Published:Updated:

ஈழத்தமிழரின் விடுதலைப் போர் பின்புலத்தில் விரிந்திடும் நாவல்கள்

ஈழத்தமிழரின் விடுதலைப் போர் பின்புலத்தில் விரிந்திடும் நாவல்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஈழத்தமிழரின் விடுதலைப் போர் பின்புலத்தில் விரிந்திடும் நாவல்கள்

ந.முருகேசபாண்டியன்தொகுப்பு : வெய்யில், வெ.நீலகண்டன், தமிழ்ப்பிரபா

ஈழத்தமிழரின் விடுதலைப் போர் பின்புலத்தில் விரிந்திடும் நாவல்கள்

ந.முருகேசபாண்டியன்தொகுப்பு : வெய்யில், வெ.நீலகண்டன், தமிழ்ப்பிரபா

Published:Updated:
ஈழத்தமிழரின் விடுதலைப் போர் பின்புலத்தில் விரிந்திடும் நாவல்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஈழத்தமிழரின் விடுதலைப் போர் பின்புலத்தில் விரிந்திடும் நாவல்கள்

ழத்தில், சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராகத் தமிழர்கள் முன்னெடுத்த ஆயுதம் தாங்கிய போர், வரலாற்றில் தனித்துவமானது. 2009 முள்ளிவாய்க்கால் அரசப் படுகொலைகளுக்குப் பின்னர், தமிழர்களின் போராட்டம் ஓய்ந்துள்ளது. ஈழத்துப் பிரச்னையில் இந்திய அரசின் செயல்பாடு, இந்திய அமைதிகாப்புப் படை, விடுதலைப் புலிகள், பிற இயக்கங்கள், தமிழர்களின் நிலை, தமிழ் பேசும் முஸ்லிம்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள், சிங்களப் படையினர், சராசரி சிங்களவர் எனப் பல்வேறு போக்குகள் பற்றி மீளாய்வு செய்ய வேண்டிய நேரமிது. தமிழ், சிங்களம் என இரு மொழி பேசுகிற மக்கள் வாழ்கிற ஸ்ரீலங்காவில், சிங்கள மொழிக்கு மட்டும் முன்னுரிமை என்ற அரசியலினால் ஏற்பட்ட விளைவுகள் கொடூரமானவை. சுமார் 40,000 இயக்கப் போராளிகளும், 1,50,000 தமிழர்களும் 90,000 சிங்களப் படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். போர் காரணமாக ஸ்ரீலங்காவிற்குள்ளும் அயல்நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் துயரங்கள் இன்றளவும் தொடர்கின்றன. ஏறக்குறைய 29 ஆண்டுக்காலம் புலிகள், சிங்கள ராணுவத்துடன் செய்த போர் காத்திரமானது. அதேவேளையில், சர்வதேச ரீதியில் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய ஆயுதப் போராட்டத்தை எப்படி ஒடுக்கிட முயலுகின்றன என்ற புலிகளின் அரசியல் புரிதலின்மை, வெறுமனே ஆயுதங்களை மட்டும் நம்பியது போன்றவை ஈழப்போராட்டத்தின் தோல்விக்கு வழிவகுத்தனவா?

ஈழத்தமிழரின் விடுதலைப் போர் பின்புலத்தில் விரிந்திடும் நாவல்கள்

2010ஆம் ஆண்டிற்குப் பின்னர், ஈழப் போராட்டத்தை மையமாகக்கொண்ட நாவல்கள் கணிசமாகப் பிரசுரமாகிக் கொண்டிருக்கின்றன. அவை, ஈழத்தமிழரின் வீரமான போராட்டம் குறித்த வரலாற்று  ஆவணங்கள். ஈழப்போராட்டம் தொடங்கிய அரசியல் பின்புலம், போர் நிகழ்வுகள், போரின் விளைவுகள், முள்ளிவாய்க்கால் படுகொலை, முள்வேலி முகாம்கள் என விவரிக்கப்படுகிற சம்பவங்களும் கதைகளும் முடிவற்றுத் தொடர்கின்றன. தமிழினத்தின் ஓர்மையில் கசப்பான நினைவுகளும் துயரங்களும் தோல்விகளும் எப்போதும் கொப்பளித்துக் கொண்டிருக்கின்றன. ஈழத்தில் இப்படியெல்லாம் நடந்தன என்ற கதைசொல்லிகளின் விவரிப்புகள், முடிவிலியாக நீள்கின்றன. ஈழப்போரில் உயிர்நீத்த இயக்கப் போராளிகள், மக்கள் அனுபவித்த துயரங்கள், காற்றில் கலந்துபோகிற விஷயங்கள் அல்ல. எதிர்காலத்தில்  இளம் தலைமுறையினருக்கு ஈழப்போர் குறித்த அறிமுகமாக நாவல்கள்தான் இருக்கும். ஷோபா சக்தி, சயந்தன், குணா கவியழகன், சாத்திரி, தமிழ்நதி, வெற்றிச்செல்வி, விமல் குழந்தைவேல், ஸர்மிளா ஸெய்யித், வாசு முருகவேல், தீபச்செல்வன் போன்றோர் எழுதியுள்ள நாவல்கள், கடந்த காலத்தின் சாட்சியங்கள். ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு வகையில் ஈழப் பிரச்னையை அணுகி, வேறுபட்ட கோணத்தில் தமிழர் வாழ்க்கை குறித்த கதையாடலை முன்வைத்துள்ளன.

70-களில் மலையகத் தமிழர் எதிர்கொண்ட சிங்களக் காடையர்களின் வன்முறைச் சம்பவத்தில் தொடங்கிடும் சயந்தனின் ‘ஆதிரை’ நாவல், முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னர் தமிழர் வாழ்க்கை எப்படி இருக்கிறது என விவரிக்கிறது. வன்னியின் பூர்வீகக் குடியினர், குடியேறிய மலையகத் தமிழர்கள், போரினால் இடம்பெயர்ந்து தஞ்சமடைந்துள்ள யாழ்ப்பாணத்தார் எனப் பலரின் அன்றாட வாழ்க்கையின் குவிமையமாகக் கதை சொல்லப்பட்டுள்ளது.  ‘ஈழவிடுதலைப் போராட்டக்களத்தில் பெரிய அளவில் முன்னணியில் செயலாற்றியவர்கள், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பொருளியல், சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்டவர்களும் மலையகத்திலிருந்து புலம்பெயர்ந்து வன்னியில் குடியேறியவர்களும் ஆவர்’ என்ற சயந்தனின் கணிப்பு, முக்கியமானது. நாவல் முழுக்க யாழ்ப்பாணத்து வெள்ளாளர்களில் வசதியானவர்கள் எப்படியாவது நாட்டை விட்டு வெளியேறுவதும், விளிம்பு நிலையினர் ராணுவத்தின் ஷெல்லடிகளுக்கு இடையில் வாழ்வதும் நடைபெறுகிறது. நாவலில் நிறைய துர்க்கனவுகள் மனிதர்களை விரட்டுவதுபோல அரசியலின் சூழ்ச்சியினால் ரத்தமும் சதையுமாகக் குண்டுகளினால் பிய்த்தெறியப்படுவதுதான் வாழ்வின் கோரம். ஒடுக்கப்படும் மக்களுக்காகப் போராட முன்வருகிற போராளி, ஒருநிலையில் மக்களைவிடத் தன்னை மேன்மையானவனாகக் கருதுவதும், மக்கள்மீது அதிகாரம் செய்கிறவனாக மாறுவதும் இயக்கங்களில் நடைபெறுவதைச் சயந்தன் நுட்பமாகப் பதிவாக்கியுள்ளார். அமைப்பின் தலைமையின் மீதான விமர்சனமோ, அமைப்புச் செயல்பாடுகள் குறித்துக் கேள்வி கேட்பதோ துரோகமாகக் கருதப்படுவது விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எல்லா இயக்கங்களிலும் நடைமுறையில் இருந்தது. ஆனால், மக்கள் எல்லாவற்றையும் குறித்துக் கடுமையான விமர்சனங்களை மனதுக்குள் வைத்திருந்தனர் என்பது ஆதிரை நாவலில் அடியோட்டமாக உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஈழத்தமிழரின் விடுதலைப் போர் பின்புலத்தில் விரிந்திடும் நாவல்கள்

ஈழப்பிரச்னையை முன்வைத்து, குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களை ‘பார்த்தீனியம்’ என்ற பெயரில் நாவலாக்கியுள்ளார் தமிழ்நதி. எண்பதுகளின் தொடக்கத்தில், ஈழத்தில் கணிசமான இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய போராட்டத்திற்காக இயக்கங்களில் பங்கேற்று, இந்திய மண்ணில் பயிற்சியெடுத்த சூழலில் தொடங்குகிறது நாவல். இந்திய அரசின் அமைதிகாப்புப் படை, ஈழத்தில் நுழைந்ததன் காரணமாக ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் எனத் தமிழ்நதி அரசியலை முன்வைத்துக் கதைக்கிறார். ஈழத்தில் இந்திய ராணுவத்தின் வெறியாட்டம், பாலியல் வன்புணர்வுகள், அத்துமீறல்கள், கொலைகள், வன்முறைகள், சித்ரவதைகள் போன்றவற்றைப் பதிவுசெய்தல்தான் நாவலின் முதன்மை நோக்கமாகும். விடுதலைப் புலிகள், பிற விடுதலை இயக்கங்களைத் தடைசெய்ததற்கு மக்கள் ஆதரவாக இருந்தனர் என்ற பார்வையில் தமிழ்நதி சொல்கிற கதையாடல், கேள்விக்குரியது. ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு, இந்திய அமைதிகாப்புப் படையின் பின்புலத்தில் சொல்லப்பட்டுள்ளது. கதையாடல், புனைவிற்கும் வரலாற்றுக்கும் இடையே ஊடாடுகிறது.

ஈழப்போரில் ஆயுதம் தாங்கிய சமரில் பங்கேற்ற குணா கவியழகன், முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னர் ராணுவத் தடுப்பு முகாமில் அடைபட்டிருந்தார். பின்னர், அங்கிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சமடைந்துள்ளார். குணாவின்  ‘நஞ்சுண்ட காடு’ நாவல், காட்டிலுள்ள விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமிற்குக் கொண்டுவரப்பட்ட குழுவினரின் அனுபவங்களின் பின்புலத்தில் விரிந்துள்ளது. விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் செயல்பட்டவாறு, போராட்டத்தினால் சனங்கள் படுகிற பாடுகளை நேரடியாகக் கண்டதினால் ஏற்பட்ட மனஉளைச்சலின் விளைவுதான் குணாவின் நாவலாக்கத்திற்குப் பின்புலமாகும். போராட்டம் பற்றிக் கதைக்கத் தொடங்கிய குணாவின் எழுத்து, அவரையறியாமல் மெல்ல மெல்ல போருக்கு எதிரானதாக மாறிவிட்டது. ‘அப்பால் ஒரு நிலம்’ நாவல் மூலம் குணா கவியழகன் சித்திரிக்கிற போர்க்களக் காட்சிகள், சம்பவங்கள், தமிழில் இதுவரை யாரும் பதிவாக்கிடாத புதிய காட்சிகள். ‘அப்பால்  ஒரு நிலம்’ என்பது ஒருவகையில் பொறி போன்றது. அந்த நிலம் உருவாக்கிடும் கனவுகள் கவர்ச்சிகரமானவை. சிங்கள ராணுவத்தின் பிடியில் இருக்கும் கிளிநொச்சியை மீட்பதற்கு முயலுகிற புலிகளுக்கு உதவுவதற்காகக் கிளம்புகிற வேவுப்படையினர் பற்றிய சித்திரிப்புகள், வாசிப்பில் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.

சிங்கள ராணுவத்தினரின் தாக்குதல் நிகழவிருக்கிறது எனப் புலிகள், யாழ்ப்பாணம் நகரை விட்டுவிட்டு ஐந்து லட்சம் மக்களை உடனடியாக வெளியேறச் சொன்னதும், அதையொட்டி நடைபெற்ற புலம்பெயர்வும் துயரமான மொழியில்  ‘கர்ப்ப நிலம்’ எனக் குணா கவியழகன் பதிவாக்கியிருக்கிறார். போர் இடைவிடாமல் துரத்திட, உயிர் வாழ்வதற்காகப் புலம்பெயர்ந்தவர்களின் வலிகளும் துயரங்களும் அளவற்றவை. காலங்காலமாக வாழ்ந்த ஊரைவிட்டுப் பிரிதலுடன் புதிய இடத்தில் அன்றாட உணவு, தங்குமிடத்திற்காகப் படுகிற பாடுகள் தொடர்கின்றன. வன்னியில் குடியேறிய தமிழர்கள் எதிர்கொண்ட போரைப் பின்புலமாகக்கொண்ட ‘ போருழல் காதை’ நாவல், மனித இருப்பின் அவலத்தைப் பதிவாக்கியுள்ளது. இலக்கியத்தை ‘தரிசனம்’,  ‘ஒளிவட்டத்துடன்’ அழகியல் பின்புலத்தில் அரசியலற்ற பிரதிகளை உருவாக்கிட முயலுகிறவர்களுக்கு, குணா கவியழகனின் நாவல்கள் சித்திரிக்கிற யதார்த்தச் சித்திரிப்புகள் கேள்விகளை உருவாக்குகின்றன.

ஈழத்தமிழரின் விடுதலைப் போர் பின்புலத்தில் விரிந்திடும் நாவல்கள்

விடுதலைப் புலிகள் அமைப்பில் செயலாற்றிய சாத்திரியின் ‘ஆயுத எழுத்து’ நாவல், அவருடைய இயக்க அனுபவங்களின் பதிவாகும். நாவலில் இடம்பெற்றுள்ள  ‘அவன்’ யார் என்பது முக்கியமான கேள்வி. போராட்டக்களத்தில் முனைப்புடன் செயல்பட்ட பல்வேறு ‘அவன்’களின் தொகுப்பாகக் கருதமுடியும். ஈழப்போரில் பங்காற்றிய கிட்டு, மாத்தையா, லோரன்ஸ், பொட்டு அம்மான், கரிகாலன், ஸ்ரீசபாரத்தினம் போன்றோர் நாவலில் அதே பெயர்களில் இடம்பெற்றிருப்பது, புனைவு என்பதற்கப்பால் நிஜம் என்ற மனநிலையை வாசிப்பில் உருவாக்குகிறது. நாவலில் வரும் கதைசொல்லி, தன்னிலையை விமர்சிக்கிறார். அதேவேளையில் விடுதலைப் புலிகள் அமைப்பையும், ஆயுதமேந்திய பிற இயக்கங்களையும், போராளிகளான முன்னணித் தலைவர்களையும், சிங்கள அரசினையும், உளவுத்துறையையும் பற்றிக் கதைத்திருப்பது, அரசியல் விமர்சனமாக வெளிப்பட்டுள்ளது. ஈழ விடுதலைப் போர் என்ற சொல்லுக்குப் பின்னால் பொதிந்திருக்கிற வன்முறை, எப்படியெல்லாம் இயல்பாகத் தமிழ்ச் சமூகத்தில் பரவியிருந்தது என்பதை நாவல் நுட்பமாகப் பதிவாக்கியுள்ளது. துப்பாக்கியின் விசையை அழுத்துதல் என்பது இயந்திரமயமானது அல்ல. ஆனால், அமைப்பு போராளிகளிடம் உருவாக்கியிருக்கும் மனநிலையானது, மனித உயிரிழப்பைத் துச்சமாகக் கருதுகிறது. முடிவற்ற தாக்குதல்கள், சித்ரவதைகள், கொலைகள் என விரியும் கதையாடலில் சிங்கள ராணுவம், இந்திய அமைதிகாப்புப் படை, இயக்கங்களின் ராணுவம் நிகழ்த்திய வன்முறையில் ரத்தக் கவிச்சி அடிக்கிறது. நாவலில் சித்திரிக்கப்பட்டுள்ள ‘அவன்’ எப்படி மதிப்பீடுகள் எதுவுமற்று கொலைகள் செய்வதை ஏற்றுக்கொண்டான் என்பது, வாசிப்பின் வழியாகச் சாத்திரி முன்வைக்கும் அடிப்படையான கேள்வி.

சயந்தன் எழுதிய முதல் நாவலான ‘ஆறாவடு’, போரின் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்திய அமைதிகாப்புப் படையின் நுழைவு தொடங்கி, ரணில் விக்கிரமசேனாவின் அமைதி முயற்சியிலான காலகட்டத்தின் பின்புலத்தில் சராசரியான ஈழத்தமிழரின் வாழ்க்கையும் போரும் எப்படிப் பின்னியுள்ளன என்று நாவல் விவரிக்கிறது. ஈழ விடுதலைப் போர்ச்சூழலை, விடுதலைப் புலிகள், சிங்கள அரசு மற்றும் ராணுவம், பிற போராளி இயக்கங்கள், இந்திய அமைதிகாப்புப் படை, அமைதிக்கான முயற்சியை மேற்கொண்ட நோர்வே, ஜப்பான் நடுநிலையாளர்கள் எனப் பிரச்னையை வேறுபட்ட கோணங்களில் அணுகியுள்ள சயந்தனின் எழுத்து, இன்னொரு நிலையில் போரின் வலியைப் பேசுகிறது. நீர்கொழும்புவிலிருந்து கடல் வழியாக இத்தாலி சென்று, அங்கிருந்து பிரான்ஸ் செல்ல திட்டமிடுகிற முன்னாள் விடுதலைப் புலியைப் பற்றிய விவரிப்பில்,  ‘இவன்’ எனக் குறிப்பிடுவது, யாருக்கும் நிகழலாம் என்பதன் குறியீடு. ஒருபுறம் யுத்தம் இடைவிடாமல் தமிழர்களைத் துரத்துகிறது. இன்னொரு புறம் சிங்களப் பேரினவாத அரசின் அதிகாரமும் வன்முறையும். விளைவு, ஆறாத வடுக்கள்.

புலிகள் இயக்கப் போராளியான வெற்றிச்செல்வியின் ‘போராளியின் காதலி’ நாவல், போர்க்களத்தின் பின்புலத்தில் பணியாற்றுகிற மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றிய விவரிப்பின் ஊடாகக் காதலைச் சொல்கிறது. எளிய மொழியில் சொல்லப்பட்டிருக்கும் நாவலின் கதைசொல்லல், நெடிய ஈழப்போரினால் காயம் அடைந்தவர்களின் வலியையும் இழப்பையும் பதிவாக்கியுள்ளது. சிலுவையில் அறையப்பட்ட ஏசு, ‘ஏன் தேவனே! என்னைக் கைவிட்டீர்’ எனக் கதறியதுபோல முள்ளிவாய்க்காலில் ஆதரவற்றுக் கதறிய தமிழர்களின் அவலமும் வேதனையும் காற்றில் மிதக்கின்றன.

ஈழத்தமிழரின் விடுதலைப் போர் பின்புலத்தில் விரிந்திடும் நாவல்கள்

ஷோபாசக்தி, ‘BOX கதைப் புத்தகம்’ மூலம், தொடர்ச்சியறு முறையில் கதைசொல்கிறார். இயக்கத்தினரும் சிங்கள ராணுவத்தினரும் உடல்கள்மீது நடத்துகிற வதைகள் கதையெங்கும் ததும்புகின்றன.  நிர்வாணமாக்கப்பட்ட பெண்ணுடலை வைத்து, ராணுவத்தினர் நடத்துகிற வன்புணர்ச்சி உள்ளிட்ட கொடூரங்களின் பின்னர் பொதிந்திருக்கும் வன்முறை மனநிலை முக்கியமானது. BOX எனப்படும் பெட்டி வடிவத்தில் தனிமைப்படுத்திச் சகமனிதர்கள் கொல்லப்படல் அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றுதல் நடைபெறுகிறது. பண்டார வன்னியன்,  புலிகள், பெரிய பள்ளன் குளம் கிராமத்தினர் எனப் பெட்டியடிக்கப்பட்டது உக்கிரமான மொழியில் விவரிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் அரசியல் செயல்பாடுகளுடன் முரண்படுகிற ஷோபாசக்தியின் முந்தைய ‘கொரில்லா’ நாவலுடன் ஒப்பிடுகையில், BOX நாவலின் கதையாடலில் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது. ஈழப்போர் குறித்து புனிதமான மதிப்பீடுகளை உருவாக்கி, பிம்பங்களைக் கட்டமைக்கிற தமிழகத்துக் காகிதப் புலிகளுக்கு BOX நாவல், நிச்சயம் அதிர்ச்சியளிக்கும்.

ஈழத்துப் போரின் விளைவுகளைப் பதிவாக்கியுள்ள ஸர்மிளா ஸெய்யித்தின்  ‘உம்மத்’ நாவல், பெண்களுக்கு ஏற்பட்டுள்ள  சிக்கல்களைக் களனாகக் கொண்டுள்ளது. போர்க்காலத்தின்போது மக்களுக்கேற்பட்ட துயரங்களின் பின்புலத்தை விவரிக்கிற நாவல், போரைக் கண்டனம் செய்கிறது. போர் என்பது எப்போதும் மக்களின் நலனுக்கு எதிரானதுதான். அதிகாரத்திற்கான போட்டியின்போது நடைபெறுகிற போரின் கொடூரங்கள் அளவற்றவை. ஆனால், ஹிட்லர் போன்ற பாசிஸ்ட் அராஜகமாக யுத்தத்தைத் திணிக்கும்போது, நேர்மையான யுத்தத்தினால்தான் அதை முறியடிக்க முடியும். ஐம்பதுகள் முதலாகச் சிங்கள மொழியைத் தேசிய மொழியாக அறிவித்ததுடன், புத்த பிக்குகள் ஸ்ரீலங்கா அரசியலை முழுக்க புத்த மதத்துடன் இணைத்து, தமிழர்ப் பண்பாடு மீது ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றி நாவலாசிரியைக்கு எதுவும் தெரியாதா?

ஈழப்போரின் மோசமான விளைவுகளை மட்டும் முன்வைத்து, செயற்கையான மொழியில் வறண்ட சம்பவங்களுடன் எழுதப்பட்டுள்ள நாவல் தட்டையானது, மொக்கையானதும்கூட.

‘ஒரு சல்லிக்கும் பயனற்ற உதவாக்கரைச் செயல்’ என்பது விமல் குழந்தைவேல் எழுதியுள்ள ‘கசகறணம்’ நாவலின் பொருள், குறியீட்டு நிலையில் இயக்கத்தினரின் போராட்டத்தை விமர்சிக்க முயல்கிறது. கிழக்கிலுள்ள அம்பாறை மாவட்டத்தை முன்வைத்து எழுதப்பட்டுள்ள நாவலில், மதத்தால் வேறுபட்டிருந்தாலும் தமிழர்களும் தமிழ் பேசும் முஸ்லிம்களும் பரஸ்பர நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இணைப்பாக இருந்த சந்தை எரிக்கப்பட்ட பின்னர், சூழலில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது. கிழக்கு மாவட்ட அரசியல், சமூகச் சூழலுக்குப் பொருத்தமற்ற நிலையில் நுழைந்த இயக்கங்களினால் பிளவுண்ட சமூகங்களின் கதைதான் ‘கசகறணம்’ நாவலின் மையம். குழந்தைவேல், ஈழப் போராட்டத்தின் மறுபக்கத்தைப் பதிவாக்கியுள்ளார்.

‘ஏன்  இப்படியெல்லாம் நடந்தன?’ என்ற கேள்விகளின் பின்புலத்தில் வாசு முருகவேல் எழுதியுள்ள ‘ஜெப்னா பேக்கரி’, சுயவிமர்சன நோக்கில் சம்பவங்களை விவரிக்கிறது. ஈழப் போராட்டத்தின் தொடக்கக் காலத்தில், தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட இஸ்லாமிய இளைஞர்கள் இயக்கங்களில் இணைந்திருந்தனர். இந்திய அமைதிகாப்புப் படையினரின் திட்டமிட்ட சதியினால் இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர், தமிழ் அடையாளத்திலிருந்து பிரிந்து, போராட்டத்திற்கு எதிரானவர்களாக மாற்றப்பட்டனர். புலிகள், இஸ்லாமியர்களை உடனடியாகப் பூர்வீக பூமியிலிருந்து புலம்பெயர்ந்திட ஆணையிட்ட வரலாற்றுச் சம்பவத்தின் பின்புலத்தில், நாவல் புதிய  பேச்சுகளை உருவாக்கிட முயன்றுள்ளது.  பிரச்னையின் பன்முக அம்சங்கள், செறிவான வட்டார மொழியில் கசப்புத் தோய்ந்திட வெளிப்பட்டுள்ளன.

தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவல், ஈழப்போராட்டத்தின் வீழ்ச்சி குறித்து தீர்க்கமான பரிசீலனை இல்லாமல், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் புலிகளைப் போற்றுகிற வகையில் பிரசுரமாகியுள்ளது. போராட்டத்தின்போது, சிறுவர்கள்கூட இயக்கத்தில் சேர்ந்திடத் துடித்தனர் எனத் தொடங்கிடும் கதையில், புலிகள் எப்படியெல்லாம் தனிப்பட்ட அரசாங்கம் நடத்தினர் என்பது மேலோட்டமாகச் சொல்லப்பட்டுள்ளது. அழுத்தமாகச் சம்பவங்களை விவரிக்காமல், கேள்விப்பட்ட தகவல்களால் நிரம்பி வழிந்திடும் கதையாடல், செயற்கையான மொழியில் விரிந்துள்ளது. புறநிலையில் எழுதப்பட்டிருக்கிற ‘நடுகல்’ நாவல்,  தமிழகத்தில் புலிகள், பிரபாகரன் என்று வெறுமனே கதைத்திடும் ‘சீமான் அன் கோ’வினர் உள்ளிட்ட தமிழ்த் தேசியவாதி களுக்குப் பெரிதும் பயன்படும்.

ஈழத்தமிழரின் விடுதலைப் போர் பின்புலத்தில் விரிந்திடும் நாவல்கள்

குருதி சிந்திடும் போரில், அதிகாரம் கைக்கு வந்துவிட்டால் அது வெற்றி; அதிகாரத்திற்கு அடிபணிய நேரிட்டால் அது தோல்வி. யோசிக்கும் வேளையில், வெற்றிக்கும் தோல்விக்குமான முரணாகத்தான் சமூக வரலாறு இருக்கிறது. ஈழப்போரின் இறுதியில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற கூட்டக்கொலைகளுக்குப் பின்னர், சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த மக்கள் திரளுடன் இயக்கப் போராளிகளும் இணைந்தனர். மக்களிலிருந்து பிரித்து, தனியாக்கப்பட்ட முன்னாள் பெண் புலிகளும் போராளிகளும் ராணுவத்தினரின் விசாரணைக்கு உள்ளாயினர். தமிழீழம் குறித்த கனவுகளுடன் ஆயுதமேந்தி ராணுவத்தை எதிர்த்து வீரத்துடன் போராடியவர்கள், தோல்வி தந்த கசப்புடன் எதிரிகளிடம் அடிமைப் பட்டிருப்பது ஏற்படுத்தும் மனவேதனை அளவற்றது. இத்தகைய சூழலின் பின்புலத்தில், குணா கவியழகன் எழுதியுள்ள  ‘விடமேறிய கனவு’ நாவல், ஈழத் தமிழரின் தீராத வலியின் பதிவாகும். போரின் முடிவு புலிகளுக்கு முன்கூட்டியே தெரிந்த பின்னரும் போராளிகள் களத்தில்  நின்றனர். விசாரணையின் முடிவில் கொல்லப் படுவோமா? உயிர் தப்ப ஏதாவது வழி இருக்குமா? போன்ற கேள்விகளுடன் அடிப்படை வசதியற்ற முகாமில் வாடி வதங்குகிற போராளிகளின் அவலத்தைப் பேசுகிறது நாவல். கட்டுப்பாடான விடுதலை இயக்கம் எப்படித் தோற்கடிக்கப்பட்டது என்பதை வெவ்வேறு கோணங்களில்  விவாதிப்பது, ஈழப்போரின் தோல்விக்கான காரணங்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்துகிறது.

ரஷியன் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளில் எழுதப்பட்டுள்ள போர் குறித்த நாவல்கள், போர்களின் பேரழிவையும் கையறு நிலையையும் பதிவாக்கியுள்ளன. தாய்நாட்டைக் காப்பதற்காகப் போராடுகிற படைவீரர்களையும் பொதுமக்களையும் முதன்மைப்படுத்துகிற நாவல்களில்கூட  போரின் கொடூரமான விளைவுகள் பதிவாகியிருக்கும். ஈழப்போரைச் சித்திரிக்கிற பெரும்பாலான நாவல்கள், போரைப் புனிதமாக்குகிற நோக்கில் கதைக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் போர்த் தந்திரங்களைச் சிலாகித்து விரிகிற கதையாடலின் பின்னர், பிரபாகரனின் போர்த் திட்டத்தைப் போற்றிக் கொண்டாடுதல்  பொதிந்துள்ளது. ஷோபா சக்தி, சாத்திரி, சயந்தன் போன்றோரின் நாவல்கள், போர் பற்றிய புனைவுகளைக் கட்டுடைத்திட முயன்றுள்ளன. சாதாரணமான காதல் பின்புலத்தில் சொல்லப்பட்டுள்ள  ‘பார்த்தீனியம்’, காதலை வெளியே சொல்லாமல் இருந்து, அதைச் சொல்கிற நாளில் யாழ்ப்பாணத்தில் புலம்பெயர்ந்திட நேர்கிற காதல் ஜோடிகள் எனத் தொடங்குகிற ‘கர்ப்ப நிலம்’ போன்ற நாவல்கள் வாசிப்பில் அலுப்பைத் தருகின்றன. ஈழப்போரில் பங்கேற்றவர்களின் அனுபவங்கள் அல்லது போர் பற்றிய சம்பவங்களைக் கேட்டு எழுதப்பட்டுள்ள சில நாவல்கள், வெறுமனே தகவல்களின் தொகுப்பாக மாறியுள்ளன. அவை, ஈழப் போரின் தோல்வி குறித்துத் தேவையில்லாமல்  குற்ற மனநிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிற தமிழகத் தமிழர்களைத் தொந்தரவு செய்கின்றன. போருக்குப் பின்னர் ஈழத்தமிழர்களின் அன்றாட வாழ்க்கை, மேனாள் போராளிகளின் இன்றைய நிலை, தமிழர்-சிங்களவர் உறவு, மலையகத் தமிழர் வாழ்க்கை பற்றி நாவல்கள் வெளிவர வேண்டியுள்ளது.

குட்டித் தீவான ஸ்ரீலங்காவில், தமிழ்த் தேசிய இனத்தை அழிப்பதற்கான சிங்களப் பேரினவாத அரசினை எதிர்த்த ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் தோற்றுப்போய்விட்டன என்பதுதான் கசப்பான உண்மை. இன்று தமிழர்கள், அதிகாரத்தில் இருக்கிற சிங்கள ஆட்சியாளர்களுடன் மட்டுமன்றி, பெரும்பான்மையினரான சிங்களவர்களுடன் இயைந்து போக வேண்டிய அவலநிலையில் வாழ்கின்றனர். தோல்வி ஏற்படுத்திய வெறுமையும் கசப்பும் மனதுக்குள் நிரம்பி வழிந்தாலும், தமிழர்கள் அடுத்தகட்ட வாழ்க்கையை அன்றாடம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தமிழரின் பாரம்பர்யமான நிலவெளியில் நடைபெறுகிற சிங்களக் குடியேற்றமும், சிங்கள மொழித் திணிப்பும் எற்படுத்துகிற வெறுப்புணர்வுடன் வாழ்கிற தமிழர்களின் நிலை, துயரமானது. ஈழப்போராட்டத்திற்கு இந்திய அரசும், தொப்புள்கொடி உறவுகளான தமிழகத்து அரசியல் பிழைப்புவாதிகளும் உதவுவார்கள் என்ற மாயை தகர்ந்துவிட்ட சூழலில், ஈழத்தமிழர்கள் சுயமான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரமிது.

ஈழப்போரின் பின்புலத்தில் எழுதப்பட்டுள்ள அரசியல் நாவல்கள், நடந்து முடிந்த சம்பவங்களின் வரலாற்றுப் பதிவுகளாக விளங்குகின்றன.  முப்பதாண்டுகள் நடைபெற்ற ஈழப்போராட்ட வரலாற்றையும் சம்பவங்களையும் நவீன வாழ்க்கையின் பாணர்களான நாவலாசிரியர்கள்,  கதையாடல்களின் வழியாக மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகின்றனர்.