
ஒளி உறிஞ்சிக் குருவி
வெண்மை தோய்ந்த சாம்பல் திமிலில்
அமர்ந்திருந்த குருவிகள்
மெய்சிலிர்ப்புடன் பறக்கின்றன
செவ்வான மென்சூட்டில்
இறகு தளர்த்தி விரித்து
அந்தியின் மினுமினுப்பை
கனவுகளுக்கு உள்ளீர்த்தபடி
மரகதங்களின்
மூங்கில் குருத்துப் பச்சையை ஊடறுத்து
ஒன்றுக்கொன்று செல்லம் கொஞ்சியபடி
ஒளியை உறிஞ்சுகின்றன
நான்காவது காலத்திலிருப்பவளின்
கண்ணாடியில் பொரிந்தெரிகின்றது தீ
புதிர்க்கொளுந்துகளின் தீச்சுவாலைகளிடையே
முடிச்சுகளில் ஊதுகின்றவர்களின்
சாம்பல் முதுகு
இருளில் தோன்றி மறைகிறது
பச்சை குத்தியிருக்கிற அவள் மார்புகள்
ஒன்றையொன்று முந்திச் செல்லும்
பால் வீதியின் குருவிகளாகின்றன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தியானத்திலிருந்து வெளியேறும் ஊசிப்பாம்பு
மாயையிலும் காலத்திலும் கொட்டும் அருவி
ஞானமடைந்ததென நம்பியிருந்த உடலை
விலக்கிக் கொண்டோடுகிறது
உக்கிரமாய்த் தெறிக்கின்றன நீர்த்திவலைகள்
சுவையூன்றிய உதடுகளின் ஊற்று
முத்தங்கள் சோடி சோடியாகி
முகில்களுக்கும் அருவிக்குமிடையே
கொக்குகளாகப் பறந்துவிடுகின்றன
கிளைக்குக் கிளை தாவிப் பாய்கின்றதே
ஆசைக்காய்களை ஆய்கின்ற
முத்தம் தின்னிக் குரங்கு
காதுகளுக்குள் இறங்கி
கொத்தித் தீண்டும் ஊசிப்பாம்பின் கிசுகிசுப்பு
கரும்பச்சை வாசனை பரவும்
உன் தியானத்தின் நெற்றிப்பொட்டில்
அறைகிறேன் மந்திரித்த சொல்லை
தனக்குத்தானே எல்லையிட்ட கடலில்
ஒன்றையொன்று தின்னும்
இரு ஒளிச் சுடர்களிடையே
இரண்டுவால் கடற்கன்னி குதிக்கிறாள்.