Published:Updated:

நான் ஏன் எழுதுகிறேன்?

நான் ஏன் எழுதுகிறேன்?
பிரீமியம் ஸ்டோரி
நான் ஏன் எழுதுகிறேன்?

நான் ஏன் எழுதுகிறேன்?

நான் ஏன் எழுதுகிறேன்?

நான் ஏன் எழுதுகிறேன்?

Published:Updated:
நான் ஏன் எழுதுகிறேன்?
பிரீமியம் ஸ்டோரி
நான் ஏன் எழுதுகிறேன்?

அகமது ஃபைசல், இலங்கை

நா
ன் ஏன் எழுதுகிறேன் என்ற கேள்வியை என்னை நோக்கி கேட்கத் தொடங்கிவிட்டால், தெருவில் பாதி எரிந்த நிலையில் கிடக்கும் சிகரெட் நூறு அடி வரை வளர்ந்துவிடும். அப்போது, வீட்டிலிருக்கும் பழைய புத்தகங்களை அழித்தொழிப்பதற்காக நான் எழுதுகிறேன் என்று யாரிடமாவது சொல்லிவிடுவேன்.

நான் ஏன் எழுதுகிறேன்?

என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், இந்த உலகத்தின் உள் வடிவத்தை எனக்கு விருப்பமான வடிவில் மாற்றி எழுதுகிறேன் என்று உங்களிடம் சொல்லத்தான் வேண்டும். அப்போதுதான், என் மனவலி ஒருபடியாகக் குறையும். தினமும் ஒரே நிறத்தில் சூரியன் உதிப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. அதனால், சூரியனைப் பச்சை நிறத்தில் எழுதி உதிக்கச் செய்கிறேன். மேலும், பறக்க ஆசைப்படாத மரங்கள் இலைகளைப் பொரித்து நிற்கின்றன. இலைகள் கீழே விழும் விநாடிக்குள்தான் பறவையாகின்றன. ‘உலகிலேயே முதலாவது பறவை இனம் இலைகள்தான்’ என்று எழுதி, என் மனவலியைப் போக்கும் எழுத்துகளே எனது வாழ்வின் துணையாகிவிட்டன.

நிலைக்கண்ணாடியின் பின்புறத்தில் யார்தான் முகம் பார்க்க முடியும்? அதன் பின்புறத்தில் முகம் பார்க்கும் மனிதனை எழுதி, அவனை அதில் முகம் பார்க்கச் செய்கிறேன். அந்த மனிதன் உடலை அலங்கரித்து பயணம் அனுப்புகிறேன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் ஏன் எழுதுகிறேன்?

எனது எழுத்துகளால் இலையை எழுதினால் வாசிக்க முடிகிறது; இலையின் நரம்புகளை மீட்ட முடிகிறது. ஒரு சாமான்ய மனிதனின் பசியை,  ‘சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு காது வெளியே இருக்கிறது. கேட்பதற்கு யாரும் இல்லாமல் பசி உள்ளே இருக்கிறது’ என்று எழுதி பசியை வாசிக்க முடிகிறதே என்பதால், நான் வாசிப்பதற்காகவே எழுதுகிறேன்.  ‘எவ்வளவு கவலையாக இருந்தாலும், சிரித்துக்கொண்டுதான் பல் துலக்க வேண்டும்’ என்று அந்த சாமான்யனைக் கவலையிலும் சிரிப்பூட்ட முடிகிறதே என்பதால், நான் வாசிப்பதற்காகவே எழுதுகிறேன்.

என் எழுத்துகளால் கடலை எழுதிக் கரைசேர முடிகிறது. ஓடும் பஸ் நிழலில் பயணிப்பவர்களை நம்பி வேர்க்கடலை வியாபாரத்தைச் செய்யமுடிகிறது. உம்மாவின் புடவையில் பூத்திருக்கும் ரோஜா, இதழ் இதழாக உதிர்வதை எழுதுவதால் மட்டுமே என்னால் காண முடிகிறது.

‘இரண்டு மந்திரக்கனிகள், தன் அழகிய விதையை வெளியே காட்டிக்கொண்டி ருக்கின்றன’ என்று காதலை எழுதிவிட்டுத் திரும்பும்போது, சுவரில் எறும்புகள் பொதிசுமந்து நாடு கடத்தப்பட்டவர்கள்போல் சென்றுகொண்டிருப்பதைப் பார்த்தபோது, இந்த நிலையில்லா வாழ்வை எதிர்த்து எழுதி வாசித்தால் மட்டுமே வாழமுடியும் என்பதால் இதுவரை நான்கு கவிதை நூல்கள் எழுதியுள்ளேன். அந்தக் கவிதைகளை எங்கோ, யாரோ இந்நேரம் வாசித்துக்கொண்டிருப்பர் என்று சொல்லி முடிக்கிறேன்.

நான் ஏன் எழுதுகிறேன்?

சிந்துஜன் நமஷி, மட்டக்களப்பு

லக மொழிகளிலேயே தமிழில்தான் அதிகமாகக் கவிதைகள் எழுதப்படுகின்றன.  இங்குதான் அதிகமாகக் கவிதைகள் வாசிக்கவும் கொண்டாடவும் படுகின்றன. ஒரு நல்ல கவிதை, இன்னொரு நல்ல கவிதையை எழுதத் தூண்டுகிறது. இந்தப் பரப்பிற்குள் கொடுத்தும் வாங்கியும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்தாலும், கடல் அலைகளைப்போல வானவில்லைப் போல எப்போது பார்த்தாலும் அன்றுதான் முதன்முதலாய் பார்த்ததுபோன்ற பிரமிப்பைத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன கவிதைகள்.

பள்ளிக்காலங்கள் தொடங்கி, கவிதைகளை எழுதிக்கொண்டே இருக்கிறேன். பத்து  ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாளில், திடீரென்று எனக்கும் என் வீட்டுக்குமான உறவு இல்லாமல் போனது. அதற்குப் பிறகான அத்தனை தனிமையின் அலைக்கழிப்பின் போதெல்லாம், என் எழுத்தை மட்டுமே விடாமல் கையில் பற்றிக்கொண்டிருந்திருக்கிறேன். என் ஆற்றாமை, தோல்வி, வலி அனைத்தையும் கவிதைகளாகவே மடை மாற்றியிருக்கிறேன். தோன்றியதெல்லாம் எந்த வரையறைகளையும் சாஸ்திரங்களையும் விதித்துக்கொள்ளாமல் ஒரு மங்கிய போதை மனோநிலையில் எழுதியிருக்கிறேன்.

சமூக வலைதளங்களின் வருகைக்குப் பின்பு, தமிழகத்தில் எழுதம் பல நவீனப் படைப்பாளிகளின் அறிமுகத்துக்குப் பிறகு, என் கவிதை வாசிப்பும் எழுத்தும் வேறு ஒரு பரிமாணத்துக்கு மாறியதென்பது உண்மை. வெய்யில், நரன், இசை போன்றவர்களைத் தொடர்ந்து படிக்கிறேன். அவர்களின் படிமங்களும் மொழியும் வியப்பாகவும் உந்துதலாகவும் இருக்கின்றன. ஒரு நூலுக்காகக் கவிதைகளைத் தொகுக்கும்போது, சிலவற்றை நானே கசக்கி  வீசுகிறேன். காலமும் வாசிப்பும் எழுத்தில்  கொஞ்சம் முதிர்ச்சியைத் தந்திருக்கின்றன.

பொதுவாகவே ஈழத்திலிருந்து வரும் படைப்புகள் யுத்தம், துயர், அகதி வாழ்க்கை என்பதையன்றி வேறு எதையும் பதிவுசெய்யவில்லை என்றும் உலக அரங்கில் வெறும் கழிவிரக்கத்தைச் சம்பாதிப்பதற்கான கருவியாக பாவிக்கப்படுவதாய் குற்றம் சுமத்தப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக எழுதித் தீர்த்தாலும், இன்னும் இன்னும் உலகத்துக்குச் சொல்ல அத்தனை  ஆயிரம் கதைகளை எங்களுக்குள் கங்குகளைப்போல பத்திரப்படுத்தி வைத்திருக்கிறோம். தொடுதிரையில் படிக்கும் தலைமுறைக்கு எங்கள் போராட்டத்தைப் புதிய மொழியில் கொண்டுசேர்ப்பதுதான் பெரும் சவால். எல்லாம் முடிந்து, ஈற்றில் வெறும் சொற்களையும் மொழியையும் மாத்திரம் தாங்கிப் பிடித்துக்கொண்டு நிற்கும் சமூகம் கவிதை எழுதாமல் வேறு என்ன செய்யும்?

மிகக் கவனமாக ஒவ்வொரு கவிதைகளுக் குள்ளும் எங்கள் அரசியலை நுண்படிமனாய் உட்செலுத்த முயன்றுகொண்டே இருக்கிறேன். கவிதைகள் வழியே இந்த உலகத்துக்குச் சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. சொல்லித் தீரும்வரைக்கும் எழுதிக்கொண்டே இருப்பேன்.