான். அவர், பச்சை விழிகளால் அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு “பசிக்கிறதா?” என்றார். அவன் யோசித்துவிட்டு, சிலுவையிடுவது போல மேலும் கீழும் தலையை ஆட்டினான்.

சற்று நேரத்தில், தட்டில் சூடாக்கப்பட்ட கடலையும் பிளந்த பாண் துண்டங்களும் மீன் துண்டங்களுடன் வந்தன. வேகமாகச் சாப்பிட்டு முடிக்க, தண்ணீர்ப் போத்தலை நீட்டினார். அவன், ‘வேண்டாம்’ என்று சைகை காட்ட, இன்னுமொரு சிறிய குடுவையை நீட்டினார். உள்ளே உலர்ந்த பேரீச்சம் பழங்கள் கொட்டைகள் நீக்கப்பட்டு நீளமாகவிருந்தன.

உடல் சமநிலைக்குத் தேறிவருவதாக உணர, அவனது நாக்கில் பேரீச்சம்பழத்தின் சுவை எஞ்சியிருந்தது. அறையின் கதவைத் திறந்துகொண்டு இளம் பெண்காவலதிகாரி ஒருவர் கையில் கோப்புகளுடனும் இன்னுமொரு கையில் சங்கிலியைப் பற்றியிருக்கவும் வந்தார். அவரது பொன்னிற முடிகள் உயர்த்தி முடிச்சிடப்பட்டு அலிஸ்பான்ட் இடப்பட்டிருந்தது. சங்கிலியின் மறுமுனையில் கழுத்துடன் பிணைக்கப்பட்ட மோப்பம் பிடிக்கும் சடைத்த நாயொன்று இருந்தது. நாயின் நாக்கு அதன் வாயிற்கு வெளியே சாதுவாகத் தொங்கியபடியிருந்தது.

அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு, உண்டு முடித்த சாப்பாட்டுத் தட்டை நிதானமாகப் பார்த்தது. மேசையில் அநாதரவாகத் தட்டு இருந்திற்று. அவனது முழங்காலை முகர்ந்துவிட்டு, நாக்கைச் சுழற்றி உள்ளங்கையைச் சட்டென்று நக்கியது. திடுக்கிட்டு உள்ளங்கையைத் திருப்பிப் பார்த்தான். வற்றாத எச்சில் கையில் குளிர்ந்தது. அவன் கண்கள் கொட்டையற்ற மிகுதிப் பேரீச்சம்பழங்களைத் தேடின. பின்னர், பொக்கற்றிலுள்ள தோட்டை கை துழாவத் தொடங்கியது.